பதிவுகள் சிறுகதைகள் -2

 -'பதிவுகளி'ல் வெளிவந்த சிறுகதைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன். இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் , சிறுகதைகளுட்பட , இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் - பதிவுகள்-

 போர்க்களம்!
 
- பாவண்ணன் -

-ஒன்று-

பதிவுகள் சிறுகதைகள் - 2பாற்கடலின் விளிம்பில் ரத்தச் சிவப்பு படர்ந்தது. சூரியன் மறையப்போகும் நேரம். அலைகளின் இரைச்சலை மீறிக் கொண்டு அசுரர்களின் இரைச்சல் வானில் மோதியது. ஒருபுறம் மார்பு பிளந்த மகாபலியின் அலறல். இன்னொருபுறம் நமுசியும் சம்பரனும் இதயத்தில் தைத்த வேல்களைப் பிடுங்கும்போது எழுப்பிய மரணக் கூச்சல். மற்றொரு புறத்தில் வேரற்ற மரம் போல விழுந்த அயோமுகனின் சத்தம்.

அச்சத்தத்தில் நெஞ்சம் துடித்தது. தன்னைச் சுற்றிலும் அசுரர்கள் அபயக் குரல் எழுப்பியபடி ஓடுவதைக் கண்டன ராகுவின் கண்கள். உடல் இரண்டு துண்டுகளாக அறுபட்ட நிலையில் முன்னால் வேகவேகமாக மாறிக் கொண்டிருந்த காட்சிகளைத் துயரத்துடன் நோக்கினான் அவன். கடலின் செந்நிறம் ஏறிக் கொண்டே இருந்தது. ரத்தம் கலந்த கடற்பரப்பில் மரணதேவதையின் முகம் தெரிந்தது. ஒரு பெரிய மிருகத்தின் முகம் போல இருந்தது அவள் முகம். அந்த வெறி. அந்தச் சிவப்பு. அவள் கோரைப் பற்கள். உயிரற்ற உடல்களை அள்ளி எடுக்க நீண்டன அவள் கைகள். அக்கை கடலையே துழாவிக் கரையைத் தொட்டது. யாரோ தாக்கியது போல உடல் அதிர்ந்தது. "ஐயோ" என்றான்.

விழிப்பு வந்துவிட்டது. பீதியில் இதயம் துடிக்கச் சுற்றியும் இருந்த கூடாரங்களைப் பார்த்தான் ராகு. உண்ணாநோன்பினால் சோர்ந்திருந்தாலும் மோகினியின் அங்க அழகுகளைச் சுவையோடு பேசிக் கொண்டிருக்கும் சக வீரர்களின் குரல்கள் கேட்டன. அனைவரும் கொல்லப்படுவதாக எப்படி நினைத்தோம் என்று ஆச்சரியமாக இருந்தது. உடனே அந்தக் கனவின் காட்சி மீண்டும் விரிந்தது. மெல்ல எழுந்து கூடாரத்தைவிட்டு வெளியே வந்தான். வெயில் ஏறிய வானம் கண்களைக் கூசவைத்தது. அருகில் இரைச்சலிடும் அலைகளையே வெகுநேரம் பார்த்தான். அவனுக்குத் தன் மனத்தில் கவிந்திருக்கும் குழப்பம் பற்றிக் கவலை உண்டானது. "அபசகுனம்" என்று முணுமுணுத்துக் கொண்டான். எழுந்து கைகளை வானை நோக்கி உதறினான். அவசரமாகப் பணியாள் ஓடிவந்து அருகில் நின்றான்.

"துணைக்கு வரவேண்டுமா அரசே?" என்றான். ராகுவின் பார்வை அவன் தோள்களில் பட்டு மீண்டது. அவன் காட்டும் பணிவு நடிப்பா உண்மையா புரிந்துகொள்ள முயற்சி செய்து தோற்றான். புன்னகையோடு தலையசைத்தபடி தொடர்ந்து தனியாக நடக்கத் தொடங்கினான். 

கரை நெருங்கியது. கடலின் பெரிய பெரிய அலைகள் கரையை விழுங்க போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு அணியாய் வருவது போல இருந்தது. முதலில் வருவது ரதப்படை. அப்புறம் வருவது யானைப்படை. அதற்கப்புறம் குதிரைப்படை. தொடர்ந்து வருவது காலாட்படை. அப்படி எண்ணியதைத் தொடர்ந்து ஒவ்வொரு அலை எழுந்து வரும்போதும் அதற்குரிய காலடி ஓசையைப் பொருத்திப் பார்த்தான். என்ன ஆச்சரியம். அலையின் ஓசையும் படைகளின் ஓசையும் சரியாகப் பொருந்தின. எதனாலும் வெல்லப்பட முடியாத ஒன்றாக நீண்டிருந்தது கரை. கரைநெடுக வானின் வடுபோல அலையின் சுவடுகள். அங்கங்கே பாறைகள் காணப்பட்டன. பாறைகளுடன் ஆக்ரோஷத்துடன் மோதின அலைகள். அப்பாறைகளின் ஆகிருதியைக் குலைத்து நசுக்கிக் கூழாக்கிவிடத் துடிப்பதைப் போலிருந்தன அலைகள். அலைகளுக்கும் பாறைகளுக்கும் காலகாலமாக அந்த யுத்தம் தொடரந்து நடப்பது போலக் காணப்பட்டது.

கரையையொட்டி ஒரு சிறு குன்றைக் கண்டான். குன்று முழுக்கக் கரிய பாறைக் கூட்டங்கள் யானைகளைப் போலப் பரவிக்கிடந்தன. அங்கங்கே செடிகள் நின்றிருந்தன. அஸ்தமனப்பொழுதில் அவற்றின் இலைகள் வாடிச் சுருங்கிக் கவிழ்ந்திருந்தன. செடிகளின் உடல்முழுதும் ஒருவித ·சோர்வு தென்பட்டது. அவை விடும் பெ முச்சு போல அவற்றின் வழியாக வீசிய காற்று இருந்தது. அங்கங்கே கிளைகளில் சிறுசிறு குருவிகள் அமர்ந்திருந்தன. காலடியோசையில் அதிர்ந் து அவை கிறீச்சிட்டு மேலெழும்பித் தாவின. அவற்றின் தவிப்பை உணர்ந்தது போல அந்தத் திசையிலிருந்து விலகி இன்னொரு கிளைத்திசையில் நடந்தான் ராகு. போதுமான தொலைவு நடந்த பிறகும் கூட குருவிகளின் கிறீச்சிடல் நிற்காதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மொட்டைப் பாறைகளுக்கும் கிளைகளுக்கும் இடையே அவை தவித்து அலைந்தன. அப்போதுதான் பாறையின் இடுக்கில் ஒரு பாம்பும் கீரியும் ஆக்ரோஷமாகச் சண்டையிடுவதைக் காண நேர்ந்தது. இரண்டு பிராணிகளின் கண்களிலும் கொலைவெறி மின்னியது. அவற்றின் வெறிக் பச்சலைக் கேட்டு குருவிகள் மிரண்டன. ஒன்றை ஒன்று கடித்துக் குதறத் துடிக்கும் ஆவேசம் கொண்ட அப்பிராணிகளைப் பார்க்கும்போது ஒரே சமயம் வெறுப்பும் சிரிப்பும் ஏற்பட்டது. உடனடியாக அந்தச் சிறுயுத்தம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவரும் யுத்தத்தை நினைவூட்டியது. உடனடியாக அந்த இடத்திலிருந்து திரும்பிவிட வேண்டும் என்று அவன் மனம் விரும்பியது. எனினும் அக்காட்சியிலிருந்து அவனால் தன் கண்களை மீட்க முடியவில்லை. கீரி தன் தலையை அப்படியும் இப்படியும் திருப்பித் தருணம் பார்த்து வசமான இடத்தில் பாம்பைக் கவ்வ முயற்சி செய்தது. உடலை வளைத்தும் நெளித்தும் நீட்டியும் பாம்பு அதன் பிடியில் அகப்பட்டுவிடாமல் தப்பித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் அதன் உடலில் அங்கங்கே கீறலின் கடிகள். ரத்தக் கசிவுகள். அக்காட்சி அவனுக்குள் ஓர் அமைதியின்மையை எழுப்பியது. சலித்து வந்த வழியே திரும்பினான். சூரியன் வேகவேகமாக மேற்கு நோக்கிச் சரிந்தபடி இருந்தது. பகல் வடிந்த வானம் எடுக்க மறந்த துணிபோல தனிமையில் கிடந்தது. அலைகளின் ஆக்ரோஷம் சற்றும் தணியாதிருந்தது.

ஏதோ ஒரு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசியது. மார்பை அது தீண்டியதும் உடலில் உருவான சிலிர்ப்பை உணர்ந்தான் ராகு. அவன் மனம் அதில் பெரும் நிம்மதியைக் கண்டது. அந்தச் சிறுநேர நிம்மதியில் அவன் மனப்பாரம் பெருமளிவில் குறைந்தது. கடந்த இரவிலிருந்து அவன் மனத்தைக் குடைந்து கொண்டிருந்த குழப்பங்களிலிருந்து கணநேரத்துக்கு விடுதலை அடைந்தான். அவன் அசுரபுத்திரன். வீரன். ஆக்ரோஷத்துடன் எதிரிகளுடன் மோதி வீழ்த்துபவன். இந்த அகிலத்தில் தேவர்களுக்கு இணையாகத் தம் குலம் வாழ்வதற்கான ஜீவித நியாயத்தை நிறுவிக் காட்டுவதில் வேகமும் ஆற்றலும் கொண்டாவன். அப்படிச் சொல்லிச் சொல்லித்தான் காலம் காலமாக வளர்க்கப்பட்டிருந்தான் அவன். அக்கடமையிலிருந்து அவனால் ஒருபோதும் மீள முடியாது. மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பைத் தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒருபுறமுமாகப் பிடித்துக் கடைந்து கொண்டிருந்த தருணத்தில் கூட அந்த எண்ணம் அவன் மனத்தின் ஆழத்தில் மிதந்தபடியே இருந்தது. காலம் முழுக்கத் தம் குலத்தின் ஜீவித நியாயங்களை மறுத்துவந்த தேவர்களின் ஒற்றுமை வார்த்தைகள் உள்ளார்ந்த நட்பா, நாடகமா என்ற சந்தேகம் கிளைவிரித்தபடி இருந்தது. தன்வந்திரியிடமிருந்து அமுத கலசத்தை மகாபலியும் மற்றவர்களும் பிடுங்கிக் கொண்ட சமயத்தில்தான் அச்சந்தேகம் எல்லார் மனங்களிலும் தங்கியிருந்ததை அவனால் உணர முடிந்தது. பல ஜென்மங்களாகத் தொடரும் மோதல் மறுபடியும் தொடங்கிவிடும் போல இருந்த நிலையில்தான் அந்த இளமபெண் வெளிப்பட்டாள். தன் பெயர் மோகினி என்று சொல்லிக் கொண்டாள். அவள் யார், எங்கிருந்து வந்தாள், என்கிற விவரம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அங்குலம் கூட நகர விடாமல் ஆளைக்கட்டி நிறுத்திவிட்டது அந்தக் கவர்ச்சியான புன்னகை. இனிமையான குரல். ஒயிலான நடை. "அழகியே.. நீ பொது ஆள். உன்னைப் பார்த்தால் மனத்தில் நம்பிக்கை துளிர்க்கிறது. இந்த அமுதத்தைச் சமமாக எங்களுக்குப் பிரித்தளிப்பாயா?" என்று அசுரர்களே அமுதக் கலசத்தை அவளிடம் நீட்டினார்கள். மற்ற சமயங்களில் செய்வது போல மகாபலியோ நமுசோ பிற அசுரர்களைக் கூட்டிச் செய்ய வேண்டியதைக் குறித்து ஆலோசனை நடத்தவில்லை. கருத்துகள் பரிமாறப்படவில்லை. ஒரே நொடியில் முடிவெடுத்து கலசத்தை அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டாள் மகாபலி. அந்தத் தருணத்தில் "ஐயோ..சக்கரவர்த்தி, என்ன காரியம் செய்கிறீர்கள்" என்று பதறி ஓடிப் பிடுங்கிக் கொள்ள முடியவில்லை. "அசுரர்களே அந்த மோகினியை நம்பாதீர்கள். இதில் ஏதோ சதி இருப்பது போலத் தெரிகிறது" என்று அவளைத் தடுக்க முடியவில்லை. "யாரென்றே தெரியாத பெண்ணை நம்பினால் மோசம் போய்விடுவோம்" என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய இயலவில்லை. எல்லாம் கூடிவருகிற வேளையில் என்ன செயல் இது என்று மகாபலியின் தோளை உலுக்கி நாலு வார்த்தைகள் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேட்டிருந்தாலாவது ஆசுவாசம் கிடைத்திருக்கும் . அவனைத் தவிர அசுர கூட்டத்தின் கண்கள் அந்தப் பெண்ணின் மீதிருந்தது. தொடை வரை நீண்ட அவள் கூந்தல் ஆசையைத் து¡ண்டும் அவள் கண்கள். தங்கத் தகடென மின்னும் கன்னம். கவர்ச்சியான தோள் வளைவுகள். செழிப்பான மார்பு. குழைவான இடை. அவர்கள் பார்வைகள் அவள் மீது அங்கம் அங்கமாக மொய்க்கத் தொடங்கியதைப் பார்க்க அருவருப்பாக இருந்தது.

அந்தத் தருணத்தில் அவர்கள் அனைவரின் மீதும் கடுமையான ஆத்திரமும் வெறுப்பும் பொங்கின. "என்ன குலம் இது? ஏமாந்து அழிவதே இதன் தலையெழுத்தா?ஏ என்று கசப்புடன் நொந்து கொண்டான். அவர்களுடைய முரட்டு மோகம் முதல் முறையாக அவனுடைய கோபத்தைத் து¡ண்டியது. அந்தப் பெண்களின் முன் அவர்கள் நெளிவதையும் குழைவதையும் பல்லிளித்துக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என்று பேச முற்பட்டதையும் காண எரிச்சல் பொங்கியது. ஏஆண் சிங்கங்களே, என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. அமர நிலை எய்ய வைக்கும் அமுதத்தை உண்ணும் முன்பு நாளை ஒரு நாள் உண்ணாநோன்பிருப்போம். நாளை மறுநாள் அதிகாலையில் பங்கிட்டுக் கொள்வோம்" அவளது இனிய குரலுக்கும் குழைவான சொற்களுக்கும் அசுரர்கள் கூட்டம் அடிபணிந்துவிட்டது.

மகாபலியை நெருங்கிச் சந்தேகத்தை முன்வைக்கவே இயலவில்லை. மோகினியின் விழிகளிலிருந்து புறப்பட்ட கணைகளை உடல்முழுக்கச் சுமந்து கொண்டிருப்பது போன்ற கனவில் மிதந்து கொண்டிருந்தார் அவர். சக்கரவர்த்தியைவிட ஒருபடி மேலாக மற்றவர்கள் உருகிக் கிடந்தார்கள். இதையெல்லாம் கண்ணால் பார்த்து சங்கடப்படவேண்டியதாகிவிட்டதே என்று குமைவதைத் தவிர வேறு வழியில்லை. தேவர் குலத்தில் யுத்தத்தை நேருக்குநேர் எதிர்த்துக் கொன்றழித்தால்தான் தன் மனம் ஆறுமோ என்னமோ என்று தோன்றியது. பெரும்கூட்டமாக வந்து , வினயத்துடன் வணங்கி, ஏநாமெல்லாம் அண்ணன் தம்பிகள் போலத்தானே, நாம் ஒன்று கூடி செய்கிற காரியத்தில் வெற்றி கிடைக்காமல் போகுமோஏ என்று இனிப்பான வார்த்தைகளை உதிர்த்த போது அவன் மனத்தில் முதலில் எழுந்தது இந்தச் சந்தேகம்தான். அந்தச் சம்தேகக் கோட்டின் ஈரம் இன்னும் அழியாமல் இருப்பதாகத் தோன்றியது. அதற்கப்புறம் ஓர் இரவு கூட நிம்மதியாய்த் து¡ங்க இயலவில்லை. சாவு குறிக்கப்பட்டுவிட்ட கைதியாக மனம் தத்தளித்தபடி இருந்தது. எல்லாம் முடிந்து அமுத கலசம் கையில் கிடைத்த தருணத்தில் அந்தக் கள்ளி வந்து சேர்ந்தாள்.

எப்படியெல்லாம் தளுக்கினாள் அந்தக் கள்ளி. உதடுகளை அவள் சுழித்த சுழிப்பு. கண்களில் அவள் தேக்கியிருந்த கவர்ச்சி. வார்த்தைக்கு வார்த்தை புன்சிரிப்புதான். மெலிந்த கைகளை நீட்டித் தோள்களில் தீண்டினாள். அந்த இன்பத்தில் சிலிர்த்தார்கள் அசுரர்கள். பெண்ணின் மென்மையை உணர்ந்தறியாத அவர்கள் உடலும் மனமும் கிளர்ச்சியுற்றுப் பைத்தியம் பிடித்ததைப் போல மாறிவிட்டார்கள். அவளை அடையும் உத்வேகத்தில் அவள் இடும் கட்டளைகளையோ விதிமுறைகளையோ காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவர்கள் எதிர்பார்த்தெல்லாம் அதிக நேரம் அவளுடன் செலவழிக்க வேண்டும் என்பதுதான். அவள் தோள் தொட்டுப் பேச வேண்டும். கன்னத்தை ஒருமுறை தீண்டிப் பார்க்க வேண்டும். அவளுடன் கை கோர்த்துக் கொண்டு நடக்க வேண்டும். அவளைத் தோளில் சுமந்து கொள்ள வேண்டும். பஞ்சு போன்ற அவள் பாதங்களில் முத்தம் பதிக்க வேண்டும். மழையில் அவளுடன் நனைய வேண்டும். இவைதாம் அவர்கள் கனவுகளாக இருந்தன. இவையெல்லாம் நடக்க வேண்டும் என்றுகூட இல்லை. இக்கனவுகளை அனுமதிக்கிற விதமாக அவள் பழகியதே அவர்களுக்கு அமுதம் குடித்ததைப் போல இருந்தது. "யோசித்துப் பாருங்கள் ஒப்புக் கொள்ளும் முன்பு" என்று அவள் சொன்னது கூட செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது.

எதுவுமே பிடிக்கவில்லை. அமுதமும் வேண்டாம், விஷமும் வெண்டாம் என்று அலுப்பாகிவிட்டது. திரும்பவும் தன் இடம் நோக்கி சென்றுவிடலாம் என்று தோன்றியது. ஏமற்றவர்கள் அனைவருமே வந்தால் வரட்டும் , இருந்து அந்த மோகினியை நம்பி எக்கேடாவது கெட்டுப் போகட்டும்ஏ என விட்டுச் செல்ல விழைந்தது மனம். மறுகணமே "இது என்ன சுயநலம், அழிவதென்றால் அனைவருமே சேர்ந்து அழிவோம், வாழ்வென்றாலும் அனைவருமே சேர்ந்து வாழ்வோம்" என்று எண்ணம் எழுந்தது. ஒரு கண நேரத்தில் உதித்த சுயநலச் சிந்தனையை எண்ணி வெட்கம் ஏற்பட்டது.

கரையோரமாகவே வெகு து¡ரம் வந்ததை உணர்ந்தான் ராகு. திரும்பிப் பார்த்தான். தம் கூடாரங்கள் தொலைவில் புள்ளியாய்த் தெரிந்தன. திரும்பிக் கடலைப் பார்த்தான். கடலின் விளிம்பில் செம்மை அடர்த்தியாய்ப் படர்ந்திருந்தது. சூரியன் தடுக்கி விழும் குழந்தை போல மேகத்தின் விளிம்புக்கு வந்திருந்தான். திடுமெனத் தன் பகல்கனவை அவன் நினைத்துக் கொண்டான். அது மரணதேவதையின் முகத்தையும் அம்முகம் மோகினியின் முகத்தையும் கொண்டு வந்து நிறுத்தியது. ராகுவின் உடல் பதற்றத்தில் நடுங்கியது. 
  
 -இரண்டு-

கடற்காற்று உள்ளே நுழையாவண்ணம் கூடாரம் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்ததெனினும் குளிரடித்தது. குளிர் படிந்து படிந்து மஞ்சத்தில் ஓர் ஈரத்தன்மை ஏறி விட்டிருந்தது. கதகதப்புக்காக கொஞ்சமாக மது அருந்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. உண்ணாநோன்பின் நாளில் மதுவை நினைப்பது குற்ற உணர்வைத் தந்தது. கவனத்தை உடனடியாக வேறுபக்கம் திருப்பினான் ராகு.

அடுத்தடுத்த கூடாரங்களிலிருந்து பேச்சுக் குரல்கள் மிதந்து வந்தன. கடந்த இரவு முதல் அவர்கள் பேசிக் கொண்டே இருப்பதைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. அக்குரல்கள் அனைத்தையும் இணைத்து ஒர் ஒவியத்தைத் தீட்டினால் அந்த நங்கையைத் தீட்டிவிடுவது சுலபம்.

ஒலி அலைகளை இணைத்து ஓர் ஓவியத்தைக் காற்றுவெளியில் தீட்டித்தான் அவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்களோ என்று தோன்றியது. நாலைந்து கண நேர சந்திப்பில் அந்த நங்கையைப் பற்றி இந்த அளவு பேச முடியுமா என்று ஆச்சரியப்பட்டான். மஞ்சத்தில் அமர்ந்தவனீன் காதில் அக்குரல்கள் வந்து விழுந்தபடி இருந்தன. மனம் ஏதோ ஒரு குழப்பத்தில் தத்தளித்துக் கொண்டிருந்ததால் அந்தக் குரல்கள், அசுரர்கள், அந்த இரவு, அந்த நங்கை எல்லாவற்றின் மீதும் என்னவென்று சொல்லவியலாத கடுகடுப்பும் எரிச்சலும் பொங்கின.

தன் மன அமைதியைக் குலைத்துவிட்ட அந்த நங்கையை மனசாரச் சபித்தான்.

கூடாரத்தின் இணைப்பின் இடைவெளியில் தலையை நுழைத்து யாரோ பார்ப்பது போல இருந்தது. அயல் கண்கள் தன்னை மொய்பப்தை அவன் சட்டென உணர்ந்து அகாண்டான். அந்த முகம் யாருடையது என்று உள்வாங்கிக் கொள்வதற்குள் அது மறைந்துவிட்டது. முதலில் வேலைக்காரனாக இருக்குமோ என்று தோன்றினாலும் மறுகணமே அவனுக்கு அந்த அளவு தைரியமிருக்காது என்கிற நம்பிக்கையில் அந்த எண்ணத்தைத் தள்ளினான். மீசை அமைப்பைக் கொண்டு யோசித்துப் பார்த்தால் தளபதி காலநாபனோ அல்லது அயக்ரீவனோவாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அவர்கள்தாம் என்று உறுதியாக மனம் நம்பத் தொடங்கியதும் எரிச்சல் ஏற்பட்டது. உளவறியும் அளவுக்குத் தன் மீது இவர்களுக்கு என்னவிதமான சந்தேகம் தோன்றியது என்றுகோபம் வந்தது. உடனே இந்த விஷயத்தைச் சக்கரவர்த்தியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று விழைந்தது அவன் மனம் . ஒரு கணம்தான்.

மறுகணமே இந்த உளவு வேளை அவர் வேலையாகவே இருந்துவிட்டால் என்ன செய்வது என்றொரு மாற்று எண்ணம் எழுந்ததும் அவன் வேகம் வடிந்து போனது. அவர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு எங்காவது போய் விட வேண்டும் என்று யோசித்தான். வெளியே கடுங்குளிர். இருட்டு. கடற்கரை தனிமையில் விரிந்திருந்தது. எங்கும் போகப் பிடிக்கவில்லை. ஏதோ ஒருவித அச்சம்தான் அவன் மனத்தின் அடியில் தேங்கியிருந்தது. அந்த அச்சத்தை உணர்ந்துவிடாதபடி எரிச்சலிலலும் ஆத்திரத்திலும் மனம் மாறிமாறித் தஞ்சமடைந்தது. எல்லாருக்காகவும் யோசிக்கிற பொறுப்பை நீ எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொன்ன சம்பரனின் துடுக்கான வார்த்தைகள் அவனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் சொல்லப்பட்டதாகத் தோன்றியது. அவர்கள் எல்லாரும் உயிர் துறந்து தான்மட்டும் தப்பித்து உயிர்த்திருக்கிற நிலை ஏற்பட்டால் உயிர்க்காற்று பிரியும் தருணத்திலாவது தான் எடுத்துரைத்த உண்மையை உணர்ந்து அவர்கள் வருத்தம் கொள்வார்களோ என்றொரு கேள்வி எழுந்தது. அதே சமயத்தில் அப்படி ஓர் எண்ணம் எழ இடம் தந்த மனத்தை நொந்து கொண்டான். எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் சாகக் கூடாது. அவர்கள் பெரியவர்கள். அனுபவம் மிக்கவர்கள்.

வாழ்வின் மேடுபள்ளங்களில் ஆயிரம் அடிபட்டவர்ள். அவர்கள் அனைவரும் உயிர்த்திருக்கத் தன் உயிர் மட்டும் பிரிய, அப்பிரிவின் சமயத்தில் உண்மையின் வெளிச்சம் அவர்களின் கண்களில் படுமானால் அதுதான் உயர்ந்ததாக இருக்கும் என்று நினைத்தான்.

அவர்களுக்காகத் தானாக முன்வந்து உயிர்துறக்கும் வீரனாகத் தன்னைக் கற்பனை செய்து பார்த்தான். அக்கற்பனை மரணம் காவிய நயம் கொணடதாகவும் மனத்துக்கு இதமாகவும் இருந்தது.

அந்த நங்கையை நினைத்துப் பார்த்தான் ராகு. அவள் குழைந்து பேசியதில் ஏதோ செயற்கைத்தனத்தை மனம் உணர்ந்ததால் அக்கணத்தில் அவள் உருவத்தைச் சரியாகப் பதித்துக் கொள்ளவில்லை அவன். அவள் உதடுகள் மட்டுமே சட்டென்று நினைவுக்கு வந்தன. பூவின் இதழை நினைவூட்டும் செழிப்பான உதடுகளில் ஈரம் மின்னியது. மூக்குக்குக் கீழே சின்ன மொக்குப் போன்ற குழியைத் தொடர்ந்து பழச்சுளையொன்றைக் கிள்ளி ஒட்டியது போன்ற பளபளப்பான உதடுகள். அவை அச்சத்தையும் ஆசையையும் து¡ண்டுவதாக இருந்தன.

நொடிக்கொரு முறை அவ்வுதடுகள் பிரிவதும் கூடுவதும் சுழிப்பதும் உள்ளொடுங்குவதுமாக மாறிய கோலத்தைப் பார்த்தன. அப்போது அவளைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அந்த இரவில் அந்த உதடுகளின் கோலம் நினைவிலெழுந்ததும் இதயம் பதறுவதை உணர்ந்தான்.

உதடுகள், பிறகு உதட்டுக்குத் தகுந்த கன்னம். கன்னத்துக்குத் தகுந்த முகம். முகத்துக்கு தகுந்த உடல் என ஒவ்வொன்றாக அடுத்தடுத்து அந்த மனச்சித்திரத்தை எழுதிக் கொண்டே போனான். அவன் உடலில் பரபரப்பு கூடிக் கொண்டே போனது. முழு உருவமும் மனசிலெழுந்த போது அவன் உத்வேகம் பல மடங்காகப் பெருகியது. அதே நங்கைதான் அவ்வுருவம். புனைவு அல்ல. துல்லியமாக அதே நங்கைதான்.

அவள் உடலின் ஒவ்வொரு அசைவையும் மனசின் இன்னொரு கண் தன் கட்டளையை எதிர்பாரக் காமலேயே பதித்து வைத்திருந்ததை எண்ணி ஆச்சரியமாக இருந்தது. வெறும் உதடுகளை மட்டுமே தான் பார்த்ததாக நினைத்தது எவ்வளவு நடிப்பு என்று நினைத்தபோது கூச்சமாக இருந்தது. அருகில் சகோதர அசுரர்களின் பாடல் ஒலி கேட்டது. பெண்ணைப் பற்றிய பாடல்தான். அந்த வரிகளின் தாளத்துக்குத் தகுந்தபடி யாரோ யாழை இசைத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த இளநங்கை அருகில்தான் இருக்கிறாளாம். கண்களை அசைக்கிறாளாம். ஒவ்வொரு அசைவும் ஒரு கவிதையாம். காதல் களிப்பேறிக் கட்டித் தழுவ கைகளை நீட்டும்போது அவள் மறைந்துவிடுகிறாளாம். கண்டதெல்லாம் கனவா, நனவா புரியாமல் குழப்பம் ஏற்படுகிறதாம்.

அப்பாடலின் வரிகள் நெகிழ்ந்து நெகிழ்ந்து முத்தாய்ப்பு கொண்டன. உடனே யாழ் அதிர இன்னெருவன் குரலெடுத்துப் பாடத் தொடங்கிவிட்டான். முழுநிலவு போன்று அவள் முகம் ஒளிர எதிரே நிற்கிறாளாம். அந்த நங்கை. அவள் அமுத வாய் திறந்து ஏதோ ஒரு சொல் பிறக்கிறது. அச்சொல் ஒளியாகவும் இசையாகவும் மாறுகிறது. ஒளிபட்டு உலகம் மிளிர்கிறது. இசை காற்றாக மாறி எங்கும் அலையலையாய்ப் பரவி நிறைகிறது. அந்த ஒளியும் இசையும் கூடி வானை நோக்கி நகர்கின்றன. மேகத்தில் அமர்ந்து இளைப்பாறுகின்றன. அங்கிருந்து அவை உதிரும்போது அமுத தாரைகளாகின்றன. அம்மழையின் தீண்டுதலில் உடல் ஆனந்தம் ஆனந்தம் என்று பாடுகிறது. இப்படிச் சென்று முடிந்தது இன்னொரு பாடல். முடிவேயற்று அவர்கள் பாடல்களை இசைத்தபடியே இருந்தார்கள்.

விளக்கில் எண்ணெய் வற்றி அணைந்து விட்டது. படபடவென்று அத்திரி துடிக்கிற தருணத்தில்தான் அவன் அதைக் கவனித்தான். அடுத்த கணமே அது அணைந்துபோனது. செம்புள்ளியாய் அத்திரியின் நுனி சிறிது நேரம் ஒளிர்ந்து அடங்கியது. கூடாரம் முழுக்கப் புகையின் மணம் சுழன்று சுழன்று வந்தது. பணியாளை அழைக்கலாமா என்ற யோசனையை உடனடியாகத் தவிர்த்துவிட்டு இருட்டையே வெறித்தபடி இருந்தான். சில கணங்களுக்குப் பிறகு ஒவ்வொன்றும் தெளிவாகத் தெரிந்தது. மஞ்சம். விளக்கு. குடம். குடுவை. துணிகள். காலணி.

மறுபடியும் பாடலும் இசையும் ஒலிக்கத் தொடங்கிய போது மீட்டப்பட்ட யாழ் நரம்பு போல மனம் துடித்தது. உடல் முழுக்க அந்த இசை நிரம்பித் தளம்புவது போல இருந்தது. ரத்தத்தில் ஒருவித சூடு பரவியது. மஞ்சத்தின் விளிம்பில் துகில் அலைய, கூந்தலில் சூட்டிய பூ மணக்க ஒரு இளம்பெண்¢ன் உருவம் தெரிந்தது. அந்த உருவம் மெல்ல மெல்ல மோகினியாக மாறியபோது துணுக்குற்றான். தன் எண்ணம் நகரும் திசையை எண்ணிக் குற்ற உணர்வு கொண்டான். யார் அவளைப் பற்றி நினைத்துக் கொண் ருந்தாலும் தான் மட்டும் அவளை நினைத்துக் கூடப் பாரக் கக் கூடாது என்று நினைத்தான். பிறகு அமைதி ஏற்பட்டது.

கூடாரத்தைத் தாண்டி யாராரோ நடந்து செல்லும் காலடி ஓசை கேட்டது. அவர்களின் குரல்கள் தெளிவாகக் கேட்டன. திரும்பிப் பார்க்க நினைத்தான். எனினும் எழுந்திருக்கவில்லை. மனத்துக்கும் உடலுக்குமான கட்டளைத் தொடர் அறுபட்டது போல இருந்தது. கண்களைத் திருப்பக் கூட முடியவில்லை. அசைவில்லாமல் படுத்திருந்தான். மனம் இறுக்கமாக இருந்தது. கண்களின் முன் மறுபடியும் அவள் முகம் வந்து நின்றது. ஆனந்தம் மின்னிக் கொண்டிருந்தது அவள் கண்களில். அவள் தன் மார்போடு அமுத கலசத்தை இறுக்கி அணைத்தபடி இருந்தாள். அவள் தோள்கள் வெயில்பட்டு மினுமினுத்தன. கூந்தல் காற்றில் அசைந்தது. கன்னத்தில் செம்மை ஏறியது. நறுக்கிய பவழ உதடுகளில் ஈரம் ஒளிர்ந்தது. கலசத்தின் அமுதத்தையெலக்லாம் தனித்தே குடித்துவிட்டவள் போல. அவன் மனம் அதிர்ந்தது.

பறிகொடுத்த இழப்புணர்வில் வேகம் ஏறியது. "அடி கள்ளி, வேஷக்காரியே நான் நினைத்தது நடந்துவிட்டதே. எங்களை என்னவென்ற நினைத்தாய்? ஏமாந்தவரகள் என்றா? அறிவற்ற பேதைகள் என்றா? நீ அருந்திவிட்டதைக் கண்டு தலைவிதியை நொந்தவண்ணம் வெறும்கையோடு திரும்பிச் சென்று விடுவோம் என்று எண்ணிக் கொண்டாயா?" ஓடிச்சென்று அவளை இழுத்து அறைந்து உலுக்குவது போலக் கற்பனை செய்தான். வெறுப்பாக இருந்தது. சந்தர்ப்பங்கள் சார்ந்த சம்பவங்களுக்குக் கண்ணும் காதும் வைத்து ஊதிப் பெருக்கி நிம்மதியை இழந்து தவிக்கிறோமோ என்று ஆற்றாமையால் தலையில் அடித்துக் கொண்டான்.

"ராகு"

கனவில் கேட்கும் குரலோ என்று ஒரு கணம் பொறுமையாய் இருந்தான்.

"ராகு"

மறுகணம் சரியாகக் காதில் விழுந்தது அக்குரல். உடனே மஞ்சத்தைவிட்டு எழுந்தான். பரபரப்போடு கூடாரத்தின் வாசலைப் பிரித்துத் திறந்தான். மகாபலி. சக்கரவர்த்தி

"இருளில் என்ன செய்கிறாய் ராகு?"

