அது ஒரு அளவான குடும்பம் - ஆனால்
அழகான குடும்பம் என்று சொல்வதற்கில்லை...
அது மூன்று தலைமுறைகள் வாழுகின்ற வீடு
மூவருக்கு அது கூடு -
வயதில் முதிர்ந்த இருவருக்கு அது கூண்டு...
முதிர்ந்த தலைமுறைக்கு மகனொருவன்
உண்டு - அவன் மனைவி என்னும்
மலரின் பின்னால் சுற்றுகின்ற மயக்க வண்டு...
இன்னும் சொன்னால் மனைவி
என்னும் சாட்டையால் சுற்றுகின்ற பம்பரம்
மணிக்கணக்கில் வேலை
செய்து தளர்ந்துவிடும் எந்திரம்...
அந்த வீட்டின் இல்லத்தரசி ஆணைகளால் ஆளுகிறாள் -
அடக்கி ஆளுகின்ற அதிகாரத்தால் நீளுகிறாள்...
மூன்றாம் தலைமுறையாய் மழலை
மொழி பேசும் மகவொன்றும் உண்டு -
அவன் வாசமும் பாசமும் வீசுகின்ற மலர்ச்செண்டு...
அந்த வீட்டின் இரு தூண்கள் வேம்போடு ஓர் அரசு...
அவர்கள் படும் இன்னல்களில் உருவானது என் முரசு...
வாழ்கையில் கடந்து வந்த பாதைகளை
முதிய நெஞ்சங்கள் அசை போடுகின்றன
விரக்கிதியின் விளிம்பில் நின்று
சோக இசை பாடுகின்றன...
இந்த மரங்களின் நுனிகளில்தான்
மலர்கள் முட்டிப் பிஞ்சாகின்றன - ஆனால்
கனிந்த மரம் காய்ந்த மரம் ஆகும்
போது அவை ஏன் நஞ்சாகின்றன?
வயதின் மூப்பு ஒருபுறத்தில்
உடல் நிலையை வாட்டுகிறது - உடன்
வாழ்வோர் படுத்தும் பாட்டில்
பஞ்சடைந்த விழிகளில் நீர் தலை நீட்டுகிறது...
விரைந்து நடந்த கால்கள் இன்று வலுவிழந்து நிற்கின்றன
ஊன்று கோல் ஒன்று வேண்டி விதியின் பாடம் கற்கின்றன...
மூப்பின் முழுச் செறிவு இருவர் முகத்திலும் இருக்கிறது -
அகத்தினில் இளமைதான் ஆனாலும் பலனெங்கே?
உழைத்து உழைத்துத் தேய்ந்து போனவர்கள் இன்னும் சாய்ந்து
போய்விட மாட்டார்களா என்றல்லவா எண்ணுகிறார்கள்?
"அத்தை" என்றால் மருமகள்...
அன்புடன் அழைத்தாலும் அதன் பின்னால்
அலைக்கழிப்பு - அவள் இட்ட பணி
தாமதித்தால் அடுத்த நொடி முகம் சுழிப்பு...
அவசரத்தில் அழைத்தான் மகன் "அப்பா
ரேசனுக்கு நேரமாச்சு" - அதே நேரம்
அவருக்கோ அடி வயிற்றில்
வந்த பசி மிகவும் தூரமாச்சு...
தன் மகனுக்கு முதிய அன்னை சோறிட்டது வெள்ளித் தட்டில்...
ஆனால் இன்று இவர்களுக்கு கஞ்சி சிரிக்கிறது ஈயத்தட்டில்...
சர்க்கரை நோயினால் சாப்பாட்டில் இனிப்பில்லை -
வயதான காரணத்தால் கேட்கின்ற
வார்த்தையிலும் இனிப்பில்லை...
ஒவ்வொரு மாதத்தின்
முதல் தேதியிலும் வாங்குகிறார் "பென்சன்"
ஆனால் மறு தேதி ஆகிவிட்டால்
எதுவும் ஆகாது "பங்க்சன்"
வேர்களைப் பகைத்துக்கொண்ட தண்டுகள் இங்கே களிக்கின்றன...
வேதனையில் வெந்த வேர்கள் தினம் கண்ணீரில் குளிக்கின்றன...
சுமைகளைத் தூக்கிச் சுமந்த பெற்றோர்கள்
இன்னும் குடையாய் இருக்கிறார்கள்...
சொல்லில் அடங்கா துயரம் அடக்கி
ஒரு விடையாய் இருக்கிறார்கள்...
பிரச்சினைகளின் பூதாகரம்... முதியவர்களின் போதாத காலம்...
அந்த வீட்டின் சிறுமழலை ஆங்கிலப்பள்ளியில் "அட்மிட்"
முதிர்ந்த குழந்தைகளோ அநாதை இல்லத்தில் "அட்மிட்"
அநாதை இல்லங்கள் ஆயிரங்கள் இருந்தாலும்...
அவரவர் இல்லம் போல் ஆகாது ஒருநாளும்...
"நாம் கைகோர்த்து நடக்க வீதிகள்
காத்திருக்கின்றன. பாப்புலராகி
உலகைச் சுற்றாவிட்டாலும் வேண்டாம்
பைத்தியமாகி ஊரைச்சுற்றலாம் வா" என்று
தன் மைத்தடங்கண்ணாளின் கைத்தடம்
பற்றிக் கிளம்பினார் முதியவர்....
கண்களில் நீர் மல்க கலங்கிடக் கேட்டான்
மகன் "அப்பா! இந்த தள்ளாத வயதில் பிரிந்து
போகிறீர்களே!"
மெதுவாய்ப் புன்னகைத்த முதியவர் சொன்னார்
"இது தள்ளாத வயதில்லையப்பா
எதுவும் வேண்டாம் என்று தள்ளும் வயது"
வேகமாய்க் கையசைத்துத் திரும்பிய
குழந்தை பத்திரப்படுத்தினான் ஈயத்தட்டை..
நீதியின் தேவனோ நிதானமாய்ப்
புரட்டினான் கால ஏட்டை...
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.