பாயிரங்கள் மொழிகளின் ஆக்கத்திற்கு ஏற்ப காலந்தோறும் அமைப்பு, பொருள் உருப்பெருக்கம் என்ற தன்மையில் பெருகி வருகின்றன. மரபிலிருந்து மாற்றம் பெறாமல் உறுப்புக்களை ஏற்றம் பெறச்செய்கிறது. நன்னூல், தொல்காப்பியம் பாயிர இலக்கணத்தில் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் சிறப்புப் பெருவது போல் நூற்றொகை விளக்கத்தில் பொதுவியல் சிறப்பு பெருகிறது. பொதுவியல் கட்டமைப்பில், நன்னூலரின் பொதுப்பாயிரக் கட்டமைப்பினைப் போல் தொடக்கத்திலே அறிவு, நூல் ஆகியவற்றை சூத்திரமாகக் கட்டமைத்துள்ளார் ஆசிரியர். இது தொல்காப்பிய மரபிலிருந்து மாற்றம் பெற்று காணப்படுகிறது. ஏனெனில் தொல்காப்பியர் மரபியலில் நூலினைப் பற்றி கூறியுள்ளார். அவற்றை ஒப்பிடுவதோடு, அறிவு, நூல், நூலின்வகை அதற்கான பொது இலக்கணம் மற்ற நூல்களிலிருந்து ஆசிரியர் மாற்றம் பெறுவதற்கான காரணம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை.
நூல் - விளக்கம்
நூல் என்பதற்கு நூற்றல் (திரித்தல்) என்ற தொழிலாற் பிறந்த பஞ்சுநூல் என்று பொருள். தொல்காப்பியர் காலத்தில் ‘பாட்டுரைநூல்’ என்னும் நூற்பாவால் பாட்டு முதலியன நூல் என்ற பெயரைப் பெறாமல், இலக்கண நூலே, நூல் எனப் பெயற்பெற்றது என்று பொருளிடுகிறார். தொல்காப்பியர் இதனை,
“நூலெனப்படுவது நுவலுங் காலை
முதலு முடிவும் மாறுகோ னின்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி
நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே” (செய்.நூற்:159)
இளம்பூரணர் இதற்கு தொகையினும், வகையினும் காட்டி அகத்தே நின்று உரையோடு விரித்து பொருள் கூறுவது எனக் கூறுகிறார். அதனால் என்னவோ, ஆசிரியர் நூற்றொகை விளக்கம் எனும் தலைப்பில் தொகையாக்கி, வகை-தொகை செய்துள்ளார். வகை-தொகை இவை இரண்டிற்கும் அகமே முதன்மைப்படுவதால் அகத்திற்கு அறிவும் தேவையான ஒன்றாகிறது.
அறிவே நூலின் முதன்மை
உரையாசிரியர்களுக்கு நிகராக நூலின் பொதுப்பாயிரத்தை வகுக்கும் போது நூலுக்கு (நூல் - ஆக்கியோன்) அறிவுதான் முதன்மை கருவியாகத் திகழ்கிறது. அதனால் அறிவினை,
“அறிவினை யுணர்த்துங் கருவி நூலென்ப” (சூத்திரம்:1)
நூலானது அறியவேண்டியவற்றை அறிவிக்கும் ஒரு கருவியே! என்றும், நெறிமுறை தவறாமல் எவை ஒன்றையும் வரன்முறையோடு அருவிக்கக்கூடிய கருவி என்றும் கருவியை முதன்மைப்படுத்துகிறார் ஆசிரியர். அறிவு-நூல்-கருவி இவைகளை ஒன்றுபடுத்தி பேசும் சூழலில் சாத்திரமும் நூலுக்கு ஒரு பொருளுடையன என்று உயர்த்திக் கூறுகிறார். இதில் அறிவு – நூல் இவையிரண்டும் ஒன்றையொன்று சார்ந்தபோது சாத்திரமென்று இதனுக்கு பொருந்தும். அதே நேரத்தில் அறிவை வகைப்படுத்துதலில் பேரறிவு, சிற்றறிவு, புலனறிவு என்று மூவகைப்படுத்துகிறார்.
“அறிவுபே ரறிவுசிற் றறிபுல னறிவென
மூவகை யதனான் முறையே நூலும்
மதம் பொது கலையென வகைமூன்றாமே.” (சூத்:2)
தொல்காப்பியர், உயிர்பாகுபாட்டைப் பற்றிபேசும்போது அறிவை மையப்படுத்தியே உயிர்களை வகைப்படுத்துகிறார்.
