- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -எந்த வகை இலக்கியமாயினும் முற்போக்கு சிந்தனையோடு படைக்கும் போது தான் நிலை பெறுகின்றது.  முக்காலத்திய ஆய்வில் கடந்த கால உண்மைகளை வெளிக் கொணர்வதும், நிகழ்கால பார்வையோடு சுட்டி உரைப்பதும், அவை எதிர்காலத்திய தேவை மற்றும் புரிதலுக்கானதாகவும் அமையும் போது அஃது முற்போக்கு இலக்கியமாய் வலம் வரும்.  அவ்வகை தன்மையில் ‘இன்குலாப்பின் ஒளவை’ 20 -ஆம் நூற்றாண்டின் சிறந்த கலைப்படைப்புகளுள் ஒன்றாகக் கொள்ள முடியும்.

இதற்குரிய அடிப்படை காரணம் என்னவெனில், அவர் பண்டைய கால தமிழகச் சூழலை பார்க்கும் கோணமே முதன்மைச் சிறப்பு.  சமூகத்துள் நிகழ்ந்த பெண்ணுடிமைத் தனத்திற்கு எதிரான அவரின் குரல், மக்களின் பார்வையும், மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுப்பதற்கான கூர்மைச் சிந்தனையும் முதன்மை அம்சம் பெற்று ‘ஒளவை நாடகம்’ திகழ்கின்றது.  கேள்விகளை முன் வைப்பதோடு காரணங்களையும் முன் வைத்து விமர்சன ரீதியாக பண்டைத் தமிழகத்தை ஆய்ந்தே இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. 

இலக்கியம் மக்களுக்கானதாக இருக்கும் பட்சத்திலேயே அவை சிறந்த கலைப் படைப்பாக அமைய முடியும் என்பதை நோக்காகக் கொண்டுள்ளார்.   அவ்வகையில் அவர் சமூகத்திற்கு பல கருத்துக்களை முன் வைத்துள்ளார்.  அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1.    பண்டைய இனக்குழு சமூகத்தின் மிச்ச சொச்சமும் மன்னர் உடைமை சமூகத்தின் அதிகார மையமும்.
2.    பாணர்களின் நிலையும், ஐந்நில மக்களின் வாழ்வும்.
3.    ஒளவையின் கருத்தியலும், ஒளவைப் பற்றிய பார்வையின் சிக்கலும்.
4.    பெண்ணடிமைத் தனமும் விடுதலைக்கான முன்னேற்பாடும்.

என 4 வகையில் அடிப்படையாக இந்நூலை வகைப்படுத்த முடிகின்றது.

மனிதன் சமூகமாய் நிலைபெற்று வாழ்வதற்குரிய சூழலை தோற்றுவித்தப் பின்னர், தம்மை நிலை நிறுத்திக் கொண்டு இயற்கையோடு இணைந்தும், புரிந்தும் வாழக் கற்றுக் கொண்டான்.  நாடோடி வாழ்க்கை விடுத்த இனக்குழு சமூக வாழ்வியலுக்குப் பின்னர் உற்பத்தி முறையும், உற்பத்தி உறவும் புதிய நிலையை அடைந்தது.  உபரிக்கான தோற்றுவாய் சமூகத்தில் அடிமைச் சமூகத்திற்கான தோற்றுவாயாகவும் மாறியது.  அச்சூழலே மனித சமூகத்தின் எதிர்மறையான சமூகச் சூழலின் தொடக்கம் எனலாம்.  இதனை நுண்ணாய்ந்தே சமூக விஞ்ஞானி காரல்மார்க்ஸ் சமூக படிநிலைகளை தெளிவுற ஆய்ந்து எடுத்துரைத்தார்.

புராதன சமுதாயம் சிதைவுற்று உற்பத்திக்கு மிகுதியாகிய உபரியைத் தோற்றுவித்தக் காலமே அடிமை உடைமை சமூகச் சூழல் என்றுரைக்கின்றார்.  இதனை நன்குணர்ந்த இன்குலாப், இதனோடு பண்டைய சமூகத்தை ஒப்பிட்டு இனக்குழு சமுதாயத்தின் மிச்சசொச்சமாய் வள்ளல்களாக, வேளிர்களாக, இனக்குழுவின் தலைவர்களாக விளங்கியோரிடம் இருந்ததாக கருத்தைப் பதிவு செய்கின்றார்.

