ஒரு சமூகத்தின் தத்துவார்த்த விழுமியங்களை அடுத்த தளத்தை நோக்கி நகர்த்தும் ஆக்கபூர்வ விளைவுகளில் ஒன்று ஆய்வு. அது தமிழ் அறிவுசார் மரபில் ஒரு பண்பாட்டு வடிவமாக இருந்து வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுத் தொன்மை வாய்ந்த தமிழ் இனத்தின் பண்பாட்டு அசைவாக்கங்களை அத்தகைய ஆய்வுகளை துல்லியமாக புற உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்து வருகின்றன. பண்பாட்டின் அடிப்படைகளை அறிந்துக்கொள்ள வரலாற்று ஆவணமாகத் திகழ்பவை இலக்கியங்கள் ஆகும். அதிலும் தமிழரின் வரலாற்று ஆவணங்களாக விளங்கும் சங்க இலக்கியங்களைப் பண்பாட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்துவதன் வழி தமிழர் தொல்கூறுகளை பண்பாட்டு விழுமியங்களின் தொடர்ச்சியை அறிந்து வெளிப்படுத்த இயலும். சங்க இலக்கியம் தொடாபான அண்மைக்கால ஆய்வுகளில் பலபுதிய போக்குகள் பதிவாகியுள்ளன. மானிடவியல், சமூகவியல், பண்பாட்டியல் ஆகிய புலங்கள் சார்ந்த சிந்தனைகளை உள்வாங்கிச் சங்க இலக்கியங்களைப் பொருள்கொள்ளும் முயற்சிகள் நடந்துள்ளன. அவ்வகையில் மானுடவியல் புலங்களுள் ஒன்றான இனவரைவியல் அடிப்படையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றைப் பொருள்கொள்ளும் முயற்சியாக இக்கட்டுரை அமைகின்றது.
இனவரைவியல் - விளக்கம்
19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் மேலைநாட்டுக் கல்விப் புலங்களில் அறியப்பட்ட மானுடவியல் துறையின் ஒரு உட்பிரிவே இனவரைவியல் அல்லது இனக்குழுவியல் எனப்படுவது ஆகும். இனக்குழு என்னும் பொருளுடைய Enthnograpy என்னும் ஆங்கிலச்சொல் ‘Ethonos’, ‘graphein’ ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. Ethnos என்பதற்கு இனம், இனக்குழு, மக்கள் என்பது பொருள். Graphein என்பதற்கு எழுதுவது அல்லது வரைதல் என்பது பொருள். ஆகவே இனவரைவியல் என்பது ஒரு தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப் பற்றி எழுதுதல் என்னும் பொருளை உணர்த்துகிறது. ஒரு இனக்குழுவைப் பற்றிய முழமையான படிப்பு என்னும் வகையில் இப்பிரிவை இனக்குழுவியல் என்றும் கூறலாம்”.1
பண்பாட்டு ஆய்வுகளுக்கு இனவரைவியல் அடிப்படையானதாகும். ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை அல்லது பண்பாட்டை விளக்கும் கலை அல்லது அறிவியல் இனவரைவியல் என்று அழைக்கப்படுகிறது (Fefterman 1989-11). இது ஒரு குழு அல்லது ஓர் இனக்குழுவை நேரடியாக ஆய்வுக்குட்படுத்தும் முறையியல் ஆகும். பண்பாட்டை எழுத்து வடிவில் தொகுத்து அளிப்பதே இனவரைவியலின் நோக்கமாகும். இதனால் ஏதேனும் ஒரு பண்பாட்டைப் பற்றி எழுதப்பெற்ற வரைவு அல்லது வருணனையை இனவரைவியல் என்று அழைப்பர் (Herskovits 1974.8) இவ்வாறு இனவரைவியல் என்பதற்று பல்வேறு அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். இதன்வழியாக ஓர் இனக்குழு மக்களின் முழமையான வாழ்வியல் செயல்பாடுகளின் தொகுப்பே இனவரைவியல் என்பதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
இனவரைவியல் இரண்டு வகையான பரிமாணங்களைக் கொண்டது. ஒரு பக்கத்தில் அது ஒரு முறையியலாகவும் மறுபக்கத்தில் வரிவடிவமாக்கப் பெற்ற பண்பாடாகவும் அமைகின்றது. யாரைப் பற்றி எழுதுகிறோமோ? அந்த மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றிய விளக்கவுரைகளையும், வரைவு அறிக்கைகளையும் உருவாக்கக்கூடிய அலசல் முறையும் அதன் வெளிப்பாடாகிய எழுத்து வடிவமுமே இனவரைவியல் (Denzin 1977) என்பது அதன் பரிமாணங்கள் விளிக்கப்படுகின்றன. ஒருபண்பாட்டை வெளிப்படுத்த இனவரைவியலாளர்கள் சில வகையினங்களை அடையாளப்படுத்துகின்றனர்.
