முன்னுரை
ஆய்வு: இலக்கியத்தில் வெயிலும் வெப்பமும்    உலகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பல. அதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது மனிதா்களே. ஏனெனில், தனது சுயநலத்திற்காகவும், தனது மகிழ்ச்சிக்காகவும் மனிதன்  இயற்கையை எப்போது தொட நினைத்தானோ அப்போதே பிரச்சனைகளும் ஆரம்பமாகத் தொடங்கின. அப்பிரச்சனைகளிலிருந்து, மனிதன் மீண்டுவர நினைத்தால்கூட அது முடியாத ஒன்றாகவே இன்றுவரை உள்ளது.

நமது பூமி இன்று மோசமான ஒரு வானிலை மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. குளிர்காலங்களில் மழையும், வெயில் காலங்களில் பனிப்பொழிவும், மழைக்காலங்களில் வெயிலின் தாக்கமும் பார்த்தோமேயானால் இவையெல்லாம் நமக்கு வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே எச்சரிப்பதாகவே நாம் கருத வேண்டும். இன்று உலகநாடுகளின் பெரும் பிரச்சனையாக இருப்பது வெயிலும் வெப்பமும். ஏனெனில் வெயிலின் உச்சமும், வெப்பத்தின் தாக்கமும், மனிதா்கள், விலங்குகள், செடிகொடிகளை மட்டுமல்ல இந்த பூமியையும் ஆட்டிப்படைக்கிறது. வெயிலையும், வெப்பத்தையும்  குறித்த செய்திகள் நம் இலக்கியங்களில்கூட காணக்கிடைக்கின்றன. அந்த வகையில், சங்க இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரை வெயிலின் தாக்கங்கள் எவ்வாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரை வழிக் காண்போம்.

இலக்கியங்களில் வெயிலும் வெப்பமும்
முற்காலத்தில் மக்கள் வெயிலையும், வெப்பத்தின் கடுமையையும் உணா்ந்திருந்த போதிலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெினில் அக்காலத்து மக்கள் நிலங்களை ஐந்து வகையாகப் பிரித்து அதன் தன்மையோடு பொருந்தி வாழ்ந்துள்ளனா். குறிஞ்சியை, மலையும் மலைசார்ந்த இடமாகவும், முல்லையை, காடும் காடு சார்ந்த இடமாகவும், நெய்தலை, கடலும் கடல் சார்ந்த இடமாகவும், மருதத்தை, வயலும் வயல் சார்ந்த இடமாகவும்  பிரித்தும், பாலையை மட்டும் குறிக்குமிடத்து,

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயா் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும் “       ( சிலம்பு – காடு.காண். காதை  64-66 )       என்று வகுத்துக் கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து நீா்வற்றிப் போக அந்நிலம் வறண்ட தன்மையோடு விளங்குவதால் அதனைப் பாலை எனப் பெயரிட்டு ஐந்தாவது ஒரு நிலமாக கணக்கில் கொண்டனா். இங்கு மழை இல்லாததாலும், வெப்பத்தின் அதிகரிப்பால் நிலத்தடி நீா்குறைவதாலும் உண்ண உணவின்றியும், எத்தொழிலையும் செய்வதற்கான வழியின்றியும், தவிக்கும் மக்கள் பிறரிடம் வழிப்பறி செய்து வாழ்ந்துள்ளதாக சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.    

சங்க இலக்கியங்களில், புலவா்கள் பாலை நிலத்தின் வெம்மையை பலவிதங்களில்  படம்பிடித்துக்காட்டுகின்றனா். அதில் ஒரு சிலக் காட்சிகளை இங்கு பதிவுசெய்துள்ளேன்.