உதாரணமாக, நாஞ்சில் வள்ளுவன், அதியன் போன்றோர்களை எடுத்துக் கொண்டு அவர்களின் வாழ்க்கை முறையையும், மக்கள் அவர்கள் மீது கொண்ட ஈர்ப்பையும், அவர்கள் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகளாகினும், கூட்டுண்ணும் சிந்தனையை உடையவராக இருந்ததை நயம்பட உரைத்துச் செல்கின்றார்.  அதியமான் அஞ்சியைப் பார்த்து,

“மக்கள் உன்னை அஞ்சத் தகுந்த அரசனாகக் கருதவில்லை.  தமது சுற்றத்தில் ஒருவானகவே கருதுகிறார்கள். தமிழகம் முழுவதையும் காலால் அளந்தோம்.  மக்கள் மனங்களை யாழால் அளந்தோம்.  தம்மில் ஒருவனாகக் கருதப்படும் தலைவன் இன்று தமிழகத்தில் உன்னைப் போல் ஒன்றிரண்டு பேர் தாம் இருப்பார்கள்.  (அதியன் ஒளவையை உற்று நோக்க) ஆமாம் அஞ்சி, தென்கோடியில் நாஞ்சில் வள்ளுவன் என்றால் வட கோடியில் அதியமான் அஞ்சி ஆமாம்.  இருவரும் முடியுடை வேந்தரில்லை.  குறுநிலத் தலைவர்கள்.  ஆனால் உங்களிடந்தாம் நம் முன்னோர்களின் கூட்டுண்ணும் பண்பு” இருக்கிறது.  அதனால் நாஞ்சில் வள்ளுவனை, உன்னைத் தொலைவில் வைத்து கொண்டாடும் தலைவர்களாகவே கருதுகிறார்கள்.  அதிலும் அஞ்சியே உனக்காக உன் மக்கள் யாவரும் எதையும் ஈவதற்கு அணியமாக உள்ளனர்.”    (பக். 65, இன்குலாப்)

என காட்சி 8ல் மிகத் தெளிவுபட, அஞ்சி, வள்ளுவன் ஆகியோரின் தன்மையையும், மக்கள் அவர்கள் மீது கொண்ட ஈர்ப்பையும் வெளிப்படுத்துகின்றார் இன்குலாப்.

எயினர்களை சந்தித்த ஒளவையிடம் எயினர்கள் பேசும் கருத்தியல் மன்னர் சமுதாயத்தின் அதிகார மையத்தை நிலை நிறுத்திக் காட்டுகின்றது.  எயினர்களைப் பார்த்து கொள்ளையடிப்பது சரியா?  என்று கேட்க.

எயினர்-1 :    இதோ பாருங்கள்.  இந்தப் பாலை வெளியை என் பாட்டன் சொல்லக் கேட்டிருக்கிறேன்... இந்த மண் முழுவதும் மரங்கள் அடர்ந்த காடுகளாய் இருந்தன என்றால் நீங்கள் நம்புவீர்களா?

பாண்மகள்-2 :    என்ன?

எயினர்-1 :    ஆமாம்.  அந்தக் காலத்தில் எங்கள் வில்லும் அம்பும் எங்கள் வழியில் குறுக்கீடாக மட்டுக்கும் மனிதர்களை விலங்குகள்.  மாமரக் கிளைகள் எல்லாம் கனிகளின் சுமையால் மண்ணைத் தொட்டன.

எயினர்-2 :    இங்கே ஓர் ஆறு கூட இருந்ததாம்.  அது மண்ணுக்கடியில் புதைந்து போய்விட்டது.

பாண்மகள்-2 :    இந்த காடுகளுக்கு என்ன நேர்ந்தது?

எயினர்-2 :    போங்கள்.  உங்கள் அரசர்களைப் போய்க் கேளுங்கள்... அவர்கள் அரண்மனைகளின் கதவுகளைப் போய்க் கேளுங்கள்.  உத்தரங்களைப் போய்க் கேளுங்கள்.  பஞ்சனை தாங்கியிருக்கும் கட்டில்களைப் போய்க் கேளுங்கள்.  இந்த வணிகர்களின் வானுயர்ந்த வீடுகளைப் போய் கேளுங்கள்.  எங்கள் காடுகள் சொல்லப்பட்டு நாடுகள் உருவான கதையைச் சொல்லும்.

எயினர்-1 :    எங்களை இந்த வெட்ட வெளியில் நிறுத்தியவர்களை நாங்களும் நிறுத்துகிறோம்.

எயினர்-2 :    கொள்ளையடித்தவர்களைக் கொள்ளையடிக்கிறோம்.

எயினர்-1 :    உங்கள் மன்னர்கள் தலைக்கு முடி சூட்டிக் கொண்ட கொள்ளையர்கள்.  (தாடியை தடவியபடி) நாங்கள் முகத்துக்கு முடி சூட்டிக் கொண்ட கொள்ளையர்கள். (பக். 30-31 இன்குலாப், ஒளவை)

என்று காட்டை அழித்து நாட்டை உருவாக்கிய, தம் வீடுகளை அலங்காரமாகக் கட்டிக் கொண்ட மன்னர்கள், வணிகர்களின் பண்டைய கால நிலையினை தெளிவுபட விளக்குகினறார்.  இச்சூழல் இன்றைய சமூகச் சூழலிலும் பொருந்தும் கருத்தாய் அமைகின்றது.  குறிப்பாக இன்றைய இந்திய, தமிழக சூழலோடு பொருத்திப் பார்க்கும் நிலையில் உள்ளது.  ஆம், காட்டை அழித்தும், கழனியை அழித்தும் இன்றைய ஏகாதிபத்திய சூழல் பெரும் பாதிப்பை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது என்பதே திண்ணம்.

