ஜே.ஜுமானா (புத்தளம் ) கவிதைகள்
1. ஒரு நிறுவல்
புனித ஸ்தலத்தில்
நீ நிற்கின்றாயென்றால்
நிச்சயமாக நீயொரு
பரிசுத்தவானே
ஆனால் யாரோ உன்னை
பாவியாக்கும் பொழுது
நீ எவ்வாறு
பரிசுத்தவானாவாய்..?
ஆகவே
நீ நிற்குமிடம்
புனித ஸ்தலமே அல்ல!
2. பிறந்த நாட்பரிசு
நான் அல்லாத
எனக்காகவும்
நீ அல்லாத
உனக்காகவும்
இது…
இன்று
பூவின்
பிறந்த நாள் -
அதனால் தான்
எங்கும்
வாசம் !
உன்
சோகங்களெல்லாம்
மறைய வேண்டும்..
ஆனந்தம் உன்
சொந்தமாக வேண்டும்.
உனது
ஆசைகள்
நிறைவேற வேண்டும்
நிறைவாக
நீ
வாழ வேண்டும்.
இன்று
பூவின்
பிறந்த நாள் -
எங்கும் வாசம்!
நீ நடந்து போகும்
சாலை எங்கும்
பூஞ்சோலை
உருவாகும்.
நீ –
வாசம் வீசும் மாலை
பாசம் காட்டும் பாவை
வண்ண வண்ண
வன்னங்களில்
ஓர் ஓவியம்
உனக்காய் !
உன்
கருணைக் கடலில்
மூழ்கினேன் -
என்னை நான்
கண்டு பிடித்தேன்.
இறுதி வரைக்கும்
அழியாத அன்பு –
இது உனக்கான
எனது பரிசு.
ஜே.ஜுனைட்
Jjunaid Jumana <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
சாபங்களைச் சுமப்பவன்
- - எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை) -
நேர் பார்வைக்குக் குறுக்கீடென
ஒரு வலிய திரை
ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று
பசப்பு வரிகளைக் கொண்ட
பாடல்களை இசைத்தபோதும்
வெறித்த பார்வையோடு தான்
துயருறுவதாகச் சொன்ன போதும்
பொய்யெனத் தோன்றவில்லை
ஏமாறியவளுக்கு
இருள் வனத்திலொரு ஒளியென
அவனைக் கண்டாள்
புகைப்படச் சட்டங்களுக்குள்ளிருந்து நீண்டன
வாழ்வு கொடுப்பதாகச் சொன்ன
அவனது கைகள்
ஒலிக் கோப்புகளிலிருந்து வழிந்தன
தூரத்திலிருந்து அவனளித்த உத்தரவாதங்கள்
அவளது கைகளைப் பிணைத்திருந்தது
அவனிட்ட மாயச் சங்கிலி
விலங்கிடப்பட்ட பறவையென
காலடியில் வீழ்ந்துகிடந்தாள்
சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தெறிந்தன
கூரிய நகங்களைக் கொண்ட
அவனது விரல்கள்
பின்னர் உச்சியில் ஏற்றிவிட்டு
விரைத்த ஒரு பொம்மையென விழச் செய்தான்
நேர்கோடென நட்சத்திரமொன்று வீழ்ந்த இரவில்
இருவரையும் நனைத்தது மழை
அவளது குருதியும் வேதனையின் ஓலமும்
தடயமழிந்து போயிற்று
என்றென்றைக்குமவளது
சாபங்களைச் சுமப்பவனானான் அவன்
M.RISHAN SHAREEF <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
மொழிச் சிற்பவியல்.
வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) -
செந்தமிழ் அருங்காவினில் நுழைந்து
அந்தமில்லா அருந் தமிழெடுத்து
செங்கரும்புச் சாறில் தோய்த்து
சங்கம் வளர்த்த தமிழது
பொங்கிப் பாயுது கணனியில்.
கரு வொன்றைக் கவிதையுள்
உருவாக்கி உலகிற்கோர்
உவப்பான தகவலை, செய்தியை
உருவேற்றும் நற் போதனையைத்
தருவதன்றோ இவ்விதைப்பு நிலை.
காவிடும் அனுபவம், கற்பனைகள்
பூவிரிக்கும் பல்லுணர்வுகள்
காவிரியாகும் நாளங்களால் மேவி
தாவித் தமிழ் குழைக்கும்.
பாவிரித்துப் பதிக்கும் எழுதுகோல்.
இலக்கணம் மீறியது புதுக் கவிதை.
இலக்கணமுடையது மரபுக் கவிதை.
