சூழியல் என்பது இன்றைய நிலையில் முக்கியமாக வைத்துப் பேசப்பட வேண்டிய துறைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. மனித வாழ்விற்கு அடிப்படையாக அமைவது சூழல். இத்தகையச் சூழல் மனிதனின் அனைத்து வித செயல்பாடுகளுடன் ஒன்றிணைந்துள்ளது. இத்தகைய சூழலால் உந்தப்பட்ட மனிதன் தனது கற்பனைச் சிறகை விரித்து இலக்கியம் படைக்கிறான். எனவே ஒவ்வொரு படைப்பிலும் படைப்பாளன் இருக்கின்றான். ஒவ்வொரு படைப்பினுள்ளும் படைப்பாளன் இருப்பதனால் தகடூர்த் தமிழ்க்கதிரின் ‘மழை ஒலி’ என்கின்ற இக்கவிதைத் தொகுப்பு படைக்கப்பட்ட சூழல் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
ஆய்வு எல்லை
‘மழை ஒலி’ என்னும் கவிதைத் தொகுப்பு மட்டும் இக்கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆய்வுக் கருதுகோள்
‘மழை ஒலி’ என்ற கவிதைத் தொகுப்பு படைப்பாளியின் சூழல் காரணமாக உருப்பெற்றிருக்கலாம் என்ற கருதுகோளினை அடிப்படையாக வைத்து இவ்வாய்வு தொடங்கப்படுகிறது.
படைப்பாளனும் படைப்பும்
தகடூர்த் தமிழ்க்கதிர் என்னும் இக்கவிஞர் தர்மபுரி மாவட்டத்தில் கம்பை நல்லூரில் 15.02.1962-இல் பிறந்தார். இவர் தமிழ்க்கதிரின் எழில்வானம், ஐங்குறள் அமிழ்தம், மழை ஒலி, போன்ற கவிதை நூற்களும் அடைக்கலன் குருவியும் ஆறாம் வகுப்புச் சிறுவனும், பசுவும் பாப்பாவும், சிறுவர் பூக்கள் போன்ற சிறுவர்களுக்கான படைப்புகளையும் படைத்துள்ளார். மழை ஒலி என்னும் கவிதைத் தொகுப்பின் அமைப்பினைப் பத்துப் பிரிவாகப் பகுக்கலாம். அவையான, 1.இயற்கை, 2.தமிழ், 3.தமிழர், 4.சான்றோர், 5.இரங்கற்பா, 6.சமுதாயம், 7.பாவரங்கம், 8.அரங்குகளில் பாடப்பெற்ற பாடல்கள், 9.குறுங்காவியப் பாடல்கள், 10.பல்சுவைப் பாடல்கள் போன்ற பகுதியாக இந்நூலைப் பகுத்து அமைக்கலாம்.
படைப்பாளனும் சூழலும்
“சூழ்நிலை (Context) என்பது இலக்கியத்தோடு நெருங்கியத் தொடர்பு உடையது. இதை ஆராய்ச்சி செய்வது, அதாவது விஞ்ஞான சிந்தனை, அறிவாற்றல் வரலாறு (Intellectual history), இறையியல், சமகால அரசியல், சமூகச் சூழ்நிலை (பெண்ணியம், தலித்தியம், மானிடவியல், மார்க்ஸியம்) மற்றகலைகள், சுற்றுப்புறச் சூழல், விஞ்ஞானமும் கொள்கைகளும் இன்னொரு வகையான சூழ்நிலையைக் குறிக்கின்றது. இத்தகைய அனைத்துச்சூழலும் இலக்கிய அறிஞர்களிடையே விரும்பப்பட்டதொன்று.” (மேலை இலக்கியத் திறனாய்வு வரலாறு, பக்.346-47) என்று வை.சச்சிதானந்தம் குறிப்பிட்டுள்ளார். இவ்வகையில், எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் அப்படைப்பினுள் படைப்பாளன் சார்ந்த புறச்சூழலின் தாக்கம் காணப்படும். ஆகையால், அப்படைப்பாளனின் படைப்பில் அவன் சார்ந்த சூழல் இடம்பெறுகிறது. அப்படைப்பாளனை மையப்படுத்தி அவன் சார்ந்த சூழலை,
1.இயற்கை சார்ந்த சூழல்
2.உயிரினங்கள் சார்ந்த சூழல்
3.சமுதாயம் சார்ந்த சூழல்
என்னும் நிலைகளில் வகைப்படுத்திக் கூறலாம். அவ்வகையில், தகடூர்த் தமிழ்க்கதிர் கம்பை நல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். பாரதிதாசன், சுப்புரத்தின தாசனின் படைப்புகளில் ஆர்வம் உடையவர். பாரதிதாசனின் கொள்கையைப் பின்பற்றுபவர். ஆகையால், இவரின் படைப்பில் தமிழ்ச் சார்ந்த உணர்வும் சமுதாயம் சார்ந்த உணர்வும் வெளிப்பட்டுள்ளது. இதனை,
“பெண்ணை வணங்கும் பெருமனிதா! உன்சிசுவைக்
கண்ணில் மகளெனக் கண்டதுமே - மண்ணில்
புதைக்கும் பெருமூடா! பூவுலகில் நீயேடா?