ஐந்நில மக்களின் வாழ்வு
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நில மக்களின் வாழ்வு நிலையை தெளிவாக பதிவு செய்கிறார்.  சங்க இலக்கியத்தையும், பண்டை சமூகச் சூழலையும் நுண்ணாய்ந்தோர் மட்டுமே இக்கருத்தை வெளிப்படுத்த இயலும்.

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”

(தொல்காப்பியம் அகம் நூ.6)

என்ற பாடலில், காடுறை உலகம் - முல்லை; தீம்புனல் உலகம் - மருதம்; பெருமணல் உலகம் - கடல் சார் பகுதி ஆகிய 4 நில பகுதியை கொண்டதாய் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.  இந்நிலத்துள் ‘பாலை’ எனும் ஒரு நிலம் எவ்வாறு உருவாகியது என்பது பற்றி சிலப்பதிகாரப் பாடலில்,

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து... என்ற பாடலின் வழியே காடு, மலை ஆகிய இரு பகுதிகளும் தத்தம் இய்றைகச் சூழலை இழந்து நிற்கும் போது தான் அஃது பாலை நிலமாக மாறி நிற்கின்றது என்று பொருள் உரைக்கப்படுகின்றது.

ஆக, மன்னர் உடைமை சமூகமாய் தமிழ் சமூகம் திணை நிலை சமூகமாக இயற்கையின் நானில பிரிவுகளுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்து வாழ்ந்துள்ளனர்.  எனில், கொள்ளையடிப்போராய் மாறும் சூழல் எப்போது ஏற்பட்டது என்பதை ஆசிரியர் ஆராய்ந்தே எயினர்களின் நிலையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

கொடுக்கும் கைகள் எங்கே இருந்ததோ அங்கே தான் பெறும் கைகளும் இருந்தது எனில் தொடக்கக் காலத்தில் வாழ்க்கை முறை மூவேந்தர்களுக்கு சமூகத்தில் இல்லை என்பதே இன்குலாப் முன் வைக்கும் கருத்து.  சேர, சோழ, பாண்டியர்களின் அடிப்படைச் சிந்தனைகள் இன்றைய வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளை எப்படி அழிக்க முற்படுகிறதோ அதை போலவே பண்டைய வேளிர்கள், குறுநில கிழார்கள், வள்ளல்கள் ஆகியோரை பேரரசுகள் அழித்தன.  அவர்களிடத்து நாடு பிடிக்கும் கொள்கையும், நாட்டை விரிவுபடுத்தி தன்னாட்சிக்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்ததே தவிர மக்களைப் பற்றிய அக்கறை ஏதுமில்லை என்பதையும் ஆசிரியர் கூறிச் செல்கின்றார்.

பாணர்களின் நிலையும், ஐநில மக்களின் வாழ்வும்

“ஈயென இரத்தல் இழிந்தன்று
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று”   

என்றான் பண்டையப் புலவன், அத்தகு சிறப்பு மிகுந்த வாழ்வை வாழ்ந்தனரா?  என்பது கேள்வி, ‘தா’ என கேட்டல் இழிந்த நிலையாகும்.  ‘தர மாட்டேன்’ என கூறுவது அதை விடவும் இழிந்த நிலையாகும் என்பதே மேற்கண்ட பாடலின் விளக்கம்.  ஆக, பண்டைய தமிழ்மக்களுள் பாணர்கள் வாழ்வு இசைத் தொழிலில் வல்லமைமிக்கவர்களாக வாழ்ந்தவர்கள் பின்னர் உணவுக்குக கூட வழியின்றி இருந்ததை ஆற்றுப்படை நூல்கள் நமக்கு தெளிவாக உணர்த்தும்.  இதனை ஆராய்ந்து அறிந்தே, ஒளவை நாடகம் அமைந்திருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.

ஒளவை பாணர்களின் கூட்டத்தோடு அலைந்துத் திரிகின்றாள்.  காட்டில் காட்டுக் கீரையாவது கிடைக்குமா?  என தேடும் நிலையில் அவர்களின் பசி இருக்கிறது.  சுரைக்குடுவையில் கொண்டு வந்த தண்ணீரும் தீரும் நிலை இருக்கிறது.  இந்நிலையில் பாலைப்பண் இசைக்கின்றனர்.  அதனை கேட்டு ரசித்து எயினர்கள் வருகிறார்கள்.

