அவன் உள்ளே வரும்போது ஹாலில் அவள் தனியே டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள்.
யார் இந்தப் பெண்? தங்கையின் சினேகிதியாக இருக்குமோ?
அவன் அவளைக் கவனிக்காதது போலக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவளைக் கடந்து தனது அறைக்குச் சென்றான்.
தங்கைக்கு இப்படி ஒரு அழகான சினேகிதி இருப்பது கூட அவனுக்கு இதுவரை தெரியாமற் போச்சே என்று வருத்தப்பட்டான்.
அவளைப் பார்த்த உடனேயே அவன் மனத்தில் என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வு ஏற்படுவதை உணர்ந்தான். எத்தனையோ பதுமவயதுப் பெண்களைப் பார்த்திருக்கிறான், பழகியிருக்கிறான் ஆனால் சட்டென்று இப்படி ஒரு உணர்வு அவனுக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.
அவளைப் பார்த்ததும், இரசாயண மாற்றங்கள் சட்டென்று தனது உடம்பில் ஏற்பட்டதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைத்துப்பார்த்தான்.
எப்படியாவது மீண்டும் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்க்க வேண்டும் போலவும், அவளோடு ஒருமுறையாவது பேசிவிட வேண்டும் என்பது போன்று வெறித்தனமான அந்த உணர்வு அவனுக்குள் அலை மோதிக் கொண்டிருந்தது.
தனது அறைக்குள் சென்று, அறைக்குள் இருந்தபடியே அவளைப் பார்க்கக் கூடியதாக அறைக்கதவை கொஞ்சமாகத் திறந்து வைத்தான். அவள் இவன் இருந்த அறைப்பக்கம் திரும்பிய போதெல்லாம் இங்கிருந்தே அவளது முகத்தை உன்னிப்பாய்க் கவனித்தான்.
‘இவளா..?’
உயர் வகுப்பில் படிக்கும் தங்கையை அழைத்து வரப் பாடசாலைக்குச் சென்றபோதெல்லாம் பாடசாலை வெள்ளை நிறச் சீருடையில், இரட்டைப் பின்னலை மடித்துக் கட்டியபடி தங்கையோடு சிரித்துப் போசிக் கொண்டிருந்ததை இரண்டு மூன்று தடவைகள் இவன் கண்டிருக்கிறான்.
அப்பொழுதெல்லாம் எந்தவிதமான இரசாயன மாற்றத்தையும் அவள் இவனுக்குள் ஏற்படுத்தியதில்லை. ஆனால் அப்போது இல்லாத அழகு இப்போது அவள் முகத்தில் அப்பிக்கிடந்தது.
அந்த அழகா, அல்லது அவள் நேர்த்தியாக அணிந்திருந்த அந்த உடையா, அல்லது இடையிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரசித்து வெட்கப்பட்டுச் சிரிக்கும் அந்தச் சிரிப்பா, அல்லது இந்த வயதுக் கோளாறா அவனை இப்படிக் கவர்ந்து இழுத்திருக்கிறது என்பது அவனுக்குப் புரியவில்லை.
ஆனால் என்னவென்று சொல்லமுடியாத ஏதோ ஒன்று அவளிடம் இருந்து காந்தம் போல, இவனைக் கவர்கிறது என்பது மட்டும் அவன் படும் இந்த அவஸ்தையில் இருந்து அவனால் புரிந்து கொள்ளமுடிந்தது.
‘எதையாவது செய்து அவளது கவனத்தை உன் பக்கம் திருப்பப்பார்’ என்று மனசு அடித்துக் கொண்டது.
‘ஹாய்!’ என்று சொல்லித் தன்னைத்தானே அறிமுகப்படுத்தி, ஏதாவது அவளிடம் பேசலாமா என்று நினைத்தான்.
அப்படிப் பேசுவதற்கு ஏதாவது நல்லதொரு விடயம் கிடைத்தால் நன்றாயிருக்கும் அப்போது தான் ஆரம்பமே நல்லாயிருக்கும் என்று சற்று நேரம் யோசித்தான்.
‘சுகமாய் இருக்கிறீங்களா?’ என்று கேட்கலாம் அல்லது ‘தங்கையோடு படிக்கிறீங்களா?’ என்று எதுவுமே தெரியாத மாதிரிப் பேச்சைத்தெடங்கலாம்.
‘தமிழில் பேசினால் என்னைப் பற்றி மட்டமாய் நினைப்பாளோ? ஆங்கிலச் சொற்களை இடையிடையே புகுத்திப் பேசினால் கொஞ்சம் மதிப்பாய் நாகரிகமாக இருக்குமோ?