பதைக்குதடா நேயம்தான் பார்”
(பெண்சிசுக் கொலை, மழை ஒலி,ப.126)
என்று சமகால சமுதாயம் சார்ந்த நிகழ்வினைப் பதிவு செய்துள்ளார் ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை பெயரளவில் தான் உள்ளது. ஆகவே தான் பெண்ணென்று கண்டவுடன் அச்சிசுவினை கொன்றுவிடும் மூடத்தனத்தினையும், பாலின வேறுபாட்டினால் பெண்ணுக்கு எதிராக செயல்படுவோரையும் கண்டிக்கின்றார்.
இயற்கைப் பாதுகாப்பு
சுற்றுச்சூழலைக் காப்பதில் படைப்பாளன் மிகுந்த ஆர்வம் உடையவராகத் திகழ்கிறார். இவர் எழுதிய மழை ஒலி என்னும் கவிதையின் தலைப்பே இந்நூலுக்குப் பெயராக அமைந்துள்ளமை இதனை வெளிப்படுத்தும் விதமாக விளங்குகிறது. மேலும், இயற்கையைச் சீரழிக்கும் நெகிழிப்பைகளை நீக்குவதன் மூலமாக இயற்கையைப் பாதுகாக்க முடியும் என்றும், சங்க காலத்தில் இயற்கையைச் சீரழிக்கும் செயற்கைப் பொருட்கள் இல்லாததால் இயற்கை வளம் சிறப்பாக இருந்தது என்றும், புகையே இல்லாத வண்டிகள் ஓடினால் காற்றில் கார்பன் - மோனாக்ஸைடின் அளவு குறைந்து புவி வெப்பமாதல் குறைந்து இயற்கை பாதுகாக்கப்படும். இதனை,
“எங்கும் நெகிழி பைகள் தூக்கி
ஏகும் மனிதர் திருந்தாரோ?
சங்கத் தமிழ்போல் தழைத்த இயற்கை
திரும்பவும் இங்கு மலராதோ?
புகையே இல்லா வண்டிகள் ஓடும்
புதுமை இங்கு மலராதோ?
பகையாம் செயற்கை மருந்துக ளிங்குப்
பாதை மாறிப் போகாவோ?”
(மழை ஒலி, வளர்ப்போம் இயற்கை வளங்களினை, ப.4)
என்று தனது கவிதையின் வாயிலாக, இயற்கையினைக் பாதுகாக்கும் ஏக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இயற்கை என்ற பிரிவின் கீழாக மழை ஒலி, குழந்தைக்கதிரவன், மலர், வளர்ப்போம் இயற்கை வளங்களினை, மலைக்காட்சி, காடு, காற்று, பாடும்மரம், இயற்கையைக் காப்போம், பனைமரம், தென்னை, வாழை புன்னை போன்ற தலைப்பின் கீழாக இயற்கையினைக் காத்தல் தொடர்பான கவிதையினைப் புனைந்துள்ளார்.
