'பதிவுகளி'ல் வெளிவந்த சிறுகதைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன். இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் , சிறுகதைகளுட்பட , இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் - பதிவுகள்-
ஒரு கதையின் ஸ்டோரி
- ரெ.கார்த்திகேசு -
ஆகஸ்ட் மாதத்தில் ஓலைச்சுவடி இதழில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆனால் அதன் தேதியைத் துல்லிதமாகச் சொல்ல முடியவில்லை. ஆகஸ்டின் முற்பகுதியாகத்தான் இருக்க வேண்டும். அருமையான அச்சு வார்ப்புள்ள அந்த இதழில் அந்தக்கதை தோற்றம் பெற்றிருந்தது. மிகுந்த உயிர்த் துடிப்புடன் இருந்தது அந்தக் கதை. அதன் நடை சுண்டி வசீகரிக்கும் அழகு. அந்தக் கதையை முதன் முதலில் படித்தவர்கள் அது ஒரு பெரும் மாயத் தோற்றம் என்றும் அதன் பின் பெரும் மர்மங்கள் அடங்கியிருப்பதாகவும் நம்பினார்கள். மிகவும் படித்தவர்களும் இலக்கிய ரசிகர்களாக உள்ளவர்களையுமே அந்தக் கதை கவர்ந்தது. அந்தக் கதையைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் தங்கள் காலண்டர்களைத் திருப்பிப் பார்த்துவிட்டு அந்தக் கதை வெளிப்படுவதற்கு இது சிறந்த மாதமே என்றார்கள். இந்த மாதத்தில்தான் பல காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைந்ததெனவும், அதுவும் பல சுதந்திரங்கள் நள்ளிரவில் பெறப்பட்டன என்றும் அதற்கும் இதற்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளன என்றும் அவர்கள் தங்கள் இளைய தலைமுறையினருக்கும் வாசக சகாக்களுக்கும் தெரிவித்துக் கொண்டார்கள். சிலர் அந்தக் கதையைப் படித்து கண்கள் கலங்கினார்கள். இப்படியும் ஒரு கதை இருக்க முடியுமா என அழுது குரல் கம்மிப் பிறருக்குச் சொன்னார்கள். அவர்கள் கண்கள் கதையில் நிலைகுத்தி இருந்ததோடு படபடக்கும் மார்பை வலது கைகளினால் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
நாளுக்கு நாள் அதைப் படிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தார்கள். அடைபட்ட கால்வாயினால் வெள்ளம் வீதியில் பெருக்கெடுப்பதுபோல் இண்டு இடுக்கிலுள்ள வாசகர் குழாத்திடையே செய்தி பரவியது. வாசகர்கள் பதறியடித்துக் கொண்டு ஓலைச்சுவடி இதழை வாங்கிப் பார்க்க ஓடினார்கள். அவர்கள் ஓடிய வேகம் சாலை விபத்தைக் காண ஓடுபவர்களின் வேகத்தை ஒட்டியதாக இருந்தது. மோட்டார் சைக்கிள்களிலும் கார்களிலும் விமர்சகர்களும் இலக்கிய இதழ் துணையாசிரியர்களும் பெரும் பாய்ச்சலாக வந்துகொண்டிருந்தனர். எப்படி அவர்களுக்கு அதற்குள் வாசம் எட்டியது எனத் தெரியவில்லை.
"ஐயா, கதையைப் படிப்பதை நிறுத்திவிட்டுக் கொஞ்சம் எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்" என்று வாசகர்களைப் பார்த்து விமர்சகர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்தக் கதையை முதன் முதலாகப் படிக்கக் கொடுத்துவைத்தவர் யார் என்ற தேடலும் கிளம்பிற்று. கண்கள் கலங்கி உடல் வியர்த்திருந்த ஒரு தீவிர வாசகர் அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுகையில் அவரது சொற்களில் தானியங்கியாகக் கற்பனையின் ஜிகினாத் துகள்களும் உயர்ந்த செண்ட் வாசனையும் வரத் தொடங்கின. தன்னால் இவ்வாறு கற்பனா வளத்துடன் வருணிக்க முடிவதை எண்ணி அவருக்குப் பெருமிதம் பொங்கிற்று. சொல்தடுமாற்றத்துடன் மட்டுமே பேச முடிந்த அந்த இளம் வாசகர் இதனால் சிறுவயது முதலே தனக்கு இருந்து வந்த பேச்சுத் தயக்கத்தை மறந்தவராகப் பேசினார். பேச்சு அவருக்குச் சரளமாக வர ஆரம்பித்தது. அவரது பேச்சில் தீர்மானமும் நிச்சயமும் தன்னம்பிக்கையும் இருந்தன.
அவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏன் இத்தனை பேர் இப்படி ஆர்வமாகக் கேட்கிறார்கள்? அவர்கள் படிக்க முடிந்த விடயம்தானே? அதையும் நான் ஏன் விவரித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது? நான் சொல்வது அத்தனையும் அடுத்த மாதம் எல்லா இலக்கிய இதழ்களிலும் வரப் போகிறதா?
விமர்சகர்கள் அவர்களின் தொழில் தந்திரப்படி அரும்பு விட்டுக்கொண்டிருந்த வாசகரின் கற்பனைகளை நுட்பமான கேள்விகள் வழியாக இதழ் மலர்ச் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் உருவாக்க விரும்பும் கருத்துக்களை அவர் வாய்வழியே வரவழைக்க முடிந்துவிட்டது அவர்களுக்கு வெற்றிதானே! ஒரு பிரபல இலக்கியப் பத்திரிகையின், பிடரி முடிவளர்த்திருந்த ஒரு இளம் விமர்சகர் - அவரை ஏன் சக விமர்சகர்கள் 'கூகை' என அழைக்கிறார்கள் என்பது தெரியவில்லை - ஆங்கிலத்தில் கேட்டார்: "ஐயா, நீங்கள் முதன்முறையாக இதைப் படித்தபோதும் இதன் கரு இப்படித்தான் மறைந்திருந்ததா?" திடீரென வாசகருக்கும் தனக்குத் தெரிந்த ஆங்கில மொழித் திறனைக் காட்ட வேண்டும் என்னும் ஆவல் உண்டாயிற்று. அவர் தன் தொண்டையைக் கனைத்தபடி ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார்: "Yes, it is as opaque as a deep coat of tar." இந்த பதிலில் விமர்சகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அவர் ஆங்கிலத்தில் பேசியது நம்பகத் தன்மைக்கு அதிகப்படியான ஒரு சான்றாகவும் அவர்களுக்குத் தோன்றியது.
அந்தக் கதையின் உச்சம் ஒரு முழுமையான மறைவுதான் என்பது எல்லா மனங்களிலும் பட்டது. மிகுந்த விட்டம் கொண்ட ஒரு இதழில் அக்கதை தன் மொழியை மட்டும் வெளிப்படையாகக் காட்டி நின்றது. ஆசிரியரின் மொழித்திறன் அந்த அளவுக்குத்தான் அவருக்குச் சுதந்திரம் அளித்திருந்தது போலிருக்கிறது.
இறைவா, அந்த மறைவு, படைப்புத் தன் சிகரத்தைக் கண்ட வெற்றியில் கெக்கலித்துக் கொண்டிருக்கிறது. அதன் சிறப்பு அதன் கெட்டியும் திடத்தன்மையும்தான். புரிதல் என்னும் வெளிச்சம் ஊடுருவ முடியாத கருமைதான் அதை ஸ்திரப்படுத்தியிருக்கிறது. பாம்புகளின் கண்களின் கருமையையொத்த ஓர் உண்மையை முற்றாக மறைத்துக் கொண்டு அந்தக் கதை நெருங்கத் துடித்துக் கொண்டிருக்கும் புரிதலை அண்ட விடாமல் காத்தது.
கதை வெளிவந்த முதல் சில நாட்களிலேயே ஓலைச்சுவடிப் பிரதிக்குக் குவியத் தொடங்கிய கூட்டம் தடித்துக் கொண்டே வந்தது. அதன் அடர்த்தியைச் சமாளிக்க முடியாமல் அனைவரையும் கொடுக்குப் பிடித்து நிற்க வைக்கும் முயற்சியும் தோற்றது. அலையலையாகப் பிரதிகள் லாரிகளில் வந்து குவிந்தும் பலர் பொறுமை காக்க முடியாமல் பிடுங்கிக் கொண்டு ஓடினர். பல பிரதிகள் இழுபறியில் கசங்கிக் கிழிந்தன.
புத்தகக் கடைகளுக்குக் காவல் துறையினரின் உதவி தேவைப்பட்டது. எனினும் அவர்களின் வாகனங்கள் கூட்டத்தை நெருங்க முடியாமல் தெருவிலேயே நிறுத்தி வைக்கப் பட்டன. திரண்டு வந்த கூட்டம் காவல்துறையினரை மதிக்காமல் தள்ளிக் கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது. விமர்சகர்கள் தங்கள் குறிப்புக்களில் இந்தச் சூழல்களையும் குறித்துக் கொண்டனர். விமர்சனம் என்பது உணர்ச்சி பொங்காது எழுதப்படவேண்டும் என்னும் விதியை அறிந்தவர்களாக இருந்தாலும் இந்தச் சூழலின் உணர்வுகள் அவர்களைத் தாக்குவதை அவர்களின் நாளைய எழுத்துப் பிரதிபலிக்கும் என்றே தோன்றியது.
வாசகர் கூட்டம் என்பது விரிவடைந்துகொண்டே போனது. மாணவர்கள், ஜேப்படித் திருடர்கள், ஆசிரியர்கள், திரைப்படத் துறையினர், எத்துவாளிகள், அரசியல்வாதிகள், குண்டர்கள், சாமியார்கள், வியாபாரிகள், முடிச்சுமாறிகள், எழுத்தாளர்கள், வேசிகள், ஓவியர்கள், தொழிலாளர்கள், மாணவிகள், சகல ஊடகங்களையும் சார்ந்த பணியாளர்கள்... யார்தான் அங்கில்லை? அரசாங்கச் சேவகர்களும் கோப்புகளுக்குச் சிவப்பு நாடா கட்டி வைத்துவிட்டு விரைந்து வரத் தொடங்கினர்.
பார்க்கப் பார்க்க அந்தக் கதை ஒரு பிரமைதானோ என்ற சந்தேகம் பலர் மனங்களிலும் முளைத்து வலுப்பட்டு வந்தது. திடத்தன்மை கொண்ட நீரும், இருளும், கரு மேகங்களும் முடை நாற்றமுடைய காற்றும் கல்லும் இணைந்து ரசாயன மாற்றத்தால் இந்தக் கதை உருவாக்கப்பட்டதோ என்று அவர்கள் சந்தேகம் கொண்டனர். இந்தச் சந்தேகம் அடக்கி வைத்துக் கொள்ள முடியாத மன அரிப்பானபோது இவை பற்றிய பேச்சுக்கள் தொடங்கின. இந்தப் பேச்சு பரவத் தொடங்கியதும் அவர்கள் சொன்னவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அவர்களுக்குக் கத்தி பதில் சொல்லத் தொடங்கினர். ஒரு காகிதத்தின் மேல் இத்தனைக் கெட்டியான கதையை உருவாக்க முடியுமா என அவர்கள் கேட்டனர். ஆம்! அந்தக் கதையின் கனம் அவ்வப்போதாவது கைகளில் தாங்க முடியாத அளவுக்குக் கனக்கத்தான் செய்தது.
தொடர்ந்து கைகளில் தாங்கியிருந்தால் அது கனம் அதிகரித்தும் குறைந்தும் துடிப்பதும் உணரப் பட்டது. அதன் கனபரிமாணம் பற்றி வாதங்கள் வெடித்தன. கத்துதலும் சலசலப்பும் ஏற்பட்டன. அந்தச் சலசலப்பு கைகலப்பாக மாறலாம் என்ற செய்தி வெட்டவெளியில் அச்சுறுத்துவதுபோலப் பரவிற்று.
ஆனால் அந்தக் கனத்துக்கும் அதில் ஒளிந்துள்ள மறைவுண்மைக்கும் யாராலும் விளக்கம் கொடுக்க முடியவில்லை. உளவியல் அறிஞர் ஒருவர் தான் சொல்வது ஒரு ஊகம்தான் என்னும் முன்னுரையுடன் தன் மாணவர்களுக்கு விளக்கம் தந்தார். இப்படி மறைந்துள்ள ஒரு பொருளுக்கு வாசகர்கள் இப்படி சைப்படுவது ஏன் என்பது அந்தக் கதாசிரியருக்கே ஒரு புரியாத புதிராக இருக்கலாம். இப்படி ஒரு கூட்டம் மறை பொருளை எண்ணிக் கலவரப் படுவது சிரியருக்கு மிகப் பெரிய கேள்வியாகி அது பூதாகரமாக வளர்ந்திருக்கலாம். இதை மனதில் கொண்டு இந்த மக்களுக்கு ஒரு மறை பொருளைத் தெரிந்து கொள்ளும் ஆசை இப்போதுதான் முதன் முறையாகத் தோன்றியிருக்கிறது என்ற தவறான எண்ணத்திற்கு அவர் வரலாம். அந்த ஆசிரியர் மனதில் என்னென்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்பதை யாராலும் துல்லியமாகச் சொல்ல முடியாது என்று தன் பேச்சை முடித்தார் பேராசிரியர்.
இலக்கிய இதழ்கள் அன்றி நாளிதழ்களும் சினிமா இதழ்களும் பொழுது போக்கு இதழ்களும் காட்டிய ஆர்வத்தில் அந்த அலுவலகங்களில் பதற்றம் கூடிக்கொண்டே போயிற்று. தொலைபேசிகள் இடைவிடாது இயங்கிக் கொண்டிருந்தன. சகல இதழ்களின் நிருபர்களும் குறைந்தது நான்கு பக்கத்திற்கு இதைப்பற்றிய ஸ்டோரி எழுதுமாறு பணிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் கதையைப் பத்திபத்தியாகப் பிரித்து அவற்றுள் ஒளிந்துள்ள பொருளுக்கு சமூக/ அறிவியல்/ உடற்கூறு/ ஜோதிட/ இலக்கிய அறிவுறுத்தல்கள் என்ன என்பதைப் பின்னிப் பின்னி எழுதிக் கொண்டிருந்தனர். இதை சிரியர்கள் படித்து ஓகே சொல்லவேண்டும். ரசம் ஊறியது காணாதென்று ஆசிரியர்களுக்குத் தோன்றிவிட்டால் மீண்டும் முழுமையாக எழுதிவிடும்படி ஆகிவிடும்.
ஆசிரியர்களுக்கு இதுபோன்ற ஒரு நாள் விடிந்ததே இல்லை. அவர்களுடைய மூளைகள் கொதித்துக் கொண்டிருந்தன. தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத அதிசயம் இன்று தேடி வந்திருக்கிறது. அதனைப் படிக்கக் கொடுத்து வைத்திருக்கிறார்கள் தமிழ் மக்கள். நாளை உலக இதழ்கள் அனைத்திலும் இக்கதை வெளிவரும். அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுவது ஒரு ஆசிரியனின் திறனைப் பொறுத்தது; கற்பனையைப் பொறுத்தது. வாய்ப்பு வாசலில் வந்து நிற்கிறது. மறைப்பு பெரிய விடயமில்லை. ஆனால் அதன் கனமும் இருண்மையும். அந்த அபூர்வ நிலைமைதான் ரத்தத்தைச் சூடேற்றுகின்றது. ஆக அதுதான் ஸ்டோரியின் மையம். இதில் விமர்சகர்களுக்குக் கருத்து வேற்றுமை இல்லை. எப்போது மறைவு மையம் கொண்டுவிட்டதோ அப்போதே அந்த ஸ்டோரிக்குக் கருத்துப் படிமம் எழுத்தைவிட முக்கியமாகிவிடுகிறது. ஆனால் இந்தப் பார்வையில் விமர்சகர்களுக்குக் கருத்து வேற்றுமை இருந்தது. கருத்துப் படிமம் முக்கியம் என்றாலும் எழுத்துத்தான் அதிக ரசத்தை உறிஞ்சும் திறன்கொண்டது என்று அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பாரில் விவேகமான சில விமர்சகர்கள் வாதிட்டிருக்கிறார்கள். வாழ்க்கையின் சகல மன இயற்கைகளையும் சகல மனப் பிறழ்வுகளையும் பச்சையாகச் சித்திரிக்கும் மாத நாவல்களை விடவும் இடுக்குகளில் கற்பனைத் திறன் கொழிக்கும் தட்டையான எழுத்துக்கள் ஏன் அதிக விமர்சனப் பாராட்டுக்கள் பெறுகின்றன என்று அவர்கள் கேட்டதற்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
படைப்பைப் படித்த பலர் - முக்கியமாக இளைஞர்கள் - படைப்பாளரை நோக்கிப் பல கேள்விகளைக் கேட்டார்கள். அவருக்குப் புரியும் மொழி எதுவாக இருப்பினும் அந்தப் பெருங் கூட்டத்தில் அதையும் கற்றுத் தேர்ந்தவர்கள் சிலரேனும் இருந்ததில் ச்சரியப்பட என்ன இருக்கிறது? ஆனால் அந்தப் படைப்பாளர் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமலும் முகத்தில் எளிய பாவ பேதங்களைக் கூடக் காட்டாமலும் இருந்தார். அன்பு செய்வோரை அலட்சியம் செய்வதாகக் கூட்டத்தினர் புரிந்து கொண்டதைத் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்? பொறுமையிழந்த கூட்டத்தினர் முரட்டுத் தனமான கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர். சொல்லவோ எழுதவோ இயலாத மிக பாசமான சொற்களில் அவரைக் கேலி செய்யவும் சென்சிட்டிவான அவருடைய கற்பனா மனத்தைப் புண்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள். பாசச் சொற்களை மேலும் தோண்டி பாசமாக்குவதில் கற்பனைத்திறன் கொண்டவர்களிடையே ஒரு போட்டாபோட்டி ஏற்பட்டுவிட்டதை துரதிருஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.
கூகையின் அலுவலகத்தில் நிருபர் தொகுத்துத் தந்த இந்தக் கேள்விகளைக் கூகை பார்வையிட்டுக்கொண்டிருந்தார். ஆணித்தரமான கேள்விகள் என்றாலும் அவற்றை அப்படியே வெளியிட்டால் காகிதம் அழுகத் தொடங்கிவிடும் என்று தோன்றியதால் அவற்றை ஆசிரியரிடம் கொண்டு சென்றார். ஆசிரியர் புரட்டிப்பார்த்துவிட்டு இவற்றை நாம் கவனமாகக் கையாள வேண்டும் என்றார். திடீரென்று தன் நினைவுக்கு வந்ததுபோல் அவர் ஏன் அந்தக் கதை இன்னும் தன் மேஜைக்கு வந்து சேரவில்லையென்று கத்தத் தொடங்கினார்.
கூகை தன் மனதில் உள்ளதைச் சொன்னார். இந்தக் கதையில் சில இடைப்பட்டவர்களின் குறுக்கீடு இருக்கக் கூடும் என்ற தனது சந்தேகம் அடங்குவதாக இல்லை என்றார். இந்தக் கதையைப் பற்றிப் பெண்ணிய விமர்சகர்கள் எவரும் ஒன்றும் சொல்லவில்லை என்று சொன்ன கூகையின் முகம் இறுகிப் போயிருந்தது. விடயத்தை விசாரித்துத் தெரிந்து கொள்ளவேண்டியதுதானே என்றார் ஆசிரியர். தொனி குற்றம் சாட்டுவது போல இருந்தது. "எனக்கு மேல் தகவல் தெரிந்தால் சொல்லுகிறேன் சார்!" என்று அவர் வெளியே வந்தார்.
கூகை மறுபடியும் தன் கையில் இருந்த பிரதியை உற்றுப் பார்த்தார். அதற்குள் அலுவலகம் முழுக்க அதைப் பற்றிச் சலசலவெனப் பேச்சுக்கள் பரவின. மற்றவர்களை அவர் கலந்தாலோசித்தார். அவர்கள் பிரதிகளிலும் அப்படித்தான் இருப்பதாகச் சொன்னார்கள்.
கையிருப்புத் தீர்ந்து போனதால் ஓலைச்சுவடி புதிய எடிசன் போட்டிருப்பதால் அதில் இந்த விடயம் சரி செய்யப் பட்டிருக்கலாம் என சிலர் மீண்டும் தங்கள் மோட்டார் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு புதிய பதிப்பு வாங்க கடைகளுக்கு விரைந்தனர்.
அப்போதுதான் உக்கிரமாக மழை பெய்யத் தொடங்கியிருந்தது. ஆசிரியருக்கு விடயம் எட்டியவுடன் "ஏன் மழையில் போக வேண்டும்? என் காரைக் கொடுத்திருப்பேனே!" என்றார்.
கூகை தெருவைப் பார்த்தபோது இப்படித் தொடர்ந்து பெய்தால் நெடுஞ்சாலையில் கூடத் தோணியில்தான் போக வேண்டும் என நினைத்துக் கொண்டார். செல்போன் வழியாகத் தன் அலுவலக நண்பர்களைத் தொடர்பு கொள்ள முயன்றார். கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் மின்சாரமும் நின்றுவிட்டது. தம்மைச் சிறிது சுவாசப் படுத்திக் கொள்ள அப்படியே ஏணிப்படியில் உட்கார்ந்து விட்டார்.
சிறிது நேர இடைவெளிக்குப் பின் அவரின் செல்போன் கிணுகிணுத்தது. பெரிய ஏமாற்றம் சார் என்று சொன்னார்கள். என்னவென்று கேட்டார். புதிய எடிசன் வந்துவிட்டது. ஆனால் அதில் இந்தக் கதையைக் காணோம் என்று சொன்னார்கள்.
"ஏன், ஏன்?" என்று கத்தினார் கூகை. "தெரியாது சார்! பக்கங்களெல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அந்தக் கதை இடம் பெற்ற 6 பக்கங்களிலும் ஒரு முலையில்லாத சிலையின் கோட்டுச் சித்திரம் மட்டும் திரும்பத் திரும்ப அச்சிடப் பட்டுள்ளது. எழுத்துக்களையே காணோம்! என்றனர். கூகை மீண்டும் கேள்விகள் கேட்க முயன்றபோது தொடர்பு அறுந்துவிட்டது; அல்லது முறிக்கப் பட்டிருக்கலாம் எனவும் அவருக்குச் சந்தேகம் தட்டியது.
கூகை ஏணிப்படிக் கைப்பிடியில் தன் கைகளை வழுக்கியவாறே இறங்கி முதல் தளத்துக்கு வந்தபோது ஆசிரியரின் கத்தல் கேட்டது. கூகை மெதுவாக அவர் அறைக்குள் நுழைந்தார். அடுத்த பதிப்பில் கதை இல்லாதது பற்றியும் கோட்டுச் சித்திரம் மட்டும் இருப்பது பற்றியும் சொன்னார். "பெரிய மர்மமாக இருக்கிறது சார்!" என்றார்.
"இதில் என்ன பெரிய மர்மம்? புதிய எடிசனில் கதை இல்லாதது மர்மமா?" என்றார்.
"இல்லை!"
"கோட்டுச் சித்திரத்தில் பெண்ணுக்கு முலையில்லாதது மர்மமா?"
"இல்லை"
"அப்புறம்?"
"பெண்ணும் முலையும் மையமாக உள்ள இந்தக் கதை முழுவதிலும் ஒரு பெண் கூட இல்லை. அதுதான் மர்மம்!" என்றார் கூகை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள் பெப்ருவரி 2005; இதழ் 62
இருப்பும் இழப்பும்!
- கே.எஸ்.சுதாகர் -
"மஞ்சு! குசினிக்குள்ளை சாப்பாடு தட்டாலை மூடி வைச்சிருக்கிறன். எடுத்துக் கொண்டு போய் மாமாவுக்குப் பக்கத்திலை வைச்சுவிடு பிள்ளை." பழைய கதிரை ஒன்றிற்குள் இருந்து, கிழிந்த உடுப்பு ஒன்றைத் தைத்துக் கொண்டிருந்த மங்கை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஓலைப்பாயிலிருந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த மஞ்சு, ஒருவித ஏக்கத்துடன் தாயை நிமிர்ந்து பார்த்தாள்.
"அண்ணாவை வந்தவுடனை எல்லாருமா சேர்ந்து ஒண்டா சாப்பிடுவம் எண்டு சொன்னியள். இப்ப?"
"இப்பவே ரண்டு மணியாப் போச்சு. அவையள் எப்ப வருகினமோ தெரியாது. மாமா மருந்து எடுக்கிறவர். சாப்பிடாமல் இருந்தா உடம்புக்கு கூடாது."
மஞ்சு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஓலைக் குடிசைக்குள் புகுந்தாள். மண்குடிசை, செங்கல் வீட்டின் பின்புறம் இருந்தது. அவள் போவதையே வெறித்துப் பார்த்தபடி அம்மா இருந்தாள். தகப்பனின் நிறம் மகளிற்கு இடம் மாறியிருந்தது, வாழ்க்கையில் எவ்வளவு கொடூரத்தை ஏற்படுத்தி விட்டது. கறுப்பு என்றால் கூட பரவாயில்லை. அது என்ன நிறம்? சாம்பலில் எண்ணெய் விட்டுக் குழைத்து அப்பியதுமாப்போல்!
உள்ளே மாமாவைக் காணாததால், வெளியே வந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள் மஞ்சு. வீட்டிற்குக் கிழக்குப் புறமாகவிருந்த குறுக்கு வேலிக்கம்பியைப் பிடித்தபடி, எதிர்ப்புறக் காணிக்குள் எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் இராமலிங்கம். வருஷம் பூராவும் விளைச்சலைத் தந்த அந்தக் காணி, இப்போது முள்ளும் புதருமாகிக் கிடக்கின்றது.
ஒவ்வொரு நாளும் அந்தக் காணிக்குள் இராமலிங்கத்தார் என்னத்தை எட்டிப் பார்க்கின்றார்?
"மாமா!" என்று மஞ்சு பதட்டத்தில் கத்தியதில் இராமலிங்கத்தார் திடுக்கிட்டுத் திரும்பினார்.
"கிணற்றடியையும் வீட்டையும் தவிர, வேறொரு இடமுமல்லே போகக்கூடாது எண்டு சொல்லியிருக்கினம். கண்ணிவெடி எங்கையெல்லாம் புதைஞ்சு கிடக்குதோ ஆருக்குத் தெரியும்."