“பண்பாடு என்ற முழுமையைப் பல்வேறு சிறுசிறு கூறுகளாக அடையாளம் கண்டு வருணிப்பதன் மூலம்ய விளக்க முயல்கின்றார். அவ்வகையில் புவிச்சூழலியல், சுற்றுச்சூழல்,காலநிலை, குடியிருப்பு முறை,பொருள்சார் பண்பாடு, குடும்ப அமைப்பு, திருமண முறை, உரைவிட முறை, வாழ்வியல் சடங்குகள், குழந்தை வளர்ப்பு முறை, பண்பாட்டு வயமாக்க முறை,மக்களின் உளவியல் பாங்குகள், மணக்கொடை (வரதட்சணை), மணவிலக்கு, வாழ்க்கைப் பொருளாதாரம், தொழிற் பகுப்பு முறை, உற்பத்தி முறை, நுகர்வு முறை, பங்கீட்டு முறை, பரிமாற்றமுறை, கைவினைத் தொழில்கள், அரசியல் முறைகள், அதிகார உறவுகள், சமூகக் கட்டுப்பாடு, மரபுசார் சட்டங்கள், சமய நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாட்டு முறை, மந்திரம், சூனியம், விழாக்கள், இசை, விளையாட்டுகள், அழகியல் சிந்தனைகள், நாட்டார் வழக்காறுகள் ஆகிய கூறுகளை இனவரைவியலாளன் செய்திகள் திரட்டுவதற்காக முதன்மைப்படுத்துகிறான்” என்று இனவரைவியலாளன் முதன்மைப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளை பக்தவத்சல பாரதி எடுத்துக்கூறுகிறார்.
இனவரைவியல் - புறநானூறு
தமிழ்க் கவிதையியல் என்பது அடிப்படையில் இனவரைவியல் கூறுகளை முழமையாக எடுத்துக்கூறும் ஓர் அமைப்பு முறையாகும். அதற்கான அடிப்படைக் கோட்பாடாக தொல்காப்பியம் கூறும் முப்பொருள் கோட்பாடாகும். இதனைக் கொண்டே தமிழ்க் கவிதைகளில் இனவரைவியல் கூறுகள் இடம்பெற்றுள்ளதை நம்மால் அவதானிக்க முடியும். குறிப்பாக கருப்பொருள் அட்டவணை என்பது அவ்வவ்நிலத்தின் மக்கள்,குடியிருப்பு, உணவு, புழங்குப்பொருள் என்ற இனவரைவியலின் ஒவ்வொரு கூறுகளைப் பற்றிப் பேசுகின்றது. எட்டுத்தொகை நூற்களுள் ஒன்றான புறநானூற்றில் முடியுடை மூவேந்தர்களின் போர் வெற்றி, கொடை முதலிய பண்புகள் பேசப்பட்டாலும் அதற்கு எதிரிடையாக எளிய மக்கள் தொல்சமூக இனக்குழு எச்சங்களை உள்ளடக்கிய குறநில மன்னர்கள். சிறூர் மன்னர்கள், முதுகுடி மன்னர்கள், கணசமூகமாய வாழ்ந்த மக்கள் முதலானவர்களின் வாழ்க்கை குறித்த பதிவுகளும் பேசப்பட்டுள்ளன. அவற்றுள் கணசமூகமாக குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்களில் வாழ்ந்த கானவர் அல்லது வேட்டுவர், ஆயர் அல்லது இடையர் ஆகிய இனக்குழுக்களின் வாழ்வியல் கூறுகளில் அமைந்துள்ள பண்பாட்டுப் பொருண்மைகளை இனவரைவியல் பின்புலத்தில் இங்கு காண்போம்.
தமிழக மலை, காட்டுப்பகுதிகளில் (வறட்சியடைந்த குறிஞ்சி முல்லை நிலங்கள்) வேடர், எயினர், மழவர், மறவர் என்ற பெயர்களால் சுட்டப்படும் வேடர்கள் இனக்குழு வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்ததைச் சங்க வாழ்க்கையையும் சங்ககாலப் புலவர்கள் தங்களது சமகாலத்து நிகழ்வாக நோக்கி வறுமை, கொடுமை, களவு, மறம், முரட்டுப்பண்பு மற்றும் புலன்சார் வாழ்க்கையாக நன்மைக்ளு எதிரான தீமையாக மதிப்பீடு செய்துள்ளார்கள். சில புலவர்கள் இவர்களுடைய குழு வாழ்க்கையின் மனித இணக்கம், விருந்து பேணுதல், குரதி உறவு, பகிர்ந்து உண்ணல், உடல் வலிமை, வீரம், வேந்தர்க்கு அஞ்சாமை, பாணர், இரவலரிடம் பரிவு என்று நேர்மறையாக மதிப்பீடு செய்துள்ளார்கள். இம்மதிப்பீடுகளின் வழி,சங்ககால மக்களின் ஆளமை மட்டுமன்றி,அவர்களின் வாழ்வியல் முறைகளும்,பண்பாட்டு நிகழ்வுகளும் ஏனையோருக்குத் தெரிவிக்கப்படுகின்றன.