எது எப்படியானாலும் அவளோடு இன்று பேசவேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற சந்தர்ப்பம் எப்பவுமே கிடைக்கப் போவதில்லை!
இவை எல்லாவற்றுக்கும் முன்னால் எதையாவது ஆரம்பிப்பதற்கு தங்கையின் ஒத்துழைப்பு வேண்டுமே!
தனது அறைக்கதவைத் திறந்து, ஹோலுக்குள் வந்து ஃப்ரிட்ஜ்சைத் திறந்தான்.
ஏதாவது யூஸ் இருந்தால் எடுத்துக் குடிப்பது போல பாவனை செய்ய நினைத்தான். அவளது பார்வையில் படும்படியாக இருந்த ஃப்ரிட்ஜ்சைத் திறக்கும் போது ஏற்படும் சத்தத்தில் அவள் கவனம் தன் மீது திரும்பலாம் என எதிர்பார்த்தான்.
இதே சாட்டாக வைத்து ‘ஏதாவது சாப்பிடுறீங்களா?’ என்று யதார்த்தமாயக் கேட்கலாம்.
திரும்பி தற்செயலாகப் பார்ப்பது போல அவளைப் பார்த்தான்.
தங்கை கொடுத்திருக்க வேண்டும், அவளோ ஏற்கனவே கையில் யூஸ் வைத்திருந்தாள்.
அட, முதல் முயற்சியே தோல்வியா?
தான் நினைத்தது எதையுமே செய்ய முடியவில்லை என்பதால், தங்கைமேல் இனம்புரியாத வெறுப்பு வந்தது. நாகரிகம் தெரியாதவள். வீட்டிற்கு வந்த சினேகிதியை அவனுக்கு அறிமுகப் படுத்தியிருக்கலாம்.
அட்லீஸ்ட் ‘இவன் தான் என்னோட அண்ணா’ என்றாவது சொல்லியிருக்கலாம்.
அவள் சொல்லமாட்டாள். அவனுக்குத் தெரியும்!
சொல்லக்கூடிய மாதிரி அவனும் அவளோடு பழகவில்லை. அம்மா அடிக்கடி சொல்வது போல அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவு ‘பூனையும் எலியும்’ போல!
அப்படி இல்லை என்று அறிமுகப் படுத்தினாலும், வழமைபோல முகத்திலே அறைந்தது போல ஏதாவது சொல்லி விடுவேனோ என்ற பயத்தில் அவள் முன்எச்சரிக்கையோடு சினேகிதியின் அறிமுகத்தைத் தவிர்த்திருக்கலாம்.
அல்லது சினேகிதிக்கு முன்னால் ஏதாவது சொல்லப்போய், அவனிடம் தேவையில்லாமல் ஏன் அவமானப்படுவான் என்று அவள் தவிர்க்க நினைத்திருக்கலாம்.
அவனது நெஞ்சு வேகமாக அடித்துக் கொள்வது அவனுக்குப் புரிந்தது. எதுவும் பேசாமல் அறைக்குத் திரும்பினான்.
குட்டிபோட்ட பூனை போல, கட்டுப்பாடு இல்லாமல் மனசு அங்குமிங்கும் அலைந்தது.
சாப்பாட்றறையில் அம்மா மதிய உணவு பரிமாற, அவர்கள் இருவரும் வேடிக்கையாய்க் கலகலவென்று சிரித்துக் கொண்டு சாப்பிடுவது தெரிந்தது.
இன்றைய பகல் பொழுதைத் தங்கையுடன் செலவிட நினைத்து தங்கையின் சினேகிதி எங்க வீட்டிற்கு வந்திருக்கலாம்.
என்னையும் அழைத்திருந்தால் எவ்வளவு கலகலப்பாக இருந்திருக்கும்.
தங்கைதான் அழைக்கவில்லை, அம்மாவாவது ‘வந்து சாப்பிடு’ என்று ஒரு சொல் சொல்லியிருக்கலாமே?
அம்மாவின் மௌனத்திற்கும் ஏதாவது காரணமிருக்கலாம், இப்போ என்ன செய்யலாம்?
கண்ணாடிக்கு முன்னால் நின்று தன்னை அழகு பார்த்துக் கொண்டான். முகம் வியர்த்துக் கறுத்திருந்தது. முன்பக்க முடிகலைந்திருந்தது. விரல் நுழைத்து தலைவாரிக் கொண்டான். வியர்த்த முகத்திற்கு லேசாகப் பவுடர் தவிக்கொண்டான்.
வாசலில் யாரோ அவனது பெயரைச் சொல்லி அழைப்பது போல இருந்தது.
