நண்பர்களே, இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை நடத்திவரும் தமிழர் விரோத போக்கின் உச்சத்தை இன்று தொட்டிருக்கிறது. டெசோ மாநாடு தொடர்பான ஆகஸ்ட் 9, 2012ல், டெசோ மாநாட்டு செயலருக்கு அது அனுப்பியிருக்கும் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறது: This Ministry has no objection from political angle, for the proposed International Conference, with foreign participants, with the proviso that “Eelam” may be dropped from the title of the conference, and subject to clearance of Ministry of Home Affairs and other competent authorities. (மேலும் படிக்க: http://www.tamilnet.com/art.html?catid=79&artid=35450)
ஈழம் என்ற சொல்லை தமிழ்நாட்டில் பயன்படு்த்தக்கூடாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருப்பது தமிழர்களின் இறையாண்மையை மீறிய ஒரு செயலாகும். இது மிகமோசமான கருத்துரிமை மீறலும் ஜனநாயக அரசியல் மீது விழந்து அடியுமாகும். இதுவரை இந்திய அரசு நடத்திவந்த தமிழர் விரோத அரசியலுக்கு இந்த கடிதம் மிகமுக்கியமான ஒரு ஆதாரமும் ஆகும்.
டெசோ மாநாட்டைவிட இந்த கடிதமே இப்போது பிரதானமாக உணரப்பட்டு விவாதிக்கப்படவேண்டிய ஒன்றாகும். தமிழக மக்கள் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதிக்கும் அளவுக்குச் செல்கிறது என்றால், இதை விட ஒரு இழிவை நாம் அடையப்போவதில்லை. சிங்கள அரசே ஈழம் என்ற சொல்லை பல தடவை கையாண்டிருக்கிறது.
இதற்கு கருணாநிதி எப்படி எதிர்வினை புரிவார் என்பதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. கடந்த 2009 தேர்தலிலேயே அவர்கள் ஈழத்தமிழர் பாதுகாப்பு என்பதை இலங்கைத்தமிழர் பாதுகாப்பு என்று மாற்றியவர்கள்தான். நான் இலங்கையன், ஈழத்தமிழன் அல்ல என்றுகூறக்கூடிய ஈழத்தமிழர்களும்தான் இருக்கிறார்கள். எனவே கருணாக்களிடமிருந்து நாம் வேறு எதையும் எதிர்பார்க்கவேண்டியதில்லை.
ஆனால் இந்தச் சொல்லுக்கு பின்னால் உள்ள இந்திய அரசின் அரசியலை அம்பலப்படுத்துவதற்கு நாம் இப்போது முதன்மை தரவேண்டும். இதைச் செய்யத்தவறினால் அது ஈழத் தமிழர்களுக்கு நாம் இழைக்கும் துரோகம் மட்டுமல்ல, தமிழகத் தமிழர்களுக்கும் நாம் இழைக்கும் துரோகமாகவே அது முடியும்.
அவரவர் அவரவருக்கு வாய்க்கும் முறையில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தாகவேண்டும். எந்த ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கையும் அந்நாட்டு மக்களின் அரசியல் உரிமைகளுக்கு உட்பட்டதே. தமிழகம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும் நிலையில், ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழகத்தின் நலன்களுக்கும் விழைவுகளுக்கும் புறம்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடந்துகொள்வது முறையும் அன்று ஜனநாயகமும் அன்று.
தமிழர்களின் இறையாண்மையைக் காக்கவேண்டிய இத்தருணத்தில் நாம் ஒன்றுபடுவோம்.
தோழமையுடன்
செ.ச.செந்தில்நாதன்
ஆழி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.