ஆய்வு: போர்க்களத்தில் வீரர்களின் ஆளுமை	திருமதி.வி.அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி – 626 123.முன்னுரை
வீரர்களின் புறவாழ்க்கையில் மிக இன்றியமையாதப் பணி போர் புரிவதாகும். வீரர்கள் போர்த் தொழிலில் விருப்பத்தோடு ஈடுபட்டுள்ளனர். தம் உயிரின் மீது சிறிதும் பற்று இல்லாதவர்களாய் செயல்பட்டுள்ளனர். போர்ப்பறை கேட்டவுடன் வீறுகொண்டு எழும் வீரர்கள் போர்க்களத்தில் எவ்வாறு செயல்பட்டனர் என்பதைத் தொல்காப்பியப் புறத்திணையியல் மற்றும் புறநானூற்றுப் பாடல்கள் சிறப்பான முறையில் எடுத்துரைத்துள்ளன.

போரில் வீரர்களின் வலிமை
வலிமை காரணமாகச் செய்யப்படும் போர் தும்மைப் போராகும். இப்போரில் ஈடுபடக்கூடிய வீரர்கள் மிகுந்த ஆவேசத்தோடும் ஆக்ரோ~மாகவும் செயல்படுவதுண்டு. இப்போரில் இருநாட்டு வேந்தர்களும் களம் புகுவதுண்டு.

பகைவர்களால் சூழ்ந்து கொள்ளப்பட்ட, வேற்படை மிக்க மன்னனைக் காப்பாற்ற விரும்பிய முன்னனணிப் படையில் இருக்கக் கூடிய வீரன் ஒருவன் மட்டும் தப்பித்து பகைவர்களை வெட்டி வீழ்த்துகின்றான்.

“    வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்
தான் மீண்டு எறிந்த தார்நிலை ”        (தொல்.புறத்.1018:3-4)

பகைவர் முன் தோற்று ஓடிவரும் படையில் உள்ள வீரன் ஒருவன், பகைவர் படையில் தனி ஒருவனாகப் புகுந்து பகைவர்களை வெற்றி கொள்வதோடு அடுத்து வரக்கூடிய கூழைப் படையையும்(பின்னணிப்படை)தடுத்து நிறுத்துகின்றான்.

இன்னொரு வீரன் தன் மீது பகைவர்கள் படைக்கலன்களை வீசியதால் புண்பட்ட நிலையில் இருக்கின்றான். இருந்தாலும் அவற்றை அறுத்து எறிந்துவிட்டு, தன் உடல்வலிமையால் மட்டுமே போரிடுகின்றான்.

“    கூழை தாங்கிய எருமையும் படைஅறுத்துப்
பாழி கொள்ளும் ஏமத் தானும் ”        (தொல்.புறத்.1018:7-8)

என்பதன் மூலம் போர்க்களத்திலே வீரர்கள் துடிப்போடு செயல்பட்டதை அறிய முடிகின்றது.

போரில் தன் மன்னன் இறந்து வீழ்ந்தான் என்றவுடன் கோபங் கொண்ட வீரனொருவன் தனி ஒருவனாகப் போரில் புகுந்து போரிடுவதுண்டு; தன் படைகள் தோற்று ஓடுகின்ற நிலையில் வீரன் ஒருவன் மட்டும் போர்க்களத்திலே தன் வாளைச் சுழற்றி ஆடுவதும் உண்டு. இதனை,

“    செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ
ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும்
பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசய நூழிலும் ”        (தொல்.புறத்.1018:14-17)

என்றநூற்பா வீரர்கள் தனிப்பட்ட முறையில் எவ்வளவு வீரமிக்கவர்களாகவும் அஞ்சா நெஞ்சம் உள்ளவர்களாகவும் விளங்கினர் என்பதை எடுத்துரைக்கின்றது.

களிற்றின் மீது ஊர்ந்து வரக் கூடிய வேந்தனைப் பகை வேந்தன் அக்களிற்றோடு சேர்ந்து வெட்டி வீழ்த்தி வெற்றியைக் கொண்டாடுவதும், மன்னர்கள் இருவரும் தத்தம் படைவீரர்களோடு ஒருவரும் எஞ்சாது அனைவரும் இறந்து போவதும் உண்டு.

“    …. ….. ….  …..  களிற்றொடு
பட்ட வேந்தனை அட்ட வேந்தன்
வாளோர் சூடும் அமலையும் வாள்வாய்த்து
இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகை நிலைக்கண்ணும் ”    (தொல்.புறத்.1018:9-13)

என்ற நூற்பா வாயிலாக வேந்தர்கள் போர்க்களத்தில் செயல்பட்ட தன்மையை அறிய முடிகின்றது.

