ஈழத்தமிழர்களும், சுய மீளாய்வும்
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எஸ்.சபாலிங்கத்துக்கு முக்கியமானதொரு பங்குண்டு. ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆரம்பத்தில் தன்னைப் பிணைத்துக்கொண்டவர் இவர். எழுபதுகளின் ஆரம்பத்தில் கட்டுபெத்தை பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவனாகவிருந்த சமயம் பொன்னுத்துரை சத்தியசீலன் போன்றவர்களுடன் இணைந்து தமிழ் மாணவர் பேரவை அமைப்பு உருவாகக் காரணமானவர்களிலொருவர். விடுதலைப் புலிகளின் அமைப்பு உருவான காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனுடன் நெருங்கிப் பழகியவர்களிலொருவர். இவற்றின் காரணமாக இலங்கைக் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைகளுக்குப் புகழ்பெற்று விளங்கிய இலங்கைப் புலனாய்வுத்துறையினரின் 4ஆம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாகியவர். பின்னர் அரசியல் அகதியாகப் புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வந்த சமயத்திலும் பதிப்புத் துறை, இலக்கிய அமர்வுகளை நடாத்துவதிலும் தன் கவனத்தைத் திருப்பினார். தனது ஆசியான் பதிப்பகம் மூலம் ஈழத்துக் கவிஞர்களான வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், அருந்ததி, செல்வம், சோலைக்கிளி ஆகியோரின் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். கோவிந்தனின் 'புதியதோர் உலகம்', 'யாழ்ப்பாண வைபவமாலை', 'புத்தளம் முஸ்லீம் மக்கள் வரலாறு', 'எமர்ஜென்சி 58' மற்றும் தராகியின் 'Eluding Peace' ஆகிய நூல்களை வெளியிட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்புக்களின் ஆரம்பகர்த்தாக்களிலொருவராகவும் இவர் கருதப்படுகின்றார்.