கானவர் திணை விதைப்பு
குறிஞ்சியையும் முல்லையையும் உள்ளடக்கிய திணைநிலைச் சமூகத்தில் கல்லும், வில்லும், கைத்தடியும் கொண்டு வேட்டையாடித் திரிந்த மனிதன் உணவுக்காக தானிய சாகுபடி முயற்சியில் ஈடுபட்டான். அப்போது அவன் பயிர் சாகுபடி பற்றி ஏதும் அறியாத நிலையில்தான் இருந்தான். அந்நிலையில் அனுபவம் சில பாடங்களை அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கும். கட்டாந்தரையில் விதைகளைப் போட்டால் பறவைகள் அவற்றைப் பொறுக்கித் தின்றுவிடுதல் கூடும். எறும்புகளும் இழுத்துச் சென்றுவிடும். மேலும் மழைபெய்யும் போது மழைநீர் விதைகளை அரித்துச் சென்றுவிடுதல் கூடும். எனவே நிலத்தைக் கிளறிப் புழதியாக்கி அப்புழுதியில் விதைகளை விதைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டான். இந்நிலையில் நிலத்தில் கிடக்கும் கிழங்குகளைத் தின்பதற்காகப் பன்றிகள் மண்ணைத் தோண்டிக் கிளறிப் புழுதியாக்கியிருப்பதைக் கண்டான். அவ்வாறு பன்றிகளால் கிளறிப் புழுதியாக்கப்பட்ட இடங்களில் கானவர் மழைக்காலத்தில் தினை விதைத்தனர். ஆங்ஙனம் விதைத்த தினை முளைத்து வளர்ந்து விளைந்தது. இதனை,
“அருவியார்க்கும் கழைபயில் நனந்தலைக்
கறிவளரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளரக் கிண்டி,கிளையோடு,
கடுங்கண் கேழல் உழுத பூழி,
நன்னாள் வருபதம்நோக்கி,குறவர்
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்து விளையாணர்” (புறம்.168)
அருவி ஒலித்துப் பாயும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தையுடைய மிளகுக்கொடி வளரும் மலைச்சாரலினிடத்து மலர்ந்த காந்தளினது கொழுவிய கிழங்கு பிறழக் கிளறித் தன் இனத்தோடு கூடித் தறுகண்மையுடைய பன்றிகள் உழுத புழுதியில் நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்துக் குறவர் அந்நிலத்தை உழாமல் அதுவே உழவாக வித்திய பரிய தோகையுடைய சிறிய தினை முற்பட விளைந்த புதிய வருவாயாகிய கதிர் என்பதாகக் குறிப்பிடுகிறது. இதில் இனவரைவியல் கூறுகளுள் ஒன்றான ஒரு சமூகக் குழுவின் உற்பத்தி முறை எவ்வாறு இருந்தது என்பது பெறப்படுகின்றது. நிலத்தின் தன்மைக்கேற்பவும், அங்கு நிகழும் நிகழ்ச்சிக்கேற்பவும் மக்கள் தங்கள் உற்பத்தி முறையை அமைத்துக் கொண்டனர்.
நிலத்தைக் கிளறிப் புழுதியாக்கிப் பண்படுத்திச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியும் என்பதைக் காலமும் அனுபவமும் மனிதனுக்குக் கற்றுக் கொடுத்தன. மக்கள் தொகைப் பெருக்கமும் உணவுப் பற்றாக்குறையும் கூடுதலான நிலத்தைக் சாகுபடிக்குக் கொண்டுவர முடியும். ஆனால் காட்டை வெட்டி அழிப்பதற்கும் நிலத்தை உழுவதற்கும் அவனிடம் கருவிகள் ஏதும் இல்லை. கற்கருவிகளும் கைத்தடியும் வில்லுமே அவனிடமிருந்த கருவிகள் இரும்பைப் பற்றி அம்மனிதன் அறிந்திருக்கவில்லை. அதன் உபயோகம் குறித்து அவனுக்கு எதுவும் தெரியாது. ஆனால் நெருப்பின் உபயோகத்தை அவன் நன்கு அறிந்திருந்தான். எனவே புதர் மண்டிக்கிடந்த நிலங்களைத் தீயிட்டு அழித்தான். அவ்வாறு அழித்துத்தான் நிலத்தைச் சாகுபடிக்கு ஏற்றதாகத் திருத்திப் பண்படுத்தினான். திருத்திய நிலத்தில் வரகும் தினையும் பயறும் விதைத்தனர். இச்செய்திகளைச் சங்க நூல்கள், புறநானூறு தெளிவுபட எடுத்துக்கூறுகிறமு என்பதை,
“கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை,
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,
ஈனல் செல்லா ஏனற்கு முழமெனக்
கருவி வானம் தலைஇ” (புறம்.154)
என புறநானூற்றின் 159வது பாடல் குறிப்பிடுகின்றது. வேட்டுவர் சுடப்பட்டுக் கரிந்த காட்டை மயங்க உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லைக்கண் மலை ஐவனநெல்லோடு வித்தி இருட்சியுற அழகுபெற்றுக் கோடை மிகுதியில் ஈன்றலைப் பொருந்தாத இழுமென்னும் ஓசையுடன் மின்னலும் இடியும் முதலாகிய தொகுதியுடைய மழைத்துளி சொரிந்தது என்று கூறும் இப்பாடல் முல்லைநிலத்தவரின் புராதன வேளாண்மை முறையான காட்டெரிப்பு வேளாண்மை அல்லது எரிபுன வேளாண்மை என்பதைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. மருதம் மற்றும் நெய்தல் நிலப்பகுதிகளில் வாழ்பவர்கள் இவ்விதமான முறையை பின்பற்றுவதில்லை. முல்லை மற்றும் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த வேட்டுவர் அல்லது கானவர் எனப்படும் தனியொரு இனக்குழவிற்கு மட்டுமான உற்பத்திமுறை என்பதில் ஐயமில்லை. இதனோடு தொடர்புடையதாகவே தினைவிதைத்தல்,தினைப்புனம் காத்தல்,களைபறித்தல், கிளி கடிதல்,கதிர் அறுத்தல்,திணை குற்றுதல் முதலியவை அகப்பொருட் துறைகளோடு அகவாழ்வுடன் இணைத்துச் சொல்லப்பட்டன.