வலிமையை நிலைநாட்டுவதற்காகச் செய்யக் கூடிய இப்போரில் வீரர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து கடுமையாகப் போரிட்டுள்ளனர். தம் மன்னனைக் காப்பாற்றுவதிலும், தம் படை அழியாமல் நின்று போரிடுவதிலும் மிக அதிகக் கவனம் செலுத்தியுள்ளனர்.

புறநானூற்றில் வலிமையை நிலைநாட்ட செய்யப்பட்ட போருக்கான சான்றுகள் பல உள்ளன. இப்போரில் ஈடுபட்ட வீரர்கள் மிகவும் துடிப்போடு செயல்பட்டுள்ளனர். போரின் போது பகைப்படைக்கு அஞ்சாமல் அப்படைக்கு நோய் போன்று காணப்பட்டுள்ளனர். தன்னைப் பகைத்துப் பார்த்தாரை அழித்து, முடம்பட்ட எருமை போல பகைவரை அழித்து நடுங்கச் செய்துள்ளனர். பகைப்படைகளின் முன்னேற்றத்திற்குத் தடைக்கற்களாக விளங்கியதோடு கடல் போன்ற தன் படைக்குக் கரை போன்று காணப்பட்டுள்ளனர். இவ்வீரர்கள் தம் படைவீரர்களிடம் தோழமை உணர்வோடு காணப்பட்டுள்ளனர்.

பகைப்படைக்கு அஞ்சாத நிலை
போரில் வீரனொருவன் தன்மேல் வந்த யானையைக் கொன்று,தன்னை எதிர்த்து வந்த பகைவரின் வேலை வாங்கி மடித்து, அவர்தம் தலைவனை உயரத் தூக்கி நிலத்தில் மோதியடித்தமையை,

“    பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வருங் களிற்றொடு வேல்துரந்து இனியே
தன்னும் துரக்குவன் போலும் - ஒன்னலர்
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
கையின் வாங்கி தழீஇ
மொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண் டனனே”        (புறம்.274:2-7)


என உலோச்சனார் பாடியுள்ளார். உயிர் நீங்கிய பகைவன் உடலைப் பற்றிக் கொண்டு, தன்னை எதிர்க்கும் பகைப்படைக்கு அஞ்சாமல் நிற்கின்றான். இவ்வாறு போர்க்களத்தில் வீரர்கள் எதற்கும் அஞ்சாதவர்களாக விளங்கியுள்ளனர்.

தோழமை உணர்வு
போரில் தன் படை சார்ந்த நண்பன், பகைவரால் சூழப்பட்டிருப்பதை அறிந்த வீரனொருவன், நண்பனைக் காக்கும் பொருட்டு முன்னேறிச் சென்று காக்கும் தன்மையினை,

“    திணிநிலை அலறக் கூழை போழ்ந்துதன்
வடமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
ஓம்புமின் ஓம்புமின் இவண்! என ஓம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
கன்று அமர் கறவை மான
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே ”        (புறம்.275:4-9)


என ஒரூஉத்தனார் புகழ்ந்துள்ளார்.

சங்கிலியால் பூட்டப் பெற்ற களிற்றின் கால்களைப் போல இறந்த வீரர்களின் குடல்கள் முன்னேறும் வீரர்களின் கால்களைச் சுற்றிக் கொள்கின்றன. பகைவரும் பலர் தடுக்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் கவலையுறாது கன்றை நோக்கி ஓடும் பசுவைப் போல பகைவரால் சூழப்பட்ட தன் நண்பனைக் காக்க வீரனொருவன் விரைந்து செல்கின்றான்.

பகைவர் படைக்கு நோய் போன்றவன்
போரில் வீரனொருவன் பகைவர் படை முழுவதையும் கலக்கிச் சிதறடித்தான். பகைவர் படை உடைந்து கெடுவதற்குரிய நோய் போன்றவனாகச் செயல்பட்டதை,

“    மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
குடப்பால் சில்உறை போலப்
படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே ”        (புறம்.276:4-6)

என மதுரைப்பூதன் இளநாகனார் பாடியுள்ளார். குடத்தில் உள்ள பாலின் அளவறிந்து இட்ட உறை அப்பால் முழுவதையும் கலங்கச் செய்வது போல வீரனொருவன் மாற்றார் படை முழுதும் கலங்கும் படியாக அப்படைக்கு பெரும் நோய் போல அச்சத்தையும் துன்பத்தையும் கொடுத்துள்ளான்.