வழக்கம் என்று ஒன்றும்
வழமை மாறலென்று ஒன்றும்
புழக்கமாகிறது செம்மை வரிகளாக.
கவிதை ஒரு இரகசியமல்ல.
தூவிடும் பெரும் பரகசியம்.
சொற்களின் அமைப்பில் அழகுச்
சிற்ப மாளிகைகள்;, கோபுரங்கள்;,
சித்திரச் சிலைகளாக்கல் அற்புதம்!
அற்புதம்! இன்பம்!
Vetha. langathilakam <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
சித்ராவின் கவிதைகள்!
1, அழகா ? அவஸ்தையா ?
பதினென் வயதில்
பார்த்து பார்த்து ரசித்த
கண்ணாடியில் தெரிந்த சுயபிம்பம்
அழகா ? அவஸ்தையா ?
கண்ணாடி முன்
நீ நின்று ,நின்று
நான் நின்றாலும் நீயே தெரிகிறாய் - என
அண்ணன் சீண்டியது நினைவில்..
இப்பிம்பம் அழகா ? அவஸ்தையா ?
.
பொங்கி விழும் அருவி ..
அருகில் பார்க்க ஆவல் ,
அண்ணனும் நண்பர்களும்
மலையடிவாரத்திற்கு போக ,
நீ போக கூடாதென்று
குரலொன்று தடுக்க ,எழுந்த கேள்வி
இப்பிம்பம் அழகா ? அவஸ்தையா ?
.
மலர்கொத்து என்றாலும்
கையில் பிடித்தபடியே,
எங்கு சென்றாலும்,
எந்த நேரத்திலும்
கீழே வைக்ககூடாதென
காப்பாற்ற படும் பெண்மை
அழகா ? அவஸ்தையா ?
2. தோப்பின் தொப்புள்கொடி
பாசக்கார பயபுள்ள
நெட்டுக்க வளர்ந்தாலும்
வேரை
மண்ணின் தொப்புள்கொடியென
பிடித்து
மரமாக நிற்கிறாய்
உன் ஒருக்கிளையின்
அடி தாங்குவார்களா
இருந்தாலும்
வெட்டுவார்கள்
வீழ்கிறாய்,
கொடிசுற்றிய
சிசுவாய் ..
பிளந்து போகிறாள்
மண் ..
மண்ணில் ஊர்ந்தது
வானில் பறந்தது
உயிர்தப்பிக்க
பரிணாம வளர்ச்சி
கொண்டு ...
நாகரிக வளர்ச்சி
விரும்பாத
ஆதிவாசியாக,
பரிணாம வளர்ச்சி
விரும்பாது
அசையா சொத்தானாய்
புலம் பெயர்க்கிறார்கள்
விலை பேசுகிறார்கள்
இவ்வளவுக்கும் இன்றும்
பசுமையாகவே சிரிக்கிறாய்
புத்தனுக்கும் போதனை
உன் சிரிப்பின் மடியில்..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பருவமெய்திய பின்
- மன்னார் அமுதன் -
பருவமெய்திய பின்தான்
மாறிப் போயிருந்தது
அப்பாவிற்கும் எனக்குமான
பிடித்தல்கள்
வாசலில் வரும் போதே
வீணாவா! வா வாவெனும்
அடுத்த வீட்டு மாமாவும்
அகிலாவின் அண்ணாவும்
போலிருக்கவில்லை அப்பா
மழை வரமுன்
குடையுடனும்..
தாமதித்தால்
பேருந்து நிலையத்திலும்..
முன்னும் பின்னுமாய் திரிய
காரணம் தேவைப்படுகிறது
அப்பாவுக்கு
துக்கம் தாழாமல்
அழுத ஒருபொழுதில்
ஆறுதல் கூறுவதாய்
அங்கம் தடவுகிறான்
அகிலாவின் அண்ணா
யாருக்கும் தெரியாமல்
மொட்டைமாடிக்கு வா
நிலா பார்க்கலாமென மாமா
இப்போதெல்லாம் பிடிக்கிறது
அப்பாவை
மன்னார் அமுதன் <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பலி பூச்சுற்றி இறக்கை பிணைத்து கால்கள்...
- உழவன் -
பலி
பூச்சுற்றி
இறக்கை பிணைத்து
கால்கள் பிடித்து
காற்றில் விசிறி
கழுத்தை வெட்டியெறியும்போது
கருவறைக்குள்ளிருக்கும் காளியம்மாள்
தன் உள்ளங்கைகளால்
கண்ணை மூடிக்கொண்டுதானிருப்பாள்!
http://tamiluzhavan.blogspot.com/20 11/07/blog-post.html