முன்னுரை:
ஒரு நாள் போதுமா? என்ற தலைப்பில் அமைந்த சு. சமுத்திரம் அவர்களின் குறுநாவல் கட்டிடத்தொழிலாளர்களின் வாழ்வியலை எடுத்துக்கூறும் ஒரு சமூக நாவல் ஆகும். சமூக நாவலில் மனிதநேயம் என்பது தவிர்க்கமுடியாததொன்று எனலாம். அந்த வகையில் இந்நாவலில் காணக்கிடக்கும் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
நாவலும் நாவலாசிரியரும்:
வேலு-அன்னவடிவு இருவரும் கணவன் மனைவியர். விவசாயத்தொழில் செய்துவந்த இவர்கள் சிறு சிக்கல் காரணமாக ஊரைவிட்டு வந்து சென்னையில் செய்வதறியாது நின்ற போது தாயம்மாள், பெயிண்டர் பெருமாள் இன்னபிற கட்டிடத்தொழிலாளர்களின் ஆதரவோடு வாழ்க்கையை நகர்த்துகின்றனர். முதலாளியின் தூண்டுதலால் அதிகமான பளுவைச் சுமந்த வேலு கீழே விழுந்து இறந்து விட இயற்கை மரணம் என்று மூடி மறைக்கின்றான் முதலாளி. அவனை எதிர்த்து நஷ்ட ஈடு கேட்டுச் சங்க உறுப்பினர்களோடும் தொழிலாளர்கள் ஆதரவோடும் வெற்றி இலக்கோடு அன்னவடிவு போராடத் துவங்குவதாகக் கதை முடிகிறது.
சு. சமுத்திரம் அவர்கள் நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள திப்பண்ணம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தவர். அகில இந்திய வானொலியிலும் தூதர்சனிலும் பணிபுரிந்தவர். 1974 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்துலகில் வலம் வந்தவர். 15 நாவல்களும் 8 குறுநாவல்களும் 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 2 கட்டுரைகளும் ‘லியோடால்ஸ்டாய்’ என்ற தலைப்பில் நாடகம் ஒன்றும் எழுதியுள்ளார். சோசியலிசவாதி. அடிமட்ட மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர். இவரது படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இவருடைய படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1990இல் வேரில் பழுத்த பலா என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தவிர தமிழக அரசின் விருது, இலக்கியச் சிந்தனை விருது, தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். தன்னுடைய 63ஆவது வயதில் 3.4.2003 அன்று வாகன விபத்தில் காலமானார். வேரில் பழுத்த பலா, வாடாமல்லி, பாலைப்புறா, ஊறுக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, கடித உறவுகள், மண்சுமை, தலைப்பாகை, வெளிச்சத்தை நோக்கி, வளர்ப்பு மகள், தராசு, சத்திய ஆவேசம், இல்லம்தோறும் இதயங்கள், நிழல் முகங்கள் ஆகியன சமுத்திரம் அவர்களின் குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.
மனிதநேயம்:
உயிரினங்களில் உயர்ந்த இனம் மனித இனமாகும். இம்மனித இனத்தின் உயர்ந்த பண்பே மனிதநேயமாகும். உயர்ந்த பண்பெனப்படுவது அன்பு, கருணை, அருள், நட்பு, விட்டுக்கொடுத்தல், புரிந்து கொள்ளுதல், சூழ்நிலைக்கேற்றவாறு நடந்துகொள்ளுதல் போன்றனவாகும். இப்பண்புகளின் ஒட்டு மொத்த வடிவமே மனிதநேயமாகும் எனலாம்.