மஞ்சு ஏதாகிலும் பேசினால் இராமலிங்கத்தின் முகத்தில் ஒரு வேதனையின் சாயலில் புன்னகை தோன்றும். தற்பாது காப்புக்காக வைத்திருந்த தடியை ஊண்றிக் கொண்டு மஞ்சுவை நோக்கி வந்தார். மங்கை திருமணம் செய்யும் வரையும் காத்திருந்ததில் இராமலிங்கத்திற்கு திருமணம் நடக்காமலே போய் விட்டது. மங்கையின் கணவன் கதிரவேலு இருக்கும் வரையிலும்இ அவருடன் இவருக்கு எந்த நாளும் பிணக்குத்தான். பிரச்சினை உருவாகுவதே கோவிலில் இருந்துதான். கதிரவேலுவுக்கு அருணகிரிநாதர், பட்டினத்தார், விவேகசிந்தாமணி பாட்டுகள் என்றால் உயிர். இராமலிங்கத்தார் அவற்றை கோவிலிலே பாடக்கூடாதென்பார்.
வாழ்க்கையைத் தோச்சுப் பிழிஞ்சு கடைந்தேறியவர்களின் காட்டுக் கத்தல் என்பார்.
கதிரவேலு காணாமல் போனதன் பின்புதான், தங்கைச்சிக்கு தரவாகவும் - தனது எதிர்காலம் கருதியும் அங்கே வந்து ஒட்டிக் கொண்டார்.
இராமலிங்கம் குடிசைக்குள் வந்து சேரும் வரைக்கும் வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள் மஞ்சு. வந்தவர் குடிசைக்குள்ளிருந்த சாக்குக் கட்டிலில் சரிந்து கொண்டார்.
"உம். என்னடி பிள்ளை? மாதமும் ஒண்டாப் போச்சு. அயலட்டையிலை இன்னமும் சனம் வந்து சேரேல்லைப் போல கிடக்கு."
"அதுதான் பொட்டுப் பிரிச்சு பூராயம் பாக்கிறியளோ? சரி மாமா, மேசையிலை சாப்பாடு வைச்சிருக்கிறன்."
"ஓம் பிள்ளை. அது சரி, எப்ப யோகன் வாறது எண்டு அறிவிச்சவன்?"
"அண்ணாவை மத்தியானம் வந்திருக்க வேணும். இன்னமும் காணேல்ல."
ஊரில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சன நடமாட்டம் இருந்தது. ஒருவேளை அவசரப்பட்டுத் தெல்லிப்பழைக்கு வந்துவிட்டோமோ என நினைத்தாள் மங்கை. இருந்ததோடு இன்னுமொரு வருஷம் கொழும்பிலை இருந்துவிட்டு வந்திருந்தால், அவர்களின் வாழ்க்கை வட்டத்திலும் ஒரு 'அஞ்ஞாத வாசம்' வந்து போயிருக்கும்.
*****
பாதை குண்டும் குழியுமாக மோசமாகி இருந்தபடியால்,, காரை ஓட்டுவதற்கு யோகனுக்கு நெடுநேரம் எடுத்தது. இது என்ன கனடாவா, காரை சறுக்கிக் கொண்டு ஓட்டுவதற்கு! மனைவி ரேவதி, பிள்ளைகள் துவாரகன், அனு இவர்களைச் சுமந்தபடி நாலுமணியளவில் கடகடவென்ற சத்தத்துடன் கார் வந்து சேர்ந்தது. ரேவதியின் சொந்த ஊர் நாவற்குழி. அவளின் பெற்றோருக்கு இடம் பெயர்ந்து அல்லற்படும் பாய்க்கியம் கிடைக்கவில்லை. இன்னமும் நாவற்குழியில்தான் இருக்கின்றார்கள். யோகனது குடும்பம் கனடாவிலிருந்து நேற்றே நாவற்குழி வந்திருந்தது.
வந்தவுடன் அம்மா ஒப்பாரி வைத்து அழுவாள் என்றுதான் எதிர்பார்த்திருந்தான் யோகன். ஆனால் அது நடக்கவில்லை. ஒப்பாரியை அவள் அடகு வைத்து பதின்மூன்று வருடங்களாகிவிட்டன.
வீடு சின்னாபின்னமாகி சிதறிப் போய் கிடந்தது. வாசலில் இருந்த இரண்டு இரும்புக் கேற்றுகளும் இப்போது இருக்கவில்லை. வீட்டிற்கும் முன்பக்க வேலிக்குமிடையிலிருந்த நிலம் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. கடைசியாக இடம்பெயர முன்பு அந்த நிலத்தில் - செவ்வரத்தை, நந்தியாவட்டை, நித்தியகல்யாணி, துளசிச்செடிகள் எல்லாம் செழித்து சடைத்து இருந்தன. இப்போது பாளம் பாளமாக வெடித்துப் போயிருந்தது நிலம்.
"யோகன், வரேக்கை எல்லா அறையளும் ஒழுகினபடி. பிறகு மேசன் ஐயாத்துரையின்ர மகன்தான் ஓடுகளை தரம் பிரிச்சு, குசினிக்கும் ஒரு அறைக்குமாக போட்டுத் தந்தவன். மிச்ச அறையள் பாவிக்க ஏலாது."
"கொட்டிலை வடிவா மேஞ்சு வைச்சிருக்கிறன். மஞ்சு சாணகத்தாலை மெழுகி வைச்சிருக் கிறாள். நாலைஞ்சு பெடி பெட்டையளுக்கு ரியூசன் சொல்லிக் குடுக்க உதவும். கொழும்பிலை இருக்கேக்கை எத்தினை பேருக்கு படிப்புச் சொல்லிக் குடுத்திருப்பாள். ஒரு சதம் காசு வாங்கியிருக்கமாட்டாள்."
வாங்கின் ஒரு நுனியில் யோகன், ரேவதி பிள்ளைகளுமிருக்க மறு நுனியில் மஞ்சு இருந்தாள். மங்கை இன்னமும் கதிரைக்குள்தான் புதைந்திருந்தாள். இப்போதுதான் அவர்கள் ரேவதியையும் பிள்ளைகளையும் முதன் முதலாக நேரில் பார்க்கின்றார்கள். மஞ்சு யோகனைப் பார்ப்பதும் நிலத்தைக் குனிவதுமாக இருந்தாள்.
"அம்மா! எங்கை மாமாவைக் காணேல்ல. ஒருக்கா வந்து பாத்திட்டுப் போ எண்டு கடிதம் போட்டிருந்தார். ஹொஸ்பிட்டலிலை இருந்ததிற்குப் பிறகு சரியாப் பயந்திட்டார் போல."
"அவருக்கு இப்ப கொட்டில்தான் தஞ்சம். என்ன மாதிரி திடகாத்திரமாக இருந்தவர். இப்ப முந்தியைப் போல ஒண்டுக்கும் ஏலாது. ஒன்பது பத்துக் குளிசைகள் எண்டு ஒரு நாளைக்குப் போட்டால்தான் உடம்பு கொஞ்சம் அசையும். மருந்தை நிப்பாட்டினாள் முடிஞ்சிடும். கொழும்பிலை இருக்கேக்கை ஒருக்கா இந்தா போறன் எண்டு ஹொஸ்பிட்டலிலை படுத்துக் கிடந்தவர்."
"அண்ணா! காலை ஒருக்கா காட்டு" என்று சொல்லிக் கொண்டே உரிமையுடன் யோகனின் காலைத் தூக்கிப் பார்த்தாள் மஞ்சு. அது இன்னமும் மாறாத வடுக்களாகி பெரிய பள்ளங்களாகக் குழி விழுந்து கிடந்தது. அவை யோகன் கடைசியாக பங்கு கொண்ட சண்டையின் தழும்புகள். பலாலி மிக் காம்பின் எல்லைப் புறங்களில் நடந்த சண்டை. முதல் வரிசையில் நின்று போரிடுகையில் சன்னங்கள் துழைக்க, நண்பர்கள் இழுத்து வந்து பற்றைக்குள் போட்டதும், தப்பிப் பிழைத்ததும் தனிக் கதை. அதன் பிறகு வாழ்க்கை என்ற போராட்டத்தில் அவனால் ஓட முடியாமல் போய் விட்டது. இப்போது கூட அவனால் நடக்கத்தான் முடியும். ஓட முடியாது. அதற்குப் பின் எவ்வளவோ நடந்து விட்டன. யோகன் வெளிநாடு போய்விட்டதால் எதுவுமே நடக்காமல் போய் விடவில்லை.
"அண்ணா! இப்ப கால் எப்பிடி இருக்கு?"
"தங்கைச்சி! வாழ்க்கையிலை ஏதாவது நடந்து கொண்டே இருக்க வேணும். விறுவிறுப்பா! இல்லாட்டி வாழ்க்கை வெறும் உப்புச் சப்பற்றதாப் போய் விடும்."
மஞ்சுவின் வாழ்க்கையில் எது நடந்தது? விறுவிறுப்பா! வெறும் உப்புச் சப்பற்ற..... அவளின் நெஞ்சு விம்மித் தணிகிறது.
*** *** ***
திண்ணையிலிருந்து எல்லாரும் இஞ்சிப் பிளேன்ரி குடித்துக் கொண்டிருந்தார்கள்.
"அம்மா! நான் ஒருக்கா இவையளை மாமாவிட்டை அறிமுகப்படுத்திப் போட்டு வாறன்" சொல்லிக் கொண்டே இருக்கையை விட்டு எழும்பினான் யோகன்.
குடிசையை அண்மிக்கும்போது இராமலிங்கத்தார் அனுவுக்கும் துவாரகனுக்கும் கதை சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. உள்ளே சாம்பராணி வாசனை தூக்குத் தூக்கியது.
" தம்பி யோகனே, வா. தலை அடிச்சுப் போடும். குனிஞ்சு வா."
"என்ன மாமா, கதை சொல்லிக் கொண்டிருக்கிறியள் போல."
"இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் விட்டா பிள்ளையளுக்கு இன்ரறெஸ்ரா சொல்ல வேற என்ன இருக்கு?"
"ஏன் மாமா எங்கட நாட்டுக்கதைகளையும் சொல்லுங்கோவன்."
"இப்பென்ன இண்டைக்கே கனடா போகப் போற மாதிரி! வந்தனியள் ஒரு மூண்டு மாதம் நிண்டுதானே போவியள்? றுதலா சொல்லுவம்."
"ஒரு மாதம் நிக்கிறதுதான் மாமா திட்டம்."
'ஒரு மாதம்' என்று யோகன் சொன்னவுடன் இராமலிங்கத்தின் நெஞ்சு திக்கென்றது. முகம் இருண்டு கறுத்துப் போனது.
"இவன் பாலச்சந்திரன் - கள்ளியங்காடு. இது கிருஷ்ணா - திருக்கோணமலை."
"யோகன்! ஊருகளை விட்டிட்டு பேருகளைச் சொல்லு. எல்லாரும் கனடாவிலை இருந்து வந்த க்கள்தானே!"
"ஓம் மாமா. இவன் திருக்குமார். இதிலை கிருஷ்ணதேவா மாத்திரம் தனிக்கட்டை."
"அப்ப என்னைப் போல எண்டு சுருக்கமா சொல்லு."
மண் குந்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த எல்லாரும் கெக்கட்டம் விட்டுச் சிரித்தார்கள். இராமலிங்கத்திடம் கதைத்துக் கொண்டிருப்பதில் பொழுது போவதே தெரியாது. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தி நாலில் நடந்த தமிழ் ஆராய்ச்சி மகாநாடு பற்றிய புதினங்களைச் சொல்வதென்றால் அவருக்குப் படு குசி. நேரில் பங்கு பற்றி அடிதடி பெற்ற அனுபவம். அவர்கள் எல்லாருக்கும் இராமலிங்கத்தைப் பிடித்துப் போய் விட்டது. கதை முடிந்து இருக்கையை விட்டு எழும்பினார்கள்.
"யோகன் ஒரு விஷயம் கதைக்க வேணும்?" என்று முத்தாய்ப்பிட்டார் இராமலிங்கம். இங்கிதம் புரிந்த நண்பர்கள் விலக, யோகன் அவர்களைப் போக விடாது தடுத்துக் கொண்டான்.
"பரவாயில்லை மாமா. நாங்கள் எல்லாரும் நண்பர்கள்தான். நீங்கள் சொல்லுங்கோ!"
"மஞ்சுவுக்கு ஒண்டுமே சரிவராதா?"
திடீரென்ற இந்தக் கேள்வியை யோகன் எதிர்பார்க்கவில்லை.
"சாதகங்கள் சரிவருகுதில்லை எண்டு அம்மா சொல்லுறா."
"அம்மாவை விடு. நீ ஏதாகிலும் பாத்தியா? சாதகங்களை மாத்திரம் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. அவளின்ர நிறமும் ஒரு பிரச்சினை யோகன். இந்த உலகத்திலை ணுக்கொரு நிறம், பெண்ணுக்கொரு நிறம் எண்ட நிலை மாற வேணும்."
தன்னைப் போல அவளும் தனித்து விடுவாளோ என்பது இராமலிங்கத்தாரின் கவலை.
"தம்பியவை நான் சொல்லுறன் எண்டு குறை நினையாதையுங்கோ. ஆனால் அதுதான் உண்மை. வெளிநாட்டிலை இருந்து வாறவை, வடிவான பெம்பிளப்பிள்ளையளாப் பாத்து கலியாணம் செய்து கொண்டு போயிடினம். அதுவும் தாங்கள் என்ன நிறம் எண்டது பற்றி அவைக்குக் கவலை இல்லை. பெம்பிள சிவப்பா இருக்க வேணும். சில இடங்களிலை மாப்பிள்ளையே பெம்பிளைக்கு சீதனமும் குடுக்கிறதாகவும் கேள்விப்பட்டன். அப்பிடியெண்டா மஞ்சு போலப் பிள்ளையளை ஆர் செய்யுறது?"
உண்மைதான். அதை யோகனும் அறிவான். அவனால் என்ன செய்ய முடியும்? காசு, நகை எல்லாவற்றையும் குடுக்கலாம். மாப்பிள்ளையை எப்பிடிக் குடுப்பது?
"அது சரி. நீயென்னத்தைச் செய்யிறது. பிள்ளையளுக்கு நல்லா தமிழ் படிப்பிச்சிருக்கிறாய். அட்சரம் பிசகாமல் நல்ல தமிழிலை கதைக்குதுகள். வெளிநாடு போனாலும் நீ செய்த ஒரு நல்ல காரியம், பிள்ளையளுக்கு தமிழ் சொல்லிக் குடுத்ததுதான்."
மாமாவுடன் கதைத்ததில் யோகனின் மனம் கனத்துப் போயிருந்தது. இராமலிங்கத்தின் கேள்விகள், வந்திருந்த நண்பர்களில் கிருஷ்ணாவின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி ஒரு பதியத்தைப் போட்டது. போகும் போது பதியத்திலிருந்து ஒரு முளை அரும்பு விட்டு கள்ளத்தனமாக மஞ்சுவை எட்டிப் பார்த்தது.
*** *** ***
இன்று அம்மாவுடனும் மாமாவுடனும் கதைத்து ஒரு முடிவு எடுத்து விடவேண்டும் என விரும்பினான் யோகன். கிருஷ்ணா நேற்று பாலச்சந்திரனுடன் தங்கிக் கொண்டான். அவனுக்கு யாழ்ப்பாணத்தில் தெரிந்தவர்கள் யாருமில்லை. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொருவருடன் தங்கிக் கொள்வான். இன்று அவன் காரணத்தோடு வரவில்லை. யோகன் வரும்போது திருக்குமார் குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு வந்தான். திருக்குமார்தான் இப்போது கலியாணப் புறோக்கர்.
"ஒருநாளைக்கு எண்டாலும் இரவு நில் எண்டா கேட்டால்தானே! சுடுகுது மடியைப் பிடி எண்ட மாதிரி மனிசியையும் பிள்ளையளையும் தள்ளிக் கொண்டு நாவற்குழிக்கு ஓடி விடுகிறாய்."
"இஞ்சை உங்களுக்குக் கஸ்டம் அம்மா!"
"இஞ்சை ஒரு பிரச்சினையும் இல்லை. இப்ப வெய்யில்காலம். மழை ஒழுக்கு பிரச்சினை இல்லை. விறாந்தையிலை பாயை விரிச்சு விட்டேனெண்டால் இருபது பேர் மட்டிலை படுத்து எழும்பலாம்."
"இண்டைக்கு ஒடியல் கூழ் அண்ணா. மூக்கு முட்டப் பிடிச்சுப் போட்டு எல்லாருமா இஞ்சையே நில்லுங்கோ."
மஞ்சு பேச்சில் ஜெயித்து விடுவாள். கடைசியில் தங்கையின் பேச்சுக்கு மகுடிப் பாம்பாக அடங்கினான் யோகன்.
பாதுகாப்பு வலயத்தில் மிகவும் பாதுகாப்பாக இருந்த மீன்கள் கொழுத்து தினவெடுத்து இருந்தன. அரசாங்கம் மீன் பிடிப்பதற்கு ஏற்படுத்தியிருந்த தடையைத் தளர்த்தியிருந்ததால் மீன்கள் தாராளமாகவும் மலிவாகவும் கிடைத்தன.
கூழ் குடிக்கும் படலம் முடிவடைந்ததும் எல்லாரும் விறாந்தையில் சரிந்து கொண்டார்கள். வேப்பமரம் பூத்து வாசனை வீசியது. தேசமெங்கும் அனல்காற்று வீசிற்று. முற்றத்தில் வேப்பம் பூ வடகம் காய்ந்து கொண்டிருந்தது.
குசினிக்குள் அம்மாவும் ரேவதியும் மஞ்சுவும் கனடாப் புதினங்கள் பற்றிக் குசுகுசுத்தபடி இருந்தார்கள். யோகன் திருக்குமாருக்கு கண்ணைக் காட்டினான். திருக்குமாரின் மனைவி விறாந்தையில் இருந்தபடியேஇ குசினிக்குள் எட்டிப் பார்த்து "அம்மா! இஞ்சை ஒருக்கா வந்துட்டுப் போங்கோ" என்றாள். அம்மாவின் பின்னால் மஞ்சு எழுந்தாள். "நீ இஞ்சை இரு! உன்னோடை கனக்கக் கதைக்க வேணும்" என்று மஞ்சுவைப் பிடித்து குசினிக்குள் இருத்திக் கொண்டாள் ரேவதி. ஒருநாளுமில்லாதவாறு தனது கையை பலாத்காரமாகப் பிடித்து இழுத்த அண்ணியை வியப்புடன் பார்த்தாள் மஞ்சு.
சற்று நேரத்தில் மங்கையின் சிரிப்பொலி வீட்டை நிறைத்தது. அம்மா இப்படிச் சிரிப்பது அத்தி பூப்பது போல்தான்.
"எங்கே திருமதி கிருஸ்ணா?" என்றபடியே ஒவ்வொருவராக குசினிக்குள் புகுந்தார்கள். மஞ்சு வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டாள்.
மூடியிருந்த மஞ்சுவின் கைகளை இழுத்து விட்டாள் ரேவதி. கடைசியில் தோற்றுப்போன மஞ்சுவின் முகம் - வெட்கம், ஆனந்தம், கண்ணீர் என மாறி கடைசியில் இத்தனை காலமும் தேக்கி வைத்திருந்த கவலை வெடித்து அழுகையாயிற்று. இராமலிங்கத்தாருடன் பேச்சுக் கொடுப்பதற்காக கொட்டிலுக்குச் சென்றான் யோகன். மாமா முள்ளுவேலியைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு அடுத்த வளவிற்குள் மூழ்கிக் கொண்டிருந்தார்.
"அம்மா! என்னம்மா எப்ப பாத்தாலும் மாமா குறுக்கு வேலியோடை மினக்கெடுறார்?"
"ஒரு நாளைக்கு ஒருக்கா எண்டாலும் உந்தக் குறுக்கு வேலியை எட்டிப் பாக்காட்டி உவருக்குச் சரிவராது. உனக்கு வேலாயுதத்தைத் தெரியும்தானே! அடுத்த வளவுக்கை குத்தகைக்கு தோட்டம் செய்தவர். அவர் மாமாவின்ர பெஸ்ற் பிறண்ட். அந்தாள் வந்திட்டுதா எண்டுதான் அடிக்கடி போய் பாக்கிறார்."
"அவர் வந்திருந்தா, இங்சையும் ஒருக்கா வந்து எட்டிப் பாப்பர்தானே. உதுக்குப் போய் எந்த நாளும்."
யோகனுக்கு சிறுவயது ஞாபங்கள் தலை தூக்கின. நவராத்திரி, திருவெம்பாவை எல்லாத்துக்கும் வேலாயுதத்திடம்தான் வாழைக்குலைகள் வாங்குவார்கள். நிலத்திலே குலை கொள்ளக் கூடியளவிற்கு கிடங்கு அகழ்ந்து, அதற்குள் குலையை வாழை இலைச் சருகுகளால் சுற்றி, வாழைமடல் தண்டுகளை கிடங்கின் மேல் பரப்பி பின் அதன் மேல் மண்ணை மெதுவாக மூடுவார். கிடங்கிற்கு சற்றுத் தள்ளி,இன்னொரு சிறிய பொந்து தோண்டி கிடங்குடன் இணைய வைப்பார். தேங்காய் சிரட்டையின் கண்களை உடைத்து விட்டு, அதற்குள் பொச்சுகளை திணித்து நெருப்பூட்டி பொந்திற்குள் வைத்து கரையெங்கும் மண் பரப்பி, 'பூ... பூ' என்று ஊதுவார். புகை வாழை மடல் தண்டுகளினூடு பரவி மண்ணிற்குள்ளால் வெளிக் கிழம்பும். அப்படியே ஒரு நாளைக்கு இரண்டு தடவை வீதம் இரண்டு நாட்கள் புகை ஊதுவார். குலை பச்சையும் மஞ்சளுமாக தோன்ற தூக்கித் தருவார்.
"அம்மா! இப்ப வேலாயுதம் அண்ணை எங்கை இருப்பார்?"
"இஞ்சை பார் இவன்ர கதையை.. ர் ர் எங்கை இருப்பினம் எண்டு ஆர் கண்டது?"
உண்மைதான். ஒரு விடியற்புறமாக நாலைந்து மணத்தியாலங்களிற்குள், மந்திரவாதி துணியை மூடி எடுப்பதற்குள், ஊரே காலியானது. இந்த இடம்பெயர்வு எத்தினை பேருக்குள் விரிசலை ஏற்படுத்தி விட்டது. அண்ணன் - தம்பி; பெற்றார் - பிள்ளைகள், அயலட்டைகள், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோருக்குமிடையிலான உறவுகளை எல்லாம் சிதைத்து விட்டது.
இரவு மாமாவுடன் கதைக்கலாம் என்று யோகன் நினைத்திருக்கையில், இராமலிங்கத்தாரைப் பிடித்து நடத்திக் கொண்டே திருக்குமார் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தான்.
"இராமலிங்கண்ணை விழப்பாத்திட்டார். அதுதான் பிடிச்சுக் கொண்டு வாறன்" என்றான் திருக்குமார்.
"மஞ்சுவுக்கு ஒரு சம்பந்தம் சரிவரும் போல கிடக்கு" என்ற திருக்குமாருக்கு,
"!" என்றார் இராமலிங்கம்.
காது கேட்கவில்லையோ அல்லது அவரால் நம்ப முடியவில்லையோ தெரியவில்லை. திருக்குமார் திரும்பவும் சொன்னான்.
"ஆரடா மாப்பிள்ளை! நீதானே தம்பி" என்றாரே பார்க்கலாம். திருக்குமாரின் மனைவி கொடுப்பிற்குள் சிரித்துக் கொண்டாள்.
இராமலிங்கம் ஏகப்பட்ட குசியில் இருந்தார். எங்கே தன்னைப் போல மஞ்சுவும் திருமணம் செய்யாமல் இருந்து விடுவாளோ என்ற பயம் இப்போது அவரை விட்டு நீங்கி விட்டது. 'அதுதான் கூழ் காச்சிக் கொண்டாடி இருக்கிறாளோ?' என்று தனக்குள் கேட்டுக் கொண்டார். பொழுதுபட்ட நேரத்தில் பாலச்சந்திரனும் கிருஷ்ணாவும் சைக்கிளில் வந்து சேர்ந்தார்கள். வீட்டிற்குள் காலெடுத்து வைக்கும்போது, வீரபத்திரர் கோவில் பக்கமாக க்கள் கத்திக் குழறும் அவலக்குரல் கேட்டது. இப்போது எந்தச் சத்தமுமே அலறலாகத்தான் இருக்கிறது.
என்னவென்று பார்த்து வரப் புறப்பட்டார்கள்.
தூரத்தே மொட்டையாகிப் போய்விட்ட பனைமரங்களும் தென்னை மரங்களும் தெரிகின்றன. கோயிலுக்கு முன்பாகவிருந்த பனங்கூடல் ‘ஷெல்’லடி பட்டு அரையும் குறையுமாகி மூழியாகிப் போயிருந்தது. காலகாலமாக ஒரு அரக்கனைப் போல, கோவில் வாசலில் இருந்த அரச மரம் வெட்டப்பட்டிருந்தது. கோவில் மணி சீந்துவாரற்று துருப்பிடித்துக் கிடந்தது. ஒரு காலத்தில் எப்படி சுறுசுறுப்பாக ஆரவாரமாக இருந்த ஊர் இன்று சாக்கடையாகிக் கிடக்கிறது. எத்தனை மிருகங்கள் நாங்கள் இல்லாத போது இந்தக் காணிகளிற்குள் உலாவியிருக்கும்? கோவிலைச் சமீபிக்கையில் சத்தம் தச்சு வேலை செய்பவர்கள் பகுதியிலிருந்து வருவதை அறியக்கூடியதாகவிருந்தது.
குடில் வீடுகளிற்கு முன்னால் சனம் குழுமியிருந்தது. அழுகையும் ஒப்பாரியுமாக.
ஆட்டிற்கு குழை ஒடிப்பதற்காக பூவரசு வேலிக் கரைக்குச் சென்ற ஒருவனின் கால் கண்ணி வெடிக்குப் பலியாகியிருந்தது. முழங்காலிற்கு கீழே இரத்தம் பெருக்கெடுத்த நிலையில் முனகிக் கொண்டிருந்தான். கார் ஒன்று வந்து சேர அவனை அதற்குள் ஏற்றினார்கள். தேகம் ஒருமுறை சிலிர்த்துக் கொண்டது. யோகன் ஒருகணம் மாமாவை நினைத்துக் கொண்டான்.
வீடு திரும்பிப் போகும்போது நன்றாக இருட்டி விட்டது. வாசலில் எல்லாரும் இவர்களைப் பார்த்தபடியே நின்றார்கள். அனு ஓடி வந்து யோகனிடம் தொங்கிக் கொண்டாள்.
