என்ன எழுதலாம்?..சாந்தனுக்கு எதுவும் தோன்றுவதாய் தெரியவில்லை.ஒரு சிறுகதையை எழுதி நாளாந்தம் வருகிற பலகணி பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டால் ,அதில் வெளிவருவதற்கான சாத்தியமும் இருக்கிறது தான். அதன் ஆசிரியர் ஜேம்ஸ், சில அலம்பல்களை வெட்டி எடிட் பண்ணி, சனிக்கிழமை வாரமலரில் போட்டு விடுவார்.அவருடைய முதல் கதை பிரசுரமான போது அவரிமிருந்து சிறு கடிதமும் வந்திருந்தது."இளம் எழுத்தாளரே (உச்சி குளிர்ந்து விட்டது) தொடர்ந்து எழுதும். உம்முடைய எழுத்தில் ஒரு கதை ஒளிந்து கிடக்கிறது"என்று எழுதியிருந்தார். 'கதை' கிடையாவிட்டால் மெளனம்! இவர் புரிந்து கொள்வார். இவர் அதை மீள வாசித்து திருத்தம் செய்து செப்பனிட்டு மீள ஒரு தடவை எழுதுவார்.அதை 2 நாள் விட்டு எடுத்து வாசிக்கிற போது சிலவேளை அவருக்கு திருப்தி இல்லாமலும் இருக்கும்.அதை திருத்தி, செருக..அது புதிய பாதையில் பயணிக்கும்.அப்படி அவர் ஒரு கதையை 5 தடவைகள் கூட எழுதியிருக்கிறார்.அதற்குப் பிறகு யோசியாது பலகணிக்கு அனுப்பி விடுவார். ஜேம்ஸுற்கு தான் சித்திரவதை. அப்படி இருந்த 3 கதைகளை சேர்த்து ஒரு நாவல் போல அனுப்பினார். பலகணியில் தொடராக வந்து விட்டது.
இப்படி கண்ணாமூஞ்சி விளையாடும்! நம்பிக்கை இழக்காது போராடினால், ஏன்.. திருந்தி, திருந்தி ஒன்றிணைந்து போராடினால் 'தமிழீழம்' கூட கிடைத்து விடலாம் என்பதில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது.அவர் தோல்வி அடைகிற போதெல்லாம் அக்கடிதத்தை எடுத்து வாசிப்பார்.பியர் குடித்தது போல ஒரு வகை உற்சாகம் பிறந்து விடும் "சென்றவையை நினைத்து வருந்த வேண்டாம், கடந்தவையை கடந்தவையாகவே இருக்கட்டும். இன்று புதிதாய் பிறந்தோம் என்று..."தமிழ் வானொலியில் விடியல் நிகழ்ச்சி ஆரம்பமாகிற போது சொல்லப் படுகிறதும் ..நினைவிற்கு வரும் .
எப்பவும், பின் வளவில் இருக்கிற அந்த மரத்தடியில் கதிரையைப் போட்டுக் கொண்டு மடியில் வைத்திருக்கிற பிளாஸ்டிக் மட்டையில் செருகிய பேப்பரில் எழுதுபவர். புதிய கதையை தேடுகிறார். ஒன்றுமே ...கிடைக்கவில்லை. மாமரத்தில் கீச்சிடும் குருவிகளை அண்ணாந்து பார்க்கிறார் . அவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையாய் இருக்க வேண்டும்.அதுதான் இத்தனை சத்தம் போடுகின்றன.
பேனையை மூடி வைத்தார்.
சொந்த வாழ்க்கையிலும் அவர் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஒ.எல் சாதாரணத் தரத்தில் நல்லபடியாய் தேறியவர், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து பரீட்சையும் எழுதினார். அதில் ஆசிரியராக தேறியவர்களில் அவரும் ஒருவர்.ஆசிரியப் பயிற்சிக் கலாசாலைக்கு படிக்கச் சென்றார். அப்ப, ஒரு சிறுகதையை எழுதி அனுப்ப… இளம் எழுத்தாளராகி விட்டவர்! எப்பவும் நம்பிக்கை இழக்காது முயல வேண்டும்.அவர் குடும்பத்திலிருந்து கற்றுக் கொண்ட பாடமாக இருக்கலாம்!