போர்க்களத்திலேயே மாண்டுபோதல்

போர்க்களத்தில் வீரனொருவன் யானையைக் கொன்று தானும் இறந்துள்ளான். மற்றொரு வீரன் மார்பிலே விழுப்புண் பட்டு இறந்துள்ளான். தன் மகன் விழுப்புண் காரணமாக உடல் துண்டுபட்டு கிடப்பதைப் பார்த்த தாய் மகிழ்கின்றாள். இதனை,

“ களிறு எறிந்து பட்டனன் ”        (புறம்.277:3)

என பூங்கண் உத்திரையாரும்

“    கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே ”        (புறம்.278:6-9)


என நச்சௌ;ளையாரும் பாராட்டியுள்ளனர். இவ்வாறாக வீரர்கள் மார்பிலே விழுப்புண்பட்டு இறந்ததைக் கண்டு, அவ்வீரர்களைப் பெற்றெடுத்த தாயின் மனம் மகிழ்கின்றது.
வாய்ப்புக்காகக் காத்திராமல் போரிடுதல்

போரில் ஈடுபட்டுள்ள வீரனொருவன் தான் பகைவரை எதிர்த்துச் செல்லும் முறை வரும் வரை காத்திராமல் மறவுணர்வு மிக்கவனாய் முன்னேறிச் சென்று தன் முன்னே வரும் பகைவரின் பெரும்படையை எதிர்க்கின்றான்.

“    என்முறை வருக என்னான் கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி
ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே”        (புறம்.292:6-8)


என நன்னாகனார் நவின்றுள்ளார். இவ்வாறாக வீரர்கள் போரிலே தனக்கான வாய்ப்புகள் வரும் வரை காத்திராமல் தாமே முன்வந்து ஈடுபாட்டோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டுள்ளனர்.

அரவு உமிழ் மணி அன்ன தன்மை
போர்க்களத்தில் இருபக்கத்து வீரர்களும் மிகக் கடுமையாகப் போர்புரிகின்றனர். அப்பொழுது வீரனொருவன் தன் பெயரையும் தன் மன்னன் பெயரையும் சொல்லி,உங்களுள் வாழ்நாள் எல்லை முடிந்தவர் என்னோடு போரிட வாருங்கள் என்று அழைக்கின்றான். அவன் போர்த்திறமை கண்ட பகைவர் அவனை நெருங்குவதற்கு அஞ்சுகின்றனர். இதனை,

“    தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
இறையும் பெயரும் தோற்றி நுமருள்
நாள்மறை தபுத்தீர் வம்மின்,ஈங்குஎன
போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்
அரவு உமிழ் மணியின் குறுகார்
நிரைதார் மார்பின் நின்கேள்வனை பிறரே ”        (புறம்.294:4-9)

என பாம்பு உமிழ்ந்த மணியை நெருங்குவதற்கு எவ்வாறு அஞ்சுவாரோ அவ்வாறே அவ்வீரனை நெருங்குவதற்கும் அஞ்சுகின்ற தன்மையைப் பெருந்தலைச் சாத்தனார் பெருமிதத்தோடு கூறியுள்ளார். இவ்வாறாக  வீரர்கள்  பகைவரும் நெருங்குவதற்கு அஞ்சக்கூடிய தன்மையுடையவர்களாகச் செயல்பட்டுள்ளனர்.

அண்ணனுக்காகத் தம்பி போரிடல்
போர் பல நாட்கள் நடைபெறுவதுண்டு.அந்நிலையில் முந்தைய நாள் நடந்த போரில் தன் அண்ணனைக் கொன்றவனைத் தேடிக்கொண்டு மறுநாள் அவன் தம்பிவருகின்றான். அவ்வீரனின் கண்கள் அகலில் போடப்பெற்ற குன்றி மணியைப் போல சுழன்று நோக்கியது. இதனை,

“    நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
பேர்ஊர் அட்ட கள்ளிற்கு
ஓர்இல் கோயின் தேருமால் நின்றே ”        (புறம்.300:3-6)


என அரிசில்கிழார் தான் கண்டு அதிசயித்த அண்ணன் தம்பி பாசத்தைப் பதிவு செய்துள்ளார். அவன் கண்கள் பெரிய ஊரில் காய்ச்சப் பெற்ற கள்ளைப் பெறுவதற்குத் தன் வீட்டில் புகுந்து ஒரு கலயத்தைத் தேடுபவனைப் போல பகைவனைத் தேடியது. இவ்வாறாக வீரர்கள் பகைவரின் படைவீரர்களைப் பகைத்து அழித்தாலும் தன் படைவீரர்கள் மீது பாசவுணர்வோடு செயல்பட்டுள்ளனர்.

