மலையுச்சிப் பூவின் தியானம்
- எம்.ரிஷான் ஷெரீப் -
கைக்குழந்தை உள்ளங்கையென மொட்டவிழ்கிறது
பறிக்கப்படாத கனிகள் வீழ்ந்தழியும் மலைத் தரைகள்
வனப்பு மிக்க காடுகளைச் சுமக்கின்றன தம்மில் அவைஅந்திப் பறவைகள்
கறுப்புத் திட்டுகளாகப் பறந்து மறையும்
மாலை நேரங்களில் வனங்கள் என்ன செய்யும்
உன் பாடலெனப் பொழிந்திடும் மழை பார்
ஒவ்வொரு துளிகளிலும் உறைந்திருக்கக் கூடும்
தாண்டிப் பறந்த பட்சி இறகுகளின் ரேகைகள்
நீ மிதந்திருக்கிறாய் ஒரு வெண்குதிரையின் மீது
யாரும் அகற்றிடா ஆதிச் சருகுகள் மூடி மறைத்திருக்கும்
தடித்த வேர்கள் பிடித்து வைத்திருக்கும்
கருங்கற் குகைகளிடை வழி
உனது பயணப் பாதையல்ல
நீ பறித்து வரச் சென்ற மலையுச்சிப் பூவின் தியானம்
கடவுளுக்கானது
காட்டின் விரூபங்களை மறைக்கும் இராப் பொழுதுகளில்
உதிக்கும்
மலையுச்சிப் பூவின் சோர்ந்திடாத் திமிர்
உனது இலக்குகளில்
பகலைக் கரைத்த ஈரம் சொட்ட அழுத சூரியன்
எங்கோ தொலைந்துபோகும் இத் தருணத்தில்
தாமதியாதே
வனத்தின் வேர்களில் உனது புரவிகள் சற்று ஓயட்டும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அம்மா
- இரா. சீனிவாசன், தைவான் -
முன்னை செய்த நற்றவத்தால்
யாம் பெற்றோம்
உன்னை எம்
அன்னை என!
ஈரைந்து திங்கள்
இரத்தக் குகையினில்
இருத்தியிருக்கையில்
பெருந்துயர் கொடுத்தேன்
பேருவகை அடைந்தாய்!
உட்கொண்ட உணவை
உமிழச் செய்தேன் -
உளமாற களித்தாய்!
இனிப்பைக் கசப்பாக்கி
புளிப்பைப் புனிதமாக்கி
உவர்ப்பை உனதாக்கினேன் -
உவந்து நீ சுவைத்திட்டாய்!
இரவை பகலாக்கி
பகலை இரவாக்கி
தவிப்பை -
உந்தன் சொந்தமாக்கினேன்
ஆனாலும்
எந்தன் முகம் காண -
அனைத்தையும்
பெருந்தவமாய்
களித்து நீ கழித்தாயன்றோ?
உதைத்த கால்களையும்
உள்ளங்கைகளையும் - உன்
உதட்டில் இருத்தி
உள்ளம் குளிர்ந்திட
புதைத்திட்ட - உம்
கனவுகள் - எமக்கு
ஒருபோதும்
புரியாமல் இருந்ததில்லை.
வாழ்க்கையெனும்
இல்லாத நாடகத்தில்
சொல்லாத வேடங்களில்
முப்போதும் நடிக்கின்றாய் - ஆனால்
எப்போதும்
அரிதாரம் அற்ற வேடம்
அன்னை என்ற வேடமன்றோ?
உன்னைக் கொண்டாட
அன்னையர் தினம் என்ற
ஒரு தினம் போதாதே?
அனுதினமும் அர்ச்சித்தாலும்
அடுத்த பிறவியிலும்
எம் கடன் தீராதே?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இதுதான் அரசாங்கமோ
- மெய்யன் நடராஜ் (இலங்கை) -
வேரானது விழுதாவதும் விழுதானது பழுதாவதும்
காரானது மழையாவதும் மழையாலிம் மண்வாழ்வதும்
சீரானது சிதைவாவதும் சிதைவானது சிறப்பாவதும்
தீராதது தீர்வாவதும் தெய்வமானது தருவதாகுமே!
(இ)ராவானது பகலாவதும் பகலானது இரவாவதும்
தீவானது கடலாவதும் கடலாலொரு தீவாவதும்
பூவானது காயாவதும் காயானது கனியாவதும்
ஏவாதொரு செயலாவது இயற்கையின் வரமாகுமே!
இல்லாதவன் தினமேங்கவும் இருள்வாழ்வினிற் திண்டாடவும்
எல்லாவகை அல்லல்களும் இன்பங்களைத் துண்டாடவும்
கல்லாதவர் கண்ணீருமே கற்றோர்களால் காசாகியே
பொல்லாதவர் புகழ்சேர்த்திட புவிவாழ்பவர் துதிபாடுவதோ?
