தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி -வட்டத்திற்கு உட்பட்ட பகுதியே சித்தேரியாகும். இப்பகுதியானது. அருரில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியாகும். இங்கு வாழும் பழங்குடியின மக்கள் விவசாயத்தை முதன்மைத் தொழிலைக் கொண்டுள்ளனர். உழவுத்தொழில் செய்யும் பொழுது மரத்தினால் செய்யப்பட்ட ‘ஏர்’ கருவியை, காளை மாடுகளில் பூட்டி உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனார். அவ்வகையில், அப்பகுதியின் நில அமைப்பு, வேளாண்மை செயல்பாடுகள், காலத்திற்கேற்ப பயிரிடும் முறைகள், உழவுத்தொழிலில் பயன்படுத்தும் கருவிகள் ஆகியவற்றை விரிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நில அமைப்பு
சித்தேரி மலைவாழ் பழங்குடியினர் இரண்டு வகையான நில அமைப்பைக் கொண்டுள்ளனர். அவை, நிலஅமைப்பு உழவுக்காடு (நீர் பாயக்கூடியது) , கொத்துக்காடு களைக்கொத்து(வானம் பார்த்த பூமி)
உழவுக்காடு
இப்பகுதியில் அதிகமாக நெல், கம்பு, வெங்காயம், கொத்தமல்லி, வரமிளகாய், தற்பொழுது மஞ்சள் போன்ற பணப்பயிர்கள் அதிகமாகப் பயிரிடுகின்றனர்.
கொத்துக்காடு
கொத்துக்காட்டுப் பகுதியில் தினை, கம்பு, சோளம், மெட்டுநெல், சாமை, ராகி(கேழ்வரகு), பீன்ஸ், கெள்ளு, பச்சைப்பயிறு போன்ற மேட்டுப்பயிர்களை வேளாண்மை செய்கின்றனர்.
வேளாண்மையின் செயல்பாடுகள்
சித்தேரி பழங்குடி இனமக்கள் வேளாண்மை, வேட்டையாடுதல் தொடங்கி, உழுதுபயிர் செய்கின்ற இன்றைய நிலை வரை பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளனர். வேளாண்மை பல செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. “உழவன் கணக்குப் பார்த்தால் ஏர்க் கூலிக்கூட மிஞ்சாது” என்ற பழமொழி உண்டு. உழுது வேளாண்மை செய்கின்ற நிலத்தை உழவுத் தொழிலானது உழுதல், எருவிடுதல், பயிரிடுதல், பயிரிடுதல், பயிர் பாதுகாத்தல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல், விதைகளைத் தோ்வு செய்தல், பாதுகாத்தல், கால்நடைகளை வளர்த்தல் போன்ற காரணிகளை முதன்மையாகக் கொண்டுள்ளது.
நிலத்தின் தன்மைக்கேற்ப பயிரிடுதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நிலத்தை உழுது எருவிட்டுப் பண்படுத்தியப் பின்பு செய்ய வேண்டிய செயல் “பயிரிடுதல்” ஆகும். பயிரிடும் பொது நிலத்தைத் தோ்வு செய்தல் முதல் செயல்பாடு என்றால், பருவம் பார்த்துப் பயிர் செய்தல் அதைவிட முக்கியம். மழைப்பெய்யும் காலம், பயிருக்கு ஏற்ப தட்பவெப்பம் நிகழும் காலம் போன்ற பருவகாலம் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இம்மக்கள் பயிர்த்தொழில் செய்கின்றனர்.
காலத்திற்கேற்ப பயிரிடும் முறைகள்
சித்தேரி மலைப் பழங்குடிகள் பயிர்களைத் தானியவகைப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், பயிறுவகைப் பயிறுகள் என்று வகைப்படுத்துகின்றனர். இவ்வகை பயிர்களைப் பற்றிய தரவுகள் ஆய்வின் பொது விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டவைகளாகும். இம்மக்கள் ஆனி மாதத்தில், பயிரிடத்தொடங்கி விவசாயத் தொழில் செய்கின்றனர். “ஆனி மாதத்தில், பயிரிடத்தொடங்கி உழவுத் தொழில் செய்கின்றனா். ஆனி மாதத்தில் மஞ்சள், மேட்டுநெல், தினை போன்ற பயிர்கள் விளையும். ஆடி மாதத்தில் சாமையும் கேழ்வரகும் பயிரிடுகின்றன. ‘ஆடியில் ஐந்து வாரம் வந்தால் அடிகிணற்றிலும் அருகம்புல் முளைக்கும்’என்ற பழமொழி இன்றளவிலும் வழங்கப்பட்டு வருகிறது. கேழ்வரகும், புரட்டாசியில் பீன்ஸ், கொள்ளும் போன்றவையும், வைகாசியில் கம்பு போன்ற பயிர் வகைகளும் பயிரிடுகின்றன”1 என்று தகவலாளர் கூறுகின்றார்.