"து¡க்கம் வரவில்லை அரசே. படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன்" அவன் தலைவணங்கியபடி பதில் சொன்னான். சக்கிரவர்த்தி அவனை நெருங்கித் தோளில் தொட்டார். அவர் உள்ளங்கையின் வடுக்கள் உறுத்தின.

ஏகளியாட்டத்தில் ஏன் எங்களோடு வந்து கலந்து கொள்ளவில்லை?"

ராகு பதில் சொல்லவில்லை.

"வரவர நீ அசுரனா, தேவனா என்றே தெரியவில்லை. நம் ஆர்ப்பாட்டங்களிலிருந்து தள்ளித் தள்ளிப் போகிறாயே? ஏளனத்துக்குரியவர்களாக எங்களைப் பற்றி நினைக்கிறாய் போலத் தெரிகிறது"

"இல்லை அரசே, இல்லை" அவசரமாக அவன் மறுத்துத் தலையசைத்தான். கண்களின் ஓரம் அடிபட்ட வேதனை தெரிந்தது. 

"வயதில் சிறியவன் நீ. பேசிச் சிரிக்க வேண்டிய வயது. ஆனால் நீ தவித்து ஒதுங்கியிருப்பதைப் பார்க்கும்போது வேதனை தாள முடியவில்லை."

மகாபலியின் வார்த்தைகளைக் கேட்டு ராகுவின் தொண்டை அடைத்தது. விழிகளில் கண்ணீர் தளும்பியது.

"வருந்தாதே ராகு. ஒரு மோகினி அல்ல, இன்னும் நு¡று மோகினிகள் வந்தாலும் நம் அசுர குலத்தை ஏமாற்றிவிட முடியாது. உன் மேல் ஆணை. அதற்கு ஒருபோதும் நான் இடம் தரமாட்டேன்."

கணீரென்ற குரலில் அவர் வார்த்தைகள் ஆணி அடித்தது போல ராகுவின் நெஞ்சில் இறங்கியது. அதில் இனம்புரியாத கனிவு கலந்திருப்பதை உணர்ந்தான். அக்கனிவு அவனை உருக்கியது. தன் மனத்தில் இருப்பதை இவர் எப்படிப் படித்தார் என்று வியப்பில் ஆழ்ந்தான்.

"போ ராகு.. போய் நிம்மதியாக உறங்கு. காலையில் உதயவேளைக்கு முன்னர் தயாராக வேண்டும்"

மகாபலி கூடாரத்தைக் கடந்து போனார். அவருடன் மற்ற தளபதிகளும் சென்றார்கள். 
  
-முன்று- 
  
குளக்கரையில் ஏராளமான மரங்களும் புதர்களும் அடர்ந்திருந்தன. விழிததெழுந்த பறவைகள் சத்தமிட்டபடி மேலே பறந்தன. குளித்து முடித்த அசுரர்கள் ஈர உடலுடன் கூடாரத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் விடியாத சாலையில் ஒற்றையடிப்பாதை ஒரு பாம்பு போல நீண்டிருந்தது. அதைப் பார்த்ததும் வாசுகிப் பாம்பின் ஞாபகம் வந்தது ராகுவுக்கு. உடனே அடுக்கடுக்காகச் சம்பவங்கள் கிளைவிடத் தொடங்கின. அவளைத் தொடர்ந்து அந்த இளம்பெண்ணின் ஞாபகம். ராகு தலையைப் பிடித்துக்கொண்டான். யோசனைகளை ஒரு மூட்டையாய்க் கட்டி எங்காவது கடலில் து¡க்கிப் போட்டுத் தொலைந்து விடுகிற வித்தை தெரிந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. குளத்தின் மேல் பார்வையைப் படரவிட்டான். நடுக் குளத்தில் அசுரர்கள் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சற்றே தள்ளி இருக்கிற தாமரைப்பூவை யார் முதலில் சென்று எடுத்துவருவது என்ற போட்டி வைத்துக் கொண்டு இருவர் வேகமாக அதை நோக்கி நீந்தினார்கள். பறித்துவரும் அம்மலரை மோகினிக்குத் தர இருவர் மனத்திலும் ஆசை படர்ந்தது. இன்னும் சிலர் குளத்தின் மறுகரையைத் தொட்டுத் திரும்பப் பந்தயம் வைத்துக் கொண்டு தண்ணீருக்குள் பாய்ந்தார்கள்.

ஒருவன் குளத்துக்குள் மூழ்கி குளத்தின் ஆழத்திலிருந்து மண்ணை எடுத்துவந்து உள்ளங்கையில் வைத்துக் காட்டினான். குளம் கலங்கத் தொடங்கியது,. சளக்சளக்கென்ற ஓசை குளம் முழுக்கக் கேட்டபடி இருந்தது. யாரோ ஒருவன் இரவில் பாடிய பாடலொன்றின் வரியை ராகத்துடன் இழுத்தான் உடனே அவர்களுக்கு உற்சாகம் கிளம்பிவிட்டது. அனைவரும் ஒரே குரலில் அவ்வரியைப் பாடத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் இருள் பிரியாத சூழலில் அக்குரல்கள் ராகுவுக்கு ஒருவிதமான சங்கட உணர்வைக் கொடுத்தது. 

குளத்தின் கரையிலேயே நின்று குளித்துவிட்டுக் கூடாரத்துக்குத் திரும்பாமல் கரையோரமாக இருந்த பாறை ஒன்றின் மீது உட்கார்ந்து கொண்டான் ராகு. அங்கே அவன் உட்காரந்திருப்பதைப் பார்த்தும் கூட அவனிடம் பேச விரும்பாமல் நடந்தார்கள் பலர். அவர்களுடைய வெறுமையான பார்வை மட்டும் ஒருமுறை அவன் மீது பட்டுத் திரும்பியது. அவ்வளவுதான். குன்றின் மேல் இன்னும் இருள் விலகாதிருந்தது. பூக்களும் , மிதக்கும் இலைகளும் கருத்துத் தெரிந்தன. நடந்து செல்லும் சகோதர அசுரர்களின் முகங்களைக் கவனித்தான். அவர்கள் கண்களில் உற்சாகமும் களிப்பும் தாண்டவமாடின. அமுதம் பருகி அமரர்களாக மாறும் தருணத்தை எதிர்கொள்ளும் பரபரப்பு அதில் தென்பட்டது. அந்த அமுதத்தை வழங்கப் போவது மனத்துக்குப் பிடித்தமான அழகான இளம்பெண் என்பதில் இன்னும் கொஞ்சம் கூடுதலான பரபரப்பில் மிதப்பது தெரிந்தது. நீண்ட பெருமூச்சுடன் ஒருமுறை கண்களை மூடி இருட்டில் திளைத்துவிட்டுத் திறந்தான்.

எத்தனை காலமாக இப்படிப் பெருமூச்சுடன் பொழுதுகளைக் கழித்திருக்கிறோம் என்று நினைத்தபோது மனம் கசப்பில் கவிந்தது. வாழ்வில் கசப்பை உணர்ந்த முதல் தருணத்தை அசை போட்டான் ராகு. அப்போது சிறுவயது. சுற்றியும் தந்தையும் அவர் வயதையொத்தவர்களும் மூத்த ஆண்களும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நேரம். ஓரமாய் ஒதுங்கி நின்று இறுகி நெகிழும் அவர்கள் உடல் தசைகளையும் தோள் வலிமையையும் கட்டான உடல் வனப்பையும் பார்த்ததும் உலகிலேயே முக்கியமான குலம் தம்முடையதே என்று தோன்றி பெருமையால் விம்மியது அவன் மனம். அவர்கள் தொடாமல் உலகில் எக்காரியமும் இல்லை. அவர்கள் வலிமைதான் உலகையே தாங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் பெருமையெல்லாம் இன்னும் மன ஆழத்தில் இருந்தது. ஆனால் அவர்களையும் அவர்கள் அசைவுகளையும் அவர்கள் உடல் வலிமையையும் பற்றி மற்றவர்கள் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் வாளால் நெஞ்சில் செருகுகிற மாதிரி இருந்தது. அவனால் யாரையுமே நிமிர்ந்து பார்த்து நேருக்குநேர் பேச முடியாமல் போய்விட்டது. வெட்கமும் அவமான உணர்வும் தலைகுனிய வைத்துவிட்டது. அவர்கள் அசுரர்கள். சபிக்கப்பட்டவர்கள். திதியின் கருவில் தங்கிய ஜய விஜயர்களின் குலம். தேவர்கள் முன்னிலையில் பேச நேரும்போது உடல் முழுக்க ஒரு படபடப்பும் தவிப்பும் எப்படியோ வந்து விடுகின்றன. அந்த உணர்வுகள் ஆத்திரமாகவும் எரிச்சலாகவும் வெடித்துவிடும். அப்போது தொடங்கிய பெருமூச்சை காலம் கடந்த பிறகு கூட நிறுத்த முடியவில்லை.

எவ்வளவோ முயன்றும் அந்தப் பெருமூச்சிலிருந்து அவனுக்கு விடுதலையே இல்லை. அவன் மனம் என்னதான் விரும்புகிறது? தேவர்களுக்கு இணையான வாழ்வையா? மதிப்பையா? அதெல்லாம் பெரிதல்ல என்று தோன்றியது. தேவர்களின் நுணுக்கமானதந்திரத்தால் அசுரர்களை விழ்த்தி விடுகிறார்கள். ஆசை காட்டி மோசம் செய்வது காலம் காலமாகத் தொடர்கிறது. அவர்கள் தம் ஆதாயத்துக்காக அசுரர்களின் உடல்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தந்திரம் அறிவாகவும் எதிர்பார்ப்பு நிறைவேறாததால் கிளர்ந்தெழும் வேகம் அசட்டுத் தனமாகவும் பார்க்கப் பட்டது. அசுரர்களின் வரலாறாக இந்தக் கேவலம் சித்தரிக்கப்படும்போது பெருமூச்சைத் தவிர வேறு வழி என்னவென்று இருக்கும் என்ற குழம்பினான் ராகு.

பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்தால் பரவாயில்லை என்று தோன்றியது. இரண்டு நாட்களாக அசுர குலத்தவர் ஒவ்வொருவரும் அந்த இளநங்கையின் நினைவில்தான் மிதந்தபடி இருக்கிறான். யாரை நிறுத்தி எப்படிப் பேசுவது என்று குழம்பினான். யோசனை அவனைப் பைத்தியமாக்கிவிடும் என்று பட்டது. அசுரனாக இருப்பதைவிட ஒரு மரமாக , ஒரு செடியாக, ஒரு கல்லாக , ஒரு பூச்சியாக இருந்து விடலாம். அவற்றுக்கு எண்ணங்கள் இல்லை. குழப்பங்கள் இல்லை. நிம்மதியாக இருக்கலாம். அக்குளக்கரையோரம் தான் ஒரு பூச்சியாக மாறிப் பறந்து செல்வது போன்ற எண்ணம் ராகுவுக்கு சற்றே ஆறுதல் அளித்தது.

பலிச்சக்கரவர்த்தி அருகில் வந்து "நீராடியாயிற்றா ராகு?" என்ற வினவினார். தேக்குமரம் போன்ற அவர் உடல் வயதை மீறி கட்டுக் குலையாமல் இருந்தது. தோளில் படர்ந்திருந்த நீர் முத்துகளில் சூரியன் மின்னியது. "ஆயிற்று அரசே" என்று எழுந்து நின்றான் ராகு.

குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினான். குழப்பம் கவிந்த அவன் முகத்தைத் தொட்டுத் து¡க்கினார் பலி. அவர் கண்களில் ததும்பிய கருணையைக் கண்டு சற்றே உதடு பிரித்துச் சிரிக்க முயன்றான். 

"சொல் ராகு. இரண்டு நாட்களாக ஏன் அமைதியற்றுத் திரிகிறாய்? நேற்று இரவு சொன்னதையெல்லாம் மறந்துவிட்டாயா?" என்றார் பலி.

மனத்தைத் திறந்து எல்லாவற்றையும் கொட்டிவிடும் வேகம் கொண்டான் ராகு. மனத்துக்குள் ஒரு பெரிய மரம் காற்றில் தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதைப் போலிருந்தது. 

"நாம் பாற்கடலுக்கு வந்திருக் கவே கூடாது என்று தோன்றுகிறது. இந்த அமுதும் அமர நிலையும் யாருக்கு வேண்டும் அரசே?"

"அமரனாக இருப்பது நல்லதுதானே நமக்கு"

"யாருக்கு நல்லது அரசே?" வேகமாகக் கேட்டான் ராகு. அவன் கண்களில் கொட்டுவது போல கூர்மை ஏறியது.

"எல்லாருக்கும்தானே ராகு"

"எல்லாரும் என்ற ஒரே சிமிழில் அவர்களையும் நம்மையும் அடைக்காதீர்கள் அரசே. நாம்தாம் எல்லாரும் எல்லாரும் என்று பரந்த மனப்பான்மை பற்றிப் பேசுகிறோம். தேவர்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவனாவது அப்படிப் பேசிப் பார்த்திருக்கிறீர்களா? நாங்களும் அசுரர்களும், நீங்களும் நாங்களும் என்றுதான் பேசுகிறார் கள். அவர்கள் மனத்தில் அப்படிப் பார்க்கும் மனப்பான்மைதான் இருக்கிறது.

இன்று நேற்றல்ல, இந்தக் குலம் தோன்றிய காலத்திலிருந்து அவர்கள் மனத்தில் அந்த எண்ணம்தான் என் ஆத்திரத்தையெல்லாம் கொட்டத் தொடங்கினால்.." ராகு வேகவேகமாய்ப் பேசினான்.

அவன் பேசுவதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் பலி. பிறகு மெதுவான குரலில் "உன் வருத்தம் புரிகிறது ராகு. என் நிலையை யோசித்துப் பார். காலம் முழுக்க அழிந்தது நம் வம்சம்தான். உயிர் விட்டது நம் வம்சம்தான். எத்தனை எத்தனை உயிர்கள் நம் பிரிவில் பலியாகிவிட்டன தெரியுமா? அவர்களையெல்லாம் நாம் மீண்டும் பார்க்க முடியுமா? எண்ணிப்பார். நம் வம்சத்துக்கு சாகாமல் இருக்க ஒரு வாய்ப்பு உருவாகி வரும்போது அதை விடாமல் எப்படி இருக்க முடியும்? எதிர் அணிக்காரர்கள் அமரராக இருந்து, நாம் மட்டும் மரணத்தைத் தழுவுகிறவர்களாக இருந்தால் நம் குலம் நாசமாகிவிடாதா?"

"ஒரு மன்னனாகவே இந்தப் பிரச்சனையைப் பார்க்கிறீர்கள். ஏன் ஒரு தனி ஆளின் கோணத்தில் பார்க்க மறுக்கிறிர்கள்?" என்றான் சலிப்புடன் ராகு

"மன்னனுக்குத் தனிப்பட்ட கோணம் இல்லை ராகு. என் குலம்தான் எனக்கு முக்கியம். அவர்கள் வாழ்ந்தால் நான் வாழ்வேன். அவர்கள் இறந்தால் அவர்களோடு நானும் இறந்து விடுவேன்."

"உங்கள் கடமையுணர்வை நான் மிகவும் மதிக்கிறேன் அரசே. அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் நம்மையறியாமல் பலியாகி விட்டோமோ என்றுதான் சொல்ல வருகிறேன்"

"தேவைக்கு மேல் ஒரு விஷயத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்கிறாய் ராகு. அதனால்தான் அவசியமல்லாத வேதனையும் துக்கமும் உனக்கு" என்றார் பலி. அவ்வார்த்தைகள் அவன் மனத்தில் தைத்தன.

"தேவையின் அளவு தெரியவில்லை அரசே எனக்கு. நான் முட்டாள்" என்றான் சூடாக. பலிக்கு அவன் கோபம் சிரிப்பு மூட்டுவதாக இருந்தது. ஒரு குழந்தையைப் பார்ப்பது போல அவனைப் பார்த்துத் தணிந்த குரலில் "சொல். எதன் ஆதாரத்தின் மீது அவர்கள் நடவடிக்கையைச் சூழ்ச்சி என்று சொல்கிறாய்?" என்றார்

"நன்றாக யோசித்துப் பாருங்கள் . பாற்கடலைக் கடைய நாமும் அவர்களும் ஒரே அணியாகப் போய் நின்ற அக்கணத்தை எண்ணிப் பாருங்கள். துல்லியமாக யோசித்துப் பார்த்தால் விவரம் புரியும் உங்களுக்கு. எல்லாக் காரியங்களிலும் நம்மைத் து¡ண்டி விட்டுப் பின்னால் இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள் தேவர்கள். ஆனால் அந்தச் சமயத்தில் என்ன செய்தார்கள்? அவசரம் அவசரமாகப் பாம்பின் தலைப்பக்கம் போய் நின்று கொண்டார்கள். எதையுமே முதல் ஆளாய்ச் செய்து பழகிய உங்கள் அகங்காரம் உடனே பொத்துக் கொண்டு விட்டது. நீங்கள் சத்தம் போட்டதும் உங்களுக்காக விட்டுத்தருகிற மாதிரி தலைப் பக்கத்தை நமக்கு விட்டுத் தந்து விட்டார்கள். அவர்கள் வால் பக்கம் போய் நின்றார்கள். ஆனால் கடைசியில் நேர்ந்தது என்ன? பாம்பின் மூச்சுக்காற்றின் விஷத்தால் தவித்து நலிந்தது நாம்தானே. இது சூழ்ச்சி இல்லையா?" சூடாகக் கேட்டான் ராகு.

"ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு அர்த்தம் கற்பித்துப் பார்த்தால் எப்படி ராகு? நம் விருப்பப்படிதானே அவர்கள் நடந்து அகாண்டார்கள்? இதில் சூழ்ச்சி எங்கிருந்து வந்தது?" என்றார் அப்பாவித்தனமாக. அவர் அவனை அமைதிப்படுத்த முயற்சி செய்வது போல இருந்தது. அந்த அன்பு அவனைத்தடுமாற வைத்தது. அந்த இடைவெளியைப் பயன்படுத்திப் பலி ஆலகாலம் வெளிப்பட்ட போது இரு அணிகளிலுமே கணிசமான பேர் மயங்கி விழத்தானே செய்தோம்? பிறகு அனைவரும் சமமாகத்தானே காப்பபாற்றப்பட்டோம்? நீ சொல்கிற மாதிரி அவர்கள் மனத்தில் ஓரவஞ்சனை இருக்குமெனில் நம்மை அப்படியே சாக விட்டிருக்கலாமே? அப்படி ஏன்

செய்ய்வில்லை?ஏ என்று கேட்டார். "அமுதம் எடுக்கும் வேலை முடியும் மட்டும் அசுரர்களின் துணை அவசியம் என்பது அவர்களுக்கும் தெரியும் சக்கரவர்த்தி" என்றான் குத்தலாக ராகு அதைக் கேட்டுப் பகீரென்றது அவருக்கு. "இது என்ன பேச்சு ராகு? ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை இல்லையென்றால் காலம் முழுக்க யுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான்" என்றான்

"தந்திரத்தின் பின்னணியில் ஒற்றுமையை வளர்ப்பதைவிட வெளிப்படையாய் மோதிச் செத்துப் போகலாம்" என்று முனகினான் ராகு.

"சாக வைப்பது ஒரு மன்னனின் நோக்கமாக எப்போதும் இருக்க முடியாது ராகு. நீ உண்மை தெரியாமல் பேசுகிறாய்". 

"அவ்வளவு நியாயம் பேசுகிற நீங்கள் தன்வந்திரியிடமிருந்து அமுதகலசத்தைப் பிடுங்கிக் கொண்டு ஏன் ஓடி வரவேண்டும்?"

"நல்ல கேள்விதான். நீ சொல்கிற மாதிரி அவர்கள் மீதான அவநம்பிக்கையின் மிச்சம் இன்னும் நம் மனத்தில் இருக்கிறது என்று புலப்படத்த்தான் பிடுங்கிக் கொண்டு வந்தேன்."

"அப்படியென்றால் அதை அக்ககணமே குலத்தில் உள்ள அனைவருக்கும் பருகக் கொடுத்திருக்கலாமே? அதைத் து¡க்கி முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் ஏன் தந்தீர்கள்?" கோபமாகக் கேட்டான் ராகு. பலி அதைக் கேட்டுச் சிரித்தார்.

"பிடுங்கிக் கொண்டு ஓடியது நம் அவநம்பிக்கையைப் புலப்படுத்த மட்டும்தான். நாமே குடித்து நாம் மட்டுமே அமரர்களாக வேண்டும் என்கிற பேராசையால் அல்ல. பாவம், உழைத்தே அறியாத தேவர்கள் நம்முடன் சேர்ந்து உழைத்திருக்கிறார்கள். உழைப்பின் பலன் உரியவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதானே காலம் காலமாக நாம் பேசி வரும் பேச்சு? அவர்களுக்குத் தராமல் நாம் மட்டுமே அமுதம் பருகினால் வாய்ப்பு கிடைத்தால் நாமும் அவர்கள் போல நடப்பவரகள்தாம் என்று இன்னொருவர் நம்மைச் சுட் டிக் காட்டிப் பேச வழி செய்து தராதா? பொது ஆளான அவளிடம் கொடுத்தால் எல்லாருக்கும் சமமாக கொடுத்து விடுவாள் என்கிற நம்பிக்கையில்தான் அவளிடம் தந்தேன்"

ராகு அமைதியாக இருந்தார். தொடர்ந்து பலியிடம் வாதிட அவனுக்கு விருப்பமில்லை. அவரைப் பின்பற்றி நடப்பதொன்றே தன் கடமை என்று எண்ணியவனாக மெளனமாக இருந்தான்.

"வா ராகு, போகலாம். சூரியன் எழும் முன்பு நாம் போய்ச்சேர வேணடும்" பலி அவன் தோள்களைத் தொட்டு அணைத்தவாறே நடத்திச் சென்றார். குளத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராகக் கரையேறி அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். புதர்களிடையேயிருந்து பறவைகளின் கிரீச்சென்ற குரல்கள் கேட்டபடி இருந்தன. அவை "போகதே.. போகாதே" என்று சொல்வது போல இருந்தது ராகுவுக்கு.   
 

-நான்கு-

பாற்கடலின் கரையெங்கும் ஒருவிதமான பரபரப்பு ஏற்படுவதை உணர்ந்தான் ராகு. "வந்துவிட்டாள் வந்துவிட்டாள்" என்ற மகிழ்ச்சியான குரல்கள் எங்கும் எதிரொலித்தன. "அதோ.. அதோ.. அங்கே பார்" என்று கைகள் ஒரு திசையில் சுட்டிக் காட்டின. திரும்பிப் பார்த்தான் ராகு. தொலைவில் கருங்கூந்தல் புரளும் நெற்றியில் சூரியனின் ஒளிப்புள்ளியில் மின்னும் நெற்றிச்சுட்டி தெரிந்தது. கும்பல் அவளை நெருக்கியபடி இருந்தது. அலையும் கும்பலை அவளின் குரல் அடக்கியது. மெல்லப் பின்வாங்கிச் சற்றே உயரமான மேடான மணல்பகுதிக்குச் சென்று நின்றாள் மோகினி. அப்போது அவளை முழுக்கப் பார்த்தான் ராகு.

குவளைப் பூவின் நிறத்தில் அவள் மேனி. அளவான உயரம். ஒரு கையில் அமுத கலசம் தாங்கியிருந்தாள். அலைபாயும் கரிய பெரிய விழிகள். ஜொலிக்கும் கன்னங்கள். கழுத்திலும் இடையிலும் அவள் அணிந்திருந்த அணிகலன்கள் கண்ணைக் கவர்ந்தன. அவள் நடக்கும் போது தண்டையும் கொலுசும் இனிய நாதம் எழுப்பின. காற்றில் அவள் மஞ்சள் ஆடை படபடபத்தது. அவளது ஒவ்வொரு அசைவையும் துல்லியமாகக் கவனித்தான் ராகு. கூர்மையாக அவள் கண்களை நோக்கினான். அவற்றில் எந்தக் கள்ளமும் இல்லை. இனிமையும் அன்பும் அக்கண்களில் வழிந்தன. எந்தத் தந்திரத்தையும் அவற்றில் கண்டுபிடிக்க இயலவில்லை. சூழ்ச்சியின் அடையாளம் கிஞ்சித்தும் இல்லை.

குழந்தைக்குத் தன் மார்பைக் காட்டும் தாயின் கண்களில் புலப்படும் நெகிழ்ச்சியும் குழைவும் மட்டுமே அவள் முகத்தில் தேங்கியிருந்தன.

அவள் உடலிலிருந்து ஒருவித இனிய மணம் வீசியது. மலர் மணம். இசை மிதக்கும் காற்றின் மணம். தன்னை அறியாமல் மனம் ஒடுங்கினான் ராகு. தன் குழப்பங்கள் அர்த்தமற்றவையோ என்ற நாணம் படர்ந்தது. எல்லாம் நல்லபடியாக நடந்துவிடும் என்று ஒருகணம் பெரும் நிம்மதி பரவியது. புலன்கள் அமைதியடைந்து அடங்கும் தருணத்தில் அவன் சந்தேகமுள் மறுபடியும் தலைநீட்டிக் கீறியது.

தேவர்களும் அசுரர்களுமாக அலைமோதியது கூட்டம். அவள் தன் இனிய குரலில் "அமைதி..அமைதி" என்று கூட்டத்தினரைப் பார்த்துச் சொன்னாள். அவள் கைகளை உயர்த்தும் போது கைவளைகள் குலுங்கின. அவள் உள்ளங்கையின் வெண்மை வெள்ளரிப்பழத் துண்டு போல இருந்தது.

கூட்டத்தினிடையே சலசலப்பு ஓய்ந்தது. எங்கும் மெளனம் நிலவியது. முகம் பொலிய நின்ற மோகினி கூட்டத்தைப் பார்த்து "நான் சொல்வதைக் கேட்பதாக எல்லாரும் வாக்களித்திருக்கிறீர்கள், நினைவிருக்கிறதா?" என்றாள் . அனைவரும் ஒரே நேரத்தில் "இருக்கிறது" என்று பதிலிறுத்தார்கள். அவள் கையை உயர்த்தி "நல்லது.. நல்லது நீங்கள் அனைவரும் நீடுழி வாழ்க" என்று வாழ் த்தினாள். கூட்டம் முழுக்க மகிழ்ச்சிப் பரவசம் காற்றலை போல பரவி மிதந்தது.

"முதலில் அனைவரும் இரண்டு அணிகளாகப் பிரிந்து தனித்தனியாக அமருங்கள். இதோ கொப்பரைகள். ஆளுக்கொன்று எடுத்துக் கொள்ளுங்கள். அமுதம் வழங்கி முடிக்கிற வரை யாரும் எதுவும் பேசக் கூடாது. கேட்கக் கூடாது. குற்றம் குறை சொல்லக் கூடாது.

அப்படி நடந்தால் அமுதம் தன் தன் சக்தியை இழந்துவிடும் , தெரிகிறதா?"

எல்லாரும் தலையசைத்தார்கள். 

பலிச்சக்கரவர்த்தி முன்னால் சென்று கொப்பரையை எடுத்துக் கொண்டு இடது பக்கமாய் நடந்தான். தொடரந்து கொப்பரைகளை எடுத்துக் கொண்ட அசுரர்கள் அவனைப் பின்தொடர்ந்து வரிசையில் உட்கார்ந்தார்கள். எதிர்பார்ப்பும் ஆசையும் அவர்களைப் பதற்றமுற வைத்தது.

கொப்பரைகளைத் து¡க்கித் து¡க்கிப் போட்டுப் பிடித்தார்கள். மோகினி அவர்களைப் பார்த்து உதட்டைச் சுழித்து "ம்ஹ¤ம்..அவசரம் கூடாது" என்றாள். அந்த வார்த்தைகள் அவர்களைக் கிறங்கடித்தன. பேசும்போது அவள் கண்களில் வெளிப்பட்ட ஒளியையும் வீசும் காற்றில் நெற்றி முழுக்க அலையும் அவள் கூந்தலையும், விலகி ஓடும் மேலாடையையும் இறுக்கி முடிந்த மார்புக் கச்சையையும் பார்க்கக் கிடைத்த பரவசத்தில் மெய்மறந்திருந்தார்கள். அவர்களைப் போலவே தேவர்கள் அணியும் ஒன்று கூடி எதிர்ப்புறத்தில் உட்கார்ந்திருந்தது.

இந்திரன் அவளைப் பார்வையால் விழுங்கியபடி இருந்தான். இரு வரிசைக்கிடையேயும் அந்த மங்கை நின்றாள்.

ராகுவின் நெஞ்சு வேகவேகமாக அடித்தபடி இருந்தது. அவன் இதயத்தின் துடிப்பை அவனால் மிகச் சரியாகக் கேட்டக முடிந்தது. அவள் மீது உருவாக்கிக் கொண்ட வெறுப்பைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் அவள் உண்மையிலேயே பேரழகிதான் என்று தோன்றியது அவனுக்கு.

அதுவரை அவளைப் போல ஓர் அழகியை எங்கும் கண்டதில்லை என்று நினைத்தான். ரத்தத்தில் கதகதப்பு பரவுவதை உணர்ந்தான். ஒரு பெண்ணின் அழகுக்கும் ஓர் ஆணின் உடலில் ஓடும் ரத்தத்துக்கும் எப்படி இந்த உறவு ஏற்படுட முடியும் என்கிற விசித்திரமான கேள்வி அவன் மனத்தைக் குடைந்தது. 'யாரோ ஒருத்தி அவள் யாரோ ஒரு அசுர இளைஞன் நான் என் மூளை நரம்பின் அசைவுகளை அவள் அழகால் கட்டுப்படுத்தப்படும் செயலாக எப்படி நிகழ்கிறது? ரத்தத்துக்கு இந்த விசேஷ குணம் எப்படி வந்தது?' அவன் மனம் குவிவதை அந்தக் கேள்வி சிதறடித்தது. கரையில் என்ன நடக்கிறது என்றே அவனால் சரியாகக் கவனிக்க இயலவில்லை. குழப்பங்கள் அவன் நெஞ்சை இறுக்கிப் பிசைந்தன.

அவள் மெல்ல மெல்ல முன்னால் வந்து கொண்டிருந்தாள். அகப்பையால் கலசத்திலிருந்து அமுதத்தை முகர்ந்து தேவர்களின் வரிசையில் ஒருவனின் கொப்பரையில் ஊற்றினாள். அடுத்து அதே நளினம். அதே சிரிப்பு. அதே குழைவு. மெல்ல வந்து அசுரர்களின் வரிசையில் ஒருவனின் கொப்பரையில் ஊற்றினாள். அவர்கள் முகங்களில் படர்ந்த பரவசத்துக்குக் காரணம் பருகிய அமுதமா, அவளது அழகா தெரியவில்லை. 

சிரித்தபடி நங்கை நகர்ந்தாள். மெல்ல மெல்ல வரிசையைத் தாண்டி வந்தாள். அவளையே பார்த்தபடி இருந்தான் ராகு.

சூரியன் தெளிவாக மேலேறிவிட்டான். வானத்தில் சிவப்புக் கரைந்து வெண்மை படரத் தொடங்கியது. மேகங்கள் அற்ற வானம் தெளிவாகத் தெரிந்தது. அலைகளின் ஓசை தொடர்ந்து கேட்டபடி இருந்தது. தொலைவில் தேவர்கள் தங்கியிருந்த கூடாரங்களும் அசுரர்களின் கூடாரங்களும் தள்ளித் தள்ளிக் காணப்பட்டன. அருகில் பச்சைக் குன்று. ஈரம் சுமந்த காலைக் காற்று எங்கும் இதம்பட வீசியது. காற்றின் வேகம் கூடக் கூட மோகினியின் ஆடை ஒரு கணம் உடலோடு ஒட்டியது. மறுகணம் நெகிழ்ந்தது. அவள் உடல் வளைவுகளும் செழிப்பும் புலப்படன. அவள் முகத்தில் களிப்பும் உற்சாகமும் தெரிந்தன.

ஏதோ எண்ணங்களில் மூழ்கி இருந்துவிட்டுச் சட்டென ஒருகணத்தில் மீண்டான் ராகு. அந்த மோகினி அவன் கண்ணெதிரில் நு¡ற்றுக்கு நு¡று சதவீதம் பார்க்கிற தொலைவில் ஐந்தாறு அடி தள்ளி நிற்பதைக் கண்டான். அவன் ரத்தத்தில் மெல்ல மெல்ல சூடேறியது. சட்டென கவனம் பிசகி, அவள் உடலின் மீது பதிந்திருந்த கண்களைத் திருப்பி கொப்பரையின் மீது பதித்தான். அக்கணமே அவன் அதிர்ச்சியில் உறைந்தான். தேவர்களின் கையில் உள்ள கொப்பரையில் மட்டும் அகப்பையால் அமுதத்தை முகர்ந்து ஊற்றினாள் அவள். அதே மலர்ந்த முகத்துடன் முகர்வது போன்ற பாவனையுடன் கலசத்துக்குள் விட்டெடுத்த வெறும் அகப்பையை அசுரர்களின் கொப்பரையில் கவிழ்த்தாள்.

வெற்றுக் கொப்பரையை வாய்க்குள் கவிழ்த்துக் கொள்ளும் அசுரர்கள் தாம் எதையுமே பருகவில்லை என்கிற உணர்வு கூட இல்லாமல் அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி இருந்தார்கள். ராகுவால் அக்காட்சியை நம்பவே முடியவில்லை. ஒரு கணம் கண்களைக் கசக்கிக் கொண்டு மறுபடியும் பார்த்தான். தேவரின் கைக்கொப்பரையில் அமுதத்தைக் கவிழ்க்கும் அகப்பை. அசுரர்களின் கொப்பரையில் வெற்று அகப்பை கவிழ் ந்து மீண்டது. அவசரம் அவசரமாக அவன் கண்கள் பலியைத் தேடின. வரிசையின் முதலில் அவர் காணப்பட்டார. மோகினியின் அழகில் மயங்கிய நிலையில் சிலை போல உட்கார்ந்திருந்தார் அவர். ஓடிப்போய் அவரை எழுப்பி உண்மையைச் சொல்ல வேண்டும் என்று பரபரத்தது அவன் மனம். எழுந்து கத்த வேணடும் போல துடித்தது அவன் உடல். மெல்லமெல்ல வெறியேறியது அவனுக்கு, மறுகணமே காலம் முழுக்க குழப்பவாதி என்றும் அவந்மபிக்கைக்காரன் என்றும் சொல்லிவரும் தன் கூட்டம் தன்னை நம்பாது என்று தோன்றியதும் சலித்துக் கொண்டான். எனினும் ஏதாவது செய்ய வேண்டும் என்று உத்வேகம் கொண்டான் ராகு.

