1. எங்கே போகிறது
- வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க். -
வாழ்வு முடிந்திட எம்மைத் தொடர்வதொரு
ஆழ்வெளி வாழ்வா! எங்கு போகிறோம்!
சூழ் நிலவும் சூனிய வெளியுமா!
வீழ் இறகாகி விண்ணில் வலமோ!
உடலின் ஆன்மா கடலாவி போன்றதோ!
சடலம் எரியும், சாசுவதம் ஆன்மாவோ!
உடலம் தேடி மறுபடி அடைக்கலமோ!
சுடல் என்பது ஆன்மாவிற் கில்லையோ!
உடலைப் பிரிய விரும்பாத ஆன்மா
கடலைத் திடலை எப்படித் தாண்டும்!
படலையாக மனமா! ஆன்மா நடலையிடுமே!
ஆன்ம விடுதலையொரு காத்திர விடுதலை
நேத்திர நீர் வடிய முறையான
சாத்திரப்படி கோத்திர வழிப்படி எம்
ஆத்தும சாந்திக்காய் ஏத்தும் அமைதிப்படி
ஆன்ம சேத்திர விடுதலை எனலாமோ!
2. ஆத்மா.
- வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க். -
ஆத்மா – ஆன்மா – உள் சக்தி
மகாத்மாவாகிறது நன்னடைத்தையோடு.
இந்திரியங்களிற்கு அப்பாற்பட்டு
உயிர், ஆவி ஊக்கமென்பார்.
நான், எனது, என்னுடையது
என்றவுணர்வு ஆத்மாவின் குணம்.
பெண்ணல்ல, ஆணல்ல, ஆத்மா
கண்ணாற் காணற்றது.
மதம் கடந்து, வயதற்று,
ஏழை, பணக்காரரற்று,
நிறமற்ற நித்தியம் ஆனது.
தனித்துவம், சூட்சுமமானது.
உடல் இயக்கக் காரணி.
உடைமை, ஊர், பெயர்,
உருவம்,குணம் அற்றது.
ஓரு வரையறையற்றது.
உயிரின் தத்துவம் ஆத்மா.
அறிய முடியாதது. எவரும்
அறியப் போதுமில்லை. யோசனை
அறிவென்பார். ஓன்றையும் பற்றாதது.
ஆத்ம பலம் – சிந்தனை
ஆத்ம ஞானம் – நேசம்- திருப்தி
ஆத்மார்த்த உறவென இணைப்பார்.
ஆத்மாவின்றேல் மனிதர் மரிப்பார்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்
மரமாகிப் பல்விருகமாகிப்
பறவையாய்ப் பாம்பாகி, எல்லாப்
பிறப்பும் பிறப்பதுவோ ஆத்மா!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.