"அப்பாஇ இண்டைக்கு தாத்தா ஒரு புதுக்கதை சொல்லித் தந்தவர்"
"என்ன கதை அனு?"
"காலொடிந்த ஆட்டிற்கு கண்ணீர் விட்ட புத்தரின் கதை அப்பா" என்றாள் அனு.
*** *** ***
இரவு நெடு நேரம் வரை கதைத்துக் கொண்டிருந்தார்கள். சுடச் சுட தேநீர் கொண்டு வந்து குடுத்து விட்டுப் போனாள் மஞ்சு. அடிக்கொரு தடவை கிருஷ்ணாவை சீண்டி வேடிக்கையாக இருந்தார் இராமலிங்கம். இப்போது முன்பு போல அவரால் கலகலப்பாக இருக்க முடியவில்லை. கொஞ்சம் கதைப்பதற்குள் இழைத்துப் போகின்றார்.
"கனடாவிலை இருந்து இஞ்சை வர எவ்வளவு மட்டிலை ஒவ்வொருத்தருக்கும் செலவாகுது?"
"ஆயிரத்து எண்ணூறு டொலர்கள். ஏன் மாமா நீங்களும் ஒருக்கா கனடா வந்து பாக்கலாமே!?"
"கண் பார்வையும் மங்கிக் கொண்டு வந்திட்டுது. இனியென்னத்தை நான் பாக்கிறது. சொந்த மண்ணிலை நாலு இனசனத்தோடை இருக்கேக்கை செத்துப் போயிட வேணும் எண்டதுதான் இப்ப என்ர ஆசை. ஒருவேளை நான் செத்தா, என்ர செத்த வீட்டுக்கு எல்லாரும் வருவியளோ?"
"இதென்ன இண்டைக்கு இராமலிங்கம் அண்ணை மடக்குக் கேள்வியள் எல்லாம் கேட்கிறார். நாங்கள் வராமல்!"
"தயவு செய்து ஒருத்தரும் இஞ்சை வந்துடாதையுங்கோ! அந்தக் காசை எல்லாருமா சேத்து மஞ்சுவுக்குக் குடுங்கோ."
"நல்ல ஒரு மாமாதான் நீங்கள்."
கடைசிவரை சொந்த ஊரிலேயே இருக்க வேண்டும் என்ற ஓர்மம் உடைய மாமாவைப் போல பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். பத்து மணி வரையும் நீ£டித்த உரையாடலுக்குஇ திருக்குமாரும் பாலச்சந்திரனும் முற்றுபுள்ளி வைத்து தங்கள் வீடுகளிற்குச் சென்றார்கள். யோகனும் கிருஷ்ணாவும் வீட்டு விறாந்தையில் சரிந்து கொண்டார்கள். ஒரு மண்ணெண்ணை விளக்கு அறைக்கும் விறாந்தைக்கும் இடையிலிருந்து துடித்துக் கொண்டிருந்தது.
மஞ்சுவிற்கு ஒரு இருப்புக் கிடைத்ததில் யோகனுக்கு திருப்தி. இந்த நேரத்தில் அப்பாவும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ஒரு ‘மோட்டர் பம்’பின் மீது கொண்ட சையால் காணாமல் போய் விட்டார். 'கரண்ட்' இல்லாத நேரத்தில் அதற்கு ஒரு பெறுமதி இல்லை என்று தெரிந்து கொண்டும் விசர்த்தனமாக எடுத்த முடிவில் அழிந்து போனார்.
எத்தனை பேர் வீடுகளுக்கு சென்று, விறகுகளும் மிச்ச சொச்ச சாமான்களையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். யோகனும்தான் அப்போது அவருடன் கூடச் சென்றான். அது ஒரு மழை நாள். அளவெட்டி வீதியால் வந்து அம்பனை வீதிக்கு ஏறும்போது சடசடவென ஷெல் அடிச் சத்தம் கேட்டது. மழைக்கு அந்த ஒலி வீறாப்புடன் எதிரொலித்தது. ஒரு கடைக்குள் ஒதுங்கி நின்றார்கள். திடீரென என்ன நினைத்தாரோ, "நான் போகப் போறன். நீ வாறியா?" என்றார் அப்பா. "பொறுங்கோ அப்பா! ஷெல் அடி கொஞ்சம் தணியட்டும்" என்று யோகன் சொல்லி முடிப்பதற்குள், "நீ வீட்டை திரும்பிப் போ. உனக்குக் காலும் ஏலாது" என்று சொல்லி விட்டு பாய்ந்து சைக்கிளில் ஏறிப் போய்விட்டார். அவரது பிடிவாதம் கடைசியில் அவருக்கு வினையாக முடிந்தது. அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
உண்மையிலே அப்பா ஒரு சரியான பயந்தாங்கொள்ளி. எப்படி அப்படியொரு துணிச்சல் திடீரென அவருக்கு வந்தது என்பது யோகனுக்கு இன்னமும்தான் புரியவில்லை. துளித் துளியாகச் சேர்த்த சொத்தை இழக்கும் நேரம் வரும்போது எல்லாருக்கும் அப்பிடியான ஒரு மன நிலைதான் வருமோ?
அப்பா எங்கோ பத்திரமாக இருப்பதாகவும்இ என்றோ ஒருநாள் திரும்பி வந்து விடுவார் என்றும் அம்மா நம்பிக்கை கொண்டிருக்கின்றாள்.
திரும்பி மறுபுறம் சரிந்து படுத்தான் யோகன். கிருஷ்ணாவின் குறட்டை ஒலி தாள லயத்துடன் முழங்கியது. அவனது குடும்பம் எண்பத்திமூன்று இனக்கலவரத்துக்குள் அடக்கம். காலி வீதியில் எரியும் கார் ஒன்றிற்குள் அப்பா, அம்மா, தம்பி தங்கை என ஐந்து பேரும் தூக்கி எறியப்பட்டார்கள். அவனது காலம்இ அவன் மாத்திரம் காரினின்றும் வழுகி விலகி வீதியில் விழுந்து கொண்டான். காரிற்குள் இருந்த ஒட்டு மொத்தக் குடும்பத்தின் கதறலைக் கேட்டுக் கொண்டே சிறுவனான அவன் மயங்கிப் போனான்.
மஞ்சுவிற்கு உறக்கம் வரவில்லை. யோகன் போர் முனைகளில் இருந்த நாட்களில் எத்தனை நாட்கள் இப்படி உறங்காமல் விழித்திருந்திருப்பாள் அவள்.
"அண்ணா இந்தா போர்வை. போத்துக் கொண்டு படுங்கோ. சாமத்திலை குளிரும். உங்களுக் கும்தான்"
"அண்ணா! நுளம்புச் சுருளை இதிலை கொழுத்தி வைக்கட்டுமா?"
நிமிடத்திற்கு நிமிடம் ஒரே 'அண்ணா' புராணமாக இருந்தாள்.
"எடியேய் போய் படடி கெதியா" என்றாள் மங்கை.
"அம்மா! நித்திரை வருகுதில்ல."
"கொஞ்ச நாளைக்கு அப்பிடித்தான் இருக்கும்."
"போம்மா!"
யோகன் அன்று அப்பாவுடைய நினைவுகளுடன் உறக்கத்திற்குப் போனான். விடியற்புறம் நாலு மணி இருக்கலாம். ஒரு கையில் விளக்கும், மறுகையில் தட்டமும் கொண்டு அப்பா பூ புடுங்குகின்றார். தேவாரம் அப்படியே காற்றில் எழுந்து வந்து இவன் காதில் விழுகிறது. மெய் மறந்து போகின்றான். பக்கத்து வீட்டிலே மாடுகள் சாணி போடும் சத்தமும்இ தொடர்ந்து பால் கறக்கும் ஓசையும் கேட்கிறது. "தம்பி யோகன்இ ஒருக்கா எழும்பு. பாம்பு ஒண்டு பூமரங்களுக்கிடையிலை நிக்குது" அப்பாதான் கூப்பிடுகின்றார். திடுக்கிட்டு கண் விழிக்கின்றான். பிரமை. அப்படியே முற்றத்தை எட்டிப் பார்க்கின்றான். பூ மரங்களற்று மொட்டையாகிப் போவிட்ட பூமியிலிருந்து ஒரு சாரைப் பாம்பு நெளிந்து நெளிந்து தெரு வீதிக்குள் போக எத்தனிக்கிறது. பயந்து போய் விட்டான் யோகன்.
அதன் பிறகு யோகனுக்கும் நித்திரை வரவில்லை. நிலவு பால் போல எறித்தது. எழுந்து நடமாடித் திரிந்தான். சீதளக் காற்று வேப்பம் பூ வாசனையுடன் மெல்லத் தழுவிச் சென்றது. குடிசைக்குள் காலடி எடுத்து வைத்து மாமாவை எட்டிப் பார்த்தான். மாமா குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
*** *** ***
மஞ்சுவின் கலியாண எழுத்து, வெய்யில் தணிந்த ஒரு மாலை நேரப் பொழுதில் நடந்தது. ஆடம்பரமில்லாமல் ஊரில் இருந்த கொஞ்சப் பேரின் சீர்வாதத்துடன் அவளின் வாழ்க்கை தொடங்கியது.
மங்கையைக் காட்டிலும் இராமலிங்கத்தாரே மகிழ்ச்சியில் இருந்ததாகப்பட்டது. குழந்தை களைக் கூட்டி வைத்துக் கதைகள் பல சொல்லி, பல வினோதமான நொடிகளும் போட்டார். தியாகி திலீபனின் கதை அன்றைய கதைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்தது. கோடை காலமாதலால் பொழுது நீண்டு கொண்டே போயிற்று. முற்றத்தில் கதிரைகளைப் பரப்பிஇ புகையிலை பாக்குப் போடுவதும் தேநீர் அருந்தி சிரிப்பதுமாக விருந்தினர்கள் இருந்தார்கள். இடையிடையே அரசியலும் வந்து போயிற்று. இராமலிங்க, யோகனை கை ஜாடை செய்து கூப்பிட்டார். ‘எல்லாம் நல்லபடி முடிந்து விட்டன. வா’ என்று கூட்டிக் கொண்டு குறுக்கு வேலிப் பக்கமாகச் சென்றார். பயந்து பயந்து அடியெடுத்து வைத்தான் யோகன். ‘அங்கை பார்!’ என்று அடுத்த வளவிற்குள் கை நீட்டினார் இராமலிங்கம். அடுத்த வளவின் முள்ளுப் பற்றைக்குள் சாரமொன்றின் பகுதி ஒன்று சிக்கியிருந்து காற்றினுள் படபடத்தது. அது கதிரவேலு கடைசியாக அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதிதான்.
யோகன் நிமிர்ந்து மாமாவைப் பார்த்தான். அவன் பார்வையில் கேள்வி தொக்கி நின்றது. இராமலிங்கம் ‘மாம்’ என்பது போல் தலையை ஆட்டினார்.
“அப்பா உயிருடன் திரும்பி வருவார் எண்டு அம்மா காத்திருக்கின்றாள். அவளின்ர காத்திருப்பு அப்பிடியே இருந்து விட்டுப் போகட்டும். நீ ஒண்டும் சொல்லிப் போடாதை யோகன்.”
யோகனிற்கு கண்கள் முட்டின. இராமலிங்கத்தார் அவனைக் கட்டிப் பிடித்து தழுவிக் கொண்டார். அதுவே யோகனுக்கும் இராமலிங்கத்தாருக்குமான கடைசித் தழுவலாக இருந்தது.
கலியாண எழுத்து நடந்து, இரண்டாம் நாட்காலையில் மாமாவிற்கு தேநீர் குடுப்பதற்காக குடிசைக்குள் நுழைந்தபோது அவர் இறந்து கிடப்பதை மஞ்சு கண்டாள்.
இராமலிங்கத்தின் சடலத்திற்கு கொள்ளி வைத்ததால் மேலும் ஒரு மாதம் நின்றுவிட்டுப் போவதென யோகன் முடிவு செய்தான். கிருஷ்ணதேவாவும் அவனுடன் தங்கிக் கொண்டான். பாலச்சந்திரனும் திருக்குமாரும் குறிப்பிட்ட நாளில் திரும்புவதென முடிவு செய்தார்கள்.
மங்கை தனக்குள்ளாக கதைத்துக் கொண்டு விசர் பிடித்தது போலத் திரிந்தாள். சில மணி நேரங்கள் மகிழ்ச்சி. பின் மீண்டும் துயரம். ஒவ்வொரு தடவையும் பழைய நினைவுகளிலிருந்து தப்பித்து வெளியே வர அவள் முயற்சிக்கும் போதும் ஏதோ ஒன்று அவளைப் பிடித்து உள்ளே இழுத்து விடத்தான் செய்கிறது.
‘ஊரிலை இனசனத்தோடை இருக்கேக்கை போய் விட வேண்டும்’ என்று இராமலிங்கம் சொன்னதில் ஏதாவது அர்த்தம் இருக்கலாம் என அவள் நினைத்தாள். அங்கேதான் அவளது சிந்தனைக் கப்பல் இப்போது நங்கூரம் பாய்ச்சி நிற்கின்றது. ஒரு தேவாரப் புத்தகமொன்றை சாட்டுக்கு எடுத்துக் கொண்டு அதே பழைய கதிரைக்குள் முடங்கிக் கிடக்கின்றாள்.
ரேவதியும் மஞ்சுவுமாக குசினிக்குள் இருந்த மேசை ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்து விறாந்தையினுள் வைத்தார்கள்.
புத்தகத்தினின்றும் கண்களைத் தாழ்த்தி என்ன நடக்கின்றது எனப் பார்த்தாள் மங்கை.
மாமாவின் படமொன்றைக் கொண்டு வந்து மேசைமீது வைத்து விட்டு குத்து விளக்கொன்றைக் கொழுத்தி வைத்தாள் மஞ்சு. யோகனது பிள்ளைகளும் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுமாக முற்றத்திலே ஓளித்துப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
கதிரையை விட்டெழும்பிய மங்கை படுக்கையறைக்குள் சென்று சூட்கேசினுள் கிளறி ஏதோ ஒன்றை எடுத்தாள். அது கதிரவேலுவினுடைய ஒரு பழைய படம். அதைக் கொண்டு வந்து இராமலிங்கத்தின் படத்திற்குப் பக்கத்தில் வைத்து விட்டு, குத்து விளக்கினுள் மேலும் எண்ணெயை ஊற்றினாள். உள்ளேயிருந்து வந்த மஞ்சு அம்மாவின் செய்கையைத் திகைப்புடன் பார்த்தாள்.
“அம்மா! அம்மா!! இஞ்சை ஓடி வாங்கோ” என்ற அனுவின் குரல் கொட்டிலிற்குள் இருந்து கேட்டது. “பிள்ளை, ஒருக்கால் எட்டிப் பார். ஓடிப் பிடிச்சு விளையாடினதுகள். விழுந்து போச்சுப் போலக் கிடக்கு” என்று ரேவதியைப் பார்த்து மங்கை சொன்னாள்.
கொட்டிலிற்குள் சென்ற ரேவதியும் மஞ்சுவும் மூக்கைப் பொத்தியபடி போன வேகத்தில் திரும்பினார்கள்.
“ஒரே மணம். புழுத்த நாத்தம். ஏதோ செத்துக் கிடக்குது போல.”
“அண்ணா, மூக்குக்கு துணியைக் கட்டிக் கொண்டு போய் பாரண்ணா.”
மூக்கிற்கு லேஞ்சியைக் கட்டிக் கொண்டு கொட்டிலிற்குப் போன யோகனும் கிருஷ்ணாவும்இ வரும் போது ஒரு பித்தளைக் குடத்துடன் வந்தார்கள். முற்றத்திலே அதைத் திருப்பிக் கவிட்டுக் கொட்டினார்கள். உள்ளேயிருந்து நாட் பட்ட சோறு கறியள் எல்லாம் கூழாம் பாணியாக வந்து வெளியே விழுந்தன. இடையிடையே நனைந்து ஊதிப் பருத்த பச்சை சிவப்பு மருந்துக் குழிசைகள் ஏராளமாகக் கிடந்தன. அவற்றிலிருந்து கொழுத்த புழுக்கள் நெளிந்து நெளிந்து வெளியே வந்து கொண்டிருந்தன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள் ஏப்ரல் 2005; இதழ் 64
மன்ற மதுஷாலா பொம்மை!
- பாஸ்டன் பாலாஜி -
"அறிவின் மூலமாக உங்களுக்கு லாட்டரியில் வாகனம் விழும்".
பின்பக்கம் திரும்பினால் 39 Kg. வாகனம் லாட்டரியில் கிடைத்தாலும் ஓட்டுவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும். பஜாஜ் பல்ஸர் மேல் நான் உட்கார்ந்து ஒட்டுவது, சினிமாஸ்கோப் திரையில் தனுஷ் பறந்து பறந்து அடிப்பதை போல் இருக்கும்.
அமெரிக்காவில் இருக்கும் பத்து வயதே ஆன சித்தப்பா மகள் கூட நாற்பது கிலோ. வயதுக்கேற்ற எடை வேண்டும் என்று படித்ததினால் முப்பத்தொன்பது வயதில் முப்பத்தொன்பது கிலோ. 'நான் இருவர்; நமக்கு ஒருவர்' என்ற வசனத்தைக் கேட்டு 19.5 கிலோவாக இல்லாமல் இருப்பதுதான் ஆறுதல். என்ன செய்தும் எடை ஏற மாட்டேன் என தலைவனைப் பிரிந்த சங்க காலத் தலைவி போல் மெலிந்து வருகிறது. இருபத்தியாறு இன்ச் வைத்து பேண்ட் தைக்க கொடுத்தால், தைத்து முடிப்பதற்குள் இடுப்பு இருபத்தி நான்காக மெலிகிறது.
ஞாயிற்றுக்கிழமை என்று பார்க்காமல் எல்லா நாட்களிலும் 'ஐஸ்க்ரீம் சண்டே' சாப்பிட்டுப் பார்க்கிறேன். இரவில் தேன் குடிக்கிறேன். காலையில் மாட்டுப்பால், கோழி முட்டை, ஆட்டுப்பாயா, மீன் வறுவல் சாப்பிடுகிறேன்.
வீட்டின் படுக்கையறையில் இருந்து குளியலறைக்கும், அங்கிருந்து சாப்பாட்டு மேஜைக்கும், எஸ்கலேட்டர் போட்டு இருக்கிறேன். அதிலும் நின்றால் சக்தி வீணாகிப் போய் எடை போடாமல் போய் விடலாம் என்பதால் உட்கார்ந்தே வீட்டின் அனைத்து இடங்களுக்கும் உலாவி வருகிறேன்.
விளம்பரத் துறையில் வேலை பார்ப்பவர்களை விட கணினி வல்லுநர்கள் சீக்கிரமே குண்டாகிறார்கள் என்று சொல்ல தொழிலையும் மாற்றி விட்டேன். உட்கார்ந்த இடத்தில் காபி, வேளா வேளைக்கு பீட்ஸா, சாய்ந்து உட்கார சொகுசு நாற்காலி, குளிரூட்டப்பட்ட அறை, அவ்வப்பொழுது மொறுக்க, உருளையை -- விரல் நீளத்துக்கும் கவிதைப் புத்தக தடிமனுக்கும் நறுக்கி தேங்காய் எண்ணெயில் பொறித்தெடுத்த ·ப்ரை, மாலையில் காலோரிகள் சீனாவின் ஜனத்தொகையாகக் கொட்டிக் கிடக்கும் பியர் என்று கவனித்தாலும் இன்னும் முப்பத்தொன்பதிலேயே நிற்கிறேன்.
தெருமுக்கு கருமாரியில் ஆரம்பித்து நியுயார்க் பிள்ளையார் அருள்பாலிக்கும் பெசண்ட் நகர் அறுபடை வீடு முருகன் வரை எல்லாரையும் பொதுப்பணித்துறை காரியம் ஆக கவனிக்கும் பொதுஜனமாக திருப்திப் படுத்தியாச்சு. பட்டினி இருப்பதால் ஐயப்ப விரதமும், மொட்டை அடித்து இரண்டு கிலோவை கழிக்க வைப்பதால் திருப்பதியும், முஷார·ப் கிடைக்காமல் போனதால் என்னைப் போட்டுத் தள்ளும் வாய்ப்பு உள்ளதால் அமர்நாத்தும், இருபது மைலுக்கு நடராஜா சர்வீஸ் விடுவதால் மானசரோவரும் மட்டுமே பாக்கி.
நண்பர் சொல்லித்தான் ராஜசன்னிதானத்தைப் பார்க்க சென்றேன். எல்லா சாமியாரையும் போல் இல்லாமல் கோட் சூட் டையுடன் பளபளக்கும் கருப்பு காலணிகள். பாம்பின் தோல் போல் கண்ணைப் பறிக்கும் மென்மையுடன் கன்னங்கள். புருவத்தின் மத்தியில் இருந்து அளவெடுத்து பிரித்துப் போட்ட சாலையின் வெள்ளைக் கோடு போல் கருஞ்சாந்து. சாலையில் செல்லும் கார்கள் போல் விபூதி துணுக்குகள். சாம்பாரில் போடப்படும் துளிப் பெருங்காயம் போல் கொஞ்சம் சந்தனம். அதன் மேல் உப்பு போல் தேவைக்கேற்ற குங்குமம.
"நான் செத்துப் போயிடுவேனா?" ஆறாவது ப்ளடி மேரி அவனுக்காக மேஜையில் உட்கார்ந்திருந்தது.
"நிச்சயமாக எல்லோரும் ஒருநாள் இறந்துவிடுவோம்." மாறாதப் புன்னகையுடன் சாமியாருக்கு பியர் ஊற்றி நிரப்பும் ஜமுனா, அவனுக்கும் அதே புன்சிரிப்புடன் இன்றும் சொல்லிக் கொண்டிருப்பாள்.
அதிக மனிதரில்லாமல், ஜமுனா போன்ற சிரத்தையான சிப்பந்தியைக் கொண்ட பார்வையாளர் மன்றம். அங்கு பரிமாறப்படும் உணவில் எனக்கு அவ்வளவாக ஆர்வமில்லை. உள்ளே நுழைந்தவுடன் உயரமான நாற்காலிகள் அணிவகுத்து நிற்கும். ஒன்றுக்கிருப்பதற்கு வசதியாக, ரெஸ்ட்ரூம்களுக்கு மிக அருகே ஓரமாக உட்கார்ந்து கொண்டு, தினமும் ஒருவன், நாம் அனைவரும் இல்லாமல் போவதை உறுதி செய்துகொண்டு இருந்தால், இருப்பை உறுதிப்படுத்தும் உணவின் அவசியம் இல்லாமல் போகிறது.
மன்ற மதுஷாலாவில் இருந்து இரண்டடி நடந்தால் இரயில்வே ஸ்டேஷன். எனக்குரிய ட்ரெயின் வந்துவிட்டதா என்று உள்ளே உட்கார்ந்தபடியே அறிந்துகொள்ள முடியும். வண்டியில் ஏறித் தூங்கிவிட்டால் கடைசி நிறுத்தம் என்னுடைய ஊர். அங்கிருந்து மூன்று நிமிடம் நடந்து இரண்டு மாடி படிக்கட்டு ஏறினால், என் வீடு. நிம்மதியாக மது உண்ணும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. இங்கே இருக்கும் முகமூடி மனிதர்கள் கூட மதுவருந்துகிறார்கள். ஆனால், வாய்க்குள் ஓட்டை இருக்கிறது. கண்கள் எப்படி பார்ப்பார்களோ தெரியவில்லை. என்னுடைய மூத்திரம் இங்கேதான் கொட்டியிருக்கிறது. அந்த மணமும், அவர்களின் தூங்க முடியாத நிர்ப்பந்தமும், போதைக்காக குடிப்பதை விட, வாயில் எப்போதும் பெப்பர்மிண்ட் மிட்டாய் வைத்திருக்கும் என் முப்பத்தொன்பது கிலோ நாட்களைக் கொண்டு வந்தது. எனக்கு எப்போதுமே பால்குடி மாறவில்லை. அம்மாவிடம் எட்டு வயதுவரை பாலுண்டேன். அதன் பிறகு வாயில் பெப்பர்மிண்ட் வைத்துத் திரிந்ததாக அக்கா சொன்னாள். எல்லோரும் ஒரு நாள் இறந்து போவார்கள் என்பதை நான் முதன் முதலில் தெரிந்து கொண்டது, என் அக்காவின் மூலம்தான். குழந்தைப் பேறு காலத்தில் வாந்தி எடுப்பதும், மயக்கம் வருவதும், தலைசுற்றுவதும் நிறைய சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஆனால், சினிமாவில் எள்ளி நகையாடிய ப்ரெயின் ட்யூமர் என்னுடைய அக்காவிற்கு வந்தபோது, மனிதர்களுக்கு இல்லாத நோய்கள் வரும் என்று புரிந்து கொண்டேன்.
நமக்குத் தெரிந்தவர்கள் நம் கண் முன்னே, மெதுவாக, துளித் துளியாக சிதைவது பார்க்கத் தகாதது. கொடுமைப் படுத்துபவர்களுக்கு நல்ல மனநிலை வேண்டும். அடுத்தவன் அழிவதை, வருந்துவதைப் பார்ப்பதால் கடவுள் போன்ற தீவிரவாதி தொழத்தக்கவன்.
வாரம் ஒரு தடவை கீமோதெரபி, மொட்டையடிக்கப்பட்ட நீண்ட கூந்தல், என்னை விட விநாடிக்கு நூறடி மெதுவாக நடந்து கரிசனப்பட வைக்கும் நடையைப் பெறுவது, பிறர் மகிழாவிட்டாலும் சலிக்க வைக்கிறோமோ என்னும் குற்ற உணர்வு, இவ்வளவு செய்தும் உயிர் வாழ முடியுமா அல்லது வேண்டுமா என்னும் எண்ணம் எல்லாம் மட்டும் நினைவில் நிற்கும். ஒரு வழியாகக் கருணைக் கொலை பாக்கியம் இல்லாமல் அக்கா தவறிப் போனாள்.