மனிதநேயம் என்ற சொல் இத்தாலிய மொழியில் உள்ள ‘humanista’ என்ற சொல்லிருந்து பெறப்பட்டதாகும். “The attitude of the mind which attaches Primary importance to man and to his facul ties affairs, temporal as pirations – and well being”1 என்று மனிதநேயம் குறித்து அமெரிக்கக் கலைக்களஞ்சியம் விளக்கமளிக்கிறது. மேலும் The Random House Dictionary of English Language, “Any system or mode of though or action in which human interest, values and dignity predominate”2 என பொருள் தருகிறது. க்ரியாவின் தமிழ் அகராதி மனிதநேயம் என்பதற்கு “ மனிதன் மனிதனை மதித்துச் செல்லும் அன்பு”3 என விளக்கமளிக்கிறது.
மனிதனுடைய வாழ்வு சக மனிதனோடு தொடர்புடையது. “மனிதனுக்கு மனிதன் இருக்கவேண்டிய தொடர்புறவு பற்றிய மனநிலையே மனிதநேயமாகும்”4 என்கிறார் சாலினி இளந்திரையன். மேலும் அடிப்படையான மனித உறவு, உணர்வு சார்ந்த மனிதநேயம் என்பது காலம், இடம் என்னும் பின்னணிகளில் மனிதன் எப்படி எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான வரையறைகளைக் குறித்தது”5 என்றும் “தங்களுக்கு அக்கறை இல்லாத ஒரு செய்தி மற்றவர்களின் பெரிய அக்கறை ஆர்வத்தின் காரணமாக (வெறும் உணர்ச்சியின் அடிப்படையில்) அவர்கள் தவறான முடிவுகளுக்கு வந்து விடும்போது அவர்களைச் செப்பம் செய்ய வேண்டும் என்று நினைத்துத் தங்கள் அறிவலும் அனுபவத்தாலும் அதை சீராக நடத்துகிறார்களே இதுவும் மனிதநேயமே”6 என்றும் மனிதநேயம் குறித்து பல நிலைகளில் விளக்கம் தருகிறார்.
மனிதநேயம் என்ற சொல் காலத்தால் பிற்பட்டது என்றாலும் தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி இப்பண்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.
“காமம் சான்றக் கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
நயம்பிரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” 7 – என்று கற்பின் மேன்மையை சொல்லமுற்பட்ட தொல்காப்பியர் சிறந்தது பயிற்றல் என்ற இரட்டைச்சொல்லில் மனிதநேயத்தின் மாண்பினைச் சுட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்,
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை,
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தங்கிளை செறாமை
அறிவு எனப்படுவது பேதையார் செல்நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாமை
நிறை எனப்படுவது மறைபிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” 8
என்கிறது கலித்தொகை. இவ்வரிகள் மனிதநேயத்தைப் பறைசாற்றுகின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும்.
“நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனோடு நட்பே”9 என்கிறது குறுந்தொகை.
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.”10
இவ்வாறு பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் சொல்லப்பட்ட மனிதநேயப் பண்பினைப் படைப்பாற்றல் கொண்ட படைப்பாளனும் தன்னுடைய படைப்புகளில், கதாபாத்திரங்களில் படைக்கத் தவறுவதில்லை. இவ்வகையில் ஒரு நாள் போதுமா? நாவலில் காணலாகும் மனிதநேயம் பற்றி அக்கதையில் இடம்பெறும் கதைமாந்தர் வழிக் காண்போம்.
