- இச்சிறுகதை அமரர் எழுத்தாளர் குகதாசன் இதழாசிரியராகவிருந்த சமயம் வெளியான யாழ் இந்துக்கல்லூரிச் (கனடா) சங்கம் வெளியிட்ட 'கலையரசி' மலருக்காக எழுதப்பட்ட சிறுகதை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. சிறுகதைகள்.காம் இணையத்தளத்திலும் இடம் பெற்றுள்ளது.-
யன்னலினூடு தெரிந்த அதிகாலை வானத்தைப் பார்த்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். மெல்லிய இருட்போர்வையின் அரவணைப்பில் சுகம் கண்டுகொண்டிருந்த பூமிப் பெண்ணிற்கு உறக்கத்தை விட்டெழுவதற்கு இன்னும் மனம் வராமல் அப்படியே படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருப்பது போல் பட்டது. விடிவெள்ளி பிரகாசத்துடன் விடிவை கட்டியம் கூறி வரவேற்றுக் கொண்டிருந்தது. ஊரில் இருந்த மட்டும் அவரிற்கு மிகவும் பிடித்தமானவை அதிகாலையில் எழுந்து கல்லுண்டாய் வெளியினூடாக நடந்து வருவதும், விடிவெள்ளியின் அழகில் மெய் மறப்பதும் தான்."மாஸ்ட்டர், மாஸ்ட்டர்" என்று எவ்வளவு பெரிய பெருமை அவரிற்கு."படிப்பிற்கு மாஸ்ட்டரின் பிள்ளைகளைக் கேட்டுத்தான்" என்று கதைப்பார்கள்.'வர மாட்டேன், வர மாட்டேன்' என்றிருந்தவரை மகன் தான் வற்புறுத்தி கனடா வரவழைத்திருந்தான். வந்து ஒரு வருடத்திற்குள்ளேயே அவரிற்கு வாழ்க்கை போதும் போதுமென்றாகி விட்டது. நான்கு சுவர்களிற்குள்ளேயே வாழக்கை அதிகமாகக் கழிகின்றது. இயற்கையை இரசித்து ஆனந்தமாகப் பறந்து கொண்டிருந்த பறவையைப் பிடித்துக் கூட்டினுள் அடைத்து வைத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அவர் நிலை.
ஊரில் நிலவிய அந்த சமூக வாழ்வியற் தொடர்புகள் இங்கு அற்றுத் தான் போய் விட்டன. அங்கு...பொழுது விடிவதிலும் ஒரு அழகு. பொழுது சாய்வதிலும் ஒரு அழகு.இரவெல்லாம் நட்சத்திரப் படுதாவாகக் காட்சியளிக்கும் விண்ணைப் பார்ப்பதிலுள்ள இன்பத்தைப் போன்றதொரு இன்பமுண்டோ? மின்மினிப் பூச்சிகளும் இரவுக்கால நத்துக்களின் விட்டு விட்டுக் கேட்கும் ஓசைகளும் இன்னும் காதில் கேட்கின்றன. மழை பெய்வதென்றால் சுப்ரமணிய வாத்தியாரிற்கு மிகவும் பிடித்ததொரு நிகழ்வு. 'திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தோம்' போடுமந்த மழையிருக்கிறதே...'வெட்டியிடிக்கும் மின்னலும்' 'கொட்டியிடிக்கும் மேகமும்' 'விண்ணைக் குடையும் காற்றும்'...வானமே கரை புரண்டு பெய்யும் அந்த மழையின் அழகே தனி அழகு. இங்கு பொழுது புலர்வதும் தெரிவதில்லை. பொழுது சாய்வதும் தெரிவதில்லை. மழை பெய்வதும் இன்பத்தினைத் தருவதில்லை. மூளியாகக் காட்சியளிக்கும் நகரத்து இரவு வானம் இழந்து விட்ட இனபத்தினை நினைவு படுத்தி சோகிக்க வைக்கும். நாள் முழுக்க நாலு பேருடன் கதைத்துக் கொண்டிருந்தவரிற்கு கனடா வாழ்க்கை நான்கு சுவரிற்குள் நரகமாக விளங்கியது. எந்த நேரமும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தவரிற்கு ஓய்ந்து கிடப்பது கொடிதாகவிருந்தது. 'திக்குத் தெரியாத கட்டடக் காட்டினுள்' வந்து சிக்கி விட்டோமோவென்று பட்டது. அதே சமயம் மகனை நினைத்தாலும் கவலையாகத் தானிருந்தது.