அப்பொழுது நான் வாயில் வைத்துக் கொள்ளும் ரப்பரை விட்டு விட்டேன். ஆனால், பெப்பர்மிண்ட் பபுள் கம் தொற்றிக் கொண்டது. சவைப்பது. மீண்டும் சவைப்பது. பல் வலிக்க சவைப்பது தொழில். எதிர்பாலாரைக் கண்டால் புன்னகைப் பூப்பதை விட நுரை பூப்பது என்னால் முடிந்தது. அதன் மூலம், அவர்கள் பால் என்னுடைய ஈர்ப்பு அறிவிப்பை எளிதாகப் பகர முடிந்தது. என்னுடைய மன்ற அழகி ஜமுனாவைப் போல் அவர்கள் புன்னகையும் சிந்தவில்லை. கடைக்கண் பார்வைகள் பயனில்லை. அவை அவர்களுக்காக மட்டுமே. நமக்கு விருப்பத்தை அறிவிக்க அகலவழிப் பார்வைகள் அவசியம்.
மனற மதுஷாலா நாயகி ஜமுனாவிற்கு பின்புறமும் கண்கள் இருக்கிறதோ என்று நான் அவளை திரும்பச் சொல்லிப் பார்த்ததுண்டு. இறப்பை விசாரிக்கும் மனிதனின் நிலையாமையை விளக்கும்போதே, அவள் பார்வை என்னுடைய காலியான கோப்பையை அறிந்து, நிரப்பி, பழைய கோப்பையை சுத்தம் செய்யப் போட்டுவிடும். எங்கோ இன்னொருவன் போதையே இல்லாமல், குடிக்கத் தெரியாமல், பேச்சு சுவாரஸ்யத்தில் சிந்திய திரவத்தைத் துடைத்துத் தள்ளும். நடுவே அந்த மூலை மனிதனின் சந்தேகத்தை அதே புன்னகையுடன் நிவர்த்திக்கும். நான் அறிந்தவர்களில் ஒருவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட நல்ல குணங்கள் இருப்பது அரிது. அவளிடம் நாலைந்து கண்டு கொண்டது அவளின் ஆச்சரியம்.
ஜமுனா என்னைத் தேடுவாளா என்று எனக்குத் தெரியாது. ஆனால், தேடும் அவசியத்தை தொலைக்காட்சியும், தினசரிகளும் கொடுத்து இருக்காது. ஒரு இந்தியக் குடிமகன் கடத்தப் படுவது அன்றாடம் நடக்கும் நிகழ்வா? அதுவும் இந்தியாவிலேயே?
"குழந்தைகளுக்குப் பரிசு பொருள் தருவீர்களா?"
சாமியார் என்னிடம் கேட்டவுடன் அறுபது மைல் வேகத்தில் வரும் காரின் முன் நிற்கும் அணிலாகக் குழம்பினேன். குழந்தைகளை அன்றாட வாழ்வில் பார்ப்பேன். பள்ளிக்கு செல்பவர், ஹோட்டலில் துடைப்பவர், ஜெராக்ஸ் எடுப்பவர், செருப்பு கண்காணிப்பவர் என்று பழக்கப்பட்டவர்கள். ஆனால், பரிசுப் பொருள் தரவேண்டிய நிர்ப்பந்தமே ஏற்பட்டதில்லை.
என்னுடைய கணினில் அதிசயமாக முளைக்கும் கிருமிகளைப் போல எப்போதாவது உறவினரைப் பார்க்க செல்வதுண்டு. பூ, பழம், மைசூர்பா, பார்லேஜி வாங்கிச் செல்வதுண்டு.
லியோ டாய்ஸ் காலங்களில் துப்பாக்கி வாங்கிக் கொண்டு போய் நின்று சுடப் பட்டிருக்கிறேன். 'என்னுடைய பொண்ணு தீவிரவாதி ஆகணும்னு நினைக்கிறாயா?'
சரி... சாதுவாக பார்பி கொடுப்போம், 'லெஸ்பியனாகி எவளையாவது இழுத்துக்கிட்டு ஓடணும்னு கொடுக்கிறாயா?' என்றார்கள்.
மூளைப் பிரயோகம் செய்வதற்கு ஏற்ற அறிவாளி விளையாட்டுக்களுடன் சென்றால் 'பையனால் முடிக்க முடியவில்லையே என்று தாழ்வுணர்ச்சியில் உழல வைக்கப் போகிறாயா?' என்றும் கிண்டல்கள் மீளவே இல்லை.
வாசலில் நுழையும்போது கூட எதிர்ப்பு கோஷங்கள் நிரம்பியிருந்தது. நான் உள்ளே நுழைவதைத் தடுக்க +
|
-----
|
|
என்று விதவிதமான பெரிய குறிகளுடன் மாதவிடாய் நின்றுபோன வயதான பாட்டியும், மாதவிடாய் வராத வயசுப்பசங்களும் இருந்தார்கள். எல்லோரையும் மீறிதான் என் அம்மாவே என்னை இங்கு சிறையிலிட்டிருக்கிறார்கள்.
கடைசியாக நான் கொடுத்துக் கொள்ளும் விளையாட்டு சாதனங்கள் டாக்டர் செட். கத்தி, கபடா, கண் பார்க்கும் சார்ட், ஸ்டெதஸ்கோப், இருதயத் துடிப்பு அளந்து சொல்லியும் கொடுப்பதுடன் சென்றேன். அவன் இப்போது பிறக்காத என் போன்ற குழந்தைகளை அரை மணிக் கூற்றில் அபார்ஷன் செய்யும் அபார டாக்டராகி பரிசு பெறாத குழந்தைகளை முடித்து வருகிறார்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள் மே 2005; இதழ் 65
ஒரு சாண் மனிதன்!
- செழியன் -
சாதாரணமாக ஒரு புகையிரத நிலையத்தில் நிகழ்வது போலத்தான் இது நடந்து வந்தது. ஏழு வித்தியாசங்கள் சொல்லலாம் என்றாலும் அதில் முக்கியமானது, இது அங்கு நடப்பது போல, இங்கு தினமும் நடைபெறுவதில்லை. வாரத்திற்கு ஒரு தடவை வருகின்ற புதன்கிழமைகளில் மட்டுமே நடக்கின்றது.
கண் இமைக்கும் நேரத்தில், மிக வேகமாக வருகின்ற புதையிரதத்தில் இருந்து, புகையிரத நிலைய அதிபரின் கைக்கு மாறுகின்ற அந்த வளையம் போல, கணநேரத்தில் இது கைமாறுகின்றது. பார்க்கின்ற போதெல்லாம், ஒரு கைதேர்ந்த சர்க்கஸ்காரர் நடத்துகின்ற அற்புதமான மாயாஜாலக் காட்சி போல எனக்குள் அதிசயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதிசயம் மட்டுமல்ல, யாராவது ஆசிரியர்கள் கண்டுவிட்டால் என்ன நடக்குமோ என்ற பெரும் பதைபதைப்பும், நடுக்கமும் எப்போதுமே எனக்குள் இருக்கும்.
புதன்கிழமைகளில் இரண்டாவதும், மூன்றாவதுமான தொடர் பாடமாக எமக்கு வருவது சுகாதாரம். இந்தப் பாடத்திற்காக பத்து- யு வகுப்பில் இருந்து பத்து- ஊ வகுப்புக்கு, எமது வகுப்பில் இருந்த பாதி மாணவர்கள் அணிவகுத்துச் செல்லவேண்டும். மிகுதி பாதிப்பேரும் பிரயோக கணிதத்திற்காக பெளதீக ஆய்வு கூடத்திற்குச் சென்று விடுவார்கள்.
இந்தப் புதன் கிழமை எப்போது வரும் என்று வகுப்பு முழுதும் காத்திருக்கும். சிலர் வெளிப்படையாக உணர்ச்சி வசப்பட்டுப் போய் நிற்பார்கள். இன்னும் சிலர் வெளியில் வேண்டா வெறுப்பாக இருப்பது போல காட்டிக் கொண்டு உள்ளே ஆசை ஆசையாக உமிழ்நீர் வடித்துக் கொண்டிருப்பார்கள்.
இதற்கு நியாயமான காரணம் ஒன்று இருந்தது. இது ஒன்றும் பெளதீக விதிகளைப் போல குழப்பமான, விளங்க முடியாத விடயம் ஒன்றும் கிடையாது. இந்தப் பாடநேரத்தின் போது மட்டும் தான் இருபது அழகான மாணவிகளுடன் நாம் ஒன்று சேர்ந்து ஒரே வகுப்பில் படிக்கின்ற வாய்ப்புக் கிடைத்து வந்தது. இத்தனைக்கும் இரு பாலாரும் சேர்ந்து படிக்கின்ற இந்துக் கல்லூரியாம் என்று இந்தக் கல்லூரிக்கு ஒரு மட்டமான பெயர்.
கொழும்பு நாலாம் குறுக்குத் தெருவில் இருக்கின்ற குறுகலான ஒரு சந்து போல இரண்டு அடி அகலமும், பன்னிரெண்டு அடி நீளத்துடன் இந்தக் கல்லூரியிலும் ஒரு சந்து இருக்கின்றது. புதன் கிழமைகளில் இதைக் கடந்துதான் நாம் செல்லவேண்டும். அந்த இடத்தில் சற்று அவதானமாக இல்லாது விட்டால் ஒரே சமயத்தில் எதிர் எதிராக வருகின்ற இரண்டுபேர் மோதிக் கொள்ளவேண்டி வரும்.
மோதிக் கொண்டது ஒரு மாணவனுடன் என்றால் அந்த இடத்தில் ஒரு குத்துச் சண்டைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். மாணவியுடன் என்றால் பெச்சு மாமா என்று மாணவர்களால் அன்போடு அழைக்கப்படும் உப- அதிபரிடம் பத்து பிரம்படி ஆவது வாங்கிக் கொள்ளவேண்டும். அதைக் கூட சமாளித்து விடலாம். கல்லூரி விட்டதும் வாசலில் காத்திருக்கும் அவளது அண்ணனின் அடியைத் தாங்க முடியாது. அதனால் அந்த சந்தில் வரும்போது மெதுவாகவும், சற்று அவதானமாகவும் வரவேண்டியது மிக அவசியமான விடயமாக எமக்கு இருந்து வந்தது.
யுத்தப்பிரதேசத்தில் செயல்படுகின்ற கண்காணிப்புக் குழு உறுப்பினர்களைப் போல இந்த சந்தைக் கவனிப்பதற்கு என்றே விசேடமாக மாணவ முதல்வர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இந்தக் கண்காணிப்புக் குழுவின் கண்ணுக்கே மண்ணைத் தூவுவதைப் போலத்தான் சுப்புறுவின் நடவடிக்கை இருந்தது.
அவன் தான் எங்களுடைய வகுப்பின் பின்வாங்கு உறுப்பினர்களில் மிக முக்கியமான ஆள். பின்வாங்கு உறுப்பினர்களின் தலைவன் என்றும் சொல்லலாம். ஆனால் முன்வாங்குகளிலும் அவனது செல்வாக்கு இருந்தது. அவனுக்கு விருப்பம் இல்லாத எந்த ஒரு முன்வாங்குப் பயலையும், வகுப்புத் தலைவராகக் கூட நியமிக்க முடியாது.
சுகாதார பாடத்திற்குச் செல்வதற்காக நாம் அந்த சந்தைக் கடக்கின்ற நேரம் பார்த்து, எதிர்த்திசையில் இருந்து பத்து -ஊ வகுப்பு மாணவிகள் இருபது பேர் பிரயோக கணிதத்திற்குச் செல்வதற்காக அதே சந்துக்குள் நுழைவார்கள்.
எந்த விதமான தற்பாதுகாப்பு உணர்வும் இன்றி வெகு அட்டகாசமாக அந்த சந்துக்குள் நுழைந்து அவர்கள் வரும் போது, நாம் தான் அவர்களின் அண்ணன்மாரை நினைத்துப் பயந்து சற்று ஒதுங்கிக் கொள்வது வழக்கம். அந்த இடத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்து வந்தது.
சுப்புறுவின் கையில் அனாயாசமாக இருக்கின்ற கொப்பி ஒன்று வெகு இலகுவாக யோகலட்சுமியின் கைக்கு இடம் மாறும். அடுத்தவாரம் யோகலட்சுமி மார்போடு அணைத்துவரும் கொப்பி சுப்புறுவின் கைகளுக்குள் கண் இமைக்கும் நேரத்திற்குள் மாறிவிடும்.
இந்தக் கைமாற்றத்தின் போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளமாட்டார்கள் ஆனாலும் குறி பிசகாமல் கொப்பி கைமாறிக் கொண்டே இருந்தது.
நமது வகுப்பின் பின்வாங்குத் தலைவனுக்கும், பெண்கள் வகுப்பின் முன்வாங்குத் தலைவிக்கும் எப்படி உறவு வந்தது என்று பல நாட்களாக எனக்குக் குழப்பமாக இருந்தது. நித்திரை இல்லாமல் பாயில் பல நாட்கள் உருண்டு கொண்டிருந்தேன்.
பிரபஞ்சத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு ஒழுங்கு இருக்கின்றது. இரசாயனத்திலும் விதிகள் இருக்கின்றது. அந்த ஒழுங்கு முறையின் பிரகாரம்தான், மூலகங்கள் ஒன்று சேரமுடியும்.
ஒன்றுடன் ஒன்று சேரவே முடியாத இரண்டு மூலகங்கள் ஒன்று சேர்ந்தது என்றால், இரசாயனத்தில் எப்படி நம்பமுடியாதோ அது போல நம்பமுடியாத அதிசயமாக இது எனக்கு இருந்தது.
ஒழுங்கு முறையின் படி பார்த்தால் முன்வாங்கு உறுப்பினரான, எனது வகுப்பு மாணவ தலைவன் விக்னாவைத்தான் யோகலட்சுமி காதலித்து இருக்கவேண்டும். அது தள்ளிப்போனால் ரஞ்சித். போகட்டும் என்று அதையும் விட்டால் அடுத்து இருக்கின்றவன் நான். ஒழுங்கு முறை இப்படி இருக்க ஒரு ஆசிரியரின் மகளான யோகலட்சுமி எப்படி தறுதலையான சுப்புறுவைக் காதலிக்க முடியும்? இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று நான் தீர்மானித்து விக்னாவிடம் சென்று கேட்டேன்.
“அடுத்த தடவை இந்த மாதிரி ஏதாவது ஏடா கூடமான விடயத்தைப் பற்றி நீ கதைத்தால் மிஸ்சிஸ் தவரட்ணம் டீச்சரிடம் சொல்லி விடுவேன்” மிரட்டலோடு என்னை விரட்டி அடித்துவிட்டான். வகுப்புத் தலைவனாக அவன் வருவதற்கு ஓட்டுப் போட்டது சுத்த ‘வேஸ்ட்’.
ரஞ்சித் ஒரு அற்புதமான ஆள். இப்படி விக்னாவைப் போல முகத்தை முறித்துக் கதைக்க மாட்டான். தன்னால் இயன்ற அளவு நேரம் செலவழித்து எமது சந்தேகத்தை தீர்த்து வைக்கின்ற பேர்வழி. மறு நாள் காலை வகுப்புக்கு வந்ததும் ‘எல்லாம் விளங்கி விட்டதா? இன்னமும் ஏதாவது சந்தேகம் இருக்கின்றதா? என்று வெகு அக்கறையாகக் கேட்பான். ஆனால் அவனுடன் கதைப்பதற்கு ஏதாவது உயிரியல், இரசாயனக் கேள்விகளுடன் போகவேண்டும். பெளதீகத்தில் ஏதாவது சந்தேகம் என்று போனால் கூட ஒரு வாரத்திற்கு முகம் கொடுத்துக் கதைக்க மாட்டான்.
இந்த மாதிரி சமாசாரத்திற்கு, எனக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு அடிக்கடி ஏதாவது பிரச்சினை பண்ணிக் கொண்டிருக்கின்ற ஸ்கொட் ரவீந்திரன் தான் சரி என்று எனக்குத் தோன்றியது.
நான் எனது சந்தேகத்தை கேட்ட மாத்திரத்தில், கடந்த ஒரு வருடமாக என்னுடன் இருந்த எல்லாப் பகையையும் ஸ்கொட் ரவீந்திரன் உடனேயே விட்டொழித்துவிட்டான். அபயம் என்று வந்தவனை ஏற்றுக் கொள்கின்ற பண்பு அவனுக்குத்தான் இருக்கின்றது.
ஸ்கொட் ரவீந்திரனுக்கு எங்கள் வகுப்பில் ஒரு செல்வாக்கும் இருந்தது. ஏதாவது பாடத்திற்கு ஆசிரியர்கள் வரவில்லை என்றால் அவனைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் சேரும். ஸ்கொட் ரவீந்திரன் ஏதாவது கதை சொல்லத் தொடங்கிவிடுவான். இந்தக் கூட்டத்தில் பின் வாங்கு உறுப்பினர்கள் சேரமாட்டார்கள். அவர்களுக்கு வேறு பிராக்கு இருந்தது.
இப்படிக் கதை சொல்லிச் சொல்லியே இவன் களைத்துப்போய்விட்டான். கடைசியில் தனது ரசிகர்களை சமாளிக்க ‘ஒரு சாண் மனிதன்’ என்ற முடிவே இல்லாத ஒரு தொடர்கதையை ஆரம்பித்து விட்டான். உலகம்; விட்டு உலகம் மாறி வந்த ஒரு சாண் மனிதன் ஒருவனின் கதை அது. ஸ்கொட் கதை சொல்லத் தொடங்கிவிட்டால், வாயைப்பிளந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதற்குள் ஈ, இலையான் போனாலும் தெரியாது.
எனக்கும் ஸ்கொட் ரவீந்திரனின் கதைகள் பிடிக்கும் என்றாலும் எனக்குப் பக்கத்தில் இவன் இருக்கின்ற படியால் சில சமயம் கூட்டம் கூடி எனக்குப் பெரும் இடைஞ்சலாக இருந்தது. அதனால் எப்போதும் எனக்கும் ஸ்கொட் ரவீந்திரனுக்கும் ஒரு உரசல் இருந்து கொண்டுதான் இருந்தது.
“சுப்புறு மட்டுமல்ல பின்வாங்கில் இருக்கின்ற எல்லாருக்கும், ஒரு மணி நேரத்திற்காவது ஒரு காதலி இருந்திருக்கின்றார்கள்” ஸ்கொட் ரவீந்திரன் என்னிடம் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“இரசாயனத்திற்கு ஒரு விதி, உயிரியலுக்கு இன்னோர் விதி. அது போலத்தான் காதலுக்கு இன்னோர் விதி இருக்கின்றது” என்று ஸ்கொட் ரவீந்திரன் கிசுகிசுத்தான்.
“உனக்குத் தெரியுமா அது?”
“எனக்குத் தெரியாது. ஆனால் சுப்புறுவுக்குத் தெரியும்”
“சுப்புறுவாஸ” அருவருப்பாக இருந்தது எனக்கு. அத்தோடு அந்தக் கதை முடிந்து போனாலும் இரண்டு மூன்று தினங்களாக என் மனதில், வங்காள விரிகுடாவில் துள்ளி விழுகின்ற மீன்களைப் போல ஆசை துள்ளி விழுந்து கொண்டிருந்தது.
ஸ்கொட் ரவீந்திரன் நல்லவன். என் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப மிக பக்குவமாக நடந்து கொண்டான். மகாபாரத யுத்தத்தில் அர்ச்சுனன் பலவீனப் பட்டுப் போகின்ற போது வெகு நிதானமாக கிருஸ்ணர் கீதா உபதேசம் செய்தது போல பல விதமான அறிவுரைகளை எனக்கு எடுத்துச் சொன்னான்.
“வில்வித்தையை துரோணரிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும். உயிரியலை நமது பூரணச்சந்திரன் மாஸ்டரிடம் கற்றுக் கொள்ளவேண்டும். தமிழை நவரத்தினம் பண்டிதரிடம் கற்க வேண்டும்ஸ. இந்த மாதிரியான விசயத்தை சுப்புறுவிடம் தான் கற்க வேண்டும்.”
“சரி இந்த வித்தையை சுப்புறு சொல்லித் தருவானா?” எல்லா குழப்பங்களையும், வெறுப்புகளையும் ஆசையால் ஒரே ஊதாக ஊதித் தள்ளிவிட்டுக் கேட்டேன்.
பதில் சொல்லாது சிரித்தான்.
சொன்னதைச் சொல்லிய படி செய்பவர்களும் இருக்கின்றார்கள் என்பதை நீங்களும் கொஞ்சம் நம்பத்தான்வேண்டும். ஸ்கொட்
ரவீந்திரனின் பெரு முயற்சியினால், ஒரு நேர்முகப் பரீட்சை நடாத்துவதற்கு சுப்புறு சம்மதித்தான். அது என்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளலாமா? இல்லையா என்பதற்காக. இந்த நேர்முக பரீட்சைக்காக, யாழ்ப்பாணம் ஐந்துலாமுச் சந்திக்கு அண்மையில் இருக்கின்ற ‘மொக்கன்’; கடையடியில், புதன் கிழமை இரவு ஏழு மணிக்கு நான் நின்றேன்.
‘மொக்கன்’ கடைக்கான எல்லாச் செலவுகளுக்கும், தயாராக வரும்படி ஸ்கொட் ரவீந்திரன் சொல்லியிருந்தான். இதற்காக சாமி அறையில் சேமிக்கப்பட்டிருந்த செத்தல் மிளகாய் மூட்டைகளில் இருந்து, மேலதிகமாக ஒரு கிலோ இந்த மாதம் எடுக்கவேண்டியதாகிவிட்டது.
பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு, அந்த மாதம் மேலதிகமாய் ஒரு ரூபாய், உரும்பிராய் கற்பக விநாயகரின் உண்டியளலில் போட்டேன். ‘மொக்கன்’ கடையில் சாப்பாடுகளை ஓடர் செய்யும் போதே சுப்புறுவின் திறமையை என்னால் எடை போடமுடிந்தது. புட்டோடு சேர்த்து சாப்பிட மாட்டுக் குருமா, மாட்டீரல் அத்தோடு மாட்டு இரசம் என்று அவன் எடுத்த எல்லாமே மிகச் சுவையாக இருந்தது.
மாட்டு இறைச்சி சாப்பிடுவதா என்று எனக்கு தயக்கமாகத்தான் இருந்தது. “மாட்டு இறைச்சியும், மாட்டு ஈரலும் சாப்பிட்டால், தேகத்தில் ஒரு முறுக்கும், முகத்தில் ஒரு ஜொலிப்பும் வரும். பெட்டையளுக்கு எங்களைப் பார்க்கின்றபோது ஒரு கவர்ச்சி இருக்கும்” காஞ்சிப் பெரியவரைப்போல ஒரு பிரசங்கமே செய்துவிட்டான். சாப்பிட்டால் இனி மாட்டு இறைச்சி மட்டும்தான் என்று முடிவெடுத்தேன்.
“நீ நல்லாய் படிக்கிறனி. பிறகு என்னத்துக்கு உனக்கு இதுகள் எல்லாம்?” சாப்பிட்டு முடிந்ததும் தனது முதலாவது கேள்வியை எடுத்து விட்டான் சுப்புறு.
இந்தக் கேள்விக்கு என்ன பதிலை நான் சொல்வது என்று குழப்பமாகப் போய்விட்டது. எனக்கும் ஒரு இளம் பெண்ணின் சினேகிதம் வேண்டும் என்று பச்சையாக எப்படிச் சொல்வது?
ஆபாத்பாண்டவனாய் ஸ்கொட்ரவீந்திரன் தலையிட்டான்.
“ சுப்புறு, இது படிக்கிறது, படிக்காமல் இருக்கின்றது என்ற பிரச்சினைக்குள் அகப்படாத ஒரு கிளுகிளுப்பான விசயம். பெடியளுக்கு ஒரு பெட்டை வேண்டும். பெட்டையளுக்கு ஒரு பெடியன் வேண்டும். நீ என்ன சொல்லுகிறாய்?”
“பெடியளுக்கும், பெட்டையளுக்கும் ஒன்டுதான் வேண்டும் எண்டு சொல்லாதே. அப்படி யாரும் சொன்னாலும் நம்பாதே. பெடியளும், பெட்டையளும் இரண்டு, மூன்று என்று வைச்சிருக்கினம். இப்ப எனக்கு இருக்கிறவள் என்னுடைய ஆறாவது ஆள். அவளுக்கு நான் மூன்றாவது ஆள்.”
“பாத்தியே சுப்புறு. ஆளுக்காள் அஞ்சாறு பெட்டையள் என்று வைச்சிருக்கிறான்கள். இவன் இன்னமும், ஒரு பெட்டையோட கூட நேருக்கு நேர் நின்று கதைச்சதேயில்லை. பாவம்.” ஸ்கொட் ரவீந்திரன் எனக்காக அழுதுவடித்தான்.
“என்ன? ஒரே பெட்டைக்கு இரண்டு மூன்று காதலர்கள் இருக்கினமோ?” அதிர்ச்சியோடு நான் கேட்க, என்னை பரிதாபமாக சுப்புறு பார்த்தான். பதில் சொல்ல விருப்பம் இல்லாமல், தடால் என்று ஒரு மாட்டெலும்பை எடுத்து ஸ்கொட் ரவீந்திரன் உறிஞ்சிக் கொண்டிருந்தான்.
“நீ நிறைய கதையள் வாசிக்கிறனியோ?” சுப்புறு என்னைப்பார்த்துக் கேட்டான். எனக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.
“குமுதம், ஆனந்த விகடன், கல்கி இதுகளில வாற எல்லாக் கதைகளையும் வாரா வாரம் வாசிக்கின்றனான். அதைவிட ராணி முத்து மாதம் மாதம் வாசிக்கிறனான்.”
“அதுகளில கண்ணும் கண்ணும் சந்தித்து, காதல் எல்லாம் வெடித்து கிளம்பி இருக்குமே”
எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. காதலின் தொடக்கமே இந்த கண்கள் தான். கண்கள் இரண்டும் சந்தித்து விட்டால் பிறகு என்ன? புத்தகங்கள் வாசித்தே இருக்கமாட்டான் இந்த சுப்புறு. ஆனால் அவுனுக்கும் இதுகள் தெரிந்துதான் இருக்கின்றது. பின்ன இதுகள் தெரியாமல் என்னெண்டு இவனால இந்த விசயத்தில கிங்காக வந்திருக்க முடியும்?
“இராமர் காலத்தில் இருந்தே இந்த கண்கள்தான் காதலின் ஆரம்பம்” உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னேன்.
“இவன் சரிப்பட்டு வரமாட்டான்.”
கோப்பையில் கரண்டியை எறிந்தான். கோபம் கடுப்பேற சுப்புறு, ஸ்கொட்ரவீந்திரனைப் பார்த்தான்.. சத்தம் கேட்டு கல்லாவில் காசு எண்ணிக் கொண்டிருந்த முதலாளி எங்களை ஒரு முறைபார்த்து விட்டு தனது வேலையைத் தொடர்ந்தார்;.