தமிழர் மாட்சியும் படைப்பாளனும்
தமிழரின் பெருமை குறித்த பதிவுகளை நிலைநிறுத்துவதில் படைப்பாளர் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். பாரதிதாசனின் கவிதைகளால் உந்தப்பட்ட கவிஞர் தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் பெரும் பற்றுடையவராகத் திகழ்கிறார். எனவே, உலகமயமாகின்ற சூழலில் ஒவ்வொருவனும் தனது சுயஅடையாளங்களை இழந்து விடுகின்ற அவலநிலையில் படைப்பாளன் தனது சுய அடையாளங்களை பதிவுச்செய்யும் பொருட்டு தமிழரின் மாட்சி குறித்தும் அவனது இயல்பு குறித்தும் வெளிப்படுத்தும் விதமாக கவிதையினை அமைத்துள்ளமையைக் காணமுடிகிறது. இதனை,
“தமிழர் நலனில் தவற்றினைக் கண்டால்
தடுத்திடு வேன்நின்று
கமழும் தமிழர் கனவினை வெல்லக்
கைகள் எனக்குமுண்டு” (தமிழா எழுக!, பா.5, மழை ஒலி, ப.20)
என்ற கவிதையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இவரின் கவிதைத் தொகுப்பில் தமிழ், தமிழர், தமிழர் மாட்சி, தமிழ் நெறி, தமிழ்க் கொடை, தமிழ் மறவர்கள், தமிழ் வேட்கை என்னும் தலைப்புகளில் கவிதை படைத்துள்ளார். தமிழ்ச் சான்றோர்களின் மீது கொண்ட பற்றின் காரணமாக ஔவையார், பாரதி, பாரதிதாசன் ஆகியோர் மீது கவிதை படைத்துள்ளார். சுரதா, கண்ணதாசன், முத்தழிழ்க் காவலர் போன்றோரின் மறைவின் பொழுது இரங்கற்பா பாடியுள்ளதன் மூலம் தகடூர்த் தமிழ்க்கதிரின் தமிழ்ப் பற்றினை அறியலாம்.
தகடூர்த் தமிழ்க்கதிர் படைப்பில் இலக்கியத்தாக்கம்
படைப்பாளர் இலக்கியங்களை விரும்பி வாசிக்கும் பழக்கம் உடையவர் என்பதனை அவரது படைப்பின் வாயிலாக அறியமுடிகிறது. ஏனெனில், சீவக சிந்தாமணியில்,
“காய் மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து
தேமாங் கனிசி தறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங்க தமென்று இசையால் திசை போய துண்டே”
(நாமகள் இலம்பகம், பா.2)
என்ற பாடலில் ஏமங்க நாட்டுவளம் பற்றி புகழ்ந்து பாடத் திருத்தக்கத் தேவர் கையாண்டுள்ள உவமை போன்றே தமிழ்க்கதிரும் கற்பனை செய்துள்ளார். இதனை,
“தண்ணீர் அருந்த எருமைதான்
தவழ்ந்து ஆற்றில் நின்றதுவே!
விண்ணில் எழுந்த நீர்வாளை
விலக வேண்டிதட்டியதே!
மண்ணில் எருமை அச்சத்தில்
மடங்கி யோட இளமான்கள்
வண்ண உடலை மிக உயர்த்தி
வாகாய் எம்பி ஓடினவே!
மானைக் கண்ட குரங்குகள்தாம்
வாலைச் சுருட்டிக் குதித்தனவே!
ஏனாம் என்றும் புரியாமல்
இழிந்த கூச்சல் போட்டனவே!
வானில் பறவை எம்பியதே!
மலர்கள் ஒருபால் அசைந்தனவே!
தானாய்க் குயிலும் கூவியதே!
தவழும் வளமாம் தமிழ்நாடே!”
(வளம்மிகு தமிழ்நாடு, மழை ஒலி, ப.128)
என்று தமிழ்நாட்டின் வளத்தினைத் தம் படைப்பில் கையாண்டுள்ளார். ஆகையால் சிவகசிந்தாமணி வாசிப்பில் ஆழ்ந்த புலமை பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
இரு மகாகவியும் தகடூர்த் தமிழ்க்கதிரும்
வானியல் அறிவினை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக இரு மகாகவிகளும் கவிதை படைத்துள்ளனர். “75 ஆண்டுகளுக்கு ஒருமுறை வால்நட்சத்திரம் தோன்றும் என்றும், 1758 ஆம் ஆண்டில் வரக்கூடிய வால்நட்சத்திரம் குறித்து முன்பே எட்மண்டு ஹாலி தெரிவித்தவர். அவரின் பெயராலே ஹாலி வால்நட்சத்திரம் (Hallay’s Comet) என்று அழைத்தனர். வால்நட்சத்திரம் தோன்றுவது இடரா? இன்பமா என்பது தொpயாமல் ஐயத்துடனே பாரதியார் கவிதை படைத்துள்ளார். ஆனால், ஆந்திர மகாகவியான அப்பாராவு புதிய சமூகத்தின் வெற்றிக் கொடியாக வால்நட்சத்திரத்தின் வருகையைப் பாடியுள்ளார்” (இரு மகாகவிகளின் பார்வையில் ‘ஹாலி வால்நட்சத்திரம்’, இந்திய ஒப்பிலக்கியம், ப.86) என்று பா.ஆனந்தகுமார் குறிப்பிடுகிறார். இரு மகாகவிகளும் விண்ணில் வலம் வரக்கூடிய வால்நட்சத்திர குறித்து படைத்தது போலவே விண்ணில் வலம் வரக்கூடிய ராக்கெட் குறித்து தகடூர்த் தமிழ்க்கதிர் படைத்துள்ளார். 1979-இல் ஸ்கைலாப் (இராக்கெட்) பூமியின் மீது விழும் அபாயத்தினை வானொலி அறிவிப்பின் மூலம் அறிந்த மக்களின் செயல்பாடு குறித்துப் படைத்துள்ளார்.
