பொங்கலென்று சொன்னாலே
பூரிப்பும் கூடவரும்
மங்கலங்கள் நிறையுமென்று
மனமதிலே தோன்றிவிடும்
சங்கடங்கள் போவதற்கும்
சந்தோசம் வருவதற்கும்
பொங்கலை நாம்வரவேற்று
புதுத்தெம்பு பெற்றிடுவோம் !
தைபிறந்தால் வழிபிறக்கும்
எனவெண்ணி மகிழுகிறோம்
கைகட்டி நின்றுவிடின்
வழியெமக்கு வந்திடுமா
தைபிறக்க முன்னாலே
தளர்வின்றி உழையுங்கள்
தைபிறக்கும் வேளையிலே
கைகொடுக்கும் தைமாதம் !
எதிர்காலம் மகிழ்வாக
அமையுமென எண்ணிடுவோம்
இறந்தகாலம் தனையெண்ணி
எமையிழக்கா திருந்திடுவோம்
நிகழ்கால நிலையினிலே
நிம்மதியை நாடிடுவோம்
வரும்பொங்கல் எங்களுக்கு
வளமாகும் எனநினைப்போம் !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.