வேட்டுவர்களின் வில்லாற்றல்
இனவரைவியல் கூறுகளுள் ஒன்றான புழங்கு பொருட்களின் வழி ஒரு சமுதாயத்தின் பண்பாட்டு இயங்குநிலையை அறிந்துகொள்ள இயலும். அப்புழங்கு பொருள் அவர்களின் வாழ்க்கையோடு எவ்வாறு தொடர்புடையதாக பண்பாட்டின் அம்சமாக விளங்குகிறது என்பதனை இனவரைவியலாளர்கள் ஆராய்ந்து முதன்மைத்தலவுகளாகக் கொள்கின்றனர். அவ்வகையில் முல்லைநில வேட்டுவர்களின் வாழ்வியலில் முக்கிய இடம் பெறும் புழங்குபொருள் வில் ஆகும். மனிதன் காட்டுமிராண்டி நிலையிலும் அநாகரிக நிலையிலும் வாழ்ந்த காலகட்டத்தில் வில்லும் அம்பும் கண்டுபிடிக்கப்பட்டு வேட்டைக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன. காட்டுமிராண்டி நிலையின் தலைக்கட்டத்தில்தான் “வில்லும் அம்பும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று எங்கல்ஸ் அவர்கள் கருதுகிறார்கள். இது குறித்து அவர்கூறும் பொழுது வில்லும் அம்பும் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து காட்டமிராண்டி நிலையின் தலைக்கட்டம் தொடங்குகிறது. இதனால் காட்டு மிருக இறைச்சி ஒழுங்காக சாப்பாட்டுக்குக் கிடைக்கிற உணவுப்பொருளாக அமைந்தது. வேட்டையாடுதல் ஒரு வழக்கமான தொழிலாயிற்று என்பதாகக் குறிப்பிடுகிறார்”.
வேட்டுவர்கள் வில்லாற்றலில் சிறந்து விளங்கினர். அதற்கு கணசமூகத் தலைவர்களில் ஒருவனான வல்லில் ஓரியின் வில்லாற்றலே சிறந்த சான்றாகும். ஓரி என்பவன் கொல்லிமலைத் தலைவன் அவன் தன் வில்லாற்றல் காரணமாகப் புலவர்களால் வல்வில் ஒரி என்று சிறப்பிக்கப்பட்டான். அவனது வில்லாற்றலை வனபரணர் புறப்பாடல் ஒன்றில் வியந்து போற்றுகிறார்.
“வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ
புழல் தலைப் புகர்க் கவைஉருட்டி,உலர்தலைக்
கேழற்பன்றி வீழ அயலது
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்
கொலைவன்” (புறம். 152)
எனும் பாடலில் யானையைக் கொன்று வீழ்த்த சிறந்த தொடையையுடைய அம்பு. பெரிய வாயையுடைய புலியை இறந்துபடச் செய்து, துளை பொருந்திய கொம்பையுடைய தலைவினையுடைய புள்ளிமான் கலையை உருட்டி உரல்போலும் தலையையுடைய கேழலாகிய பன்றியை வீழச்செய்து அதற்கு அயலதாகிய ஆழ்தலையுடைய புற்றின்கட் கிடக்கும் உடும்பின் கண்சென்று செறியும் வல்வில்லால் உண்டாகிய வேட்டத்தை வென்றிப் படுத்தியிருப்பவன் புகழமைந்த சிறப்பினையுடைய அம்பைச் செலுத்தும் தொழிலில் மிகச்சென்று உறுதற்கு காரணமாகிய கொலைஞன் என்று ஓரியின் வில்லாற்றல் வியந்து போற்றப்படுகின்றது. ஓரியின் வில்லாற்றல் என்பது தனித்த ஒருவனுடைய ஆற்றல் என்று மட்டும் பொருள்படாதது. வேட்டுவ சமூகமரபில் வில் பெற்றுள்ள இடம் அதனைப் பயன்படுத்தும் பாங்கு போன்றவை சிந்திக்கத்தக்கன. மருதநில உழவனுக்கு ஏர் எவ்விதமான பயனும் பண்பாட்டுப் பொருண்மையும் உள்ளடக்கியதோ அதுபோன்றே வேட்டைச் சமூகத்தில் வில் ஆகும். அதனைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாதவன் முல்லைநிலத்தில் தனது வாழ்வை எதிர்கொள்வது இயலாத ஒன்று ஆகும். எனவேதான் அவர்களின் புழங்கு பொருட்களில் வில் முதன்மையானதாகப் பேணப்பட்டு அப்பயிற்சி வேட்டுவக் குடியின் சிறார்களுக்கும் முறையாகக் கற்றுக்கொடுக்கப்பட்டது.