மொக்கன் கடைக்கு செலவழித்தது சுத்தமாக ‘வேஸ்ட்;’ என்று எனக்கு அழகையே வந்துவிட்டது.
“கண்கள், காதுகள், கடிதங்கள் எல்லாம் காதலுக்கு சரியாய் வராது. அதெல்லாம் கதையளில தான்டா.”
“நிசமாய் காதலிக்க வேண்டும் எண்டால், அவளவையின்ட மார்பை நீ பார்க்க வேண்டும். அப்பத்தான்டா காதல் வரும்.”
“குட் பொயின்;ட்” சூப்பி முடித்த மாட்டுக்காலை கோப்பையில் மெல்லவைத்த படி ஸ்கொட் ரவீந்திரன் கூறினான்.
அதிர்ச்சியில் உறைந்து போய் வாய்பேச முடியாமல் இருந்தேன்.
கண்களில் இருந்து தொடங்க வேண்டிய காதலை எப்படி மார்பில் இருந்து தொடங்குவது? அசிங்கம்.
“பார்க்கிறதோட நிற்பாட்டுறதில்லை. பிறகு பிடிக்கவேண்டும்.” அடுத்த குண்டை எறிந்தான்.
ஒரு கிளாஸ் தண்ணீரை அப்படியே குடித்து முடித்தேன்.
“இன்னும் ஏதாவது வேணுமா?” கடைப்பையன் வந்து நின்றான். அவனது முகத்தில் ஒரு விசமம் தெரிந்தது. ஒட்டுக் கேட்டிருப்பான்.
“பில்” ஸ்கொட் கூறினான்.
“ஒரு சிகரட் பிடிக்கப் போறன்ஸ. பில்லைக் குடுத்திட்டு வாங்கோ”
சுப்புறுவின் தலை மறைந்ததும் ஸ்கொட்டைப் பார்த்தேன்.
“எல்லாமே உனக்குப் புது புது விசயமாய் இருக்குது என்ன?” கண்சிமிட்டினான்.
“சுப்புறு சொல்லுற மாதிரியெல்லாம் என்னால செய்ய ஏலாது. இது பெட்டையளிட்ட செருப்படி வாங்குறதாய் முடியும்”.
“செருப்பாலை இல்லை குடையாலைதான் அடிப்பாளவை” சுப்புறு வந்து நின்றான். நெருப்புப் பெட்டி எடுக்க வந்திருந்தான்.
“சைக்கிளில போகேக்கை எதிர்க்க நடந்து வாற பெட்டையளின்ர மார்பை அப்பிடியே ஒரு பிடி பிடிச்சுட்டு போய்கொண்டே இருக்கலாம். அடுத்த தடவை அவளைப் பார்க்கேக்கை கண்டுபிடிக்கலாம். ஆளை அமத்தலாமா? இல்லையாவென்டு”.
“இதில ஒரு கவனம் இருக்க வேண்டும். யாராவது குடையோட வாறாளவை எண்டால் உசாராய் இருக்கவேணும்.. குடையாலை கையை முறிச்சுப் போடுவாளவை.”
ஓகோ குடைக்கு இப்படியும் ஒரு பயன்பாடு இருக்குது. இது தெரிஞ்சால் குடையளின்ர விலை ஏறிவிடும். தனது இடது மணிக்கட்டை தடவியபடி “பில் முப்பது ரூபாய் வருகுது” ஸ்கொட் கூறினான். எங்கயோ குடையாலை அடிவாங்கி இருக்கின்றான். செத்தல் மிளகாய் வித்த காசில் எழுபது ரூபாய் மிச்சம். கடையை விட்டு வெளியே வந்தோம்.
“இதே உன்ர சைக்கிள்.”
மாடு வாங்க வந்தவன், மாட்டைச் சுத்திச் சுத்திப் பார்த்த மாதிரி சைக்கிளைத் தடவிப் பார்த்தான்.
“இது என்னடா கெரியல்?”
“ஒரு சைக்கிள்தான் நிற்குது. அப்பர் சந்தைக்கு கத்தரிக்காய் மூட்டை ஏத்துறதுக்;குத்தான் பெரிய கெரியல் போட்டவர்.”
“சந்தைக்கு வாழைக்குலை கட்டிக்கொண்டு போற சைக்கிள்களில திரிஞ்சா உங்களை எவளடா பார்ப்பாளவை.”
“மட்காட் எல்லாம் ஆடுது. பு¢ரிவில் சத்தம் போடுது. நீ நாளைக்கு சைக்கிளை ஒருக்கா கழட்டிப் பூட்டக் கொடுத்திடு. பிறகு வெள்ளிக்கிழமை மத்தியானத்துக்குப் பிறகு சைக்கிளை பள்ளிக் கூடத்தில விடாதே. முன்வீட்டு வளவுக்கை நிற்பாட்டிவை.”
பெரிய தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிடுகின்ற தளபதியைப் போல சுப்புறு தெரிந்தான்.
“உந்த கெரியலை கழட்டிவைச்சிட்டு வா. கொப்பர் காலையில தானே சந்தைக்குப் போறவர்.”
“நான் வழமையாய் சைக்கிளை பள்ளிக் கூடத்தில தான் விடுறனான்ஸ.”
“வெள்ளிக்கிழமை, நாங்கள் பள்ளிக்கூடம் முடிய பத்து நிமிசம் முந்தியே வெளிக்கிட்டுட வேண்டும்.”
“பள்ளிக் கூட கேட் பூட்டிக் கிடக்குமே.”
“ முன்வழியால இல்லை. பின் மதில் ஏறிக்குதிக்க வேண்டும். குதிப்பை தானே? சைக்கிளை முன்வீட்டில விட்டால்தான் அதை எடுத்துக் கொண்டு போகலாம்.”
“பள்ளிக் கூடம் விட்டதுமே போகலாமே?”
“கோப்பாய் கிறிஸ்டியன் கொலிச் விட்டுப் பெட்டையள் ரோட்டில வாறநேரம், நாங்கள் அங்க நிற்க வேண்டும்.”
“அதுக்கு இஞ்சை இருந்து பதினைஞ்சு நிமிசம் முந்தி வெளிக்கிட்டால் தான் சரி சுப்புறு” ஸ்கொட் கூறினான்.
“பத்துநிமிசம் போதும். இரண்டு தரம் ஊன்றி உழக்க வந்திடும்.”
அங்க அழகான பெண் ஒருத்தியை எனக்கு சுப்புறு அறிமுகம் செய்து வைக்கப்போகின்றான். எனக்கு குதியாட்டமாய் இருந்தது. எப்படி முதலில் கதையை ஆரம்பிப்பது என்று எனக்குத் தெரியேலை. அது தெரியும் தானே என்று நினைத்து, எனக்குச் சொல்லித்தரமால் விடப்போகின்றான்.
“என்னென்டு முதலில நான் பேசவேண்டும்..?” தயங்கியபடி கேட்டேன்.
“பேச்சு ஒன்றும் கிடையாது. உனக்கு எப்படி இந்த மார்பு பிடிக்கின்றது என்று காட்டித்தாறன்.”
எனக்கு அந்த இரவிலும் வியர்த்துக் கொட்டியது.
இரவிரவாக நித்திரையில் விதம் விதமான மார்புகளும், விதம் விதமான குடைகளும் வந்து வந்து பயமுறுத்தின.
காலையில் முதல் வேலையாக சைக்கிள் கெரியலை சாவி போட்டு கழட்டி வைத்தேன்.
“டேய் கொப்பர் நாளைக்கு காலை சந்தைக்குப் போகவேண்டுமடா.” ஆச்சி புறுபுறுத்தாள்.
“சும்மா தொண தொணக்காதையன. இரவைக்கு திரும்பவும் பூட்டலாம்.”
சைக்கிளை ஓடும் போது தெரிந்தது. கட கட என்று ஒரே சத்தம். இவ்வளவு நாளும் எனக்கு கேட்காமல் இருந்திருக்கு.
வல்லிபுரம் கடையில் பிரேக் போட்டு நிறுத்தினேன்.
“அண்ணை சைக்கிளை ஒருக்கா கழட்டிப் பூட்;ட வேண்டும்.”
“உதில விட்டு பூட்டித் திறப்பை தந்திட்டுப்போம்.”
“பின்னேரம் எடுக்கலாமே அண்னை.”
“ பின்னேரமோ? சனிக்கிழமை வந்து பாரும்.”
“அண்ணை அவசரமாய் வேணும். காசைப்பற்றிப் பிரச்சினை இல்லை.”
வல்லிபுரத்தார் ஏற இறங்க ஒருக்காப்பார்த்தார்.
“இருபது கூட வரும். ஓ கேயோ.?”
“ஓ கே அண்ணை.”
“நாளைக்கு மத்தியானம் வாரும். ரெடியாய் இருக்கும்.”
சைக்கிளை விட்டு விட்டு பள்ளிக்கு நடந்தேன்;. இரண்டு புறம் மாணவர்களும் மாணவிகளுமாய் நடந்து கொண்டிருந்தனர். நடப்பதும் சந்தோசமாகத்தான் இருந்தது.
ஒரு பத்து அடி தூரத்தில் வனிதா போய்க் கொண்டிருந்தாள். அவளை உரசிக் கொண்டு தாண்டுவம் என்று இரண்டு அடி எட்டு வைத்தேன். நேரம். பார்த்து,அரச வீதியால் வந்து கொண்டிருந்த மிஸ்சிஸ் தவரட்ணம் டீச்சர் மெயின் ரோட்டுக்குள் ஏறினார்.
அவ எப்பவும் வெகு நிதானமாகத்தான் நடந்து வருவா. நடையில் எந்த அவசரமும் கிடையாது. இன்னமும் எத்தனை காலடி எடுத்து வைச்சால் பள்ளிக்கூட வாசலில் நிற்கலாம் என்று அவவுக்கு தெரியும். அங்கை இங்கை என்று எந்தப் பக்கமும் திரும்பிப்பார்க்கிற பழக்கமும் இல்லை. ஆனால் மனுசிக்கு என்னென்ன நடக்கிறது என்று தெரியும்.
“குட் மோனிங் டீச்சர்.”
“குட் மோனிங். குட் மோனிங்.”
“என்ன சைக்கிளைக் காணேல்லை. நேற்றைக்கு டவுனுக்கு போய் வந்ததில பழுதாப்போச்சுப் போல” ஒரு பார்வை பார்த்தார். அது கண்களை ளைத்து அதில் உள்ளதை படிக்க முயன்றது.
“இல்லைச் டீச்சர். காத்துப் போட்டுது. ஒட்ட விட்டிருக்கிறன்.” மனுசி எங்கயோ வழி தெருவில, சுப்புறுவோட வைச்சு என்னைக் கண்டிட்டுது என்று எனக்குப் புரிந்துவிட்டது.
“வீட்டில ஒரு டொக்கிமனை விட்டுட்டன். சைக்கிள் எண்டால் நீர் எடுத்துக் கொண்டு வரலாம்.”
“ஓடிப்போய் எடுத்துக் கொண்டுவாறன் டீச்சர்.”
“மிக்க உபகாரமாய் இருக்கும். வீட்டில மகள் நிற்கிறா. இண்டைக்கு அவ கொலிச்சுக்குப் போகேல்லை. கதவை கொஞ்சம் ஊண்டித் தட்டும். ஏதாவது கதைப்புத்தகத்தோட இருப்பாள், கேட்காது. எண்ர மேசையில உள்ள பச்சை கலர்; அட்டை போட்டது எண்டு சொல்லும்.”
டீச்சர் சொல்லி முடிக்க முதல் பறந்தேன். டீச்சரின் மகளும் வடிவுதான். இராமநாதன் கொலிச்சில படிக்கிறாள்.
மெல்லமாக கதவைத் தட்டினேன். கதவு உடனேயே திறந்தது.
டீச்சரின் அம்மாதான் வந்தார். தலை மயிர் எல்லாம் நரைத்திருந்தது. முகத்தில் இரண்டு குழி விழுந்திருந்தது. அந்த குழிகளுக்குள் இருந்த கண்களைக் கொண்டு, என்னை ஒரு அசிங்கமான பிராணியைப் பார்ப்பது போல பார்த்தார்.
“என்ன வேணும்?”
“இல்லைஸ. டீச்சர் தன்ர டொக்கிமன் ஒன்றை விட்டுட்டாவாம்ஸ மேசையில பச்சைக் கலர் அட்டை போட்ட படி இருக்கும்ஸ.” நான் முடிக்கும் என் முகத்திற்கு நேரே அது நீண்டது.
“ரோட்டில விழுத்தாமல் கொண்டு போடா.”
இந்தக் கிழவிக்கு என் மேல் என்ன ஆத்திரம் என்று புரிந்து கொள்ள முயற்சி பண்ணினேன். அதற்குள் பள்ளிக் கூடம் வந்து விட்டது.
ஆசிரியைகளின் அறையடியில் நின்று எட்டிப்பார்த்தேன்.
வாசலில் என்னைக் கண்டதும் டீச்சர் உள்ளே வரும்படி சைகைகாட்டினார்.
பவ்யமாக அந்த டொக்கிமன்டை அவர் கையில் ஒப்படைத்தேன்.
“தாங்யூ சுந்து.”
ஜப்பானியர்களின் ஸ்டைலில் தலை சாய்த்து டீச்சருக்கு மரியாதை செய்து விட்டுக் கிளம்பினேன்.
He is my favourite student .....நல்ல பிள்ளை” மிஸ்சிஸ் தவரட்னம் சொல்லியது எனக்கும் கேட்டது.
பத்திரிகையும் கையுமாக இருந்தவர்கள், தமது கைப்பைக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தவர்கள், தங்களுக்குள் ஏதோ வம்பளந்துகொண்டிருந்;தவர்கள் என்று எல்லா டீச்சர்மாரும் என்னை நிமிர்ந்து பார்த்தது என் உள்ளுணர்விற்குத் தெரிந்தது.
கர்வமாக இருந்தது. வகுப்பை நோக்கிப் போனேன். சுப்புறுவும் அப்போதுதான் வகுப்புக்கு வந்து கொண்டிருந்தான்.
“சைக்கிளை கழட்டிப் பூட்டக் கொடுத்தனியே?”
“ஓம்”
“குட். நாளைக்கு பின்னேரம் மூன்று மணிக்கு மதில் பாயிறம். மறந்து போகாதே.”
“நான் உதுகளுக்கெல்லாம் வரேல்லை.”
சுப்புறு ஆச்சரியமாக என்னைப்பார்த்தான். அண்டம் காகம் கண்ணை உருட்டி விழித்தது போல கோணலாக முகத்தை சரித்து விழித்தான். பிறகு சிரித்தான்.
“உங்களுக்கு ஒரு சாண் கதைதான்டா சரி” திரும்பியே என்னைப் பார்க்கவில்லை, போய்விட்டான். அதற்குப் பிறகு என்றைக்குமே என்னை திரும்பிப் பார்த்தது கிடையாது. சுப்புறு நல்லவன், யாரைப்பற்றியும் யாருக்கும் எந்தக் காலத்திலும் சொன்னவன் இல்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள் ஜூலை 2005; இதழ் 67
குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள்!
- நாகரத்தினம் கிருஷ்ணா -
ஊரை நெருங்கிவிட்டிருந்தேன்.
தைமாதம், எப்போதும்போல ஏரியில் தண்ணீர் வடிந்து கோடைகாலமென்று கைகட்டி சாட்சி சொல்லிக்கொண்டிருக்கிறது. தலைக்குமேலே காய்ந்தவண்ணமிருந்த சூரியன் கைங்கர்யத்தால், வெள்ளிச் செதிள்கள் நீரில் ஆங்காங்கே மினுக்கிக் கொண்டிருக்கின்றன. சித்தேரிக் கரையில் இரண்டொருவர், நனைந்த கோவணமும் தலையில் முண்டாசுமாய் செம்மண்நிறத் தண்ணீரை வாரியிறைத்து, வண்டிமாடுகளைக் கழுவுகிறார்கள். இடைக்கிடை வைக்கோல் பிரிகளைக்கொண்டு அவற்றைத் தேய்க்கவும் தவறவில்லை. மாடுகளைத் தேய்க்கின்றபோது, அவைகள் உடல்களைச் சிலிர்க்கவும், தலைகளைச் சிலுப்பிக்கொள்ளவும் செய்ய, மண்டைச் சலங்கைகளும் கழுத்துமணியும் கலகலவென்று அசைந்து அவ்விடத்திலோர் காரியக் கூத்து. தூரத்தில் ஏரிக்கரையிலிருந்து பார்க்க, தெற்கில் கத்தாழை, தாழம்புதர்கள் கரை வரிசைகளுக்கிடையே மணலும், கூழாங்கற்களுமாக வறண்டு கிடக்கும் ஓடை. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் நுங்கும் நுரையுமாக காவிவண்ண வெள்ளம் ஏரிக்குள் ஆக்ரோஷத்துடன் நுழையும். ஓடை வறண்டிருந்த சித்திரை மாதமொன்றில் தாழம்புதர் மறைவில், ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை முதன்முதலாக பார்த்ததும், அதனால் இரவு முழுக்க அவஸ்தைப்பட்டதும் உண்டு.
சித்தேரிக்கரையிலிருந்து வடக்காக இறங்கினால், ஊரிலிருக்கின்ற கொஞ்சம் பாரியான பெரியதெருவில் கால் வைக்கவேண்டும். இருபுரங்களிலும் தழையதழைய பூவரசுமரங்கள், தப்பிய இடங்களில் முருங்கை மரங்கள், பச்சைப்பாம்புகள்போல கொத்துகொத்தாக முருங்கைக்காய்கள். வலப்புறம் ஏரியை ஒட்டி மிகப்பெரிய ஆலமரம். தாழ்ந்த கிளைகளில், பசுமாடுகள் கன்று ஈன்றும்போது, வந்துவிழும் நச்சுக்கழிவுகள் வைக்கோலில் வைத்துச்சுற்றியவைச் சிறுசிறு பொதிகளாக ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. அப்படிக் கட்டித்தொங்கவிட்டால், 'கன்றுப் போட்டிருக்கும் பசுவிற்கு கூடுதலாக மடி சுரக்கும் என்பதான நம்பிக்கை. ஆல் பழுத்து, கீழே கிடக்கும் பழுத்த இலைகளில் விழுவது, உச்சிவேளை நிசப்தத்தை கலைத்துக்கொண்டு துல்லியமாகக் கேட்கிறது. மேல்கிளைகளில் காகங்கள், கீழ்க்கிளைகளிகளில் அணில்கள், விழுதுகளில் சிறுவர்களென்று, ஆலமரத்தினைப் பங்குப் போட்டுக்கொண்டு விளையாடுவது இன்றைக்கும் தொடர்கின்றது.
ஆலமரத்திற்கு தெற்காக புளியமரம், முன்பு இருந்ததைவிட இளைத்து இருக்கிறது. ஆனாலும் மெல்லிய புளியங்கொம்புகளெங்கும் சடைசடையாய் புளியம்பழங்கள், காற்றின் சலசலப்பில் ஒன்றிரண்டு பூமியில் விழவும் செய்கின்றன, ஊர்க்குத்தகை எடுத்தவன் இன்னும் உலுக்காதிருக்கவேண்டும். காவலுக்கென்று ஒரு கிழவி மரத்தடியிற் கொம்பினை வைத்துக்கொண்டு, ஒப்புக்குச் சப்பாணி என்றவகையில் உட்காரவைக்கப்பட்டிருக்கிறாள். கோடாலி முடிச்சும், கூன் முதுகும், 'கைப்பேணிக்கிழவி'யின் அவதார வரிசை என்பதை முன்வைக்கிறது.
கைப்பேணிக்கிழவியைப் போக்குக்காட்டி எடுத்த புளியம்பழங்களின் ஓட்டில் அளவாய் ஓட்டை போட்டு, கறந்த வெள்ளாட்டுபாலின் வெதுவெதுப்பில் ருசிபார்த்தது; ஞாபகத்தில்வந்து நாவில் எச்சில் ஊறுகிறது. தெரு, சிமெண்ட் கான்க்ரீட்தனத்துடன் சிங்காரமாக நீண்டிருக்கிறது. மேலே சிமெண்ட் இருந்தாலென்ன, அடியிலிருப்பது மண்தானே; என்னைப்போல. வலப்புறம் கிடந்த திறந்த வெளியில் நரிக்குறவர்களின் கூடாரங்கள் முளைத்திருந்தன. தள்ளிக்கிடக்கின்ற ஈச்சம்புதர்களின் மறைவில்தான் அவசரத்திற்குப் பெண்கள் ஒதுங்குவார்கள். ஆண்களைக் கண்டால் அதே அவசரத்துடன் எழுந்துகொள்வார்கள் இரண்டு நரிக்குறவ பெண்களுக்கிடையேயான சண்டை நடப்பதின் காரணமாகக் கூச்சல்கள். அதனை வேடிக்கைபார்க்கின்ற ஆர்வம் இன்றைக்கும் தொடர்வதன் அடையாளமாக, ஒரு கும்பல். அக்கும்பலின் பார்வை இப்போது என் மீது விழுகிறது. அங்கிருக்கின்ற முகங்களை ஞாபகபடுத்திப் பார்க்கிறேன். என் நினைவேட்டில் அவர்களுக்கேதும் முகமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் உள்ளத்திலே பொத்திவச்ச வேறுவகையான ஓவியங்களுக்குச் சிதைவில்லையென்றுதான் சொல்லணும்.
காலத்தூசுகளை அவ்வபோது தட்டித் துடைத்துவிட்டு; ஒன்றன்பின் ஒன்றாய் எடுத்துப் பார்த்து பழகியநினைவுகள். ஒவ்வொன்றையும் முட்டைகளாகப் பாவித்து உடைந்து விடாமற் கவனத்துடன் இறக்கியாகணும். இருபதுவருடங்களாக, அவற்றில் சில மனப்புத்தக மயிலிறகுகளாய் குஞ்சுபொறித்துகொண்டு உள்ளன. அவற்றைப் பருந்துக்கும், வல்லூறுக்கும் இறையாக்காமல் இன்றுவரை, எண்ணிக்கைக்குச் சேதமின்றி பாதுகாக்கிறேன்.
ஏரியைவிட்டு இறங்கியதுமே அந்த அனுபவத்திற்காகக் காத்திருந்தேன். தலைப்பிரவசத்தின்போது பெண்ணுக்கு ஏற்படும் அச்சமும் ஆனந்தமும், நானிட்ட முதற் காலடியில் ஒட்டிக்கிடக்கிறது, மண்ணில் விழுந்த கழிவுகளோடு சீம்பாலுக்காக தாய்ப்பசுவின் மடியினை முட்டும் கன்றினைப்போல. சித்தேரியில் படர்ந்திருக்கும் ஆலமர விழுதுகள், செம்மண்குளத்து பாசியும் தாமரையும், பாறாங்கற் பீடத்தில் கிழக்குப்பார்த்து அமர்ந்து எண்ணெய் பிசுக்குச் செதிள்களை உரித்துக்கொண்டிருக்கும் மூளிப்பிள்ளையார், எங்கள் வீட்டுக் கூன்விழுந்த தென்னை மரம், எருக்கஞ்செடி முளைத்திருக்கும் ஆதிமூலப் பிள்ளைவீட்டுக் குட்டிச் சுவர், அங்கே போஸ்டரில் தெரியும் நடிகர் நடிகைகள், அவர்களின் உதடுகளில் கரித்துண்டாற் கீறிய மீசைகள், மந்தைவெளி நாவல்மரங்கள் நாவற்பழங்கள், இலுப்பைமரம் பொன்வண்டு, இன்னும் எத்தனையோ...
இது என்னுடைய வீதி, இங்கேதான் சைக்கிள் டயரை உருட்டிக்கொண்டு, அரைக்கால் சட்டையுடன் சில நேரங்களில் அம்மணமாகக் கூட வீதிகளில் ஓடியிருக்கேன். இது என்னுடைய மந்தைவெளித் திடல் இங்கே நிலவொளியில் புழுதியில் வியர்க்க வியர்க்க 'பலிஞ்சடுகுடு' விளையாடியிருக்கேன், அப்பா புதுச்சேரிக்கோ, திண்டிவனத்துக்கோ அல்லது பக்கத்து ஊருக்கு நிலவரி வசூலுக்கோ போயிருக்குக்கும் நேரங்களில் 'கோட்டிப்புள்ளோ, பேந்தாவோ, இலுப்பைகாய் ஆட்டமோ ஆடுவதும், சில சமயங்களில் அவர் கண்ணிற்பட்டு அடிபடுவதும் நடந்திருக்கிறது. திருவிழாக் காலங்களில் உறவுப் பெண்களின் மஞ்சட் தண்ணீரிலே நனைந்திருக்கேன். சித்திரை வெயிலில் அரசமரத்து நிழலில் ஆடுபுலி விளையாடியிருக்கேன். என் வீட்டுக் கூடத்துத் தாழ்வாரத்தில் உட்கார்ந்து, பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகளை அம்மா படிக்க, பக்கத்திலிருந்து கேட்டிருக்கேன்.
"இந்த வயசுல அங்கே போயிட்டு என்னச் செய்யப் போறீங்க. இங்கே நமக்கு என்ன குறை. வாரந்தோறும் பிள்ளை வந்துட்டு பார்த்துக்கிறான். மாதத்துக்கு ஒரு முறை மாப்பிள்ளையும் பெண்ணும் வந்துட்டுப் போறாங்க. புதுச்சேரியிலிருந்து பொன்னி அரிசி, பஞ்சாபிலிருந்து பாசுமதி, யாழ்பாணத்து மரக்கறிகள்னு சகலமும் வீடு தேடிவருது. ஆபத்தென்றால் ஓடோடிவரும் அரசாங்கம், மருத்துவ வசதிகள். இதற்கு மேல என்னவேணும். இவைகளையெல்லாம் இந்தியாவில எதிர்பார்க்கத்தான் முடியுமா? "
"ஒனக்குப் புரியாது கற்பகம்.. நாந்தேடுறது மேலானது, பவித்ரமானது. நான் தவழ ஆரம்பித்தபோது சுவைத்தமண். அம்மா விரல்விட்டு எடுத்தும் அகலாமல் கொழகொழவென்று நாவில் ஒட்டியிருக்கின்ற மண்."
"இதைத்தான் திரும்பச் திரும்ப சொல்றீங்க. நீங்க வரலைண்ணு யாரங்கே அழுவறாங்க"
"சொந்தமண் நினைவுகள் என்பது ஜீவாத்மா பரமாத்மா உறவு மாதிரி. ஜீவாத்மாவை யாரும் அழைக்க வேண்டியதில்லை. அதுவாகத்தான் தேடிப் போகணும்."