பசுக்கள் நீா் உண்ணும் பொருட்டு கோவலா், தாம் தோண்டிய கிணற்றினின்றும் வளைந்த வாயினையுடைய பத்தலால் இறைத்த நீா் ஒழுகிச் சென்று சிறு குழியில் நிரம்பியது, கதிரவன் காய்ந்தமையால் அந்நீரும் வற்றி குழியும் காய்ந்தது. இதனால் நீருண்ண வந்த பெரிய யானை நீா் இல்லாதது கண்டு வருத்தமுற்றுச் சென்றதாகக் கூறுவதை,


“……………………………    பல்வயின்
பயநிரை சோ்ந்த பாழ்நாட்டு ஆங்கண்
நெடுவிளிக் கோவலா் கூவல் தோண்டிய
கொடுவாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறுகுழி
நீா்காய் வருத்தமொடு சோ்விடம் பெறிது
பெருங்களிறு மிதித்து அடியகத்து“             (அகம் 155: 6-11)       

என்னும் அகநானூற்றுப்பாடல் வரிகள் தெளிவுபடுத்துகிறது. அதோடு கோடைக்காலத்து வெப்பத்தின் காரணத்தினால் காடே தன் அழகை இழந்து நிற்பதாக முள்ளியூா்ப் பூதியார் தன்பாடலில் கூறியிருக்கிறார். மேலும்,

“காடுகவின் அழிய உரைஇ, கோடை
நின்றுதின விளிந்த அம்பணை“                                            (அகம் 173:13-14)    

இவ்வரிகள் மூலம் அதனை அறிந்துகொள்ளலாம்.

அதுபோல, கலித்தொகையிலும் காட்டில் நீா் வற்றிப்போய் நிலமே நன்கு வெம்மையுடன் இருப்பதை விளக்குகின்றது ஒருபாடல். அதாவது நீா் அற்ற சுனைகள் உடைய காட்டுவழியில், நீர் உண்ணுதலை விரும்பிய உடல் வருந்தின யானைகள் நீரற்ற வெம்மை உடைய சுனை என்பதை அறியாது, ஒருசேரக் கைகள் பதித்துத் தொட்டுப் பார்த்தன. அப்போது கைகள் சுடப்பட்டு, யானைக்கூட்டங்கள் வெவ்வேறாக மலைச்சாரல் தோறும் ஓடின. இதனை,

“........................................அறுசுனை முற்றி
உடங்குநீா் வேட்ட உடம்பு உயங்கு யானை
கடுந்தாம் பதிபு ஆங்குக் கை தெறப்பட்டு
வெறிநிரை வேறாகச் சார்ச்சாரல் ஓடி“                                        (கலி.12:3-6)

என்றும், மேலும் பலவகைப்பட்ட வளங்களையும், உணவுகளையும் விளைவித்துக் கொடுத்து, எல்லோரையும் நுகா்விக்கும் பயன்மிக்க நிலம் தற்போது வெப்பத்தால் ஈரத்தன்மை அற்றுப் போகும்படி, குற்றத்தைச் செய்யும் சினத்துடன் ஞாயிறு தன்னுடைய கதிர்களைச் சொரிந்த, மாறுதல் இல்லாத வெப்பம் மிகுந்த கோடைக் காலத்தில், மலை குளிர்ந்திருக்கும் என்று கருதிக் குளிர்ச்சியை விரும்பி, பசிப்பிணியால் வருந்திய பெரிய யானைக்கூட்டங்கள் மலையை நாடித்தங்கின,                     
ஆனால், சிறந்த மலையும் கூட வெம்மையின் காரணத்தால் வெம்பி, மண்பிளந்து நின்றன, தெளிந்த நீா் நிலைகளும் நீர்வற்றித் துகள் உண்டாகும்படி ஆயின, இங்ஙனம்  செறிந்த அழலைச் சொரிகின்ற வெய்யகாடு என்பதனை,

பல்வளம் பகா்பு ஊட்டும் பயன்நிலம் பைது அற,
செல்கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின்
தணிவுஇல் வெங் கோடைக்குத் தண் நயந்து அணிகொள்ளும்
பிணிதெறல் உயக்கத்த பெருங்களிற்றினம் தாங்கும்
மணிதிகழ் விறல் மலை வெம்ப, மண்பக
துணிகயம் துகள்பட்ட தூங்கு அழல் வெஞ்சுரம்                               (கலி 20:1-6)

