பழையனூரில் மூன்று பேருந்து நிறுத்தங்கள் உLLanண்டு. எதிலும் நிழலில் நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிழல் குடையோ மறைப்புகளோ இல்லை. வெய்யிலானாலும் மழையானாலும் ஏதாவது மரத்தடி கிடைத்தால் பாக்யம் என்பது போல் தவிப்பார்கள் சுடுமணலில் கால்களை வைத்தவர்கள் போல் தள்ளாடுவார்கள். ஆண்கள் ஏதாவது தேநீர் கடையில் போய் தேனீர் குடித்து விட்டு கொஞ்சம் நேரம் உட்கார அனுமதி கிடைக்கும். பெண்கள் என்றால் தெருதான். தெருவில்தான் நிற்கவேண்டும். வெயிலில் காயவேண்டும் .
முதல் பேருந்து நிறுத்தம் பழைய பழையனூர் . பத்து பேர் கொண்ட கும்பல் பூவரச மரத்தடியில் இருந்தது. நூறு நாள் திட்ட வேலைக்கு போகிறவர்களை அங்கு வரச் சொல்லியிருந்தான் சூப்பர்வைசர் மங்கள கிருஷ்ணன். வாய்க்கால் மேடு பகுதிக்கு போக வேண்டியிருக்கும் என்று சொல்லியிருந்தான். அருணாதேவி அந்தக் கும்பலில் அன்று சேர்ந்திருந்தாள்.
எங்கு வேலைக்குச் சென்றாலும் அதிகபட்சம் மூன்று மாதங்கள் செய்வாள். அப்புறம் வேலை இடம் மாற்ற புது இடம் தேடுவாள்.முன்பு வேலை செய்த இடங்களில் ஆண்களின் தொல்லை பற்றி சொல்வாள்.
" பார்க்கற பார்வை...சேலையிலிருந்து ஆரம்பிச்சு மெதுவா கேக்கறது. சாப்பாட்டு பொட்டலம் வாங்கித் தந்துன்னு ஆரம்பிச்சு மொக்கை போடுவானுக..."
" நீ என்ன அவ்வளவு பெரிய அழகியா அருணா..."
" இங்க இருக்கறவங்களெ விட அழகுதா..."
" செரி... செரி... பேரழகியா நெனச்சக்காதே"
ஏதாவது பிரச்னை என்றால் மஞ்சுளாவிடம்தான் சொல்வாள். அவளும் " நீ என்ன பெரிய அழகியா என்றுதான் கேட்டிருக்கிறாள். " உன்னெ விட நான் அழகிதாண்டி " என்பாள். ஏதோ வொருவகையில் அவள் தூரத்துச் சொந்தம். அப்பா அம்மாவை மஞ்சுளா கூட வைத்துக்கொண்டு திண்டாடுபவள். அவள் அண்ணன் திருமணம் செய்து கொண்டு தனியே போய் விட்டான். அவள் அம்மா செம்மறி ஆடுகள் நாலைந்தை வைத்துக் கொண்டு புல், செடி கண்ட இடங்களில் மேய்த்துக் கொண்டிருப்பாள்.
மஞ்சுளா பெரிய மனுஷி ஆன பின்பு ஆடு மேய்க்கப் போவதில்லை. கொஞ்ச நாள் மில்லிற்கு போனாள். பஞ்சு மூக்கில் நுழைந்து இருமலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்ததால் மில்லிற்குப் போவதை நிறுத்திக் கொண்டாள். இன்றைக்கு நூறு நாள் வேலைக்கு மங்கள கிருஷ்ணன் கூப்பிட்டால் போலாம். இல்லையென்றால் மஞ்சுளா வீட்டிற்கு போகலாம் என்று நினைத்திருந்தாள் அருணாதேவி. ஒரு நல்ல பருப்பாவது சாம்பாராவது சுவைக்காக கிடைக்கும். புது இடம் புது ருசி என்பாள்.
பழையனூரின் இரண்டாம் பேருந்து நிறுத்தம் புதிய பழையனூர் நிறுத்தம். பெரிய வேப்பமரம் ஒன்று அதன் ஆகிருதியுடன் நின்றிருக்கும். ஒவ்வொரு காலத்திற்கும் தகுந்த மாதிரி வேப்பிலை கொழுந்து, வேப்பம்பழம், இலைகள் உதிர்ந்து அந்த மரத்தடி ரம்மியமாகவே இருக்கும். இளஞ்சேரல் பழையனூர் வடக்குப் பகுதி மூலையில் ஒரு தோட்டம் வாங்கி சுள்ளிக் கரடாக இருந்த இடத்தில இயற்கை வேளாண்மைக்காக ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தான். கணிணிப் பொறியாளராக இருந்து பெங்களூர் , அமேரிக்கா என்று பத்தாண்டுகள் அலைந்துவிட்டு கோவைக்குத் திரும்பியவன் அங்கு வந்து இடத்தை வாங்கினான். நிலத்தை ஒழுங்குபடுத்தி வேலி போட்டான். மண் புழு உற்பத்தி என்று ஆரம்பித்திருந்தான். காய்கறி போட ஆயத்தம் செய்து கொண்டிருந்தான். அந்த இடத்தில யாரவது தங்கியிருந்து பார்த்தால் நல்லது என்று ஷெட் போட்டிருந்தான். ஒரு குடும்பமாக இருந்தால் நல்லது என்று நினைத்திருந்தான். சுப்பையாவைப் பற்றி யாரோ சொல்ல இளஞ்சேரல் தொடர்பு கொண்டிருந்தான். சுப்பையாவிற்காக இளஞ்சேரல் காத்திருந்தான். அவனின் கண்களில் இருந்த கறுப்புக் கண்ணாடி வெய்யிலின் தாக்கத்தை குறைத்திருந்தது. எல்லாவற்றையும் லேசான கறுப்பில்தான் காட்டிக் கொண்டிருந்தது
" எனக்கே இது மாதிரி நினைப்பு இருந்துச்சு. ஒரு தாய் தமிழ்ப் பள்ளி ... ஒரு இயற்கை வேளாண்மைத் தோட்டம்ன்னு கொஞ்சம் கனவு இருக்குது. "
" தாய்த் தமிழ்ப் பள்ளி பெய்லியரா "
" அரசாங்க ஆதரவு இல்லெ. நோஞ்சான் கொழந்தை மாதிரி இருக்குது. "
" நாம ஒன்னு இங்க முயற்சி பண்ணலாமா..."