அதிர்ச்சியில் வறண்ட தொண்டையில் ஈரம் பரவ எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி வேகமாக யோசித்தான். அழகியின் கால்கள் அவனை நோக்கி நெருங்கி விட்டன. அக்கணமே அவன் மனம் ஒரு முடிவெடுத்தது. தவிப்புடன் கண்களை மூடினான். தன் ஆற்றலின் உதவியால் தன்னை யாருக்கும் தெரியாமல் ஒரு தேவர் குலத்தவனாக உருமாற்றிக் கெண்டான். அனைவரின் கவனமும் மோகினியின் முகத்தில் குவிந்திருந்த கணத்தைப் பயன்படுத்திக் கொண்டு வரிசை மாறி உட்கார்ந்தான். உள்ளூர அமுதத்தின் மேல் அவனுக்கு நம்பிக்கையில்லை.

அக்கணம் அவன் அமுதத்தை வெறுத்தான். அதைவிட ஒரு துளி விஷம் மேலானது என்று தோன்றியது. எனினும் விருட்டென்று எழுந்துபோய் அப்பெண்ணின் தந்திரத்தை அம்பலப்படுத்துவதைவிட இது சிறந்த வழி என்று அவன் மனத்துக்குப்பட்டது. பலிக்கும் மற்றவர்களுக்கும் தான் எடுத்துச் சொல்லிவந்த உண்மை அப்போதுதான் புரியும் என்று அமைதியுற்றான்.

மோகினி அவனை நெருங்கினாள். அவள் அகப்பை அவனது கொப்பரையில் அமுதத்தை ஊற்றியது. அவன் அதை ஆர்வமின்றிக் குடித்து முடித்தான். கொப்பரையைத் தரையில் வைக்கும்போது அருகில் உட்கார்நதிருந்தவன் ஏஐயோ பெண்ணே, இவன் தேவர் குலத்தவன் அல்ல. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் இவன் இல்லை. அதோ திக்விஜயன்., அவன்தான் என் அருகில் இருந்தான். இடையில் எப்படி இவன் முளைத்தானோ தெரியவில்லை. வேஷதாரி. அசுரர் குலத்தவன். ஆள் மாறாட்டம் செய்கிறான்ஏ என்று கூவினான். உடனே வரிசை கலைந்தது. 'விடாதே பிடி கொல்லு' என்று கூக்குரல்கள் தேவர்கள் நடுவிலிருந்து கேட்டன. கூட்டமே அவனை நோக்கிப் பாய்ந்தது.

"நிறுத்துங்கள்.. நிறுத்துங்கள்" என்ற கூவிக் கொண்டே ஓடி வரும் பலியை யாரும் பொருட்படுத்தவில்லை. ஓட முயற்சி செய்தவனைப் பிடித்து இழுத்தார்கள் தேவர்கள். அதற்கள் மோகினி தன் கையிலிருந்த அகப்பையாலேயே அவனை ஓங்கி அடித்தாள். வாள் வீச்சு போல இறங்கியது அந்த அடி. 'அம்மா' என்ற அலறலுடன் அவன் உடல் இரு துண்டுகளாக விழுந்தன. விழுந்த வேகத்தில் அவன் சொந்த உருவடைந்தான். வேதனையும் அதிர்ச்சியும் கொண்ட அவன் கண்கள் அந்த மோகினியின் மீது நிலைகுத்தி நின்றன. "ராகு.. ராகு" சுற்றிலும் குரல்கள் கேட்டன. உடனே செய்தி பரவ ரத்த வெள்ளத்தில் விழுந்து துடிக்கும் ராகுவைக் காண ஓடி வந்தார்கள் அனைவரும்.

அசுரர்களால் அக்காட்சியை நம்பவே முடியவில்லை. ஆ என்ற சத்தத்துடன் தோளைக் குலுக்கிக் கொண்டு அந்தப் பெண் மீது பாய்ந்தார் பலி. அவர் கண்களில் கவிந்திருந்த பரவசம் மறைந்து மூர்ககம் ஏறியது. அவருடன் மற்ற அசுரர்களும் சேர்ந்து கொண்டார்கள். அவளைத் தடுத்தாட்டொள்ள முயன்றது தேவர்கள் வரிசை. இரண்டு வரிசைகளும் மோதின. தலைகளைப் பிளக்கும் கரங்கள். ஆளையே து¡க்கித் தொடையில் வைத்து ஒடிக்கும் வேகம். எங்கும் துண்டான உடல்கள். கிழிந்த இதயங்கள். வெட்டுப்பட்ட கைகள். உரத்த குரலில் கூவியபடி பலி ஒரு யானையைப் போல அப்படைகளின் இடையே புகுந்து சுழன்றார். "கொல்.. கொல்.. நம்ப வைத்துக் கழுத்தறுப்பதே காலம் முழுக்க வேலையாகிவிட்டது இந்த வீணர்களுக்கு.."

"விடாதே பிடி கொல்லு. உயிருக்கு உயிர் பலி வாங்காமல் விடக்கூடாது"

'ஒன்றல்ல.. இன்றைக்கு ஒரு கோடி தலைகள் தரையில் உருள வேண்டும். இந்த பாற்கடல் ரத்தத்தில் சிவக்க வேண்டும்'  'இந்த அசுரர்கள் நம்மை என்ன கையாலாகாதவர்கள் என்று நினைத்துவிட்டார்களா? காட்டுங்கள் தேவர்களே நம் கைவரிசையை' குரல்கள் கூவின. வெட்டப்பட்ட தலைகளும் உடல் உறுப்புகளும் பந்துகள் போல தலைக்குமேலே பறந்தபடி இருந்தன. எங்கும் கதறல் . அழுகை. கெஞ்சுதல்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே மோதல் வலுத்தது. 
  
 -ஐந்து- 
  
ரத்தச் சேறாக மாறிய கடற்கரையில் தன்னந்தனியாக உட்காரந்திருந்தார் பலி. முற்றிலுமாக அவர் மனம் சிதைந்திருந்தது. நடந்ததெல்லாம் ஒரு கனவு போல இருந்தது. அவருக்கு. இப்படியெல்லாம் நடக்குமா என்ற நம்பக் கூட முடியவில்லை.. அவர் மனம் ராகுவுக்காக உருகியபடி இருந்தது. சந்தேகங்களைக் கண்களில் தேக்கியபடி இருந்த ராகு. உள்மனம் உணர்ந்ததைத் தயக்கமின்றி சொன்ன இளம்வீரன் ராகு. அவன் முகம் நினைவுக்கு வந்தது. அவன் குரல் காதில் ஒலித்தது. மிக அருகில் உட்காரந்துகொணன்டு மன்னா மன்னா என்று ஏதோ சொல்வது போல இருந்தது. உடல் முழுக்க சிலிர்த்தது. பலி மிகவும் சோர்வாக உணர்ந்தார். வானத்தின் பக்கம் பார்வையை திருப்பினார். இருள் அடர்ந்திருந்தது. இந்த ஒரு நாள் பிறக்காமலேயே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவர் மனம் அவாவியது. 

"சக்கரவர்த்தி"

நிமிர்ந்து பார்த்தார். மெய்க்காப்பாளன்.

"போகலாம் அரசே..இருட்டிவிட்டது..இறந்த அசுரர்களுக்குச் சிதை மூட்ட வேண்டும்"

"நம் அணியில் எவ்வளவு பேர் மாண்டார்கள்?"

மெய்க்காப்பாளன் பேசாமல் தலைகுனிந்தான். பலி தலையை அசைத்துக் கொண்டார். எழுந்து நிற்கக் கூட தன் உடலில் பலமில்லை என்று தோன்றியது. வெட்டுண்ட கையிலிருந்தும் தோளிலிருந்தும் ரத்தம் வடிந்து உறைந்திருந்தது. ஊன்றிக் கொள்ள மற்றொரு கையைத் தரையை நோக்கிப் பதித்த போது கொப்பரை தட்டுப்பட்டது. அதைப் பார்த்துமே ராகுவின் நினைவு மறுபடியும் வந்தது. ராகு என்று வாய்விட்டுச் சொன்னபடி வானத்தை நோக்கினார். வெட்டுண்ட ராகுவின் கண்களை நட்சத்திரங்களின் குவியலிக்கிடையே பார்த்தார். ராகு என்று தளர்ந்த குரலில் சொன்னபடி எழும் முயற்சியைக் கைவிட்டுச் சரிந்து உட்கார்ந்தார்.
.
பதிவுகள் செப்டெம்பர் 2001  இதழ் 21

 


வாழ முற்படுதல்.......

 

-டானியல் ஜீவா-

பதிவுகள் சிறுகதைகள் - 2“ஏனுங்க விடிய எழும்பி வேலைக்கும் போகாமல் அழுதுகொண்டு இருக்கிறியள்"

அழுதுகொண்டு இருந்த சாந்தனைப் பார்த்து கனிமொழி மெல்லிய குரலில் கேட்டாள். அப்போது தான் கனிமொழியும் பிள்ளையும் எழும்பியதைக் கண்டான். 

"ஒன்றுமில்லை கனிமொழி" என்றான். 

"இப்படித்தான் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று எத்தனை நாளைக்குத் தான் இந்த அரியண்டத்துள் வாழ்வது. இரவு பகலாய் கண்விழித்து மாடாய் உழைத்தும் உங்களுக்கு இந்த நிலை. ஒரு நாள் இரண்டு நாளெண்டல்ல நித்தமும் இதே கூத்தாகத்தான் இருக்கு. ஏன் நீங்க அழுகிறீங்க எண்டு எனக்குத் தெரியாதோ நேற்று உங்கடஐயா பேசினதை நினைச்சுத்தான் கவலைப்பட்டு அழுகிறியள்"

“இல்லையம்மா”. 

கனிமொழியை அவன் அம்மாவென்று தான் அழைப்பது வழக்கம். அவள் ஆழ்மனதில் ஆழமாக பதிவாகிய எண்ணங்களுக்குள் சுழன்றடித்தது மனம்.... ஒவ்வொரு நிகழ்வாய் மலர்கோத்து மகிழ்ந்தது. தன்னை அம்மா என்று அழைத்ததை நெஞ்சில் பசுமை நினைவுகளால் நிறைத்தாள். அந்நிகழ்வை இதயத்தில் இருத்திவிட்டாள். 

“என்னை அம்மா என்று ஏன் அழைக்கிறீர்கள்?” 

கனிமொழி அடக்கமான குரலில் கேட்டதற்குச் சாந்தன் சொன்னான். 

“நான் உங்களை என் அம்மாவுக்கு நிகராக நினைக்கிறேன் அதனால்தான் ....  உங்களைப்பிரியவேண்டி வந்தால் என்னால் உயிர்வாழ முடியாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் உங்களைப் பி¡¢ந்த வாழ்வு எனக்கு வாழ்வாய் இருக்காது. அது ஏதோ உயிரற்ற உடலாய் இருக்கும்"

“நானும் அதே போல் தான் நான் உங்களை அத்தான் என்றே அழைக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அம்மா, அப்பா, கடவுள் எல்லாம் நீங்கள் தாங்க" கனிமொழிசொல்லும் போதே  கண்களில் ஈரக்கசிவுகள்.

தன் கணவர் எவ்வளவு முரண்பாடுகளும் தங்கள் பெற்றோருடனும் ஏற்பட்டபோதும் சாந்தன் தன்மீது கொண்ட அன்பில் சிறு மாற்றமும் இல்லாத வாழ்வை நினைத்து பெருமைப்பட்டாள். அவள் சாந்தனைப்பற்றி கோர்த்து வந்த வாழ்வு நிறைவாகத் தான் அவளுக்குக் கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் அவள் எதிர்பார்த்ததை விட. ஆயினும் தன் கணவரை சுடுசொல்லால் கொடுமைப்படுத்துவதைத் தான் அவளால் தாங்க முடியவில்லை. 

கொழும்பில் வருடக்கணக்கில் நிற்கும் வரை லொட்சுக்கு காசும் சாப்பாட்டக்கு பணமும் பிள்ளை தான் அனுப்ப வேண்டும். ரெலிபோன் எடுக்காட்டியா அவர் வாங்குகின்ற பேச்சு கொஞ்சநெஞ்சமா? சரி மாமா படிக்கவைத்தார். பிள்ளையை வளர்த்தார் இல்லையெண்டு சொல்லேல. அதற்காக பிள்ளையை இப்படியுமா கஸ்ரப்படுத்தவேண்டும். குடிக்கிறதற்கு காசு கொடுக்கேல்லை எண்டால் வெல்பெயாருக்கு அடிப்பனடா எண்டும், தொட்டதற்கும் பட்டதற்கும் தன்னைப்பார்ப்பதில்லை எண்டு தான் குறை. நான் வந்து மூன்று மாதத்திலேயே என்னென்ன காரணமெல்லாம் சொல்லி வெல்பெயார் எடுக்கத்தொடங்கிட்டாங்க. இனியாவது பாவம் அவங்க இஇளம் குடும்பம் வாழட்டும் எண்டு விடுவதும் கிடையாது.போகவர ஒவ்வொரு குத்தல் கதை சொல்லி அழவச்சிடுவாங்கள். கனிமொழி மனதால் நினைத்து திட்டித்தீர்த்தாள்
 
"கனிமொழி..... என்னம்மா?" 

சாந்தனின் அமைதியான குரல் கேட்டு சோகம் தேங்கிய விழியோடு நிமர்ந்தாள். கண்குவளைக்குள் இஇருந்து கண்ணீர்த் துளிகள் சித்திரம் வரைந்தது. கெஞ்சும் கண்கள் பரிதாபமாய்ப்பார்த்தது.

"என்னதான் இஇருந்தாலும் உங்கட ஜயா இப்படி பேசியிருக்கக் கூடாது. தண்ணீ மூக்கு முட்ட போட்டா காரணமற்ற கொழுவல் போடுவது உடலோடு ஊறிப்போயிற்று உங்க ஜயாவுக்கு" சொல்லிக் கொண்டு கனிமொழி அழுதாள். சாந்தன் மனதைத் தேற்றுவதற்காக கனிமொழி பக்கத்தில் நெருங்கி  கண்ணீரைத் துடைத்தான். அவள் மார்பில் சாய்ந்து தேம்பித்தேம்பி அழுதாள்.
 
“அழகைதான் வாழ்க்கையா”? 

அவன் வலக்கரம் கொண்டு தலையை தடவிக்கொடுத்து குழம்பியிருந்த மயிர்களை நீவி விட்டான். அவனுள்ளும் அழுகை தேங்கி நின்றது. ஆயினும் அவன் அழவில்லை. தன் மனதை தேற்றினான்.

“அத்தான் நீங்கள் என்நெஞ்சோடு சாயும் போது ஒரு சுகம் எனக்கு வருமே அந்தச்சுகம் எப்போதும் என்கூடவே இருக்க வேண்டும். என் மார்பில் உங்கள் தலை புதைத்து என் முகத்தை அண்ணார்ந்து பார்ப்பீர்களே.......அந்த பார்வை எப்போதும் என்கூடவே இருக்க வேண்டும். நான் உயிரோடு இருக்கும் வரையில் உங்களை கண்கலங்க விடமாட்டேன். எனக்கு எல்லாம் நீங்கள் தான் எண்டு தான் வந்திருக்கிறேன். அதே போல் தான் உங்களுக்கு எல்லாமே நான் தான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஒரு காய்ச்சல் வந்தால் கூட என்மனம் தாங்காமல் தவிக்கிறது. அந்த காய்ச்சல் எனக்கு வந்திருந்தாலும் பரவாயில்லை என்று கூட நினைப்பேன். சில வேளைகளில் உங்கள் மனம் படும் வேதனையை என்னால் பார்த்து சகிக்க முடியாமல் இருக்கிறது"

“கனிமொழி........."

"என்னுங்க”? 

"இப்படி பெரிய வார்த்தையெல்லாம் சொல்றெங்கே......."

ஒரு கணம் கனிமொழியின் முகத்தை கீழ்நோக்கி பார்த்தபோது அவளின் கீழ்த்தாடையோடு மோதுண்டு நின்றது முகம்.

“உங்க மூக்கு அழகாயிருக்கு”....... அவன் எதையோ சொல்ல நினைத்து இப்படியொரு வார்த்தையைப் போட்டான். கனிமொழியின் மனதை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆயினும் அவள் எந்தவித அசுமாத்தமும் இல்லாமல் அவள் முகம் கிடந்தது. 

"கனிமொழி நீங்க கொழும்பில் நிற்கும்போது ரெலிபோனில் சொன்னது நினைவிருக்கா........?" 

“எதைப்பற்றியுங்க? நிறைய நீங்க கதைச்சனீங்க. எதுவெண்டு தெரியல?" 

"நம் குழந்தையை என்னால் சுமக்கமுடியுமென்டால் நானே சுமப்பேன் என்று சொன்னேனே நினைவிருக்கிறதா?" 

"ஓமொம்..... அதையேன் இப்ப நினைவுபடுத்திறீங்க?" 

"நீங்க சொன்னேங்க பெண்குழந்தை எண்டால் ஜந்து மாதம் நீங்கள் சுமப்பதாவும் ஜந்து மாதம் என்னையும் சுமக்கச்சொன்னீங்க. ஆண் குழந்தையென்றால் பத்து மாதமும் நீஙகளே சுமப்பதாக சொன்னீங்க. ஆனால் பெண்குழந்தை தான் நமக்குப் பிறந்திருக்கு ஆயினும் நீங்க தான் பத்து மாதமும் சுமந்து பெற்றிருக்கிறீங்க. அப்பவே கேப்பமென்று மறந்து போனேன். ஏன் பெண்குழந்தை விருப்பம் இல்லையா? சீதனம் கொடுக்கவேண்டும் என்டதற்காகவா?"

“அப்படி நான் நினைக்கேலேயங்க. எனக்கு உங்களைப்போல குணத்தோடு ஒரு ஆண்முதலில் தேவையுங்க  பின்னர் எப்படிப் பிறந்தாலும் பரவாயில்லங்க" 

“ஏனுங்க உங்களைப் போல் பெண்ளை உங்களைப்போல குணத்தோடு பிறந்தால் சரியில்லையாங்க”? 

சற்றும் எதிர்பாரத பதிலை கேட்டு முகத்தில் மந்தகாசம் பூத்தது. 

"இப்படியே கதையைச் சொல்லி சொல்லி என்னை சிரிக்க வைத்து விடுவீங்க. நான் தான் உங்கள் மனக்கவலையைத் தீர்க்க மருந்து என்னும் கண்டுபிடிக்கவில்லை?" என்றாள். 

“நீங்க வேலைக்கு போவதற்கு முதல் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு வேலைக்கு அனுப்பின பின்தான் நான் தேநீர் கூட குடிப்பேன். நீங்க வேலைக்கு போன பிறகு நான் நானாக இருப்பதில்லை.எப்போது நீங்க வருவீங்க என்று எதிர்பார்த்தபடியே என் மனம் துடித்துக்கொண்டிருக்கும். என் கண்காண உங்கள் கண்ணில் து¡சி கூட விழவிடமாட்டேன். அந்தளவு உங்கள் மீது கண்ணும் கருத்துமாக இருப்பேன்"

"மெய்தானா.......?" சாந்தன் கேட்டான்.

"ஓமுங்க.... உங்களை நம்பித்தான் கனடா வந்தனான்.உங்களைத்தவிர எனக்குயாரு இருக்கிறாங்க........"

சாந்தன் மெல்லிய குரலில் "என்னால் முடிந்தவரை உங்களுக்கு வாழ்க்கைத் துணையாய் இருப்பேன். அதேபோல் நீங்கள் என் வாழ்க்கைத் துணையாக இருக்கவேண்டும். அதைவிட்டுட்டு எனக்கு வேலைக்காரியாக இருப்பதை நான் விரும்பமாட்டேன். அப்படி உன்மனதில் இருந்தால் அதை அடியோடு வெட்டியெறிந்து விடும். குடும்பம் வாழ்வுக்கு அடிப்படை புரிந்துணர்வுதான்.  ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை"

"ஏதோ பெண்விடுதலை என்றெல்லாம் கதைப்பாங்க அதையா நீங்க சொல்லிறியள்?"

"எனக்கு அது பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் எனக்குச் சமமாக நீ இருக்கவேண்டும். என் உயிர் நீதான். இந்தச் சொத்துடமைச் சமூதாயத்தில் நீ எனக்கென்று எழுதப்பட்ட சொத்தாக நான் நினைக்கல. எந்த நிலையிலும் நீ சுயமாக என்னோடு வாழ்வது பற்றி முடிவெடுக்கலாம்”

சாந்தனின் அப்பழுக்கற்ற மனதின் வெளிப்பாட்டை ஆமொதிப்பது போல் தலையசைத்தாள்.

வைகறைப்பொழுதில் கண்சிவக்கச் சிவக்க எழும்பி அரையும் குறையுமாக அவசரப்பட்டு வேலைக்கு ஓடி அந்த வேலை முடிந்தவுடன் அடுத்த வேலைக்கு பஸ் எடுத்து ஓடி உடலைத் திண்ணும் இரவு ஓய்ந்து உறங்க கனவெல்லாம் சிதையும். வாழ்வு கரையும். சாந்தனுக்கு கனிமொழியின் இருப்புத்தான் அவன் மனதின் காயங்களுக்கு செப்பனிட்டது. அவளின் வருகையால் தான் மண்ணில் வேரோடிய காதல்கொடி கனடாவில் பூத்துக்குழுங்கியது. ஒரு ரோஜாவனத்தைப் பார்க்கின்ற அழகு சாந்தனுக்குள் எழும். ஏதேனும் கதைத்துக் கொண்டிருக்கும் போது கூட சாந்தனை உதாரணமாய் சொல்லிக் கொள்வாள். கனிமொழி என்ற பெயருக்கு நூறு வீதமும் பொருத்தமானவள். தன்னைப்போலவே மற்றவர்களையம் மதித்து நடப்பவள். பச்சத்தண்ணி அப்பாவி எண்டெல்லாம் சாந்தனால் சொல்லப்படுபவள். சாந்தனின் பெற்றோருக்காக காதலையே தள்ளிவைத்து முதலில் அவர்கள் இங்கு வந்த பின் தன்னை ஸ்பொன்னசர் பண்ணச் சொல்லி வாக்குறுதி கொடுத்து, அதன்படி அவள்  நடந்தும் கொண்டவள்.சிறு பிராயம் தொட்டு கனிமொழியின் கண்களில் விழுந்து உள்சதை வரை ஊடுருவிப் பாய்ந்தவன். ஆயினும் சாந்தன் கனடா வந்து ஆறுவருடத்தின் பின்னரே கனிமொழியியை ஸ்பொன்சர் பண்ணி எடுத்தான். 

அவன் மனச் சுமை, இறக்கமுடியாமல் நெஞ்சு பிசைந்து நீண்ட கனம். இருவரிலும் அடர்த்தியான மெளனம் செல் அடித்து ஒய்ந்து கிடக்கும் மண்போல. இதயம் இருண்டு விசாரப் பட்டது. கண்களில் ஏதோ இஇனம் புரிந்த சோகம் அவனில்.  நினவுச்சூழல் ஊருக்கு போனது...

கனிமொழி!அவன் உயிரி எழுதிய ஓவியம். கண்களின் பார்வை காதலின் முதல் விதையல்லவா! அன்று தான் சாந்தனும் கனிமொழியும் நேரில் பேசியதாக ஞாபகம் சாந்தனுக்கு. ஒரே ஊர் ஒரே பாடசாலை, ஒரே தெரு சிறு வயது முதல் முளைத்த பார்வை என்றாலும் அன்று தான் முதல் பார்வை. வகுப்பறையில் கணிதபாடத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்ப்பதற்காக சாந்தனிடம் கேட்க முயன்று,ர காதல் வலையில் சிக்குண்டாள்

பகல் இடைவேளை எல்லோரும் வெளியில் போய்விட்டார்கள். வகுப்பறையில் சாந்தனும் கனிமொழியும் தான். து¡ரத்தை விலக்கி மேசைதான் இருந்தது. மெல்ல எழுந்து கனிமொழி நடந்து வந்தாள்.

நிலா பகலில் வந்து ஒளிதெறித்ததுபோல். 

“அவள் நிலவா அல்லது நிலாதான் அவளா”? 

ஒரு புன்னகை மலரோடு சாந்தனுக்குப் பக்கத்தில் வந்தாள். 

கனிமொழிதான். மெய்மறந்து நிமிர்ந்தான்.

“என்ன கனிமொழி” என்றான். 

வெக்கத்தால் நாணம் சிவந்த பார்வை வீச்சுக்கள். ஒரு கணம் தான். 

“சாந்தன்.... கணித பாடத்தில் ரீச்சர் சொன்னது விளங்கேல அது தான் உங்ககிட்ட கேட்கலாமெண்டு வந்தனான்" தயங்கித்தயங்கி உடைந்த குரலில் கேட்டாள். 

“ஏன் கனிமொழி..... விளங்கேலேயண்டால் ரீச்சர் கிட்ட கேட்டிருக்லாம் தானே”? எடுத்தறிந்து பேசுவது போல் சாந்தன் சொன்னான். ஒரு மயான அமைதி அவளில் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கு முன்மொழிதல் தருவான் என்று வனப்புடன் இருந்த மனது வாடிப்போனது. உள்ளம் வெந்து கண்கள் உருகிக் கலங்கின. 

“என்ன கனிமொழி ஒரு மாதிரிப்பேசிரீங்க.”? 

“ஒண்டுமில்ல”....... 

“ஒரு சிக்கல் கேட்க வந்த எனக்கு முகத்திலே அடிச்சமாதிரி பதில் சொல்லிவிட்டீங்க ஒரு பெண்ணை புரிந்து கொள்கின்ற பக்குவநிலை உங்களிடம் இருக்கெண்டு.”  சொல்லி முடிப்பதற்குள்..  "சரி..சரி  என்ன சொல்லிப்போட்டேன். கொஞ்சம் பகிடியாக பேசவேண்டுமெண்டதற்காக அப்படிச் சொன்னேன். அதற்குள்ளே இவ்வளவு தவறான புரிதல் உங்கள் மனதில் எழுந்து விட்டது. ஏதும் புண்பட சொல்லிவிட்டேன் என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்"

"நான் உங்களை மன்னிக்கிறதா? என் மனதில் தெய்வமாய் வைத்து நினைத்து வணங்கிக் கொண்டிருக்கிறேன். நானா உங்களை மன்னிக்கிறது" 

அடுத்த வார்த்தை சாந்தனிடம் இருந்து வருவதற்குள் வகுப்பறையை இடைவேளை மணி நிரப்பியது. அது தான் அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட வார்த்தைகள். 

அன்று தொடக்கம் தன் மனதை பறிகொடுத்து காதல் அவளில் விழித்தது அவன் உற்றுப்பார்க்கிற இஇடமெல்லாம் அவன் உழைப்பே வியாபித்துக் கிடக்கிறது. தொடர்மாடிக் குடியிருப்பில் வாடகைக்கு எடுக்கப்பட்ட இரு அறைகொண்ட வீடு தான் ஆயினும் அவன் இரவும் பகலும் உழைத்தவையெல்லாம் தன் தாய், தகப்பன், சகோதரர்கள் என்றே கரைந்து போன கனேடிய டொலர் ஒவ்வொன்றும் அவன் மனதுக்குள் முண்டியடித்து முண்டியடித்து நேற்று நிகழ்ந்தது போல் பின்னல் கொடியாய் படர்ந்தது. இடி மின்னலாய் நெருப்புடன் நெஞ்சில் இறங்கியது.  இரவு கண்விழித்து விழிப்பின் அசதி அவனில்..........சற்று கனிமொழியின் மடியில் கண்மூட

“டொக்...டொக்.....டொக்....என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது.கனிமொழியின் மடியிலிருந்து எழுந்தான்.

"கனிமொழி ஒழும்பி கதவைத்திறந்து விடுங்கோ"

அவள் கேட்டும் கேளாதது போல் இருந்தாள்.

"யாருமா...? உங்கட ஐயாவும் அம்மாவும்தான். கோயிலுக்கு போயிற்று வருவினம். அவயிட்ட திறப்பு இருக்குத்தானே திறந்து வரட்டும்..ஐக்கட்டுக்குள்ள  இருக்கிற துறப்பை எடுத்து திறக்க பஞ்சியாக்கும்"

மீண்டும் டொக்..டொக்.. என்ற சத்தம் கேட்டது.

கனிமொழி எழுந்து கதவைத் திறக்கவில்லை. அவர்களே திறந்து உள்ளே வந்தார்கள்.உள்ளே வந்த வேகம் வித்தியாசமாக இருந்தது.நடையில் புதிய தென்பு முளைத்தது சாந்தனின் அம்மாவிற்கு. மனதை அழுத்திக்கொண்டு கண்களில் தீ பரவ முகத்தில் கோபத்தின் கீறல்கள். ஏதோ முனகினாள் . அவ்வளவுதான் கனிமொழிக்கு நெஞ்சிலிருந்து நெருப்பாறு பீறிட்டு எழுந்தது போல் என்றுமில்லாதவாறு கோபம் வந்தது. ஆயிரம் ஆயிரம் கனவுகளின் சிதிலங்கள் அவள் மனதில் இருந்து உடைந்து பனிப்படலமாய் உறைந்து இறுகியது. என்றெனும் இல்லாத போக்கில் அவள் தன்னை மாற்றிக்கொண்டாள். இது தற்சயலாக எழுந்த நிகழ்வா? இல்லை தானாக உள்ளுக்குள் விதையாக மலர்ந்ததா?  எப்படியோ அவள் கோபம் கொண்டாள்.

"மாமி நீங்க நீனக்கிற மாதிரி என்ர புரசன் நோஞ்சாண்டியில்ல. அவர் வெட்கத்திற்காக வாயை மூடிக்கொண்டிருக்கிறார். உங்கட எளியந்தனமான வார்த்தையெல்லாம் கேட்டு எங்களுக்கு வாழவேண்டிய தலையெழுத்தல்ல. வீட்டுப்பிரச்சினைகள் வெளியில் தெரிந்தால் வெட்கம் என்டதற்காக மெனமாய் வாழ்கிறோம். இனிமேல் அவரைப் பற்றி ஏதேனும் கதைத்தால் நடக்கிற வேற "என்றாள் கனிமொழி.

அவ்வளவும்தான்.. வந்தவர்கள் வாயடைத்துப்போய் நின்றார்கள்

பதிவுகள் மே 2002 இதழ் 29

 


ராகவன்

 

சந்திரவதனா செல்வகுமாரன் (யேர்மனி)

பதிவுகள் சிறுகதைகள் - 2ராகவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. அன்று பிரயோககணித வகுப்பு முடிந்ததும் Organic Chemistry தொடங்கியது. பதினோராம் வகுப்புக்கான மாஸ்டர் வரவில்லையென்பதால் அந்த வகுப்பு மாணவர்களையும் எமது 12ம் வகுப்புக்குள் விட்டார்கள். பெப்பே தான் அவசரமாக வாங்கில் மேசைகளை ஒழுங்கு படுத்தி விட்டது. அது யார் பெப்பே...! என்ற யோசனை உங்களுக்கு வரலாம். அது பாவம். நாங்கள் பெண்கள் எல்லோருமாகச் சேர்ந்து அதுக்கு வைத்த பெயர்தான் பெப்பெ. அதென்ன அஃறிணையில்... என்று நெற்றியைச் சுருக்குகிறீர்களா? அவனெண்டு சொல்ல முடியவில்லை. வயதில் மூத்தது. அவர் என்று சொல்ல முடியாத படி பெப்பே. நாங்கள் ரியூற்றறிக்குள் நுழையும் போது கதவைத் திறந்து விடுவதிலிருந்து கரும்பலகையைச் சுத்தமாக்கி... என்று எல்லாவற்றையும் செய்து வைப்பதுதான் பெப்பேயின் வேலை. 

யாரோ நாங்கள் பெப்பே என்று சொல்வதை அதுக்குச் சொல்லி, ஒரு நாள் இடைவேளை நேரம் அது வந்து அதன் அர்த்தம் என்ன? ஏன் தனக்கு அப்பிடிப் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்க எங்களுக்குப் பாவமாகி விட்டது. பெயர் வைப்பதில் மும்முரமாக நின்ற சந்திரப்பிறேமா மட்டும் நைஸாக நழுவி விட்டாள்.

மனசுக்குள் கனவுகளை வளர்த்துக் கொண்டு மன்மத நினைப்பில் பெண்களுக்கு நடுவில் வேலை செய்து கொண்டிருந்த பெப்பே இப்போதெல்லாம் எங்களைக் கண்டால் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. 

சில 11ம் வகுப்பு மாணவர்கள் உதவி செய்ய, பெப்பே முகத்தைத் தொங்கப் போட்ட படி வாங்கில்களை அடுக்கிக் கொண்டிருக்கவே ஆண் மாணவர்கள் சிலர் தடால் புடால் என்று ஓடிவந்து அமரத் தொடங்கினார்கள். இடங் காணததால் பக்கப் பாடாகவும் வாங்கில்கள் போடப்பட்டன. 

வகுப்பு தொடங்கி விட்டது. பெப்பே அவசரமாய்ப் புதுச் சோக்குகளை கொண்டு வந்து மேசையில் வைத்து விட்டு வெளியேறி விட்டது. மணியம் மாஸ்டர் வழக்கம் போல Organic Chemistry யை இரட்டை அர்த்தம் தொனிக்க விளக்கிக் கொண்டிருந்தார். சி¡¢ப்பலைகளின் நடுவே அவசரமாய் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று என் காலில் ஏதோ தட்டுப் பட்டது. திடுக்கிட்டுக் குனிந்து பார்த்தேன்.

ஒரு கால் நீண்டிருந்தது. அது பக்கப் பாடாக எனக்கு வலது பக்கமாக வைக்கப் பட்டிருந்த வாங்கிலில் இருந்த ராகவனின் கால். நிமிர்ந்து பார்த்தேன். அவன் குனிந்த தலை நிமிராமல் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான். 