“நாளை வாழ்வு இல்லையென்றே
நம்பி விட்டனர்
இன்றே நன்றாய் தின்போ மென்றுத்
தின்று தீர்த்தனர்
கையில் ஏதும் பணமேயில்லை
காளை விற்றனர்
காளை விற்ற பணமுழுதும்
வாயில் போட்டனர்
கோயில் சென்ற யாவருமே
“கோவிந்தா” என்று
கோழையாக அழுதழுது
குழுமி இருந்தனர்
வேகமாக வானொலியில்
செய்தி கேட்டனர்
விரும்பித் தின்ற உணவையெல்லாம்
ஏப்பம் விட்டனர்
ராக்கெட் எரிந்து கடலிடையே
விழுந்த(து) என்றதும்
ராகம் போட்டு இருவருமே
கதறி அழுதனர்”
(ஸ்கைலாப்(இராக்கெட்)விழுகிறது!,மழை ஒலி,ப.132)
என்னும் கவிதையின் வாயிலாக, மக்கள் தன்னிடம் இருந்த பொருட்கள், பணம் எல்லாவற்றையும் செலவு செய்து தின்று தீர்த்தனர். பின்பு விஞ்ஞானிகள் கடலில் பத்திரமாக விழச்செய்த செய்தி கேட்டு சிந்திக்காமல் முடிவெடுத்ததன் விளைவை எண்ணிப் புலம்பிய நிகழ்வினைக் குறித்து பதிவுச்செய்துள்ளார். எனவே, மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதனைப் பதிவுச் செய்துள்ளார்.
சமகாலப் பதிவுகளில் படைப்பாளன்
இலக்கியம் என்பது காலத்தைக் காட்டும் கண்ணாடி என்று கூறுவர். இவ்வகையில் பார்க்கும் பொழுது தமிழ்க்கதிர் தம் சமகாலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்த பதிவுகளைத் தம்முடைய படைப்பில் பதிவுச் செய்துள்ளார்.
“கற்றிடும் பள்ளி தன்னில்
கவினுறு வள்ளு வன்சொல்
பற்றிலார்சோம்ப லாலே
படுதுயர் நிகழ்ந்த தம்மா!
தொற்றிடும் எரியின் முன்னர்
தொலைந்ததோ வைக்கோல் பிஞ்சு?
முற்றிடும் தமிழாம் பூக்கள்
முழுவதும் வெந்த தம்மா!”
(எரியினில் வாடலாமா?, மழை ஒலி, ப.136)
2004-இல் கும்பகோணத்தில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளிக் குழந்தைகள் இறந்த துயரச்சம்பவத்தைப் பதிவுசெய்துள்ளார். மேலும், இயற்கையினால் ஏற்பட்ட இன்னல்கள் குறித்துப் பதிவுச்செய்யும் விதமாக,
“கண்ணிமைக்கும் நேரத்தில் ‘கடல்கோள்’ என்றே
கண்டவர்கள் அலறினார்கள் ஊரைக் கொண்டாய்!
எண்ணத்திலும் பேய்தானா? எழுச்சி யெல்லாம்
இறப்பென்னும் சுடுகாட்டை அமைப்பதற்கா?
விண்ணிறைந்த கண்களெல்லாம் விரியக் கண்டே
வேதனையில் துடிக்கிறதே கடலே சொல்வாய்!
மண் மூடி அழிக்கின்ற கொடுமை வேண்டாம்
மாறிவிடு கடல்தாயே கோபம் வேண்டாம்”
(மாறிவிடு கடல் தாயே கோபம் வேண்டாம், மழை ஒலி,ப.137)
என்னும் கவிதையில் 26.12.2004 ஏற்பட்ட கடல்கோள் (சுனாமி) பற்றிப் பாடப்பட்டது. இயற்கையின் புறத்தாக்குதலுக்கு ஆளான மனிதனுக்கு இயல்பாகவே அவனுள் ஒரு தாக்கம் ஏற்பட்டிருக்கும். கடல்தாயிடம் படைப்பாளன் முறையிடுவது போன்று கவிதைப் படைத்துள்ளதன் மூலம் புறச்சூழலின் தாக்கத்தினைப் படைப்பாளன் பெற்றிருக்கிறார். இங்கு, ஒரே நேரத்தில் பலவுயிர்கள் இறப்பது என்பது பரிதாபத்திற்குரிய நிகழ்வாகும். எனவே, புறத்தாக்கத்தினை படைப்பாளன் பெற்றதன் காரணமாக சுனாமி குறித்த சமகாலப்பதிவினைப் பதிவுச் செய்துள்ளார்.