“எயினி-1 :    இங்கென்ன செய்கிறீர்கள்?

எயினர்-1 :    இவர்கள் பாணர்கள்.  இவர்கள் பாட்டுக் கேட்டு வந்தோம்.

எயினி-2 :    நாங்களுந்தான்... (பாணர்களை உற்று நோக்கிவிட்டு...)  ஐயோ... இன்னும் பசி ஆறவில்லையோ?  முகமெல்லாம் வாடி... வாருங்கள்.  நமது குடிலுக்குச் செல்வோம்.

எயினர்-2 :    அடடா, இவர்கள் உணவு உண்டார்களா என்று எங்களுக்கு கேட்கவே தோன்றவில்லை...”  (பக். 31, ஒளவை, இன்குலாப்)
என்று எயினர்கள் பாணர்களை தம் வீட்டிற்கு பசியார அழைத்துச் செல்கின்றனர்.  உணவு தரப்படுகிறது...

“ஒளவை :    இது என்ன ஈந்தின் விதைபோல் சிவந்த அரிசிச் சோறு... (ஒரு வாய் சுவைத்து) நன்றாக இருக்கிறது.

எயினி-2 :    பசித்த வாய் சுவையறியாது.

எயினி-1 :    நாம் கடந்து வரும் போது சில எயினர் குடிகளைப் பார்த்தோமே இல்லையா?  ...ஆம்... பிறகு

எயினி-1 :    காலையில் கடப்பாரையுடன் காட்டுக்குப் போவார்கள்.  எறும்புப்புற்றை இடிப்பார்கள்.  அங்கு எறும்புகள் சேர்த்த புல்லரிசி உவர் மண் ஊற்றில் ஒட்டிக் கிடக்கும் நீரை அள்ளி அதில் சமைப்பார்கள்.  சமையல் பானை கூட உடைந்த வாயுடையது.  ஓவாய்ப் பானையாய் ஒழுகும்.

ஒளவை :    அங்கு மான் தோலில் ஒரு பெண் படுத்திருந்தாளே...

எயினி-1 :    ஆமாம், அவள் குழந்தைப் பெற்றிருக்கின்றாள்.  அதனால் அவள் புல்லரிசித் தோண்டப் போகவில்லை” (பக். 33, இன்குலாப், ஒளவை)

என்று எயினர் குடி மக்களின் உணவுப் பொருளாக மலை அரிசி சோற்றினையும், அவர்களுள்ளும் சிலர் புற்றில் உள்ள எறும்பு சேர்த்து வைத்த அரிசியை கொண்டு வந்து உணவாக உட்கொள்வதாகவும், குழந்தை பெற்றெடுத்தவள் மான் தோலில் படுத்திருப்பதாய் குறிப்பிட்டு செல்வது எதார்த்த உண்மையாய் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

ஐநிலத்து மக்களும் அன்போடு வரவேற்று உணவு தந்தனர் என்பதை இன்குலாப் தெளிவுபடுத்துகின்றார்.

“பாண்மகள்-2 :    அந்த மருத நில மக்கள்... அவர்கள் போட்ட அரிசிச்சோறு

பாண்மகள்-1 :    கோழிக்குழம்பு...

இளைஞன் :    ஏன் அந்த முல்லை நிலத்து ஆய்ச்சிக் கூட பால்சோறு கொடுத்தாளே!”    (பக். 38, இன்குலாப், ஒளவை)

என்று ஒவ்வொரு நிலத்து மக்களின் உணவையும் கூறி அம்மக்கள் நன்கு உபசரித்ததாக நாடகத்தின் வழியே ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

மன்னர்கள் மக்களைப் பற்றிய செயல்களைக் கூற வரும் ஆசிரியர்,

“பாணர்-1 :    மன்னர்கள் மோதிக் கொள்கிறார்கள்.  மக்கள் நாம் எங்கிருந்து வருகிறோம் என்பது பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் வரவேற்கிறார்களே...

ஒளவை :    இந்த மன்னர்கள் தோன்றுவதற்கு முன்பு மக்கள் இருந்து வருகிறார்கள்.  அவர்களுக்கு நாட்டைப் பிரிக்கும் கோடுகளுக்கும் கொடிகளுக்கும் முன்பு தாங்கள் ஒரே இனத்தின் கிளைகள் என்பது நன்கு தெரியும்.  அது மட்டுமென்று, நம் கையில் உள்ள யாழ், முழவு, பறை, குழல்... காற்று, எல்லை கடக்கும் இசையும் அப்படித்தான் எந்த மன்னரின் கொடி நிழலிலும் முடங்கி விடாது”(பக். 37, இன்குலாப், ஒளவை)
என்று ஒளவை நாடகத்தின் வழியாக, மன்னர்களால் இசையை, இசைத் தொழிலில் ஈடுபட்ட பாணர் மன்னர்களால் அழிக்கவே முடியாது. இசை எதனாலும் முடங்கி விடாது என்று பண்டைய பாணர்களின் வறுமை நிலையை ஆராய்ந்தும் மன்னர்கள் பொருள் தராது போயினும் ‘நிலமக்கள்’ தந்து காப்பாற்றுவார்கள் எனவும்,  ‘கலை’ என்றும் வாழும் என்று ஆசிரியர் உரைக்கிறார்.