“ஒன்று அறிவதுவே உற்று அறவதுவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே" (மர.நூற்.27)
இதில் ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு உயிர்களான மனிதர்கள் வரை என உயிர்களின் தோற்ற உருவாக்கத்தை முன்மொழிந்துள்ளார். அறிவு இன்ன தன்மையில் இந்தந்த இடங்களில், காலத்தில், சூழலில் ஏற்படும் என்று அனுகிக்க முடியாது செய்கின்ற செயற்பாடு (function)களுக்கு ஏற்ப அந்தந்த சூழல்களில்(context) வெளிப்பட்டு நிற்கும். அதே அறிவை முன்னோர்கள், வாசாசாத்தியம், கரியாசாத்தியம் என இருபிரிவாக வகையறை செய்கின்றனர்.
வாசாசாத்தியம் : வேதம்-4, அங்கம்-6, மீமாம்சம்-1, நியாயம்-1, புராணம்-1, தருமம்-1 , கிரியாசாத்தியம் : கலை என்றும் வகைப்படுத்தியுள்ளனர். வாசாசாத்தியத்தில் 1,4 வித்தைகளாகவும் எண்ணுகின்றனர். இதில் சிலர் ஆயர்வேதம் தனூர்வேதம், காந்தர்வவேதம், அர்த்தசாஸ்திரம் இவைகளை ஒருங்கினைத்து 18 வித்தைகளாகவும், கியாசாத்தியம் 64 கலையாகவும் வகுத்துக் கூறுகிறார்கள் என்று (ப.3,4)ல் கூறுகிறார். அறிவுகளை கூறுந்தோறும் அதனை வகைப்படுத்தியதோடு, பேரறிவு - என்பதானது நமக்கு எந்தநேரத்திலும் இயல்பாய் இருக்கக் கூடியதாகவும், பரம்பொருளுக்கு உரியது என்றும் ஏதேனும் இடையூறு, பிரச்சனைகள் ஏற்படும் காலங்களில் விவகார வழியாய் நிருபிக்க தக்கதன்று என்றும் பேரறிவுக்கு விளக்கம் தருகிறார்.
சிற்றறிவு நூலுக்கு முதன்மை
அறிவு நூலுக்கு முதன்மைப்படுவது போல் சிற்றறிவும் அதனை ஆராய்ந்து மதிப்பிடுவதற்கு முதன்மையாகின்றது.
“மரபுநிலை திரியா மாட்சிய வாகி
உரைபடு நூல்தாம் இருவகை நிலைய
முதலும் வழியுமென நுதலிய நெறியின” (மரபியல்:639)
நூலுக்கு ‘மரபு’இன்றியமையாகும். மரபுமாராமல்கூறப்படும் நூலானது இருவகைப்படும். முதல்நூல், வழிநூல்;. முதல்நூலானது பேச்சிலிருந்து எழுத்தாக்கம் பெற்று அறிவுடையதாகத் திகழ்வது. இதனை,
“வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூலாகும்.” (மர:640)
முதல்நூல் உருவாதற்கு தெளிவாக விளங்கக்கூடிய அறிவே தேவையாகின்றது. பின்பு வழிநூல் முதல்நூலை முன்னோடி மரபாகக் கொண்டு கடைபிடித்து வருகிறது.
“வழியெனப் படுவ ததன்வழித் தாகும்.” (மர:641)
நன்னூலார் நூலினை எடுத்துரைக்கும் போக்கானது மரபுநிலையிலிருந்து மாற்றம் பெற்று காணப்படுகிறது.
“நூலின் இயல்பே நுவலின் ஓரிரு
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்
நாற்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி
ஐயிரு குற்றமும் அகற்றியம் மாட்சியோடு
எண்ணான்கு உத்தியின் ஒத்ததுப் படலம்
என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே.” (பொது.பா.சூத்: 4)
என்று நூலின் தொடக்கத்தில் பாயிரத்திற்கு விளக்கம் தருவதோடு, நூலை வகைப்படுத்தும் போது முதல்நூல், வழிநூல், சார்புநூல் எனப்பிரிக்கிறார்.
“ வினையின் நீங்கிய விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்.” (சூத்:5)
அறிவுடைய உலக உயிர்களுக்கு முதன்மையாகத் தேவைப்படுவது முதல்நூலெனும் அறிவே என்றும்,
“முன்னோர் நூலின் முடிபொருங்கு ஒத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
அழியா மரபினது வழிநூல் ஆகும்.” (நூற்.7)
மரபு அழியாமல் காத்துவருவது வழிநூல், அதனை சார்புநூலுக்கு தேவையாகப் பயன்படுத்திக் கொள்வது,
“இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபு வேறுடையது புடைநூல் ஆகும்.” (நூற்.8)
சார்புநூலை ‘புடைநூல்’ என்றும் பெயரிடப்படுகிறது. இதனை புதுவகை நூலென்று கூறலாம். தொல்காப்பியர் மரபியலில் நூலுக்கு உரியவர்கள் அந்தணர்களே என்று கூறுவது அறிவுடையவர்களா? அல்லது அந்தணர்களையா?
