கூடையினை தலையேந்தும் வள்ளி
கொழுந்துதனை தளிர்விரலால் கிள்ளி
போடுகிற காரணத்தால்
பொருள்தேடும் தேசத்தார்
மூடர்களாய் நகைப்பாரே எள்ளி
கோடைஅனல் கொடுமின்னல் காற்று
கொட்டுமழை இடிக்குமிடி ஏற்று
மாடெனவே தினமுழைத்து
மண்வெட்டி யாய்தேய்ந்து
பாடுபட்டும் பட்டினியே ஈற்று
வெள்ளையர்கள் அந்நாளில் கட்டி
வீடென்று கொடுத்திட்ட பட்டி
வெள்ளத்தில் வள்ளமிட்டு
விளையாடும் குழந்தைக்கு
உள்ளங்கை தனில்வந்த தொட்டி
காடுமலை மேடுகளில் அன்று
கடல்தாண்டி வந்தெம்மோர் ஒன்று
கூடியங்கு நாட்டிட்ட
கோப்பியுடன் தேயிலையால்
நாடாகி மிளிர்கிறதே இன்றும்
நாட்டிட்ட தேயிலையால் உயர்ந்து
நாகரீக மடைந்ததுமே எழுந்து
போட்டிட்ட சட்டங்கள்
பொல்லாத இடியாக
கூடிட்ட குயிலானார் பயந்து
இயற்கைஎழில் சிந்துகின்ற மலைகள்
இதயத்தை ஈர்த்தெடுக்கும் கலைகள்
வியக்கவைக்கும் மலைநாட்டின்
விழுதாகி நிற்பவரோ
சுயமிழந்து உருக்குலையும் சிலைகள்
அடிமைகளை உருவாக்கும் தேசம்
அடிப்படைகள் மறுக்கின்ற மோசம்
படிப்படியாய் மேலோங்கி
பகுத்தறியா விலங்காக்கி
மிடிமைதனை பரம்பரைக்கும் பூசும்
உடுப்பதற்கு உடையிழந்த இவரோ
உழைத்ததுதான் செய்திட்டத் தவறோ?
கொடுப்பதற்கு மறுக்கின்ற
கொடும்பாவிக் கூட்டங்களைத்
தடுப்பதற்குத் தானிங்கு எவரோ?
உழைப்பதனை உறிஞ்சிகுடித் தோரே
உயர்ந்திட்ட ஒய்யார ஊரே
இழைத்திட்ட கொடுமைகள்
இனிமேலும் தொடராமல்
பிழைக்கத்தான் வழிகாட்டு வீரே!
(இலங்கை வாழ் தேயிலைத் தொழிலாளர்கள் நிலை)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.