தாயம்மாவின் மனிதநேயம்:
சொந்தபந்தம் யாரும் இல்லாத புதிய ஊருக்கு வரும் அன்னவடிவுவையும் வேலுவையும் ஆதரிக்கும் தாயம்மாவின் மனிதநேயம் இங்கு பாராட்டுதற்குரியது. தாயம்மா காசு, பணம் படைத்த மிகப்பெரிய பணக்காரியல்ல. அன்றாடம் உழைத்து அதில் வரும் கூலியில் தன் வயிற்றைக் கழுவி தன்னுடைய வைத்தியச் செலவு 5 ரூபாய் காசுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் பரம ஏழை. ‘உழைக்க இவள் தெம்பு இல்லாதவள், வேலைக்கு உதவமாட்டாள்’ என்று மேஸ்திரிகளால் நிராகரிக்கப்படும் பெண். என்றாலும் கூட அன்னவடிவு தெருவோரம் குடியிருப்பதைப்பார்க்க அவள் மனம் சம்மதிக்க மறுக்கிறது. கைகால்களை நிட்ட முடியாமல் முடக்கிக்கொண்டு படுக்கும்படியான அகலமும் நிமிர்ந்தால் தலைதட்டும்படியான உயரமும் கொண்ட சிறு குடிசை. திரைச்சீலைதான் கதவு. அதையும் அன்னவடிவுக்காக விட்டுக்கொடுத்துவிட்டு தான் வாசலில் படுத்துறங்கும் பாங்கு தாயம்மாவின் மனிதநேயத்தை உயர்த்திக்காட்டுகிறது. பருவப்பெண் அன்னவடிவு நடைத்தெருவில் குடியிருந்தால் பல சிக்கலுக்கு உள்ளாக நேரிடும். அவளுக்குப் பாதுகாப்புக் கொடுத்து வயதான காலத்தில் தான் தெருவில் படுத்திருந்தாலும் பரவாயில்லை என்ற தாயம்மவின் உணர்வு சொல்லில் அடங்காது.
“ நீ அறியாத பொண்ணு… ஒன்னால தெருவுல தாக்குப்பிடிக்கமுடியாது. பொறுக்கிப் பயலுவ வருவாங்கோ, பக்குவமாய் பேசணும். கார்ப்பரேசன் லாரியைப் பார்த்தா நாய் ஓடி ஒளியற மாதிரி நீயும் சட்டிபானையோட ஒளியணும். போலீஸ்காரன் மிரட்டிப் பார்த்தால் மிரளாமப் பார்க்கணும். இதுல்லாம் ஒன்னால் முடியாது. பேசாம என் குட்சையிலெ தங்கிக்கோ;“11 என்று கூறியதோடு நின்றுவிடாமல் வர மறுத்த அன்னவடிவுவின் பாத்திரங்களை எடுத்துக் கோணிக்குள் திணித்தாள். இவ்விடத்தில் தாயம்மாவின் அன்பை ஆசிரியர் “அவளின் அன்பு போல் அந்தக் கோணியும் பெருத்துக் கொண்டிருந்தது”12 என்று வர்ணிக்கிறார்.
வேலுவின் பொதுநலம்
மனைவியின் மீது அன்பு கொண்டவன். பணத்திற்கு விலைபோக மாட்டான். பிறருடைய துன்பத்தில் பங்கு கொள்பவன். தாயம்மாவின் நிலைக்காக வருந்துவதை “அவளுக்கு ஏற்பட்ட நிலைமையை, மனத்திற்குக் கொண்டு வந்து பார்த்தான். ஊனக்கண்ணில் அதிகமாய் படாதது ஞானக்கண்ணில்பட்டது. சலிப்போடு பதிலளித்தான்.”13 என்றுரைக்கிறார். தன்னுடய உயர்வுக்காக மட்டுமல்லாது ஒட்டுமொத்த உழைப்பாளிகளின் உயர்வையும் கருத்தில் கொண்டு செயல்படுபவன். வெலுவின் பொதுநலப்பண்பை “படிப்படியாக முன்னேறி விடலாம் என்று நம்பிக்கை. அப்படி முன்னேறும்போது சகாக்களையும் கைதூக்கி விடவேண்டும் என்ற உறுதி.”14 என்ற வரிகள் மிகத் தெளிவாக்குகின்றன.157 உண்மைக்காகப் போராடும் போராளி. பொதுவுடைமைக் கொள்கையுடையவன். கதையில் பல இடங்களில் ஆசிரியர் இதனை பதிய வைக்கிறார். “இன்னொரு மூட்டையை சுமப்பது அவனுக்கும் பெரிய காரியமில்லை. ஆனால் தன்னைக் காரணமாகக் காட்டி இதர தொழிலாளர்களை அவர் வற்புறுத்தக் கூடாது என்ற எண்ணம். ………. சிறிது நேரத்திற்கு முன்புவரை மஸ்டர்ரோல் மூலம் முன்னேற நினைத்தவன் இப்போது, முன்னேற்றம் என்பது ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் வந்தால்தான் முன்னேற்றம் என்றும் நினைத்துக்கொண்டான்.”15 தன்னுடைய வளர்ச்சிக்காக பலருடைய கால்களை இழுத்து பின்னுக்குத்தள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் வேலு உயர்ந்து நிற்கும் உன்னத மனிதனாகிறார்.