என்னை விட இளையவன். 11ம் வகுப்பு மாணவன். எனக்குப் பிரயோககணிதம் படிப்பிக்கும் இரத்தினவேல் மாஸ்டரின் மகன். இரத்தினவேல் மாஸ்டர் கடமையே கண்ணானவர். அவர் வகுப்புக்குள் நுழைந்து விட்டால் ஆர்முடுகல், அமர்முடுகல், வேகம், நேரம், கரும்பலகை, சோக், டஸ்ரர்,........ இவைகள் தவிர வேறெதுவும் எம் சிந்தனையில் செல்லாது. Chemistry யில் மாதிரி பிரயோககணித வகுப்பில் நிறையப் பெண்களும் இருக்க மாட்டார்கள். ஏதோ பெண்கள் கணிதம் படிக்கத் தகுதியில்லாதவர்கள் என்பது போல டொக்டர், ரீச்சர் கனவுகளோடு உயிரியலும், தாவரவியலும் படிக்கச் சென்று விடுவார்கள்.  நானும் கீதாவும் இன்பியும்தான் கணிதம் படிப்போம்.

மிச்ச எல்லாம் பெடியன்கள்தான். 

எங்களுக்குத்தான் சின்னதாகக் கூடப் பெண்களின் பக்கமாகச் சிரிக்காமல் சீரியஸாகப் படிப்பிக்கும் இரத்தினவேல் மாஸ்டரின் ஆசிரியத் தன்மையும், திறமையும் தெரியும். அதனால் நாங்கள் மூவரும் அவர் மகன் ராகவனையும் மற்றைய மாணவர்கள் போல சாதாரணமாக எண்ணாது சற்று எட்டவே வைத்திருந்தோம். 

இதென்னடா...? வாங்கிலுக்குக் கீழே தவறுதலாக ஒரு கால் பட்டதுக்கு இத்தனை ஆரவாரமா என உங்களுக்கு ஒரு சிரிப்பான யோசனை வரலாம். அந்தக் காலம் என்ன உதட்டோடு உதடுரசிக் ஹலோ சொல்லும் இன்றைய காலமா.? ஓன்றாகப் படிக்கும் மாணவனுடன் கூட ஒரு வார்த்தை பேசாது, ஆண் பெண் என்று பிறித்து, பிரித்து வைத்து.. கண்கள் சந்தித்துக் கொண்டாலே பாவம் என்பது போல தலைகுனிந்து திரியும் இற்றைக்கு 28 வருடங்கள் முந்திய காலமல்லவா அது..! 

பார்வையே தொடக் கூடாது. புன்னகை.. அது தெரியாமல் கூட ஆண் மாணவர்கள் முன் பெண் மாணவர்களுக்குப் பூக்கக் கூடாது. இந்த நிலையில் ஒரு ஆண் மாணவனின் கால் பெண் மாணவியின் காலில் படுவதென்பது சும்மாவா..? 

ராகவன் தலை கவிண்ட படியே எழுதிக் கொண்டிருந்தான். யாராவது அவதானித்திருப்பார்களா என்று அறிந்து கொள்ள மெதுவாகப் பார்வையைச் சுழற்றினேன். எல்லோரும் நோட்ஸ் எடுப்பதிலேயே கவனமாக இருந்தார்கள். யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதில் எனக்குப் பெருநிம்மதி. இருந்தாலும் ஏதோ அவமானப் பட்டுப் போன மாதிரியான ஒரு உணர்வு. முன் வாங்கிலில்தான் நான் இருந்தேன்.

எனக்கு நேரெதிரே கரும்பலகைக்கு முன் நின்று படிப்பித்துக் கொண்டிருக்கும் மணியம் மாஸ்டர் கண்டிருப்பாரோ என்று மனசுக்குள் ஒரு சின்ன உறுத்தல். ராகவன் தலையை நிமிர்த்தியதை நான் காணவில்லை. அவன் நோட்ஸ் எடுக்கும் விதத்தைப் பார்த்தால் அவன் என் காலில் தட்டுப் பட்டதையே உணராதவன் போலத் தெரிந்தான். தெரியாமல்தான் நடந்திருக்கும். அவன் நல்ல பெடியன். என் மனசுக்கு நான் கூறிக் கொண்டேன்.  வகுப்பு முடிந்து வெளியில் வந்த போதும் யாரும் இது பற்றி எந்தக் கேள்வியும் கேட்க வில்லை. எனக்கு இப்போ துணிச்சலான நிம்மதி. யாரும் காணவில்லை.

அடுத்த வாரம் பாடசாலைக்குச் சென்ற போது எனது நிம்மதி பாடசாலை மதில்களில் கா¢க்கட்டியால் குலைக்கப் பட்டிருந்தது. ராகவன் என்று எழுதி பக்கத்தில் கூட்டல் அடையாளம் போட்டு எனது பெயரும் எழுதப் பட்டிருந்தது. என்னையும் ராகவனையும் இணைத்தும் நான் ராகவனின் காலைத் தட்டினேன்  என்றும் அரசல் புரசலான கதைகள் பாடசாலைச் சுவர்களில் எதிரொலித்தன.

எனது கால் மாஸ்டரை நோக்கித்தான் நீள முடியுமே தவிர எனக்கு வலது பக்கமாக இருந்த ராகவனின் பக்கமாய் நீள முடியாது. அவனாக வேண்டு மென்று என் பக்கம் நீட்டினானோ..? அல்லது தவறுதலாக நடந்ததோ எனக்குத் தெரியாது. ஆனால் அதை ஒரு தவறான கதையாக ஊருக்குள் உலாவ விட்டு விட்டான். 

ஏன்ரா இப்படி ஒரு கதையை உருவாக்கினாய் என்று அன்று அவனிடம் சென்று கேட்க ஆண் பெண்ணுக்கிடையில் அன்றிருந்த இடைவெளி இடம் தரவில்லை. அதனால் இன்றுவரை ராகவன் ஏன் அப்படி நடந்து கொண்டான்..? என்ற கேள்வி என்னை விட்டு அகலவும் இல்லை. 
 
பதிவுகள் அக்டோபர் 2003 இதழ் 46

 


 

 எமனுடன் சண்டையிட்ட  பால்காரி! 

- சி. ஜெயபாரதன் (கனடா) -

பதிவுகள் சிறுகதைகள் - 2பால்காரி பொன்னம்மா சோர்ந்து போய் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  மத்தியானம் சாப்பிடுவதைக் கூட மறந்து மரணப் படுக்கையில் கிடந்த புருசன் அருகே தலையில் கைவைத்த வண்ணம் பேயடித்தவள் போல தூணில் சாய்ந்திருந்தாள்.  பத்து நிமிஷத்துக்கு முன்புதான் புருசனின் மூச்சு நின்று போனது.  இப்போது என்ன செய்வ தென்று தெரியாமல் தடுமாறினாள்.  நீண்ட பெரு மூச்சை விட்டு பொன்னம்மா எழுந்தாள்!  அவள் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விழவில்லை.  புருசன் முகத்தைப் பார்க்காமல் சுவரில் தொங்கிய ஒரு குழந்தையின் படத்தைப் பார்த்தாள். புன்முறுவல் பூத்த அந்தப் பாசமலர் அவள் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது!  மெதுவாக ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்.  உடனே திடுக்கிட்டு பரபரப்புடன் கதவைத் திறந்து கொண்டு வீதிக்கு ஓடினாள். 

"போகாதீங்க, நில்லுங்க! நில்லுங்க! என்று கூச்சலிட்டாள், பொன்னம்மா.  எருமை மாட்டின் மீது ஏறிச் சவாரி செய்யப் போன எமதர்மன், உட்கார்ந்து கொண்டே பின்னால் திரும்பினான். 

"சரித்திரம் மீள்கிறதா?  பின்னாலே வராதே பெண்ணே!  உன் புருசன் உயிரைக் கொண்டு போறதுக்கு நான் மிகவும் வருந்துறேன்".

"நானே வருந்த வில்லை!  நீங்க ஏன் வருத்தப் படணும்?  உங்க வேலைய நீங்க செய்றீங்க.... என்னை பெண்ணேன்னு சொல்லாம, பொன்னம்மான்னு கூப்பிடுங்க!" 

"பொன்னம்மா, பேசாமல் போயிடு! என் பின்னாலே வராதே சாவித்திரி மாதிரி! நான் முதல் தரம்தான் ஏமாந்தேன்.  இரண்டாம் தடவை தப்பு பண்ணப் போறதில்லே!  உன் புருஷன் உயிரை மட்டும் கேட்காதே" 

"என் புருசன் உயிரைக் கேட்க நான் வரவில்ல.  அது போறதுதான் நல்லது! எமராசா, நான் ஒன்னும் சாவித்திரி இல்லே!"

"அட  ஆச்சரிய மாயிருக்கே! ஏம்மா! நீ கண்ணகி பிறந்த நாட்டுக்காரி! கல்லானானும் கணவன், புல்லானாலும் புருசன் என்று கும்பிட குலமாச்சே!  காலம் மாறிப் போச்சு!  நீ பெண்ணல்ல என்னு சொன்னது இப்போதான் ஞாபகம் வருது!"

"கண்ணகி குல தெய்வம் மாதிரி!  ஆனா என் புருசன் குலத் துரோகி! நான் வாழ்றதிலே புண்ணியமில்ல, எம ராசா!" 

"பொன்னம்மா! என்ன கவலை உனக்கு?  பால் வியாபாரத்திலே உனக்கு பண நொடிப்பா?"

"எம ராசா!  கையெடுத்துக் கும்பிடறேன். ஒரேதா என் உயிரையும் கொண்டு போயிருங்கோ!"

"நீ செத்துப் போக இன்னும் நாற்பது வருசஷமிருக்கே, நான் எப்படி உன் உயிரைக் கொண்டு போறது? அது பெரிய தப்பாச்சே''

"தனியா எப்படி நாப்பது வருசம் வாழ்றது, எம ராசா! புருசன் இல்லாம, பிள்ளை, குட்டி இல்லாம?"

"இந்தா வந்துட்டயே! இது பழைய சாவித்திரி உத்தி! முதல்லே பிள்ளை வேணும் என்பே!  பிள்ளைக் கொடுத்தா, எப்படிப் பிள்ளை பிறக்கும், புருசன் இல்லாம என்னு, புருசன் உயிரையும் வாங்கத் தந்திரம் பண்ணுவே!"

"இத்தன நாளாய் என் புருசன்தான் என் உயிரை வாங்கிக் கிட்டிருந்தான்! எமலோகம் போற என் புருசன் உயிரை நீங்க தந்தாலும், நான் திரும்ப அங்கே அனுப்பிடுவேன்!  அவனும் வேணாம்! அவன் கொடுக்கிற பிள்ளையும் வேணாம்!"

"கதை வேற மாதிரிலே போவுது! புரியலையே பொன்னம்மா! குழப்புறயே!" 

"எம ராசா!  பெண்ணுக்கு உத்தம புருசன் ஒருத்தன்தான் வேணும்!  ஆனா ஆம்பிளைக்கு அப்படி யில்லே. சில ஆம்பிளைக்கு மூனு பொம்பளை வேணுமின்னு ஆசையிருக்கு! கண்ணைக் கவரும் ஆடகியோ, காதில் இனிக்கும் பாடகியோ ஒருத்தி!  கட்டில்லே ராத்திரி பக்கத்திலே படுக்க செதுக்கின சிலை போல இன்னொருத்தி! அப்புறம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு, வீட்டுலே காத்து கிடக்க மூனாவது ஒருத்தி!" 

"பொன்னம்மா நீ என்ன சொல்றே? புதிர் போடாமல் புரியும் படி பேசு"

"என் புருசன் ஊர்க் காளை மாடு மாதிரி!  நாலாவது வீட்டு ரங்கம்மாவுக்கு ஒரு பிள்ளையை கொடுத்து, அது கழுதையாய் மண்ணுலே புரளுது!  அவன் பிறந்த ஊர்லே குப்பம்மாவுக்கு இன்னோர் பிள்ளை கொடுத்து, அது கொண்டி மாடாய் ஊரைச் சுத்துது!  இந்தா பாருங்கோ, என் புருசன் படுக்கிற கட்டிலிலே, நான் படுக்கிறதே இல்ல.  அந்தப் பிள்ளைகளுக்கே அவன் அப்பனாக தொலையட்டும்.  என் பிள்ளைக்கு அவன் அப்பனா இருக்க வேணாம்.  அடுத்துப் பிறக்கிறது பன்றியாத்தான் இருக்கும்!"

"அப்ப பிள்ளை வரத்தை எப்படிக் கொடுக்கிறது, சொல்லு?"

".... மூனாவது குடிசையிலே வாழ்ற .... கார் டிரைவர் கந்தசாமி மேலே .... எனக்கு ஒரு கண்ணு.  கந்தசாமிக்கு என் மேலே .... இரண்டு கண்ணு" 

"இது தப்புத் தாளமாச்சே!  புருசன் இருக்கும் போது அடுத்தவனை பார்க்கிறது ... அதர்ம மாச்சே!"

"ஆமா! பொன்னம்மா வீட்டிலே இருக்கும் போது, என் புருசன் ரங்கம்மா கட்டில்லே ஒருநாளும், குப்பம்மா பாயிலே அடுத்த நாளும் படுக்கிறது என்னவாம்?" 

"அதுவும் அதர்மம்தான்"

"அதைப் பெண்டாட்டி துரோகம் என்னு முதல்லே சொல்ல, ஆம்பிளை உங்க வாயிலே வரலையே!"

"இரண்டும் தவறுதான். சரி நீயே போய் கந்தசாமியை கட்டிக்க வேண்டியதுதானே. நான் என்ன செய்யணும்?"

"எம ராசா! நான் கேட்க வந்தது, கந்தசாமிக்கு எப்படி ஆயிசு?  நீண்ட ஆயிசு தானே?'"

"என் கிட்டே கந்தசாமியின் ஜாதகம் இல்லே. ஆயுள் கையேடும் இல்லே. எப்படி ஆயிசுக் கணக்கிடறது?"

"ஏதோ காலன், தூதன், சித்திர குப்தன் என்னு சொல்றாங்க, எங்கே போயிட்டாங்க அவுங்க?"

"இரு காலனைக் கேட்கிறேன்.  அவன் கிட்ட போர்டபிள் கம்பியூட்டர் ஒன்னு இருக்கு. சீக்கிரம் பார்த்துச் சொல்லிருவான்"

"சீக்கிரம் சொல்லுங்க எம ராசா!  என் நெஞ்சி பக்பக்கென்னு அடிக்குது"

எமதர்மன் பெரு மூச்சு விட்டு ஆயுளைச் சொல்லத் தடுமாறினார்.  இரு கைகளையும் பிசைந்து கொண்டு மேலே நோக்கினார்.

"என்னங்க எம ராசா, ஏன் வானத்தைப் பார்க்கிறீங்க?  ஆயுசு எப்படின்னு சொல்லுங்க?"

"பொன்னம்மா!  பார்த்ததுதான் பார்த்தையே, நீண்ட ஆயுசு ஆளாப் பார்த்துப் பிடிச்சிருக்கலாமே"

"என்ன சொல்றீங்க எம ராசா?  கந்தசாமி \அற்ப ஆயுசா? "

"கண் கலங்காதே, பொன்னம்மா!  கந்தசாமி வீட்டுக்கு .... நான் சீக்கிரம் .... வருகிறதாயிருக்கு"

"அட கடவுளே! ....  இன்னும் எத்தனை வருசம் அவரு.....?"

"கந்தனுக்கு அற்ப ஆயசுன்னு ... காலன் சொல்றான்"

"காலன் சரியாப் பார்த்துதான் சொன்னானா?  சில கம்பியூட்டர் சரியா வேலை செய்யாதாமே?  என் பிள்ளை கொஞ்ச நாள்தான் தகப்பனை பார்க்குமா? எமதர்மா, இது  ஞாயமில்லே! அவருக்காவது நீண்ட ஆயுசைக் கொடு!  உன் காலிலே விழுந்து கும்பிடுறேன்!" 

"என் காலிலே விழறேன்னு, எருமைக் காலைப் போய் கும்பிடறே! .... அற்ப ஆயிசு கந்தசாமியை விட்டு, வேற ஆளைப் பாரு, பொன்னம்மா!   அது தான் புத்திசாலிப் பெண் செய்யுற காரியம்"

"உத்தம  ஆம்பளை கந்தசாமி போல எத்தனை பேர் இருக்கான்?  ஒழுக்கம் கெட்ட பயல்கள் தான் எங்க ஊரில அதிகம். ஆமா கந்தசாமிக்கு ... எப்போ ... ஆயுசு ... முடியுது, அதைச் சொல்லுங்க முதல்லே" 

"அடேடே கந்தசாமிக்கு தம்பி இருக்கானாமே! அவனுக்கு ஆயசு பலமா இருக்காம்! 80 வயசு வரை தெரியுதாம். காதிலே காலன் முணுமுணுக்கிறான்".

"அந்த ஒற்றைக் குச்சி பொன்னுலிங்கம் ஒரு குடிகாரப் பயல்!  அவனை வச்சி துடைக்க என் வீட்லே ஒட்டடை கூட இல்லே!  ராத்திரி ராத்திரி குடிச்சிபிட்டு வந்து பெண்டாட்டியை போட்டு அடிப்பான். காலையிலே நடு வீதியிலே தூங்கிக் கொண்டு கிடப்பான்! குடிக்கப் பண மில்லேனா என் மாட்டைக் கொண்டு போய் சந்தையிலே வித்துட்டு, சாராயக் கடைக்கும் சர்க்காருக்கும் சம்பாரிச்சு கொடுப்பான்!  எம ராசா!  அயோக்கியப் பயலுக்கு அதிக வயசையும், உத்தம  ஆம்பளைக்கு அற்ப ஆயுசையும் தலையிலே எழுதி வைக்கறீங்களே, இது என்ன ஞாயம்?  சொல்லுங்கோ அவருக்கு ...ஆயுசு எதுவரை?" 

"பொன்னம்மா!  அற்ப ஆயுசு ஆளுங்க பூமியிலே இல்லாம போனால், எங்கள் ராஜியத்திலே பலருக்கு வேலை யில்லாம போயிரும்! அப்புறம் என் பட்டாளங்கள் கொடியைத் தூக்கிட்டு அரண்மனைக்கு முன்னாலே  ஆர்ப்பாட்டம் செய்து பட்டினி கிடப்பாங்க!" 

"சொல்லுங்க கந்தசாமிக்கு  ஆயுசை!  என் மனசு துடிக்குது!  சொல்லுங்க எம ராசா!"

"உன்னைப் படைச்ச கடவுளே அதை மறைச்சு வச்சிருக்கான்.  அதை முன்னாலே நான் சொன்னா நீ மயக்கம் போட்டு விழுந்திடுவே.  இல்லே திடீரென்னு உன் நெஞ்சு நின்னுட்டா, பிறகு என் மேலே புகார் வந்திடும். உன் உயிரை நான் எடுத்து போகவும் முடியாது.  இங்கே விட்டுட்டு போகவும் முடியாது. அது அப்புறம் அந்தரத்திலே பேயாய் அலையும்!  உயிரை திருப்பி உடம்புல ஒட்ட வைக்கிற உத்தியும் எனக்கு தெரியாது!   அது என் வேலை இல்லே.  பிரம்மா படைப்பு வாரியத்தைச் சேர்ந்தது"

"சும்மா சொல்லுங்க எமராசா!  நான் ஒன்னும் வெண்ணையில்ல, உருகிப் போக.  என் மனம் தேக்கு மரம் போல. ... என்ன கந்தசாமி இன்னும் ... அஞ்சி வருசம் இருப்பாரா?" 

"உம் .... அத்தன நீண்ட   ஆயுள் இல்ல ... கந்தனுக்கு"

"சரி அஞ்சில்லே.  மூனு வருசமாவது அவர் .... உயிரோட இருப்பாரா?"

"அதுவும் .... இல்லே! ... பொன்னம்மா! ... ஏன் கண்ணிலே கண்ணீர் குபுகுபுன்னு பொங்குது?"

"அப்படீங்களா? ...". பொன்னம்மா கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். "சரி ஒரு வருடமாவது மனுசன் ... உயிரோடிருப்பாரா?"

"அதை நான் சொல்ல முடியாது, பொன்னம்மா!  உனக்குப் பிள்ளை பிறந்து, கந்தன் கொஞ்ச காலம் இருப்பான்"

"எனக்குப் பிள்ளை பிறந்து, கந்தசாமி ஒரு வருசமாவது உயிரோடு இருக்கணும்.  அதுக்கு வரம் தருவீங்களா, எம ராசா?  உங்களைக் கெஞ்சி கேக்கிறேன்"

"அந்த வரத்தை நான் தர முடியும், பொன்னம்மா!"

"நிச்சயமா சொல்றீங்களா எம ராசா?" 

"ஆமாம்!  உனக்கு பிள்ளை பிறந்து, கந்தன் ஒரு வருசம் உயிர் வாழறது உறுதி.  அதுக்கு வரம் தருவதிலே எனக்கு எந்த ஆட்சேபணையு மில்லே! ..... ஏன் பொன்னம்மா! ... நயாகரா மாதிரி கொட்டின கண்ணீ ரெல்லாம் ... சினிமாவில் திருப்பி ஏறுற மாதிரி உன் கண்ணு மேலே ஏறுதே"

"என் வயிற்றுலே பசும் பாலை வார்த்திட்டீங்க எம ராசா!  அந்த உத்தரவாதம் போதும் எனக்கு!" ஆனந்த கண்ணீர் இப்போது கொட்டி வடிய, பொன்னம்மா வீட்டை நோக்கி ஓடினாள். 

"இப்போ எனக்கு பிள்ளை வேணாம் எம ராசா! ... நீங்க நீண்ட நாள் வாழணும்" என்று சிரித்துக் கொண்டு கதவை மூடினாள், பொன்னம்மா. எமனுக்கு மண்டையில் ஏறிப் புரிபட சற்று நேரம் பிடித்தது!

"அடி பாதகி! இரண்டாம் தடவையும் ஏமாந்துட்டேன்!"..... கீரிடத்தைத் தூக்கி விட்டெரிந்து தலையில் நாலடி அடித்துக் கொண்டு எருமை வாகனத்தை முடுக்கினான், எம ராஜன்.

"போகாதீங்க! நில்லுங்க! நில்லுங்க!" என்று அலறிக் கொண்டு மறுபடியும் பொன்னம்மா ஓடி வந்தாள்.  பின்னால் திரும்பிய எமனுக்குக் கண்கள் சிவந்து கோபக் கனல் பறந்தது.  பற்களை நறநற வென்று கடித்தான்.  கைகளைத் தூக்கி ஆங்காரம் கொண்டான்.

"இன்னும் ஏன் பின்னாலே வர்றே! போதும் உன் உபத்திரம்! போ! போ! போ! ஒழிஞ்சு போ!" 

"என் வயிற்றிலே மண்ணைப் போட்டு போறீங்களே, எம ராசா! நான் முக்கியமானதை விட்டிட்டேனே!"

"புரியும்படி சொல்லித் தொலை!"

"நீங்க ஏறிப் போறது, என் எருமை மாடு! தினம் எனக்குப் பால் கறக்கிற எருமை! பால் எருமைக்கும்  ஆண் எருமைக்கும் வித்தியாசம் தெரியாம, என் மாட்டை பத்திட்டு போறது சரியா?  மாட்டைப் பிடிக்க வந்தவ, புருசன் கிடைச்ச சந்தோசத்திலே அதை மறந்துட்டேன்!"

எம ராஜனின் சினம் பட்டெனத் தணிந்தது!

"அட  ஆமா, உன் எருமைதான் இது! ...முதல்லே அதை சொல்லி யிருக்கலாமே!  .. அதானே பார்த்தேன்! தெற்கு நோக்கிப் போறதுக்கு பதிலா வடக்கிலே போவுதே, ஏன் என்னு எனக்கு தெரிய வில்ல! ..... எங்கே என் மாட்டைக் காணோமே?" .. எருமையை விட்டு மெதுவாக கீழே எமன் இறங்கினான்.

"புல்லுத் தின்ன போயிருக்கும், எம ராசா! .. இன்னைக்கு காலையிலே அது வயித்துக்கு ஏதாவது போட்டீங்களா?  ... எருமை மாட்டிலே வித்தியாசம் கண்டு பிடிக்க முடியலையே, நீங்க எடுத்துட்டுப் போற உயிர்கள் எல்லாம் சரியானதா? ...ஆட  ஆண்டவா! .. எம ராசனுக்கும் வயசாகுதில்லே! கண்ணு மிரளுது! ... எம ராசா! மாடு தேடிறதுக்கு முந்தி முதல்லே ஒரு கண்ணாடி வாங்கி மாட்டிக்கங்க...! எருமை மாறாட்டம் மாதிரி,  ஆள் மாறாட்டம்  ஆனா என்ன  ஆகுறது?" 

பொன்னம்மா மாட்டை தட்டிக் கொண்டு கொட்டத்துக்குள் நுழைந்தாள். திருதிரு வென்று விழித்த எமன், விழிகளை மூட மறந்து, கீழே கிடந்த கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டு, வேகமாக வாகனத்தை தேடிப் போனான். 

பதிவுகள் நவம்பர் 2003 இதழ் 47 


ஏன் அழுதாள்?

- பிரியா (ஆஸ்திரேலியா) - 

பதிவுகள் சிறுகதைகள் - 2ரிவியில் மதிய நேரத்தில் வரும் Days of our life என்ற அமெரிக்க தொடர் நாடகம் ஓடிக்கொண்டிருந்தது. நாடகத்தில் ஆணிடம் இளம்பெண் பலமாக விவாதிக்கிறாள். விவாதத்தின் முடிவில் கட்டி அணைத்து பலமாக உதட்டில் முத்தமிடுகிறாள். இந்த முத்தக் காட்சி சாதாரணமாக எந்த மானிடருக்கும் சலனத்தை உருவாக்கும். உருவாக்க வேண்டும் என்பதே நாடகத் தயாரிப்பாளரின் நோக்கமாகும். ஆனால் அவள் ரிவிக்கு முன்பான கதிரையின் ஒருபக்கமாக அடித்து போட்ட பாம்பை போல் உடலில் பலநெளிவுகளுடன் முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் சாய்ந்திருந்தாள். எலிசெபத்துக்கு காதுகள் சத்தத்தை கிரகிப்பதால் கண்கள் ரிவியை நோக்கி இருந்தன. எந்த காட்சியையும் கிரகிக்கவோ அதை ஞாபகப்படுத்தும் சக்தி அவளது மூளைக்கு கிடையாது. இப்படியான அவளது மனத்தில் எந்த காட்சியும் சலனத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமில்லை. 

15வருடங்களுக்கு முன்பு (Alzheimers) அல்சைமர் என்னும் ஞாபகமறதி அவளது மூளையை தாக்கியது. விலை உயர்ந்த புத்தகத்தின் அட்டையை தாக்கிய கரையான் இறுதியில் முழுப் புத்தகத்தையே தின்றுவிடுவது போல் கடந்த 15வருடங்களாக அல்சைமர் அவளது மூளையைத் தாக்கி அழித்துவிட்டது.

ஜெர்சி கழுவிய திராட்சைப்பழங்களை எடுத்துக்கொண்டு வந்து எலிசெபத் அமர்ந்துள்ள கதிரையில் கைகளில் அமர்ந்து ஒவ்வொரு பழமாக மெதுவாக ஊட்டினான். இடைக்கிடை பழங்கள் வாயில் இருந்து நழுவி விழுந்தன. விழுந்தவற்றை மெதுவாக எடுத்து முன்னால் இருந்த பழைய பத்திரிகையின் மேல் வைத்தான்.

எலிசெபத்தின் வாய் அசைந்தாலும் கண்மட்டும் ரிவியை நோக்கி இருந்தது, ஜெர்சி திராட்சை பழங்கள் முடிந்தவுடன் சிறிய துணியால் எலிசெபத்தின் வாயை துடைத்துவிட்டு தனது அறைநோக்கி சென்றான். ஜெர்சி பஞ்சாப்பில் லூர்தியானா பல்கலைக்கழகத்தில் உதவிவிரிவுரையாளனாக இருந்தபோது எதிர்பாராமல் கொழும்பு திட்டத்தின் கீழ்  அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புலமைப்பரிசில் கிடைத்தது, குடும்பத்தில் ஒரே ஆண்பிள்ளை அதுவும் இரண்டு அக்காமார்களுக்கு பின்பாக சிலவருடம் காத்திருந்து பெற்றபிள்ளை.

அக்காமாருக்கு திருமணம் முடிந்துவிட்டது.

ஒரு பொறுப்பும் இல்லாதபடியால் திருமணம் செய்யாமல் முப்பது வயது வரையும் இருந்துவிட்டான். அவுஸ்திரேலிய புலமைப்பரிசில் கிடைத்தவுடன் தாய் அழுது கதறியபடி திருமணம் செய்யும்படி வற்புறுத்தினார். தந்தை தனது உறவில் திருமணம் செய்யும்படி வற்புறுத்தினார். ஜெர்சியின் தாய் தந்தையர் பஞ்சாப்பில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். மேலும் உறவுகளை வலுப்படுத்த மகனை பாவிக்க எண்ணினார்கள். கடைசியில் அவுஸ்திரேலியாவில் இருந்து ஒரு வருடத்தில் திரும்பிவந்து திருமணம் செய்வதாக உறுதியளித்துவிட்டு விமானம் ஏறினான்.

மெல்பேன் வந்து இறங்கியதும் ஆங்கிலம் கற்பதற்காக ஆங்கில வகுப்புக்கு செல்லவேண்டி இருந்தது. ஜெர்சிக்கு ஆங்கிலம் கற்பது கடினமில்லை. பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான விரிவுரையாளராக இருந்தவன் ஆங்கில வகுப்புகள் இலகவாக மட்டும் அல்ல இனிப்பாகவும் இருந்தன. அங்குதான் எலிசபத் ஆங்கிலம் கற்பித்தாள். எலிசெபத்தின் ஆங்கிலம் அவனைக் கவர்ந்தது. எலிசெபத் ஸ்கொட்லாண்டில் இஇருந்து வந்தவள். எலிசெபத்தின் உச்சரிப்பில் தன்னை மறந்தான். சிலவேளையில் எலிசெபத்தின் வகுப்பில் கண்களை மூடியபடி இருப்பது ஜெர்சியின் வழக்கம். எலிசெபத் ஜெர்சியைவிட பத்துவயது மூப்பானவர். ஆரம்பத்தில் ஜெர்சியின் வெட்க சுபாவம் அவளை ஈர்த்தது, மிக முயற்சி செய்து ஜெர்சியை சங்கோசம் என்னும் கூண்டில் இருந்து வெளிக்கொணர்ந்தாள். ஆசிரியர் மாணவன் நட்பு என ஆரம்பமாகி பின்பு நண்பர்களாக்கியது. மெல்பேனின் பொட்டனிக்கல் தோட்டம், ஆட்சென்ரர் லைப்ரரி என்பனவற்றில் எலிசெபத்துடன் பலமணிநேரம் கழித்தான். 

எலிசெபத் தன்னைவிட வயதில் மூத்தவளாக, திருமணம் செய்து விவாகரத்து பெற்றவளாக இருந்தும், ஆரம்பத்தில் தொண்டையில் சிக்கிய சிறிய மயிர்போல் ஜெர்சிக்கு கரகரத்தது. எலிசெபத் ஆங்கில ஆசிரியை மட்டும் அல்லாமல் சினிமாப்பட விமர்சகராகவும் இலக்கிய புத்தகங்களை விமர்சிப்பவளாகவும் பிரபலமான பத்திரிகைகளுக்கு எழுதிவந்தாள். இப்படியான புத்திஜீவித்தனம் பலமுறை ஜெர்சியை தாழ்வு மனப்பான்மை கொள்ளவும் வைத்தது. காலங்கள் செல்ல மெல்பேனின் குளிரும் இருவரின் தனிமையும் புரிந்துணர்வும் பதிவுத்திருமணத்தில் முடிந்தது.

ஜெர்சி இந்தியாவில் இருந்துவந்தாலும் இந்திய சாஸ்திர சங்கீதத்தின் அரிச்சுவடு தெரியாமல் வளர்ந்தான். லதாமங்கேஸ்கர், முகமட்ராவியின் இந்திபட பாடல்கள் மட்டுமே இந்திய சங்கீதமாக நினைத்தான். இந்திய மத்திய தரத்துக்கே உரிய படிப்பு பின்பு பல்கலைக்கழகம் இடைக்கிடை “இளம்பெண்களை கேலி செய்தல்“ என்பனவற்றில் அவனது இளமை கரைந்தது.

ஆரம்பத்தில் எலிசெபத்துக்காக ஒப்பரா எனப்படும் சங்கீத நாடகங்களுக்கு சென்று வந்தான். காலப்போக்கில் ஒப்பராவின் தந்தையான ரிச்சாட் வாக்னரை பற்றி விவாதிக்கும் அறிவைபெற்றான். மேற்கத்திய சங்கீதத்தை ரசிக்க தொடங்கிய போது மொய்ராட் பாச் போன்றவர்களின் சங்கீத மெட்டுகளை வேறுபடுத்தி பார்க்க தொடங்கினான். ஐகுடி மெனுகிடின் பியானோ இசைதட்டுகளை கேட்டான்.

எலசெபத் மேற்கத்தைய சங்கீதத்துடன் இந்திய சங்கீதத்தையும் ஜெர்சிக்கு அறிமுகப்படுத்தினாள். இந்துஸ்தானியை ரசிக்க தொடங்கியவன் அதில் உள்ள மற்றும் அராபிய கலப்பை உணர்ந்தான். இந்தகாலத்தில் தென்னாட்டு கர்நாடக சங்கீதம் வேற்றுநாட்டு கலப்பற்ற பாரதநாட்டின் கலைவடிவம் என உணர்ந்த போது தென் இந்திய கலைஞர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து அவர்களின் சங்கீத திறமையை மற்ற இனத்தோரும் கேட்கவைப்பதை தனது கடமையாகச் செய்தான். இதில் தன்னை மறந்தான்.

சந்தோசமான இவர்கள் வாழ்க்கையில் இடியோ புயலோ திடீரென வரவில்லை. சிறிதுசிறிதாக இருந்து மெதுவாக பெரிதாகி உயிரை எடுக்கும் புற்றுநோய் போல் துன்பம் வந்து சேர்ந்தது, எலிசெபத் தனக்கே உரிய அமைதியான தன்மையை இழந்தாள். சிறிய விடயங்களுக்கெல்லாம் எரிந்து விழுந்தாள். சிறிதுநேரம் பிந்தி வீடு திரும்பினாலும் தாம் து¡ம் என குதித்தாள். எலிசெபத்தின் 50வயது பிறந்தநாளுக்கு பரிசாக M.S சுப்புலட்சுமியின் இசைதட்டை பரிசளிக்க விரும்பி சென்னையில் இருந்து ஒரு நண்பன் மூலம் வரவழைத்தான். இசைத்தட்டு பார்சலை எலிசெபத்திடம் கொடுப்பதற்காக படுக்கை அறைக்கு சென்றபோது விம்மி விம்மி அழுதாள். பலமுறை கேட்டும் காரணம் கூறவில்லை. பிறந்தநாளில் உணர்ச்சிவசப்பட்டு விட்டாள்.