"நீங்க மாதந்தவறாம பணம் அனுப்பனுப்ப உங்கக் தம்பியும் மறக்காம கடிதம்போட்டாரு. எப்போது நீங்க பணம் அனுப்பறது நிறுத்தனீங்களோ, அப்போதையிலிருந்து எந்தத் தகவலுமில்லை. யோசிச்சுப் பாருங்க..அந்தப் பணமெல்லாம் இங்கே இருந்திருந்தா, இன்றைக்கு நமக்குண்ணு ஒரு அபார்ட்மெண்டை சொந்தமா வாங்கியிருக்கலாம். இப்படி அரசாங்கத்தின் தயவுல வாழவேண்டியதில்லை."
"கற்பகம் எதற்காக இப்படிச் சத்தம்போடற? இங்கே நமக்கென்ன குறைச்சல்?"
கற்பகம் பாயிண்டைப் பிடித்துவிட்டாள்.
"அதனைத்தான் தொண்டை கிழிய நானும் சொல்லறேன். கேட்டுத் தொலைக்கணும். நாற்பது ஆண்டுகளாக இல்லாத ஊர் நினைப்பு, இப்போதைக்கு எதற்கு?"
என்னிடம் பதிலிருந்தது. சொல்லத் தைரியமில்லை. இந்தத் நாற்பது ஆண்டுகால தாம்பத்தியத்தில் நிறைய சுமந்து சுமந்து, அவள் மனது கூன்போட்டிருக்கிறது. என் மனதிலிருக்கும் நெல்லிக்காய் சிப்பத்தை அவிழ்த்துக்கொட்டினால், இந்தியாவிற்கான எனது பயணம் நின்றுபோகலாம்.
"கற்பகம் ஏதாவது தெரிந்துதான் பேசறியா? என் தம்பி இருக்கான். உறவுக்காரர்கள் இருக்காங்க. பால்ய சிநேகிதன் ராகவன் இருக்கான். எனக்குண்டானது எங்கே போய்விடும்."
"ஆ...மாம் நினைப்புப் பொழப்பைக் கெடுக்குது."
"கற்பகம்..! பாண்டவர்கள் கேட்டதுபோல, தம்பியிடம் சின்னதாய் வீட்டில் ஒரு பகுதியை எனக்காக ஒதுக்கச்சொல்லிக் கேட்கப்போகிறேன். கிடைக்கும் பட்சத்தில் அங்கேயேத் தங்கிக்கொண்டு, தெம்புள்ளவரை ஊர் மண்ணில் காலார நடந்துவிட்டு, உன்னிடம் வந்து சேருவேன்"
அவளிடம் சத்தியம் செய்தேன். இடையில் சேர்க்கவேண்டிய வார்த்தையை தாம்பத்திய தருமம் கருதி பிரயோகிக்கலை. நாற்பது ஆண்டுகால இடைவெளியில் மனதில் எழுதியிருந்த ஊர்ப் பிம்பம் கலையாமலிருக்கிறது: ஆச்சாரி வீட்டு தென்னங்கீற்றுத் தட்டியின் மறைவில் இன்றைக்கும் விறுவிறுப்பாக சீட்டாட்டம் நடக்கிறது, ஆனால் ஆடுகின்ற மனிதர்கள்தான் வேறு. பெரியபிள்ளை வீட்டுத்திண்ணையில் வெட்டிப்பேச்சு இன்றைக்கும் நடக்கத்தான் செய்கிறது, ஆனால் நானறிந்த கார்மேகம் பிள்ளையோ, தானப்பக் கவுண்டரோ, தரகர் அருணாசலமோ அல்ல; இவர்கள் வேறு. அந்தத் தூலக்கட்டுவீடு ஆனந்தக் கவுண்டருடையதாகத்தான் இருக்கவேண்டும். அவர், எந்த நேரமும் வண்டிமாடுக¨ளை வைக்கோல் பிரியால் தேய்த்துத் தேய்த்துத் அவற்றின் உடலிலிருந்து உணியெடுத்துக்கொண்டிருப்பார். இப்போதும் பூவரசு மரத்தில் ஒருஜதை வண்டிமாடுகள் கழுத்தில் கட்டிய மணிகளோடு தலையை அசைத்து வைக்கோலை அசைபோடுகின்றன, ஆனந்தக் கவுண்டர் அங்கில்லை. மேற்கால இருப்பது கூத்துவாத்தியார் வீடு. சித்திரை மாதமானால், அவர் வீட்டு வாசலில் கூத்து ஒத்திகை நடக்க, தாளச் சத்தமும், மிருதங்கச் சத்தமும் பின்னிரவுவரை கேட்டுக்கொண்டிருக்கும். பனிக்காக தலையில் முக்காடிட்டுக்கொண்டு ஒத்திகைப் பார்ப்பதற்கென் ஒரு கூட்டம் நள்ளிரவு வரை விழித்துக்கொண்டிருக்கும்.
"தெரியாமல் நடந்துபோச்சு தாத்தா." எதிரே நுங்கை உறிஞ்சி, மிச்சமிருக்கும் பனங்காயில் சவுக்குக் குச்சியைச் சொருகி, தலையை குனிந்தவாறு உருட்டிவந்த பையன் என்மீது மோதி நிற்கிறான். நினைவுகளில் பின்னோக்கி ஓடியதில் நான்கூட இப்படி மோதி என்னுடைய மனிதர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறேன். ஒதுங்கி ஓட நினைத்தச் சிறுவனைத் தடுத்து நிறுத்துகிறேன்.
"ஏண்டா தம்பி.. வாத்தியார் ராகவன் வீட்டுக்குப் போகணும்"
"வாத்தியார் ராகவன் வீடா? யாரைச் சொல்றீங்க?"
"நம்ம, முரளியோட தாத்தாவைச் சொல்றார்னு நினைக்கிறேன்." அவனோடு சேர்ந்துகொண்ட மற்றொரு பையன் உதவிக்கு வருகிறான்.
"ஓ அவங்க வீடா? அதோ அந்த கல்வீடு. திண்ணையிலே குத்துகாலிட்டு ஒக்காந்திருக்கிறாரே, அவர்தான் ராகவன் தாத்தா." சிறுவர்கள், மீண்டும் பனங்காய்களை உருட்டிக்கொண்டு ஓடுகிறார்கள்.
ராகவன் பால்ய சினேகிதன். எனது இளம் வயது வினைகளின் பங்காளி. கைகொட்டிச் சிரித்திருக்கிறோம், கட்டிப் பிடித்து உருண்டிருக்கிறோம். மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம், நிமிடக் கணக்கில் பேசாமலிருந்திருக்கிறோம்.
அவந்தான்.. அப்படியே இருக்கிறான். முகச் சுருக்கங்கங்களை எடுத்துவிட்டு, தலைக்கு கறுப்புச் சாயமும் இடமுடியுமானால், என் மனத்திலுள்ள ராகவந்தான்.
"ராகவா..!"
"யாரது? நெத்திக்கெதிரே தெரியும் சூரியனால கண்ணு கூசுது. கேட்ட குரலா இருக்குது. நெருங்கி வாங்க."
"ராகவா.. உன்னோட சிநேகிதன் பட்டாபி வந்திருக்கேன்"
"பட்டாபியா? எந்த பட்... அடடே.. வாடா வா..என்னால நம்ப முடியலை. சித்திரையில் மழைபேஞ்ச மாதிரி இருக்குது." ஆர்வத்துடன் தள்ளாடி நெருங்கிவந்தவன், இறுகக் கட்டிக்கொள்கிறான்.
"என்னடா..இதற்குள்ள இப்படி ஆட்டம்போடற."
"வயசு ஆகுதல்ல.. நீ மேற்கத்திய நாட்டுல இருந்துவர, கடேசிவரை காயாவே இருந்துட்டுப் போகலாம். நாங்க பூ, காய், கனிண்ணு வாழப்பழகியவங்க. வயதோடு இணங்கிப் போகிறோம்.."
"ஆரம்பிச்சுட்டியா?. இந்த விஷயங்கள்ல நீ மாறலையே"
"சரி சரி எப்போ பிரான்சுல இருந்து வந்த? மனைவி, பிள்ளைகள் எப்படி இருக்காங்க..?"
"நேற்றைக்கு. பிள்ளைகளும், மனைவியும் நல்லாவே இருக்காங்க. என்னோட ஆரோக்கியத்திலதான் சேதம். உடம்புல இல்லை, மனசுல. எப்படிச் சொல்றது? ஓடிக்கொண்டிருக்கும்போது தெரியலைடா. உட்கார்ந்திட்டோம் இல்லையா? மனசு அலையுது. தப்புப் பண்ணிட்டேன் ராகவா. எஞ்சிய நாட்கள் முச்சூடும் நம்ம மண்ணில விழுந்து, அங்கபிரதட்சணம் பண்ணனும்னு மனசு துடிக்கிது. இப்பல்லாம் தொடர்ச்சியா, எதையாவது காரணமா வச்சுகிட்டு, நம்ம ஊரின் ஞாபகங்கள் திரும்பத் திரும்ப மனசை ஆக்ரமிச்சுடுது. எந்த மண்ணுல முளைத்தேனோ, அந்த மண்ணுக்கே எருவாகனுமென்கிற தீர்மானத்தோட புறப்பட்டு வந்துட்டேன்."
அவன் கைகளைப் பிரித்து முகம் புதைக்கிறேன். ஆறுதலாக என் தோளில் கைவத்து அருகே இழுத்துக்கொள்கிறான். அவன் கண்களும் கலங்கியிருக்கின்றன.
"மீனா.. கொஞ்சம் வந்துட்டு போ".. திண்ணையிலிருந்து, வீட்டின் உட்பக்கத் திசைக்காய்க் குரல் கொடுக்கிறான்.
"என்ன மாமா.. கூப்பிட்டீங்களா?"
"என்னோட மருமகள் மீனா.. இவன் பட்டாபி, பால்ய சினேகிதன்; பிரான்சுல இருக்கான். நாற்பது வருசத்துக்கு முன்னாடி கிளம்பிப் போனவன், மறுபடியும் வந்து நிக்கிறான். சரி.. காப்பி போட்டுக்கொண்டுவாம்மா. அதற்காகத்தான் கூப்பிட்டேன்."
"எனக்குச் சர்க்கரை சேர்க்கவேண்டாம்மா.. எங்கிட்ட நிறைய இருக்குது"
"உனக்கும் சர்க்கரை வியாதியா? வியாதியை மட்டும் கடவுள் வித்தியாசம் பார்க்காமல் கொடுத்திடறான்"
"ராகவா என் உருப்படாத தம்பி எப்படி இருக்கிறான்? இப்பவும் அப்படித்தானா?"
"ஏண்டா பட்டாபி? இப்படி கேக்கிற.. உனக்கு நடந்தது எதுவும் தெரியாதா?"
"நீ என்ன சொல்ற கடேசியா அவனிடமிருந்து கடிதங்கள் வந்து பத்துவருடங்களுக்கு மேலாகுது."
"அவன் உயிரோடு இருந்தாத்தானே உனக்குக் கடிதம் போடமுடியும். ஆனால் உன் தம்பிப் பெண்சாதி கோகிலா நல்லப்பெண்ணாயிற்றே. அவள் கூடவா உனக்கு எழுதலை"
"அவள் எனக்குக் கடிதம் போடாததில ஆச்சரியமில்லை. என் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் அந்தப் பெண்ணை குறைகூறி நிறைய எழுதியிருக்கேன்."
"அங்கிருந்துகொண்டே, அப்பெண்ணிடம் குற்றம்கண்டு எழுதியதில எனக்கு உடன்பாடில்லை. உன் தம்பியிடம்கூட அப்படியென்ன பெருசா குறை கண்டிட்டீங்க?"
"என்னடா ராகவா? நீயா இப்படி பேசற? நடந்ததெல்லாம் உனக்குந் தெரிஞ்சதுதானே? அப்பாவும் அவனைப் படிக்கவைக்க எவ்வளவோ பிரயத்தனம் செய்தார். புதுச்சேரியில் வாடகைக்கு வீடுபிடித்து, பாட்டியை சமைத்துப் போடச் செய்து, வாராவாரம் ஆட்கள் தலையில் உப்பு மிளகாய் முதற்கொண்டு அனுப்பிவச்சார். குறைந்த பட்சம் எஸ்.எஸ்.எல்.சி. தேறியிருந்தாலாவது, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்திருக்கலாம்னு நீதானே சொன்னே. சரி அதைவிடு. அப்பாவின் பேச்சைக்கேட்டு, இருக்கிற நிலபுலங்களையாவது ஒழுங்காக மராமத்துப் பார்த்திருந்திருக்கலாம். ஊர் சுத்திக்கொண்டிருந்தவன், எவளோ ஒருத்தியை வீட்டிற்கு அழைத்து வந்து பொண்டாட்டி என்றிருக்கிறான். அப்பாவால் பொறுக்கமுடிலை, அவர் குணமும் உனக்கு நல்லா தெரியும். போடாவெளியே என்று சொல்லியிருக்கிறார். அப்பா எடுத்த முடிவு என்வரைக்குஞ் சரி."
"பட்டாபி.. உன் தம்பி திடீர்னு விபத்துல போயிட்டான். ஆனால் நாமதான் அவனைச் சரியாப் புரிஞ்சுக்கிலையோன்னு நினைக்கிறேன். அடிப்படையிலேயே நம்மிடம் கோளாறுகள் இருக்கின்றன. நமக்குச் சரியென்பதை ஒரு வாழ்க்கைமுறை சட்டமாக வரித்துக்கொண்டு, முரண்படுகின்றவர்களைத் தண்டிக்க நினைக்கிறோம். நீ நம்ம ஊர்க்காரந்தான் இல்லைண்ணு சொல்ல முடியுமா? ஆனாலும் வெளிநாட்டவர்க்கு ஊழியம் செய்யணும்னு புறப்பட்டுப்போய்ட்ட. திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டு அந்திமக் காலத்துல இங்கே வந்திருக்கிற. இதெல்லாம் உன் வகையில் சரியென்று நினைக்கலாம். நான் அப்படி நினைக்கிலை."
"...."
"பெரிய படிப்பு, வெளிநாட்டுல உத்தியோகம், பணக்கார மனைவியென நீ அரிதாரம் பூசிக்கொண்டப்போ, எங்களுக்கெல்லாம் பிரம்மிப்பாகத்தானிருந்தது. ஆனால் அந்த பிரமிப்பினை காலமும் இடைவெளியும், தின்று செரித்துவிட்டன பட்டாபி. உன்னைத் தலையில்வச்சுக் கொண்டாடிய உன் தகப்பனாருக்கு உன்னால என்ன செய்ய முடிஞ்சது. மாதம் தவறாம பணம் அனுப்பின. நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா படுத்தபடுக்கையிலேயே அவர் மலஜலம் போனப்போ, முகம் சுளிக்காமல் சிசுருட்ஷைகள் செய்தது உன்னோட பணமில்லை. அவர் வேண்டாமென்று ஒதுக்கிய உன்னோட தம்பிப் பெண்சாதி. உன் தம்பி செத்தப்போ இந்த ஊரே திரண்டிருந்தது. உனக்கு ஒண்ணு ஆச்சின்னா எத்தனை பேரு வருவாங்கண்ணு நெனக்கிற. நாற்பது வருஷத்துக்குப்பிறகு, இந்த மண் என்னுடையது, இந்த மனிதர்கள் என்னுடையவர்கள்னு உணர்வுபூர்வமா உரிமைகொண்டாடிவருவதற்கு சமூக நீதிகள் என்ன சொல்லும்ணு யோசிக்கிறேன்."
"ராகவா என்ன சொல்ற?"
"என் மனதிற் பட்டதைச் சொன்னேன். உண்மையைச் சொல்லப்போனா என்னால கூட உன் மனதிலிருக்கின்ற, பழைய நண்பனா பழகமுடியாது, பழசையெல்லாம் புதுப்பிக்க முடியாது. இந்த நாற்பது ஆண்டுகால இடைவெளியில், என்னென்னவோ நடந்து போச்சு. உறவோ நட்போ, இடைவெளி எல்லையைப் பொறுத்தே அதன் ஜீவிதத்தை நடத்துது. அன்றாடம் பழகுகிற மனிதர்களிடத்திலேயே இப்போதெல்லாம் நமக்கு அக்கறை வரமாடேங்குது. திடீரென்று படரவருகிற உறவுக்கொடிகளிடம் எப்படி? அறுத்துவிடத்தான் சொல்லும். மனைவி, பிள்ளைகளைவிட்டு இங்கேயே காலந்தள்ளப் போகிறேன் என்கின்ற நினைப்பெல்லாம் ரொம்பகாலத்துக்குத் தாக்குப்பிடிக்காது. நீங்காத நினைவுகளென்பது எப்போதாவது நினைத்து சந்தோஷப்படவும், பெருமூச்சிடவும் உதவும். யதார்த்தத்துக்கு உதவாதுண்ணு நினைக்கிறேன். நான் சொல்றேன்னு வருத்தப்படாதே. ஏதோ வந்தற்கு என்னோட இரண்டு நாட்கள், உன் தம்பிவீட்டுல இரண்டு நாட்கள்னு தங்கியிருந்து ஊரைபார்த்துட்டுக் கிளம்பு. இறுதிகாலத்துலயாவது ஓரிடமா இருக்கப் பழகிக்க."
ராகவன் மருமகள், இரண்டு தம்ளர்களில் காப்பி கொண்டுவந்து ஆளுக்கொன்றாகக் கொடுத்துவிட்டுத் தயங்கி நின்றாள்.
"ஏதாவது சொல்லணுமா?" ராகவன்.
"ஆமாம் மாமா. உங்கப் பிள்ளை அவர் தங்கச்சிக்கிணு போனவாரம் ஓட்டிம்போய் விட்டுட்டுவந்தக் கிடாரிக்கண்ணு, திரும்பவும் நம்மவீட்டுக்கு வந்துட்டுது, கொட்டாயிலே நிக்குறதைப் பாத்துட்டு வறேன்."
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள் ஜூலை 2005; இதழ் 67
கரை சேராதக் கலங்கள்!
- புதியமாதவி -
"டெலிபோன் அடிச்சிட்டே இருக்கு இந்த வீட்லே எல்லோரும் என்ன செத்து
தொலைச்சிட்டீங்களா? " கத்தினான் பிரம்மநாயகம். மெதுவாக வந்து எட்டிப்பார்த்தாள் செல்வி.
"அங்க என்னத்தைப் பிடிங்கிட்டு இருக்கே.. உன் சாதிசனமாத்தான் இருக்கும்.
என்னடீ பாக்கே .. ராத்திரி கூட நிம்மதியா பேப்பர் படிக்க இந்த வீட்டிலே
முடியுதா..?" கோபத்துடன் அவன் அன்றைய செய்தித்தாளை எறிந்தான்.
செல்வி மெதுவாக வந்து டெலிபோனை எடுத்தாள். டெலிபோனை எடுக்கும்போது அவள் கைகள் நடுங்கின. தொண்டைக்குழி வறண்டு போனது. அவளால் எதிர்முனையில் எதுவும் பேசமுடியவில்லை. மெதுவாக டெலிபோனை
வைத்துவிட்டு நகர்ந்தாள்.
"ஏய் உன்னைத்தாண்டீ..எவன் மண்டையைப் போட்டான்.. "
அவள் அவனருகில் இருந்த காலி கிளாஸை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள்.
இப்போது அவனுக்கு எரிச்சல் வந்தது.
"நான் பாட்டுக்கு கேட்டுட்டிருக்கேண். நீ என்னடானா இந்தப் பய போக்கத்துப்போயி உங்கிட்டே கேட்கிறமாதிரி நடந்தா என்னடீ அர்த்தம்? ஏய் உன்னைத்தாண்டீ"
அவள் 'என்ன கேட்கிறீர்கள்?' என்பது போல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"பாருடீ.. நான் தொண்டை வத்தறமாதிரி உங்கிட்டே பேசிட்டிருக்கேன்.
இந்த திமிருக்கு மட்டும் குறைச்சலில்லே.. யாருடீ போன்லே?"
அவள் ஒன்றுமே சொல்லாமல் நடந்தாள்.
"கொழுப்புடீ.. கேட்டுட்டிருக்கேன்லே எவன் பொண்டாட்டிடீ தாலி அறுத்தா?"
அவள் கோபத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"ஆமா இதுக்கு மட்டும் ஒன்னும் குறைச்சலில்லே.. ஒரு மாசத்துக்கு அப்புறம்
இன்னிக்கி வீட்டுக்கு வந்திருக்கேன். அழுது மூக்கைச் சீந்திக்கிட்டு வந்து
நிக்காதே"
எல்லாம் என் தலைவிதி.. எல்லா அம்மா அப்பாவும் பையனுக்கு நல்ல வசதியான இடத்திலே பொண்ணு பாத்து கல்யாணம் செய்யனுன்னு நினைப்பாங்க, எங்க அப்பா மாதிரி கொடும்மை யாரும் செய்திருக்க மாட்டாங்க.. ஒரு நல்ல நாளூ பண்டிகை நாளுக்கு மாமனார் வீட்டுக்கு போனோம் வந்தோம்னு ஏதாவது உண்டா? சரி அதுதான் இல்லை. ஒரு அனாதையைக் கட்டினோம்னு இருந்திட்டு போயிடலாம். வருஷத்துக்கு ஒரு எழவு மட்டும் விழுந்துடும். இவ ராத்திரியும் பகலும் அழுது அழுது .. ச்சே.. உறவுச் சங்கிலி.. விட்டுப்போயிடக் கூடாதுனு என் தலையிலே கட்டிவச்சிட்டு போயி சேர்ந்திட்டாரு.. சங்கிலியாவது.. மண்ணாங்கட்டியாவது.. எல்லாம் என் தலைவிதி.. சிகிரெட் நுனி கையில் சுட்டது. சன்னல் வழியாக தூர எறிந்தான். அவள் படுக்கைக்கு வர நேரமாகும் என்பது புரிந்தது.
டி.வி.யில் செய்திகள் ஒடிக்கொண்டிருந்தன
.
"சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்போது தமிழர்கள் பகுதி
தாக்கப்பட்டது..குறித்து நார்வே அமைதிப் பேச்சுவார்த்தைக் குழு அதிர்ச்சி
அடைந்துள்ளது. இரண்டு பக்கமும் பதட்ட நிலை நீடிக்கிறது.."
வேறு வேலைச்சோலி இல்லை. கோபத்துடன் ரிமோட்டை அமுக்கினான்.
போர்வையை இழுத்து போத்திக்கொண்டு முகத்தை மூடிக்கொண்டான்.
எதுவும் தெரியவில்லை, அந்த போர்வைக்குள் அவன் கண்கள் அசதியில்..
அவள் எப்போது வந்து தூங்கினாள் என்பது தெரியவில்லை. அதிகாலையில்
குளிர். எழுந்து போய் சன்னல் கதவுகளை இழுத்து மூடினான். அவள் கால்களை
மடக்கி வளைந்து குளிரில் போர்வையில்லாமல் தூங்கிக்கொண்டிருந்தாள்.
மெதுவாக அவளருகில் படுத்து போர்வையை அவளுக்கு சேர்த்து போர்த்திக்கொண்டு
அவன் மூச்சுக்காற்று அவள் குளிர்ந்த உடம்பில் ..கதகதப்பாக.. அவன் மெதுவாக அவள் முதுகைத் தடவி கழுத்தில் முகம்புதைத்து..
அவள் தூக்கம் களையவில்லை. கண்கள் மூடியே இருந்தன. ஆனாலும்.."ப்பீளீஸ்.." என்று அவள் வாய் முணுமுணுத்தது. அவனையும் அவன் அணைப்பையும் நிராகரிக்க முடியாத அவள் காதல் ..அந்த நிமிடம் அவள் ப்பீளீஸ் என்று சொன்ன மறுப்பிலும் இருந்தது. அவள் முகத்தை அவன் மார்பில் புதைத்துக்கொண்டாள். அவள் கைகள்
அவன் முதுகில் அவனுடைய பனியனை இறுக்கப்பற்றி இருந்தன.
அவனால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் அவளிடம் எதுவுமே கேட்கவில்லை.
ISD கால் வரும்போதெல்லாம் அவள் மனம் பட படவென அடித்துக்கொள்ளூம்.
என்ன செய்தி வரப்போகிறதோ என்று அச்சத்தில். ஆரம்பத்தில் தம்பி குண்டுவீச்சில் இறந்தபோது.. அம்மா அப்பா தப்பிவரும்போது தாக்கப்பட்டபோது ... தமிழ்நாட்டுக்கு தப்பிவந்த அண்ணன் காணாமல் போய் இருக்கின்றானா அல்லது எங்காவது சிறையில் செத்துக்கொண்டிருக்கின்றானா என்பதே தெரியாமல் தவித்தபோது.. அவள் அழுதப் போதெல்லாம் அவன் அவளுடன் உட்கார்ந்து ஆறுதல் சொல்லித்தானிருக்கின்றான்.
அவள் தம்பி இறந்தவுடன் உறவினர்கள் எல்லோருக்கும் சொல்லிவிட்டு எல்லோரும்
இவளிடம் வந்து துக்கம் விசாரித்து சென்றார்கள். 16வது நாள் இவளை
மகாலட்சுமி கோவிலுக்கு அழைத்துச்சென்றான். அவளுடைய தம்பியின்
ஆத்மா சாந்தியடைய. அப்படித்தான் அம்மா அப்பா செய்திகேட்டும்.
இப்போ.. ? அவனைச் சொல்லி என்ன பயன்? துக்கம் வாழ்க்கையில் வரும்
போகும். ஆனால் துக்கம் மட்டுமே தங்கி துக்கமே துணையாகி வாழ்வதில்
எவ்வளவு சங்கடம்?
" யாரையாவது இனி உயிருடன் பார்க்க முடியுமா? எப்போதாவது என் தோட்டத்தில் கால்வைக்க முடியுமா? இதுதான் நான் படிச்ச ஸ்கூலு.. இந்த புளியமரத்தடியில்தான் எங்கள் பி.சுசிலா கச்சேரி.. ஒரே ஒருமுறை இதை எல்லாம் என் பிள்ளைகளுக்கு காட்டமுடியுமா? எட்டு பேருடன் பிறந்து வளர்ந்து.. இன்னிக்கி.. தனியா.."