அன்னவடிவு காட்டும் அன்பு:
தனக்கு அடைக்களம் கொடுத்த தாயம்மாவைப் பெத்த தாய் போல பார்த்துக்கொள்ளும் நேர்த்தி, மது குடிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்று உடன்பிறவா சகோதரன் தாயம்மாவின் மகன் கோவிந்தனுக்கு புத்திமதியோடு கட்டளையிட்டு பணம் கொடுத்து அனுப்பும் பக்குவம், கிடைத்த கூலியை தனக்கும் தன் எதிர்காலத்திற்கும் என்று சேர்த்து வைக்காமல் தாயம்மா குடும்பத்திற்கு செலவு செய்து மகிழும் மனமும் அன்னவடிவுவை மனிதநேயத்தின் மகாராணி என்ற நிலைக்கு உயர்த்துகிறது. தாயம்மா நோய்வாய்ப்பட்டு வலிவேதனையால் துடித்துக்கொண்டிருக்கும் போது அவளுக்காக வருந்துவதோடு நின்றுவிடாமல் “தாயம்மாவின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு நெஞ்சை நீவிவிட்டால். காண்டிராக்டரின் முன்னால்கூட கண்ணீர் விடாத அந்த மூதாட்டி, இப்போது வடிவின் மடியிலேயே குப்புறப் படுத்து அவள் புடவையில் தன் கண்ணீரைத் துடைத்தாள்.” 16 என்கிறார் ஆசிரியர். மேலும் அவளுக்கு கஞ்சிவைத்துக்கொடுத்தல், மருத்துவச் செலவுக்குப் பணம் தருதல் என் வடிவுவின் உதவிக்கரம் மிக நீளம். தாயம்மா குடும்பத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தொழிலாளர்களையும் தன் குடும்பமாக நினைத்து அவர்களுக்காகப் போராடத்துணிகிறாள். “கடிச்சிக்கா ஏதாவது வேண்டுமா என்பதுமாதிரி ‘தாலா’வில் கஞ்சியை ஊற்றி, பச்சை மிளகாயை கடித்து வறுமைக்குச் சூடு போடுவது போல், கஞ்சியை ஊத்தி, ஊத்திக் குடித்த வேலு மனைவியின் தட்டில், தன் தட்டில் இருந்த கஞ்சியை ஊற்றப் போக, அவள், அவன் தட்டைத் தாழ்த்தி, தன் தட்டை உயர்த்தி தன் கஞ்சியை அவனுக்கு கொடுக்கப் போக, ‘தட்டுக்கெட்ட’ ஊடல்கள் நடக்கும் வீடுகளுக்கு முன்னால் ‘தட்டு ஊடல்’ நடந்தது.”17 இத்தனை அன்பு மிக்கக் கணவன். அவனுடைய முதல்க்கருவை வயிற்றில் சுமந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் கணவனை இழக்கிறாள். என்றாலும் அவன் ஒரு தொழிலாளி. அவனுடைய இறப்பு தொழிலாளர் வர்க்கத்தின் விடியலுக்கு ஆணிவேராக அமையட்டும் என்று துக்கத்தைத் துடைத்தெறிந்து விட்டு துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் போர்க்களத்தில் இறங்குகிறாள். “அவள் அனாதையல்ல. . . பாட்டாளி வர்க்கத்தில் ஒருத்தி…அந்த பாட்டாளி இனத்திற்காக பாடுபட வேண்டிய ஒருத்தி , தனிப்பட்ட தனது சோகத்தை, அவர்களிடம் சுமக்கக் கொடுக்காமல், அவர்களின் சுமையை சுமக்கும் அளவிற்கு, வாங்கிக் கொள்ள வேண்டியவள், தனக்கு ஏற்பட்ட நிலைமை, பிறகுடும்பங்களுக்கு நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியவள். இது ஒரு நாளில் தீரும் பிரச்சனையல்ல. அவள், அது தீர்வது வரைக்கும், ஒருநாள் கூட ஓயப்போவதும் இல்லை.”18 என்ற வரிகளை வசிக்கும் போது கதாசிரியர் சு.சமுத்திரம் அவர்களின் மனிதநேயப் பண்பும் தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது.
