1. விருப்புடன் வந்திடுவீர்
பொது வாழ்வில் சேவைதனை
பொறுப்பாய் ஆற்ற வந்தோரே
சங்கங்கள் பலதிலின்று பல
சச்சரவுகள் இருப்ப தேனோ
மன்றங்கள மைத்து பணிதனை
மகிழ்வுடனே ஆற்ற வந்தோரே
மாறுபட்டு நின்றும்முள் மோதி
மல்லுக் கட்டி நிற்பதேனோ
கற்றவர் நாமென்று கூறியென்றும்
கர்வப்படும் நம்மவர் தம்முள்
பிரிந்துநின்று பிணங்கு கொண்டு
பிளவு கண்டு நிற்றலேனோ
சிந்தித்துப் பார்த்திடுவோமே சற்று
சீர்திருத்த முனைந்திடு வோமே
மனம்விட்டுப் பேசி நாமும்நம்
மாறுபாட்டை போக்கலா மன்றோ
நாடுவிட்டு நாடுவந்து நாமும்
நாய்படாப் பாடுபட்டு ழைத்தன்று
நாலுபேர்க்குதவ வென்றே விரும்பி
நாட்டமுடனி ணைந்தோம் நன்றே
கருத்துக்களில் வேறு கொண்டு
கடமை தனைத்தான் மறந்து
சேவைதனைத் தான் துறந்து
சோர்வு கொண்டு நிற்றல்நன்றோ
நாதியற்று இந்நாட்டில் நாமன்று
நாட்டிற்கும் வீட்டிற்கும் தானுழைத்து
பிள்ளைகளுக்கு பிழையின்றி நற்
படிப்பதனை கற்றிடவே வைத்தோம்
தமிழ்மொழியைப் பிள்ளைகள் கற்க
தமிழ்பள்ளிகள் பல வமைத்தோம்
கலைகளைக் கற்பிக்க வென
கலைக்கூடங்கள் தான மைத்தோம்
அல்லல்பட்டு நின்ற மனதிற்கு
ஆண்டவனை நினைந் துருகி
ஆறுதல் கண்டிடவே அன்று
ஆலயம் பல தொடங்கினோம்
கல்வி தந்தகல்லூரி அன்னைக்கு
கடமைதனை ஆற்றிட வெண்ணியே
பழைய மாணவர் சங்கங்கள்பல
பக்குவமாய் தொடங்கி வைத்தோம்
வாழ்ந்த நாட்டை வீட்டைத்துறந்து
வாலிபவயதினில் பிறநாடு வந்து
அன்னையூரின் பெருமை யுணர்ந்து
அமைத்தோம் கிராமச் சங்கங்கள்
இத்துனை இன்னல்கள் இடையேநம்
இருப்பினைத் தக்கவைத்த நாம்
ஆக்கிய மன்றங்கள் இவைதனை
அழித்திட வழிசெய்தல் தகுமோ
கட்டிய கூட்டை காத்தலெம்
கடமை களில் ஒன்றன்றோ
போட்டி பொறாமை யாலன்றோ
போரிலும் தோற்றழிந்து போனோம்
பொது நலச்சேவை யினிலே
சுயநலங்கள் இருத்தல் ஆகா
மனதினில் நல் லெண்ணம்
மன்றத்தின் வளர்ச்சிக்கது போதும்
வெறுப்புக் களை விட்டொழித்து
பொறுப்புக் களை யெடுத்து
சிறப்புக்கள் செய்திடவே நீவீர்
விருப்புடன் வந்திடு வீர்.
2. பத்மநாப ஐயருக்கென் நன்றிக்குரல் -
வாழ்ந்திடவே நூறாண்டு கண்டும்
தந்தையின்உரை நூலொன்றைத்
தேடித் தந்தவரை வாழ்த்துகின்றேன்
வந்தனை செய்தே போற்றுகின்றேன்
விந்தை மனிதரந்த பத்மநாபஐயரை
சிந்தையில் வைத்தே நானும்
சிரத்தையுடன் தேடி யலைந்தேன்
நொந்தவென் மனதினிற் கின்று
நூலக மைந்தனவர் பரிசளித்தார்
பவள வயதினையும் தாண்டியவர்
பெருந் தமிழ்ப்பணி புரிகின்றார்
எளிமை வாழ்விலுமப் பெரியவர்
ஏற்றமுடன் உயர்ந்தே நிற்கின்றார்
நூலக வலையமொன் றமைத்தே
நேர்த்தியாய் இயங்கிடும் நல்லவர்
ஈழத்து இலக்கிய வுலகினின்
ஈடிணையற்ற இலக்கிய ரசிகரவர்
கள்ளமில்லா அப்பிள்ளை யுள்ளம்
கருணைமிக்க அத் தமிழிதயம்
வாழவேண்டு மின்னும் பல்லாண்டு
வாழ்ந்திடவே நூறாண்டு கண்டும்.
3. தவிர்த்தல் நலமன்றோ!