மகன் ஊரில் ஒரு பொறியியலாளனாகக் கடமையாற்றியவன். இங்கோ ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கின்றான். இங்கு வரும் குடிவரவாளர்கள் பலரும் இப்படித்தான் தமது படிப்பிற்குச் சம்பந்தா சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்து கொண்டு காலத்தினை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த புத்தியீவிகள் பலர் டாக்ஸி ஓட்டுவதோ, 'பிட்சா' 'டெலிவரி' செய்வதோ அல்லது உணவகங்களில் கோப்பை கழுவதோ அப்படியொன்றும் புதிதானதொன்றல்ல. இவ்விதம் அந்தந்த நாடுகளிற்கு உரமாக விளங்க வேண்டிய அந்நாடுகளின் மூளை வளங்களெல்லாம் இங்கே வீணாகிக் கொண்டிருக்கின்றன.அந்த நாள் ஞாபகங்கள் நிழலாடுகின்றன. எவ்வளவு தூரம் சிரமப் பட்டு மகன் படித்துப் பட்டம் வாங்கியிருந்தான்.பல்கலைக் கழகப் புகு முக வகுப்பில் மகன் அதி விசேட சித்திகள் பெற்ற போது ஊரே எவ்விதம் பெருமைப் பட்டுக் கொண்டது. இப்பொழுது நினைக்கும் பொழுது கூடப் பெருமிதமாகவிருந்தது. மனைவி பார்வதி எவ்வளவு தூரம் சந்தோசப் பட்டாள். மனைவியை நினைத்ததும் மாஸ்ட்டரின் கண்கள் இலேசாகப் பனிக்கத் தான் செய்கின்றன.'மகராசி இருந்து இதையெல்லாம் பார்க்காமல் நேரத்தோடு போய்ச் சேர்ந்திட்டா'. ஊரில் மட்டும் பிரச்னையேதுமில்லையென்றால் எவ்வளவு நல்லாயிருக்கும்....ஆனந்தமாக வயலை, வெளியை, விண்ணைக், காற்றை இரசித்தபடி ...'ம்..அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..'
மகனும் மருமகளும் நேரத்துடனேயே வேலைக்குப் போய் விட்டார்கள். மகன் பகல் வேலை முடிந்து அப்படியே இன்னுமோரிடத்தில் பகுதி நேரமாகச் செய்யும் 'பாதுகாவலன்' வேலை செய்து முடிந்து வீடு வர இரவு பத்தாகி விடும். மருமகளும் அப்படித்தான். பகலில் ஒரு வங்கியொன்றில் 'டேட்டா என்றி ஒபரேட்ட'ராகக் கடமையாற்றுகின்றாள். மாலை நேரங்களில் புத்தகக் கடையொன்றில் பகுதி நேரக் காசாளராகக் கடமையாற்றுகின்றாள். பெரும்பாலும் வார இறுதி நாட்களில் தான் சமையலெல்லாம். ஒரு வாரத்திற்குத் தேவையான உணவு வகைகளைத் தயார் செய்து 'ப்ரிட்ஜ்'ஜில் வைத்து விடுவார்கள். தேவையான போது எடுத்தி 'மைக்ரோவேவ்'இல் சூடு காட்டிச் சாப்பிட வேண்டியதுதான். அவ்வப்போது வேலை முடிந்து வரும் போது தமிழ் உணவகங்களிலிருந்து இடியப்பம் வாங்கி வருவார்கள். அவரிற்கு வந்த புதிதில் ஏன் இவர்கள் இப்படி உடம்பை வருத்தி உழைக்கிறார்கலென்பது விளங்கவில்லை. பிறகு தான் விளங்கியது. வீடு அவர்களிற்குத் தான் சொந்தம். ஆனால் அதற்கு 'மோட்கேஜ்' மாதாமாதம் கட்ட வேண்டும். அது தவிர வீட்டு வரி, 'யுடிலிட்டி' பில் அது இதென்று பல வகையான செலவுகள். ஈடு கட்டத்தான் இவ்வளவு உழைப்பும் களைப்பும். தேவைதானாவென்று பட்டது....வீடு வாங்குவதென்பது இங்கு பலரிற்குத் தன்மானப் பிரச்னையாகி விட்டது. தங்களால் மாதாமாதம் 'மோட்கேஜ்; ஒழுங்காகக் கட்ட முடியுமாவென்றெல்லாம் பார்ப்பதில்லை. போட்டி போட்டு வீடு வாங்குவதும், வாங்கிய வீட்டிற்கு 'மோட்கேஜ்' கட்டுவதற்காக மாய்ந்து மாய்ந்து உழைத்து ஒடாகிப் போவதுமே வாழ்க்கையாகிப் போயிற்றோ என்று பட்டது.