பெயிண்டர் பெருமாளின் நேர்மை
உழைப்பாளர்களுக்கு ஏற்படும் சிக்கலுக்கு ஒரு தீர்வைத் தேடித்தருபவராகத் திகழ்பவர். மக்களை சிந்திக்கத் தூண்டுபவர், நியாய தருமத்திற்காகக் குரல் கொடுக்கக்கூடியவர். தன் நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ஒட்டு மொத்த உழைப்பாளர்கள் வாழ்வுக்காகவும் உழைப்புச்சுரண்டலையும் எதிர்த்துப் போராடக்கூடியவர். முதலாளிகளைப் பயம் கொள்ளவைக்கும் ஒரு கதாபாத்திரம் என்றாலும் அதிர்ந்தோ அடாவடியாகவோ பேசக்கூடியவர் அல்ல. பொறுமையாக, பக்குவமாக, பதுமையாக சரி எனப்படுவதை ஆழமாக, அழுத்தமாகப் பேசும் வல்லமை படைத்தவர். “வேல் மாதிரி பாயாண்டாமா? ஒன் உடம்புக்கு ரெண்டு மூட்டையை தூக்க வேண்டாமா? தூக்கிப் பாரு பார்க்கலாம். ஏய்! இவன் தலையில் இன்னொரு மூட்டையை ஏத்துங்கடா. நல்ல பையன் மாதிரி தோணுது.”19 என்ற முதலாளியின் சொல்லைக் கேட்ட வேலு எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறான். இயற்கை மரணம் என மெய்ப்பிக்கப் பார்க்கும் முதலாளியை எதிர்த்து வடிவுவின் வாழ்க்கைக்காக நஷ்டஈடு கேட்டுப் போராடுகிறார். வடிவு சோகத்தின் உச்சியில் இருக்கும் போது, அவளின் மனம் புண்படாதபடி, அதே சமயம் அவளை சிந்திக்கத் தூண்டும் விதமான பெருமாளின் சொற்கள் அவருடைய மனிதநேயத்தை மிளிரச்செய்கிறது.
“ சங்கம் எடுத்த முடிவைத்தான் ஒங்கிட்ட சொல்றேன். நாங்களே மறியல் செய்து ரெண்டாயிரம் மூவாயிரம் ஒனக்கு வாங்கித்தரட்டுமா? இல்ல லேபர் கோர்ட்டுக்குப் போகலாமா? இதுல ஒன் இஷ்டம் தான் முக்கியம். ஒனக்கு எந்த வகையிலும் உதவத் தயார். மறியலா, கோர்ட்டான்னு நீதான் உத்தரவு போடணும்.. . . . . அதே சமயத்தில் ஒன்னை நாங்க அனாதையா விடமாட்டோம். என்ன சொல்றே?”20
ஒரு சமயம் தாயம்மாவின் வயதையும் அவளுடைய உடல் உபாதையையும் காரணம் காட்டி மேஸ்திரி ஒருவன் வேலைக்கு வரவேண்டாம் என்று தடுத்த போது பெயிண்டர் பெருமாள் தாயம்மாவுக்காக “யோவ், நீயில்லாம் மனுஷனாய்யா? அந்த அம்மாவுக்கு என்ன கோளாரோ? ஒன்னோட மூணு வருஷமா வேலைக்கு வர்ர பொம்மனாட்டி... நாற்பது வருஷமா சித்தாளாய் வேலை பார்க்குறவள். இந்த நாட்ல யானைக்குக்கூட பென்ஷன் கொடுக்கறாங்கலாம். ஆனால் யானையைவிட அதிகமா வேல பார்த்த அம்மாவுக்கு பென்ஷன் வாணாம், வேல கூடவா கொடுக்கபடாது? அந்த அளவுக்கா நெஞ்சில ரப்பு ஏறிட்டு? உன்னைச் சொல்லிக் குற்றமில்லைய்யா? எல்லாத்துக்கும் எங்களச் சொல்லணும். அட . . . நீ வேல கூட கொடுக்க வேண்டாம். பேச்சாவது மனுஷத்தன்மையா இருக்கப்படாதா?21 என்று செய்யும் வாதம் அவருடைய மனிதநேயத்தை வெளிக்காட்டுகிறது.