அராலியில், ஆசிரியர்ப் பணி கிடைத்து, இதோ அவர் சைக்கிளில் நீளக்காற்சட்டையும், சேர்ட்டுடன் தமிழ் வாத்தியாராக உழக்கிக் கொண்டு போகிறார். அதற்காக அவர் பிரத்தியேகமாக 'தமிழ்ப் பாடம்' எடுத்தவர் இல்லை. தமிழ்ப் பாடத்திற்கு ஆசிரியர் இல்லாமல் தவித்த அதிபர் கதிரேசன், இவர் எழுத்தாளர் எனத் தெரிந்ததும் "சேர்,நீங்க தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்! தமிழ்ப் பாடம் எடுக்க முடியுமா?"எனக் கேட்டார். இவரை விட 6..7,வயசுப் பெரியவர். இவரால் மறுக்க முடியவில்லை.
இப்பதான் எழுத்தாளராயிற்றே!, ஒரு எழுத்தாளர் எல்லா திசைகளிலும் பயணப்பட வேண்டும். அதற்குப் பிறகு, ஆனைக் கோட்டை கடலட்டை பிடிக்கிற கடற்றொழிலாளர்களுடன் நட்புடன் பழகி,சேகரித்த விபரங்களை வைத்து ஒரு கதை எழுதினார். அது பலகணியில் பிரசுரமாகியது. பத்திரிகையில் அதற்கு பல இடங்களிலிருந்தும் பாராட்டுக் கடிதங்கள் வந்து குவிந்தன.
ஆனைக்கோட்டையாட்களுக்கு அவரில் பெருமதிப்பு ஏற்பட்டு ஒவ்வொருத்தராக தம் வீட்டுக்குக் அவரை விருந்திற்கு அழைத்தார்கள். மனைவி, “வேற சாதி... “என தயங்க, அவரும் மூத்த பையன் சேகருமே போய் கலந்து கொண்டார்கள். “எங்களைப் பற்றி மேலும் எழுதுங்கள் சேர்"என்று அவர்கள் அவரிடம் உரிமையுடன் கேட்கத் தவறவில்லை. அங்கே மணியும், பன்னீரும் கேட்டது அவரை சிந்திக்க வைத்தது ".சிங்கள அரசியல்வாதிகளைப் பாருங்கள்.அவர்கள் தமிழ்த் தேசிய உடைகளை அணிகிறார்கள் சேர். நீர் ஏன் தமிழர் உடை அணியவில்லை.”சும்மாத் தான் கேட்டார்கள். ஆனால், அது அவருக்கு …ஏன் தோன்றவில்லை? நியாயமான கேள்வியாகப்பட்டது.
காந்தியிடம் கூட யாரும் ஒருவர் இப்படி கேட்டிருக்கலாம்.
‘வேட்டி’க்கு மாறினார்.'நேசனல்'என்கிற நீள சேர்ட் டை தான் அவரால் அணிய முடியவில்லை. சாதாரண சேர்ட்டையே வழக்கம் போல அணிந்து கொண்டார். பரவாயில்லை, மாறின அளவிற்கு திருப்தி ! அவரின் புதிய தோற்றத்தைக் பார்த்து பள்ளிக்கூட அதிபர்,ஆசிரியர்கள் அவ்வளவாக ஆச்சரியப்படவில்லை. "பொதுவாக… 'இலக்கியவாதிகளே மூளை கழன்ற ரகம். எதையும் அணிந்து விட்டு போகட்டுமே, விட்டு விட்டார்கள்.
அதற்கு பிறகு இன்னொரு சிறுகதையை எழுதுவோம்' என்று முயன்று இதோ தோற்றுக் கொண்டிருக்கிறார். வெற்றி கிடைப்பதாயிருக்கவில்லை. ‘தோல்வி’என்ற வார்த்தை என் அகராதியில் இல்லை. நெப்போலியனுக்கு தான் அந்த வார்த்தை வேலை செய்யும் போல .,இப்ப, நடக்கிற நிகழ்ச்சியை அப்படியே எழுதினால் கூட அது கதை தானே!, ஏன் எழுதக் கூடாது? மாலை மங்கி இருள ஒவ்வொருநாளும் அலுத்துக் கொண்டு வீட்டுக்குள் போறதாகவே இருக்கிறது.. அப்படியே, ஒரு மாசமும் போய் விட்டது.
