1. கொலை
இன்று முழுதும் என்னைக் கொன்று கொண்டிருந்தேன்
மற்றவர்கள் என்னைக் கொல்வதையும் விட
நானே என்னைக் கொல்வது சுலபமாக இருக்கலாம்
அது நல்லதும் கூட என்றெண்ணினேன்
ஆனால் அது மிகக் கடினமாக இருந்தது.
ஒரு கொலையைச் செய்வதற்கும்
அதை நிராகரிப்பதற்குமாக
ஒரு பெருங்கோழையும் மகா வீரனும் தங்களுக்குள்
சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள்.
வீரனை வீரனல்லாதவன் தோற்கடித்தான் இறுதியில்
அதற்கிடையில் நான்கு எறும்புகள் என்னைக் கடித்துக்கொண்டிருந்தன
ஓ... அவை தங்களின் சக்திக்கு ஏற்ப என்னைக் கொல்ல முயன்றிருக்கலாம்.
அதற்குள் நான் எறும்புகளைக் கொன்று விட்டேன்.
எறும்புகளைக் கொன்றவன்
வீரனா வீரனல்லாதவனா?
என்று யோசித்துக் கொண்டிருக்கும் நான் இப்பொழுது
பிணமா இன்னும் கொல்லப்படாதிருப்பவனா?
00
2. பொழுது
அது ஒரு நடுப்பகல்தான்
ஆனால் அப்பொழுதுதான் சூரியன் உதித்துக் கொண்டிருந்தது
கடலிலிருந்து துள்ளித் துள்ளி வந்து கொண்டிருந்த
மீன்களிடம் வழி கேட்டான் நண்பன்
ஒரு மீன் சிரித்தது.
இன்னொன்று நகரத்துக்கு வழியா கடலுக்கு வழியா என்று கேட்டது.
மீன்களின் பேச்சொலியைக் கேட்ட நாய்கள்
ஓடி வந்து அங்கே கூடின
அது ஒரு நடன நிகழ்வாக மாறியிருந்ததை அப்பொழுது கவனித்தேன்.
இரவு முழுதும் உறங்காச் சூரியன் எங்களோடிருந்தது
கடலின் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்த மீன்களிடம்
சமுத்திர வழிகளை அறியத் துடித்துக் கொண்டிருந்தது இரவு.
நாங்கள் அதிகாலையில் விடைபெற்ற பொழுது
மாலை மங்கி, நிலவெழுந்தது
எல்லா நிகழ்ச்சிகளும் நடந்தது
எந்தப் பொழுதில் என்று தெரியாமல்
அன்றைய நாட்குறிப்பை
நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்த பகலில் எழுதினேன்.
00
3. அதனால்
அதனால் வண்ணத்துப் பூச்சிகள் துக்கமாகப் பறந்தன
அதனால் பாம்புகள் நகரத்துக்கு வந்தன
அதனால் விளக்கில் இருள் குடியிருந்தது
அதனால் அந்தக் கொலையை அவள் செய்ய மறுத்தாள்
அதனால் அந்த முத்தம் மறக்கப்படலாயிற்று
அதனால் இருவரும் அன்றைய உணவைப் பகிரமுடியாதிருந்தனர்
அதனால் பொதுக்கழிப்பறை சுத்தமாக இருந்தது
அதனால் படையதிகாரி தன்னைத்தானே சுட்டுக் கொன்றான்
அதனால் நீண்ட நேரமாகக் காத்துக் கொண்டிருந்தவள் திடீரெனத் தற்கொலை செய்து கொண்டாள்
அதனால் அது திரும்பிப் பெறப்பட்ட பரிசாகியது.
00
4. தேன்கூடு
கொன்ற பிணத்தை மொய்த்துக்கொண்டிருந்தன
வண்ணத்துப் பூச்சிகள்.
அந்தப் பிணத்திலிருந்து வடிந்து கொண்டிருந்தது தேன்.
ஊன்றிக் கவனித்தபோது,
அது ஒரு தேன்கூடாக மாறிக் கொண்டிருந்தது.
பிணத்தை அலங்கரிக்க வந்தவன்,
தேனை எடுத்துச் செல்லலாம் என்று எண்ணியபோது
அந்தக் கணமே துக்கத்தின் வேர்கள் அவனுடைய தொண்டையில் இறங்கின.
பிணத்தை அலங்கரிப்பதுன் தொழில்
தேனெடுக்க வாய்த்ததுன் அதிர்ஸ்ரம்
என்ற குரல்கள் அவனைத் தடுமாற வைத்தன.
தான் இப்பொழுது என்ன செய்யலாம் என்று
அந்தப் பிணத்திடம் கேட்டுக்கொண்டிருந்தான்.
கொல்லப்பட்ட பிணம் சட்டத்தின் பிடியிலிருந்து
எப்போது விடுபடும் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை
ஒரு தேன்கூடு எப்படிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது எதிர்காலத்தில்
கேள்வியாக எழுக்கூடிய சாத்தியமும் உண்டு.
5. என்றார்கள்
அதுதான் இனி வரப்போகும் ஒரு கடந்த காலமாக இருக்கும் என்றார்கள்
வாழ்க்கையைப் பற்றி தெரிந்திருக்காமல்
அதை ஒரு புண்ணாக்குக் கடையில் விற்றுக்கொண்டிருந்தான் கணித ஆசிரியன்
இறைச்சியில் எப்படித் தாவர எண்ணெயைப் பிரித்தெடுக்க முடியும் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்றது ஒரு சட்டவிதி.
மகிழ்ச்சிதான். ஆனால், அது ஒரு மாட்டைப்போல எங்கோ சோம்பிப் படுத்திருக்கிறதே எனச் சலித்துக்கொண்ட நீதிபதி -
சோம்பிப்படுத்திருக்கும் மகிழ்ச்சியைப் பிடித்து சிறையிலடையுங்கள் என்று தீர்ப்பளித்தார்.
பிறகு ஒருவரும் எதைப்பற்றியும் பேச விரும்பவில்லை
அதுதான் உறைபனியாகிற்று அங்கே
பெரும்பாறையானது இங்கே.
6. இப்படித்தான்
இந்தப் பாதையில்தான் பிரிந்து சென்றீர்கள்
நினைவைக் கொல்வது கடினம்
என்பதால் மறக்க முடியாதிருக்கிறது
இந்தப் பாதையையும் அதில் பதிந்திருந்த சுவடுகளையும்
நிகழ்ந்த பிரிவையும்
அப்போது சிந்திய கண்ணீரையும்
இதயத்தின் குருதியையும்
முடிவற்று நீண்ட விசும்பலையும்
கொழுந்து விட்டெரிந்த வன்மத்தையும்.
என்றாலும் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை
நினைவுகள் எப்போதும் மறக்க முடியாதெனினும்
மறைக்கக்கூடியன என்பதால்
கடந்து செல்லக் கூடியதாயிற்று எல்லாவற்றையும்.
எனினும் நிழலாக எங்கும் சிந்தியிருக்கின்றன
பிரிந்து செல்ல முன்
நீங்கள் சிரித்த சிரிப்பொலி
அங்கே பிறகு என்ன நடந்தது
என்று யாருக்கும் தெரியவில்லை
இப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன
எப்போதும் ஒவ்வொரு வழியிலும்
பிரிந்து செல்லும் நிகழ்ச்சிகள்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.