கோவிந்தன் பாசம்
தாயம்மாவின் ஒரே மகன் கோவிந்தன். செல்லமாக வளர்க்கப்பட்டவன். அம்மாவின் கூலிப்பணத்தில் மது அருந்துபவன் என்றாலும் அவள் மீது அன்பு மிக்கவன். அன்னவடிவுவைத் தன் சொந்த சகோதரியாகவே ஏற்றுக்கொண்டவன். நியாயத்திற்குக் கட்டுப்பட்டவன். “சொந்தக்காரர்களே ஏனென்று கேட்கவில்லை. அப்படி ஏனென்று கேட்டவர்களும், அவளைத்தான் சந்தேகப்பட்டு குறுக்கு விசாரணை செய்தார்கள். ஆனால், இங்கே இரண்டு நாள் பழக்கத்தில், அதுவும் தன் முகத்தை நேராய் நிமிர்ந்து பார்க்கக்கூட தயங்கும் ஒருவன். தன்னைப் பேசியவனை, தன்னையும் பணயம் வைத்து அடிக்கிறான். இது இந்த சகோதர பாசம், சொந்தக்கார மாமாவிடம் கிடைக்காத பாசம், இவர்களிடம் கிடைக்குதே. இதுக்குக் காரணம் என்ன? எது? அன்னவடிவு, காரணகாரியத்தில் ஈடுபடாமல், பாசப் பெருக்கில் விம்மினாள். கண்ணில் இருந்து சுரந்த நீரும், பாசத்தைக் கண்டுபிடித்ததில் ஏற்பட்ட ஆனந்த நீரும் கலவையாகி, துளித்துளியாக கீழே விழுந்தது, கொழுந்துவிட்டு எரிந்த சுள்ளி நெருப்பை அணைக்கப்போனது.”22உடன் பிறந்த சகோதரிகளைக்கூட பாரமாகவும் பங்குகேட்பவளாகவும் பார்க்கும் சமுதாயத்திற்கு மத்தியில் எங்கிருந்தோ வந்தவளை சொந்த சகோதரியாக ஏற்றுக்கொள்ளும் பாங்கு கதாசிரியரின் சமுதாய நலனையும் மனிதநேயப்பண்பையும் நன்கு புலப்படுத்துகிறது.