பகைத்துப் பார்த்தாரை அழித்தல்
போர்க்களத்திலே வீரனொருவன் தன்னைப் பகைத்துப் பார்ப்பவரை எல்லாம் அழிக்கும் காளை போன்றவனாகச் செயல்பட்டுள்ளான். அவன் தன் மறவுணர்வின் மிகுதியால் களத்திலே கொன்று குவித்த களிறுகளின் எண்ணிக்கை மிகப் பலவாகும் என்பதை,

“    நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,
வேலின்அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
விண்இவர் விசும்பின் மீனும்
தண்பெயல் உறையும் உறைஆற் றாவே ”        (புறம்.302:8-11)


என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இங்குப் புலவர் கற்பனையாக விண்மீன்களையும் மழைத்துளிகளையும் விட அதிகமானது என்கின்றார். இவ்வாறாக வீரர்கள் பகைவர்களின் பார்வையைத் தம் உள்ளுணர்வால் அளவிட்டு அவர்களை அழித்துள்ளனர்.

படையணிகளைப் பிளந்து போரிடுதல்
ஒன்றாகச் சேர்ந்திருக்கக் கூடியவற்றில் பிளவு ஏற்பட்டால் அதன் பலம் பாதியாகக் குறைந்துவிடும். இங்கு வீரனொருவன் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் பகைவரின் படைகளிடையே பிளவை ஏற்படுத்தி பின் அவர்களை அழிக்கின்றான். அவன் போர்க்களத்தில் தன் மறவுணர்வு மேம்பட வெறி கொண்டவனாய் தன் கை வேலால் எதிர்ப்பட்டவரின் மார்பைக் குத்திக் கொல்கின்றான். பின்பு கடலைப் பிளந்து கொண்டு செல்லும் படகைப் போல பகைவரின் படையணிகளைப் பிளந்து கொண்டு சென்று அப்பகைவரின் களிறுகளை அழிக்கின்றான். இதனை,

“    எள்ளுநர்ச் செருக்கும் காளை கூர்த்த
வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
ஆட்டிக் காணிய வருமே – நெருநை
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து,அவர்
இலங்குமருப்பு யானை எறிந்த எற்கே”        (புறம்.303:3-8)


என எருமை வெளியனார் எடுத்துரைத்துள்ளார். இவ்வாறாக ஒன்றாக இருந்த பகைவரின் பலத்தை முதலாவது குறைத்து விட்டு பின்பு அவர்களை வெறியுணர்வோடு அழித்துள்ளான்.

தம்பிக்காகப் போரிடுதல்
முதல் நாள் போரில் வீரனொருவனின் தம்பி பகைவரால் கொல்லப்படுகின்றான். அதனை அறிந்து அவன் அண்ணன், என் தம்பியைக் கொன்றவனை மறுநாள் போரில் அவன் தம்பியோடு சேர்த்துக் கொல்வேன். அதுவரை சிறிதளவு கூட உண்ணமாட்டேன் என நெடுமொழி கூறுகின்றான்.

“    …….. …………………… நெருநை;
எம்முன் தப்பியோன் தம்பியொடு,ஓராங்கு
நாளைச் செய்குவென் அமர்எனக் கூறிப்
புன்வயிறு அருத்தலும் செல்லான் பன்மான்
கடவும் என்ப பெரிதே; அதுகேட்டு
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
இலங்கும் இரும் பாசறை நடுங்கின்று ”        (புறம்.304:4-10)


என ஒற்றறிந்தவன் பகை வீரரிடம் சென்று சொல்ல அப்பகைவர் பாசறையே நடுங்கிற்று. இவ்வாறு வீரர்கள் தம் படைவீரர்கள் மீது உள்ள பாசவுணர்வால் பகைவரின் படைகளே அஞ்சி நடுங்கும்படியாகப் போர் புரிந்துள்ளனர்
.
முடம்பட்ட எருமை போன்று போரிடுதல்
உதவுவார் யாரும் இல்லா காட்டித்தே உப்பு வணிகரால் கைவிடப்பட்ட முடமான எருமையானது தன் அருகே கிடைத்த அனைத்தையும் தின்று தீர்ப்பது போல மறவன் ஒருவன் அசையாமல் ஓரிடத்து நின்று தன்னை எதிர்த்து வரும் பகைவர் அனைவர் உயிரையும் கவர்கின்றான். இதனை,

“    நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
பேர்உயிர் கொள்ளும் மாதோ ”        (புறம்.307:7-10)

என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இங்கு வீரனொருவனின் போர்க்களச்செயலானது முடம்பட்ட எருமையின் செயலோடு ஒப்பிடுவதன் வாயிலாக பகைவரை அழித்த வீரனின் பெருமை வெளிப்படுகின்றது.