சுப்ரமணியம் மாஸ்ட்டர் டொராண்டோ வந்து ஒரு வருடமாகி விட்டது. இங்கு நேரம் விரைவாகச் செல்வதாகப் பட்டது.அவர்களிருந்த பகுதியில் அதிகமாகச் சீனர்களே இருந்தார்கள். சீனர்களைப் பொறுத்த வரையில் முதியவர்கள் கூட வாழ்க்கையைச் சந்தோசமாகக் கழிப்பதாகப் பட்டது. அதிகாலைகளில் அருகிலிருந்த பூங்காவில் பல சீன முதியவர்கள் ஆண்களும் பெண்களுமாக தேகப்பயிற்சி செய்து கொண்டிருப்பதை இவர் அவதானித்திருக்கின்றார்.பார்ப்பதற்கு 'பாலே' நடனமாடுவதைப் போன்றிருக்கும். அடுத்த வீட்டுக்கார முதியவரான டோனி பொங் சில வேளைகளில் இவருடன் கதைப்பதுண்டு. அப்பொழுதெல்லாம் இவரையும் அதிகாலையில் தேகப் பயிற்சி செய்ய அழைத்திருக்கின்றார். இவரிற்கு வெட்கமாகவிருக்கும். மறுத்து விடுவார். அதே சமயம் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதும் கஷ்ட்டமாகவிருந்தது.'போர'டித்தது. ஏதாவது பிரயோசனமாகச் செய்தாலென்னவென்றும் பட்டது.அண்மைக் காலமாகவே அவரிற்கு இந்த யோசனை பலமாகவே ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. ஏதாவது தொழிற்சாலையொன்றில் வேலை தேடிப் பார்த்தாலென்னவென்று பட்டது. மகனிற்குத் தெரிந்தால் விட மாட்டான். துடித்துப் போய் விடுவான். வேலை செய்தால் அவரும் தன்னால் முடிந்த உதவி செய்யலாமேயென்றும் தோன்றியது. மகனும் மருமகளும் சுமக்கும் பாரத்தில் சிறிதளவாவது அவரும் சுமக்கலாமே.
இன்று எப்படியும் வேலை தேடிப் பார்க்க வேண்டுமென்று முடிவு செய்தவராகப் படுக்கையை விட்டெழுந்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். காலைக் கடன்களை முடித்து புறப்பட்ட பொழுது மணி பத்தை நெருங்கி விட்டது. அவர்களிருந்த பகுதிக்கண்மையிலேயே தொழிற்சாலைகளடங்கிய பகுதியொன்றிருந்தது. அப்பகுதியில் பல தொழிற்சாலைகளிருந்தன. ஒவ்வொரு தொழிற்சாலையாகச் சென்று விண்ணப்பித்துப் பார்க்க முடிவு செய்தார். என்ன வேலையென்றாலும் செய்து பார்ப்பதாக முடிவு செய்தார். அவ்வாறு செய்வதன் மூலம் நாட்களைப் பிரயோசனமாகவும் அதே சமயம் நான்கு சுவர்களிற்குள் வளைய வரும் தனிமையிலிருந்து விடுதலை பெற்றதாகவும் கழிக்க முடியும். நினைவே அவரிற்கு ஒரு வித மகிழ்ச்சியினையும் தென்பினையுமூட்டின.வேலையொன்று எடுத்த பின் தான் மகனிடம் கூற வேண்டும். ஆரம்பத்தில் அவன் எதிர்க்கத்தான் செய்வான். ஆனால் அதன் பின் அவனை எப்படியும் சம்மதிக்க வைக்கலாமென்றும் பட்டது.