கடைக்குட்டி தங்கை மட்டும் லண்டணில். யாரையோ இரண்டாம்தாரமாக கல்யாணம் செய்துகொண்டதாக எழுதியிருந்தாள். அவள் எதையும் யோசித்து செய்பவள். சரியாகத்தான் இருக்கும். அதன் பின் அவளிடமிருந்து கடிதங்களே கிடையாது. ஏதோ ஹோட்டலில் வேலை. அதை நாயகத்திடம் சொன்னபோது அவன் கிண்டலித்தது இப்போது வலிக்கிறது. "பின்னே என்ன .. உங்க ஊருக்காரங்க எல்லோரும் என்ன ஆபிஸ்லேயா வேலைப் பாக்காறாங்க. இந்த மாதிரி ஹோட்டல்லே கோப்பைக் கழுவித்தான்.."
..என்ன முறைக்கிறே.. உண்மையைச் சொன்னா உனக்கு கோபம் பொத்துக்கிட்டு
வருமே.. இந்தப்பாரு,..நீதான் கொடுத்து வச்சவா..மகாராணி மாதிரி உன்னை
நான் வச்சிருக்கேனாக்கும்! "
அவன் சொல்வதில் உண்மைகூட இருக்கலாம். சில உண்மைகள் சந்தோசப்படுத்தும்.
சில உண்மைகள் சங்கடப்படுத்தும், சில உண்மைகள் உண்மைகளாக முகம்
காட்டாமல் இருந்தாலே நல்லது என்று தோன்றும். இவன் சங்கடப்படுத்தும்
உண்மைகளை சங்கடமில்லாமல் சொல்வதுதான் அவளை ரொம்பவே
சங்கடப்படுத்தும். மகாராஷ்டிரா தேர்தல் சூடுபிடித்தது. அரசியல் தலைவர்கள் ஓட்டு வாங்குவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து கொண்டிருந்தார்கள். இந்த தேர்தலை வைத்துதான் மத்திய அரசின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என்பதால் டில்லியிலிருந்து எல்லோரும் மும்பை சிவாஜி பார்க்கில் ஒரு நாள் லீவு போடாமல் மேடை ஏறிக்கொண்டிருந்தார்கள்.
பத்திரிகைகளுக்கு நல்ல தீனி. விளம்பரத்தீனி வேறு.
தீடீரென மண்ணின் மைந்தர்கள் ஆயுதத்தை எதிர்க்கட்சி தலைவர் கையில்
எடுத்தார். இந்த மண்ணிற்கு 15 வருடங்களுக்கு முன்பு வந்தவர்கள் தவிர
மற்றவர்கள் எல்லோரும் வெளியேற வேண்டும் என்றார். அப்படி வெளியேற
மறுப்பவர்களுக்கு எந்த அரசியல் சட்டமும் உதவமுடியாது.." என்று சொல்ல
பெரிய பதட்டநிலை.
பத்திரிகை பார்த்த நாயகம் 'என்ன பைத்தியக்காரத்தனம் 'என்றான்.
மறுநாள் இதுவே கலவரமாக வெடித்தது. நாயகத்தின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.
அவன் முகத்தில் அவன் ஒரு தமிழன் என்ற முகவரி அழிக்கமுடியாமல்
எழுதப்பட்டிருந்ததை அவர்கள் வாசித்தார்கள். நெற்றியில் உடைந்தப்
பாட்டில்களின் கீறலில் ரத்தம்..
வீட்டில் வந்து கத்திக்கொண்டே இருந்தான்.
" இவனுக என்ன நினைச்சுக்கிட்டு இருக்கானுக? எங்களை எல்லாம் என்ன
இளிச்சவாயனுகனு நினைச்சானுகளா? நான் ஒரு கவர்மெண்ட் எம்ப்ளாயி.
என்னை இவனுகளா விரட்ட முடியுமா? "..
அவளுக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.
அவனுடைய வேதனையை அவளால் வாசிக்க முடிந்தது.
அவன் காயங்களுக்கு டாக்டர் கொடுத்திருந்த களிம்பை அவள் தடவிக் கொண்டிருந்தாள்.
அவனுடைய அப்பா ஊரில் பஞ்சாயத்து போர்டு எலக்ஷனில் ஜெயித்துவிட்டதாக
போன் செய்தார்.
உடல்வலி எல்லாம் மறந்து போனது.
"செல்வி.. இங்க வாயேன்" சந்தோஷத்தில் கத்தினான்.
"செல்வி.. அப்பா ஜெயிச்சுட்டாரு.. செல்வி.. நாம ஜெயிச்சுட்டோம்..!! செல்வி என்னடா இந்த பஞ்சாயத்து போர்டு எலக்ஷெனில்
ஜெயிச்சதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்னு நினைக்கியா? உனக்கு அதெல்லாம் தெரியாது செல்வி.. இத்தனை வருஷத்துக்கு அப்புறம் நம்ம
தெரு ஆளு ஒருத்தர் துணிச்சலா தேர்தல்லே நின்னு.. அதுவும் ஜெயிக்கறதுங்கறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?"
அவளுக்கும் சந்தோஷமாக இருந்தது. எவ்வளவு பெரிய்ய போராட்டத்திற்கு
பிறகு இந்த வெற்றி.. அவன் இவ்வளவு சந்தோஷத்தில் சிரித்ததை அவள்
இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறாள்.
அவனுடைய சிரிப்பை அப்படியே மனசில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்
போலிருந்தது. ஊருக்குப் போயிட்டு வந்திடனும் செல்வி.. அப்பாவை பஞ்சாயத்து போர்டு தலைவரா பாத்துட்டு வந்துடனும்.. அவன்
சொல்லிக்கொண்டே இருந்தான்.
அவள் அவனுடைய சந்தோஷத்தில் சந்தோஷம் சேர்த்துக்கொண்டிருந்தாள்.
அவர்களுடைய சந்தோஷத்தை விலை பேசிக்கொண்டிருந்தது அவர்களின் கிராமத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள் செப்டெம்பர் 2005; இதழ் 69
அழகிய வேப்பமரம்...
- றஞ்சனி -
நீண்டு அடர்ந்து வளந்திருக்கும் மரங்களுக்கடியில் துண்டை விரித்து உட்காருகிறேன். புத்தகங்களை இன்று வெளியில் எடுப்பதாக இல்லை. படுத்திருந்து கனவுகாண ஆசை. வானம் தெளிவாக நீலமாகவும் இருக்கிறது. சூரியன் சந்தோசமாக சிரித்துக் கொண்டிருக்கிறான்.
வெய்யிற் காலங்களில் இந்தப்பார்க்கில் எனது மரங்களுக்கடியில் புத்தகங்களைப்பரப்பி உறங்குவதுண்டு . வழமைபோல் இல்லாமல் இன்று மனதை இலகுவாக்கி அண்ணாந்து படுககிறேன். எனது மரத்தின் இலைகள் எனக்கு வானத்தைக்காட்டிவிடாது போட்டிபோட்டு மறைத்துக் கொண்டிருந்தன. தம் அழகைமட்டும் ரசி என்பதுபோல அதிசயமாக இன்று எனது அழகிய வேப்பமரத்தின் நினைவுவந்தது.
எனது அழகான வேப்ப மரமே! நீ இப்போதும் எமது முற்றத்திலதான் நிற்கிறாயா? நீ இருந்தால் என்னை நினைப்பாயா? என்போல் உனக்கும் வயதுகள் கடந்திருக்கும். எத்தனை நாட்கள் உன்னடியில் ஊஞ்சலில் உறங்கியிருப்பேன். என் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் உரமிட்டவள் நீதானே. உன்னில் பழந்தின்ன வரும் பச்சைக்கிளிகளின் மொழிகூட எமக்கு புரியுமே. உனக்குத்தெரியாமல் எந்த ரகசியமும் என்னிடம் இருந்ததில்லை. இப்போ என் வாழ்வில் நீ அறியாத எத்தனை மாற்றங்கள் ரகசியங்கள். உன்னை பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. என்னை அறியாமல் கண்கள் கலங்கி மனம் சோர்வுற்றது.
என் சோகத்தை கலைக்க அந்தக் கணீரென்ற குரல். எழுந்து உட்கார்ந்தேன். நானிருந்த இடத்திலிருந்து சிறிது தள்ளி சிலரில் ஒருவன் கிற்றார் இசைத்து பாடினான். அவனது குரலும் கிற்றார் இசையும் என்னை அவர்களருகில் போய்நிறுத்தியது. அவர்கள் 'ஹாய்' சொன்னார்கள. அவன் பாடிக்கொண்டே இருந்தான் அவர்கள் என்னைத் தம்முடன் உட்காரும்படி கூறினார்கள.; அவன் எந்த தடங்கலும் இன்றி தனது உடல்முழவதையும் அழகாக அசைத்து பாடிக்கொண்டிருந்தான். மற்றவர்கள் என்னிடம் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தியர்கள் ஆபிரிக்கர்களுடன் கதைக்க மாட்டார்களே. நீ மட்டும் எப்படி என்று வியந்தனர். என் கவனமெல்லாம் அவனில்தான் இருந்தது. ஆபிரிக்கருக்கே இசை சொந்தமானதுபோல் அவர்களின் ஒவ்வொரு அசைவும் இசையினால் படைக்கப்பட்துமாதிரி. அப்படி ஒரு திறமை இவர்களுக்கு. பொறாமையாக இருந்தது. அவன் என்னுடன் கதைப்பதை விரும்பாதவன் போல், ஆனால் எதோ ஒரு
குதூகலத்தில் அவன் குரலை உயர்த்திப் பாடிக் கொண்டிருந்தான். நீங்கள் சொல்வது சரிதான். எம்மவர்களில் அனேகர் மூளை பாவிக்கப்படாமல் துருப்பிடித்து போய்விட்டது. எனது கருத்துப்படி நிறவாதம் மூளையில்லாதவர்கள் ஏற்படுத்தியது. எமது நேரத்தை இவர்களுக்காக வீணாக்க வேண்டுமா? இப்போது திடீரென அவன் பாடுவதை நிறுத்தினான். பல விடயங்கள் பேசினோம். நேரம் போனதே தெரியவிலை. அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டேன். வழிமுழுக்க அந்த பாடகனின் நினைவு. அவனின் கண்கள் றஐனீசின் கண்களை ஞாபகப்படுத்தியது .
சில நாடகளின் பின்'ஹாய்'; என்ற குரலுக்கு திரும்பினோம.; அதே பாடகன்; பதிலுக்குக் 'ஹாய்' சொல்லிவிட்டு, அவனை மீண்டும் சந்தித்தும் என்னையுமறியாமல் எனக்குள் இரத்தம் குப்பென்று தலைக்கேறியது. என்னை சமாளித்துக் கொண்டதாக எண்ணி ,என்ன இந்தப்பக்கமென்று அசடு வழிந்தேன். சசிக்கு புரிந்ததுபோல் புன்சிரிப்பெறிந்தாள். அவனுக்கும் எதோ தெரிந்திருக்க வேண்டும் .
அவன் எம்மிடம் விடைபெறும் போது தனது தொலைபேசி எண்ணையும் விலாசத்தையும் என்னிடம் தந்து தனது பிறந்தநாளுக்கு வரும்படி அழைத்தான். உனது நண்பியையும் கூட்டிக்கொண்டு வா என்று செல்லிவிட்டு நடக்க, ஆ இது எனது நண்பி ! ஹலோ. அவன் போய்விட்டான். என்நினைவு இப்போதாவது உனக்கு வந்ததே. என்ன கண்டதும் காதலா ? பார்க்க அழகாகத்தான இருக்கிறான்.
அவனுக்கும் உன்னிடம் ஏதோ... என்றவளை, அப்படி எதுவுமில்லை சும்மா ஒரு இது. அவனின் பெயர்கூட மறந்திருந்தது . என்செய்கை குழந்தைத்தனமாக இருந்தது எனக்கு ஒருமாதிரியாக அவனின் வீட்டை கண்டுபிடித்து உள்ளுக்குச் சென்றோம். அவனை முன்னுக்குக் காணாதது அந்தரமாக இருந்தது.
அவனின் நண்பர்கள் எம்மை வரவேற்றனர் . ஐpம்மி யார் வந்திருக்கிறார்கள் என்றுபாரேன் என்றான் ஒருவன். மற்றவர்கள் தமக்குள் சிரித்தார்கள். சகியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். அவனது வீடு அவனது நாட்டு கலைப் பொருட்களாலும் அவனது ஒவியங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அவன் மீண்டுமொருதடவை என்மனதில் இடம்பிடித்தான். அதன் பின் நாம் அடிக்கடி சந்தித்தொம் . அன்று நல்ல வெய்யில். அந்தப் பாக்கில் நான் எழுதிக்கொண்டிருந்தேன். அவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.
நான் எழுதுவதை நிறுத்தினேன். ஏன் நிறுத்திவிட்டாய்? தொடர்ந்து எழுது சுமி . இந்தக் கவிதையைக் கேள் ஜிம்மி. இதை உனக்காகத்தான் எழுதினேன். ;எனக்காகவா ஆம் ஜிம்மி உனக்காக. நான்கவிதையை வாசித்துக் கொண்டு போனேன். அவன் கண்களை மூடிக்கொண்டு கேட்டுக் கொண்டிருந்தான். நான் முடித்துவிட்டு அவனைப்பார்த்தேன் . அவன் கண்களை திறக்கவில்லை. என்ன நல்லா இல்லையா? அவன் கண்களை மெதுவாக திறந்தான் கண்கள் கலங்கியிருதது . என் கைகளைப் பற்றி இந்தக்கணமே இறந்து விடலாம் போலிருக்கிறது சுமி. அவன் ஆங்கிலம் ஜேர்மன் இரண்டிலும் மாறி மாறி என்னைக் காதலிப்பதாக சொன்னான். அவனை மேலும் பேச விடாது .............. அன்று நாம் நிறையக்கதைத்து சிரித்து சந்தோசமாக இருந்தோம். எம்மைக் கடந்து சிலர்போனார்கள். நான் அவர்களை சரியாக கவனிக்கவில்லை. எமது நாட்டவர் மாதிரி இருக்கென திரும்பினேன். சந்தேகமில்லை அவர்களேதான். சிறிது தூரம் சென்றதும் ஒருவன் சொன்னான். எங்கட பெட்டை போல கிடக்கு. காப்பிலியோட. மற்றவன் இந்தியனா இருக்கும். இன்னொருத்தன்: வளவையளுக்கு அண்ணன் தம்பி கிடையாதோ. நானென்டால் வெட்டிப்புதைச்சிருப்பன். காப்பிலிகளுடனும் கழுசறைகளுடனும்... எனக்கு கேட்க வேண்டுமென்பதற்காக சிறிது சத்தமாக சொல்லிக்கொண்டு போனான். எதிர்பாராத அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட எனக்கு அவர்களை உதைப்பது போல்பதில் கொடுக்காமல் விட்டதற்கு என்னில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. எனக்கு மேலும் அங்கிருக்கப்பிடிக்கவில்லை.
வா போகலாம் என்றேன். உன் நாட்டவரா? என்தொடர்பாக எதாவது சொன்னார்களா? நான் மௌனமானேன். ஏன் இந்த மடையர்களில் ஆத்திரமடைகிறாய்? இந்த அழகிய நாளை இவர்களால் வீணாக்கவேண்டாம் சுமி. இந்த நாளில் எனக்கு வெறுப்பில்லை ஜிம்மி. இந்த மனிதர்களை நினைக்கத்தான்.. .அவனும் ஆத்திரமடைந்திருந்தான் இருவரும் அங்கிருந்து வெளியே வந்தோம்.
அவர்கள் கடந்து வந்த அந்தப் 'பாக்கி'ன் வெளிச் சுவரில் வெளிநாட்டவரே வெளியேறு என எழுதி நாசிகளின் அடையாளம் கீறப்பட்டிருந்தது .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள் நவமபர் 2007; இதழ் 95
"டோபா டேக் சிங்'
உருது மூலம் ஸதத் ஹஸன் மண்ட்டோ
ஆங்கிலம் வழித் தமிழில் ராகவன் தம்பி
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக் கைதிகளைப் போல, இருநாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் விடப்பட்ட பைத்தியங்களையும் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என இருநாடுகளும் முடிவெடுத்தன.இந்த முடிவு சரியானதா இல்லையா என்று சொல்வது சற்றுக் கடினமான காரியம்தான். ஆனால் . இந்த முடிவுக்கு வருவதற்கு, இருநாடுகளின் மிக முக்கியமான உயர் அதிகாரிகள் பல ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, பலமுறை கூடி மிகக் கடுமையாக ஆலோசித்தும், விவாதித்தும் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதை மட்டும் தெளிவாகச் சொல்ல முடியும். இந்த முக்கியமான பரிமாற்றம் செயல்படுத்தப்படும் இறுதிநாள் மற்றும் பிற முக்கியமான விபரங்களும் மிகவும் கவனத்துடன் முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவில் வசிக்கும் உறவினர்களைக் கொண்ட முஸ்லிம் பைத்தியங்களை எவ்விதத் தொந்தரவும் இன்றி அங்கேயே வசிக்க விடுவதென்றும், மற்ற பைத்தியங்களை பரிமாற்றத்துக்காக எல்லைக்குக் கொண்டு செல்வதென்றும் இந்திய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
பாகிஸ்தானிலோ, இந்து மற்றும் சீக்கியர்களின் மக்கள் தொகை முழுக்கவும் ஏற்கனவே இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து விட்டதனால், நிலைமை சற்று மாறுபட்டு இருந்தது. முஸ்லிம் அல்லாத பைத்தியங்களை பாகிஸ்தானில் வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது போன்ற சிக்கல் அங்கு எழவில்லை. இரு அரசுகளின் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவில் என்னவிதமான எதிர்வினை இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் லாகூரின் பைத்தியக்கார விடுதிகளில் செய்தி பரவியதுமே அது மிகவும் பரபரப்பினைக் கிளப்பியது.
இத்தீர்மானம் குறித்து லாகூரின் அனைத்துப் பைத்தியக்கார விடுதிகளிலும் பரபரப்பான விவாதங்கள் சூடு கிளம்பின. லாகூரின் தீப்பொறி பறக்கும் "ஜமீன்தார்' தினசரியினை தவறாமல் வாசிக்கும் ஒரு பைத்தியத்திடம் கேட்கப்பட்டது, ""பாகிஸ்தான்'' என்பது என்ன? அதற்கு அந்தப் பைத்தியம் சொன்ன பதில் , ""இந்தியாவில், கழுத்தை அறுக்கும் கூர்மையான சவரக்கத்திகளைத் தயாரிக்கும் ஒரு இடத்தின் பெயர்''.இந்த ஆழமான கருத்து பலராலும் மிகவும் வெளிப் படையாக ஒருவகைத் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு சீக்கியப்
பைத்தியம் இன்னொரு சீக்கியனைக் கேட்டது, சர்தார்ஜி! நாம் ஏன் இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறோம்? அங்கு என்ன பாஷை பேசுகிறார்கள் என்பது கூட நமக்குத் தெரியாதே!'' அதற்கு அந்த இன்னொரு சீக்கியர் புன்சிரிப்புடன் சொன்னது
"எனக்கு ஹிந்துஸ்தானியர்களின் மொழி தெரியும். அந்த ராட்சதர்கள் எப்போதும் தாங்கள்தான் இப்பூவுலகின் அதிபதிகள் என்பது போல எப்போதும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள்''.
ஒரு முஸ்லிம் பைத்தியம் குளித்துக் கொண்டிருக்கும்போது "பாகிஸ்தான் ஜிந்தாபாத்'' என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு மிகுந்த உற்சாகத்துடன் முழக்கமிட்டது. உணர்ச்சி வேகத்தில் குளியல் அறையிலேயே கால்வழுக்கி விழுந்து பலமணிநேரம் நினைவு தவறிப்போய்க் கிடந்தது. அந்த விடுதியில் இருக்கும் அனைவருமே பைத்தியங்கள் கிடையாது. சிலர் மிகவும் தெளிவாக இருந்தார்கள்.
தெளிவான அந்தச் சிலரில் பலர் கொலைகாரர்கள். தூக்குமேடைக் கயிற்றுக்குப் பயந்து இப்படிப் பைத்தியங்கள் போல இந்த விடுதிகளில் தங்கியிருந்தார்கள். இதற்காக இந்தக் கொலைகாரர்களின் உறவினர்கள் மேலதிகாரிகளுக்கு நல்ல லஞ்சம் கொடுத்து இவர்களை பைத்தியங்களாக அங்கு தங்கச் செய்திருந்தார்கள். இவர்களுக்கு இந்தியா ஏன் இரண்டாகப் பிரிக்கப் பட்டது என்றும் பாகிஸ்தான் என்றால் என்னவென்றும் சூசகமாகத் தெரிந்திருந்தது. ஆனால் இவர்களுக்கும் அங்கு இருந்த நிலவரத்தைப் பற்றிய முழுமையான விபரங்கள் ஏதும் தெரிந்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.செய்தித் தாள்களும் அத்தனை உதவிகரமாக இல்லை. அந்த விடுதிகளின் காவலர்களும் ஒன்றும் அறியாதவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு அத்தனை படிப்பறிவும் இல்லை. அதனால் இவர்களுடைய பேச்சுக்களை ஒட்டுக் கேட்பதனால் ஒன்றும் எதையும் அதிகமாகத் தெரிந்து கொள்ள முடியாது. முகமது அலி ஜின்னாவோ காய்த்,ஏ,ஆஜம் என்பவேரா யாரோ ஒருத்தர், தனியாக ஒரு நாடு, "பாகிஸ்தான்' என்ற பெயரில் அமைத்திருப்பதாக யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
இந்தப் பாகிஸ்தான் எங்கிருக்கிறது என்று லாகூரின் அந்த விடுதியில் இருக்கும் எந்தப் பைத்தியத்துக்கும் எதுவும் தெரியவில்லை. அதனால் அங்குள்ள முழுப்பைத்தியங்களுக்கும் அரைப் பைத்தியங்களுக்கும் தான் பாகிஸ்தானில் இருக்கிறோமா அல்லது இந்தியாவில் இருக்கிறோமா என்று எதுவும் தெளிவாக விளங்கவில்லை. தாங்கள் இந்தியாவில் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்த இழவு பாகிஸ்தான் எங்கு உள்ளது?
பாகிஸ்தானில் இருப்பதாக இருந்தால் நேற்று வரை அது இந்தியாவாக இருந்தது எப்படி? எந்தப் பைத்தியத்துக்கும் தெளிவாகவோ அரைகுறையாகவோ கூட அது விளங்கவில்லை. ஒரு பைத்தியம், இந்த இந்தியாஇபாகிஸ்தான், பாகிஸ்தான்இஇந்தியா என்ற சுற்றி அடிக்கும் பேச்சுக்களால் கொஞ்சம் அதிகமாகப் பாதிப்படைந்து, ஒருநாள், தரையைப் பெருக்கிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய
உடைகளையெல்லாம் களைந்து ஒரு உயரமான மரத்தின் உச்சியில்
மிகவும் வசதியான ஒரு கிளையில் அமர்ந்து கொண்டது.
பாகிஸ்தான்இஇந்தியா பிரிவினை குறித்த அதி நுட்பமான பிரச்னை குறித்து தொடர்ச்சியாக இரண்டு மணிநேரத்துக்கும் அதிகமாக சொற்பொழிவாற்றியது. விடுதியின் காவலர்கள் அந்தப் பைத்தியத்தைக் கீழே இறங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பைத்தியம் மரத்தை விட்டுக் கீழே இறங்காமல் இன்னும் உயரமான மற்றொரு கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டது. காவலர்களின் மிரட்டல்கள் தண்டனையாக உருமாறியபோது, ""எனக்கு இந்தியாவும் வேண்டாம் இ பாகிஸ்தானிலும் வாழவேண்டாம். இந்த மரக்கிளையிலேயே நான் மிகவும் வசதியாக இருப்பேன்'' என்று அறிவித்தது. ஒருவழியாக கீழே இறக்கப்பட்டதும் தன்னுடைய இந்து மற்றும் சீக்கியத் தோழர்களை கண்ணீர் மல்க ஆரத் தழுவிக் கொண்டது. அவர்கள் தன்னை விட்டுப் போய்த்தான் ஆகவேண்டும் என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டது.
அந்த விடுதியில் எம்.எஸ்.சி பட்டம் பெற்ற ஒரு ரேடியோ இன்ஜினியர், யாருடனும் பேச்சு வார்த்தைகள் வைத்துக் கொள்ளாது. மிக நீளமான ஒரு சாலையில் நடப்பதைப் போன்ற பாவனையில் எப்போதும் விடாது நடந்து கொண்டே இருக்கும். விடுதியில் இடைவிடாது நடந்து கொண்டிருக்கும் இந்தியா பாகிஸ்தான் விவாதங்களால் பாதிப்படைந்து ஒரு நாள் தன்னுடைய உடைகளையெல்லாம் கழற்றி விடுதியின் காவலனிடம் பெரிய பந்தாகச் சுருட்டிக் கொடுத்து விட்டு விடுதியின் தோட்டத்தில் முழுநிர்வாணமாக ஒடிக் கொண்டே இருந்தது.சானியத்திலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பைத்தியம் அந்த விடுதியில் தங்கியிருந்தது. பைத்தியமாவதற்கு முன் அகில இந்திய முஸ்லீம் லீகின் தீவிரமான தொண்டனாக இருந்திருக்கிறது. ஒரு நாளைக்குக் குறைந்தது பதினாறு முறையாவது குளிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தது. ஒரு நாள் திடீரென்று குளிப்பதையே நிறுத்திவிட்டு தன்னுடைய பெயர் ""முகமது அலி'' என்றும், தான்தான் காய்த்இஏஇஆஜம் என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா என்றும் அறிவித்தது. இதைக் கேட்டதும் விடுதியின் இன்னொரு சீக்கிய
பைத்தியம் தன் பெயர் சீக்கியர்களின் தலைவர் ""மாஸ்டர் தாராசிங்'' என்று அறிவித்தது.
இவை போன்ற செயல்களால் அந்த விடுதியில் மிகவும் தீவிரமான மதக்கலவரங்கள் ஏற்படும் சூழல் நிலவுவதை உணர்ந்த விடுதி நிர்வாகம் இவர்கள் இருவரையும் தனித்தனி கொட்டடிகளில் அடைத்து வைத்து அந்த இருவரையும் மிகவும் ஆபத்தானவர்கள் என்று அறிவிப்பு வெளியிட்டது. காதல் தோல்வியினால் பாதிக்கப்பட்டு பைத்தியமான லாகூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞனும் அந்த விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தான். அவனுடைய காதலி அமிருதசரஸில் வசிக்கிறாள். அமிருதசரஸ் இந்தியாவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது என்று யாரோ சொன்னதும் உடனே அவன் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளானான். பைத்தியமான போதும், அவன் காதலி அமிருதசரஸில் இருக்கும் விஷயத்தை மட்டும் அவனால் மறக்க இயலவில்லை. அன்று அவன் இந்தியாவை இரண்டாகப் பிளந்து வைத்த அனைத்து இந்து, முஸ்லிம் தலைவர்களையும் வாய்க்கு வந்தபடித் திட்டினான்.