வழமையான பள்ளிக்கூடப் பயணம் கூட அலுப்பாக இருக்கிறது.
நாவாலிச்சுடலையைக் கடக்க,கடல் நீரால் பாதிக்கப்பட்ட நிலக்காணியில், இப்போது நீர் இருக்கவில்லை,வறண்டு போய் இருந்தது, குறுக்காக ஆட்கள் போய் வந்தால் ஏற்பட்டு விட்ட ஒற்ரையடித் தடத்தில் சைக்கிளை இறக்கினார். சிறிது புழுதியுடன் வேகமாக இறங்கியது. சிறுபிள்ளையைப் போல அவருள் ஒரு சந்தோசம் குமிழியிட்டது. வேகமாக உழக்கினார். அந்த நிலையை கடந்தாகி விட்டதப்பா. கவனம், கவனம்! இந்த வயதில்... காலை கையை உடைத்துக் கொள்ளுறதில் கொண்டு போய் விடப் போகிறது என்று அவருள் ஒரு குரல் எச்சரித்தது. புழுதி பறந்தாலும் தரை சிறிது கடினப்பட்டு தான் இருந்தது. இதில் போற குலுக்கல் ஒரு குழுக்கலா அவருக்கு ,என்ன? அவர் மேலேயும் கீழேயும் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஓட்டினார். பாலத்தடியிலும், அப்பாலும் வந்திறங்கிற, பறக்கிற, தூங்கிற சைபீரியன் வாத்துக்களை (பெரிய பறவை நீரில் மிதக்கிறதால் வாத்து என்கிறார்களா?) அவரைக் கவர்ந்தன.
கொழும்புத் தமிழரர், அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள், இளைப்பாறிய பிறகு ஊருக்கு வந்திருக்கிறார்கள். அங்கத்தைய கொழும்புப் புத்தியையும் கூட சேர்த்து கொண்டு வந்திருக்கிறார்கள். சைபிரியன் வாத்துக்களை வேட்டையாடுற அவர்களின் துவக்குச் சத்தம் சிலவேளை அந்த அமைதியைக் குலைக்கிறது. அவர் மச்சம் சாப்பிடுறவர் தான் . ஆனாலும் அந்த பறவைகளில் ஓர் அனுதாபம்.
வானத்தில், பறக்கிற நீர்க்காகங்களையும் பார்த்தார். வரிசை குலையாமல் நேர்கோடு,வளைந்த கோடு..என ஒரு ஒழுங்குடன் என்னமாய்ப் பறக்கிறது!
தமிழீழத்திற்காக போராடுற நம் பெடியள் மத்தியில் மட்டும் இந்த ஒழுங்கும், ஒற்றுமையும் ஏன் இல்லாமல் போய் விட்டது?..அவருக்கு புரியவில்லை.
விரைவாகவே காணிக்கூடாக பெருவீதிக்கு வந்து விட்டார். பள்ளத்திலிருந்து ஏறினார். அராலிப்பாலத்தையும் தெற்கராலிப் பாதையும் கடந்து கிருஸ்தவர்களின் சுடலையும் கடக்க, வீதியில் நீளகாம்பில் பின்னால் பறியும், முன்னால் வலைக்கொத்துமாய் கற்சிலைகள் போன்ற உடற் கட்டுடன் செல்கிற நடுத்தர வயதுடைய 2,3 பேர்கள் வெரிக்கோஸ் நரம்பு ஓடிய தடித்த கால்களை நிலத்தில் உறுதியாக ஊன்றிபடி நடந்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
ஆனைக்கோட்டையாட்களுடன் பழகியது போல அவரால் இவர்களுடன் இயல்பாய் பழக முடியவில்லை. தன்னுடைய தோற்றத்தைக் குறித்த தாழ்வுச் சிக்கலாக கிடக்க வேண்டும். பேசினால் பேசுவார்கள். ஆனால், இதுவரையில் பேசியதில்லை.எதைப் பேசுவது என்றதும் பிரச்சனை ? அதை விட பாரத்துடன் இருக்கிறவர்களை எப்படி நிறுத்தி பேசுவது? அழகல்ல என்றும் நினைத்தார்.