நகர் காலைக்குரிய பரபரப்பில் மூழ்கி விட்டிருந்தது. பல வேறு பட்ட மனிதர்கள்..பல்வேறு பட்ட பண்பாடுகளின் சங்கமமாக விளங்கியது டொராண்டோ நகரம். ஒரு சில மொழிகளேயுள்ள நாடுகளே பல்வேறு பட்ட பிரிவுகளால் இரத்தக் களரிகளாகக் காட்சியளிக்கும் போது இது எவ்விதம் சாத்தியமாயிற்று? வியப்பாகவிருந்தது. இங்கும் பல்வேறு பட்ட பிரிவுகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால் அதற்காக ஆளையாள் வெட்டிச் சாய்த்து இரத்த ஆறுகள் ஓடவில்லையே? நிறவெறி இன்னும் அடியோடு அழிந்து விடவில்லை தான். ஆனால் அதனை எதிர்த்துப் போராடக் கூடிய வசதியிருக்கிறதே....இவர்களது சமுதாயம் சிறிது முன்னேறி விட்டது போல் பட்டது. ஆனால் பொதுவாக இந்த மேற்கு நாட்டுச் சமுதாயங்கள் தத்தமது நலன்களிற்காக எதுவும் செய்யத் தயங்காதவர்களென்பதும் உண்மைதான்...
நடந்து கொண்டிருந்தவர் தொழிற்சாலைகள் அடங்கிய பகுதிக்கு வந்து வந்து விட்டிருந்ததை உணர்ந்தார். முதலாவது தொழிற்சாலைக்குச் சென்று விண்ணப்பிக்கலாமாவென்று நினைத்தார். அவரிற்குச் சிறிது தயக்கமாகவும் வெட்கமாகவுமிருந்தது. அவ்விதமே சில தொழிற்சாலைகளைத் தாண்டி நடந்தார்.இவ்விதமாக மனது போராடிக்கொண்டிருந்தது. வேலை செய்யவும் விருப்பமாகவிருந்தது. என்ன வேலையென்றாலும் செய்யத் தயாராகவுமிருந்தார்.அதே சமயம் அவ்விதம் சிறிய வேலைகளிற்கு விண்ணப்பிக்க மனது கூசவும் செய்தது. ஆசிரியராகவிருந்து பல பொறியியலாளர்களையும் மருத்துவர்களையும் உருவாக்கிய பெருமைக்குரிய சுப்ரமணிய மாஸ்ட்டரல்லவா! வயது போன் நேரத்தில் சந்தோஷமாகப் பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ வேண்டிய சமயத்தில் இவ்விதம் அன்னிய நாடொன்றில் தொழிற்சாலை தொழிற்சாலையாக வேலை தேடிச் செல்ல வேண்டுமேயென்று மனம் கூசுகின்றதோ? சிறு வயதில் படித்த கதையொன்று ஞாபகத்திற்கு வந்தது. 'சாகப் போனவன் வழியிலெதிர்பட்ட பாம்பைக் கண்டு பயந்த கதை மாதிரியல்லவாயிருக்கிறது' என்று எண்ணியபோது சிரிப்பு வந்தது. எந்த வேலையும் செய்யத் துணிந்து புறப்பட்ட பிறகு இப்படித் தயங்கலாமா? வெட்கப் படலாமா?
"யாரது... மாஸ்ட்டரா..."
குரல் கேட்கவே எதிரே நோக்குகின்றார். தமிழ்க் குரல்...யாராகவிருக்கும்? ஆச்சர்யமாகவிருக்கின்றது..
"யாரது..." கண்களைச் சுருக்கியவராக எதிரே பார்க்கின்றார் சுப்ரமணிய மாஸ்ட்டர். வர வர இப்பொழுதெல்லாம் கண் வேறு அவ்வளவாகத் தெரிவதில்லை. டாக்டரிடம் காட்டத்தான் வேண்டும்...
"நான் தான் மாஸ்ட்டர்...ரகுநாதன்....ஞாபகமிருக்குதோ.."
