வெறி கொண்டு அலைகின்ற
நெறி பிறழ்ந்த கூட்டமதால்
கறை படியும் காரியங்கள்
கண் முன்னே நடக்கிறது
பொறி புலன்கள் அவரிடத்து
அழி என்றே சொல்லுவதால்
குடி மக்கள் என்னாளும்
கதி கலங்கிப் போகின்றார் !
மதம் என்னும் பெயராலே
மதம் ஏற்றி நிற்கின்றார்
சினம் என்னும் பேயதனை
சிந்தை கொள வைக்கின்றார்
இனம் என்னும் உணர்வுதனை
இருப்பு கொள்ள வைக்குமவர்
தினம் தீங்கு செய்வதிலே
திருப்தி உற்று திரிகின்றார் !
மொழியுணர்வை மத உணர்வை
இன உணர்வை அழிக்கின்றார்
பழிதீர்க்கும் வெறி உணர்வை
பாடம் என புகட்டுகிறார்
கொன்று விட்டால் சுவர்க்கமென
கொள்கை தனை பரப்புமவர்
கொன் றெழிக்கும் பாங்கினிலே
கோர நடம் ஆடுகிறார் !
வெறி கொண்டார் நெறிதிரும்ப
வேண்டி நிற்போம் இறைவனிடம்
நெறி பிறழ்து போவாரை
வழி மாற்ற முனைந்திடுவோம்
வள்ளுவனார் ஆழ் கருத்தை
உள்ள எல்லாம் பதித்திடுவோம்
நல் இணக்கம் சமாதானம்
நாட்டில் ஓங்கச் செய்திடுவோம் !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.