(ஒரு தாயின் நிகழ்காலத் துடிப்பும்,வருங்கால எதிர்பார்ப்பும்)
1.
கட்டிய கணவர்தம்,
மட்டிலா அன்பினால்,
கட்டிப் பொன் : கனியைப்பெற் றேன்! – வாரிக்
கட்டியே முத்தம்இட் டேன்! – சிறு
தொட்டிலில் போட்டவன்,
தூங்கிடும் போதிலே,
தூய்மையாம் தெய்வம்கண் டேன்! – ஒரு
தாய்மையின் உய்வில்நின் றேன்!
2.
எட்டியே பிடித்துமார்,
பற்றியே முகத்தினால்,
முட்டியே பருகக்கண் டேன்! – முகம்
மோதியே மகிழக்கண் டேன்! - தேன்
சொட்டென வாயினால்,
விட்டிடும் வீணிரால்,
சட்டையும் நனையக்கண் டேன்! – மனம்
சாலவே குளிரக்கண் டேன்!
3.
தத்தியே தவழ்ந்து பின்,
தளர்நடை போட்டு என்,
தாழ்தனைச் சுற்றிவந் தான் - தன்
தாயெனும் உரிமைகண் டான்! – நான்
சுத்திய சேலையில்,
தொத்தியே பாய்ந்தவன்,
முத்தென வாய்திறந் தான்!- தன்
சொத்தெனத் தமிழ் உதிர்ந் தான்!
4.
பள்ளியில் கற்றிடப்,
பத்திரம் பண்ணிநான்,
பாசமாய் அனுப்பிவைத் தேன்! – அவன்
படிப்பிலே உயிரைவைத் தேன்! – எந்தக்
கள்ளியின் நெஞ்சிலும்,
பள்ளிகொள்ளா தவன்,
கல்வியில் கவனம்வைத் தான்- கலையில்
கவுரவப் பட்டம்பெற் றான்!
5.
ஒருமகள் இல்லையே,
எனும்குறை தீர்த்திட,
மருமகள் வரவும்வேண் டும்! – மகன்
மாலையை இடவும்வேண் டும்! – நான்
அருமையாய் கொஞ்சிட,
அன்பான பேரனை,
உரிமையாய் தரவும்வேண் டும்! – மனம்
பெருமையில் நிலவவேண் டும்!
6.
வெள்ளிகள் நடுவிலோர்,
வெண்மதி போலவன்,
வெற்றிகள் காணவேண் டும்! – கண்டு
பெற்றநான் மகிழவேண் டும்! – உயிர்
கொள்ளிடக் கூற்றுவன்,
துள்ளியே வந்தபின்,
கொள்ளியை வைத்தால்போ தும்! – நெஞ்சில்
கோவிலாய்க் கொண்டால்போ தும்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.