சமூக விழிப்புணர்வில் தமிழ்க்கதிர்
இயற்கையை மட்டுமல்லாது சமூகத்தினை மையமாக வைத்தும் கவிதையினைப் படைத்துள்ளார். மூடப்பழக்கம், பெண் உரிமைக்குக் குரல் கொடுத்தல், மனித உரிமை, உழைப்பின் உயர்வு, மனிதம், சமநிலை, பகுத்தறிவு, சமூக விடுதலை போன்ற கருவினை மையமிட்டதாகப் பல கவிதைகளைப் படைத்துள்ளார். இதனை,
“பாவலர் படைக்கும் யாப்பில்
பைந்தமிழ் மரபு இல்லை
நாவலர் பேசும் பேச்சில்
நல்லதாம் வீர மில்லை
காவலர் பணியில் மெச்சும்
கடமையோ சிறிது மில்லை
ஆவலால் முன்னேற் றத்தை
ஆக்கிடும் கட்சி இல்லை” (விடியட்டும், மழை ஒலி, பா.3, ப.59)
என்று ‘விடியட்டும்’என்னும் தலைப்பில் தற்காலத்தில் நிகழும் இத்தகைய அவலநிலையைப் போக்க சமூகம் விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற நோக்கில் தகடூர்த் தமிழ்க் கதிர் கவிதையைப் படைத்துள்ளார். இக்கவிதையின் மையப்பொருளாக படைப்பாளன் கூறுவது எந்த வொரு செயலைச் செய்தாலும் விரும்பிச் செய்யவேண்டும் என்றும், இவ்வாறு விரும்பிச் செய்யும் பணியில் கடமையுணர்வு இடம்பெறவேண்டும் என்கிறார். இவ்வாறு விரும்பி முன்னேற்றத்தை ஏற்படுத்தும் கட்சிகள் இல்லை என்ற ஏக்கமும் படைப்பாளனிடம் காணப்படுகிறது.
நிறைவாக,
தகடூர்த் தமிழ்க்கதிர் படைப்பில் பெண்ணுக்கு எதிராக செயல்படுவோரைக் கண்டிக்கின்றார். விஞ்ஞானம், இயற்கைப்பாதுகாப்பு, இயற்கையால் ஏற்பட்ட துயரச்சம்பவம் குறித்தும், உலகமயமான சூழலில் சுயஅடையாளங்களை உருவாக்குவதற்கு படைப்பாளன் முயன்றுள்ளமையால் அவர்தம் கவிதைகளில் தமிழர் குறித்தும் தமிழரின் பெருமை குறித்தும் பதிவுசெய்துள்ளமையை அறியமுடிகிறது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் ஏற்பட்ட துயரச்சம்பவம், ஆவலால் முன்னேற்றத்தை மையமிட்ட கட்சிகள் இல்லாத அவலநிலையைப் போக்க சமூகம் விழிப்புணர்வு பெறுதல் வேண்டும் என்ற சூழலில் தகடூர்த் தமிழ்க் கதிர் கவிதையைப் படைத்துள்ளார் என்பதனை அறியமுடிகிறது.
துணை நூற்பட்டியல்
1. ஆனந்தகுமார்.பா - இந்திய ஒப்பிலக்கியம், (சூசன் பாசுனெட்டை முன் வைத்து), மீனாட்சிப் புத்தகநிலையம், பதிப்பு.2003, மதுரை - 625 001.
2. சச்சிதானந்தன்.வை - மேலை இலக்கியத் திறனாய்வு வரலாறு, பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடு, பதிப்பு.1999, மதுரை - 625 021.
3. தகடூர்த்தமிழ்க்கதிர் - மழை ஒலி, தூவல் வெளியீடு, பதிப்பு.2010, 51, பூமி சமுத்திரம், கம்பைநல்லூர்-635 202.
4. ஸ்ரீசந்திரன் ஜெ - சீவக சிந்தாமணி மூலமும் தெளிவுரையும், மூ.ப.2006, வர்த்தமானன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.