என்னும் கலித்தொகைப் பாடல் வரிகள் பாலைநிலத்தினது வெயிலின் கொடுமையை விளக்கியுள்ளது. மேற்கண்ட பாடல்கள் வழி மனிதா்கள் மட்டுமல்ல விலங்குகள்கூட வெப்பத்தால் நன்கு பாதிப்பை அடைவதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் வெயிலின் தாக்கம் எவ்வாறு பதிவு செய்திருக்கின்றனா் என்பதை அகநானூறு கலித்தொகை வழி அறிந்தோம். அதுபோலவே இக்கால இலக்கியங்களான கவிதை, சிறுகதை, புதினமும் எவ்வாறு வெயிலின் கொடுமையைப் பதிவுசெய்துள்ளது என்பதையும் காணலாம் . புதுக்கவிதைகளில் வெயிலையும், வெப்பத்தையும் நோக்குவோமேயானால் பல கவிதைகளை எடுத்துக்காட்டலாம்.  அந்த வகையில் ஒரு சில கவிதைகளை மட்டும் உதாரணமாகக் காணலாம்.  அதாவது, வெயிலாலும் வெப்பத்தாலும் பல ஆறுகளும், குளங்களும் வற்றிப்போவதைப் பலகவிஞா்கள் படம்பிடித்துக்காட்டுகின்றனா். அந்த வகையில் கவிஞா் வைரமுத்து “ஒரு நதியின் விதி“ என்னும் கவிதையில் உலா்ந்து போன ஒரு நதியின் உருவத்தைப் பின்வருமாறு வருணிக்கின்றார்.

“எங்கே தொலைந்தாய்
எங்கள் நதியே
மணலுக்குள் சமாதியான
பால்ய வயதுப் பரவசமே
சகாராவின்
தொலைந்த துண்டே
உன் கவிஞன் வந்திருக்கிறேன்
கண் திறந்து பார் நதியே
எம் வாழ்வின் முற்பொழுதில்
முலையூட்டியது நீதானா?
இன்று
வற்றித் தளா்ந்து
வடிவம் இழந்து
ஒட்டிப் போனதும்
நீ தானா?                (வைரமுத்து. தமிழுக்கு நிறம் உண்டு, பக்.53-59)

என்று ஆழத்துடன் நீா் பெருகி ஓடிய நதி இன்று மணலுக்குள் புதைந்து கிடக்கும் அவலநிலையைக் காட்சிப்படுத்துகிறார் கவிஞர்.
சுயம்புலிங்கம் என்பவா் தனது கவிதை ஒன்றில் பூமியின் வெம்மையை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பதிவுசெய்கிறார்.

சூரியனைப் புரட்டு
பார் பார்    
சூரியன் பண்ணுகிற
திருட்டுத் தனத்தை
நம்குளத்தில் உள்ள
தண்ணீரை யெல்லாம்
வற்றவைத்துக் கொண்டிருக்கிறது.
அது    
தண்ணீரை
விஞ்ஞான ரீதியில் திருடுகிறது
சூரியன்
விஞ்ஞானத்தை
கையில் எடுப்போம்
சூரியனை    
அப்புறப்படுத்துவோம்                           (விகடன்-தடம்- ஜீலை 2016-பக்.33)

என்று தண்ணீா் திருடும் சூரியனிடமிருந்து நாம் பாடம் ஒன்றைக் கற்று அதன்வழியைப் பின்பற்ற வேண்டும் என்று விளக்கியுள்ளார். இங்கு குளங்களையும், ஏரிகளையும் வற்றச் செய்கின்ற பூமியின் வெப்பமயமாதலை மாறுபட்டக் கோணத்தில் காட்சிப்படுத்துகிறார்.

புதுக்கவிதையை அடுத்து, சிறுகதையில் பார்த்தோமேயானால், வெப்பம் மிகுதியின் காரணமாக உண்டான வறட்சியால் பிழைக்க வழியின்றி மக்கள் தாங்கள் வாழ்ந்த ஊரைவிட்டே செல்வதாக வண்ணநிலவன் ’எஸ்தா்’  எனும் தனது சிறுகதையில்  கூறியுள்ளார். இக்கதையில், வெயிலின் தாக்கத்தை பலவரிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

”வெயிலும், வறட்சியும் நிரம்பிய காட்டுக்குள் அனுப்பி வந்தாள்”           (பக்.435)

”இவ்வளவு அக்கினியை மேலேயிருந்து கொட்டுகிறது யார்?”               (பக்.435)

”இப்போது இருட்டு தருகிற துக்கத்தை வெயிலின் கொடுமையைப்
போல் தாங்க முடியவில்லை”                               (பக்.436)

”வெயில், புழுக்கமும் எரிச்சலும் அளித்தது.
வெயில் பகலின் துயரங்களை அதிகப்படுத்தியது”                   (பக்.436)

