1. தேடி அலைந்த பாதியில் கிடைத்த மீதி
அதிகமாகி விட்டது வயது
பாா்க்காதே அதையெல்லாம்!
உடம்பு இப்படி நடுங்குகிறது
மறைக்க முடியவில்லை
அவளுக்குத் தெரிந்தால்
எனது வீரமெலாம் போச்சு!
பயந்து ஒளிந்து அவளது
அழகு உதட்டைப் பாா்த்தேன்
அனுமதித்தால் ஒரு முத்தம்
எதற்கு கஞ்சத்தனம்
அவளது விருப்பம் வரை!
ஓடி எங்காவது ஒளிந்துகொள்
அவளுக்குத் தெரிந்துவிட்டது
மனதில் நீ எண்ணிய
முத்தம்,
கடந்து சென்றாள் என்னையும்
எனது எண்ணத்தையும்!
மூன்று ஆண்டுகள் அறிமுகம்
எனக்கும் அவளுக்கும்
பேசுவதற்குச் சொற்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு முறையும்
சென்றுகொண்டு இருக்கிறாள்
ஏமாற்றத்துடன்!
பேராசையின் பெருவிருப்போடு
அவளோடு கலந்த பாா்வை
உதடுகளில் ஈரம் இன்னும்
மறையவில்லை
நடுங்கும் உடலோடு நான்!
போய்க்கொண்டு இருக்கிறாள்
காத்திருக்காமல் எனது மனதையும்
அழைத்துக்கொண்டு!
2 . இருளொளிழகில் நிழலாடும் மனம்
பகலெல்லாம் வெட்கப்படும் இரவுப்பொழுதில்
இருந்தாலும் இல்லாததுபோல
உற்றுநோக்கலில் புலன்களின் பேரின்பம்
பயத்தின் ஊற்றுகள் கற்பனையில் பவனி
இருள் படைப்பின் முதல்படி
நீக்கமற நிறைந்துள்ள அற்புத ஆற்றல்
மனம் அடையத் துடிக்கும் பேருலகம் அது
பகல் காட்டிய காட்சிகள் கேட்பாறற்று
கடந்து சென்றால் மனம் மறுக்கும் இருள்
படைப்பின் மூல சக்தியாய்
பகையின் தொடக்கப் புள்ளியாய்
எல்லாம் ஒளி இருளில்
ஓசைகளின் கூட்டொலியில்
சொல்ல மறந்த சோகங்கள்
அமைதியின் ஓசையில்
காற்றின் கண்ணீர்ப் பனித்துளியாய்!
ரகசியங்கள் பேசிய மரங்களெல்லாம்
தூங்கிக்கொண்டிருக்கும் பகலில்
உற்றுப் பாருங்கள் இரவின் கண்
பிரகாசமான ஒளியில் ஒவ்வொன்றையும் நோக்கி
இரவின் தரிசனம் இறையின் தரிசனம்!
3. வெறுப்பின் வெப்பப்பூவில் உயிர் கேட்கும் தருணம்
கந்தகத்தின் நெடி
மூளையில் ஆணியாக
அரையப்பட்டுவிட்டது!
எத்திசையில் இருந்து
தோட்டாக்கள் இதயம்
பிளக்குமென்ற பயத்தின் உச்சத்தில்
புத்தகத்தின் பக்கங்கள்
வெறுமையில் திருப்பப்படுகின்றன!
யாருமற்ற பேருந்து நி்ன்று
சென்றாலும்
நிற்பதற்கே இடமில்லா பேருந்து
கடந்து சென்றாலும்
நடுங்கி தளர்கிறது பெண்ணுடல்!
பேரன்பின் வசந்த காலம்
என்று வருமோவென
இருந்து கிடப்பதைவிட
எழுந்து நில்! என்றேனும்
ஒருநாள் வசந்தத்தின் வாசம்
தட்டும் உன் அறைக்கதவை!!
4. மனிதனாகிய நான்
பேயாய் நடனம் ஆடிய
காமத்தின் எச்சங்களையெல்லாம்
எட்டி உதைத்தது
அவள் போட்ட ஒருகரண்டி
சோறும் உட்கலந்த அன்பும்!
கண்களில் நீர் வழிய
தொண்டைக்குழி அடைத்துக்கொள்ள
வெளிக்காட்ட மறுக்கும்
ஆணவத்தோடும்
காட்டிக் கொடுத்தக் கண்களோடும்
யுகம் யுகமாய் கடந்துவந்த
பாதையின் அடிச்சுவட்டில்
அவளின் புன்னகை!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.