"ரகுநாதன்....ம்.." சிந்தனையில் மூழ்கினார்.
"கார்க்காரச் சண்முகத்தின்ற மகன் ரகுநாதன்..."
"ஓ சண்முகத்தின்ற மோனே"
இப்பொழுது அவரிற்கு நினைவிற்கு வருகின்றது. கார்க்காரச் சண்முகத்தின் மகன் ரகுநாதன். இவரது அபிமானத்திற்குரிய மாணவன். சண்முகம் குடியும் அடியுமென்று காலத்தைக் ஓட்டிக் கொண்டிருந்தான். குடும்பச் சூழல் காரணமாக அவனது மகன் ரகுநாதனால் மேலே படிக்க முடியாமலிருந்தது. படிப்பை நிறுதத இருந்தவனை மாஸ்ட்டர்தான் தன் செலவிலேயே படிக்க வைத்தார். நல்லதொரு திறமைசாலியின் திறமை வீணாகக் கூடாதென்று விரும்பினார். ரகுநாதன் படிப்பில் எப்பொழுதுமே முதல் தான். அதன் பின் அவன் பல்கலைக் கழகம் சென்று பொறியியலாளனாகத் திரும்பி திரும்பியபோது அவர் எவ்வளவு தூரம் பெருமைப் பட்டார். அந்த ரகுநாதனா இவன்?
நாடிருந்த நிலையில் நீண்ட காலம் அவனுடன் தொடர்பேதுமிருக்கவில்லை. கடைசியாக அவன் மகாவலித் திட்டத்தில் பொறியியலாளனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. அவன் ஊரிற்கு வரும் சமயங்களிலெல்லாம் மாஸ்ட்டரிற்கேதாவது வாங்கி வருவான். இப்பொழுது நினைத்தாலும் எவ்வளவு பெருமையாகவிருக்கிறது.. 'அது சரி இவன் எப்பொழுது கனடா வந்தான்?'
"மாஸ்ட்டர் எப்ப நீங்கள் கனடா வந்தனீங்கள்? "
"நான் வந்து ஒரு வருஷமாச்சு. நீயெப்ப வந்தனீ ரகுநாதா"
"மாஸ்ட்டர் நான் வந்து கிட்டத்தட்ட இரண்டு வருசமாவதிருக்கும்..என்ன இந்தப் பக்கம்...மாஸ்ட்டர்.."
மாஸ்ட்டரிற்குத் திகைப்பாகவிருந்தது. இவனிடம் போய் எப்படிச் சொல்வது? மாஸ்டர் மாஸ்டரென்று வாய்க்கு வாய் அழைத்து எவ்விதம் இவன் பெருமைப் படுகின்றான். மேலே படிக்க முடியாமல் அவனிருந்த பொழுது எவ்வளவு தூரம் புத்திமதிகள் கூறி அவனை உற்சாகப் படுத்திருத்தியிருப்பார்? எத்தனையோ வெற்றிகரமான மாணவர்களை அவர் உருவாக்கியிருக்கிறார் அவர். எத்தனையோ மாணவர்களின் இலட்சிய ஆசிரியர் அவர்.அவனிடம் போய்த் தான் தொழிற்சாலை வேலை தேடுவதை எவ்விதம் கூறுவது? அவனது மனம் வருந்தி விடாதா?
"அதோ பார்.. அந்தப் பக்கத்திலை தான் மகனின்ற வீடிருக்கு.. மகனோடைதான் இருக்கிறன்.. . எந்த நேரமும் வீட்டிலை அடைந்து கிடந்தாலும் அலுத்து விடும்...அதுதான் சும்மா காலாற நடக்கலாமேயென்றுதான். நடந்தாலென்றாலாவது உடம்பிற்கு நல்லதாகயிருக்கும் தானே."
"அதுவும் சரிதான் மாஸ்ட்டர்.. நீங்கள் இப்பவும் அப்ப மாதிரியே 'பாசிட்டிவ்'வாகத் தான் இருக்கிறீங்கள். மாஸ்ட்டர் நீங்கள் கட்டாயம் ஒரு நாளைக்கு எங்களுடைய வீட்டிற்கு வர வேண்டும். நான் ஸ்காபரோவிலையிருக்கிறன்..."