அதிலும் பெண்கள் வயது போவதை விரும்புவதில்லை என நினைத்துக்கொண்டு கட்டி தழுவி அவளை சுவாசப்படுத்தினான். மறுநாள், பாத்திரத்தை நிலத்தில் போட்டு உடைத்துவிட்டாள். என்ன நடந்தது என வினவிய போது கையில் சுட்டுவிட்டது என்றாள்.

வழக்கமாக தடிப்பான கைஉறை போட்டு மிக அவதானமாக வேலைசெய்யும் எலிசெபத்துக்கு இப்போது என்ன நடந்தது என தன்னை கேட்டுக்கொண்டான். சிறிய விடயங்களை விவாதிக்கும் போது தன்மை மறந்து கோபமடைந்தாள். முன்பெல்லாம் தனது வாதங்களை தாரத்துடன் வழக்கறிஞர்போல் விவாதிக்கும் எலிசெபத் இப்பொழுது இல்லை. ஆரம்பத்தில் வழக்கமான மாதவிலக்கு நிற்கப் போவதால் வரும் Pre Menoposal Syndrome (PMS) என நினைத்தான்.

எலிசெபத் வேலையை ராஜினாமா செய்தாள். புத்தகம், சினிமாவுக்கு செய்யும் விமர்சனங்களை நிறுத்தினாள். ஒருநாள் உள்பாவாடை அணியாமல் வெளிகிளம்பினாள். இதைப் பார்த்த ஜெர்சிக்கு அதிர்ச்சியாகிவிட்டது.மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துச் சென்றான்.

எலிசெபத் கேட்டும், இவன் உள் செல்லவில்லை. ஒரு மணி நேரத்தின் பின் டாக்டர் அழைத்தார்.

என்னை மன்னிக்கவேண்டும். உமக்கு இந்த செய்தி அதிர்ச்சிதரும். எலிசெபத்துக்கு அல்சைமர் என்ற ஞாபகமறதி நோய் வந்துள்ளது.

எதற்கும் மூளை ஸ்கானுக்கு (Brain Scan) அனுப்புகிறேன்.

நான் ஓரளவு அனுமானித்தேன், ஆரம்பகாலமான படியால் வீட்டில் வைத்து கவனிக்கலாம். பின்பு நேர்சிங் கோமுக்கு அனுப்பவேண்டிவரும். நாள் ஒருகாலமும் எலிசெபத்தை நேர்சிங் கோமுக்கு அனுப்பமாட்டன்.

இவ் வருத்தத்திற்கு தொடர்ச்சியான கவனிப்பு தேவை. உம்மால் எப்படி கொடுக்க முடியும்?  நான் கடந்தவாரமே என்வேலையையும் விட்டுவிட்டேன். முழுநேரமும் எலிசெபத்தை கவனிக்க போகிறேன். மிக்க நல்லது. அடுத்தமுறை சந்திப்போம். சமையல் வேலை, துணிதோய்தல், மற்றும் வீடுபெருக்கல் போன்ற எல்லாவேலைகளையும்  ஜெர்சி செய்தான். ஆரம்பத்தில் கஷ்ட்டமில்லை. தனது வேலைகளை எலிசெபத்தால் செய்யமுடியும். இக்காலத்தில் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தென் இந்தியாவில் இருந்து பல சங்கீத வித்துவான்களை வரவழைத்து பலநகரங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினான். சேர்த்து வைத்திருந்த பணம் கரைந்தது, ஜெர்சி கவலைப்படவில்லை. காலங்கள் உருண்டோடின. காலதேவன் எலிசெபத்தின் உடலைமட்டுமல்லாமல் அவளது மூளையையும் தனது கொடுமைக்குஉள்ளாக்கினான். Cat Scan எனும் எஸ்ரேயில் எலிசெபத்தின் மூளையை பார்க்கும் போது மருத்துவ அறிவில்லாதவனுக்கும் அல்சைமர் என்ற கறையான் அரித்த அழகிய ஓவியத்தை அடையாளம் காணமுடியும். 

அன்று நாற்பது டிகிரியில் அனல்காற்று வீசியது. எர்கன்டிசன் வேலை செய்தாலும் எலிசெபத் வெப்பத்தால் கஸ்ரப்படுவது தெரிந்தது. மெதுவாக யன்னல் ஓரமாக வந்தவளை கதிரையில் இருத்திவிட்டான். ஈரத்துணியால் முதுகைத் துடைத்துவிட்டான். மெதுவாக சட்டையை தளர்த்திவிட்டு மார்பகத்தை துடைக்க முயற்சித்தபோது ஜெர்சியின் கைகளை பற்றிக் கொண்டாள். கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் கொட்டியது.

துடைப்பதை நிறுத்திவிட்டு எலிசெபத்தை பார்த்தான். அவள் கண்களில் இருந்து ஏதாவது புரிந்து கொள்ள முயற்சித்தான். அழகாக இருந்த தன் உடல் இப்படியாகிவிட்டதை நினைத்தாளா? புத்தகங்களையும் சினிமாக்களையும் விமர்சித்த தனது மூளை இப்படி செல்லரித்துவிட்டதே என கவலைப்படுகிறாளா? தன்னை திருமணம் செய்ததற்காக ஜெர்சி இப்படி கஸ்ரப்படுகிறானே என நினைத்து வருந்தினாளா? ஆமாம், பேசும் சக்தியை எலிசெபத் இழந்துவிட்டாள்.

பதிவுகள் ஜூலை 2002 இதழ் 31 


சொந்தக்காரன்
 

- வ.ந.கிரிதரன் -

பதிவுகள் சிறுகதைகள் - 2கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது.

ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர். அவரிடம் பயின்ற எத்தனை மாணவர்கள் 'டாக்டர்கள்', 'எஞ்சினியர்கள்' என்று வந்திருக்கின்றார்கள்..ஆனால் ..இங்கோ அவரோ ஏழு நாட்களும் வேலை செய்து கனடாவின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் நல்லதொரு 'இமிகிரண்ட்'. வார நாட்களில் தொழிலாளி; வார இறுதி நாட்களில் தொழிலாளியைக் கண்காணிக்கும், முதலாளிக்கு ஏவல் புரியும் ஒரு கடமை தவறாத பாதுகாவலன். சற்று முன்னர் அவரது மேலதிகாரி ஜோ குறோபட் தொலைபேசியில் கூறியது நினைவிற்கு வந்தது.

"சாம். இன்று உனக்கு நகர மண்டபப் பாதாள வாகன தரிப்பிடத்தில் தான் வேலை ( City hall Under ground parking lot).கடந்த ஒரு வாரமாக நிறைய முறைப்பாடுகள் ...பல வாகனங்களிலிருந்து பொருட்கள் பல களவாடப் பட்டிருக்கின்றன... பல 'வீதி மக்கள்' இரவு நேரங்களில் அங்கு படுத்துறங்குவதாகப் பலர் முறைப்பாடுகள் செய்திருக்கின்றார்கள்... எனக்கு உன்னில் நிறைய நம்பிக்கையுண்டு. கடமை தவறாத கண்டிப்பான பாதுகாவலன் நீ...யாரும் அங்கு அத்துமீறிப் பிரவேசிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது உனது பொறுப்பு.." 

'இந்தப் உறை பனிக்குளிரிற்குள் இந்தப் 'பார்கிங் லொட்டில்' போய் வேலை செய்யச் சொல்லுகிறானே'டென்று ஜோவின் மேல் எரிச்சல் கூடத் தோன்றியது. வழக்கமாக அவர் வேலை பார்ப்பது வாசனைத் திரவியங்கள் செய்யும் தொழிற்சாலையொன்றில் தான். சுகமான வேலை. 'ரிஷப்ஷ'னில் அமர்ந்திருந்து , தொலைபேசி அழைப்புகளிற்கு பதிலிறுப்பது, மணித்தியாலத்திற்கொருமுறை தொழிற்சாலையை, தொழிலாளர்களை ஒருமுறை சுற்றிப் பார்ப்பது....கட்டடத்திற்குள்ளேயே அதன் கணகணப்பில் சுகமாகக் காய்ந்து கொண்டிருக்கலாம். 'என்ன செய்வது ஆட வெளிக்கிட்டாச்சு. ஆடத்தானே வேண்டும்'

வார இறுதி நாட்களிலாவது ஓய்வெடுக்கலாமென்று பார்த்தால் ..முடிகிறதா? அவரது தர்மபத்தினி அகிலாண்டேஸ்வரி குழந்தைகளை அணைத்தபடி ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கப் பார்க்கப் பொறாமையாகவிருந்தது. அவள் கனடா வந்ததிலிருந்து, கடந்த பத்து வருடங்களாக அவர் அவளை வேலைக்குப் போவென்று வாய்திறந்து கூறியது கூடவில்லை. குழந்தைகளைப் பார்க்கிறாளே, வீட்டைக் கவனிக்கிறாளே... பாவமென்று அவள் மேல் பரிதாபம்தான் கொண்டிருந்தார். ஆனால் அவளென்னடாவென்றால்..."நீங்களும்தான் கனடா வந்து இத்தனை வருடமாச்சு..என்னத்தைச் சேர்த்து வைத்தீர்கள்...ஆளிற்காள் வீடு வாசலென்று இருக்கிறார்கள்...நீங்களோ..'வீடு' 'வீடு' என்று உங்கடை வீட்டாருக்கே எல்லாம் செய்து போட்டீங்கள்...என்னைத்தைக் கண்டனீங்கள்....உங்கடை வீட்டாரே இப்ப உங்களை மதிக்கினமா..." அகிலாண்டேஸ்வரி வாயைத் திறந்தால் அவ்வளவுதான்..அவளது தொணதொணப்பை அவரால் தாங்கவே முடியாது. "இஞ்சேரும்..சும்மா வாயைத் தொணதொணகாதேயும்..நீர் இங்கை வந்து இவ்வளவு வருஷமாய் உமக்கு நான் என்ன குறை வைத்தனான்.."என்று இவர் பதிலிற்குக் கேட்டு வைத்தாலோ ..அவ்வளவுதான்."என்னத்தைச் செய்து கிழித்தனீங்கள்... நீங்களில்லையென்றால் நான் 'வெல்வெயர்' எடுத்துச் சுகமாகவாவது இருந்திருப்பேனே...." என்று அவள் இளக்காரமாகப் பதிலிறுப்பதைத்தான் இவரால் தாங்கவே முடிவதில்லை. ஊரில் பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பிற்கான பௌதிக ஆசிரியராகவிருந்த அவர், இந்த வயதில் நாற்பது மணித்தியாலங்கள் முதுகு முறிய, முறியவென்று ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து உழைத்துக் கொண்டு வாடுகின்ற அவரது உழைப்பை எவ்வளவு துச்சமாக அவள் மதித்து வைத்திருக்கின்றாள். அதைத் தான் அவரால் தாங்க முடிவதில்லை. பொங்கிவரும் ஆத்திரத்தை வெகுவாகச் சிரமப்பட்டு அவர் அடக்கிக் கொள்வார். அப்பொழுதெல்லாம் எங்காவது கண்காணாத இடத்திற்கு ஓடிப்போய் விடலாமாவாவென்றிருக்கும். குழந்தைகளின் மேல் அவர் வைத்திருக்கின்ற பாசம் அவரைக் கட்டிப் போட்டு விடும். அவளது 'தொணதொண'ப்பிலிருந்து தப்புவதற்காகவே அவராகத் தேடிக்கொண்ட வார இறுதி வேலைதான் இந்தப் 'பாதுகாவலர்' உத்தியோகம்.

"அப்ப நான் போயிட்டு வாறன். கதவை உள்ளுக்குள்ளாலை பூட்டி வையும். என்ன.."என்று மனைவிக்குக் குரல் கொடுத்து விட்டு வெளியில் வந்த பொழுதுதான் சூழலின் யதார்த்தம் அவரிற்கு உறைத்தது. வீதியெல்லாம் மலை போல் உறை பனி குவிந்து கிடந்தது. வாகன நடமாட்டம், ஆள் நடமாட்டமின்றி உறை பனி பொழிந்து கொண்டிருக்கும் அந்த இரவு ஒரு வித மோனத்தில் ஆழ்ந்திருந்தது. ஒரு மாதிரி 'பஸ்' பிடித்து, பாதாள ரயிலேறி வேலைக்கு நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டார். கடமை தவறாத பாதுகாவலனல்லவா அவர். மற்றவரென்றால் காலநிலையினைச் சாட்டாக வைத்து ஆறுதலாக ஆடிப் பாடி வருவார்கள். இதனால் தான் ஜோ அவரை அனுப்பி வைத்திருந்தான். சோமசுந்தரத்தை நம்பி அனுப்பலாம் என்று அவனிற்குத் தெரியும்.

தமக்குரிய 'பூத்'தில் 'காஷியர்கள் தங்களது வேலையினை ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிற்கு முகமன் கூறிவிட்டுத் தன் அறையினுள் நுழைந்தார் சோமசுந்தரம். இரவு 'பார்க்கிங் லொட்'டினைத் துப்புரவு செய்யும் தொழிலாளியான போலந்து நாட்டுக் கிழவன் இவரிற்கு முகமன் கூறினான்.சோமசுந்தரம் இதற்கு முன்னரும் சில தடவைகள் இங்கு தற்காலிகமாக வேலை செய்திருக்கின்றார். அதனால் போலந்து நாட்டுக் கிழவனை அவரிற்குத் தெரியும். வாயில் நுழைய முடியாத நீண்டதொரு பெயர்.நல்லவன். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் இராணுவத்தில் கடமையாற்றியவன்.அவனது புதல்வர்களிருவரும் நகரில் 'வான்கூவரில்' மருத்துவர்களாகக் கடமை புரிகின்றார்கள். போர்க் காலக் கதைகள் பலவற்றினை அவன் கூறுவான். ஒருமுறை தரைக் கண்ணி வெடியில் சிக்கிப் பல நாட்கள் அவன் அவஸ்த்தைப் பட்டிருந்திருக்கின்றான். நிலத்திற்குக் கீழுள்ள நான்கு தளங்களையும் கூட்டித் துப்புரவு செய்வது தான் அவனது பிரதான கடமை. அவனுடன் கதைத்த படியே சோமசுந்தரத்தின் பொழுது போகும். கிழவனிற்கும் தனிமையில் கிடைத்த துணையாக இவர் விளங்கினார். அத்துடன் அவ்வப்போது யாராவது அத்து மீறி நுழைந்தால் சோமசுந்தரத்திற்குத் தகவல் தந்தும் அவன் உதவி புரிவான். "ஏ! நண்பனே! யாராவது எங்காவது படுத்திருப்பதைப் பார்த்தால் தகவல் தர மறந்திடாதே என்ன?" என்று அவனிற்கு ஒருமுறை நினைவூட்டி விட்டுத் தன் வேலையினைத் தொடர்ந்தார் சோமசுந்தரம். ஜோ வேலை தொடங்கியது அழைக்கக் கூறியிருந்தது நினவிற்கு வந்தது. அழைத்தார். ஜோ பெரிதும் மகிழ்ந்து போனான்."சாம்! கூடிய விரைவில் உனக்குச் சம்பள உயர்வு பெற்றுத்தர முயல்கின்றேன்." என்று உறுதியளித்தான். இவ்விதம் பல உறுதிகளை அவர் ஏற்கனவே ஜோவிடமிருந்து அவர் கேட்டிருக்கின்றார்.

ஒரு மாதிரி பாதி நேரத்தினைத் தாண்டியாகி விட்டது. ஒரு குறிப்பிடத்தக்க சம்பவங்களும் நடக்கவில்லை. மணிக்கொருமுறை நான்கு பாதாளத் தளங்களையும் சுற்றிப் பார்ப்பதும், இருபத்து நான்கு மணிநேர தமிழ் வானொலியில் நிகழ்சிகளைச் செவி மடுப்பதுமாகப் பொழுது போய்க் கொண்டிருந்தது. வெளியில் உறைபனி மழை இன்னும் பொழிந்து கொண்டேயிருந்தது. உறைபனி படர்ந்து கிடக்கும் வீதிகளைத் துப்புரவு செய்வதற்காகன கனரக வாகனங்கள் தங்கள் வேலையினைச் செய்யத் தொடங்கிவிட்டிருந்தன. முதியவர்களிற்கான நிகழ்ச்சியொன்றின் மறு ஒலிபரப்பு வானொலியில் சென்று கொண்டிருந்தது. ஒரு வயதான பெண்மணி தனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் ஒருவரிற்காக ஒரு பாடலைக் கேட்க விரும்பினார். அதற்காக அவர் கேட்க விரும்பிய பாடல்: "எங்கிருந்தாலும் வாழ்க.."  அதற்கு அந்நிகழ்ச்சியினை நடாத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர் "அம்மா! அந்தப் பாட்டின் முதல் வரி தவிர அதன் அர்த்தமே வேறாச்சே" என்று கூற பதிலிற்கு அந்த அம்மா "அதையே போடுங்கோவென். அந்தப் புண்ணியவான் எங்கிருந்தாலும் வாழ்க.."என்று மிகவும் அப்பாவித்தனமாகக் கூறியதைக் கேட்ட பொழுது சோமசுந்தரத்திற்குச் சிரிப்பாகவிருந்தது. 'வயது ஏற ஏற முதியவர்கள் குழந்தைகளாகித் தான் விடுகின்றார்கள்' என்று தனக்குள் ஒருமுறை நினைத்துக் கொள்ளவும் செய்தார்.

நேரம் மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. போலந்துக் கிழவன் ஓடி வந்தான்.

"என்ன விசயம்.... இப்படி ஓடி வருகிறாய்.."

கிழவன் ஓடி வந்ததில் சிறிது களைத்துப் போயிருந்தான். நின்று சிறிது நிதானித்தான்.

"நான்காவது தளத்திலை ஒருவன் படுத்திருப்பதைப் பார்த்தேன். என்னுடன் வந்தாயென்றால் காட்டுகிறேன்" என்றான். வானொலியினை நிறுத்தி விட்டு சோமசுந்தரம் அவனுடன் நான்காவது தளத்திற்குச் சாய்தளப் பாதை வழியாகக் கீழிறங்கினார். கிழக்கு மூலை வாசலிற்கண்மையில் அவன் படுத்திருந்தான். ஐம்பதை எட்டிய தோற்றம். கந்தல் உடை. அருகில் நெருங்கிய பொழுது 'வைன்' வாசனையுடன் கூடிய பல நாட்கள் குளிக்காத உடம்பு வாசனை, துவைக்காத அழுக்கான கந்தல் வாசனை என்பனவும் மூக்கைத் துளைத்தன.

அவன் ஒரு பூர்வீக இந்தியன். படுத்திருந்த அந்தப் பூர்வீக இந்தியனிற்கு சோமசுந்தரம் வருவது தெரிந்து தானிருந்தது. தெரியாதது போல் படுத்திருந்தான். இவரைப் போல் எததனையோ பாதுகாவலர்களை அவன் பார்த்திருப்பான் போலும். இதற்கிடையில் அவன் எழும்பாமலிருப்பதைக் கண்ட போலந்துக் கிழவன் அவன் தோள்களை உசுப்பி எழுப்பி விட்டான். ஏதோ முணுமுணுத்தபடி அந்தப் பூர்வீக இந்தியன் எழும்பினான். தூக்கத்தினைக் கெடுத்து விட்ட கோபம் முகத்தில் தெரிய அவன் இவர்களைப் பார்த்தான்.

"மகாராஜாவிற்கு வருகின்ற கோபத்தைப் பார்" என்று போலந்துக் கிழவன் கிண்டல் வேறு செய்தான். சோமசுந்தரத்திற்கு வெளியில் கொட்டிக் கொண்டிந்த உறை பனி மழை ஞாபகத்திற்கு வந்தது. பூர்வீக இந்தியன் மேல் சிறிது பரிதாபம் கூட வந்தது. இதற்கிடையில் போலந்துக் கிழவன் "இவர்களால் தான் சரியான தொந்தரவு. படுத்திருப்பார்கள். யாருமில்லையென்றால் வாகனங்களை உடைத்துத் திருடி விடுவார்கள்" என்றான். அவனது மேலதிகாரி ஜோ அவனிடம் யாரையும் அத்து மீறிப் பிரவேசித்து விடாதபடி பணித்திருந்ததும் நினவிற்கு வந்தது. இந்தப் பூர்வீக இந்தியனைப் பார்த்தால் அப்படியொன்றும் திருடுபவனாகத் தெரியவில்லை. இன்னும் சில மணித்தியாலங்களில் அவரது வேலை முடிந்து விடும். பொழுதும் புலர்ந்தும் விடும். ஆனால் அது மட்டும் இவனைத் தங்க அனுமதிக்க அவரிற்கு அனுமதியில்லை. போதாதற்கு இந்தப் போலந்துக் கிழவன் வேறு அருகில் நிற்கிறான். இவனிற்கு இந்தப் பூர்வீக இந்தியர்கள் மேல் அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் கிடையாது. குடிப்பதும் திருடுவதும் தான் இவர்களது வாழ்க்கை என்று கருதுபவன். வைத்தி வைத்து விடுவான். சோமசுந்தரம் இக்கட்டான நிலையிலிருந்தார். என்ன செய்யலாமென்று சிந்தித்துப் பார்த்தார். முதலில் போலந்துக் கிழவனை அங்கிருந்து அனுப்பினால் நல்லதென்று பட்டது. அவனிற்கு நன்றித் தான் இவனைக் கவனிப்பதாகக் கூறி அனுப்பி வைத்தார்.கிழவனிற்கு நகர விருப்பமேயில்லை. 'விடுப்பு' பார்ப்பதென்றால் யாரிற்குத் தான் ஆசையில்லை.

போலந்துக் கிழவன் சற்று அப்பால் நகர்ந்ததும் அந்தப் பூர்வீக இந்தியன் மீண்டும் படுப்பதற்கு ஆயத்தமானான். சோமசுந்தரம் சிறிது கண்டிப்பை முகத்தில் வைத்துக் கொண்டார்.

"எதற்காக இங்கு வந்து படுத்திருக்கிறாய். இங்கு படுக்க உனக்கு அனுமதியில்லையென்பது உனக்குத் தெரியுமல்லவா. விடுதிகளிலேதாவதொன்றில் போய்ப் படுப்பது தானே " என்றார்.

"எல்லா விடுதிகளும் நிறைந்து விட்டன. இன்னும் சிறிது நேரம் படுக்க அனுமதியளித்தால் போதும். நான் ஒரு பிரச்னையும் உனக்குத் தர மாட்டேன்" என்று அவன் பதிலிறுத்தான். சோமசுந்தரத்திற்கு அவனை இந்த வகையான காலநிலையில் வெளியேற்றுவதும் நல்லதாகப் படவில்லை. ஆனால் அவரது உத்தியோகத்தில் இவற்றையெல்லாம் பார்க்க முடியாது. கண்டிப்பான, கடமை தவறாத அதிகாரி அவர்.

 "பூமிப் பந்தின் இன்னுமொரு கோடியிலிருந்து நான், சொந்த மண்ணை விட்டுத் துரத்தப் பட்டு அகதியாக ஓடி வந்திருக்கின்றேன். நீயோ சொந்த மண்ணிலேயே அதனையிழந்த இந்த மண்ணின் சொந்தக்காரன்". சோமசுந்தரத்திற்கு உண்மையில் அந்தப் பூர்வீக இந்தியன் மேல் ஒருவித தோழமை கலந்த உணர்வு தோன்றியது.

"நானோ அன்னிய நாட்டிலொரு அகதி. இவனோ சொந்த நாட்டிலேயே அகதியாகிப் போனவன்."

ஒரு காலத்தில் இவனது இனத்தவர்கள் அமெரிக்கக் கண்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர்கள். இயற்கையினைப் பேணுவதில் அன்றே பெரிதும் ஆர்வம் காட்டியவர்கள். இவர்கள் சடங்குகள், தத்துவங்களெல்லாம் இயற்கைச் செல்வத்தைப் பேணுவதை முக்கிய நோக்காகக் கொண்டவை.

சோமசுந்தரம் கடமை தவறாத, கண்டிப்பான, நிறுவனத்திற்குப் பெயர் வாங்கித் தரும் பாதுகாவல் அதிகாரிதான். ஆனால் சோமசுந்தரம் மனிதாபிமானத்தை இழந்த பாதுகாவலனல்லவே.

"நான் உன் வார்த்தைகளை நம்புகின்றேன். ஆனால் விடிந்ததும் போய் விட வேண்டும்" என்று கூறி விட்டுத் திரும்பி நடந்தார் சோமசுந்தரம். முதலாவது தளத்தினைத் துப்புரவு செய்து கொண்டிருந்த போலந்துக் கிழவன் சோமசுந்தரத்தைக் கண்டதும் கேட்டான்: " என்ன அவனைத் துரத்தி விட்டாயா?". 

"ஒரு மாதிரி அவனைத் துரத்தி விட்டேன். துரத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது" என்று பதிலிறுத்தார் சோமசுந்தரம்.

"இந்தக் கொட்டும் உறை பனி மழையிக்குள் அவன் எங்கு போவானோ? பாவம்" என்று இரக்கப் பட்டான் போலந்துக் கிழவன். "பாவம் புண்ணியம் பார்த்தால் இந்த வேலை செய்ய முடியாதே" என்றவாறு சோமசுந்தரம் கடமையில் மூழ்கியவாறு மேலே நடந்தார்.
 
- நன்றி 'கணையாழி' (கணையாழி டிசம்பர் 2000 'கனடா சிறப்பிதழிலிருந்து..-)

பதிவுகள் தை 2000   இதழ்-13   


 

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்!

- பாரதி (ஜேர்மனி) -

         எந்தன் மனையும் மண்ணும் மகவும்
         எல்லாம் தொலைத்து ஏதிலியாகி
         எந்தக் காட்டில் எரிந்தபோதும் ....
         அழிந்து போமோ? அத்தனை துயரமும்.
         அனலில் பொங்கும் உலையாய் மனது.
         அருவி நீரிலும் அணையா நெருப்பாய்.
         மரணம் என்பது உடலுக்கு மட்டும்.
         என் மனசும் உணர்வும் மண்ணகம் எங்குமாய். 
 
பதிவுகள் சிறுகதைகள் - 2அம்மா அம்மா என் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டபடி காதோரம் கிசுகிசுப்பாய். மீண்டும் அம்மா அம்மா என்ற அழைப்பு. இது இது என் சின்னமகளின் செல்லச் சிணுங்கல் அல்லவா? என் செல்வமே நான் அழைப்பது எனக்கே கேட்கவில்லையே? ஏன்? ஏன்? என் குரல் எழும்பவில்லை. என் கண்மணியைப் பார்க்கும் துடிப்புடன் கண்களை விழித்துப்பார்க்க முனைகிறேன். ஐயோ கடவுளே இதென்ன கொடுமை. ஏன் என் கண்கள் து¡க்கத்திலேயே இருக்கின்றன.என் செல்வமே உன் குரல் மட்டும் என்னுள் ஒலித்தபடியே. என்னால் உன்னைக் கண்குளிரப்பார்க்க முடியவில்லையே என் தங்கமே. இதயம் துடிக்க அழுகிறேன். ஓரு வாரமாக படுத்த படுக்கைதான். சாப்பாடு கூடஇல்லை. கண்களிலிருந்து கண்ணீர் பெருக உதடுகள் மட்டும் அடிக்கடி அசைகின்றன.

முத்தவள் சுவேதா யாரிடமோ என்னைப்பற்றிச் சொல்கிறாள். ம் ...மனசுக்குள் என்னென்ன கவலைகளோ? எத்தனை நினைவுகளோ? இன்னொரு பரிச்சயமில்லாத குரல் மெதுவாகச் சொல்வது கூட எனக்குக் கேட்கிறது. நான் கதைப்பது மட்டும் ஏன் இவர்களுக்குக் கேட்கவில்லை. பிள்ளைகளைப்பெற்று வளர்த்து வாழ்ந்த வீட்டிலேயே கண்முடவேண்டும் என் ஆறு பிள்ளைகளும் மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன் அருகிலிருந்து எல்லாக்காரியங்களையும் செய்து வழியனுப்ப வேண்டும்.என் ஊர் சுடுகாட்டில்தான் என்னுடல் வேகவேண்டும் என்று அம்மா அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பா. நாட்டில் யுத்தமேகம் சூழ்ந்தவுடன் சுமந்து பெற்றவர்களை மறந்து வளர்ந்த மண்ணைத் துறந்து தங்கள் உயிரைக் காப்பதற்காக என்னைத்தவிர எல்லோரும் ஓடிவிட்டார்கள் அன்ரி, நானும் என்னால் முடிந்தவரை அம்மாவை வசதியாக வைத்திருந்தாலும் தான் வாழ்ந்த ஊரை தன் வீட்டைப்பிரிந்த ஏக்கம் கொள்ளிபோட ஆண்பிள்ளைகள் அருகில் இல்லாத கவலை. எல்லாவற்றையும் விட கடைக்குட்டி நிவேதா என்றால் அம்மாவுக்கு உயிர். அவளது திருமணத்தைக் காணவில்லை. மருமகனைத் தெரியாது. பேரப்பிள்ளைகளையாவது ஒரே ஒரு முறை பார்த்துவிடவேண்டும் என்று ஒருநாளைக்கு ஆயிரம் தடவையாவது சொல்லிக் கொண்டே இருப்பா. எல்லாக்கவலைகளும் சேர்ந்து அம்மாவைப் படுக்கையில் விழுத்திவிட்டது. போதாக்குறைக்கு இந்த வன்னிவெய்யிலும் நுளம்பும் வேறு அடிக்கடி காய்ச்சல் கொடுக்க வாடிப்போய்விட்டா. அன்ரி கொஞ்சநாளாக அம்மாவுக்கு மனதில் பயம். சுவேதா என்ரை பிள்ளைகளைக்காணாமலே நான் சாகப்போகிறேன் போலிருக்கு. அப்பாவை எ¡¢த்த இடத்தில் என் உடலும் எரியவேண்டும் என்ற என் நினைவு கனவாகப்போய்விடுமோ? என்றெல்லாம் கவலைப்பட்டபடி சொல்வா அன்ரி. முத்தவள் சுவேதா சொல்வதையெல்லாம் கேட்டபடி படுத்திருக்கிறேன். என் இதயம் இரத்தக் கண்ணீர் வடித்தபடி துடிக்கிறது. 
 
மெல்ல மெல்ல பேச்சுக்குரல்கள் தேய்ந்து அடங்க மனசு மட்டும் விழித்தபடி மெதுவாக என்னை நிதானமாக்கிட முனைகின்றேன். அப்போ.. அப்போ.. கொஞ்ச நேரத்துக்கு முன் என்னைக் கட்டியணைத்து வாஞ்சையுடன் அம்மா என அழைத்தது..என் நிவேதாக்குட்டி இல்லையா? அப்போ நிவேதா நீ சொன்னதெல்லாம் பொய்யான வார்த்தைகளா? இந்த அம்மாவை ஏமாற்ற எப்படியம்மா உனக்கு மனம் துணிந்தது?.நினைவு நெருப்பு தீக்கங்குகளால் மறுபடி தீண்டிப்பார்க்கப்படும் வேதனை எனக்குள்.
 
எனது உள்ளமெல்லாம் பார்த்துப்பார்த்து நாங்கள் கட்டிய வீடுவளவையும் பிள்ளைகளையும் சுற்றிச்சுற்றி வருகிறது. ஐந்தாவது மகனும் பிறந்து இவன்தான் கடைசிப்பிள்ளை என்று நினைத்திருந்த நேரத்தில் நீண்ட இடைவெளியின்பின் பிறந்தவள்தான் நிவேதா. முத்தவர்கள் ஐவரும் கல்யாணமாகி வேலை என்று வேறிடங்களில் வாழத்தொடங்கிய நேரம்அது. கணவரும் வியாபாரநிமித்தம் வெளியிடங்கள் சென்றுவிட நானும் நிவேதாவும் மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் நாட்கள்தான் அதிகம். சகோதரர் களுக்கும் அவளுக்கும் உள்ள வயது இடைவெளி அதிகம் என்பதாலோ என்னவோ அவர்களுடன் மனம்விட்டுப்பழக அவளால் முடியவில்லை. என்னோடுமட்டும் அருமையான சிநேகிதியாய்ப் பழகும் அவளது இயல்பு எனக்கு நிறையப்பிடித்திருந்தது.
 
வீ£ட்டின் பின்புறம் உள்ள பெரிய படிக்கட்டில் இருந்து கிணற்றடியில் குலைகளைச் சுமந்தபடி நிமிர்ந்து நின்றிருக்கும் தென்னை மரங்களை ரசித்தபடி மணிக்கணக்காகத் தனித்திருப்பாள். அந்தி சாயும் நேரம் குங்குமம் பூசிய வானத்தைப் பிரமிப்புடன் பார்த்திருப்பாள்.

தென்னங்கீற்றூடாக வானத்தையும் வாரியிறைத்த விண்மீன்களையும் பார்ப்பது தனியழகு. இந்த அற்புதமான காட்சியை விட்டுவிட்டு அடுப்படியில் என்ன பண்ணுகிறீங்க? என்றபடி என்னை இழுத்துச்சென்று படிக்கட்டில் இருத்திவிடுவாள். நிலவொளியில் மணல்கும்பியில் என் மடியில் தலைவைத்துப்படுத்தபடி சீதையையும் சாவித்திரியையும் மாதவியையும் கேட்டு ரசிப்பாள். ம் இவற்றையெல்லாம் விட்டுப்பிரிந்து எவ்வளவு துயருற்றிருப்பாள் என் குழந்தை. பாயில உறங்கிப் பழக்கமில்லை நிவேதாவுக்கு. சின்ன வயசிலிருந்தே கட்டிலில்தான் து¡ங்குவாள். ஆனால் வெய்யில்கால மாலை நேரங்களில் புழுக்கம் தணிய காற்றோட்டமாகப் பின்கதவைத் திறந்துவிட்டு சிமென்ற் தரையில் என் சேலை ஒன்றை விரித்து அதன்மேல் படுத்திருப்பாள். பாய்போட்டுப்படு என்றால் இந்தச் சேலையில் வீசும் அம்மாவின் அற்புதமான சுகந்த வாசனை பாயில் வருமா? தலையை ஆட்டியபடி புத்தகத்தில் ஆழ்ந்துவிடும் என் மகளை தாய்மையுடன் பார்ப்பேன். என் மனம் அந்தக் கணங்களில் புல்லா¢த்துப் பூரிக்கும். தாயைமட்டுமல்ல தாய்மண்ணையும்கூட  மாறாக்காதலுடன் நேசித்த என் மகளை அப்போது ஏன் புரிந்துகொள்ளாமல் போனேனோ?
 