‘சீ’ என்று அலுத்துக் கொண்டான். சிவபூசையில் கரடிபோல இந்த நேரத்தில் யாராய் இருக்கும்? அவர்களைக் கடந்து வாசலுக்கு வந்தான்.
அவனது கூட்டாளிகள். அவர்களோடு கிரிகெட் விளையாட வருவதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. அவர்களோடு போகாமல் இருக்க ஏதோ காரணம் சொல்லித் தப்பிக் கொள்ளவேண்டும். அவன் சொன்ன காரணம் அவர்களுக்குச் சிரிப்பைத் தந்தது. ஆனாலும் ‘சீக்கிரம் வந்துவிடு’ என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
உள்ளே வரும்போது அவள் தன்னைக் கவனிப்பாள் எனநினைத்தபோது, மைதானத்தில் சதம் அடித்து விட்டு வீரநடை போடும் ஒரு கிரிகட் விளையாட்டு வீரனைப்போல நடந்து காட்ட முற்பட்டாலும், அவனை அறியாமலே நடை தளர்ந்து கால்கள் பின்னிக்கொள்வதை உணர்ந்தான்.
நண்பர்கள் அவனது பெயரைச் சொல்லி அழைத்ததுகூட அவளுக்குக் கேட்டிருக்கலாம். மனதுக்குள் அவனது பெயரைச் சொல்லி, இணைத்துப் பார்த்திருப்பாளோ?
இப்போது அவள் சாப்பிட்டு முடித்து விட்டு ஹாலில் தங்கையுடன் உட்கார்ந்து ஃபமிலிஆல்பம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனது தங்கை ஆல்பத்தில் உள்ள ஒரு படத்தைச் சுட்டிக்காட்டி ஏதோ சொல்ல அவள் வாய்விட்டுப் பலமாகச் சிரித்துவிட்டு, சட்டென நிமிர்ந்து பார்க்கவே, உள்ளே வந்த அவனையே அவள் பார்ப்பது போல இவனுக்குள் ஒருபிரேமை தெரிந்தது.
என்னவாய் இருக்கும்? ஆல்பத்தில் உள்ள குழந்தைப் பருவத்தில் டயப்பரோடு நிற்கும் அவனது படத்தைத் தங்கை இவளுக்குக் காட்டியிருப்பாளோ? அதைப் பார்த்துத்தான் இவள் சிரித்திருப்பாளோ?
அந்தப் படத்தை முதல் வேலையாக ஆல்பத்தில் இருந்து எடுத்து விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் தலையைக் குனிந்து கொண்டு தனது அறைக்குள் நுழைந்தான்.
கண்ணாடிக்கு முன்நின்று தன்னை அழகுபார்த்தான். இப்படியாக அவஸ்தைப்படும் போதெல்லாம் கண்ணாடிதான் அவனுக்குத் துணைபோகிறது. சட்டையை மாற்றி நல்லதாய்ப் போட்டால் கொஞ்சம் கவர்ச்சியாய் இருக்கும் என்ற நினைத்தான்.
ஆனால் இந்தத் திடீர் மாற்றத்தை வீட்டிலே கவனிக்கலாம் என்பதால் அதை மாற்றாமலே விட்டுவிட்டான்.
இவன் சொல்ல நினைத்தது, செய்ய நினைத்தது எதுவுமே நடக்கு முன்பாகவே, அவள் சொல்லிக் கொண்டு தனது வீட்டிற்குக் கிளம்பினாள்.
கொஞ்சம் வெளியே இருண்டு போனதால், இவனது தங்கையை அவளுடன் ‘பாஸ் ஸ்டாப் வரை’ வரமுடியுமா என்று அவள் அழைத்தாள்.
தங்கை தனியே திரும்பி வரவேண்டுமே என்பதால் அவனையும் அவர்களுடன் துணைக்குப் போய்வரும்படி தாயார் சொன்னாள்.
அவளோடு காலமெல்லாம் துணையாய் போய்வரத்தான் அவன் விரும்பினான். அவளுக்குத் தெரியாமலே மனசுக்குள் அவளுக்காக ஒரு சிம்மாசனத்தைப் போட்டு அதிலே தேவதை மாதிரி அவளை உட்கார வைத்திருக்கிறான் என்பது அவனுக்கு மட்டும் தானே தெரியும்!
தாயார் சொன்னதும், தற்போதைக்குக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பமே போதும் என்று அவனும் அவர்களுடன் கிளம்பினான். போகும் போது அவளுடன் பேச ஏதாவது ஒரே ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு நடைபிணம் போல அவர்களைப் பின் தொடர்ந்தான்.
வீட்டை விட்டுக் கிளம்பும்போது அவளை முகத்திற்கு நேரே பார்த்து அவனால் ஒரு சிரிப்பு மட்டும் உதிர்க்க முடிந்தது.