நிலமக்களின் வாழ்க்கையைப் பற்றி மிக நுட்பமாக விவரித்து கூறும் ஆசிரியர், அவர்கள் அன்றாடம் உண்ணும் உணவை பட்டியலிடுவது சிறப்பு.

i)    குறிஞ்சி - வேட்டையாடி கிடைக்கும் உணவுகள் : (வேட்டையாடுதல்)
ii)    முல்லை - பால் சோறு (கால்நடை வளர்ப்பு)
iii)    மருதம் - அரிசி சோறு (வேளாண்மை)
iv)    நெய்தல் - மீன், சோறு (கடல் சார் பகுதி, மீன்பிடித்தல்)
v)    பாலை - வேட்டையாடி கிடைத்த உணவுப் பொருட்கள்

என்று ஒவ்வொரு நிலத்திலும் அவரவர் சூழலுக்கு ஏற்ப மக்களின் உணவு பழக்கங்களை குறிப்பிட்டு, பாலை நிலத்து மக்கள் வழிப்பறி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட காரணத்தையும் எடுத்துரைக்கின்றார்.

பண்டைத் தமிழகத்தில் வேளிர், சிற்றரசர், வள்ளல் இவர்களுக்கும் மூவேந்தர்களுக்கும் இடையில் பல போர்கள் நிகழ்ந்திருக்கின்றன.  குறிப்பாக, சோழர், பாண்டியர், வேளிர்கள் ஆகியோரோடு பழையன் இணைந்து கொண்டு சேரன் செங்குட்டுவனை வீழ்த்த எண்ணினான் என்பதும், மழவர்களை சேரமன்னன் எதிர்த்தான் என்பதும், போன்ற பல செய்திகளை சங்க இலக்கியத்தில் காண முடியும்.

வேளிர்களும், வள்ளல்களுமே புலவர்களையும், பாணர்களையும் மக்களையும் போற்றினார்கள்.  ஆனால் மூவேந்தர்கள் மக்களுக்கு எதிரானவர்களாகவே இருந்தார்கள் என்பதை தெளிவுபட உணர்த்திச் செல்கின்றார் ஆசிரியர்.

மூவேந்தர்களுக்கு தமிழ் மாநிலமே கட்டுபட நாஞ்சில் வள்ளுவன் மட்டுமே எதிர்த்து நிற்கின்றான் அல்லது அவர்களின் புகழினைப் பாடாமல் இருக்கின்றான்.  ஆதலால், அவனும் அழிக்கப்படலாம் என கதையின் வழியே கவிதை தருகின்றார்.

“முரசொலிக்க வேந்தர் மூவரும்
அரச யானையில் ஊர்வலம் வரலாம்
அலைகடல் வரைக்கும் ஆணைகள் தரலாம்
இன்னும் அவர்தமைப் புகழ்ந்து பாடாதவன்
இந்த ஒரு சிறைப் பெரியன் மட்டுமே!
யான்..
அறிந்த மன்னருள் முதலில் நிற்பவன்
நாஞ்சில் வள்ளுவன் ஒருவன் மட்டுமே!”    (பக். 39, இன்குலாப், ஒளவை)

என்று நாஞ்சில் வள்ளுவனின் சிறப்பைக் கூறுகின்றார்.  மேலும்,

பாண்மகள்-1 :    அப்படியென்றால் புலவர் பாடும் இந்த நாஞ்சில் வள்ளுவன் மூவேந்தரிலும் பெரியவனாக இருத்தல் வேண்டும்.

பாணர்-1 :    அப்படி எல்லாம் இல்லை.  சேரனுக்குத் திறை செலுத்தும் சிற்றரசன் தான்.

பாண்மகள்-1 :    பெயர் வள்ளுவன் என்றிருக்கிறதே!

ஒளவை :    பழைய குடிகளின் கடைசித் தளிர் வள்ளுவன் அதியன் போன்றவர்கள்... இந்த கடைசித் தளிர்களும் எரிந்து சாம்பலாகின்றன... இந்த சாம்பல் மேட்டின் மீது மூவேந்தர்களின் கொடி பறக்கத் தொடங்கி இருக்கிறது.

என்று பழைய குடிகள் - அழிக்கப்பட்டு மன்னர்கள் வேந்தர்களாக சர்வ அதிகாரம் படைத்தவர்களாக மாறிய காலமே பண்டைய காலம் என்பதை பதிவு செய்துள்ளார்.