அம்மா நான் உங்களையும் அப்பாவையும் மட்டுமல்ல. இந்த வீட்டை என் கிராமத்தை எல்லாம் பிரிந்து இருக்கமாட்டேன் அம்மா. அண்ணாவை அக்காவை எல்லாரும் கல்யாணம் செய்தவுடன் எல்லாவற்றையும் மறந்துபோன மாதிரி என்னால் போகமுடியாது. எனக்குக் கல்யாணமே வேண்டாம். நான் உங்களுடனேதான் இருப்பேன். உங்கள் தலைசாயும்போதும் என் மடிதானம்மா தாங்க வேண்டும். ஊரில் யாராவது இறந்ததுபற்றிக் கதைக்கும்போதெல்லாம் இப்படிச்சொல்வாள்.
 
நிவேதா படிப்பை முடித்து கணக்காளராக அலுவலகம் ஒன்றில் வேலைபார்க்கத்தொடங்கிய நேரம் அது. அப்போதுதான் மண்மீட்புப்போராட்டத்தில் இளைஞர் கூட்டமும் வெடித்துப்பொங்கி எழுந்த காலம். ஆங்காங்கே புரட்சிப்பொறிகள் வெடித்து எழ எழ அந்நியரால் அடக்குமுறையும் அராஐகமும் அவிழ்த்துவிடப்பட நாளாந்த வாழ்வே போராட்டமாய்ப்போன காலம்.   இயல்பிலேயே மண் மீது மாறாத பாசம் கொண்ட நிவேதா கொடுமைகள் கண்டு கொதித்தாள். அரசின் அட்டுழியம் கண்டு ஆயதம் எடுத்துப் போராட முனைந்த பிள்ளைகளுக்கு சின்னச்சின்ன உதவிகள் செய்ய ஆரம்பித்து நீண்ட நேரங்களை அதற்காகவே ஒதுக்கத்தொடங்கியபோது ... எனக்குப்பயம் தோன்ற ஆரம்பித்தது. என் மகளைப்பற்றி மட்டும் கவலைப்பட்ட எனக்கு அஸ்தமனத்தில் இருக்கும் நேரம்தான் மண்ணின் அருமை எழுவது வேடிக்கையாக இருக்கிறது. இதைத்தான் சுடலைஞானம் என்பார்களோ?
 
அம்மாவைச் சுற்றியே தன் உலகத்தை அமைத்துக்கொண்டு வாழ்ந்த என் மகள் ஆயுதத்தை அணைக்கப்போகிறாளோ? என்ற பயத்தில் உறவினர் வீட்டுத்திருமணத்துக்கு கொழும்புக்குச்சென்று வருவோமென அவளை அழைத்துச்சென்று விமானத்தில் ஏற்றியபோது அவள் வடித்த கண்ணீரை இப்போதும் நினைக்கிறேன். என் நெஞ்சுக் குழியிலிருந்து விம்மல் வெடித்தெழுகிறது. 
 
அம்மா நிவேதா உன் விருப்பத்துக்கு மாறாக அந்நிய மண்ணுக்கு அனுப்பிய கோபத்தில் எனக்குக் கடிதம் போடாமல் ஒரு வருடமாக மெளனமாய் இருந்து என்னை அழவைத்ததைக்குட நான் மறந்துவிட்டேன். ஆனால் .. இப்போ...  மகளே...  நீ அடிக்கடி சொல்வாயே.. அம்மா உங்களுக்கு முன்பு அப்பா இறந்தால் அவரை எரித்த இடத்திலேயே உங்களையும் அடக்கம் செய்வேன்.ஆனால் நீங்கள் சாகும்போது உங்கள் வைரத்தோடும் முக்குத்தியும் எனக்குத் தான் தரவேண்டும் என்பாயே. உனக்குத் தருவதற்காக காத்திருக்கிறேன் மகளே.. வாம்மா..வந்து பெற்றுக்கொள்ள மாட்டாயா? 
 
மகளே.. இந்த வன்னியில் வாடகை வீட்டில் நான் செத்தால் ஒருசொட்டுக்கண்ணீர் சிந்தக்கூட யாருமில்லை அம்மா.. மூத்தமகள் இருக்கிறாளே என்று நினைக்கிறாயா? உன் அக்கா சுவேதா யாழ்ப்பாணத்திலிருந்து ஊர் ஊராக வீடு மாறிமாறி அலுத்துவிட்டதில் நானும் அவளுக்கு ஒரு சுமையாகப் போய்விட்டேன் என்பதால் இந்த வயதான அம்மா செத்திட்டேன் என்றால் அவளுக்கு அழுகை வராது.

ஆறுதல் பெருமுச்சுத்தான் வரும். என்னசெய்வது? நாட்டு நிலைமை மனிதர்களை மாற்றிவிட்டதம்மா. தொ¢யாத முகங்கள் பா¢ச்சயமில்லாத மனிதர்கள். எந்தக் காட்டில் என்னை எரிக்கப் போகிறார்களோ? எந்தக் கடலில் என்னைக் கரைக்கப் போகிறார்களோ?.

எனக்குப் பயமாக இருக்கிறது மகளே. இப்போது இந்தக் கணங்களில் ..நீ.. என்னை வந்து பார்க்காவிட்டால் .. இனி எப்போதுமே பார்க்க முடியாதம்மா. என்னுடல் எரிந்த இடத்தைக்காட்டக்குட எந்தத்தெரிந்தமுகமும் இருக்காமல் ஒருநாளைக்கு நீ தேடித் தேடி அழுவாய் என்று நினைக்கும்போது .. உனக்காக வேதனைப்படுகிறேன் மகளே.மரண தண்டனை நிறைவேற்றப்படும் சமயத்தில் குற்றவாளியைக்கூட கேட்பார்கள் உன் கடைசி ஆசை என்ன? என்று. எனக்கும் ஓர் ஆசை. பிறந்தமண்ணைவிட்டு என்னைப் பலவந்தமாகப் பிரித்து அனுப்பிய குற்ற உணர்வுடன்தான் உன் அப்பாவும் இறந்தார். அப்பா எரிந்த இடத்தில் என்னையும் எரிக்கவேண்டும். மகளே..உன் விழியிலிருந்து வழிந்து என் முகத்தில் படப்போகும் துளிநீருக்காகத் துடிக்கிறேன் நாங்கள் எரிந்த இடத்தில் உன் பாதம் பட்டால் ராமர் பாதம்பட்டு சாபவிமோசனம் பெற்ற அகலிகை போல எங்கள் மனம் நிறைந்து விடும்.மகளே.. உதிரத்தையே உணவாக்கித் தந்த எனக்கு ஒரு மிடறு நீராவது தந்து என் தாகங்களைத் தீர்க்க வருவாயா? மகளே. ஓங்கிக்குரலெடுத்து அழுகின்றேன். என் குரல் இந்த மனிதர்களுக்கு இப்போதும் கேட்கவில்லைப் போலும். என் வாயை மெதுவாக மூடுகிறார்களே. மகளே. மண்ணே மதியே காற்றே. உங்களுக்குக் கூடவா என் குரல் கேட்கவில்லை?

பதிவுகள் டிஸம்பர் 2003 இதழ் 48

 


 

பெண் ஒன்று கண்டேன்

- குரு அரவிந்தன் -

பதிவுகள் சிறுகதைகள் - 2"பிடிச்சிருக்கா?"

அவன் அந்தப் புகைப்படத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். கல்யாணத்தரகர் கொண்டு வந்த ஆல்பத்தைப் பார்த்து அலுத்துப் போயிருந்த அவனுக்கு ஒரு கவரில் அவர் பிரத்தியேகமாய் எடுத்து வைத்துக் கொண்டு வந்து காட்டிய அந்தப் படங்களைப் பார்த்ததும் பிரமித்துப் போய் விட்டான். இப்படி ஒரு அழகா? முழு உருவமும் தெரியும் அந்த ஆரேஞ்ச் நிறத்தில் சேலை உடுத்தி நெற்றியில் சின்னதாக ஒரு கறுப்புப் பொட்டு வைத்திருந்தாள். அன்றலர்ந்த தாமரை போன்ற சிரித்த முகமும், மல்லிகைச் சரம் சூடிய நீண்ட கூந்தலும், கண்களிலே ஒரு வித சாந்தமும் எல்லாமே அவனுக்குப் பிடித்துப் போயிருந்தன. இன்னொரு குளோசப் படத்தில் சூரிதாரில் தலையை ஒரு பக்கம் நளினமாய் சாய்த்தபடி வெட்கப்பட்டுச் சிரிப்பது போலச் சிரித்துக் கொண்டிருந்தாள். இரட்டைப் பின்னலில் ஒன்றை முன்னால் சரிய விட்டு சுருட்டை முடியில் அவள் செருகியிருந்த ஒற்றை ரோஜாவும் அவன் மனதை கொள்ளை கொண்டன. முகத்திலே தெரிந்த அடக்கமும் அமைதியும் அவன் இதுநாள்வரை காத்திருந்தது இவளுக்காகத் தான் என்று சொல்லாமல் சொல்லுவது போல இருந்தது.

"தம்பிக்குப் பிடிக்கும் என்று தெரிந்து தான் இந்தப் படத்தை வேறு ஒருவரிற்கும் காட்டாமல் கொண்டு வந்திருக்கிறேன். பார்ப்பதற்கு நல்ல குடும்பப் பாங்கான பெண்ணாய்த் தெரிகின்றா. அது மட்டுமல்ல நல்ல ஜோடிப் பொருத்தமாயும் இருக்கிறது."

சந்தர்ப்பம் பார்த்துத் தரகர் அவனது காதில் போட்டு வைத்தார்.

"என்னண்ணா படத்தைப் பார்த்து அப்படிப் பிரமித்துப் போய் நிற்கிறாய்? " தங்கை சாந்தி அருகே வந்து அவனது கைகளில் இருந்த படத்தைப் பறித்துக் கொண்டு தாயாரிடம் ஓடினாள்.

"வாவ்...!" இப்படியும் ஒரு அழகா? நிச்சயமாய் அண்ணாவிற்கு ஏற்ற ஜோடிதான். அம்மா அண்ணியைப் பாருங்களேன்." அவள் சமையலறையில் காபி தயாரித்துக் கொண்டிருந்த தாயாரிடம் ஓடிப் போய்ப் படத்தைக் காட்டினாள்.

"நல்ல நீண்ட சுருண்ட கறுப்பு முடியம்மா, பொட்டு வைச்சு பூ வைச்சு மகாலட்சுமி மாதிரி இருக்கிறா...த வே ஷீ றெஸ்..! எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு! உங்களுக்கு பிடிச்சிருக்காம்மா?"

"பிடிச்சிருக்கு" என்று தலையசைத்த தாயார் "எங்க குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாய்த் தெரிகின்றா, எதற்கும் முதலில் அண்ணாவிற்குப் பிடிக்கணுமே!"

"பிடிக்கணுமா? அங்கே வந்து அண்ணாவின் முகத்தைப் பாருங்களேன்! படத்தைப் பார்த்து என்னமாய்ப் பிரமிச்சுப் போய் இருக்கிறான்!"

அவள் மீண்டும் துள்ளிக் கொண்டு அண்ணனிடம் ஓடினாள்.

"என்ன அண்ணா மயங்கிப் போனியா? காபி கொண்டு வரட்டுமா?"

"ஏய்! நீ பேசாமல் இருக்க மாட்டியா?"

"அண்ணா எங்கள் எல்லோரிற்கும் பிடிச்சிருக்கு! அண்ணி ரொம்ப அழகாய் இருக்கிறா. வேண்டாம் என்று மட்டும் சொல்லிடாதே!"

"அண்ணியா?"

"ஆமா! நாங்க முடிவெடுத்திட்டோம்! இவர்தான் இந்த வீட்டிற்கு மருமகள். வலது காலை எடுத்து வைத்து வரப் போகிறா?"

"நீ சும்மா இருக்க மாட்டியா. எதுக்கும் அப்பாவைக் கேட்ட்டுத்தான் சம்மதம் சொல்லணும்!"

அப்பா வேலையால் வந்து டிபன் சாப்பிடுக் களைப்புத் தீர சாய்மனைக் கதிரையில் சரிந்து பத்திரிகை படித்தார். அம்மாதான் அருகே வந்து தரகர் கொண்டு வந்ததாகச் சொல்லி அந்தப் படங்களைக் காட்டினார்.

"எங்க குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாய்த் தான் தெரிகின்றா. எதற்கும் நீங்களும் பார்த்து பிடிச்சிருக்கா சொல்லுங்கோ."

அவர் படித்துக் கொண்டிருந்த செய்தித் தாளை மடித்து மடியில் வைத்துவிட்டு அந்தப் புகைப்படத்தை வாங்கி நிதானமாக அவதானித்துப் பார்த்தார்.

"புகைப்படத்தைப் பார்த்து குணத்தைச் சொல்ல முடியாதம்மா! மகனுக்குப் பிடிச்சிருக்கா?"

"அவனுக்கு மட்டுமென்ன சாந்திக்கும் பிடிச்சுப் போச்சு. படத்தைப் பார்த்ததும் அண்ணி என்று உறவு சொல்லுறாள்."

"அவளுக்கென்ன சொல்லுவாள், சின்னப் பெண்ணு, அவனுக்குப் பிடிக்கணுமே! போன தடவை கூட ஒரு போட்டோவை பார்த்து இதென்ன அழுமூஞ்சி இதுகளுக்குச் சிரிக்கவே தெரியாதா? என்று கொமண்ட் அடிச்சானே மறந்து போனியா?"

"தெரியும் தரகர் காட்டின படங்களைப் பார்த்து 'இவை என்ன ·பாஷன் ஷோவா காட்டுகினம்? இவையும் இவையின்ற உடுப்பும் தலைவெட்டும்! ரேக்கி என்று எல்லாம் நக்கலடிச்சவன் தான். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்திட்டு ஒன்றும் சொல்லவில்லை!"

"ரேக்கியோ? அப்படியென்றால் என்ன?"

"வான்கோழியாம்! இந்த நாட்டிலை நிறைய இருக்குத்தானே. அதைத்தான் சொல்லுறானாக்கும்"

"அதற்கும் இதற்கும் என்னா தொடர்பு?"
 

"எனக்கென்ன தெரியும்? கேட்டால் கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி என்றுப் பாட்டுப் பாடுறான்"

"இந்த வயதிலை இவை இப்படித்தான் பாடுவினம். அவையவைக்கு என்று வரும்போது தான் தெரியும். கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிரம்மா. எதற்கும் சம்மதம் சொல்லுமுன் ஒரு தடவை என்றாலும் பெண்ணை நேரே பார்த்து நாங்கள் பேசுவது நல்லது என்று நினைக்கிறேன்!"

"பெண்ணோட மாமா முரை உறவினர் இங்கே இருக்கிறார்கள். பெண்ணை அங்கே சென்று பார்க்கலாமாம். இல்லாவிட்டால் விசிட் ரேஸ் விஸாவில் பெண்ணை இங்கே வரவழைக்கலாமாம். உங்களுக்கு எது விருப்பமோ அப்படியே செய்யலாம் என்று சொன்னார்கள்!"

"அப்படியென்றால் நாங்கள் எல்லோரும் பெண் பார்க்க அங்கே போவதை விட பெண் இங்கே வருவதுதான் நல்லது. எல்லாம் நல்லப்டியாய் நடந்தால் நிச்சதார்த்தத்தையும் இங்கேயே வைச்சிடலாம்."

அவர்களது விருப்பம் கல்யாணத் தரகருக்கும் உறவினருக்கும் தெரிவிக்கப் பட்டு சுரேனின் போட்டோ ஒன்றும் அங்கே அனுப்பி வைக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து மனப்பெண் இந்த நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப் பட்டன. அன்று இரவு விமானத்தில் மணப்பெண் வருவதாக இருந்தது. சுரேஷ் மட்டும் தனது நண்பனோடு விமான நிலையத்திற்குச் சென்றிருந்தான். நண்பனின் ஆலோசனைப்படி அவளுக்குக் கொடுப்பதற்காக ரோஜாமலர்க் கொத்து ஒன்றும் வாங்கி வைத்திருந்தான்.

அவள் சுங்கப் பரிசோதனை முடிந்து வெளியே வந்ததும் திடீரென அவள் முன்னால் சென்று மலர்க் கொத்தைக் கொடுத்து அவளை ஆச்சரியத்தில் மூழ்கடித்து, அவள் வெட்கப்படும்போது அதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். இந்த நாட்டுப் பெண்களுக்கு வெட்கப்படவே தெரியாது என்பது அவன் நினைப்பு.

புகைப்படத்தில் பார்த்தௌ போலவே இருப்பாளா? இல்லை நேரிலே பார்க்கும் போது இன்னும் அழகாய் இருப்பாளா? என்ன நிற சேலையில் வருவாள்? மல்லிகைச் சரம் சூடியிருப்பாளா அல்லது ஒற்றை ரோஜாவைத் தலையில் செருகியிருப்பாளா? ஒருவேளை சுடிதாரிலும் வரலாம். அந்த அழகுத் தேவதை எப்படி வந்தாலென்ன? எந்த நிறத்தில் எதை அணிந்தாலும் அவளுக்கு அழகாய்த் தான் இருக்கும் என்று கற்பனையில் கனவு கண்டு கொண்டு அவள் வருகைக்காக லொபியில் காத்திருந்தான்.

மொனிட்டரில் விமானம் சரியாக 7.05க்கு வந்து விட்டதாகத் தெரிந்தது. ஒவ்வொருவராக வெளியே வந்து கொண்டிருந்தனர். இளம் ஜோடிகள், வயது போன தம்பதிகள், இளைஞர்கள் என்று பலவிதமானவர்களும் வெளியே வந்து கொண்டிருந்தனர். பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போனதுதான் மிச்சம். இவர்கள் எதிர்பார்த்த மணப்பெண் வரவேயில்லை. என்ன நடந்திருக்கும் என்று குழம்ப்பிப் போனவர்கள் கடைசியாக வெளியே வந்த வயோதிபத் தம்பதிகளீடம் சென்று விசாரித்தனர்.

"மன்னிக்கணும்! உங்களோடு விமானத்தில் வந்த எல்லோரும் போய் விட்டாங்களா? அல்லது யாராவது உள்ளே நிற்கிறாங்களா?"

"இல்லையே எல்லோரும் போய் விட்டாங்க. எங்க சூட்கேஸ் எங்கேயோ மறுபட்டுப் போச்சு. அதனாலேதான் நாங்க தாமதிக்க வேண்டி வந்தது. வேறுயாரும் உள்ளெ இருப்பதாய் தெரியவில்லை! நாங்கதான் கடையாக வந்தோம்." என்றனர்.

அவர்களுக்கு அருகே யாரையோ தேடிக்கொண்டு நின்ற ஒரு பெண் சட்டென்று இவர்களைத் திரும்பிப் பார்த்தாள். இவனது நண்பன் முதுகிலே இடித்தான்.

"பாரடா அவளின்றை தலை வெட்டையும் உடுப்பையும்! இங்கே நின்றமென்றால் இவள் எங்களை லிப்ட் கேட்டாலும் கேட்பாள் போல் இருக்கு. ஏனிந்த வம்பு? வா நாங்கள் மெல்ல மாறுவம்."

சொல்லிக் கொண்டே நண்பன் மெல்ல நகர்ந்தான்.

"எக்ஸ்யூஸ் மீ"

சுரேஷ் நிமிர்ந்து பார்த்தான். அந்தப் பெண் அருகே வந்தாள். நண்பன் சொன்னது சரிதான். ஏதோ உதவி கேட்கப் போகிறாள்!

"நீ..ங்க சுரேஷ் தானே?"

இவளுக்கு எப்படி என்னுடைய பெயர் தெரியும்? சுரேஷ் திகைத்துப் போய் அவளைப் பார்த்தான்.

"ஹாY! என்னைத் தெரியலையா? நான் தான் நிவேதா!"

அவள் ஆவலோடு அவனருகே நெருங்கி வர அவன் மருண்டு போய் ஓரடி பின்னால் நகர்ந்தான்.

எந்..த நிவே.....தா?

அவனுக்கு சட்டென்று ஏதோ புரிந்தது!

என்ன இது படத்திலே வேறு ஒரு பெண்ணைக் காட்டித் தரகர் என்னை ஏமாற்றி விட்டாரோ? எதிரே தரகர் நின்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

நீண்ட கூந்தலில் பூ வைத்த , பொட்டுப் போட்ட, சேலையில் சுடிதாரில் பார்த்த அந்த அழகுத் தேவதை எங்கே, ஒட்ட வெட்டிய தலைமுடியும் லூஸ்டாப்ஸ¤ம், டை பாண்டும் போட்ட இவள் எங்கே?

அவன் ஒருகணம் தயங்கினான். கொண்டு வந்த மலர்க் கொத்தை அனிச்சையாக பின்னால் மறைத்தான்.

"என்ன என்னைப் பார்த்ததும் திகைத்துப் போயிட்டீங்களா> எப்படி இருக்கேன்? மொட்டாய் இருக்கா? வெஸ்ரேணுக்குப் பொருத்தமாய் இருக்கிறேனா?"

"நீங்க..! " அவன் வார்த்தைகளை மென்று விழுங்கினான். 

"எல்லாம் இங்கே இருக்கிற ஆண்டியின் அட்வைஸ்தான். ஹெயர் கூட டை பண்ணிக் கொண்டு வரச் சொன்னாங்க. நேரம் கிடைக்கலே. அதை இங்கே தான் செய்யணும், எப்படி உங்களுக்குப் பிடிச்சிருக்கா?" விரல்களால் தலையைக் கோதி ஒரு மொடலிங் செய்யும் பெண்ணைப் போல் 

·போஸ் கொடுத்தபடி வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

அவனது கனவுத் தேவதையைப் பார்த்துச் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் அவன் அதிர்ந்து போய் நின்றான். இந்த நாட்டு மண்ணுக்கு அப்படி ஒரு மகிமை உண்டு! கானமயிலைக் கூட வான் கோழியாக்கி விடும்.

பதிவுகள் ஆகஸ்ட் 2001   இதழ்-20

 


 

தீப்பூக்கும் வாகை! 
 
- திலகபாமா (சிவகாசி) -

பதிவுகள் சிறுகதைகள் - 2குமார் தின்று எரிந்த அந்த கொட்டை  குப்பைத் தொட்டியில் விழுந்து சப்தமெழுப்பி  ஓய்ந்தது. எச்சங்களை தனக்குள் எரிந்து கொண்டிருக்கும் என் வீட்டாரிடமும்  சப்தமெழுப்பி,  சப்தமெழுப்பி ஓய்ந்து போனதை நினைத்துக் கொண்டபடி சாப்பிட்டு முடிந்தவைகளை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள் தீபா. மேசை சுத்தமாகிக் கொண்டிருந்தது  மீண்டும் அழுக்காகப் படவென்று மேல் வீட்டின் தளத்தில் நடந்து கொண்டிருந்த வேலைகள், கட்டிடம் பிரசவ வலிகளாய் சப்தமெழுப்பி கொண்டிருக்க, சில   பேரால்  எதையும் லட்சியம் செய்யாது என் மாமியை போல் தூங்க முடிவதை வியந்தபடி செங்களில் விழுந்த ஒவ்வொரு அடியும் , தட்டலும் அதிர்வலைகள் என்னுள் தோற்றுவித்துக்  கொண்டிருக்க, பூச்சு வேலைகளின் தீவிரம்,எதையும் பூசி விட முடியாது அவளுள்ளும் உறைந்து கிடைந்த  நிகழ்ச்சிகள் வந்து போயின.

கண் மூடிக் கிடந்த சூரியன்,மேகம் தன் கனத்த மனத்தையெல்லாம், துளிகளாக்கி புவியோடு பகிர்ந்து கொண்டிருக்க,  காங்கிரீட் போடவெண்று வாசலில் நின்ற கூலி ஆட்கள் குளிருக்கும், இன்று சம்பளமில்லாது போகக் கூடுமோ என்கிற பயத்துளுள்ளும் நின்று கொண்டிருக்க  வந்திருந்த ஆட்களில்  அவள் மட்டும் விடைத்து க் கொண்டு கற்பாறைகளுக்கு  நடுவே வேர் விட்டிருந்த ஆல் செடியாய் தலையுலுக்கி க் கொண்டு நின்றாள். 

" என்ன செய்ய? தண்ணி செமக்க வேண்டியதில்லை என்று  சந்தோசப்படவா?  சித்திக்காரி சம்பளப் பணமெங்கேன்னு கேட்பான்னு வருத்தப் படவா? ....சே இன்னிக்கு சம்பாத்யத்தை மழை வந்து அடிச்சுட்டு போகுதே,"

சலித்தபடி நின்றிருந்த அவள் தோற்றம்   தந்தது சந்தோசமா  இல்லை ஏக்கமா? விதிர்த்து விறைத்து நிற்கும் அவளை வியந்து, பற்றிக் கொள்ளும் சந்தோசம்,பணிந்து பணிந்து பயந்து , நயந்து பேசிக் கடக்கும் எனக்கான ஏக்கமும்  
ஆக மொத்தத்தில் ரெண்டு பேரும் ஒரே இடத்துல முளையடிச்சு வைச்ச கன்னுக் குட்டிதானோ சந்தோசம் கரைந்து   போக நடந்து கொண்டிருந்த வேளையில் என்றல்லாது அவள் மேல் கவனம் பயணிக்க ஆரம்பித்திருந்தது. தூரல் விட்டிருக்க  வந்திருந்த வேலையாட்களில்  இவள் ஒருத்திதான் பெண் என்றாலும் பெண் என்பதை மறந்து, மறுத்து நின்று கொண்டிருந்தாள். கைகளில் உறையிட்டு  சிமெண்ட் கலவைத் தட்டுகள் காற்று வேகத்தில் பறக்க,  பிடித்து  திரும்ப அடுத்த ஆள் கை பார்த்தெறிந்து வேகத்திற்கு ஈடு கொடுக்கவென்று  காலகட்டி நின்றிருந்தாள்...

அன்றொரு நாள் அடுப்படி வேலையில் மும்முரமாக  நானிருந்த நேரம்...எட்டி பாத்திரம் சாமான் எடுக்கவும்....அடுப்பு   வேலைகளை துரிதமாக பார்க்கவும் என்று காலகட்டி நின்றிருந்த போது குமார் வந்து  என் காலுக்குள் தன் காலால் தட்டி  விட்டு " பொம்பளை நிக்கிற  லட்சணத்தை பாரு" என்று விரட்டியதும் தடுமாறி , கொதித்து கொண்டிருந்த  எண்ணைக்குள் விழப்பார்த்து சுதாரித்து கொண்டதும் கண்ணுக்குள் வந்து போக தூத்தெறி" என்ன ஆம்பி¨ளைங்க நீங்க" எறிந்த தட்டுகளோடு தெறித்து விழுந்த அவளது வார்த்தைகள்..... என் மனதுக்குள்  ஓடிய நிகழ்வுக்கா பதில் சொல்கிறாள்..

"ம்ம் ...ம்ம் வரிசை பின்னாடி போகட்டும்", கூவிய ஆள் அவளை குறிப்பாகக் காட்டி

"ஏம்மா முனிமா பின்னாடி போ", என்றதும், தொடத் தொட சிணுங்கும் செடிகளைப் பார்த்ததுண்டு, இவளோ சீறும் பாம்பாக, " பின்னால வைப்பிரேட்டர் இருக்கிறது தெரியலை அது கிட்ட நிக்கிறதும் உங்கிட்ட நிக்கிறதும் ஒன்னு, அதுவும் சேலையை உருவிப்பொடும்....போய்யா நகர முடியாதுய்யா, " ஒழுங்கா ஈஸ்வரின்னு கூப்பிடு , பாத்துக்க" அவள் அதட்டலில் வீழ்ந்து கொண்டிருந்த சாரல் மூர்ச்சித்து நின்று,  இடியோசைக்கு பயப்படாத  நானா இவளோசைக்கு பயந்தேனென சுதாரித்து மீண்டும் தூறத் துவங்கியது.

எலும்புக்கூடாய் இருந்த தளம் மெல்ல மறைத்து முழுதாக்கும் பிரம்மாவாய் இருந்தனர் ஆட்கள். 

கலவை வரும் வேகம் குறைய,

" யோவ் வேகமா அனுப்புங்கய்யா....சும்மா நின்னா கூதலடிக்குது ....புகையிலையை குதப்பிய வாயுடன் பேசிக்கொண்டேயிருந்தாள்  ஏதாவது. அவளின் முரட்டு முகம் தந்த எரிச்சல் நேரம் போகப் போக எனையறியாது மனதில் ஏறி உட்கார்ந்து கொண்டது ஆச்சர்யமே.

சரிவான கூரை பிடிமானமில்லாதிருந்ததை விட ஒற்றைக் கால் பலத்தில் நின்று  வேலை செய்ய  வேண்டிய இடம் .அதோடு  கலவையும் வாங்கி  கடத்தணும். நான் மாட்டேன், நீ மாட்டேன்னு போட்டி  "சரிதான் தள்ளுங்க  ஆம்பிள்ளைகளா, நான் நிக்றேன்", 

தள்ளி விடாத குறையாக முன்னேறிச்சென்று நின்றாள்.

"தங்கச்சி விழுந்திடப் போற, பிறகு தாங்கிப் பிடிக்க நாந்தேன் வரணும்",    எகத்தாளமாய்  ஒரு பதில் தன்னால் இயலாததை அவள் செய்துவிட்டாளே என்று.

”சரிடா அண்ணா ..எறிந்த தட்டுடன் எறிந்த அந்த வார்த்தைகள்.

" அப்படித்தான் போன வாரம் உந் தங்கச்சி விழுந்திட்டா நாந்தான் பிடிச்சு தூக்கி விட்டேன்".

சிரிப்பில் சில்மிசம்  தெரிந்தது. தவிர்க்க எண்ணி என் பார்வை அங்கிருந்த வேப்ப மரத்தில் விழுக, காத்துக்கு  மரம் அசையுதா, மரம் அசையிறனால  காத்து அங்கு தோன்றியதா குழப்பமாகத்தான் இருந்தது........

"அப்படியா அண்ணா யாரடா அவ என் சக்களத்தி என எறிந்த  தட்டோடு அவனையும் எறிந்து இறங்கி வந்தாள்.  சூரியன் மெல்ல மறைய, அவளும் கூரையை  விட்டு இறங்கி வர சரியாக இருந்தது.  கால் கை கழுவ நின்ற கூட்டத்திலிருந்து தனித்து நின்றிருந்தாள்.

"என் சித்திக்காரி என்ன அழகா துவைச்சு கொடுத்த சேலை இப்படி அழுக்கா 

போயிடுச்சே.யாரடி இது?" ன்னு  கேட்கும். தானாய் பேசிக் கொண்டு சென்றவளை என் கேள்வி நிறுத்த  " உன் பேர் என்ன ஈஸ்வரியா, முனியம்மாவா?"

"முனீஸ்வரிக்கா, ஈஸ்வரின்னு கூப்பிடுவாங்க"

"அப்படியா, கழுத்திலே காதுல ஏன் ஒன்னையும் காணோம்?"

அதுவரை எரித்துக் கொண்டிருந்து எட்டா உயரத்தில் பறந்து கொண்டிருந்த அவள் கண்களும் செய்கையும் தரை  இறங்குவதை சகிக்க முடியா உணர்வுடன் நான் உணர்ந்து கொண்டிருக்க, வீட்டுக்காரர் இல்லைக்கா" அதிர்ந்த என் மனது  நிலைக்குவர நேரம் பிடித்தது.

"உனக்கு வயது என்ன?"

"இருவத்தஞ்சு"

"என்ன்னாச்சு உன் வீட்டுக் காரருக்கு? குழந்தைகள்?" கேள்வியை முடிக்காது நிற்க அவள் தொடர்ந்தாள்.

"பொண்ணு ஒன்னு இருக்குக்கா வீட்டுக்காரரை போலீஸ் பிடிச்சுட்டு போயிட்டாங்க.."..

"ஏன்?"

"கொலை பண்ண முயற்சி பண்ணினதா, செயில்ல இருக்குக்கா"

"ஏன்? நீ போய் அதைப் பார்க்கலையா?"

"சீ......அதையாரு போய்ப் பார்ப்பா..எனைய வேண்டாமுண்ன்னு 40 பவுனு ரொக்கம் தரான்னு அவ அத்தை  மகளை இழுத்துட்டு  ஓடிப்போச்சே... அதை ஏன் நான் போய் பாக்கனும்?  

"சும்மாவா விட்டே?". விடுகிற ஆளாய் அவளில்லையே என்று என் மனதில் பட கேள்வி வந்து விட்டது. "ஓடுன ஆள என்ன செய்ய சொல்லுறீங்க? கால்லேயா விழுக....'

அவளுக்குள் மௌனமாய் ஒன்று கொதித்துக் கொண்டிருந்ததை ஒரு குரூர முகமூடி போட்டு  , முகமூடி  ரணத்தில் அவள் வலி  மறைக்கப் பார்த்திருந்தாள். ஆனால் இங்கு எல்லோரும்  அப்படித்தனோ? என்னையும் சேர்த்து. ஓடும் நினைவுகளோடு,வலியை வலியால்  மறைப்பதா?...புரியாது பார்க்கிறேன். மனதுக்குள் விழுந்த அழுத்தங்களில் கணங்களில் மூழ்கிய  மனது வார்த்தையை வெளியெ விடாது தகர்க்க..

"பிறகு ஏன் ஒண்ணும் போடாம இருக்க?"

"போட்டா சித்தி வையும் எவன  மயக்கன்னு எதுக்கு இந்த பல்லு போட்டு பேசுற ஜோலி? ன்னு விட்டுட்டேன்."

"யாருக்காகவும் எதையும் ஏன் விடனும்?  உனக்கு பிடிச்சா போட்டுக்கிட வேண்டியதுதானே?"

என் கேள்வி எனையே பார்த்து சிரித்தது... நான் என் நாத்தனாருக்கு போடக் 
கொடுக்காததுனால என்  நகை அடகுக்  கடையில் வைக்கப் பட்டு இன்னும் கேட்க 
முடியாமல்.....  ஒரு வித குற்றவுணர்வு அழுத்த அவள் முகம் பார்த்தேன் பதிலுக்காக அவள் வெறுமனே உச்சு கொட்ட "ஆமா சித்தியா யாரது?"

"எங்கப்பா புதுசா ரெண்டாம் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கு "...