"இங்கே கடற்றொழில் செய்கிறவர்கள் அருகிக் கொண்டு போகினம் சேர்"என செல்வர் வாத்தியார் சொல்லக் கேட்டிருக்கிறார். அவர் குரலில் 'நமகென்று நாடு, அல்லது ஜனநாயக உரிமைகளுடனான அரசாங்கம் இருந்தால் ..'கடற்றொழில் சிறக்கும், படித்த இளைஞர்கள் கூட சேர்ந்து கடலையும் கலக்குவார்கள்'என்ற ஏக்கம் இருந்தது.” கடல் மர்மம் நிறைந்தது. நிலத்தில் விவசாயம் எப்படியோ,அப்படி ..கடற்றொழிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடலை மைதானமாக வைத்தே திறமையையை வெளிக்காட்டுற விளையாட்டுக்களைக் கொண்ட சுற்றுலாத்துறையும் இருக்கிறது. வர்த்தகமும்,வேலை வாய்ப்புகளும் கூட இதை ஒட்டிக் கிடக்கின்றன. இதற்கெல்லாம் பொலிஸ்,காணி,கல்வி,கடலில் எல்லாம் மாகாண அரசுக்கு கிடக்கிற ஜனநாயக உரிமைகளை வழங்க வேண்டும். பரநோய் பிடித்த அரசாங்கமாக இருப்பதால் எதுவுமே கிடைக்காதபடியால், பெடியள்களுக்கு மண்டை முழுக்க அரசியல் குப்பைகள் சேர்கின்றன. அருமை, பெருமைகளை சொல்லி வளர்க்க பெரிசுகளும் தவறுகிறார்கள். இப்ப, கடற்றொழில் செய்யிறதுக்கே நம்மவர்கள் வெட்கப்படுறார்கள். படித்து அரச உத்தியோகத்தில் சேருவது ஒரு காலத்தில் பெருமையாய் இருந்தது. அதுவும் குறைந்து விட்டது. இப்பத்தைய பெடியளுக்கு ஏன் படிக்கிறோம்? என்பதே வெறுப்பாகி, இயக்கங்களுக்கு அள்ளுப்பட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகம், மக்களின் மேம்பட்ட வாழ்க்கைக்கான ஒரு சிறந்த பொறிமுறை. ஆனால்,இங்கேயோ ‘ஜனநாயக ஆட்சி’, லஞ்சங்களின் பிறப்பிடமாக, கிரிமினல் செயல்களை புரிவதற்காக கொடும் சட்டங்களை இயற்றும் அமைப்பாக கிடக்கிறது.” செல்வர் புரட்சி பேசுகிறார்.
இலங்கை அரசு,தமிழர்களால் வெறுக்கப்படுற ,சண்டியனாகவே அட்டகாசம் புரிகிற அதே தலைவலியாகவே கிடக்கிறது. செல்வரின் ஆதங்கம் அவருக்கு புரியிறது.அவருக்கும் கூட கடலில் படகிலே பயணிக்க ,தூண்டில் போட எல்லாம் ஆசைகள் கிடக்கின்றன.நிறைவேறுமா? என்று தெரியாதவை. சில ஆசைகள் நிறைவேற அந்த சாதியில் தான் போய் பிறக்க வேண்டும் போலவும் கிடக்கின்றது. சாதிப் பிரச்சனைகளை விட, அச்சாதிகள் போட்டிருக்கிற சட்டதிட்டங்களை எல்லாம் வேட்டிச் சாய்க்கக் கூட ஜனநாயக ஆட்சிமுறை எங்களுக்கு வேண்டியதாயிருக்கிறதே. .ஆனால், சிங்கள சாம்ராட்சிய கனவுகளில் சிக்குண்டு, தமிழர்களைக் கொன்றும், விரட்டியும் எம்நிலங்களை பறித்துக் கொண்டிருக்கிற சிறிலங்காவில் இருக்கிறவர்கள் இதெற்கெல்லாம் மனம் மாறுவார்களா? என்றும் அவருக்கு தெரியவில்லை.
அவர் 7.30 மணிக்கு எல்லாம் பள்ளிக்கூடதிற்கு வந்து விட்டார்.
