அவளின்
இடையினைப் பிடித்து
குடையினுள் இழுத்தான்
இடை விடாத மழை....
*முற்றத்தில் போட்ட
கோலங்களையெல்லாம்
மழை அழித்து விட்டது..
அடுத்த நாள்
மழை விட்ட பின்
மழையின் கோலம்
தெருவெங்கும்
நிலத்தின் ஆழத்திலிருந்து
மண்ணானது மழைக்காய்
காங்கிரீட் கதவைத்
தட்டி அழைக்கிறது..
நீர்கத்தியால்
நிலத்தைக் குத்தி
இறங்கப் பார்க்கிறது
நிலத்தில் மழை.
வலுவற்ற மழை
வழுக்கி விழுகிறது
கடலில்...
கொடியில் துவைத்து
காயப் போட்ட
என் ஆடைகளையெல்லாம்
என் அனுமதியின்றி
அணிந்து காற்றில்
ஆட்டம் போட்டு
காட்டுக் கத்தலுடன்
மண்ணில் புரண்டு
விளையாடிப்
புழுதியாக்கிச் சென்றது
மழை.
*தெருக் கூட்டுபவள்
வேலைக்குச் செல்ல
இயலவில்லையென
மழையைத் திட்டிக்
கொண்டிருந்தாள்.
அவளை கண்காணிக்கும்
பணியாளன் வேலைக்கு
வரவில்லையென
அவளைத் திட்டிக்
கொண்டிருந்தான்.
சில மணி நேரங்களில் மழை
தெருவை அழகாய்
சுத்தம் செய்திருந்தது.
*வழக்கம் போல்
பக்கத்து வீட்டில்
அவன் பாடிக்
கொண்டே இருந்தான்
அவனுள் ஏற்றிய
தண்ணீரின் குறிப்புக்களுடன்.
வெளியே மழையும்
தரையில் தனித்
தாள ஆவர்த்தனத்துடன்
பாடிக் கொண்டே
இருந்தது தண்ணீரில்
இசைக் குறிப்புகளோடு.
நான் யாருடையப்
பாட்டைக் கேட்பது?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.