மேலும், “இந்தக் கடைசித் தளிர்கள் கருகும் போது இப்புலவர்களின் வாழ்வும் கருகலாம்.  ஆனால்... இக்குடிகளிடம் தான் தொன்மை வாழ்வின் மேன்மைகள் எல்லாம் மிச்சப்பட்டுக் கிடக்கின்றன... இருப்பதைப் பகிர்ந்து கொள்வது... தன் இன மக்களுக்கு எளியராய் இவ்வெளிய குடிகளை நாடாமல் பெரு மன்னரைத் தேடிப் போகலாம்.  ஆனால் கூட்டுண்டு வாழ்ந்த தொன்மைக் கனவுகளில் மூழ்கும் பாணனுக்கு இவர்கள்தாம் என்றும் பாடற் பொருளாக இருப்பார்கள்...” (பக். 40-41, இன்குலாப், ஒளவை) என்றும் கடைசி இனக்குழு சமூகத்தின் தலைமைகளின் நிலைமையும், வேந்தர்களின் நிலைமையும் சுட்டிச் செல்கிறார்.

போர்ச்சூழல்
ஒளவை உள்ளிட்ட பாணர்கள் பல நிலங்களும் சென்று வந்து கொண்டிருக்கின்றனர்.  அப்போது ஓரிடத்தில் எங்கும் மிகுதியாக நடுகல் தெரிகிறது.  நடுகல்லில் போடப்பட்ட பூக்கள் கூட உதிரவில்லை.  தகடூர் பகுதி குருதியால் நனைந்திருக்கிறது அல்லது மூவேந்தர்களின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட நிலப்பகுதி என நிறுவ வேண்டும் என்று எண்ணிக் கொண்டு வருகிறாள் ஒளவை.  அப்போது ஒரு மூதாட்டி வருகின்றாள்.

ஒளவை மூதாட்டியிடம் பின்வருமாறு பேசுகின்றாள். 
மூதாட்டி :    முந்தாம் நாள் போரில் வீழ்ந்த என் மகனுக்கு நாட்டப்பட்ட நடுகல்... ஓ... இதோ...

ஒளவை :    அந்த வீரன் உனக்கு ஒரே மகனோ?

மூதாட்டி :    ஆமாம்... அவன் நான் பெற்ற பிள்ளை... இதோ இவர்கள் அனைவரும் (நடுகற்களைக் காட்டி) நான் பெறாத பிள்ளைகள்... இவர்களைக் கருவுற்ற காலத்தில் மண் தின்றோம்.  இப்பொழுது மண் இவர்களைத் தின்று கொண்டிருக்கிறது.

ஒளவை :    அம்மா... உன் ஒரே மகனைக் களப்பலி கொடுத்ததில் உனக்கு வருத்தமில்லையா?

மூதாட்டி :    மக்களுடைய களச்சாவு எங்களை வருத்தப்படுத்துமோ? ”
(பக். 50, இன்குலாப், ஒளவை)

என்று தன் மகனின் நடுகற்களை கண்டும், பிற நடுகல்லும் என் புதல்வர்களே என்று கூறும் முறையும், தன் நாட்டிற்காக தன் மகன் களப்பலி கொடுத்ததில் வருத்தம் ஏது என்று மூதாட்டி சொல்வதுமாய் கதையை நகர்த்திச் செல்கின்றார்.

போரில் தன் மகன் சிறப்புற போர் புரிந்து விழுப்புண்பட்டே இறந்து போனான் என மகனை பறிகொடுத்த தாய் பெருமிதத்தோடு,
“நெருப்பில் சிவந்து வடித்தெடுத்த வேலொடு என் மகன் பகை நடுவில் நின்றானாம்... தன் படை மறவர்கள் முன்னேற வேல் வீசி வழி வகுத்தானாம்... அம்போடும் வில்லோடும் அலை அலையாய் முன்னேறிய பகைவர் படையை இரண்டாகப் பிளந்தானாம்... அந்த முயற்சியில் நான் பெற்ற புலிக்குட்டி உடல் இரண்டு கூறுபட வீழ்ந்தானாம்.  தோழர்கள் சொன்னார்கள்....

ஏய் இளம் பெண்ணே!  இச்செய்தி கேட்ட எனக்கு என்ன நேர்ந்தது தெரியுமா?  எனது வாடுமுலை மீண்டும் ஊறிச் சுரந்தன...

“ஒளவை :    என்ன தாயம்மா நீ?  இதனால் உனக்கு என்ன மிஞ்சும்.