வேட்டுவச் சிறுவர் விளையாட்டுப் பருவத்திலேயே விற்பயிற்சியைத் தொடங்கி விடுவர் வளார்களில் மரற்கயிற்றைப் பிணித்து வில்லாகச் செய்வர். ஊடை வேலமரத்தின் உள்ளே புழையுடைய வெள்ளிய முள்ளை ஊகம் புல்லின் நுண்ணிய கோலிற் செருகி அம்புகளாகச் செய்வர். அவ்வம்புகளை வில்லில் தொடுத்து எய்து விளையாடுவர். இது குறித்துப் புறநானூறு அழகாகப் பேசுகிறது.
“உடுதுஊர் காளை ஊழ் கோடு அன்ன
கவைமுட கள்ளிப் பொரி அரைப் பொருந்தி,
புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன்தலைச் சிறாஅர் வில்எடுத்து ஆர்ப்பின்,
பெருங்கட் குறுமுயல் கருங்கலன் உடைய
மன்றில் பாயும் வன்புலத்ததுவே” (புறம்.322)
எனும் பாடலில் வன்புலமாகிய முல்லை நிலத்தில் வாழும் வில்லேருழவரான வேட்டுவர்களின் சிறுவர்கள் வரகுக் கொல்லைகளில் வரகினது அரிகாலைப் பொருந்தியிருக்கும் காட்டெலிகளை வேட்டமாடுவர். எலியொன்றைக் கண்டதும் அவர்கள் ஆரவாரம் செய்வர். அவ்வோசையைக் கேட்டு அருகே மேயும் முயல்கள் அண்மையில் உள்ள அவர்களது குடிசையின் முற்றத்தில் இருக்கும் மட்கலங்களின் இடையே துள்ளிப்பாய்ந்து செல்லும். ஆதனால் மட்கலங்கள் உருண்டு உடைந்து விடும் என்பதாக ஆவூர்கிழார் குறிப்பிடுகின்றார். இப்பாடல் முல்லைநிலத்தின் வாழ்வியலில் இடம்பெறும் ஒவ்வொரு சிறுநிகழ்வினையும் காட்சிப்படுத்துகினறது. வரகு,காட்டெலி, முயல், கட்கலங்கள் போன்றவை முல்லைநிலத்தின் தன்மையை விளக்கும் சான்றுகள்.
“வெருக்கு விடை அன்ன வெகுள்நோக்குக் கயந்தலை,
புள்ஊன் தின்ற புலவுநாறு கயவாய்,
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை உடையின் கரையுடை வால்முள்
ஊக நுண்கோல் செறித்த அம்பின்
வலாஅர் வல்வில் குலாவரக் கோலி,
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலம் தழீஇய அம்குடிச் சீறூர்” (புறம்.324)
எனும் மற்றொரு பாடலில் வேட்டுவர்கள் காட்டுப்பூனையின் ஆணைப் போல் வெருண்ட பார்வையும் மெல்லிய தலையும் உடையவர்கள் பறவையின் ஊனைத் தினபதால் புலால் நாற்றம் கமழும் மெல்லிய வெளுத்த வாயையுடையவர்கள் அவர்களின் பிள்ளைகள் ஒருவரையொருவர் விரும்பி நட்பு கொண்டு உறையும் பண்பினை உடையவர்கள். அச்சிறுவர்கள் சிறிய இலைகளையுடைய ஊகம்புல்லில் செருகிய அம்பை வளாரால் செய்யப்பட்ட வில்லில் வைத்து வளைத்துப் பருத்தியாகிய வேலியடியில் உரையும் காட்டெலிகளை வீழ்த்துவதற்குக் குறி பார்த்து எய்து விளையாடுவர். இத்தகைய புன்செய் சூழ்ந்துள்ள அழகிய குடிகள் வாழும் சிறூர் என்று ஆலத்தூர் கிழார் கூறுகின்றார்.
விற்பயிற்சி,வில்லாற்றல் என்பது மற்ற சமூகத்தவரைப் போலவும், அரசமரவினரைப் போலவும் ஒருபொழுதுபோக்குப் பயிற்சி அன்று. எயினர்களின் உணவுத்தேவை மற்றும் உயிர் வாழ்தலுக்கான தேவையாக விற்பயிற்சி அமைகின்றது. முல்லை நிலத்து எயினர்கள் விற்பயிற்சி இல்லாவிடின் அவர்களது உணவுத்தேவை மற்றும் பாதுகாப்பைப் பூர்த்தி செய்து கொள்ள இயலாது. எனவே வில்லும் அம்பும் முல்லைநிலத்து எயினர்களின் வாழ்வியலோடு இணைந்து புழங்கு பொருட்களாக உள்ளன. புராதான சமுதாயத்தின் எச்சமாகவும் இனக்குழு முறையின் அம்சமாகவும் இதனை அறிந்து கொள்ள முடியும். குறிஞ்சி நிலத்தில் வேலன் வெறியாட்டு நிகழும் காலத்தில் வேலன் கையில் கொண்டு வரும் வேலானது, புராதான சமுதாயத்தில் உற்பத்திக் கருவியாக உழுகருவியாகப் பயன்படுத்தப்பட்ட ஒன்று என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
உணவு
இனவரைவியல் கூறுகளில் ஓர் இனக்குழு மக்களின் உணவு என்பது அவர்களின் வாழும்நிலத்தோடு எவ்வாறு தொடர்புபட்டுள்ளது என்பதும் அவ்வுணவைப் பெற அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் உற்பத்தி மற்றும் வேட்டை முறைகளும் ஆராயப்பட வேண்டியவை. கானவர் தினை பயிரிட்ட செய்தி முன்னர் கூறப்பட்டது. அவர்கள் உணவுக்காக மட்டுமல்லாது கானக்கோழி,இதற்பறவை,புறா முதலிய பறவைகளைப் பிடித்துச் சமைப்பதற்கும் தினையைப் பயன்படுத்தினர். எயினப் பெண்கள் அப்பறவைகளபை; பிடிப்பதற்காகத் தம் குடிசைகளின் முற்றத்தில் மான் தோவை விரித்து அதில் தினையைப் பரப்பி வைப்பர். அப்பறவைகள் அதில் வந்து மேயுங்கால் எயிற்றியர் அவற்றைப் பிடித்துக் கொன்று சமைப்பர். இதனை,