"கட்டாயம் வருவேன். போன் நம்பர் தாறன். ஒரு நாளைக்கு 'கோல்' பண்ணேன். அது சரி நீயென்ன இந்தப் பக்கம்.."
"மாஸ்ட்டர். என்னுடைய நண்பனொருவன் அண்மையில் தானிருக்கிறான். அவனைச் சந்திப்பதற்காகத் தான் வந்தனான். வந்த வழியிலை கடவுள் அருளாலை உங்களையும் சந்திக்க முடிந்தது.. கன நாளைக்குப் பிறகு சந்தித்திருக்கிறம்... வாங்கோவென் மாஸ்ட்டர் 'கோப்பி' குடித்துக் கொண்டே கதைப்போம்..."
அருகிலிருந்த 'டிம் கோர்ட்டன் டோனட்' கடைக்குச் சென்றார்கள். ஊரில் மூலைக்கு மூலை தேநீர்க் கடைகளிருப்பது போல் இங்கு இந்த 'டோனட்' கடைகள். அங்கு தேநீர் அருந்தியபடியே வடை சாப்பிடுவது போல் இங்கு தேநீர் அல்லது கோப்பி அருந்தியபடியே 'டோண்ட்' கடிக்கலாம். மாஸ்ட்டரிற்கு நீண்ட நாட்களின் பின்னால் சந்தோஷமாகவிருந்தது. அவரால் உருவாக்கப் பட்ட பல மாணவர்களில் முதன்மையானவன் இந்த ரகுநாதன். இவனது வளர்ச்சியில் அவர் பெரிதும் பங்கெடுத்திருந்தார். அவன் பொறியியலாளனாக வெளி வந்த போது ஊரே திரண்டு அவனை வரவேற்றதோடு அதற்குக் காரணமான அவரையும் கெளரவித்தது. இப்பொழுது நினைக்கும் போது கூட எவ்வளவு மகிழ்ச்சியாகவிருக்கிறது.
வேலை தேடும் படலத்தை அத்துடன் நிறுத்தி விட்டு 'இன்னொரு நாள் பார்க்கலாமே'யென்று வீடு திரும்பினார். மாஸ்ட்டரின் மனது மகிழ்ச்சியில் மிதந்தது. ரகுநாதனையெண்ணப் பெருமையாகவிருந்தது. அதே சமயம் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரகுநாதனோ வேறு வகையான எண்ணங்களில் மூழ்கிக் கிடந்தான். அப்பகுதியிலிருந்த தொழிற்சாலையொன்றில் தான் அவன் தொழிற்சாலையைக் கூட்டிக் கழுவும் ஒரு தொழிலாளியாக வேலை பார்க்கின்றான். அவன் பொறியியலாளனாக வருவதற்காக எவ்வளவு உதவிகளை மாஸ்ட்டர் செய்திருப்பார்? அவன் படிக்க முடியாது பாதியிலேயே படிப்பை நிறுத்த எண்ணியிருந்த சமயத்தில் அவர் எவ்வளவு தூரம் அவனிற்குக் கல்வியின் பயன்களைக் கூறி ஊக்குவித்திருப்பார். பொறியியலாளனாக அவனைப் பார்த்து ஆனந்தப் பட்ட மாஸ்ட்டர் இவ்விதம் இவன் வேலை பார்ப்பதை அறிந்தால் எவ்வளவு வேதனைப் படுவார்? யுத்தம் எவ்வளவு கொடியதாக இருந்து விடுகிறது. மனித உறவுகளை எவ்விதம் சின்னாபின்னப் படுத்தி விட்டது. இவ்விதமாக எண்ண அலைகளில் மூழ்கியவனாக ரகுநாதன் சென்று கொண்டிருந்தான். அதே சமயம் நீண்ட நாட்களின் பின்னால் சந்தித்திருந்த ஆசிரியருடனான சந்திப்பும் அந்த மாணவனின் நெஞ்சில் இன்ப அலைகளை எழுப்பாமலுமில்லை.
நன்றி: பதிவுகள், திண்ணை. யாழ் இந்துக்கல்லூரி (கனடா) கலையரசி மலர்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.