உழவுத் தொழிலில் பயன்படுத்தும் கருவிகள்
சித்தேரி மலைப் பழங்குடிகள் தங்களின் மூத்தோர் பயன்படுத்திய மரக்கருவிகளையும், நவீன எந்திரக் கலப்பையும் பாயன்டுத்தி வருகின்றனா். மரத்தாலான உழவுக் கருவிகளைச் செய்வதற்குத் தங்கள் முன்னர் கண்ட முறையையே இப்பழங்குடிகள் கையாண்டு வருகின்றனர். இக்கருவிகளைக் கொண்டு நிலத்தை உழவுவதற்கு இரண்டு மாடுகள் தெவைப்படுகின்றன. உழவுக்குப் பயன்படுத்தும் கருவியை ‘ஏர்’ என்று அழைக்கின்றனர். திருவள்ளுவர் ஏர் கருவி மற்றும் எருவிடுதல் பற்றி கூறிப்பிட்டுள்ளார்.
“ஏரின் உழா அர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்” திருக்குறள் – 14
“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” திருக்குறள் – 1031
“ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு” திருக்குறள் – 1038)
பல மரக் கருவிகளைக் கொண்டு ஏர் உழுகின்றனர். அவை,
1. கலப்பை
2. நெகித்தடி (நுகத்தடி)
3. மோழி
4. சங்கிலி (இரும்பு)
5. கயிறு (கலப்பைக் கயிறு)
6. மொலையாணிக் குச்சி
7. பூட்டு
8. கொண்டி
9. கடக்குச்சி
10. நெகித்தடி கொக்கி
11. பரம்பு
12. மாடு, எருது
13. உழக்கோள்
14. பரம்பு (சங்கிலி)
மேற்கண்ட கருவிகளை ‘ஏர்’ கலப்பையாகக் கொண்டு உழவுத்தொழில் செய்கின்றனா். கலப்பையை இப்பழங்குடிகளே செய்கின்றனா்.
கலப்பை
கலப்பை என்பது ஏர் உழும்போது மண்ணைக் கிளறும் கருவியாகும். நிலத்துப்பகுதியை உழுது செல்லும் போது மேல் மண்ணைக் கீழாகவும், கீழ்மண்ணை மேலாகவும் கலக்கிவிடும் தன்மை கொண்டது கலப்பை எனலாம். இக்கருவி மரத்தால் செய்யப்படுகிறது. மரத்தால் செய்யப்பட்ட கலப்பையே நிலத்தில் உழுவதற்கு ஏற்ற வகையில் சிறப்பாக இருப்பதாக இப்பகுதி மக்கள் வடிவமைத்து பயன்படுத்துகின்றனர். “கலப்பைக்காக வெட்டப்பட்ட மரத்தை நீருள்ள கிணற்றிலோ (அ) நீர்த்தேங்கியுள்ள இடத்திலோ நன்கு ஊறப்போடுகின்றனர். நீண்ட நாட்கள் அதாவது 5,6 மாதங்கள் வரை ஊற வைக்கின்றனர். நன்கு ஊறிய கலப்பை உழும்பொழுது உடையாமல் இருக்கம் அதேபோன்று உழுவதற்கு நன்றாகவும் இருக்கும் என்பதற்காகவும் பயன்படுத்துகின்றனர்."2
கலப்பை செய்வதற்கு நன்கு முற்றிய மரங்களையே தோ்வு செய்து நிலத்தில் உழுதுவரும் கலப்பையின் தலைப்பகுதியில் மோழியைப் பொருத்தி மொழையாணியைப் பொருத்துகின்றனர். நீண்ட ஏர்த்தடியுடன் பொருத்தி நெகித்தடியில் இணைக்கின்றனார்.
மோழி
மோழி என்பது கலப்பை உழுவதற்கு ஏற்ற வகையில் உழுபவா் பிடித்துச் செல்லப்பயன்படும் ஒரு கருவியாகும். இது கலப்பையின் அடிப்பகுதியில்(தலைப்பகுதி) பொருத்தப்படுவதாகும்.
கொழு
கலப்பையின் அடிப்பாகத்தில் ‘கொழு’ பொருத்துகின்றனர். இது கலப்பை நிலத்தில் ஆழமாக உழுது வரவும், மண்ணைக் கிளறவும் பயன்படுகிறது. கலப்பையில் கொழுவைப் கொருத்துவதை நுட்பமாகப் பயன்படுத்துகின்றனர்.