அவளும் பதிலுக்கு புன்முறுவல் ஒன்றை உதிர்த்தாலும், அவளது முகத்தில் எதையோ இவனிடம் சொல்லத் தவிப்பது போன்ற பாவனையை இவன் அவதானித்தான்.
ஆனாலும் என்னிடம் சொல்ல அவளுக்கு என்ன இருக்கிறது, வெறும் மனப்பிரமை என்ற அலட்சியப் போக்கால் அதை அசட்டை செய்தான்.
பஸ்ஸிற்குக் காத்திருந்தபோதுகூட, அவளுடன் பேசுவதற்கு இவனுக்கு நிறையச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனாலும் கிடைத்த சந்தர்ப்பத்தை சாதுர்யமாய்ப் பயன்படுத்த இவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
பஸ் வண்டி வந்ததும், அதில் ஏறிச் செல்ல மனமில்லாமல், அவள் சற்றுத் தயங்கி நின்றாள். அடுத்த பஸ் வண்டி இப்போதைக்கு வரமாட்டாது என்று சொல்லித் தங்கைதான் அவளை வலுக்கட்டாயமாக ஏற்றி விட்டாள்.
அவள் உள்ளே இருக்கையில் அமர்ந்து, இருவருக்கும் சேர்த்து, கையசைத்து பாய் சொல்லிப் பிரிந்தபோது இவனது நெஞ்சம் எதையோ இழந்து விட்ட பிரிவுத் துயரில் என்றுமே இல்லாதவாறு கனத்து விம்மியது.
‘இப்படி ஒரு நல்ல ஃபிரென்ட் உனக்கு இருப்பதாக எனக்கு நீ சொல்லவே இல்லையே!’ என்று திரும்பி வீடு வரும்போது தங்கைமீது திடீர்பாசம் கொண்டவன்போல, இயலாமையின் வெளிப்பாடாய்க் குற்றம் சுமத்தினான்.
‘இந்தக் குழையல் எல்லாம் எனக்கு வேண்டாம், இட்ஸ் டூ லேட்!’ என்று இவள் மனதுக்குள் கறுவிக்கொண்டாள்.
‘ரொம்ப நல்ல பெண்ணு, எவ்வளவு அன்பாய், பாசமாய் நடந்துக்கிறா, எங்களுக்குத்தான் கொடுத்து வைக்கல்லையே!’ என்று இரவு உணவு பரிமாறும் போது அம்மா ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.
இவன் உணவு அருந்துவதை விட்டுவிட்டு தாயை நிமிர்ந்து பார்த்தான்.
‘படி, படி என்ற சொன்னால் எப்போதாவது கேட்டியா, உன்னோட படித்தானே கோபி, ஞாபகமிருக்கா? அவன்தான் இவளைக் கட்டிக்க விரும்புறதாய் இவங்க வீட்டிலே கேட்டானாம். இவளுக்குப் பிடிக்கலையோ, என்னவோ, இவள் தன்னுடைய முடிவை இன்னும் சொல்லலையாம். அமெரிக்காவிலே எம்.பி.ஏ முடிச்சிட்டு, இந்த மாதமுடிவில் அவன் இங்கே வர்றானாம்!’ அம்மா இவனைத் திட்டித் தீர்த்தாள்.
கிரிகெட், கூட்டாளிகள் என்று படிப்பில் கவனம் தெலுத்தாமல் திரிந்ததைத் தாயார் சுட்டிக்காட்டித் திட்டிய போதும் அவன் மௌனமாகவே இருந்தான்.
அண்ணனைப்பற்றி ஆர்வமாய்ப் பல தடவைகள் அவள் தன்னிடம் விசாரித்ததையோ, அல்லது அவனது பிறந்தநாளன்று அவனிடம் கொடுக்கும்படி இதயத்தின் படம் வரைந்து ‘லவ் யூ’ என்று வாழ்த்து மடல் கொடுத்ததையோ, ‘காற்றடித்தும் கலையாத உன் முடிக்குள் என் விரல் நுழைத்துக் கலைத்து விட ஆசை’ என்று தனது ஆசையைக் கவிதையாய் எழுதிக் கொடுத்ததையோ, அவ்வப்போது அண்ணன் மீது கொண்ட கோபத்தால் அவற்றை எல்லாம் தான் கிழித்துப் போட்டதையோ, இவள் வாய்திறந்து கடைசிவரை இவனிடம் சொல்லவே இல்லை!
‘எலியும் பூனையும்’ என்று அம்மா இவர்கள் இருவரையும் அடிக்கடி சொல்வதில் ஏதாவது அர்த்தமிருந்திருக்கலாம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.