" மெட்ரிகுலேஷன் பள்ளிக நாலஞ்சு ஊரச் சுத்தி இருந்து பயமுறுத்துது. மொதல்ல இயற்கை வேளாண்மைத் தோட்டம் பாருங்க. எனக்கே இதிலே தங்கிப்பார்த்துக்க ஆசைதா. வீட்லே யாருக்கும் அக்கறை இல்லே. பரம்பரையான வூடு. வெளியே போக வேண்டாமுன்னு பாக்கறேன்" என்று சொல்லியிருந்தான். சுப்பையாவுக்காக இளஞ்சேரல் காத்திருந்தான். கை குறி பார்க்கும் பெண்ணொருத்தி பத்தடி தூரத்தில் கனத்த பாறை ஒன்றின் மீது உட்கார்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அந்தப்பாறையை உடைக்காமல் அப்படியே விட்டு வைத்திருப்பதை ஆச்சர்யத்துடன் பலர் பார்த்துச் செல்வார்கள்.
பழையனூரில் மூன்றாவது சந்திப்பு முனியப்பன் கோவிலின் முகப்பில் இருந்தது. அங்கு கிளி ஜோசியர் ஒருவர் உட்கார்ந்திருப்பது பழமையான விஷயம். மலை வெய்யில் என்று தாக்குபிடிப்பிக்காமல் இருக்கும் போது கொஞ்சம் இடம் மாறி உட்காருவார். மற்றப்படி முனியப்பன் கோவில் மேடைக்கு கீழ் இருந்த இடம் அவருக்கு நிரந்தரமானது. என்பதுபோல் உட்கார்ந்திருப்பார். மேடைச் சுவரோடு கட்டிவைத்தது போல் அவரின் கிளிக்கூண்டு நெருங்கியிருக்கும்.
" தாலிக்குத் தங்கம், 3 வருடம் வேலை செய்தால் 30,000 ரூபாய் கல்யாண செலவுக்கு. தங்குமிடம், சாப்பாடு இலவசம்." என்ற ஒரு பிரசுரத்தை ஒருவன் கொடுத்துக்கொண்டிருந்தான்.
ஜோசியக்காரர் " தள்ளி நில்லுப்பா...நம்ம கிளிக் கூண்டை மறைக்கறே " என்று சத்தமிட்டார்.
" இது எங்கப்பா..எந்த ஊர்லே ."
" வேட செந்தூரிலே "
" அங்கதா மில்லுக குவிஞ்சு கெடக்குதே. இந்த ஊர்ல இருபது வருஷத்துக்கு முந்தி ஒரு மில்லு இருந்து அப்போ மாங்கல்யத் திட்டம்ன்னு பேர் இல்லாமெ கேரளப் பொண்ணுகளே வெச்சு வேலை வாங்குனாங்க. பணம் தர்லே ஏமாத்திட்டாங்க.ஒரு பொண்ணெ கர்ப்பம் பண்ணிட்டாங்கன்னு ஏக காம்ப்ளயிண்ட். ஒரு கேஸ் கூட கோர்ட்ல இருக்கு. சொன்ன பணம் வரலேன்னு.."
" இதுலே எல்லாம் செரியா நடக்கும். நல்ல சாப்பாடு . தங்கற வசதி "
" உனக்கு எவ்வளவு கமிஷன் "
" இருக்கு... ஆயிரம் ஒரு ஆளுக்கு. ரெண்டாம் வருசமும் அவங்க அங்கேயே இருந்தா இன்னம் ஐநூறு கிடைக்கும். ஆமா ஜாதகம் பார்க்கறதுக்கு வர்ரவங்க இருக்கற ஊர்ல நீ வந்து கிளி ஜோஸ்யம் போட்டிருக்கே "
" பாஸ்ட் புட் மாதிரி உடனே பலன் கேட்க வர இன்னும் ஆளுக இருக்காங்க. உனக்கு கல்யாணம் ஆகலையா. ஒரு சீட் பாத்திரலாமா. சுமங்கலித் திட்டப் பொண்ணேயே பாத்திரலாமா."
“ உன் வேலையெ நிறுத்தற மாதிரி ஏதாச்சும் செய்யணும் ..”
அவன் எதைச் சொல்கிறான். கிளி ஜோதிடம் பார்ப்பதைச் சொல்கிறானா. சுமங்கலித்திட்டத்திற்குப் பெண்களைப் பிடிக்கும் வேலையைச் சொல்கிறானா என்று யோசிப்பதைப்போல் கிளிக்கூண்டைப் பார்த்தான் ஜோசியகாரன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.