“மான்அதட் பெய்த உணங்குதினை வல்சி
கானக் கோழியோடுஇதல் கவர்ந்து உண்டென,
ஆரநெருப்பின் ஆரல் நாற,
தடிவு ஆரந்திட்டமுழு வள்@ரம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி,
என்னும் பாடலில் பாணனே மான் தோலில் பரப்பி உலரவைத்த தினையரிசியைக் காட்டுக்கோழியும் இதற் என்ற பறவைகளும் கவர்ந்துண்டு அகப்பட்டனவாக. சுந்தனக் கட்டையாலாகிய நெருப்பில் சுட்டுத்துண்டு துண்டாக அறுத்து நிறைந்த இறைச்சியை ஆரல்மீனின் நாற்றமும் உடன்கமழ கரிய பெரிய சுற்றத்தோடே கூடியிருந்து இனிது உண்டு அவ்விடத்தே தங்கிச் செல்வாயாக என்றும்,
“படலை முன்றில் சிறுதினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பேய்தற்கு எல்லின்று பொழுதே” (புறம். 319)
என்னும் பாடலில்,படல் கட்டிய முற்றத்தில் சிறிய தினையாகிய உலர்ந்தனைப் புறாக்களும் இதற்பறவைகளும் முற்றவும் உண்க என்று தெளித்த அவற்றைப் பிடித்துச் சமைப்பதற்கு ஞாயிறு மறைந்து இரவாயிற்று என்னும் கூற்றிலிருந்து தினையையும்,காட்டுக்கோழியையும்,புறாவையும், கானவர்கள் சமைத்து உணவாகக் கொண்டனர் என்பது புலப்படுகின்றது. இதுமட்டுமல்லாமல் உடும்பு, முயல், பன்றி, முள்ளம்பன்றி, மான் போன்றவற்றையும் வேட்டையாடி உண்டுள்ளனர்.
உதாரணமாக உடும்பு வேட்டையைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,‘கால்கோழி, அரைஆடு, முக்கால் காடை, முழு உடும்பு’ என்னும் சொலவடைக்கேற்ப, எயினர் வேட்டையாடிய விலங்குகளில் உடும்பும் ஒன்றாகும். உடும்புகளை எயினர் விரும்பி வேட்டையாடினர். உடும்பின் தசை சக்தி மிக்கது என்று மக்கள் கருதுகின்றனர். அதன் தசை உண்பாரது உடலில் முழமையாகச் சேரும் என்பது மக்களின் நீண்ட கால நம்பிக்கை ஆகும். ஊருக்கு அண்மையில் இருந்த மடுக்கரையில் இருந்து உடும்புகளை எயினச் சிறார் பிடித்து வந்த செய்தியைப் புறநானூறு எடுத்துக்காட்டுகிறது. அஃது
“ஊர் அருமிளையதுவேமனைவியும்,
வேட்டச் சிறாஅர் சேண்புலம் படராது,
புடப்பைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு
வருவிருந்துஅயரும் விருப்பினள்” (புறம்.326)
கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இடத்தின்கண் உள்ள ஊரில் மனைக் கிழத்தி, வேட்டுவச் சிறுவர்கள் நெடுந்தொலைவு செல்லாமல் மடுக்கரையில் பிடித்துக்கொண்டு வந்த குறகிய காலையுடைய உடும்பினது விழுக்காகிய தசையைப் பெய்து சமைத்த தயிரோடு கூடிய கூழையும் புதிதாக வந்த வேறு நல்ல உணவுகளையும் பாணருக்கும் அவரோடு வந்த ஏனை விருந்தினருக்கு ஒருசேரக் கொடுத்து உண்பிக்கும் இயல்பினன் என்பதாக உடும்பு வேட்டையும் அதைச் சமைத்துப் பரிமாறிய விதமும் விளக்கப்பட்டுள்ளது. தம் நிலச் சூழலுக்கு ஏற்றதான அங்கு கிடைக்கக்கூடிய உணவுகளையே மக்கள் உட்கொண்டனர் என்பது இயல்பான ஒன்றாக இருந்தது. உடும்பு சமைத்த செய்தியை பெரும்பாணாற்றுப்படையும்,
“களர் வளரீந்தின் காழ் கண்டனன்
சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலிதந்த மனவுச் சூல் உடும்பின்
வரைகால் யாத்தது வயின்தொறும் பெறுகுவீர்”
(பெரும்பாணாற்றுப்படை.130-133)
என்பதாகக் குறிப்பிடுகிறது. குளர்நிலத்தே வளர்ந்த ஈந்தினது விதைபோன்ற மேட்டுநிலத்தே விளைந்த நெல்லினது சிவந்த அவிழாகிய சோற்றை, நாய்கடித்துக் கொண்டுவந்த அக்குமணி போன்ற முட்டைகளையுடைய உடும்பினது பொரியலாலே மறைத்தனை மனைதோறும் பெறுகுவீர் என உடும்பின் தசையைச் சமைத்து விருப்புடன் வழங்கி உபசரித்த செய்தியை சங்க இலக்கியங்கள் எடுத்துக்கூறுகின்றன.
