1. சுவரற்ற வீட்டில் எனக்கான தனியறை
உடல்பூத்து மலர்ந்த நாளொன்றில்
காற்றின் இருத்தலைப் போல காமம்
வாடையின் காற்று உள்ளத்தை உருக்குலைக்க
இரவுகள் இங்கிதம் மறந்தொழிய
ஊற்றெடுக்கும் உள்ளொளியில் துணைத்தேடி
கனவுகளோடு நானும்
தொடுதலின் வெற்றுக் கற்பனைகளில்
பண்பாட்டுப்பாறையின் சுமையில்
நிறம் மாறிய ஓவியமாக மனம்
துணையின் தேவையில் கண்டடைந்த
வாழ்க்கையில் காத்திருக்கிறேன்
முதல் காமமுத்தத்திற்காக!
அவனோடு வாழ்ந்துவிட
துணிந்துவிட்ட துணிச்சலில் சிறு உடைப்பு
உதடுகளின் உரசலில் நாசியில்
மோதிச் சென்ற வாசனை
தன்னிலை இழந்த வயிறும் மனமும்
காமத்தின் தேவையில்
சேர்த்துவைத்த பொக்கிஷங்கள்
கேட்பாரற்றுக் குப்பைத்தொட்டியில்
முகச்சிரிப்பில் உடல் பூரிப்பில்
கடந்துசெல்லும் ஒவ்வொரு இரவிலும்
நகும் காலம்!
2. வரைந்த ஓவியத்தில் ஒழிந்துகொண்ட கோடுகள்
கடந்து சென்ற பார்வையில்
காற்றோடு உறவாடி காலம்காணா
வானோடு நிலைத்திருந்து
கண்களைக் கேட்டேன்
காட்டு அவனது இதயத்தை என்று!
காணும் பொருளெல்லாம் காணாமல்போக
காணாத பொருளைக் கண்டேன்
அவனெனும் இதயத்துள் - மாயை
மனதுக்குத் தெரியவில்லை காற்றாய்
கண்ணாமூச்சி ஆடுகிறது என்னோடு!
அவனுக்கும் தெரிந்துதான் இருக்கும்
என் தேவை, ஏற்க மறுக்கும் பாா்வையோடு
நகர்ந்து செல்லும் பயத்தோடு அவன்!
மரணத்தின் வாசனை சில நுகர்தல்
அவனோடு அலைவதைக்கண்டு
சொல்லாமல் கடந்து சென்ற அன்பு
பாறையின் ஓவியமாக
ஒவ்வொரு சந்திப்பிலும் அழகோடு அபிநயத்தது!
பத்தாண்டு கோடை கழிந்து
முதல் மழையில் பேருந்து நிறுத்தத்தில்
எதிரெதிர் திசையில் ....
அதே பாா்வையோடு அவன் சொன்ன
முதல் வாா்த்தை முட்டியது உதட்டில்
வழிந்த கண்ணீர்த்தூளியில் அவன்
அழ மறுக்கும் கண்களில் நான்
கொடுரமானது சமூகம்.
3. நினைவுகள்
கண்குளத்தில் விழுந்து மூச்சடங்கி போனேன்
இதயபிச்சியில் தேனலைந்து தொலைந்து போனேன்
பொன்தாள் மண்ணடியில் கிடந்துறங்கும் என்னை
நினைவிருக்க நியாயமில்லை
உன் வாசம் போகமறுக்கும்
நாசியில் புழுக்களோடு கதையாடல்.
மற என்கிறது நா கூசாமல்
பட்ட துன்பம் தெரியாது அதற்கு
புலம்பாதே வாயை மூடு என்கிறது
கோபத்தில் ஓங்கி அடித்தேன்
இரத்தக்கறையோடு அது
அவளாக மாறி
சிறு புன்னகை வந்துபோனது
மரணத்தைப்போல.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.