" அது சரி உனக்கு கல்யாணம் பண்ணும் நினைப்பு இல்லையாக்கும் உங்கப்பாவிற்கு/"

"அப்பாவை விடுங்கக்கா...எவனுக்கு அந்த நினைப்பு வரும்?...எல்லாம் பச்சிலையா 

தலைவலிக்கு கசக்கித் தடவி போட்டு  போற  ஆட்கள்கா ...அவன் வலி தீர்ந்தவுடன் நாம உதிர்ந்திடனும்ன்னு நினைப்பான்களே ,ஒழிய, யாரு நம்ம வலிக்கு மருந்தா இருக்கப் போறா?.....பிள்ளைகளோட எவன் கட்டிக்கிறேங்கறான் பிறகெதுக்கு இப்படி அகராதியா பேசுறேன்னு நினைக்கிறீங்க...அன்பாவும் ஆசையாவும் பேச  நினைப்பு இருக்குதான்.எவன் மனுசியாப் பாக்கிறான் .எல்லாம் பொம்பிளையாய் பாக்குற கூட்டம், கொஞ்சம் அசந்தா ரோட்டோரத்தில மல்லாத்திப்பொடுவான்க..போகச்  சொல்லுங்க"

மனசுக்குள் கேல்வி எழுந்தது.. ..உண்மை சொல் கௌதமா? நீதான் கல்லாய் போக  சாபமிட்டாயா , இல்லை, இவளைப் போல அகலிகையும் தானே கல்லாகினாளா?.. நிகழ்கால நிஜம் தோளைத் தொட விழித்தெழுந்தேன் மழை பார்த்து காத்துக் கிடந்த செம்மண் வரிகளாய் அவள் ரணப்பட்டு கிடப்பது தெரிந்தது...  என்ன செய்ய ?ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு படியிலிருந்து அடுத்த படிக்கு போக போராடிக்கிட்டு இருக்கோம். படிகள் இருந்தும் அடுத்த படி ஏறுவதற்கு சண்டையடிக்க வேண்டியிருக்கு...

.மெல்ல அவள் மனது சிந்தனைக்குள் ஆழ...தன்  பேரில் இருக்கும் பணத்தை கேட்டு, பிள்ளைகள் பேரில் டெபாசிட் செய்ததுக்காக  இன்னும் அம்மா வீடு அனுப்பாது  இருப்பதைத் தண்டனையாய் தந்திருக்கும் தன் வீட்டாள்களின் நினைப்பு வர......முகமூடிகளின் உணர்வுகள்தான் வேறயே ஒழிய.....மொத்தத்தில் எல்லாரும் ஒழிந்து கொண்டிருப்பது வெளிச்சமாக...அவளுக்குள்ளும் ரணங்கள் முகமூடி பேசியது......

"சொல்ல முடியாது ஈஸ்வரி  உன் மனசுக்கு திருப்தியா யாராவது தென்பட்டா தயங்காத.....அதுக்காக  துணையில்லேன்னு மருகவும் செய்யாத. கழுத்து  காதுல 
போட்டுக்க...உனக்கான வாழ்க்கையை நீயே  அமைச்சுக்கிட்டேன்னு சந்தோசமா இரு.  அடிக்கடி எனை வந்து பாரு   எனக்கு அதிக எதிர்பார்ப்பைத் தந்து கொண்டிருக்கும் வாசலில் நின்ற வாகை மரம் தீப்பற்றி அது  பூப்பூக்க ஆசைப்பட்டு கன்று வாங்கி வைத்தேன். ஆண்டுகள் பலவாகியும்  இன்னமும் பூக்க மனமில்லாது, முதிர்ந்து  பழுத்து கொப்புகளில் தாளாது காற்றுக்கு ஊசலாடி தரை பூராவும் விரிப்பாகிக் கிடக்க , தனித்து நின்ற கொப்புகளில்  புதிய தளிர்கள்  நம்பிக்கையாய் வந்திருந்ததை கவனித்த மாலைப் பொழுதில் மீண்டும் வந்தாள் ஈஸ்வரி. புன்னகையோடு கொஞ்சம் பொன்னகையும் தாங்கியிருந்தாள்... 

"என்ன ஈஸ்வரி சித்தி வையலையா......?"

"ஒரு மாதிரி பார்த்துச்சு. ப்ரெண்ட் வீட்டுக்குபோறேன்னு கடுப்பாக்கி விட்டு 
வந்திருக்கிறேன்...உங்ககிட்ட  காமிக்கனும்ன்னு."

" சந்தோசம் ஈஸ்வரி" வேறு என்ன பேசலாம் என்று வார்த்தைகளைத் தேடியபடி வாகை செந்தணலாய் தீப்பற்றி பூப்பூக்கும் நாளும் வரும் என்று உதிர்ந்தும் , துளிர்த்தும் இருக்கும் வாகை மரத்தைப் பார்த்தபடி .....பரணிலிருந்து என் பெட்டி எடுத்தேன் ..அம்மாவை பார்த்து வரவென. 

எங்கே என்பதாய் விழியுயர்த்திய  குமாருக்கு 

“அத்தை வந்தா சொல்லிடுங்க,அம்மா வீட்டுக்கு போயிட்டு வருகிறேன்னு.”

பதிவுகள் ஆகஸ்ட் 2004 இதழ் 56

 


புரிந்திருந்தால்...

 

 - துஸ்யந்தி பாஸ்கரன் --

பதிவுகள் சிறுகதைகள் - 2இரவு பத்தரை மணி. வீதியில் போகும் வாகனங்களின் இரைச்சல் இன்னும் குறைந்தபாடில்லை, ராகுலுக்கு து¡க்கமே வரவில்லை.  அருகில் உறங்கிக்கொண்டிருக்கும் மனைவியைப் பார்க்கின்றான். எந்தவித சலனமும் இல்லாது அயர்ந்து து¡ங்கிக்கொண்டிருக்கிறாள். ராகுலுக்கு மட்டும் ஏனோ இப்போதெல்லாம் து¡க்கமே வருவதில்லை. நிறைய பிரச்னைகள் அவையெல்லாவற்றையும் விட காலையில் வீட்டு வாசலில் வந்து நிற்கப்போகும் சண்முகசுந்தரத்திற்கு என்ன பதிலைச் சொல்வதென்பதே அவனது தற்போதைய பலமான யோசனை. ராகுல் கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்க்கின்றான். மனைவி, இரண்டு பெண் குழந்தைகள்.

அளவான அழகான குடும்பம். மனைவியும் பிள்ளைகளும் யாழ்ப்பாணத்தில்தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்தார்கள். அப்போதெல்லாம் தனது எண்ணாயிரம் ருபா சம்பளத்தில் மூவாயிரம் ருபாவை எடுத்துவிட்டு மிகுதி ஐயாயிரம் ருபாவையும் மனைவிக்கு அனுப்பிவிடுவான். அவர்களது மேலதிக தேவைகளுக்கு வீட்டு வளவில் காய்க்கும் தேங்காய் மாங்காய்களை விற்றாலே போதுமானதாக இருந்தது. அப்போது ராகுல் எந்தவித பிரச்னைகளும் இன்றி நிம்மதியாகவே இருந்தான். அதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் யுத்தக்கெடுபிடிகள் அதிகமா¡க, மனைவி பிள்ளைகளையும் அழைத்து வந்து கொழும்பிலேயே செட்டிலாகிவிட்டான்.

தன்னுடைய மாதச் சம்பளம் வீட்டு வாடகை, பிள்ளைகளின் படிப்புச்செலவு, சாப்பாட்டுச்செலவு, என்பவற்றிற்கே போதவில்லை. அவன் தனது  மனைவிக்கு சீதனமாக கொடுக்கப்பட்ட பணம் வங் கியில் இருந்தது. அதை எடுத்துதான் வீட்டிற்கு முற்பணமாகக் கொடுத்திருந்தான். ஆனால் ஒரு வீட்டில் அவன் மனைவி ஆறு மாதங்கள் கூட இருந்ததில்லை. அறை சின்னன், வெளிச்சம் வருதில்லை, சந்தை கிட்ட இல்லை, வாடகை கூட என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்கொண்டே இருப்பாள். இப்போது கூட வேறு வீடு பாருங்கோ பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்திற்கு கிட்டவாக பாருங்கோ  நான் நாலரை மணிக்கே எழும்ப வேண்டியிருக்கு” என்று தினமும் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பாள். ஆனால் ராகுலுக்கோ அலுவலகம் பக்கத்தில். பாடசாலைக்கு அருகில் வீடு எடுத்தால் அவன் பாடசாலை போக்குவரத் து செலவிற்கு கொடுக்கும் பணத்தை விட மூன்று மடங்கு அதிகம் கொடுக்கவேண்டி வரும். ஏற்கனவே அவன் குடும்பச்செலவை சமாளிக்க படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறான். இதையெல்லாம் அவன் மனைவி விளங்கிக்கொண்டதாகத் தொ¢யவில்லை அதுமட்டுமில்லாமல் அவளது உறவினர் வீடுகளில் எதையெல்லாம் பார்த்தாளோ அவற்றையெல்லாம் வாங்கித்தருமாறு பிடிவாதம் பிடித்து வீடு முழுக்க வாங்கிப்போட்டு நிறைத்திருந்தாள்.

இவற்றையெல்லாம் அவன் கடன் பட்டு செய்தமையால் ராகுலின் சம்பள பணத்தில் குறிப்பிட்ட தொகையை கழித்துக்கொண்டுதான் கொடுப்பார்கள். அப்படி வரும் சிறுதொகையில்  அவன் வீட்டு அடிப்படைச் செலவையே ஈடு செய்ய முடியாத போது கிழமைக்கு ஒரு விருந்தினராவது வந்துவிடுவார்கள். இப்படியெல்லாம் அவன்  திண்டாடுவதே தினசரி வாழ்க்கையாகிவிட்டது. இப்படித்தான் ஒருநாள் அவனது தாயார் கடும் சுகவீனமுற்று சத்திரசிகிச்சை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது அவன் கையில் ஐந்து ருபா கூட இருக்கவில்லை. அலுவலக நண்பர்களிடம் கூறியபோது தங்களிடமும் பணமில்லை என்று சொல்லி வட்டிக்கு பணம் கொடுப்பவரான சண்முகசுந்தரத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.  அவரிடம் ருபா ஒரு லட்சம் வட்டிக்கு வாங்கிக் கொண்டு மாதா மாதம் வட்டியை கொடுத்து வந்தான் ராகுல்.

திடீர் என்று சண்முகசுந்தரம் தனது மகளுக்கு திருமணம் அதனால் பணத்தை உடனடியாக திருப்பித்தருமாறு ராகுலை வற்புறுத்தினார். அலுவலகத்தில் இருக்கும் கடனையே இன்னும் கட்டி முடியாமல் இருப்பதால் அங்கு மீண்டும் கடன் கேட்க முடியாத நிலை. தன் மனைவியிடம் இருந்த தங்க நகைகளை வேறு வழியில்லாமல் கேட்ட போது, அவளோ இது அம்மா தந்தது அது பாட்டி தந்தது என்று சென்ரிமென்ட்டாக ஏதோ எல்லாம் கூறிவிட்டு அமைதியாக து¡ங்கிக்கொண்டிருந்தாள். அவளின் கண்களைப் பார்த்தபடியே காலையில் வந்து கதவைத் தட்டப்போகும் சண்முகசுந்தரத்திற்கு என்ன பதிலைக்கூறுவதென்று யோசித்தபடியே அவனும் து¡ங்கிப்போனான். 

காலையில் மனைவி  என்ன.. எழும்புங்கோ வேலைக்கு நேரமாகுதல்லே   என்று து¡க்கத்தைக் கலைத்தபோதுதான் அவசரமாக எழுந்து நேரத்தை பார்த்துவிட்டு தன் காலைக் கடமைகளை முடித்து அலுவலகத்திற்கு புறப்படும் போது  காஸ் முடியப்போகுதப்பா ஒரு ஆயிரம் ருபா தந்திட்டு போங்கோ  என்றவுடன் பர்ஸ்ஸில் இருந்து ஐநு¡று ருபாவை எடுத்துக் கொடுத்துவிட்டு  உன்னிடம் மிச்சம் இருக்கும் தானே  என்று சொல்லிவிட்டு மனைவி தயார் செய்து வைத்திருந்த மதிய உணவுப் பார்சலையும் எடுத்துக்கொண்டு வெளி வாசலுக்கு வர சண்முகசுந்தரமும் வந்தகொண்டிருந்தார்
             
வாங்கோ அண்ணை.. உங்களிட்ட மத்தியானம் வரவேணும் எண்டு நினைச்சனான்  என்றபடியே வரவேற்றான்.  என்ன தம்பி ரேடி பண்னீற்றீரோ  என்ற சண்முகசுந்தரத்திடம்   இல்லை அண்ணை.. இன்னும் ஒரு கிழமை ரைம் தாங்கோ. திடீர் எண்டு கேட்டதால் ஒண்டும் செய்ய முடியேல்ல  இதற்கு சண்முகசுந்தரம் என்ன சொல்லப் போகிறாரோ என்று அவரது முகத்தையே ஏறிட்டான் ராகுல்.   நான் அவசரம் எண்டபடியாதான் கேக்கிறன் என்ர பிள்ளையின்ர கலியாண விசயம் தம்பி இல்லையெண்டால் இப்பிடி அவசரப்படுத்த மாட்டன்.. சா¢ சா¢ அடுத்த திங்களுக்கிடையில கட்டாயம் வேணும் ரெடி பண்ணி வையும்  அப்ப வரட்டே.  என்று சொல்லிப் புறப்பட்ட சண்முகசுந்தரத்திற்கு வழியனுப்பக்கூட தோன்றாமல் நின்றவனின் சிந்தனையை   என்னப்பா நீங்கள் போகேல்லையா  என்று கேட்ட மனைவியின் குரல் கலைத் தது.  ஹா? ம்.. ஒண்டுமில்லை..நான் வாறன்  என்று கூறிவிட்டு ஒழுங்கையால் இறங்கி காலி வீதிக்கு வந்தடைந்தான்.

அவன் நின்ற திசைக்கு எதிர்த்திசையில்தான் அவன் பஸ் எடுக்கவேண்டும். சண்முகசுந்தரத்திற்கு இன்னும் ஒரு கிழமைக்குள் பணம் திரட்டவேண்டுமே என்ற மனக்குழப்பத்தோடு அந்த வீதியை கடக்க முற்பட்டவேளை வேகமாக வந்த மினி வான் ராகுலை அடித்து து¡ரத்தில் து¡க்கியெறிந்தது. 

உச்சி வெயிலில் அனைத்து புடவைகளையும் துவைத்து கொடியில் காயப்போட்டுவிட்டு களைத்துப் போனவளாய் குளிர்சாதனப் பெட்டியில் கரைத்து வைத்த எலுமிச்சம் பானத்தை கையில் எடுத்தபடியே ¡¢வியை ஓன் பண்ணினாள். போட்ட மாத்திரத்தில் செய்தியில் விபத்து பற்றிய விபரம் அறிவித்துக்கொண்டிருப்பது அவள் காதில் விழ, ¡¢வியின் ஒளி கொஞ்சம் கொஞ்சமாக மிளிர்ந்து முழுமையடைந்ததும் அந்தச்சின்னத்திரையில் காணப்பட்ட அடையாள அட்டை அவளை அந்த இடத்திலேயே அவளை மூர்ச்சித்து விழ வைத்தது.

பதிவுகள் மே 2004 இதழ் 53

 


பெண்கள்: நான் கணிக்கின்றேன்!

 - சுமதி ரூபன் -

பதிவுகள் சிறுகதைகள் - 2பயணம் நிச்சயமாகி விட்டது. .எப்படியாவது யன்னலருகிலுள்ள சீட்டை புக் பண்ணுங்கள் என்ற போது  என்ன கடைசி நேரத்தில இப்பிடி கேக்கிறீங்கள்  என்று அவன் சினப்பது தெரிந்தது..  வரேக்க ஒரு பட்டு வேட்டி சால்வை வாங்கிக்கொண்டு வருவன்  என்றதும்.. வினோதமான ஒரு ஒலியுடன் அவன் சிரித்தான் அவ்வளவுதான்.. எனக்கான இருக்கை எண்ணை கத்திதமான ஒருத்தி சுட்டிக்காட்ட பட்டுவேட்டி சால்வைக்கு முழுக்குப் போட்டு உடலை நுழைத்துக்கொண்டேன்.. நெருக்கமாக இருந்தது.. இடதுபக்கத்தில் பின்னால் இருந்து யாரோ பின்னால் குத்துவதுபோல் ஒருவித ஒலியை எழுப்பியபடியே பிலிப்பீனோ தம்பதி ஒருவர்.  சண்டை போடுகிறார்களா?

சமபாஷிக்கிறார்களா? புரியவில்லை.. புரிந்து என்ன பண்ணுவது.. தொடரும் ஆறுமணித்தியாலங்களிற்கு எனக்கான பின்ணணி இசை அது என்று மட்டும் புரிந்தது.. வலதுபக்கத்திலிருந்த வெள்ளப்பெண்ணிடமிருந்து வந்த விலையுயர்ந்த வாசனை தலையிடியைத் தந்தது..  சுற்றுமுற்றும் பார்த்தேன்.. கனடா பல்கலாச்சார நாடு என்பது உறுதியானது.. வடஇந்தியப் பெண்மணி ஒருத்தி கணவனின் உழைப்பில் குடும்பத்தைப் பார்க்க ஊருக்குப் போகிறாள் போலும்.. கழுத்து கைகள் எல்லாம் கணவனின் உழைப்பால் நிறைந்திருந்தது..தலையணையை அணைத்தபடி எப்போது விமானம் கிளம்பும் குறட்டை விட்டுத்து¡ங்கலாம் என்பதான நிலையில் அவள் காத்திருந்தாள்.. எடுத்துச் சென்ற புத்தகத்தைக் கூட பிரிக்க முடியாத இறுக்கத்தில் இறுகிப்போய் நான்.. என்னைத் தவிர எல்லோருமே வாழ்வில் பலமணி நேரங்களை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் மீண்டும் எனக்குள் எழுந்தது.. நான் தயாரானேன்..பயணத்திற்காய்.. அவள் என்னை இறுக அணைத்துக்கொண்டாள்.. அதே நீள் சதுர முகம் வயதாகிப்போயிருந்தது.. கட்டையாய் வெட்டப்பட்ட தலைமயிரை தூக்கிக் கட்டியிருந்தாள்.. கருகருவென்றிருந்தது.. நிச்சயம் டை அடித்திருப்பாள்.. உடல் இறுகி ஆண் தனத்தைக் காட்டியது.. மீண்டும் அணைத்துக்கொண்டோம்..  எத்தினை வருஷமாச்சு.. இப்பவாவது வந்தியே..  என்னுடைய பையைப் பறித்து கழுத்தில் மாட்டியபடியே குதிரை போல் அவள் நடந்தாள்.. நீண்ட தலைமயிரும் மெல்லிய இடையும் நாணமும்.. கூச்சமுமாக பெண்களுக்கே ஆதாரமாக இருந்தவள்.. இன்று.. என்னை நான் குனிந்து பார்த்துக்கொண்டேன்.. விதியை நொந்தபடியே அவள் பின்னால் நான்..

லண்டனின் நெளிந்த குறுகிய ரோட்டும்.. நெருப்புபெட்டி போன்ற கார்களும் வினோதமாக இருந்தது.. அவள் ஆங்கிலப் பாடல் ஒன்றைப் ஓட விட்டு என் கைகளுக்குள் தன் கையைப் பிணைத்து  நல்ல குண்டா வந்திட்டாய்.. அம்மா மாதிரி இருக்கிறாய்  என்றாள்..

பிள்ளைகள் கணவன் குடும்ப வாழ்க்கை எல்லாம் எப்பிடிப் போகுது என்றாள்.. என் அளவில் எனது சந்தோஷங்கள் எனக்குப் பிடித்திருந்தது.. பெருமையாயும் இருந்தது.. அவளை நோகடிக்க விரும்பாது நான் சிரித்தேன்.. அவளும்.. கச்சிதம் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை அவள் இருப்பிடத்திற்குள் புகுந்த போது புரிந்துகொண்டேன்.. வீடு ஒரு பல்கலாச்சார பள்ளியாய் சீனர்களின் சிரித்த வாய் குண்டுப் புத்தாவிலிருந்து.. கறுப்பர்களின் நார்பின்னல் தலையுடனான சின்னச் சின்னச் சிலைகள் ஓவியங்களுடன் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நாட்டவர்களின் கலையுணர்வைக் காட்டி நின்றது.. கண் விழித்து நான் வியப்போடு பார்க்க தனது வேலை அப்படிப்பட்டதென்றாள்.. கட்டிடக்கலை ஆராய்ச்சில் தான் வேலை செய்வதாகவும் பல நாட்டு நண்பர்கள் தனக்கு இருப்பதாகவும் சொல்லி என்னை  நான் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்று காட்டினாள்.. எல்லாமே புதுமையாகவும்  கொஞ்சம் அதிசயக்கக்கூடியதாகவும் இருந்தது.. 

நான் அவளுடன் தங்கும் அந்த ஒரு கிழமையில் எங்கெல்லாம் செல்வது என்ன சாப்பிடுவது என்பதை மிகவும் நேர்த்தியாக எழுதி வைத்து என்னிடம் காட்டி சம்மதமா என்றாள்? நான் யாரையாவது பிரத்தியேகமாகச் சந்திக்க வேண்டுமா என்றும் கேட்டாள்.. அவள் எல்லாவற்றையும் ஒழுங்கு முறையோடு எழுதி வைத்து அதன்படி நடப்பது ஒரு வித செயற்கைத் தனம் போல் இருந்தாலும் அதில் இருக்கும் கச்சிதம் அவள் எனக்காக எடுத்துக்கொண்ட பிரயத்தனம் என்னைக் கவர்ந்திருந்தது.. பதினைந்து வருட நண்பியை முதல் முதலாய் பார்ப்பது போல் வினோதமாகப் பார்த்தேன்.. இருந்தும் அந்த வீடு நிறைவற்றதாய் எனக்குள் பெருமூச்சை வெளிக்கொணர்ந்ததை தவிர்க்கமுடியவில்லை..

கால்கடுக்க லண்டன் ஹைட் பாக்கில் பொடேரோ சிப்ஸ் சாப்பிட்டபடியே பாடசாலை நாட்களை மீட்டு மீட்டு வாய்விட்டுச் சிரித்து மீண்டும் எம்மை சிறுமிகளாக்கி புளகாந்கிதம் அடைந்தோம்.. மீட்டுப்பார்க்க எமக்குள் அடங்கியிருக்கும் நினைவுகளைப்போல் புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கு இல்லை என்ற படியே அவளின் கண்பார்வையைத் தவிர்த்து  ஏன் இன்னும் கலியாணம் கட்டாமல் தனியா இருக்கிறாய்  என்ற போது அவளின் தொலைபேசி ஒலித்தது.. என்னிடம் கண்ணால் பொறு என்பதாய் காட்டி விட்டு சிறிது து¡ரமாய் போய் சிரித்துச் சிரித்துக் கதைத்தவள்.. பின்னர்  என்ர ப்ரெண்ட் மைக்கல் வெரி இன்ரறஸ்ரிங் பெலோ.. நைஜீரியன் யூனிவேர்சிட்டிலிய வேலை செய்யிறான்.. எப்ப பாத்தாலும் ரிசேக அது இது எண்டு உலகம் சுத்துவான்.. இப்ப பிரான்ஸ்சில நிக்கிறானாம்  இன்னும் ட்ரூ வீக்ஸில இஞ்ச வந்திடுவன் எண்டான்.. நீ வாறது அவனுக்குத் தெரியும்.. உனக்கும் ஹாய் சொல்லச் சொன்னான்..  மூச்சு விடாமல் கூறியவள்.. சிறிது நிறுத்தி  வந்தால் என்னோடதான் தங்கிறவன்..  என்றாள் இயல்பாய்.. என் இயல்பு களங்கப்பட்டது..  எனக்கான அந்தக் கிழமை.. அவளுடன் சேர்ந்து ஒவ்வொரு இடமாகச்செல்லும் போதும் மிகவும் அர்த்தம் பொதிந்ததாக பிரமிப்பபை ஏற்படுத்தியது.. குடும்பத்துடன் எத்தனை இடங்களுக்குச் சென்றுள்ளேன்.. எப்போதும் பதட்டமும் களைப்பும் அலுப்பும் எப்படா வீட்டிற்கு வருவோம் என்றிருக்கும்.. வீணான சிடுசிடுப்புக்கள் கோபங்கள்.. வெறிச்சிடும் வாழ்வு.. ஆனால் இப்போது.. இவள் வாழ்வின் ஒவ்வொரு விடயத்தையும் அர்த்தமாக்கி அனுபவிக்கிறாள்.. தோள் தேய்த்து நடக்க கணவன்.. காலுக்குள் இடற குழந்தைகள் அற்ற நிலையிலும்..இவளால் சிரிக்க குது¡கலிக்க முடியுமெனின்.. கணவன் குழந்தைகள்.. வீடு கார்.. அதற்கும் மேலாய் இன்னும் கொஞ்சம் போய் வாசிப்பு எழுத்து என்று என்னை மேன்மை படுத்தி பெண்ணியம் முற்போக்குத்தனம் என்று பவிசு பண்ணி.. மேதாவியாய் உலவி.. இப்போது.. என் முற்போக்குத்தனம் பெண்ணியக் கருத்துக்கள் என்னுள் முரண்டு பிடிக்கத்தொடங்கியது.. இருந்தும் எனக்குள் இவள் ஏன் இன்னும் கலியாணம் கட்டாமல்.. ஆண்களோடு இவ்வளவு க்ளோஸாக.. 

லண்டனில் பிரசித்தி பெற்ற சுற்றுலாப்பயணிகள் பார்க்க வேண்டிய இடங்கள் என்ற பட்டியலை முடித்து அவளது வேலைத்தளத்திற்கும் அழைத்துச் சென்றாள்.. பல இனத்து நாட்டவர்களும் அவளைக் கண்டதும் ஓடிவந்து அணைத்து என்னையும் சுகம் விசாரித்தார்கள்..  பாடசாலை நாட்களில் ஆண்களை நிமிர்ந்து பார்க்க மாட்டாள்.. ஆனால் இப்போது.. சரளமாக ஆண்களை அணைப்பது அவர்களின் கையைப் பிடித்தபடியே உரையாடுவது.. அவளின் இந்த  போல்ட்நெஸ்  எனக்குள் வியப்பாய்..விரிய.. அவள் இடுப்பை வளைத்துப் பிடித்திருக்கும் வெள்ளையன் ஒருத்தனை தானும் அணைத்து அவன் உதட்டில் முத்தமிட்டு ஈரப்படுத்தி எல்லோரிடமும் இருந்து விடைபெற்றுக்கொண்டாள்.. நான் என்னிலிருந்து மீண்டு வர பல மணிநேரமானது.. 

அவளை நான் உன்னிப்பாகக் கவனித்தேன்.. ஒருவேளை தீர்க்க முடியாத நோயினால் சாகப்போகிறாளோ? இல்லாவிட்டால் காதல் தோல்வியை மறைக்க சந்தோஷமாக இருப்பதாய் பாசாங்குபண்ணுகிறாளோ..? கர்ப்பம் கொள்ளாததால் கண்டிப்போன உடல்.. நேர்கோடாய் நிமிர்ந்து நிற்கும் விதம்.. நுனிநாக்கு ஆங்கிலம்.. காற்றில் கலைந்து நெற்றியில் வழியும் கருமயிர்  கன்னத்தில் குழி விழ குழந்தைபோல் சிரிப்பு.. எனக்குள் எதுவோ எழுந்து என்னைக் கேள்வி கேட்க தலையை உலுக்கி மீள முயன்று மீண்டும் தோற்றேன்.. லெமன் ரீக்குள் கொஞ்சம் தேனை விட்டு எனக்கு ஒரு கப்பை நீட்டியவள்.. சோபாவில் இரு கால்களையும் து¡க்கிப்போட்டு தன்னை கு‘னுக்குள் புதைத்து தனது ரீ கப்பை இரு கைகளாலும் அணைத்துப் பிடித்து வெளியேறும் சூட்டை உள்ளங்கைக்குள் வாங்கி ஒரு குழந்தையைப் போல் கவனமாகக் வாயருகே கொண்டு சென்று கண்களை மூடி முகர்ந்து பார்த்துப் பின்னர் ஒரு முறை மெதுவாக உறிஞ்சி.. ச்ஆஆஆஆ.. என்றாள்.. ஒரு தேனீரைக் கூட இவளால் எப்படி இவ்வளவு அலாக்காக அனுபவிக்க முடிகிறது..  எனக்குள் எழுவது என்ன?.. புரியவில்லை..புரியவதில் சம்மதமுமில்லை.. மெளனமாக இருந்து விட்டு பின்னர் மீண்டும் கேட்டேன்..  ஏன் நீ இன்னும் கலியாணம் கட்டேலை..?  நான் கேட்பதைப் பொருட்படுத்தாது மீண்டும் ஒரு முறை தேனீரை உறிஞ்சியவள்.. என்னைப் பார்த்துச் சிரித்தாள்..  எதுக்கு நீ இந்தியா போறாய்  தெரியாததுபோல் கேட்டாள்.. நான் அலுத்துக்கொண்டேன்.. இவள் எதையோ மறைக்கிறாள்.. உண்மையான நட்பு என்பதற்கு இவளிற்கு அர்த்தம் தெரியவில்லை என்ற கோபமும் வந்தது.. அவள் என்னையே பார்த்தபடி இருக்க..  அதுதான் சொன்னனே.. இலக்கியச்சந்திப்பு ஒண்டு..  பெண்ணியம்   எண்ட தலைப்பில நான் ஒரு கட்டுரை வாசிக்கப் போறன். எங்கட கலாச்சாரத்தில எப்பிடியெல்லாம் பெண்கள் அடக்கப்படுகிறார்கள்.. எண்ட கட்டுரை  என்றேன் பெருமையாய்.. பின்னர் நான் வாசிக்கும் புத்தகங்கள்.. பற்றியும் எனது முற்போக்குச் சிந்தனை கொண்ட எழுத்து.. பெண்ணியக் கருத்துக்கள் என்பன எவ்வளவு து¡ரம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது பேசப்படுகிறது என்பது பற்றியும் பெருமை இல்லாது சொல்லி வைத்தேன்..  குட்.. வாவ் ¥ என்று விட்டு மீண்டும் தேனீரை உறிஞ்சிய படியே  உன்னை நினைக்க எனக்குப் பெருமையா இருக்கு  என்றாள். எனக்குள் நான் மீண்டும் என்னைத் துளைத்தெடுத்து கேட்டேன்  ஏன் இன்னும் கலியாணம் கட்டாமல் இருக்கிறாய் ஏதாவது பேர்சனல் பிரைச்சனையா?  அவள் கண்மூடி மீண்டும் தேனிரை உறிஞ்சியது எரிச்சலைத் தந்தது..  நான் கேக்கிறதை நீ இக்நோ பண்ணுறாய் எனக்கு விளங்குது.. நான் நினைச்சன் நீ என்ர உண்மையா ப்ரெண்ட் எண்டு உன்னுடைய கவலை வேதனைகளை என்னோட பகிரந்து கொள்ளாமல் நீ என்னை து¡ரத்தில வைக்கிறாய்  நான் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட..அவள் வாய் விட்டுச்சிரித்தாள்.. பின்னர் எழுந்து வந்து என்னருகில் இருந்தவள்..  ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மா எண்டுறாள் இன்னும் அதே குழந்தைத்தனம்   என்று என்முதுகில் தட்டி விட்டு என் ரீ கப்பையும் வாங்கிக்கொண்டு குசினியை நோக்கிச் சென்றாள்.. என்ன குழந்தைத் தனம்? நான் கேட்டதில என்ன பிழை? இந்தளவு வயதாகியும் கலியாணம் கட்டேலை.. வாரிசு எண்டு சொல்ல ஒரு பிள்ளை இல்லை.. இதில நகைச்சுவைக்கு எங்கே இடம்.. மனம் அடித்துக்கொள்ள்.. நான் மெளனமாக அவளைத் தொடர்ந்தேன்.. 

மீண்டும் தொலைபேசி அழைத்தது.. இப்போது எல்லாமே எனக்கு கோபத்தைத் தந்தது.. அவளின் ஒவ்வொரு அசைவும் எனக்குள் அசிங்கமாகி.. உன்னிப்பாய் நான் கண்காணிக்க.. ஆங்கிலத்தில் அவள் உரையாடலில் காதல் தெரிந்தது.. இது யார் இன்னுமொருத்தனா?

முதலில் நைஜீரியக் கறுப்பன் தன்னுடன் வந்து தனியாகத் தங்குவான் என்றாள்.. பின்னர் வெள்ளையனை அணைத்து முத்தமிட்டாள்.. இப்போது யார் சைனாக்காறனா? கடவுளே நல்ல காலம் நான் தனியாக இங்கு வந்தது.. இவர் வந்திருந்தால் இதுதான் உம்மட க்ளோஸ் ப்ரெண்டின்ர லச்சணமோ என்று கேட்டு என்னையும் தவறாகக் கணித்திருப்பார்.. அவள் தனது தனிமையை முழுமைபெறாத தனது வாழ்க்கையைப்  பற்றிக் கதைக்காதது எனக்குள் எரிச்சலை ஏற்படுத்த எப்படியும் ஏதாவது சாக்குச் சொல்லி கெதியாக இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.. இவளோடு தனித்திருந்தால் தெரிந்தவர்கள் பார்வையில் பட்டு வைத்தால்? நானும் கணிக்கப்பட்டு விடுவேன்.. வாய்க்குள் ஏதோ பாடலை முணுமுணுத்தவள்.. நான் அவளையே உற்றுப்பார்த்தபடி நிற்பதைக் கவனித்து விட்டு  என்ன?  என்பது போல் தலையை ஆட்டினாள்.. 