“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங்காலை அந்தணர்க் குரியே” (மர: 615).
அதற்கடுத்த நிலையில் இன்னன்ன மக்களுக்குறிய தொழில்கள் என்று வகைப்படுத்திச் செல்கிறார் அவ்வாறு பார்க்குங்கால் இதனை மக்களுக்குறியதாகவே கருத முடிகிறது. நன்னூலர் கூறுகின்ற சார்புநூலைப் போல் உற்றதொகை நூல் எனக் கூறலாம் சுந்தரம்பிள்ளை வகுத்த நூற்றொகை விளக்கத்தினை, தொல்காப்பியர், நன்னூலர் கூறுகின்ற மரபுகளிலிருந்து மாறுபட்டு (மைந்தனும், மருமகனும் போல) அறவியலை கூறுவதாக பொதுநூலை வகுத்துள்ளார் ஆசிரியர். இந்நூல் சார்புநிலையாக்கத்;தினால் இலக்கணத்தின் தன்மையிலிருந்து மாற்றம் பெறாமல் புதியனவை வகுக்கிறது.
சொல்லாச்சித் திறன்
மூலநூலினை மையமாகக் கொண்டு பொதுவியலுக்கு இலக்கணங்கூறுங்கால்,
“உண்மை பொதுமை யொழுங்கென மூன்று
திண்மைசேர் அறிவின் செறிவே பொதுநூல்.” (சூத்:6)
முன்னமே கூறியது போல் சிற்றறிவு ஆராய்ந்து மதிப்பீடு செய்யக்கூடியது. சிற்றறிவினால் பொதுநூலை தலைமை தூக்கி பார்ப்பதோடு ஆராய்ந்து தனிப்படக் கூறிநிற்கவும் செய்கிறது. பொதுநூலில் உண்மை யாவது என்றுனரும் போது நூல் அறிவுகள் எவ்வளவு சோதித்தாலும் அழியாத மெய்மையுடையதாக உள்ளதை உள்ளவாறு விளக்கும்”(பக்.7). ‘பொதுமை’ காலமாற்றத்துக்கு ஏற்ப சூழல்பொருத்தத்தைக் கொண்டு மாறுபடக்கூடும். காலங்களில் பொருளின் பொதுமைத் தன்மை மாற்றமுறும், மூன்று காலங்களுக்கும் இப்பொதுமைத்தன்மை பொதுவாய் அமையும். ‘ஓழுங்கு’ பொதுவான உன்மையுள்ள பொருளை முறையாக எடுத்துக்கூறல் இதில் அடங்கும். “விலங்குகள் குட்டியிட்டு ஈனக்கூடியது” என ஒழுங்குபடுத்தல். உண்மை, பொதுமை, ஒழுங்கு எனக் கூறிச்செல்லும் சூழலில் ஒழுங்கிலக்கணத்தினை விரித்துச்செல்கின்ற பாங்கு மும்மூன்று என நூலினை தொகையாக்கம் செய்கின்றார். பொதுஇலக்கணத்திற்கு வழிநூலான தொல்காப்பியம், நன்னூல் நூலினை ஒத்துச்செல்வதோடு, அவற்றையும் பட்டியலிடுகிறார்.
“முதல்வழி சார்பென மூவகை பொதுநூல்” (சூத்: 11)
முதல்- வழி- சார்பு மூன்றினையும் பொதுவியல் இலக்கணத்தோடு பொருத்திப்பார்க்குங்கால் உண்மை வெளிப்படுதைக் காணலாம். முதல் - உண்மை: முதல்நூல் ஆக்கியோன் என்பது உண்மையை வெளிப்படுத்தும். உண்மைää பொய்மை இரண்டும் இதிலடங்கும். அழிவுற்ற நூலின் எச்சங்கள் இதில் வெளிப்பட்டுக் காணப்படும். இவை குறைவு படின் பொய்மைத்தன்மை வெளிப்பட்டுத் தோன்றும். எல்லா நூலுக்கும் தலையாய நூலாக அமையக்கூடும். வழிநூல் - பொதுமை: இதில் குறைவான கருத்தாக்கங்கள் எடுத்தாளப்படும். கருத்துக்கள் தெளிவுபெறுவதற்காகவே நிலைநிறுத்தப்படுகிறது. சார்புநூல் - ஒழுங்கு: செய்கின்ற செயற்பாடுகள் சரிவர நிகழ்வதற்காகவும் ஒழுங்கு நிலைகடைபிடிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. முதல்நூல் - எல்லாப்பொருள்களின் தோற்றத்தின் உருப்பெருக்கம் இருக்கும் என்ற இருக்கையை வெளிப்படுத்தி காட்டுகிறது.