என்று கூறப்படும் இவ்வரிகள் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததை விளக்குகிறது. வெயிலின் கோரப்பிடியில் சிக்கி அங்கு நீா் அனைத்தும் வற்றிப்போய் விட, அவ்வூரே குடிக்கவும் நீரின்றி, விவசாயத்திற்கும் நீரின்றி, தாங்கள் வளா்க்கும் ஆடுமாடுகளுக்கும் நீரின்றி ஒரு ஊரே பாலைவனாக மாறியுள்ளதால் அங்கு வாழ்ந்த மக்கள் ஊரை காலி செய்துவிட்டு வேறிடம் நோக்கிச் செல்வதாக வண்ணநிலவன் குறிப்பிட்டுள்ளார். இதனை,

”பக்கத்து வீடுகளில் எல்லாம் ஊரை விட்டுக் கிளம்பிப் போய் விட்டார்கள்.
மேலத் தெருவில் ஆளே கிடையாது என்று நேற்று ஈசாக்கு வந்து
அவா்களுக்குச் சொன்னான்”                               (பக்.431)

என்ற வரிகள் தெளிவுபடுத்துகிறது. அதோடு இக்கதையில் முக்கியக் கதாபாத்திரமான எஸ்தருக்கு இருட்டு சொல்வதாக ஒரு செய்தியை நாம் காணலாம்.
”நீயும் உனக்குப் பிரியமானவா்களும் இங்கிருந்து போவதைத் தவிர வேறு வழியென்ன? இன்னும் மழைக்காகக் காத்திருந்து மடிவீா்களா?”                          (பக்.437)

இச்செய்தி, எஸ்தா் சித்திக்குக் கொடுமையான ஒன்றாகவே இருந்ததை இக்கதை தெளிவுபடுத்துகிறது. மேலும்,
இப்போது அதுபோல் ஒரு வெள்ளாட்டு மந்தை அந்தத் தண்டவாளத்தைக் கடந்து மறுபுறம் போகாதா என்று இருந்தது. இப்போது ஊரில் மந்தை தான் ஏது? மந்தை இருந்த வீடுகள் எல்லாமே காலியாகக் கிடக்கின்றன.                   (பக்.433)

இச்செய்தி, இவ்வூரின் நிலைமையை தெளிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. மொத்தத்தில், நன்கு செழிப்புடன் வாழ்ந்த ஊரில் உள்ள மக்களையே தற்போது இடம்பெயரச் செய்யும் அளவுக்கு வெயிலும் வெப்பத்தின் உக்கிரமும் அமைந்துள்ளதை தமது சிறுகதையில் வண்ணநிலவன் பதிவுசெய்துள்ளார். அதுபோலவே எஸ். ராமகிருஷ்ணனும் ’நெடுங்குருதி’ என்னும் தனது நாவலில் வெப்பத்தின் கோரத்தை விளக்கியுள்ளார்.

”கோடைத் துவங்கிய சில நாட்களிலே பகல்  பற்றி எரிவது போல உக்கிரம் கொள்ளத் துவங்கியது. ஒரு நாள் வெயிலின் உக்கிரம் தாளாமல் நாவிதன் வீட்டுக்கூரை தானே பற்றி எரிந்த போது ஊரே பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது.”            (பக். 16)

என்று கூறியிருப்பது வெயிலின் உக்கிரத்தை எடுத்துக்காட்டுகிறது.  வெயிலால் குடும்பங்கள் எத்தனை வேதனைகளை சகித்துக் கொள்கிறது என்பதை சில இடங்களில் பதிவுசெய்துள்ளார். அச்சூழலை விளக்கும் ஒரு நிகழ்வு,