வகுப்புகளில் ஆண்களும் பெண்களுமாக மாணவர்கள் வந்து நிறைய தொடங்கினார்கள். கலவன் பாடசாலை. அரைக்கரைவாசி பெண் ஆசிரியைகள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரே ஒரு, அதுவும் சங்கீத ஆசிரியை மட்டுமே இருக்கிறார். "என்ன சேர் இப்படி இருக்கிறது?"என்று கேட்டால், அதிபர் குமுறத் தொடங்கிறார்."மாகாணவரசிற்கு கட்டாயம் 'கல்வி அதிகாரமும் வேண்டும் சேர்.அப்பத் தான், இங்கே ...இருக்கிற பெண் ஆசிரியைகளின் அவசியத்தை புரிந்து கொள்வார்கள்."என்று கூறக் கேட்கிறார்.
இவருக்கு பெண் மாணவிகள் மேல் அனுதாபம் பிறக்கிறது.
பெண்களுக்கென இருக்கிற பிரச்சனைகளை கவனத்தில் எடுத்து பாடங்கள் நடத்த ஆண் ஆசிரியர்களால் முடியாது.அவர்களுக்கு பெண்,சிறுமியாய் இருந்தாலும் சரி, வயதானவர்களாய் இருந்தாலும் சரி புரியாத புதிர் தான்! "கழுதை,ஆடு,மாடு..." என வைவதிலும் "படிப்பு ஏறுறதில்லை" என ஏசுவதும், அடிப்பதுமாக இருக்கிறார்கள் பத்தாம் வகுப்பு வரையில் படிக்கிற பெண்கள், அதற்குப் பிறகு எ.லெவல் படிக்க வேற பள்ளிகூடம் போகாதிருப்பதற்கு.. பொறுப்பாக படிப்பியாதது தான் காரணம். இங்கே பெண்களுக்கு 'தன்னம்பிக்கை' வளர்க்கப் படவில்லை. அது பெண் ஆசிரியையால் மட்டுமே முடியக் கூடியது. பிறகு எப்படி தலையை நிமிர்த்தி சிமார்ட்டாக இருப்பார்கள்? "படிப்பு ஏறுததில்லை கழுதைகளுக்கு!"எல்லா திசையிலும் ஏச்சுக்கள் விழுகிறதால் கூட்டுக்குள் தலையை இழுத்துக் கொள்கிற தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு வீட்டில் ஆணாக பிறந்தாலும் சரி, பெண்ணாக பிறந்தாலும் சரி.. சமஅந்தஸ்து தான்! வெளியில், பள்ளிக்கூடத்திலே தான் குழம்புகிறது. மாகாணவரசு இவர்களுக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் பெண்களின் கூனல் எப்பவோ நிமிர்ந்திருக்கும்.
சிறிலங்காவரசு இனத்துவேசம் பேசுகிற, நரித்தனமான வஞ்சங்கள் புரிகிற அதே பாறையரசாகவே தொடர்கிறது. பாறைகள் உடைய முடியாதவை அல்ல. சிறிலங்கா அரசே 'பாறையாய் நிற்பதை ...கைவிட்டு விட வேண்டும். விட்டு விட்டால் அவர்களுக்குப் பெருமை. இல்லாவிட்டாலும்… காலம் அந்த பாறைகளை ஒரு நாள் உடைத்து விடவே போகிறது. ஆனால் சிங்கள அரசு வீம்புக்கு அப்படியே கிடக்கிறது.
பெடியள்களின் விடுதலைப்போராட்டம் என ஒரு புறம், பெரியவர்கள் சிங்கள அரசை இந்திய அரசியலிடம் மாட்டி விடுற முயற்சி ..என ஒரே குழப்பம், குழப்பம்!
கலகம் பிறந்தால் வழி பிறக்கும்!
சிங்களவரசு ஈழத்தமிழர்களுடன் பேசுற எந்தப் பேச்சும் நாணயத்தன்மை வாய்ந்ததாக இருக்கவில்லை. இனிமேலும் இருக்கப் போவதுமில்லை.எனவே தான் தமிழ்த்தலைவர்கள் சிலர், இந்தியாவை இழுத்து இலங்கை, இந்திய ஒப்பந்த்தைத் செய்து விட்டிருக்கிறார்கள். இனி, இலங்கையரசு, தமிழர்களுக்கு போட்ட கோமாளிவேசங்களை இந்தியாவோடும் போட முடியாது. போட்டால் விளைவுகள் வேறாய் இருக்கும் .நம்பெடியள்களும் இந்திய அரசியலோடு கவனமாக தலையிடாது இருந்திருக்க வேண்டும். அதை புரியாது தலையிட்டு விட்டதால் தான் சிங்கள ஆட்சியாளர்களுக்கு தற்காலிகமாக சாதகமான காற்று வீசுகிறது. நீண்ட பெருமூச்சு விட்டார்.