“ இலங்கிடு மிருக்கையு மென்ணோடளவு
இருவகை இயக்கமு மைக்கிய முயக்கமு
முயிரு முளனுமென் றறுவகை முதனூல்” (சூத்:13)
முதல்நூல் அறுவகை நிலையில் வருவதாகும். ‘இருக்கை’ தத்துவார்த்தத்தின் வெளிப்பாடு தோற்றம் என்றும்,
“இருக்கை விளக்குநூல் தத்துவ மென்ப”(சூத்:14)
அதேநேரத்தில் சார்புநூலினை “மனிதர்களுடைய சுகவாழ்விற்குப் பற்பல சௌகாரியங்கள் அவசியப்பட்டனவாயும் இருப்பதால் ,மனிதர் செய்துவரும் ஒருவகைத்தொழிலுக்கு உபயோப்படும் படியாக சார்புநூல் அமையவேண்டுமென்கிறார்.(பக்.50)
“முதல்வழி நூற்களின் முடிபுணர்ந் தவையுடன்
கைவரும் வகையொரு செய்வினைக் கமைத்துத்
துணைசெயல் சார்பு நூற் றொழிலென மொழிப” (சூத்:32)
சார்புநூலுக்கு இலக்கணம் கூறப்படுகிறது. அதனைப் பலவழிகளில் பயன்படுத்தலாம் மென்கிறார்.
“தருக்கந் தருமஞ் சிற்ப நாவிகந்
தனுராயு ளாதியாச் சார்புநூல் பலவே” (சூத்:33).
சார்புநூலுக்கு ஆராய்வோரின் அரிவு மட்டுமே முன்னுதாரணமாகத் தேவைப்படும். உண்மையை அறிவது எல்லா நூலின் தொழிலாகும். உண்மை என்று வரும்போது தருக்கம், தருமம் இரண்டினை சார்பு படுத்தி மனிதர்கள் செய்யும் எத்தொழிலுக்கும் நூலறிவு தத்துவார்த்த நிலையில் பயன்படும் என்கிறார்.
கட்டமைப்பு மாற்றங்கள்
(தொல்காப்பியம்);
முதல்நூல்
வழிநூல் மட்டும்
(நன்னூல்)
முதல்நூல்
வழிநூல்
சார்புநூல்
(நூற்றொகைவிளக்கம்);
முதல்நூல் (6)
வழிநூல்
சார்புநூல் (பல)
இதில் தொல்காப்பியம் முதல்நூலாகக்கொண்டு நன்னூலை வழிநூலாகக் கடைப்பிடித்து நூற்தொகை செய்துள்ளார்.
முடிவுரை
அறிவு, நூல் ஆக்கத்தின் கருவியென குறியீடாகக் கொள்ளும் ஆசிரியர் அக்கருவி, உயிர்களின் அறிவுத்தன்மையை மழுங்கடிக்கச் செய்யாமல் கிளரிக்கொண்டே இருக்கிறது. கிளறிய அறிவை பேரறிவு, சிற்றறிவு புலனறிவு என தத்துவார்த்த நிலையில் உயிர்களின் பகுப்புக்கு ஏற்ப கூட்டி குறைத்து மதிப்பிட முடிகிறது. ஆசிரியர் தொல்காப்பியர் வகுத்த அறிவுப் பாகுபாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டு உளவியல், தத்துவார்த்தம் என்ற மனத்தாக்கத்திற்குள் உட்பொதிந்து செயல்படுவதைக் இந்நூலில் வாயிலாகக் கானமுடிகின்றது. நூலுக்கு பொதுஇலக்கணம் மரபுநிலையில் கடைபிடித்தாலும் முதல்- வழி- சார்பு என்ற கட்டமைப்பின் மையத்தை முதன்மையாகக் கொண்டு உண்மை- பொதுமை- ஒழுக்கம் இவைகள்- அதனோடு பொருந்தி வருவதோடு தனிமனித வாழ்வியலில் அவை பரிணமித்து வருவதையும் இந்நூலின் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.
பயன்பட்ட நூல்கள்
1. தொல்காப்பியம் (மூலமும் உரையும்) – தமிழண்ணல்.
2. நன்னூல் (மூலமும் உரையும்) – ஆறுமுகநாவலர்.
3. நூற்றொகைவிளக்கம் - மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை.
4. இந்திய இலக்கியச் சிற்பிகள் (மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை) – ந.வேலுசாமி