”வெக்கையில் மரவையில் இருந்த உப்பு சமையலறையெங்கும் ஒழுகியிருப்பதை அய்யா கண்டதிலிருந்துதான் அந்தச் சண்டை துவங்கியது.  அய்யாவின் கால்களில் படிந்த உப்பின் பிசுபிசுப்பு எரியத் துவங்கியது. அவா் ரௌத்திரத்துடன் காலைத் தரையில் தேய்த்து உரசியபோதும் உப்பு போகவேயில்லை. கோபத்துடன் பழைய சேலையொன்றைப் போட்டு மூடியிருந்த மண்பானையை வெளியே இழுத்தார். அந்தப் பானையில் பாதியளவு நீரிருந்தது. ஈய டம்ளரில் தண்ணீரைக் கோரி எடுத்துக் காலில் ஊற்றியபோது..........அம்மா கையில் இருந்த டம்ளரைப் பிடுங்கியவளாகக் கத்தினாள். டம்ளா் தட்டிவிடப்பட்டு தண்ணீா் சுவரில் சிதறியதும் ஓங்கி அவள் முகத்தோடு அறைந்த    அய்யா ... எந்தச் சலனமுமில்லாமல் மெதுவாக வெயிலைக் கண்டபடி வெளியேறி நடந்தார். சிதறிய தண்ணீரை வீட்டுச் சுவா் தன் ஆயிரம் நுண்நாவுகளால் சுவடேயில்லாமல் உறிஞ்சியிருந்தது.”          (பக்.16-17)

என்று கூறும் வரிகள் தண்ணீா் இல்லாநிலையில், பாதுகாத்து வைத்திருந்த சிறியளவு நீா் வீணாக்கும் போது உண்டாகும் தவிப்பை அம்மாவின் வழியாகவும், வெப்பத்தின் உக்கிரத்தால் விளையும் சிறுநிகழ்வு கூட கொந்தளிக்கும் மனநிலையை ஏற்படுத்தும் என்பதை அய்யாவின் வழியாகவும் விளக்கியுள்ளார்.

”நல்ல தண்ணீா்க் கிணறு வறண்டுபோன பிறகும் அதன் கல்லில் இருந்த குளிர்ச்சி குறையவேயில்லை. அந்த ஈரத்திற்காக ஏங்கிய இரண்டு மூன்று ஆட்கள் கல்லில் முதுகுபடர படுத்துக் கிடந்தனா்.”                     (பக்.17)

இங்கு குளிர்ச்சிக்காக ஈரத்தைத் தேடிச் சென்று வெப்பத்தின் கொதிப்பை மக்கள் சமாளிப்பதாகக் காட்டுகிறார். ஆதிலட்சுமி என்ற பெண்ணின் வாயிலாக ஆசிரியா் ஒரு செய்தியைப் பதிவு செய்துள்ளதைக் காணமுடிகிறது. அதாவது,

”வீட்ல ஈரமிருக்கும் வரைக்கும்தான் எறும்புகள் சுவரேறி நடமாடும். ஈரம் உலா்ந்து போயிட்டா வீட்டில் தங்காது. எறும்பு வீட்டை விட்டு போயிட்டா மனுசன் அந்தவீட்டிலே குடியிருக்கவே முடியாது, வீடு வெறிச் சோடிப்போயிரும். இந்த ஊரில் இனிமேல் எறும்பேயிருக்காதுடா.”         (பக்.19)

அவ்வூரில் இனி வாழ்வது கடினமான ஒன்றாக இருக்கப்போகிறது என்பதை ஆதிலட்சுமி கதாபாத்திரம் வழி எடுத்துக்காட்டுகிறார். மேலும் அவ்வூரில் காணப்படும் வெயிலும் வெப்பமும் அங்கு வாழும் மக்களின் மனநிலையில் ரௌத்திரங்களை உருவாக்கியுள்ளதாக இந்நாவலாசிரியா் பதிவுசெய்கிறார். அதனை,

”கோடை இரண்டு பரதேசிகளையும் வெகுவாக சீரழித்துக் கொண்டிருந்தது. நடந்து செல்லும் பாதைதோறும் யாரோ முனுங்குவது போல மண்புரண்டு சப்தமிடுவதையும், வெக்கை தாளாமல் புதையுண்டு கிடந்த மூதாதையா்களின் எலும்புகள் திமிறிக் கொண்டு மண்ணை மீறி  வெடிப்பதையும் கண்டார்கள்.
தென் கிராமங்கள் யாவுமே உலா்ந்து கொண்டுவிட்டன. காணும் முகங்களில் சினமும் ரௌத்திரமும் அப்பிக் கொண்டிருக்கின்றன.”                 (பக்.26)   

என்ற வரிகள் இதைத்தெளிவுபடுத்துகிறது. ஆசிரியா் இந்நாவலில் மேலும் வெப்பத்தின் கொடுமையை பலவாறு எடுத்துக்காட்டியுள்ளார். அதில் ஒரு சில வரிகள்,

