1. குறைகளை விட்டால் பகைமை இல்லை!
இன்பங்கள் மட்டும் நிரந்தரம் இல்லை
இன்னல்கள் காணா வாழ்வும் இல்லை
இழப்புகள் இல்லாத மனிதரும் இல்லை
இடைஞ்சல்கள் தராத உறவும் இல்லை
அன்பினை வேணடாத உயிரும் இல்லை
அழிவினைத் தந்திடாத போரும் இல்லை
அறிவினை மயக்காத விதியும் இல்லை
அரசைக் கெடுக்காத சதியும் இல்லை
வஞ்சகம் என்றும் வெல்வது இல்லை
வாய்மை இழிவைத் தந்திடல் இல்லை
வலியவர் என்றும் ஆள்வது இல்லை
வறியவர் என்றும் தாழ்வது இல்லை
அடக்கமாய் வாழ்தலால் கெடுதல் இல்லை
அடிமையாய் இருந்தால் உரிமை இல்லை
உண்மையாய் நடந்தால் பழியது இல்லை
உறவினை வெறுத்தால்உதவிகள் இல்லை
உள்ளதைச் சொன்னால் நன்மை இல்லை
உண்மையைச் சொன்னால் நட்பு இல்லை
நன்மையைச் செய்தால் நன்றி இல்லை
நடந்ததை மறந்தால் வேதனை இல்லை.
துரோகத்தை மறந்தால் துன்பம் இல்லை
துணிவோடு நடந்தால் துயரம் இல்லை
குற்றம் களைந்தால் குறைகள் இல்லை
குறைகளை விட்டால் பகைமை இல்லை
2. கொள்கை மாறாமல் வாழ்ந்திடு ஏமாளியாய்!
மதில்மேற் பூனையாய் இருப்பவர் பலர்
மக்கள் பலரின் நிலைப்பாடும் இதுவே
பூனைக்கு மணியை யாரும் கட்டட்டும்
பூசல்கள் வந்தால் ஒதுங்கியே நிற்போம்
புத்தி சாலிகள் இவர்கள் அன்றோ
பிழைக்கத் தெரிந்தோர் இவர்கள் தான்
பொதுச் சங்கங்கள் பலதிலும் உள்ளோர்
பொதுவாக இயங்கும் நிலையே இதுதான்
கூடியே முடிவுகளை எடுத்தே நாமும்
கூடிக் கொண்டாடிடல் பலம் அன்றோ
ஓடியாடி முறிந் தலைந்து ஓரிருவர்
ஒண்டியாய் வசையும் பெறுதல் சரியோ
வெற்றிகள் வந்தால் பங்குக்கு பலருண்டு
வேறு வகையில் தடங்கல்கள் ஏற்படின்
குற்றங்கள் கூற வரிசையில் பலருண்டு
குற்றம் சாட்டப்பட ஓர் ஏமாளியுமிருக்கும்
ஏதும் நன்மைகள் எம்மவர்க்குக் கிடைப்பின்
ஏமாளியா யிருத்தலில் பிழையேதும் இல்லை
கோமாளியாய் வாழும் பலர் போலன்றி
கொள்கை மாறாமல் வாழ்ந்திடு ஏமாளியாய்.
venthanar ilansei - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். -