உடும்பைப் போலவே முயலையும எயினர் மிகுதியாக வேட்டையாடி உண்டனர். வேட்டுவர் குடிசைகளில் முயற்கூறி எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் உண்ணக் கிடைத்தது. இதனைப் புறநானூறு பின்வருமாறு கூறியுள்ளது. அவை,
“படலை முன்றில் சிறுதினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனான்
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம,புகுதந்து
ஈங்கு இருந்தீமோ, முதவாய்ப்பாண” (புறம்.319)
என்பதாகக் குறிப்பிடுகிறது. “பாணனே சிறிய தினையரிசியை முற்றத்தில் தெளித்து அதனை உண்ண வரும் புறா முதலிய பறவைகளபை; பிடித்துச் சமைத்து உங்களுக்கு வழங்குவதற்குக் காலமின்மையின் எம்மிடம் உள்ள பழையதாகிய சுட்ட முயற்கறியே அதனை உங்களுக்கு உண்ணத் தருவோம் என்று பாணனை உபசரித்து முயற்கறியை உணவாக வழங்கிய திறம் பேசப்படுகின்றது. இப்பாடலும் முயற்வேட்டை மட்டுமல்லாது எயினர் குடியின் விருந்தோம்பல் பண்பும் பேசப்படுகின்றது. விருந்தினர்களுக்கு தம் நிலத்தின் விளைபொருளை அன்பளிப்பாகக் கொடுப்பது அனைத்து சமூகங்களிலும் தொன்றுதொட்டு வரக்கூடிய மரபு ஆகும். இம்மரபை தொல்குடியான எயினக்குடியினரும் பின்பற்றியுள்ளனர்.
வேட்டை முறை:
எயினர்கள் தம் வேட்டை முறைக்கு வில் அம்புகளைக் கருவியாகப் பயன்படுத்தியதை முன்னர் கண்டோம். அது தவிர்த்து சில வேட்டை நுணக்கங்களையும் கைக்கொண்டனர். உதாரணமாக மான்;வேட்டை பற்றிக் குறிப்பிடும் பொழுது, எயினரது குடிசையின் முற்றத்தில் பலாமரம் அல்லது விளாமரம் நிற்கும். அதில் பார்வை மான் கட்டப்பட்டிருக்கும் பார்வை மான் கட்டிய கயிறு உராய்ந்தால் அம்மரத்தின் அடி தேய்ந்திருந்தது. இதனைää
“பார்வை யாத்த பரைதாழ் விளவு”
என்றும்,
“முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி,
பந்தர் வேண்டாப் பலர்தூங்குநீழல்,
கைம்மாள் வேட்டுவன் கனைதுயில் மடிந்தென,
பார்வை மடப்பினை தழீஇ” (புறம்.320)
என்றும் குறிப்பிடப்படுகிறது. பார்வை மான் என்பது பிற மான்களைப் பிடிப்பதற்காகப் பயிற்சி தந்து கட்டப்பட்ட பெண்மான். இதனை எயினர் தம் குடிசையின் முற்றத்தில் இருந்த பலாமரம் அல்லது விளாமரத்தின் அடியில் கட்டி வைத்திருந்தனர். ஆண் மான்கள் புணர்ச்சிவேட்கை கொண்டு மேய்தல் தொழிலைக் கைவிட்டு அதனோடு கூடி விளையாடி அயர அங்கு வரும் கலையும் பிணையும் புணர்நிலைக் கண் விளையாட்டயர் தலைக் காணும் எயினர் இரக்கமின்றிக் கலையை எளிதில் வீழ்த்துவர். அதற்காகப் பயிற்சி தந்து கட்டப்பட்ட பெண்மானே பார்வைமான எனப்படும். இப்பாடல் எயினர் சமூகத்தின் வேட்டை நுணுக்கங்களை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.