தன் அருமைக் காதலியை இந்தியப் பெண்ணாகவும், தன்னை பாகிஸ்தானியாகவும் பிரித்து வைத்த சண்டாளர்கள் அவர்கள் என்று ஏசினான். இருநாடுகளுக்கு இடையிலான பரிமாற்றத்தைப் பற்றிய செய்தி கிடைத்ததும் விடுதியிலுள்ள தோழர்கள் அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவன் தான் நேசிக்கும் இந்தியாவுக்கே அனுப்பப்படுவது குறித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். ஆனால் அமிருதசரஸில் தன்னுடைய வக்கீல் தொழில் அவ்வளவாகத் தழைக்காது என்பதால் தான் லாகூரை விட்டு வெளியேறப் போவதில்லை என்று அவன் அறிவித்தான். ஐரோப்பியர்களுக்கான வார்டுகளில் இரண்டு ஆங்கிலோ இந்திய பைத்தியங்கள் தங்கி இருந்தார்கள்.
அவர்களிடம், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்துவிட்டு இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்வதாகத் தெரிவித்ததும் மிகக் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு தங்களுக்குக் கிடைக்கப் போகும் அந்தஸ்து குறித்து அவர்கள் கவலைப்பட ஆரம்பித்தார்கள். தொடர்ச்சியாக தங்களுக்குள் இதுகுறித்து மிகுந்த கவலையுடன் கிசுகிசுவென்று ஆலோசித்துக் கொண்டார்கள். இந்த விடுதியில் சுதந்திரத்துக்குப் பின் ஐரோப்பிய வார்டு தொடர்ந்து செயல்படுமா அல்லது கலைக்கப்படுமா? தங்களுக்கான ஐரோப்பிய காலை உணவு பறிமாறப்படுமா அல்லது கேவலமான இந்திய சப்பாத்திகள் பறிமாறப்படுமா என்பது குறித்து அவர்கள் மிகவும் கவலைப் பட்டார்கள். கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்த விடுதியில் அடைக்கப்பட்ட இன்னொரு சீக்கிய பைத்தியம் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் அவன் பேசும் எந்த வார்த்தையும் யாருக்கும் புரியாது. தொடர்ச்சியாக ஒரே வாக்கியத்தை கடந்த பதினைந்து வருடங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.
"உப்பேர் தி குர்குர் தி அனெக்ஸி தி பே த்யானா தி மூங் தி தால் ஆஃப் தி லால்டின்''
என்று ஒன்றும் புரியாத உளறலைக் கடந்த பதினைந்து வருடங்களாக அந்த விடுதியின் காவலர்கள் அவன் சொல்லக் கேட்டு வருகின்றனர். அவன் கடந்த பதினைந்து வருடங்களாக ஒரு நொடி கூட இமைகளை மூடித் தூங்கியதில்லை என்று அந்தக் காவலர்கள் கூறுவார்கள்.
எப்போதாவது ஒருமுறை விடுதியின் சுவற்றின் மீது சாய்ந்து கொள்வான். மீதி நேரமெல்லாம் எப்போதுமே நின்றுகொண்டுதான் இருப்பான். தொடர்ச்சியாக நின்று கொண்டே இருந்ததனால் இருகால்களும் நிரந்தரமாக வீங்கியே இருந்தன. இதனால் பாதிக்கப் பட்டதாக அவன் என்றும் காண்பித்துக் கொண்டதில்லை. இப்போதெல்லாம் அவன் இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளுக்கு இடையே பைத்தியங்களைப் பறிமாற்றம் செய்து கொள்ளும் திட்டத்தைப் பற்றி விடுதியில் யாராவது பேசிக் கொள்ளும்போது தீவிரமாகக் காது கொடுத்துக் கேட்கத் துவங்கினான். அதைப் பற்றி அவனுடைய அபிப்ராயத்தை யாராவது கேட்டபோது மிகவும் பணிவுடனும் பயபக்தியுடனும் சொன்னான்.
"உப்பேர் தி குர்குர் தி அனெக்ஸி தி பே த்யானா தி மூங் தி தால் ஆஃப் தி கவர்ன்மெண்ட் ஆஃப் பாகிஸ்தான்.''எப்படி இருந்தாலும் அவனைப் பொறுத்த அளவில் இப்போது பாகிஸ்தான் அரசு என்பது டோபா டேக் சிங் அரசாக பெயர் மாற்றம் அடைந்திருந்தது.
டோபா டேக் சிங் என்பது பஞ்சாப் மாநிலத்தின் ஒரு சின்னஞ்சிறிய கிராமம். அது அவனுடைய சொந்த ஊர். அவனும் இப்போதெல்லாம் இந்த டோபா டேக் சிங் எந்த நாட்டுடன் சேரும் என்று கேட்கத் துவங்கியிருந்தான். ஆனாலும் அது இந்தியாவில் இருக்கிறதா அல்லது பாகிஸ்தானிலா என்று அந்த விடுதியில் உள்ள யாரும் தெளிவாக அறிந்திருக்கவில்லை. இந்த மர்மத்தை விடுவிக்க முயற்சி செய்த சிலரும் மொத்தமாகக் குழம்பிப் போனார்கள். ஏனென்றால், பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் முன்பு இந்தியாவில் இருந்தது.
அது இப்போது பாகிஸ்தானுக்குப் போய்விட்டது. இது அவர்களை வெகுவாகக் குழப்பியது. இப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூர் எந்த நேரத்திலும் சரிந்து இந்தியா பக்கம் போய்விட வாய்ப்பு இருக்கலாம் என்று அந்த விடுதியில் இருந்தவர்கள் ஊகிக்கத் தொடங்கினார்கள்.
முழு இந்தியத் துணைக்கண்டமும் பாகிஸ்தானாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்தியாவும் பாகிஸ்தானும் என்றாவது ஒருநாள் உலக வரைபடத்திலிருந்தே காணாமல் போய்விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை என்றும் பேசிக்கொண்டார்கள்.அந்த சீக்கியக் கிழவனுக்கு முடியெல்லாம் கொட்டிப் போயிருந்தது. இருந்த கொஞ்சமான முடியும் அவனுடைய தாடியின் ஒரு பகுதியாக மாறிப்போனது.
இது மிகவும் விநோதமாகவும் சமயத்தில் பார்ப்பவர்களுக்குக் கொஞ்சம் அச்சம் தருவதாகவும் இருந்தது. இருந்தாலும் அவன் மிகச் சாதுவாகவும் யாருடனும் சண்டை போடாதவனுமாக இருந்து வந்தான். அவன் டோபா டேக் சிங் கிராமத்தின் வளமான நிலச்சுவான்தாராக இருந்தவன். திடீரென்று பைத்தியமாகிப் போனான். முன்பெல்லாம் மாதம் ஒருமுறை அவனைப் பார்க்க அவனுடைய உறவினர்கள் சிலர்
வந்து கொண்டிருந்தார்கள். பஞ்சாபில் மதக்கலவரங்கள் தீவிரம் அடைந்தபிறகு உறவினர்கள் வருவது திடீரென்று நின்றுபோனது. அவனுடைய நிஜப் பெயர் "பிஷன் சிங்'.
எல்லோரும் அவனை கேலியாக "டோபா டேக் சிங்' என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். அவன் தானே உருவாக்கிக் கொண்ட ஒரு அகவுலகில் வாழ்ந்து கொண்டிருந்தான். அந்த விடுதியில் அடைத்ததில் இருந்து தான் இருப்பது எந்த இடம், என்ன தேதி, என்ன நேரம் என்பதைப் பற்றிய எந்த பிரக்ஞையும் அவனுக்கு கிடையாது. ஆனால் அவனுக்குள் ஒரு ஆறாவது அறிவை வளர்த்துக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்க்க விடுதிக்கு அவனுடைய உறவினர்கள் வருகை தரும் நாட்களில் மட்டும் அவன் மணக்க மணக்க சோப்பு தேய்த்துக் குளிப்பான். தலைக்கு எண்ணெய் வைத்துக்கொள்வான்.
தலைமுடியையும் தாடியையும் படியப் படிய சீவித் தன்னை அலங்கரித்துக் கொள்வான். உறவினர்களின் வருகையின் போது அவர்களை சந்திக்கும் வேளையில் ஒன்றும் அதிகமாகப் பேசமாட்டான். அவனுடைய வழக்கமான ""உப்பர் தெ குர்குர் தெ அனெக்ஸி தெ பே த்யானா தெ மூங் தி தால் ஆஃப் தி லால்டின்'' மட்டும் தொடரும். அவனை இந்த விடுதியில் அடைக்கும்போது ஒரு சிறிய அழகான பெண்குழந்தையை கிராமத்தில் விட்டு வந்திருந்தான். அப்பெண் குழந்தை எப்போதாவது உறவினர்களுடன் இவனைப் பார்க்க வரும்.
இப்போது அப்பெண்ணுக்கு பதினைந்து வயது. இப்போதும் எப்போதாவது ஒருமுறை வருவாள். வரும்போதெல்லாம் அவன் முன் நெடுநேரம் அமர்ந்து கொண்டு கன்னங்களில் கண்ணீர் வடிய மெற்னமான விசும்பல்களுடன் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவனுடைய விந்தையான உலகில் அவன் காணும் பல முகங்களில் தன் மகளின் முகமும் ஒன்றாக அவனுக்கு இருந்தது. இந்த இந்தியாஇபாகிஸ்தான் பிரிவினை மற்றும் இருநாடுகளுக்கிடையிலான பைத்தியங்களின் பரிமாற்றம் குறித்த பேச்சுக்கள் ஆரம்பித்ததிலிருந்து "டோபா டேக் சிங்' இப்போது எங்கிருக்கிறது என்று விடுதியில் எதிரில் வந்தவர்களிடமெல்லாம் கேட்க ஆரம்பித்தான்.
யாரிடமிருந்தும் அவனுக்குத் திருப்தியான பதில் கிடைக்கவில்லை. ஏனென்றால் யாருக்கும் அது குறித்து ஒன்றும் தெரியவில்லை. அவனைப் பார்க்க வரும் உறவினர்களின் வருகையும் திடீரென நின்று போனது. நாளடைவில் அவனுடைய பதட்டம் அதிகரித்து வந்தது. அதற்கும் மேலாக அது குறித்து, அவனுடைய ஆர்வம் பிரம்மாண்டமாக வளர்ந்து வந்தது. உறவினர்கள் வருகை நாளன்று அவனை எச்சரிக்கை செய்யும் அவனுடைய ஆறாம் அறிவு சார்ந்த எச்சரிக்கை உணர்வும் மெல்ல மெல்ல பலமிழக்கத் துவங்கியது. குடும்பத்தின் பிரிவு அவனை மெதுவாக வாட்டத் துவங்கியது. வருகைகளின் போது உறவினர்கள் அவனுக்காகக் கொண்டு வந்த பரிசுப் பொருட்களையும், அவர்கள் பேச்சில் கனிந்திருந்த பரிவையும் நினைத்து கொஞ்ச நாட்களாக ஏங்கத் துவங்கியிருந்தான்.அவர்களையாவது கேட்டிருக்கலாம். "டோபா டேக் சிங்' இப்போது இருப்பது இந்தியாவிலா அல்லது பாகிஸ்தானிலா என்று கேட்டிருக்கலாம். இந்த விடுதிக்குக் கொண்டு வருவதற்கு முன்பிருந்த டோபா டேக் சிங் கிராமத்திலிருந்து வருபவர்கள் தான் அவர்கள் என்ற ஒரு ஊகம் அவனுக்குள் மெல்ல உருவாகத் தொடங்கி இருந்தது. அந்த விடுதியில் இருந்த ஒரு பைத்தியம் தான் ஒரு கடவுள் என்று அறிவித்தது.
பிஷன் சிங் அவனிடம் ஒருநாள் சென்று அது கடவுளாக இருக்கும் பட்சத்தில் அவனுடைய சொந்த ஊரான டோபா டேக் சிங் தற்போது இருப்பது இந்தியாவிலா அல்லது பாகிஸ்தானிலா என்று மிகவும் பவ்யமாகக் கேட்டான். அதற்கு அந்தப் பைத்தியம், "உன் டோபா டேக் சிங் இப்போது இந்தியாவிலும் இல்லை இ பாகிஸ்தானிலும் இல்லை. ஏனென்றால் அதைப்பற்றிய ஆணையை இன்னும் நான் பிறப்பிக்க வில்லை என்று கொக்கரித்தது.
அவனுடைய பிரச்னைக்கு உடனடித் தீர்வாக, தேவையான ஆணையை உடனே பிறப்பிக்குமாறு "கடவுளை' மிகவும் பவ்யத்துடன் வேண்டினான் பிஷன் சிங். ஆனால் அவனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஏனென்றால் அந்தக் "கடவுள்' கவனம் செலுத்துவதற்கு வேறு பல முக்கியமான பணிகள் இருந்ததால், டோபா டேக் சிங் பற்றிக் கவலைப்பட அதற்கு நேரம் கிடைக்கவில்லை. இறுதியில் பிஷன் சிங் அந்தக் கடவுளிடம் மிகவும் கோபத்துடன் ""உப்பர் தெ குர்குர் தெ மூங் தெ தால் ஆஃப் குருஜி தா கால்ஸப் அண்ட் குருஜி கி ஃபதேஹ்... ஜோ போலே ழ்ஸப் நிஹால்... ஸத் ஸ்ரீ அகால்...'' இ அவன் சொல்ல வந்தது என்னவென்றால், ""என்னுடைய பிரார்த்தனைகளுக்கு நீ பதில் சொல்ல வில்லை. ஏனென்றால் நீ ஒரு முஸ்லிம் கடவுள். நீ ஒரு சீக்கியக் கடவுளாக இருந்திருந்தால் எனக்கு சரியான விடை கிடைத்திருக்கும்''.
இருநாடுகளுக்கிடையயோன பைத்தியங்களைப் பரிமாற்றம் செய்யப் படுவதற்கு ஒரு நாளைக்கு முன் டோபா டேக் சிங் கிராமத்தை சேர்ந்த முஸ்லீம் நண்பர்களில் ஒருவன் இந்தப் பதினைந்து வருடங்களில் முதல் முறையாக பிஷன் சிங்கை சந்திக்க விடுதிக்கு வந்திருந்தான். பிஷன் சிங் அவனைப் பார்த்துவிட்டு சடாரென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான். விடுதியின் காவலன் அவனைக் கூப்பிட்டு "வந்திருப்பது உன்னுடைய சிறுவயதுத் தோழன் ஃபஸர்ல் உத்தீன். அவ்வளவு தூரத்திலிருந்து உன்னைப் பார்க்க வந்திருக்கிறான். அவனைப் பார்த்து இப்படி முகம் திருப்பிக் கொண்டால் எப்படி?'' என்று உரிமையுடன் கடிந்து கொண்டான். பிஷன் சிங், மெல்ல ஃபஸர்ல் உத்தீன் பக்கமாகத் திரும்பி எதையோ புரியாதவண்ணம் முணுமுணுக்க ஆரம்பித்தான். ஃபஸர்ல் உத்தீன் அவனிடம், ""உனக்கு இந்த செய்தியைக் கொண்டு வரவேண்டும் என்று ரொம்ப நாட்களாக எண்ணிக் கொண்டு அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமலே போனது. உன்னுடைய குடும்பத்தினர் எல்லோரும் நலமாகவும் பாதுகாப்புடனும் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வித ஆபத்தும் இன்றி இந்தியா திரும்பி விட்டார்கள். ஒரு நண்பனாக உனக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து விட்டேன். உன்னுடைய மகள் ரூப் கவுர் மட்டும்... என்று தயங்கி, ரூப் கவுர் கூட இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறாள்'' என்று அவசரமாக முடித்தான். பிஷன் சிங் அமைதியாக இருந்தான். ஃபஸர்ல் உத்தீன்
தொடர்ந்தான்.
"நீ நலமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு உன் குடும்பத்தினர் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். மிக விரைவில் உன்னையும் இந்தியாவுக்கு அனுப்பி விடுவார்கள். சகோதரன் பல்பீர் சிங், சகோதரன் வதாவா சிங் மற்றும் சகோதரி அம்ரித் கவுருக்கும் இந்த ஏழை சகோதரனை நீ நினைவு படுத்தவேண்டும் என்பதைத் தவிர இப்போதைக்கு உனக்குச் சொல்ல எனக்கு ஒன்றும் இல்லை. அல்லாஹ்வின் அருளால் ஃபஸர்ல் உத்தீன் நலமாக இருக்கிறான் என்று சகோதரன் பல்பீர் சிங்கிடம் போய் நீ சொல்லவேண்டும். அவர்கள் விட்டுப்போன பழுப்பு நிற எருமைகள் இரண்டும் நன்றாக இருக்கினறன. அவையிரண்டும் கன்றுகளை ஈன்றிருக்கின்றன. துரதிருஷ்டவசமாக அவற்றில் ஒன்று, ஆறு நாட்களுக்குப் பின் இறந்து போனது. அவர்களை நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன் என்று அவர்களிடம் சொல். இந்த ஏழை சகோதரனின் உதவி எதற்காவது தேவைப்பட்டால் உடனே கடிதம் எழுதச் சொல்'' என்றான்.
"இதோ உனக்காகக் கொஞ்சம் அரிசியும் கொண்டு வந்திருக்கிறேன்'' என்றான். பிஷன் சிங் ஒன்றும் பேசாது ஃபஸர்ல் உத்தீன் கொண்டு வந்த சிறிய அரிசி மூட்டையை வாங்கி அங்கு நின்றிருந்த காவலனிடம் கொடுத்தான்.
"எல்லாம் சரி இப்போது டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது?'' என்று கேட்டான்.
"டோபா டேக் சிங்கா? ஏன்? அது அங்கேயேதான் அது எப்போதும் இருந்த இடத்திலேயேதான் இப்போதும் இருக்கிறது!''""இந்தியாவிலா? பாகிஸ்தானிலா?"
இந்தியாவில்... இல்லை... பாகிஸ்தானில்...பிஷன் சிங், மறுவார்த்தை எதுவும் பேசாது முகத்தை உடனே திருப்பிக் கொண்டு ""உப்பேர் தெ குர்குர் தெ அனெக்ஸி தெ பி தெ மூங் தெ தால் ஆஃப் தி பாகிஸ்தான் அண்ட் ஹிந்துஸ்தான் துர் ஃபிட்டே'' என்று முணுமுணுத்துக் கொண்டே வேகமாக விடுதிக்குள் ஓடிப்போனான்.அதே நேரத்தில் ஏற்கனவே தீர்மானித்தபடி இருநாடுகளுக்கு இடையிலான பைத்தியங்களைப் பரிமாறிக் கொள்ளும் ஏற்பாடுகளும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தன. இரு நாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் அடைக்கப் பட்டிருக்கும் பைத்தியங்களின் பெயர்ப் பட்டியலும், பரிமாற்றத்துக்கான தேதியும் மற்ற விபரங்களையும் இருநாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன. ஒரு கடுமையான குளிர்காலத்து மாலையில், இந்து பைத்தியங்களையும் மூத்த அரசு அதிகாரிகளையும் நிரப்பிக் கொண்டு பேருந்துகள், ஆயுதங்கள் ஏந்திய போலீஸ் காவலுடன், லாகூர் பைத்தியக்கார விடுதியை விட்டு, இந்தியாஇபாகிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடான "வாகா' எல்லையை நோக்கிக் கிளம்பின.
இருநாடுகளின் தரப்பிலிருந்தும் மூத்த அதிகாரிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு தரப்பிலிருந்தும் அந்தப் பைத்தியங்களை பேருந்து களிலிருந்து இறக்கி, மூத்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி சாதாரணமானதாக இல்லை. அதிகாரிகளுக்கு உயிர் போய் உயிர் வந்தது. சில பைத்தியங்கள் பேருந்தை விட்டு இறங்க மாட்டேன் என அடம் பிடித்தன. மிகவும் பிரயத்தனப் பட்டு இறக்கப்பட்ட பைத்தியங்கள் திசைக்கு ஒன்றாக பிய்த்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன. சிலர் உடைகளைக் கிழித்து எறிந்து முழு நிர்வாணமாக நின்றனர்.
அவர்களுடைய நிர்வாணத்தை மூட முயன்ற அதிகாரிகளின் முயற்சிகள் பலிக்கவில்லை. சில பைத்தியங்கள் அந்த அதிகாரிகளின் உடைகளையும் கிழித்தெறிந்து அவர்களையும் நிர்வாணப் படுத்தி நிறுத்தினர். சிலர் உரக்கப் பாடிக்கொண்டும் சிலர் மிகவும் உரக்க, மிகவும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் எல்லோரையும் திட்டிக் கொண்டும் இருந்தனர். சிலர் உரக்க அழுது கொண்டிருந்தனர். மற்ற பைத்தியங்களுடனும் அரசு அதிகாரிகளுடனும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சுருங்கச் சொன்னால், அங்கு உச்சகட்ட குழப்பம்
நிலவியது. பரிமாற்றம் செய்ய அழைத்து வரப்பட்டிருந்த பைத்தியங்களில் பெண்களும் இருந்தனர். அவர்களும் உச்சக்குரலில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். பற்கள் கிட்டித்துப் போகும் அளவுக்கு இருந்த வெடவெடக்கும் குளிரிலும் யாரும் கூச்சல் போடுவதை நிறுத்த வில்லை. பெரும்பான்மையான பைத்தியங்கள் அந்தப் பரிமாற்றத்தினை மிகவும் கடுமையாக எதிர்த்தனர். இருந்த விடுதிகளிலிருந்து
தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி எதுவும் புரியாத ஒரு புதிய இடத்தில் தங்களை அடைப்பதை அநேகமாக எல்லாப் பைத்தியங்களும் கடுமையாக எதிர்த்தனர். அங்கங்கு கோஷங்களும் எழத் தொடங்கின. சில பைத்தியங்கள், பாகிஸ்தான் ஒழிக எனக் கூச்சலிட்டன. சிலர் இந்தியா ஒழிக எனக் கோஷம் போட்டனர். இந்தக் கோஷங்களைத் தொடர்ந்து பைத்தியங்களுக்குள் அங்கங்கு மிகவும் கடுமையான சண்டைகளும் கிளம்பின. பிஷன் சிங் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டு அதிகாரிகளிடம் அழைத்து வரப்பட்டான்.
பேரேட்டில் அவனைக் கையெழுத்திடுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு அவன் அவர்களிடம் கேட்ட ஒரே கேள்விஇ ""டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது? இந்தியாவிலா? பாகிஸ்தானிலா? அந்த அதிகாரி மிகவும் அருவெருப்பான வகையில் உரக்க சிரித்து ""பாகிஸ்தானில்'' என்றான். பிஷன் சிங் தன்னை விடுவித்துக் கொண்டு மிக வேகமாக ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தான். பாகிஸ்தான் போலீசார் அவனை விரட்டிப் பிடித்து குண்டுக்கட்டாகத் தூக்கி இந்தியாவின் எல்லைக் கோட்டுக்கு அப்பால் தூக்கி எறிய முயற்சித்தனர். பிஷன் சிங் அசைந்து கொடுக்க வில்லை. ""இதுதான் டோபா டேக் சிங்'' என்று கடுமையான பிடிவாதத்துடன் நகர மறுத்துப் போராடினான்.
பிறகு ""உப்பேர் தெ குர்குர் தெ அனெக்ஸி தெ பி தியானா மூங் தெ தால் ஆஃப் டோபா டேக் சிங் அண்ட் பாகிஸ்தான்'' என்று உரக்க அறிவிப்பது போல கூச்சலிட ஆரம்பித்தான். டோபா டேக் சிங் ஏற்கனவே இந்தியாவுக்குப் போய்விட்டது என்று அவனுக்குப் புரிய வைக்க அவர்கள் எடுத்த கடுமையான முயற்சிகள் அனைத்தும் பயனில்லாமல் போனது.
அந்த இடத்தை விட்டு அவனை நகர்த்த முடியவில்லை. இருநாட்டுக்கும் பொதுவான எல்லைக் கோட்டில் தனது வீங்கிய கால்களுடன், பிரம்மாண்டமான ராட்சத சிலையைப் போல அவன் நின்று கொண்டிருந்தான். அப்பாவியான கிழவனாக இருந்ததால் அவனை இந்தியாவின் பக்கம் நெட்டித் தள்ள அந்த அதிகாரிகள் முயற்சிக்க வில்லை. பைத்தியங்களின் பரிமாற்றம் தொடர்ந்து கொண்டிருந்தது.
அவன் நின்று கொண்டிருந்த இடத்திலேயே நின்று கொண்டிருக்க அவனை அனுமதித்தனர். இரவு கரைந்து கொண்டிருந்தது.
சூரிய உதயத்துக்குச் சற்று முன், கடந்த பதினைந்து வருடங்களாக எப்போதும் நின்று கொண்டேயிருந்த அந்த மனிதன் பெரும் கூச்சலுடன் அலறினான். அதிகாரிகள் அவனை நோக்கி விரைந்தபோது தரையில் தலைகுப்புற சரிந்து விழுந்தான். தரையில் முகம் புதைந்திருக்க அசைவின்றிக் கிடந்தான். அங்கு, மின்சாரம் பாய்ச்சிய கம்பிகளால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிக்கு அந்தப்பக்கம் இந்தியாவுக்கு அனுப்பப் பட்ட இந்தியாவின் பைத்தியங்கள் நின்று கொண்டிருந்தன. வலுவான மின்சாரம் பாய்ச்சிய கம்பிகளால் பாதுகாக்கப்பட்ட வேலிகளுக்கு வேறுபுறத்தில் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட பாகிஸ்தான் பைத்தியங்களும் நின்று கொண்டிருந்தன. தலை இந்தியாவை நோக்கியும் பாதங்கள் பாகிஸ்தான் அமைந்த திசையிலும் அசையாது கிடந்தான் பிஷன் சிங். மிக வலுவாக அமைக்கப்பட்ட இரண்டு பாதுப்ப்பு வேலிகளுக்கு இடையில் அவன் முகம் புதைத்துச் சரிந்திருந்த சிறு துண்டு நிலத்துக்கு எந்தப் பெயரும் இல்லை. அது,
"டோபா டேக் சிங்''.
பதிவுகள் ஜூன 2008; இதழ் 102
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.