1. இராவணன்களே….
அடிப்படையில் அனைவரும்
பத்துத்தலையோடுதான்
வடிவமைக்கப்படுகிறோம்
பத்துத்தலையில்
சிலவற்றைக் குறைத்துக்கொண்டவர்கள்
தலைமுறைக்குத்தேவைப்பட்டார்கள்
சிலவற்றில் சிரத்தையும்
சிலவற்றைத்தவிர்த்தும்
வாழ்ந்தவர்கள்
தலைவர்களானார்கள்
நமக்குத் தத்துவமானார்கள்
தத்துவம்தந்தார்கள்
தலைமுறைகள்
பேசவேண்டுமானால்
உங்கள் கவனம்
சில
தலைகளில் மட்டுமே
இராமராக
இராமனே இல்லை
ஏனெனில்
இராமனே இல்லை
தனக்கான
தமக்கான
பற்றுதலைத்தவிர்த்து
மானுடப் பற்றுதலைப் பற்றினால்
பற்றுதலால் வரும்வினை
பற்றாது
இதயங்களிலெல்லாம்
உங்களுக்கு
இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்
வன்முறைக்கு எதிரான
கோபம்
வறுமைக்கு எதிரான
வேகம்
உயிர்கள்மீதான
ஈரம்
ஒற்றுமைமீதான
மோகம்
தவிர்க்கக்கூடாத தலைகள்.
இந்தத்தலைகளால்
இவைபோல்
இன்னும்பல தலைகளால்
தலைக்கனம் கூடட்டும்
தளைகள் அகலட்டும்
ஓட்டைகளால் ஆன
புல்லாங்குழலாய்
இசைபட வாழ்வதிலே
இருக்கிறது எல்லாம்………
( 23.9.2018 இரவு எட்டுமணிக்கு ஆனந்தபவனில் டாக்டர் சபா இராசேந்திரன், கவிஞர் இக்பால் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது இராசேந்திரன் அவர்களின் உரையிலிருந்து பிறந்தது.)
2. அழகின் மறுபெயர்......
பிச்சினிக்காடு இளங்கோ
(11.9.2018)
ஆகாயத்தின் அருகில்
நட்சத்திரங்களை
அள்ளிக்குவிக்கும்
ஊற்று….
ஒளிமலர்களைப்
பருகிப்பார்த்து
துடிப்பின் லயம்
தட்ப வெப்ப நிலையாய்...
தண்ணீரிலும்
வெப்பம் தீண்டுவது;
ஆவியாய் முகம்காட்டுவது
உச்சரிப்பின் உச்சமாகும்
எதையும்
மறைக்காத தருணங்களில்
எல்லாம்
தானாய்க் கரைகிறது....
வைட்டமின் வாழ்க்கை
கைவசமாகிறபோது
அரிய தரிசனம்
கைகூடிவிடுகிறது
ஒருபாதி வையத்திற்கு
இப்படி
இறந்து பிறப்பது
இயல்பாகிவிடுகிறது
இன்னொரு பாதி
அறியப்படாத கோள்களாய்
சுற்றிவருகிறது
பகலின்
மறுபக்கத்தை
அழகின் மறுபெயர்
என்பதே அழகு
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.