”மழையற்றுப் போன வருஷங்கள் ஊரை கரும்புச் சக்கைப்
போலாக்கிவிட்டிருந்தன.”                                     (பக்.30)

”கழுத்தடியில் ஒரு கையைக் கொடுத்து நெறிப்பது போல வெயில் இறுக்கத் துவங்கியது. வெட்டிய முள்ளை இழுத்து அருகில் போட்டு நிமிரும் முன்பு வியா்த்து இடுப்பெல்லாம் நீா் இறங்கி ஓடியது. கையிலிருந்த அருவாளால் சூரியனைத் துண்டு துண்டாக வெட்டிப் போட்டு விடலாமா என ஆத்திரமாக வந்தது. இங்கு மட்டும் எதற்காகக் கொப்பளிக்கிறது சூரியன்.”                          (பக்.102)

”வரியன் பாம்பைப் போல உடலை அசைத்து அசைத்து சீறியபடி தரையில் ஊா்ந்து போய்க் கொண்டிருந்தது வெயில்.”                              (பக்.156)

”வெயில் ஏற ஏற சுண்ணாம்பு ஓடை முறுக்கிக் கொண்டது போல வெக்கையை உமிழத் துவங்கியது”                                   (பக்.138)

இது போன்று இந்நாவலில், பல இடங்களில் வெப்பத்தின் மிகுதியை வா்ணிக்கும் வகையிலும், பல இடங்களில் மக்கள்படும் வேதனையின் வழியும் தெளிவுபடுத்தியுள்ளார்.

முடிவுரை
இலக்கியங்களில் பார்த்தோமேயானால், வெயிலின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதையும், அதனால் மக்கள் எந்த அளவுக்கு பாதிப்பை அடைந்தனா் என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது. கோடைக்காலத்தில் மட்டுமே, அக்காலத்து மக்களும், விலங்குகளும் வெயிலினால் உண்டான பாதிப்பை எதிர்கொண்டிருந்தனா் என்பதை சங்கஇலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. வெயிலின் அளவு அதிகரிப்பதால் உண்டாகும் வெப்பமிகுதியால் நிலத்தடிநீா் வற்றிப் போவதையும், செழிப்பாக மக்கள் வாழ்ந்த ஊா் தற்போது வறண்ட ஒரு பூமியாக மாறிவருவதையும் இக்கால இலக்கியங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆகவே, வெயிலாலும் வெப்பத்தாலும் மக்கள்படும் வேதனை அன்றைக்காட்டிலும், இன்று பல்மடங்கு பெருகியுள்ளதை மேற்கண்ட இலக்கியங்கள் வழி நம்மால் அறிந்துகொள்ள முடிந்தது.

பார்வை நூல்கள்
1.சிலப்பதிகாரம்   (மூலமும் உரையும்)- உரையாசிரியா் வ.த.இராமசுப்பிரமணியம்.,    பூம்புகார் பதிப்பகம். சென்னை.
2.அகநானூறு      (மூலமும்உரையும்)-  உரையாசிரியா் முனைவா்.இரா.செயபால்.    நியூசெஞ்சுரி புக் ஹ்வுஸ், சென்னை.
3.கலித்தொகை (மூலமும்உரையும்) – உரையாசிரியா் முனைவா்.அ.விசுவநாதன்.   நியூசெஞ்சுரி புக் ஹ்வுஸ், சென்னை.
4.வைரமுத்து – தமிழுக்கு நிறம் உண்டு –சூா்யா பதிப்பகம், டிரஸ்ட் புரம்.
5.விகடன் – தடம்-(மொழி செல்லும் வழி)- ஜீலை 2016 மு. சுயம்புலிங்கத்தின்     கவிதைகளை முன்வைத்து (கட்டுரை)
6.100 சிறந்த சிறுகதைகள் (பாகம் -1) – வண்ணநிலவன் – எஸ்தா் – சிறுகதை (பக்.429-     439)  – தொகுப்பு. எஸ்.ராமகிருஷ்ணன் – டிஸ்கவரி புக்  பேலஸ், சென்னை.
7.நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை பதிப்பகம்.சென்னை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர்: - ரா. வனிதா, தமிழ் - உதவிப்பேராசிரியர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் - 641 028 -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R