புல்லரிசியினை விருந்தினர்களுக்குப் பரிமாறினர் என்பதை,
“நீருட்பட்ட மாரிப் பேருறை
மொக்குளன்ன பொகுட்டு விழிக்கண்ண,
கரும்பிடர்த் தலைய, பெருஞ்செவிக் குறுமுயல்
தொள்ளை மன்றத் தாங்கட் படரின்
உண்கென உணரா உயவிற்றாயினும்
தங்கினிர் சென்மோ, புலவீர்! நன்றும்,
சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி,
வரகுந்தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மக்கள்உணக் கொளத் தீர்ந்தென
குறித்து மாறு எதிர்ப்பைப் பெறா அமையின்,
குரல்உணங்கு விதைத் தினையுரல் வாய்ப்பெய்து,
சிறிது புறப்பட்டன் றோஇலளே” (புறம்.333)
ஊரின் கண் உள்ளதும் அரிய பிடர் பொருந்திய தலையும் நீண்ட காலும் உடைய குறுமுயல் ஊருக்குள் இருக்கும் குறகிய புதர்களில் துள்ளி விளையாடும் வளைகள் பொருந்தியதும் ஆன மன்றத்துக்குச் சென்றால் அங்கே உங்களை உண்ணுங்கள் என்று குறிப்பறிந்து கூறுபவர்கள் எவரும் இல்லாத வருத்தம் உடையதாயினும்; அங்கே பெரிதும் தங்கிச் செல்வீராக சென்றதனால் மனைத் தலைவி உங்களுக்கு உணவளிக்க விரும்பி வரகும், தினையுமாக, வீட்டில் இருந்தவற்றையெல்லாம் இரவலர் உண்டதனாலும் தானமாகக் கொண்டதாலும் தீர்ந்து போனதால், கைமாற்றுக் கடனாகவும் பெறமுடியாத நிலையில் கதிரிடத்தே முற்றி உலரவிட்ட விதைத் தினையை உரலில் இட்டுக் குற்றிச் சமைத்து உங்களை உண்ணச் செய்வாள். தனது இல்லாமையைச் சொல்லி நீங்கள் பசியோடு வெறுங்கையுடன் செல்லுமாறு விடமாட்டாள் என்பதாகக் கூறப்படுகிறது. இப்பாடலில் கணசமூகத்திற்கே உரிய பகுத்துண்ணும் பண்பு வெளிப்படுகிறது.
இப்பண்பே பாதீடு என்னும் சொல்லால் குறிக்கப்படுகின்றது. வெட்சிப்போரில் கவர்ந்த ஆநிரைகளையும் கூட கண சமூக மாந்தர் தமக்குள் பங்கீட்டுக் கொண்டனர்.
“காலைப்
புல்லார் இனநிரை செல்புறம் நோக்கி,
கையின் சுட்டிப் பையென எண்ணி,
சிலையின் மாற்றியோயே அவைதாம்
மிகப் பலவாயினும், என்ஆம் எனைத்தும்
வெண்கோள் தோன்றாக் குழிசியொடு,
நாள் உறை மத்தொலி கேளாதோனே” (புறம்.257)
எனும் புறப்பாடலடிகள் வெட்சிப்போரில் கவர்ந்து வந்த ஆநிரைகளைக் கணசமூக மாந்தர் பங்கிட்டுக் கொண்ட செய்தியை எடுத்துக்காட்டுகின்றன. உலகம் முழுவதிலும் கணசமூகத்தில் தனியாருக்கு வேட்டைப் பொருள் மீன், உணவு முதலியவற்றுள் தனியுரிமை இருக்கவில்லை. அவன் வாழ்ந்த சமத்துவ சமூகம்தான் பெறும் எதையும் குழுவினருடன் பங்கிட்டுக் கொள்ளும்படி, இயல்பான உள்ளுணர்வாகவே அவனை உந்தியது என பழங்குடியினரைப் பற்றி ஆராய்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முடிவுரை
புறநானூற்றை இனவரைவியல் வாசிப்புக்கு உட்படுத்தும்போது மேலே கூறப்பட்ட எயினர் மற்றும் கானவர் சமூகத்தின் வேட்டையாற்றல் உணவுமுறை, உற்பத்திமுறை, விருந்தோம்பல் பண்பு முதலியவற்றுடன் உண்டாட்டு, பாதீடு, நடுகல் வழிபாடு போன்ற பிற இனவரைவியல் கூறுகளும்; நமக்குக் காணக்கிடக்கின்றன. அவற்றின் விரிவு இன்னும் ஆழமான பொருளைத் தேடித்தரும். புறநானூற்றில் இக்குடிகளைத் தவிர, இடையர், பரதவர், மருதநிலத்தைச் சேர்ந்த சேர்ப்பன் முதலான சமுதாயத்தினரின் வாழ்வும் அவர்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றனவும் பேசப்பட்டுள்ளன. அதற்கு எதிரிடையாக மூவேந்தர்களின் அரசமைப்பு, போர்முறைகள் பற்றியும் பேசப்பட்டுள்ளன. மொழியால் ஒன்றுபட்ட இனக்குழுவில் அவர்கள் வாழ்ந்த இடம், சூழல், பழக்கவழக்கங்கள், உணவு தேடும் முறை, உற்பத்தி முறை போன்றவற்றால் தனித்தனி இனக்குழுக்களாகவே மக்கள் வாழ்ந்து வந்தனர். அவ்;வாறு ஒவ்வொரு இனக்குழுவின் இனவரைவியல் கூறுகளை ஆராய்வதின் வழி அக்குழுவின் பழமை மற்றும் தனித்தன்மைகள் அறிந்துகொள்ள முடியும் என்பது திண்ணம்.
துணைமை நூல்கள்:
1. பக்தவத்சல பாரதி. 2003. பண்பாட்டு மானிடவியல். சிதம்பரம். மெய்யப்பன் பதிப்பகம்.
2. சிவசுப்பிரமணியன், ஆ. 2009. இனவரைவியலும் தமிழ் நாவலும். சென்னை. பரிசில் வெளியீடு.
3. புறநானூறு.கழக வெளியீடு,
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
*கட்டுரையாளர்: - முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர்.