தாயானது மலடாவதும் மலடானது தாயாவதும்
பேயாதது மழையாவதும் பிரிவானது உறவாவதும்
தேயாநிலை நிலவாகியே தினந்தோருமே ஒளிவீசியே
ஓயாநிலை அரசாண்டிட உருவானது அரசாங்கமோ?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- வே.ம.அருச்சுணன் – மலேசியா -
தன்மானக் கவிஞருள்
பொன்னான கவிஞன் பொன்.நாவலன்
சொந்தங்களைவிட சந்தங்களை
அதிகம் நேசித்தவன்
சந்தக்கவிஞராய் முகம் காட்டியவன்
எழுச்சியையும் மறுமலர்ச்சியையும்
தொய்வில்லாமல் தெளித்தவன்.................!
சுரதாவை வாசித்தவன்
பாரதிதாசனாய் உருவெடுத்தவன்
இனமானக் கவிஞனாய்
ஒற்றுமையில் மக்கள் வாழ்ந்திட
நெருப்பாய்க் கவிதைகள் தந்தவன்...............!
நோய் வந்த போதும்
உந்தன் எழுத்துப் பயணம்
ஒருபோதும் நின்றதில்லை
மேடையில் கவிமுழக்கம்
கடுகளவும் குறைந்ததில்லை
ஏடுகளில் எழுதுவதும்
வானொலியில் கவி பாடுவதும்
நிற்கவில்லை............!
கிழவனையும் வாலிபனாக்கும்
உந்தன் கவிதைகள்
சமூகத்தை வழிநடத்தும்
எதிர்காலம் சிறக்கும் வரை
போராடச் செய்யும்................!
இனிய சொல்லும் அடக்கமும்
மனிதரை மதிக்கும் பண்பும்
உனது அடையாளங்கள்
எளிமையான வாழ்வும்
இன்னாது கூறலும் உன்னை
பண்பட்ட மனிதனாய்க் கண்டோம்..........!
வீண் சவடால் என்றும்
கனவிலும் இல்லை
தோட்டத்தில் பிறந்து
ஏழ்மையில் உழன்றும்
நெறிதவறா உத்தமர் நீயன்றோ
வாழ்ந்த காலம் சிறிதே
சாதனைகளோ பெரிது..........!
நூல்கள் பலவும் வெற்றி
முழக்கமிட வெளீயீடு கண்டவன்
சென்ற பின்னும் உன்
பெயரைத் தவறாமல் சொல்லும்
இந்த இலக்கியக் குழந்தைகள்
வியக்கும் வண்ணம் உலகில்
புகழைப் பரப்பும் பொன்.நாவலனே
சாதிக்கப் பிறந்தவன்
சாதனைகள் புரிந்திட்டே
நெடும் பயணம் சென்றுவிட்டீர்
நா பலம் கொண்டவனே
மனித மனங்களில் என்றும்
நிலையாய் உயர்ந்தே நிற்பாய்
மலேசிய இலக்கிய உலகம்
ஆழமாய் நினைத்து மகிழும்
வாழ்வீர் பல்லாண்டு.............!
email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பணத் துடிப்பு
- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , இலங்கை -
கூரையிலே ஆயிரங்கண்! கொளுத்தும் வெயில்
குடியிருக்கும் உள் வீட்டில்! மாரி க் காலம்
வாடையிலே உடலுறைந்து போகும் !எங்கள்
வாழ்க்கையெலாம் துன்பமாய் மாறிப் போகும் !
பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்!
பசியாற உண்பதற்கு உணவு மில்லை !
நோயில்லா வாழ்வெமக்கு அமைய வில்லை
நொடிப் போதும் எமையின்பம் தழுவவில்லை!
கால்வயிற்றுக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்
கருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்
ஏழ்மை நிலை தா னெமக்குத் தோழ ராகும் !
இம்மையிலே நமது இடம் நரகமாகும் !
பசி வரவே மாத்திரைகள் உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் !தனவந் தர்கள்
வசிக்கின்ற வீட்டினிலே நாய்க ளுண்ணும்
வகையான உணவுகளும் எமக் கில்லை !
பெற்றெடுத்த செல்வரினைக் கல்வி என்னும்
பெருங் கடலில் நீந்தவைத்துக் கரையில் சேர்க்க
பற்றெமக்கு மிகவுண்டு !பணத் துடிப்பு
பகையாகிப் போனதனால் வீணில் வாழ்ந்தோம் !
இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன்படைத்தான் இறையவனும் ?உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கின்றான் நம்மை விட்டு ?
நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறி யில்லா மாந்தர்கள் புரியும் சதியில்
இத்தரையில் கிடந்து நாம் உழ வர் எல்லாம்,
இனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம் !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.