பகைவரை நடுங்கச் செய்தல்
வீரனொருவன் போர் செய்வதற்காகப் பாசறையில் வந்து தங்குகின்றான். இவன் நல்ல பாம்பு வாழும் புற்றைப் போலவும்,கொல்லேறு திரி தரும் மன்றம் போலவும் வலிமையுடையவனாகக் காணப்படுகின்றான். இம்மறவனின் வருகையறிந்து பகைவர் நடுங்குவதை,

“    நல்அரா உறையும் புற்றம் போலவும்
கொல்ஏறு திரிதரும் மன்றம் போலவும்
மாற்றுஅருந் துப்பின் மாற்றோர் பாசறை
உளன்என வெரூஉம் ”            (புறம்.309:3-6)

என கோசிகனார் பாடியுள்ளார். இவ்வாறாக கண்டாரைக் கொல்லும் காளை போன்ற தன்மையுடைய, பிறரால் வெல்வதற்கு அரிய வீரர்களின் வருகையை அறிந்து பகைவர்கள் அஞ்சி நடுங்கியுள்ளனர்.

பகைவர் படைக்குத் தடைக்கல்லாகச் செயல்படுதல்
போர்க்களத்தில் தன் மன்னன் பகைவரால் துன்புற்ற போது மறவனொருவன் கொடியை உயர்த்தி, படைத்தலைமையேற்று, கட்டுக்கு அடங்காமல் வரும் பகைவரின் பெரும்படையைத் தடுத்து நிறுத்தும் தடைக்கல்லாகச் செயல்படுகின்றான். இதனை,

“    …………………. ………. கொடிஎடுத்து
நிறை அழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானே - தன்இறைவிழு முறினே ”        (புறம்.314:5-7)


என ஐயூர் முடவனார் பாடியுள்ளார். இவ்வாறாக வீரர்கள் தம் பகைவர் படைகளின் முன்னேற்றத்திற்குத் தடைகற்களாகச் செயல்பட்டுள்ளனர். 

ஆழி போன்று செயல்படுதல்
வீரனொருவன் தன் மன்னன் படையின் முன் பகுதி அழியாமல் இருக்க, பகைப்படையை அழிக்க வாளை ஏந்தி நிற்கின்றான். இம்மறவனே பகைப்படை தன்னைக் கடந்து மேலே செல்லாதவாறு தடுத்து நிறுத்துகின்றான். இதனால் இவன் பெரிய கடலுக்குக் கரை போன்றவன் என்று பாராட்டப்படுகின்றான்.

“    வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்
தன்இறந்து வாராமை விலக்கலின் பெருங்கடற்கு
ஆழி அனையன் மாதோ”                (புறம்.330:1-4)


என்ற பாடலடிகள் வீரர்கள் கடல் போன்ற தன் படைக்குக் கரையாக இருந்து காத்தமையை விளக்குகின்றன.

இவ்வாறாக வீரர்கள் போர்க்களத்தில் அடுத்தவர்களுக்காகக் காத்திருக்காமல் தன்னால் முடிந்த மட்டும் உயிரைப் பணயம் வைத்துப் போரிட்டுள்ளனர்.

முடிவுரை
போரின்போது தன் குடும்பத்தைப் பற்றிய எந்த நினைவுகளும் இல்லாமல் முழுமையான பலத்தோடு வலிமை மிக்கவர்களாகவும் சுறுசுறுப்பானவர்களாகவும் வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்டுச் செயல்பட்டுள்ளனர். பகைவர்களைப் பார்க்கும் போது மறவுணர்வு மேம்பட்டும் தன்படை வீரர்களைப் பார்க்கும் போது பாசவுணர்வு மேம்பட்டும் செயல்பட்டுள்ளனர். வீரர்களின் இச்செயல்பாட்டினைப் பல்வேறு உவமைகள் வாயிலாகப் புலவர்கள் பதிவுசெய்துள்ளனர்.

உசாத்துணை நூல்கள்:
1. தொல்காப்பியம்
2. புறநானூறு

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர்: - திருமதி.வி.அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி – 626 123. -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R