மூதாட்டி :    என் இனம் மிஞ்சும்... இந்த மண் மிஞ்சும்... நாங்கள் இறுதிவரை போரிட்டு மடிந்தோம் என்கிற வரலாறு மிஞ்சும்.  எங்கள் தலைவன் யார் முன்பும் தலைகுனிந்து நிற்கவில்லை என்கிற பெருமை மிஞ்சும்?”    (பக். 50, இன்குலாப், ஒளவை)

என்று பேசும் வீரமிக தாயின் நாட்டு மண் பற்றையும், தங்கள் தலைவன் மீது கொண்டிருந்த ஈர்ப்பையும் ஆசிரியர் சுட்டுகின்றார்.  குறிப்பாக அதியன், வள்ளுவன் போன்றோர் மூவேந்தர்களுக்கும் கட்டுப்படாமல் அடிமையாக இருப்பதைவிட சாவதே மேல் என துணிந்து எதிர்த்தனர் என்ற வரலாற்றையே ஆசிரியர் உரைத்துச் செல்கின்றார்.

பெண்ணடிமைக்கு எதிரான குரல்
பெண்ணடிமைத் தனத்திற்கு எதிரான குரல்கள் ஓங்கி உரைக்கும் காலமிது.  பண்டைக் காலத்திலிருந்து இக்காலம் வரையும் அவ்வடிமைத் தனத்தினை பலவகையில் எதிர்த்து இன்று சிற்சில மாறுபாடுகளை நோக்கி பயணிக்கிறது பெண்களின் வாழ்க்கை.  அப்பெண்ணிணனம் எத்தகைய நிலையில் பண்டைச் சமூகத்தில் எப்படி வாழ்ந்தனர் என்பதை ஒளவை, ஒளவை கருத்தின் வழியாகவே எடுத்துரைக்கின்றார்.

பாணர் குடியில் பிறந்த சங்ககால ஒளவையும் (எல்லா நிலத்துள்ளும் சென்று வந்தவர்)  அறநெறி கருத்தைக் கூறியதாக குறிப்பிடும் நீதி இலக்கிய கால ஒளவையும் வௌ;வேறு பெண்பாற் புலவர்கள் என்று கருத்துரைக்கின்றார்.

சங்ககாலமும், நீதி இலக்கிய காலமும்
சங்க காலத்தில் ‘கள்’ குடித்தல் தவறாகக் கருதப்படவில்லை.  மாறாக அதற்கு பின்னரான நீதி இலக்கியங்கள் கள் குடித்தல் தவறென சுட்டுகின்றது.  கொன்றை வேந்தன், ஆத்திச் சூடியிலும் அஃது தவறென சுட்டப்பட்டுள்ளது.  ஆக, சங்க ஒளவைக்கு அதியமான் ‘கள்’, ‘ஊண்சோறு’, தந்த செய்தி காணப்படுகிறது.  இதற்கு எதிராக புலால் மறுப்பை நீதி இலக்கியம் கூறுகிறது.  ஆகவே, முரண்பட்ட கருத்துக்களை ஒரே ஒளவை கூறியிருக்க முடியாது என்று நிருவுகின்றார்.

மேலும், பாணராய், மீன் பிடித்தலிலும் ஆடல், பாடல் பாடுவதிலும் வல்லவரான குடும்பத்தில் பிறந்த ஒளவை அச்சம், மடம், நாணம் என்று வீட்டிலேயே முடங்கிக் கிடந்திருக்க முடியாது.  பாணர்கள், வள்ளல்கள், குறுநிலக்கிழார்களிடம் சென்று பரிசில் பெறுவதும், ஆடல் பாடலில் பிறரை மகிழ்விக்கும் கூத்துக் கலையில் ஈடுபட்ட அவர்களின் வாழ்வு பண்டைய மக்களின் வாழ்வோடு மாறுபட்டே இருந்தது.  இதனை ஆராய்ந்து பின்வருமாறு கருத்தைப் பதிவு செய்கின்றார்.

கொன்றை வேந்தனும், ஆணாதிக்கப் புறவெளியும்
கொன்றை வேந்தனை மாணவ, மாணவிகள் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

“1. சிறுமி     :    உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு. ஏனையோர்:    உண்டி சுருங்குதல் பெண்டிருக்கழகு.

2. சிறுமி     :    உண்டி மிகுதல் ஆண்களுக்கு அழகோ?

சட்டாம் பிள்ளை-1 :    பாடம் படிக்கும் போது கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது.

2. சிறுமி    :    பெண்களுக்கு என் உண்டி சுருங்கணும்?

சட்டாம் பிள்ளை-1 :    நான் சட்டாம் பிள்ளை சொல்றேன்...

பொம்பளைப் புள்ளைகள் கேள்வியே கேட்கக் கூடாது.” (பக். 11, இன்குலாப், ஒளவை)

என்று கொன்றை வேந்தனின் உள்ள செய்தியிலுள்ள பெண் இனத்திற்கு எதிரான வார்த்தையை, ஆண்களுக்கு நிகராக, கேள்வி கேட்கும் முறையையும், ஆண், பெண்கள் கேள்வி கேட்கக் கூடாது என்றும் கூறும் பெண்ணினத்திற்கு எதிரான நிலையையும் ஆசிரியர் எடுத்துரைக்கின்றார்.