காவலாளியின் இரக்கம்
துறைகள் தோறும் பெண்களுக்கான சிக்கல் என்பது பெருகிப் போன ஒன்று எனலாம். மேலதிகாரியின் ஆளுமைப் பலவித இன்னல்களைத் தருவதுண்டு. குறிப்பாக கட்டிடத்தொழிலாளர்களிடம் இதை கண்கூடாகக் காணமுடிகிறது. எத்தனை ஆண்டுகளானாலும் எத்தனை புத்திக்கூர்மையோடு வேலை செய்தாலும் பெண்களுக்கான உயர்ப்பதவி கிடைப்பதில்லை. இது போன்ற தருணத்தில் சக தொழிலாளர்கள் ஒருவருக்கு ஒருவர் மனக்கவலைக்கு மருந்துபோடுவதாக மனிதநேயத்தோடு நடத்துகொள்கிறார்கள் என்று தன்னுடைய கதையில் காட்சிப்படுத்துகிறார் சு. சமுத்திரம். ஒரு சமயம் கட்டிடத்தொழில் செய்யும் ஒரு பெண்ணை மேஸ்திரி கையைப் பிடித்து இழுத்து தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கின்றான். அப்போது அங்கு காவல் செய்துகொண்டிருந்த காவலாளி (மேஸ்திரியால் பணியில் அமர்த்தப்பட்டவன்) தன் வேலை பறிபோனாலும் பரவாயில்லை ஒரு பெண்ணின் மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று அப்பெண்ணை அச்சூழலிலிருந்து காப்பாற்றுகிறார். “அண்ணாநகர்… ஹவுசிங் போர்ட் கட்டுற இடத்துல ஒரு சித்தாள் பொண்ண கான்டிராக்டர் ஜாடைமாடையாய் கிண்டல் பண்ணியிருக்கான். அந்தப் பொண்ணு கண்டிச்சிருக்காள். ஒருநாள் ஸ்டோர் ரூம்ல அந்தப்பொண்ணு செமெண்ட் மூட்டையைத் தூக்கச்சே., கான்டிராக்டர் அவள் கையைப் பிடிச்சு இஸ்துக்கிறான். அவள் கூப்பாடு போட… வாட்ச்மேன் அங்கே போய் காண்டிராக்டரை கண்டிச்சிருக்கான்”23 மனிதநேயம் மிக்க மனிதர்களும் சமுதாயத்தில் உலவிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை படம்பிடிக்கும் காட்சி இதுவாகும்.
முடிவுரை
ஒருநாள் போதுமா? என்ற சமுத்திரம் அவர்களிடம் குறுநாவல் வழி, சக உயிர்களிடத்து அன்பு செய்தல், கருணையோடு உதவுதல், தன் நலனில்லாது பிறருடைய இன்ப துன்பத்தில் பங்கெடுத்தல், திக்கற்றவர்களுக்கு பாதுகாப்பளித்தல், நோயுற்றவர்களுக்கு ஆறுதலாய் இருந்தல், செய்வதறியாது திகைக்கும்போது சரியாக சிந்திக்கச் செய்தல், நியாயத்திற்காகக் குரல் கொடுத்தல் போன்ற பலதரப்பட்ட உயர்ந்த பண்புகளும் மனித நேயத்துள் அடங்கும். இம்மனிதநேய மாண்புகள் அனைத்தையும் தன்னுள் கொண்டு படிப்போரைப் பண்படுத்துகிறது இக்கதை என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
குறிப்புகள்
1.அமெரிக்கக் கலைக்களஞ்சியம்.
2.The Random House Dictionary of English Language.
3.க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
4.சாலினி இளந்திரையன், சங்கத்தமிழரின் மனிதநேய மணிநெறிகள், ப. 1
5.மேலது, ப. 2
6.மேலது, ப. 3
7.தொல்காப்பியம், பொருளதிகாரம்,கற்பியல் – நூற்பா – 51
8.கலித்தொகை 133: 6-14
9.குறுந்தொகை, பாடல் எண்: 3
10.திருக்குறள். குறள் எண் – 72
11.சு. சமுத்திரம், ஒரு நாள் போதுமா?, ப. 130
12.மேலது, ப. 132
13.மேலது, ப. 148
14.மேலது, ப. 151
15.மேலது, ப. 158
16.மேலது, ப. 143
17.மேலது, ப. 129
18.மேலது, ப. 184
19.மேலது, ப. 158
20.மேலது, ப. 179
21.மேலது, ப. 119
22.மேலது, ப. 147
23.மேலது, ப. 112
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
*கட்டுரையாளர்: - இரா.சி. சுந்தரமயில்,உதவிப்பேராசிரியர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை - 4 -