- பாரதியாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றுவோம்! பெரும் பேறாய் போற்றுகின்றோம்! -
முண்டாசுக் கவிஞனே நீ
மூச்சுவிட்டால் கவிதை வரும்
தமிழ் வண்டாக நீயிருந்து
தமிழ் பரப்பி நின்றாயே
அமிழ் துண்டாலே வருகின்ற
அத்தனையும் வரும் என்று
தமிழ் உண்டுமே பார்க்கும்படி
தரணிக்கே உரைத்து நின்றாய்
ஏழ்மையிலே நீ இருந்தும்
இன் தமிழை முதலாக்கி
தோள் வலிமை காட்டிநின்று
துணிவுடனே உலவி வந்தாய்
வாய்மை கொண்டு நீயுரைத்த
வரமான வார்த்தை எல்லாம்
மக்களது மனம் உறையின்
வாழ்வு வளம் ஆகிடுமே
அடிமை எனும் மனப்பாங்கை
அழித்துவிட வேண்டும் என்றாய்
அல்லல் தரும் சாதியினை
தொல்லையென நீ மொழிந்தாய்
பெண்மைதனை சக்தி என்று
பெருங்குரலில் நீ மொழிந்தாய்
பெரும் புலவா உனையென்றும்
பெரும் பேறாய் போற்றுகின்றோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.