கொன்றை வேந்தன் காலத்து ஒளவை வர, நவீன காலத்துச் சிறுமிகள் கேள்வி கேட்பதாக நாடகம் செல்கின்றது.

ஒளவை :    “அடடா?  இந்த காலத்துப் பெண்கள் எவ்வளவு பேசுகிறார்கள்... நல்லது பெண்ணுக்கு உலகம் வீடுதான். அவள் தந்தைக்கும் கணவனுக்கும் மட்டுமல்ல, வயசான காலத்துலே மகனுக்குக் கூட கட்டுப்பட்டுக் கெடக்கணும்.  அப்பத் தான் ஆண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

2-சிறுமி :    அப்போ இந்த வயசில உன் மகனுக்கு அடங்கித் தான் கெடக்குறியா?  அப்படீன்னா இப்படி ஊர் ஊராய் போறியே, உன் மகன் கண்டிக்கமாட்டானா?

ஒளவை :    குழந்தைகளே... பெரியவர்களுக்குச் சிறியவர்கள் அடங்கி நடக்க வேண்டும் என்று உன் வயதுச் சிறுமி சொன்னால்... பெரியவர்கள் உன்னைக் கண்டிக்கமாட்டார்கள், பாராட்டுவார்கள்.  பெரிய சாதிக்காரனுக்குச் சின்ன சாதிக்காரன் அடங்கி நடக்க வேண்டும் என்று சின்ன சாதிக்காரன் சொன்னால்.... பெரிய சாதிக்காரன் அப்படி சொல்ற சின்னச் சாதிக்காரனை பாராட்டத்தான் செய்வான்... அது போலத்தான்.     ஆண்களுக்குப் பெண்கள் அடங்கி நடக்க வேண்டும் என்று என் வயதில் உள்ள ஒரு மூதாட்டி அல்ல, உன் வயது சிறுமி சொன்னால் கூட, ஆண்கள் அப்படிச் சொல்லும் சிறுமிகளைக் கண்டிக்க மாட்டார்கள்... புரிந்ததா? ”(பக். 15, இன்குலாப், ஒளவை)
என்று நீதி இலக்கிய கால ஒளவை, ஆண்களுக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்று கூறுவதாக ஆசிரியர் காட்சிப்படுத்துகின்றார்.

பெண்ணினத்திற்கு எதிரான நிலையையும், பெண்ணின் அடிமை நிலையையும் உணர்த்தும் ஆசிரியர் “பூம்பூம் மாடுகளைப்” போல பெண்களின் நிலை அமைந்திருக்கிறது என்கின்றார்.

ஒளவை :    “பூம்பூம் மாட்டுக்காரன் யாராவது சாட்டையோடு வருகிறானா?  பார்... தோளில் ஒரு மேளம்... ஒரு குச்சி... உன்னை அடிப்பதற்கு இல்லை... மேளத்தை உருவ... உனக்கு முதுகில் ஒரு பட்டுத்துணி... கழுத்தில் ஒரு பூமாலை... உனக்குக் கொம்பிருப்பதை அவன் இந்த அலங்காரங்களிலேயே மறக்கடித்து விட்டான்... உன்னை இவ்வாறு நீ மறந்திருப்பது அவனுக்கும் நல்லது.  உனக்கும் நல்லது பெண்ணே!  பூம்பூம் மாடுகளைக் குறித்துக் கேவலமாகப் பேசாதே”    (பக். 16, இன்குலாப், ஒளவை)

என்று பூம்பூம் மாடுகளைப் போலத்தான் பெண்கள், மாடுகளை அலங்காரம் செய்திருப்பதால் மாடு முட்டுகின்ற அதன் கொம்புகளை மறந்து போய் இருக்கின்றன.  அதே போல பெண்களும் அலங்காரப்படுத்தப்பட்டு காட்சிப் பொருளாகவே பாவிப்பதால் உங்கள் வலிமையை நீங்கள் உணராமல் ‘பூம்பூம் மாடுகளைப் போலவே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறீர்கள் என்று பெண்ணினத்தின் அடிமை முறைக்கு எதிராக தமது கருத்தினை மிகச் சரியாகவே பதிவு செய்திருப்பதாகக் கருதலாம்.

துணை நூல்கள்
1.    ஒளவை, இன்குலாப், அகரம் வெளியீடு, நிர்மலா நகர், தஞ்சாவூர்-7,
மு.ப. 2000.
2.    தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, மு.ப.
3.    பிற சங்க இலக்கிய, சமூக, இலக்கிய நூல்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் - - முனைவர் பா. பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் -

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R