நீ எதையோ என்னட்ட இருந்து மறைக்கிறாய்.. நீ இன்னும் கலியாணம் கட்டாமல் இருக்கிறதுக்கு ஏதோ பெரிய காரணம் இருக்க வேணும் சொல்ல விருப்பமில்லாட்டி விடு..  நான் முகத்தை து¡க்கி வைத்துக்கொண்டேன்.. அவள் என்னைப் பார்த்து ஒரு விதமாகச் சிரித்தபடியே..   சரி சொல்லு. நீ சந்தோஷமா இருக்கிறாயா?  கேட்டாள்..   ஓம் அதில என்ன சந்தேகம்.. நல்ல அண்டஸ்ராண்டிங்கான புருஷன் நல்ல வடிவான கெட்டிக்காரப் பிள்ளைகள்.. வசதிக்கும் குறைவில்லை.. அதோட என்ர வாசிப்பு எழுத்து எண்டு எவ்வளவு சந்தோஷமா இருக்கிறன்.. இதுக்கு மேல ஒரு பொம்பிளைக்கு  என்ன வேணும் சொல்லு  என் முகத்தில் அதி உயர்ந்த பெருமை வழிய.. அவள் என்னை உற்றுப் பார்த்தாள்.. அவள் கண்களின் தீவிர ஒளி எனைத் தாக்க நான் பார்வையைத் தாள்த்திக்கொண்டேன்.. என் கைகளைப் பற்றிய படியே அவள் சொன்னாள்..  நீ சந்தோஷமா இருக்கிறாய் எண்டதை முற்றும் முழுதாக நான் நம்பிறன்.. ஏன் கலியாணம் கட்டினனீ பிள்ளைகளைப் பெத்தனீ எண்டு நான் உன்னட்ட எப்பவாவது கேட்டனானா? என் நெற்றியில் முத்தமிட்டவள் தனது கைகளைக் கழுவி விட்டு படுப்பதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கியிருந்தாள்.. நீண்ட நேரமாக என்னால் நின்ற இடத்தை விட்டு அசையமுடியவில்லை.. 

பதிவுகள் யூன் 2004 இதழ் 54


சிறகு!

- சாரங்கா தயாநந்தன்(Cambridge) -

பதிவுகள் சிறுகதைகள் - 2வெண்மை என்றால் அப்படி ஒரு வெண்மை. மென்மினுக்கத் தூய்மை. உயிர்த்துடிப்பான கண்கள். பார்ப்பவர் கண்களை வலிந்து சிறைப் பிடிக்கத்தக்க அழகு.  மெல்ல மெல்லத்  தத்தி நடக்கும்போது அப்படியே கைகளில் அணைத்தெடுத்து தூக்கி மடிமீது வைத்துக் கொள்ளத் தோன்றும் எவருக்கும். அவனுக்குப் பார்க்கப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. வீட்டுக்கு எவர் வந்தாலும் அவர் கவனம் திருப்பி ஒருமுறை தன்னைப் பற்றிக் கதைக்க வைக்காமால் விடாது அந்த வெள்ளைப் புறா.

கூடென்று ஏதுமில்லை. வீட்டினுள் பலகாலம் வசித்து வருவதில் தனது வாழ்விடம் அதுவென்று அதற்குப் படினப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.அவ்வகையில் அது முட்டாள்தனமுடையதாக இருப்பினும் கூட சிலபொழுதுகளில் இந்தப் புறாவே உலகிலுள்ள சகல புறாக்களிலும் அதி புத்திசாலியெனத் தோன்றும் அவனுக்கு. அதன் சில செயல்களைப் பார்க்கும் போது எப்படி இத்தனூண்டு சின்னப் பறவைக்குள் இத்தனை அறிவு வந்ததோ என்று வியப்பான் . ஒருவேளை அவ்வெண்ணம் 'காக்கைப்     பொன்குஞ்சோ' என்னமோ?
 
இந்தப் புறா அவனுக்குக் கிடைத்த விதம் இப்போதும் அவனது நெஞ்சில் நிற்கிறது. வாடகைக்கிருந்த பக்கத்து வீட்டுக்காரர் வேறு வீடு மாறிப் போகும் போது விற்கமுடியாது தேங்கிப்போன பொருட்களாக நல்ல தமிழ் இலக்கண நூல்களும் ஒரு புறாக்கூண்டும் அவரிடம் மிஞ்சியிருந்தன. அவற்றை அவனிடம் அவர் கொடுத்தார் என்பதற்காக அவன் புறாவை வாங்கவில்லை. புறாவானது ,அவனது குடும்பத்தில்  ம்மதியைத் தீர்மானிக்கும் காரகளில் ஒன்றாய்ப் போய்விட்டதனால் அவன் அதை வாங்கினான்.
 
பக்கத்து வீட்டுக்காரர் தன் தனிமை போக்க ஒரு புறாவை வளர்த்து வந்தார். கறுப்பும் வெள்ளையுமான அந்தப் புறாவில் சொல்லமுடியாத பிரியம் அவருக்கு. புறாவும் கூட்டினுள் அப்பாவித்தனமாய்த் தன் முகத்தை வைத்துக் கொண்டு அவர் கொடுக்கும் உணவுகளை உண்டுவிட்டு அல்லது உண்பதாகப் பாவனை பண் விட்டு வாழ்ந்து வந்தது. பெரும்பாலான மென்மாலைப் பொழுதுகளில் அவர் அதனைத் திறந்து விடுவார். திறந்து விடும் பொழுதுகளில் தோட்டத்துக் கதிரையிலிருந்து புத்தகம் படித்தபடி, புறாவிலும் ஒருகண் வைத்தபடி இருப்பார். புறா அவரது காலடியில் இருந்து ஏதாவது தானியத்தைப் பொறுக்கி உண்டபடி இருக்கும். அவர் அந்தப் புத்தகத்தை மூடிஎழும்பப் புறா தானாகவே போய்க் கூட்டருகே நிற்கும். அதைக் காணும் போதெல்லாம் தானாகவே சிறைப்பட விரும்பும் பறைவைகளும் உலகில் வசிப்பதை எண் அவனுக்கு வியப்பாக இருக்கும். பறக்கும் நோக்கமற்ற சிறகுகளைக் கொண்ட அந்தப் புறா பின்னேரப் பொழுதுகளில் குழந்தை ரம்யாவின் குறும்புகளைக் குறைக்கப் பெரிதும் உதவியாக இருந்தது.

சிலநாட்களின் பிறகு ஒருநாள் அந்தப் புறாவின் நளினமாகக் கொத்தியுண்ணும் நாடகம் தோட்டத்தில் அரங்கேறவில்லை. அவன் வியப்போடு மதிலெட்டி விசாரித்தபோது அந்தப் புறா அவரிடம் மிகுந்த வசவுகளை வாங்கிக் கட்டவேண்டியிருந்தது. அதன் உடல் மனம் சகலமும் அலசிய அந்த வசவுகளின் முடிவில், ஒரு தரக்குறைவான புறாவுடன் அது பறந்து போய் விட்டதாக அவர் சொன்னார்.

அத்துடன் பெண்களையும் புறாக்களையும் நம்பக்கூடாது என்று அவனுக்கு இலவச ஆலோசனையும் வழங்கினார். அது அவரது வழக்கம் தான். பெண்களின் சகவாசமே அற்று 'பிரமச்சாரியாக' வாழ்ந்து வருகின்ற அவர் இல்லறவாதிகளையும் விட அதிகமாகப் பெண்களையும் அவர்களின் உணர்வுகளையும் நடையுடை பாவனைகளையும் விமர்சித்து வருவது பற்றி அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

இல்லறவாதிகளின் நடப்பியல் வாழ்வின் மீது இரகசியமாய் அவர் கொண்டுள்ள ஈர்ப்புத்தான் அவரது உணர்வுகள் முழுவதையும் பெண்களின் உலகம் மீது குவியப்படுத்தி  எந்நேரமும் அவர்களை 'அலச' வைக்கிறதோ என னைத்தாலும் அதனை நேரடியாகக் கேட்டுவிடாத சமூகத்தில் ஒருவனாகவே அவனும் இருந்தான். பலவருடங்களாக மனங்கலந்திருந்து, இதய அன்பின் சுவைபிழிந்து  மணம்முடித்த அவனே மனைவி என்ற பெண்மூலமாய் அறிந்து கொள்ள முடியாதிருக்கும் அவர்களின்  உடலியல் ஆசை பற்றிய உள்மனக்கொதிப்புக்களை அவர் தன் மனக்கண்ல் கண்டு அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதென்பது சாதாரண விடயமல்லத்தான்.

எப்படித்தான் இது அவருக்கு முடிகிறதோ? எதுஎப்படியிருந்தாலென்ன, அது அவனுக்குத் தேவையும் இல்லை. குழந்தைக்குப் 'புறாக் காட்டப் போகும்' பொழுதுகளில் அவரது 'பெண்களின் உலகு பற்றிய ஆராய்ச்சிகளைக்' கேட்கும் சகிப்புத்தன்மை மட்டும் இருந்தால் போதும்.

சுதந்திரவாழ்வின் பால் ஈர்க்கப்பட்டுத் துணையோடு பறந்தோடிவிட்ட அந்தப் புறாவின் யாயங்களை அயல் வீட்டுக்காரர் புரிந்து கொள்ளாது இருந்தது போலவே ரம்யாக்குட்டியும் புரிந்து கொள்ளவில்லை. 'புறா பார்க்கப் போவோம்' என்று அவள் பிடிக்கும் பிடிவாதம், வேறு எந்தப் போக்குக் காட்டலிலும் மறைந்து போகாதபடியிருந்தது. அந்தப் புறா பறந்து போய் விட்டதாகச் சொல்லி ,குழந்தையின் மேலதிக விளக்கத்துக்காகத் தூரப் பறந்து பார்வையிலிருந்து விலகும் ஒரு காகத்தைக் காட்டினான் அவன். அந்தப் பொழுதுக்கு குழந்தை அமைதியானாலும் மறுநாள் வீட்டுமுற்றத்தில் அமர்ந்திருந்த காகத்தைக் காட்டி அதுபோலப் புறா எப்போது திரும்பி வரும் என்று பிடிவாதம் பிடிக்கத்தொடங்கிவிட்டாள். வேறொரு புறா வாங்கித் தருவதாகப் பேரம்பேசிக் குழந்தையுடன் சமாதானம் ஆகியாற்று. ஆனால் பிறகு தினமும்  இவன் அலுவலகம் போகும்போது எதிர்பார்ப்பைத் தேக்கி ஏமாந்து போகத் தொடங்கினாள் குழந்தை. அது  அவனது நிம்மதியைக் குலைத்தது. அது போதாதென்று அவன் அதைப் புரிந்துகொள்ளவே இல்லையென்று மனைவியும் குற்றம் சாட்டத் தொடங்கிவிட்டாள். அலுவகத்தால் களைத்து வருபவனை வார்த்தைகளால் உலுக்கினாள். ''ரம்யாக்குட்டி எங்கை?'' கேட்டபடி வருவது அவன் இயல்பு.
 
''ரம்யாவும்... குட்டியும்...பெரிய பாசந்தான்...''

''என்னப்பா... என்ன சொல்லுறீர் நீர்...?''

''என்ன சொல்லுறது...? என்ரை பிள்ளை எந்தநாளும் புறா வருமெண்டு நினைச்சு ஏமாந்து போகுது...''

பெண்கள் தான் எவ்வளவு வேகமாகப் பிள்ளைகளை முற்றும் தமது உரிமையாக்கி விடுகிறார்கள். அவனும் முயற்சிக்காமல் இல்லை. ஆனால் குழந்தையின் ஏமாற்றத்தின் முன்பாக அவனது எந்த நடைமுறைப் பிரச்சினைகளையும் பொருட்படுத்த மனைவி தயாராக இல்லை.

''கொஞ்ச நேரம் சிலவழிச்சுப் பிள்ளையின்ரை சிரிச்ச முகத்தைப் பார்க்க விருப்பம் இல்லை... ''

அவனது 'தந்தைமை'யைத் தாக்கும் அவளது வார்த்தைகளில் றையவே காயப்பட்டுப் போனான். தொடர்ந்து வந்த சனிக்கிழமையில் புறா வாங்கியே விடுவதென்ற தீர்மானத்தோடு   ஊரின் ஒதுக்குப் பக்கமாயிருந்த 'கொலனிப்பக்கம்' போனான். சேரிக்குடிகளின் பிள்ளைகள் கூட்டமாய் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவனது சிவப்புற மோட்டார் சைக்கிளின் உறுமல் ஒலியில் இலகுவாய்க் கவனம் திரும்பி, இவன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் ஓடிவந்து குழுமினார்கள். இடுப்பில் நிற்காத காற்சட்டையைக் கைகளால் பிடித்தபடி ஓடிவந்த அவர்களைப் பார்த்த அவன் மனம் பரிதாபப் பட்டது. 

''தம்பியவை...இஞ்சை புறா ஒண்டு வாங்கலாமோ...?''

''என்னவாமெடா...?''

சற்றே பெரிய பையன் ஒருவன் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு முன்னால் வந்தான்.

''ஒரு புறா தேவைப்படுது தம்பி...''

''என்னமாதிரிப் புறா அண்ணே...''

பையன் இயல்பாய் உறவு கொண்டாடினான்.
 
''வெள்ளைப் புறா எண்டால் நல்லது. என்ன விலையெண்டாலும் பறவாயில்லை...''

''கொஞ்சம் நில்லுங்கோண்ணை...''

பையன் காற்றாய்ப் பறந்தான். திரும்பி வந்தபோது அவனது கையில்      தேமேயென்று உட்கார்ந்திருந்தது வெள்ளைப்புறா. ஆனால் கூர்ந்து பார்த்தால் புறாவின் கால்களில் ஒன்றைப் பையன் தன் விரலிடுக்கில் கொடுத்திருந்தது தெரியும். சில புறாக்களின் லை அப்படித்தான். வெளியே தெரியாமல் நுட்பமாய்ச் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும். புறாவை லத்தில் விட்டான்.

''அண்ணைக்கு வணக்கம் சொல்லு...''

பையனின் வார்த்தைக்குப் புறா தன் மூக்கு நிலத்தில் படப் பந்து முதுகுப்புற வெண்சிறகை இருபக்கமும் பரத்தியது. பையன் சொன்ன விலையைச் சந்தோஷமாகக்  கொடுத்தான்.

''ஒற்றைப்புறா போதுமே அண்ணை... ''

பேரம் பேசாத ,விலையில் வாக்குவாதப்படாத நல்ல மனிதனைக் கண்டுகொண்ட சந்தோஷத்தில் பையன் மெய்க்கரிசனத்தோடு கேட்டான்.

''மகள் விளையாடத்தானே... போதும்...''

''சோடிப்புறா தேடி வரச் சொல்லி 'புறா எறியிற வேலை' வைச்சிடாதேங்கோண்ணை...''

இவன் மோட்டார் சைக்கிள் உதைக்கவும் பையன் சொன்னான். புறாவளர்க்கும் பையன்களிடம் இருக்கும் 'புறா எறியும் பழக்கம்' அவனுக்கும் தெரியும். ஒருபுறாவை நன்றாகப் பழக்கப் படுத்திய பிறகு தனிப்புறாவாய் உயர எறிந்து விடுவார்கள். அது பறந்து போய் 'இணை'யோடு மீண்டு வரும். ஏதோ ஒரு இடத்திலான இழப்பு எறிந்தவர்களின் வரவாய்ப் போய்விடும். இவன் திரும்பிக் கேட்டான். 

''ஏன் தம்பி...''

பையன் தன் கூட்டத்தவரைப் பார்த்து ஒருமாதிரிச் சிரித்தான்.

"அதுக்கு உள்ச்சிறகு ஒண்டுமில்லை அண்ணை... எல்லாம் வெட்டி விட்டிட்டன்...''

முன்புறக் கூடைக்குள்ளிருந்த புறாவின் முதுகுப்புறச் சிறகிரண்டும் விரித்தான். உள்ளே சிறகு கத்தரிக்கப்பட்டிருந்த புறாவின் உடம்பு வெறும் தோலாய்த் தெரிந்தது.

''எறிஞ்சால் பிடரியடிபட விழுந்துடும் அண்ணை... ''

வரதட்சணையின் பின்னும் மகனில் உரிமை கொள்ளும் பெற்றவராய்ப் பையன் புறாவை விற்றபிறகும் கவனம் சொன்னான்.
 
''நான் அப்பிடிச் செய்யமாட்டன் தம்பி...''

''இடைக்கிடை பார்த்துக் கத்தரிச்சு விடுங்கோ அண்ணை...சிலவேளை பறந்து போகவும் பார்க்கும்...''

பையனின் குரல் அவனது மோட்டார் சைக்கிளைத் துரத்தியது. ரம்யாக்குட்டிக்கு கரை காண முடியாத சந்தோஷம். மனைவிக்கும் தான்.

அவள் தான் சொன்ன வார்த்தைகளையெல்லாம் மறந்து போனது போல நடந்து கொண்டாள். வழமையான 'புருஷ இலக்கணத்துக்கமைய' அவனும் அதைக் கிளற விரும்பவில்லை. புறா வந்தபொழுதிலேயே வணக்கம் சொல்லும் வித்தையால் சகலரையும் கவர்ந்து விட்டது.
 
உடனடியாகப் புறாக்கூண்டினுள் தான் அதனை விட்டான். திறந்து விடும் பொழுதில் புறா வீடெங்கும் தத்தித் திரிந்தது. விரும்பினாலும் அதனால் பறக்க  முடியாதென்ற உண்மையை மனைவியிடம் சொல்லி பெரும்பாலான வேளைகளில் அதைத் திறந்தே விட்டான். பையன் சொன்னபடி, புறா புத்திசாலிதான். கழித்தலுக்கும் உண்பதற்கும் மட்டும் கூண்டை வைத்திருந்தது அது. ஈரத்து நனைத்து அதன் மேல்சிறகு ஒற்றியதில் பளீர் வெண்மையாய் ஒளிர்ந்தது .இப்போது புறா வந்து மூன்று மாதங்களாகி விட்டது. அதுவும் வீட்டின் தவிர்க்கமுடியாத அங்கத்தவராய் ஆகிவிட்டது.

பலமுறை பறக்க முயன்று தோற்றதிலோ என்னமோ புறா பறப்பதற்கான எத்தனிப்பையே கைவிட்டிருந்தது. அவன் மெல்லப் புறாவைப் பிடித்து உள்ச்சிறகு விரித்துப் பார்த்தபோது அவை சற்றே வளர்ந்திருக்கக் கண்டான். ஆனால் அது பற்றிய பிரக்ஞையே புறாவுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை. எனினும் மனைவிக்கு விஷயம்  தெரியவந்ததிலிருந்து அவளுக்கு அதே நினைப்புத்தான். அதன் உள்சிறகைக் கத்தரித்து விடும்படி அல்லும் பகலும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

ரம்யாகுட்டி கட்டமிட்ட ஊஞ்சலில் இருக்க, புறா அவளின் முன்பாக நின்று தன் வெளிர்ச்சிறகு பரத்தி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. குழந்தையின் குலுங்கல் சிரிப்பில் வீடு மகிழ்ந்திருந்தது. 
 
''என்னப்பா... உள்ச்சிறகை இண்டைக்கு வெட்டி விடுறது எண்டு நேற்றுச் சொன்னீங்கள்... வெட்டிவிடுறியளே...''

புறாவுக்குத் தானியந் தூவியபடியே கேட்டாள் மனைவி. மொழிபுரியாத அப்பாவித்தனத்தோடு புறா தானுண்ணும் தானியத்தில் கவனமாயிருந்தது. அந்தப்  பொழுதில் தான் வெளியே அழைப்புக் கேட்டது.

''அக்கா நிக்கிறாவோ...''

மென்மையான பயந்தது மாதிரியான குரல். மாதங்கிதான். நாலாம் வீட்டுப் பிராமணப் பெண். பதினேழு வயதில் மணம் முடித்துக் கொடுத்துவிட்டார்கள். புருஷன் பெரிய சிவன் கோவில் குருக்களைய்யா. அவரது கடைசி மகள் என்று சொன்னாலும் நம்பலாம். ஆனால் அந்தப் பொன்னிறத்திலும் பெரிய விழிகளிலும் தாயைக் கொண்டிருப்பதாகச் சேர்த்துச் சொல்ல வேண்டும். லட்சுமிநாதர் ஐயாவின் ஒன்பது பிள்ளைகளில் நடுப்பெண்ணாக, ஆறு பெண்களில் ஒருத்தியாகப் பிறந்து விட்டதில், அழகு ஒன்றே குருக்களய்யா வீட்டுக்கு 'வரும் தட்சணை'யாகக் கொண்டு இத்தனை சிறிய வயதில் தாலிக் கொடிக்குள் கழுத்தைப் புதைத்துக் கொண்டு விட்டிருந்தது அந்தப் பெண்.

துணிமணிக்குக் குறைச்சலில்லை. வேளாவேளைக்குச் சாப்பாடு. பிராமணப் பெண்கள் பலரும் படித்துப் பட்டம் பெற்று பெரிய பதவி வகிக்கின்ற இந்தக் காலத்திலும் அதிகாலையில் தலைக்குக் குளித்து ஈரக்கூந்தல் முடிந்தபடி முன் வாசலில் கோலம் போடுகின்ற 'தீவிர' ஆசாரம். அவ்வாறான ஒரு காலையில் இவனது பார்வையில் தற்செயலாக அந்தக் காட்சி விழுந்திருந்தது. கோலமாவைக் கையில் வைத்துக் கொண்டு பள்ளிக்குப் போகின்ற உயர்தர வகுப்பு மாணவியை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது இந்தப் பெண். இவன் புன்னகைத்த போதிலும் பதிலுக்குச் சிரிக்கவில்லை. ஆனால் அடிக்கடி வீட்டுக்கு வந்து கீதாவுக்காக இவன் வாங்குகின்ற மாத இதழ்களை இரவலாக வாங்கிப் போகும். வரும் பொழுதுகள் பெரும்பாலும் குருக்களைய்யாவுக்குச் 'சேவகம்' செய்யத் தேவையற்ற, இவன் வீட்டில் இல்லாத பொழுதுகளாய் இருக்கும். மாத இதழ்களின் 'விட்டுவிடுதலையான' பெண்களைப் பார்த்துப் பெருமூச்செறியுமோ என்னமோ? ஏன் சில பெண்களின் வாழ்க்கை மட்டும் நம்பமுடியாதபடி கழ்வுப்பொழுதின் சற்று முன்பதான காலப்பகுதியிலேயே உறைந்து ன்று விடுகிறதோ தெரியவில்லை.

''கீதா...''

உள்ளே திரும்பிக் கூப்பிட்டான். பதிலாய் வெளிப்பட்ட கீதா, மாதங்கி கொண்டு வந்திருந்த மாதஇதழ்களை வாங்கி முக்காலியில் போட்டு விட்டு அவளை உள்ளே அழைத்துக்கொண்டு போனாள். பெண்கள் இருவர் கூட்டு சேர்ந்து விட்டால் பொழுதுகள் பொருள் இழப்பது உண்மை எனினும் மாதங்கி விடயத்தில் அது மெய்ப்படவில்லை. கீதாவின் மற்றைய சிநேகிதிகள் 'போகமாட்டார்களோ?' என்று னைக்கும் வரை இருந்து கதைப்பார்கள். இடையிடையே படீர்ச் சிரிப்பு வேறு. அப்படி எதைத்தான் கதைத்துத் தீர்க்கிறார்களோ? கீதாவிடம் கேட்டால் 'அதெல்லாம்  எங்கடை விஷயம்....உங்களுக்கெதற்கு?' என்று வெட்டுத் தெறித்தாற்போலச்  சொல்லுவாள். ஆக, அவன் ஏதும் கேட்பதில்லை. 
   
''அந்தப் புறாச் செட்டையை வெட்ட வேண்டாமப்பா...''

மாதங்கி போனதும் அவனருகில் வந்து மெல்லிய குரலில் சொன்னாள் மனைவி.
 
''ஏன்...? ஏன் திடீரெண்டு இப்பிடிச் சொல்லுறீர்...?''

''அந்த மாதங்கி தான் கேட்டுது...தனக்காய் ஒரு உதவி செய்வியளோ எண்டு சொல்லிப் பெரிய பீடிகையெல்லாம் போட்டுப் பிறகு தான் கேட்டுது...''

''ஏனாம்...?''

''நான் கேக்கேல்லை...பிராமணக்குடும்பம் தானே... அதுதானாக்கும்...''

''சிறகு வெட்டிறது பறவைக்கு வலியில்லைத்தானே...''

''சொன்னன்... சிறகு வெட்டின பறவை செத்ததுக்குச் சரிதானே எண்டு சொல்லிச்சுது...''

அவன் எதுவும் சொல்லாமல் இருந்தான். 

''திருப்பித் திருப்பிக் கேட்டுதப்பா... விடுங்கோ...புறா நிக்குமட்டும் நிண்டிட்டுப் போகட்டும்...எனக்குப் புரியேல்லை ஏன் மாதங்கி இதைக்  கேட்டுதெண்டு...''

சொன்னபடியே கீதா சமையலறைக்குப் போனாள். ஒரு புறாவின் சிறகு பற்றிய புரிதல்கள் இரு பெண்களிடமும் வேறுபடும் விதம் பற்றி அவனுக்குச் சிந்திக்காதிருக்க முடியவில்லை. மனைவி சொல்லியது போல மாதங்கிக்கு எழுத வாசிக்க மட்டுமன்றிச் சிலவற்றைச் சிந்திக்கவும் முடியும் என்று தோன்றியது அவனுக்கு. கூடவே கீதாவுக்குப் புரியாத அந்தக் காரணமும் அவனுக்குப் புரிந்து போய் விட்டிருந்தது

பதிவுகள் மார்ச் 2005 இதழ் 63


கூலி!

- வேதா மஹாலஷ்மி -

பதிவுகள் சிறுகதைகள் - 2அன்றைக்கு தான் புது மானேஜர் வந்திருப்பான் போல.... எல்லாரும் துளி கூட சத்தமே இல்லாமல் கொடுக்கப்பட்ட வேலையை செய்தபடி இருக்க, எப்போதும் எதையாவது பேசியபடியே வேலை செய்து பழகியிருந்த எனக்கு, அந்த இறுக்கம் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

வேலை பாட்டுக்கு போய்க்கொண்டிருந்தது. மானேஜர் என் கிட்டே வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தான். என்னைத் தான் பார்க்கிறான் என்ற பயத்தில் எனக்கு வேலை ஓடவில்லை. புடவையை சரியாகத் தானே செருகியிருந்தேன்!? மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தால்....

என் பக்கத்தில் நின்றபடிக்கு கொஞ்ச தூரத்தில் வேலை முனைப்பில் இருந்த செம்பாவை அவன் கண்கள் மொய்த்திருந்தன.  அதற்கான காரணத்தை,  ஊடுருவும் வகையில் அவள் போட்டிருந்த உள்ளாடை சொல்லியது!! அவளோ, இது எதையுமே அறியாதபடி, அறிய விரும்பாதபடி,  மும்முரமாக கடமையில் மூழ்கியிருந்தாள்.

செம்பா வித்தியாசமாக வந்திருந்தாள். தலைக்கு குளித்து, பதவிசாக உடுத்தி, நிறைய 
அலங்கரித்துக்கொண்டு , பார்ப்பவர்கள் "இன்னைக்கு என்ன விசேஷம்?" என்று கேட்கும் அளவுக்கு இருந்தாள். அவள் செய்து முடிக்க வேண்டிய வேலையை, இப்போது அந்த மானேஜர் செய்து கொண்டிருந்தான். பக்கத்தில் அவள் சும்மா போக்குக் காட்டியபடி இருக்க, நான் முகத்தைத் திருப்பிக்கொண்டு என் வேலையைத் தொடர ஆரம்பித்தேன்.  செம்பாவின் சிணுங்கல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.

என்ன...வேலையில் வேண்டுமென்றே கணக்குத் தப்பியதாக சாக்கு சொல்லி, மானேஜரை கூப்பிடுவாள். அவன் சரிபார்த்துக் கொண்டிருக்கும் போதே, தெரியாமல் நழுவுவது போல் மேலாடையை நழுவ விடுவாள். இந்த மாயாஜாலத்துக்கு அதிகம் பேர் தப்பிக்க மாட்டார்கள். கடைசியாக, வேலைக்கு வேலையும் முடியும், சம்பளமும் 
எகிறும். செம்பா அப்படித்தான்.  வேலைத் திறமை இருக்கும் அளவை விடவும் வேலைத்தனம் அதிகம்!! அதனால் தான் அவளால் என்னை விட எப்போதும் ஒரு படி மேலே, கூடுதல் சம்பளத்தில் இருக்க முடிகிறது.

நான் பாதி வேலை தான் முடித்திருப்பேன். அதற்குள் பசி வயிற்றைக் கிள்ளியது. சாப்பிடலாம் என்று எழுந்திருக்கவும், எங்கிருந்தோ செம்பா வரவும் சரியாக இருந்தது. "ஏய்! நான் போயிட்டு வரேன்டி!" அவள் வீட்டுக்குக் கிளம்பும் உற்சாகத்தில்  இருந்தாள். போட்டிருந்த ஆடை நிறைய.... கலைந்திருந்தது. கொஞ்ச  நேரம் கழித்து மானேஜரும் அவள் பின்னே போனான். இப்போது எனக்குப் புரிந்தது, அவர்கள் எங்கே போகக் கூடும் என்று!

"இதெல்லாம் ஒரு பொழப்பா?" என்று எனக்குக் கூட அடிக்கடி தோன்றும். சரி, நம் அளவில் ஒழுக்கத்தை கடைப்பிடிப்போம் என்று என் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால், இல்லாத குறையெல்லாம் சொல்லுவார்கள். அதென்னமோ இந்தக் 'கணக்கு' மட்டும் எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே சரியாக வராது.  எனக்கு அதில் பிடித்தமும் இல்லை. சில சமயம் எரிச்சலில் நான் ஏதாவது பேசினால் அவ்வளவுதான்! அடுத்த தடவை எனக்கு லீவு கிடைக்காது. தொடர்ந்து இரண்டு வாரம் ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு வர வேண்டி இருக்கும்.

இன்றைக்கு வேலை நிறைய இருந்தது.  கை விரல்களும், முதுகும் அநியாயத்துக்கு வலித்தது. கொஞ்ச நேரம் விட்டு வேலை செய்யலாம் என்றால், அதற்கும் மனசு வரவில்லை.  சீக்கிரம் முடித்தால் வீட்டுக்கு நேரமே போகலாமே என்றுதான்! என் வீட்டுக்காரருக்கும் இதே வேலை தான். இதே அலுப்பு தான். அவர்கள் வரச் சொன்ன 
நேரத்துக்கெல்லாம் போக வேண்டும்.

ஒரு வழியாக வேலையை முடித்து நிமிரவும், மணி பத்து அடிக்கவும் சரியாக இருந்தது. செம்பா இன்னமும் வேலை செய்தபடி இருந்தாள். என்னைப் பார்த்ததும், "முடியவே மாட்டேங்குதுடி!" என்று சலித்துக் கொண்டாள். முடியாது... எந்த வெள்ளிக்கிழமை அவள் பன்னிரண்டு மணிக்கு முன் வேலையை முடித்திருக்கிறாள்!? நான்  மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். இப்போதைக்கு வேன் எதுவும் புறப்படுகிற மாதிரி தோன்றவில்லை.  எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. திரும்ப வந்து மானேஜரிடம் சொன்னேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் தானும் கிளம்புவதாகவும், என்னை வீட்டில் விடுவதாகவும் சொன்னான்.

"ம்!? கார்ல போறே....ஜாலிதான் போ!" செம்பா என்னைப் பார்த்து கண்ணடித்தாள். நானும் மானேஜரும் வெளியே வந்தோம். அவன் காரை ரிவர்ஸ் எடுத்து, என் பக்கத்தில் வந்து நிறுத்தினான். "ரொம்ப நன்றி!" என்று சொல்லியபடி பின்னால் கதவைத் திறக்கப் போனேன். "இல்ல இல்ல... இங்க வாங்க" முன் கதவைத் திறந்துவிட்டான். நான் தயங்கினேன். "கமான்...! இத்தனை திறமையா வேலை செய்ற பொண்ணு... இந்த  சின்ன விஷயத்துக்கெல்லாம் போய் தயங்கினா எப்படி?" என்று கிலோ கணக்கில் ஐஸ் வைத்தான். கார் கிளம்பியது.

கொஞ்ச தூர பயணத்தில் ஏதேதோ பேசிக் கொண்டோம். "இத்தனை தூரத்தில் இருந்து வர கஷ்டமா இருக்குமே.. பேசாம இந்தப் பக்கமே வந்திடலாம்ல?" அவன் கேட்டதற்கு "சொந்த வீடு" என்று பதில் சொன்னேன். "அப்ப உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா!? பார்த்தா இன்னும் சின்னப் பொண்ணா தான் தெரியுது!" அவன் பேச்சில் 
வழிசல் கூடுதலாகத் தெரிந்தது. இன்னும் முக்கால் மணி நேரம் இதைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். கடவுளே... பல்லைக் கடித்துக் கொண்டேன். திடீரென்று காரை ரோட்டில் ஓரங்கட்டினான். பக்கத்தில் ஏதும் கடை இல்லை.... நான் எதிர்பார்க்காத சமயத்தில் சட்டென்று என்னைப் பிடித்து அழுத்தி முத்தமிட்டான். அவசரம் அவசரமாக விடுவித்துக் கொண்டு, 'தூ' என்று மூஞ்சியிலேயே துப்பினேன்.

கார் கதவை அவனே திறந்துவிட்டான். "பிடிக்கலன்னு ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல.." மன்னிப்புக் கேட்கும் தொனியில் சொன்னான். "அப்போ...? பிடிக்குதுனு சொன்னேனா!?" என் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. நான் அந்த இடம் விட்டு விறு விறு என்று நடந்தேன். கார் என்னைத் தாண்டிப் போனது.

அநேகமாக நாளை நான் வேலைக்குப் போக மாட்டேன். இவன் தான் அங்கே எல்லாம்... இவனைப் பகைத்துக்கொண்டு வேலை செய்வது முடியாத காரியம். வேறு ஏதாவது நேர்முகத்தேர்வுக்குத் தயாராக வேண்டும். ச்சே!! என்ன வேலை இது! வெறுப்பாக இருந்தது. எதற்காக கல்லை உடைக்கிறோம் என்பதே தெரியாமல், 
உடைப்பது மட்டுமே குறிக்கோளாய்.... நான் உடைக்கும் கல் கோயிலுக்குப் போகிறதா, கல்லறைக்குப் போகிறதா என்பது கூடத் தெரியாமல், என் அடையாளம் கொஞ்சமும் இல்லாமல், உடைந்து உடைந்து எங்கோ தூரமாய் பயணம் போகும் கற்கள்.... செம்பாவுக்கும் எனக்கும் தான் எத்தனை ஒற்றுமை! எங்களை நாங்களே 
விருப்பப்பட்டு செதுக்கிக் கொண்டிருக்கிறோம், இந்த சா·ப்ட்வேர் துறையில்!! இரண்டு பேருமே சிற்பமாக இருந்தாலும், என் இருப்பிடம் என்னவோ கருவறை என்பதில் மட்டும் இன்னமும் எனக்கு இனம் தெரியாத சந்தோஷம் தான். எப்போதும் எதையாவது பேசியபடியே வேலை செய்து பழகியிருந்த எனக்கு, அந்த பின்னிரவின் இறுக்கம்  நிறையவே பிடித்திருந்தது.

பதிவுகள் மார்ச் 2005 இதழ் 63


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here