தமக்கென வாழும் தன்னலமனிதர்
தகமை களற்ற சுயநலமனிதர்
நன்றியை மறந்திடும் வஞ்சகமனிதர்
நட்பினைத் தவிர்த்தல் நலமன்றோ
உண்மையை மறைத்திடும் பொய்யர்
உள்ளத்தில் வஞ்சனை கொண்டோர்
உதவிகள் பெற்றதை மறந்தோர்
உறவினைத் தவிர்த்தல் நலமன்றோ
நல்லவர்போல் நடித்திடும் பொய்யர்
நட்பெனப் பழகிக் கெடுத்திடுவோர்
தோத்திரம் போடும் பச்சோந்திகள்
தொடர்பைத் தவிர்த்தல் நலமன்றோ
உறவெனப் பழகியுதவி பெறுவர்
உதவிசெய்தோரை யுடனே மறப்பர்
உதட்டால் நட்பெனக் கூறிநிற்பர்
உறவினைத் தவிர்த்தல் நலமன்றோ
உண்மை நட்பெனவுரைத்து நிற்பர்
உயிரையே தருவோமெனக் கூறுவர்
பணமில்லாவிடில் பக்கமும் வாரார்
பழக்கத்தைத் தவிர்த்தல் நலமன்றோ
மனதினில் புளுக்கமும் பொய்யுமாய்
மதியினில் வஞ்சனை யுடையவராய்
நம்முடனுற வாடிடும் மனிதருடன்
நட்பினைத் தவிர்த்தல் நலமன்றோ.
4. எது வேண்டும்
தப்புகளைத் தட்டிக் கேட்டல் வேண்டும்
தவறுகளைச் சுட்டிக் காட்டல் வேண்டும்
திட்டங்களைத் திறமாய்த் தீட்டல் வேண்டும்
தேட்டங்களைச் சேமித்து வைத்தல் வேண்டும்
உண்மையை உரத்துக் கூறல் வேண்டும்
உத்தமரை உயர்த்திப் பேசல் வேண்டும்
உள்ளத்தில் உறுதியாய் இருத்தல் வேண்டும்
ஊக்கத்தைத் தொடர்ந்து பேணல் வேண்டும்.
நல்லதை நாளும் எண்ணல் வேண்டும்
நனமையை எல்லார்க்கும் செய்தல் வேண்டும்
நினைப்பதை நன்றே முடித்தல் வேண்டும்
நித்திரையை ஒழுங்காய்க் கொள்ளல் வேண்டும்
குடும்பத்துடன் கூடிக் குலவல் வேண்டும்
குதூகலமாய் இருக்க முயலல் வேண்டும்
பிள்ளைகளுடன் பிரியமாய் பழகல் வேண்டும்
பிளவுகளை மறந்தொன்றாய் வாழல் வேண்டும்
சுறுசுறுப்பாய் என்று மிருந்திடல் வேண்டும்
சுத்தமாய் சூழலைப் பேணிடல் வேண்டும்
சத்தியமே யென்றும் பேசிடல் வேண்டும்
சமூகத்திற் குதவிட முன்வரல் வேண்டும்.
மூட நம்பிக்கைகளைத் துறந்திடல் வேண்டும்
முயற்சியில் நம்பிக்கை கொண்டிடல் வேண்டும்
கெட்டவர்களை விலத்தி வைத்திடல் வேண்டும்
கொடுமை களைக் கண்டித்திடல் வேண்டும்
கோபத்தை யடக்கிடப் பழகிடல் வேண்டும்
குழப்ப வாதிகளைக் கவனியாமை வேண்டும்
சந்தர்ப்ப வாதிகளை யறிந்திட வேண்டும்
சலிப்பின்றிச் சேவை யாற்றிட வேண்டும்
பொதுச் சேவையில் பொதுநலன் வேண்டும்
புகழினை வேண்டா துழைத்திடல் வேண்டும்
செயற் குழுவினில் செயலாற்றிடல் வேண்டும்
சேவை களாற்றிட முன்வரல் வேண்டும்
ஒற்றுமையா யென்றும் வாழ்ந்திடல் வேண்டும்
ஓரினமாய் நின்றே குரலெழுப்பிடல் வேண்டும்
அடிமை வாழ்வினை ஒழித்திடல் வேண்டும்
அறவழியினிலே நின்று போராடிடல் வேண்டும்.
5. பொங்குதமிழுணர்வோடு பணியாற்றிடுவோம் வாரீர்
காற்றடித்தால் வீழ்ந்திடும்
-மரவிலை
கடுங்காற்றிற்கு முறிந்திடும்
-மரக்கிளை
புயலிற்குச் சாய்ந்திடும்
-மரம்பல
பெரும்சூறாவளிக்கும்நின்றிடும்
- மரம்சில
மரங்களில் சிலவகை
-கண்டீர்
மனிதரில் பலவகை
--காண்பீர்
உள்ளத்தினில்உண்மையாய்
-என்றும்
உறுதியுடன்உழைத்திடுவோம்
-வாரீர்
சங்கங்கள் பலவற்றை
-கண்டோம்
சிக்கல்கள் பலவற்றைக்
-கடந்தோம்
சொந்தங்கள்சிலவற்றை
-இழந்தோம்
சோர்வின்றி உண்மையாய்
-உழைப்போம்
உண்மைக்குஅழிவில்லை
-என்றும்
உறுதிக்குகுறைவில்லை
-என்றும்
நன்மைக்குபழியில்லை
-என்றும்
நற்றமிழிற்குநலிவில்லை
என்றுமே.
தூற்றுவார்தூற்றிடட்டும்
-சோராதீர்
தளர்வின்றிநாமியங்கிடுவோம்
-தயங்காதீர்
போற்றுவார்போற்றிடட்டும்
-மயங்காதீர்
பொங்குதமிழ்உணர்வினோடு
-பணியாற்றிடுவீர்
venthanar ilansei <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>