கைப்பிடி
மோழிக்கு மேல்பாகத்தில் சிலர் கைப்பிடி அமைத்துப் பயன்படுத்துகின்றனர். சிலர் ‘எல்’ வடிவில் அமைத்து உழுதுகின்றனர். இது உழுபவர் கையில் பிடிப்பதற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
நுகத்தடி
இது மாடுகளின் கழுத்தில் வைக்கப்படும் ஒர் கருவியாகும். இதன் நீளம் 5 அல்லது 6 அடி அளவு கொண்டதாகவும், உருண்டை வடிவத்திலும் காணப்படுகிறது. நுகத்தடியின் நடுவில் ‘கருத்தடியான்’ ஒரு முனையை வைத்து கட்டுவதற்கு ஏதுவாக அடையாளம் வைக்கின்றனர். அடையாளம் வைக்கப்பட்ட (அதாவது நடுப்பகுதி) இடத்தில் வைத்தால் தான் இருமாடுகளும் சமமாக இழுத்துச் செல்லும். சரியாக கொருத்தவில்லையென்றால் ஒரு மாட்டின் பக்கமாக இழுத்துச் செல்லும். பாரமும் அதிகமாகிவிடும். நுகத்தடியின் இருபுறங்களிலும் 11/2 சாண் அளவுகளில் இருபுறங்களில் துளைகள் பொருத்தப்பட்டுருக்கும், அத்துளைகளில் கயிற்றை நுழைத்து மாடுகளின் கழுத்தில் கட்டுகின்றனர். அந்தக் கயிறுக்கு கண்ணிக்கயிறு என்று பெயர்.
மொளையாணிக் குச்சி
மோழியையும், கலப்பையையும் இணைப்பதற்கு பயன்படும் ஒருகோல் மொளையாணிக் குச்சி என்று பெயா். இதன் நீளம் கலப்பையைப் பொறுத்து 1, ½ அடி அளவு காணப்படுகிறது. கலப்பையின் அடிப்பகுதியிலும் மோழியின் நடுப்பகுதியிலும் இருக்கும் துளையில் இக்குச்சியைச் போருத்திவிடுகின்றனர். பிறகு கயிரைக் கொண்டு மோழியும், கலப்பையும் நன்றாக கட்டுகின்றனர். இதனால் கலப்பை இறுக்கமாகிறது. மோழி சாயாமல் இருப்பதற்கும் அந்த நுட்பமான பகுதி பயன்படுகிறது.
கலப்பைக்கயிறு (அ) சங்கிலி
கலப்பை நுகத்தயோடு இணைப்பதற்குக் கலப்பைக் கயிறு (அ) சங்கிலி பயன்படுத்தப்படுகிறது. தற்பொது சில பழங்குடிகளிடையே இரும்பால் செய்யப்பட்ட சங்கிலியும் பயன்படுத்தி வருகின்றனர். “கலப்பையில் இருந்து நுகத்தடி வரையிலும் இக்கருவிகள் பொருத்தப்படுகின்றன. இது கலப்பையை இழுப்பதற்கும், ஆழமாக உழுவதற்கும், ஆழம் குறைவாக உழுவதற்கும் அக்கயிறு (அ) சங்கிலி தான் உதவி செய்கிறது. இத்தகைய நுட்பமான வேலைகளை தங்களின் முன்னோர்கள் செய்த முறைப்படி தாங்களும் பின்பற்றி வருவதாகக்”3 கூறுகின்றனர்.
ஏர்கருவி செய்யப் பயன்படும் மரம்
இப்பழங்குடியின மக்கள் ஏா்கருவிகள் செய்வதற்கு எந்தெந்த மரங்கள் தேவை என்பதைத் தெரிந்து வைத்துள்ளனர். சரியான மரங்களைத் தோ்வு செய்வதிலும் நுட்பமாக செயல்படுகின்றனர். பொதுவாக கருவேலன், வேம்பு, போன்ற மரங்கள் கலப்பை செய்வதற்கு ஏற்ற மரங்கள் எனக் கூறுகின்றனர்.
நெகித்தடி (அ) நுகத்தடி
இதனைச் செய்வதற்கு கருவேலன், வேம்பு, சாயமரம், கொன்னை மரம் போன்ற மரங்களையும், மூங்கில், சிறுநறுவிழி, பூவரசன், ஆயாமரம், தேக்கு போன்ற மரங்களையும் பயன்படுத்துகின்றனர். மோழியில் பொருத்தப்படும் கைப்பிடிக்கும் கருவேலன் மரத்தையும் தோ்வு செய்கின்றனா்.
முடிவுரை
தமிழர்களின் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் பழங்குடிகளிடம் மரபு மாறாமல் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது, அறிவியலின் தொழில்நுட்ப வளர்ச்சியால் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்தவா்கள் இயந்திரக்கருவிகளைக் கொண்டு உழவுத்தொழில் மேற்கொள்கின்றனர். ஆனால், இப்பழங்குடி மக்கள் ஏர்கருவிகளைத் தோர்ந்தெடுக்கும் தொழில் நுட்பங்களைத் தெரிந்தவர்களாகவும், உழவு செய்கின்ற நுட்பங்களை அறிந்தவர்களாகவும், உழவுத் தொடர்பான வட்டாரச் சொற்களைப் பயன்படுத்துபவர்களாகவும் இன்றளவிலும் உள்ளனர் என்பதை இக்கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.
தகவலாளர்கள்
1. மாரி, விவசாயி, ஊமத்தி
2. காண்டியப்பன், விவசாயி, ஊமத்தி
3. பொரியசாமி, விவசாயி, மாம்பாறை (ஊர்க்கவுண்டர்)