மணி அடிக்க, பள்ளிக் கீதம் இசைத்து.. வகுப்புகள் ஆரம்பித்து விட்டன. மாணவர்களின் சலசலப்பு,பெரும்பாலும் பெண்கள் சக பெண்களுடன் கதைக்கிறார்கள். ஆண்பகுதியிலிருந்து சத்தம் குறைவு தான். பெண்கள் என்னத்தைத் தான் கதைக்கிறார்கள்? ஆண் ஆசிரியர், "படிப்பை விட்டு என்ன வீட்டுக்கதை .." என பொறுமுவதற்கும் "படிக்கிறதை கவனியுங்கடி.." என அதட்டுவதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் ஆண்,ஆண் தானே! சிறுமியாகட்டும், பெரியவளாகட்டும் ஆசிரியர்களுடன் எதையும் பகர மாட்டார்கள்.
வீட்டிலேயும் அதட்டல்.வளர்ந்த பிறகும் அவர்களது கல்யாணம் தொட்டு எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்கள் அப்பர்களாகத் தான் கிடக்கிறார்கள். தற்போதைய ஜனநாயகநாட்டிலே,அரச உத்தோகங்களுக்கு,மற்றும் வேலைகளுக்கு,கடற்றொழிக்கு இயக்கங்களுக்கு எல்லாம் போறவர்கள் ஆண்கள் தானாக இருக்கிறார்கள்.
பெண்கள், வீட்டுச்சமாச்சாரங்கள் பார்ப்பது,பொழுது போக வேண்டாமா ? சந்தைக்குப் போறபோது கதை, வாரபோது கதை,சமையல் எல்லாம் ஆகி அக்கடா என்கிற போது கதை ,பிள்ளைப்பற்றி கதை,அவர்கள் வேலையில்லாமல் அல்லாடுறதைப்பற்றிக் கதை,"எடியே அவன் ஒழுங்காய் சாப்பிட்டானா?"உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடுறானடி..கடவுளே தப்ப வைத்து விடு,உனக்கு பிரதட்சணம் எடுக்கிறேன்.உயிரோடு இருக்க வேண்டுமடி!... இருப்பானோ?" உண்மையில் தமிழ்ப்பகுதியில் அரசியல் பேசுறவர்கள் பெண்கள் தான்.
வேலை பார்க்கிற ஆண் தரப்பு 'கெளரவம்' கொள்கிறது."படித்த கொழும்பில் வேலை பார்க்கிற பெடியனா?(கலவரத்தில் செத்துப் போய் விடுவான்'என்ற யோசனை இருப்பதில்லை)சீதனத்தில் ஒரு சல்லிக்காசு குறையாது,இல்லையோ, நண்பர்,உறவினர் எல்லாம் இரண்டாம் பட்சம், அடுத்த சம்பந்தம் பேச போய் விடுகிறார்கள் .
இந்த பெண்களுக்கு வீட்டிலே தொற்றுற பழக்கம் வகுப்பை களைக்கட்ட வைக்கிறது. எதைப்பற்றி அலசுவார்கள்? சுதந்திரமாக கண்ணை சுழல விடுவார்கள். ஒரு விசயம் பொருட்டாக பட்டு விடும்.பிறகென்ன? வகுப்பை நடத்துறது ஆண் ஜென்மங்கள் தானே!, அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது? சாந்தன் ஆசிரியர் எழுதுறபிறவியாய் இருந்ததால் இதையெல்லாம் ரசிக்கிறார். இல்லாவிட்டால் இவரும் அந்த ரகம் தானே!
புத்தகத்திலிருந்த சிபிச்சக்கரவர்த்தியின் கதையை வாசிக்க வைத்தார்.பெண்கள் அதில் ஒன்றாமல் தெளிவாக வாசித்தார்கள்.பெடியள் ஏதாவது கேள்விகள் கேட்டால் பதில் சொன்னார்கள்.அதில்,அதிக கற்பனை கிடந்தது அவர்க்கு பிடிக்கவில்லை.'புறாவிற்காக தன் 'தசையை' வெட்டிக் கொடுத்தானாம்!அறுவெறுப்பாக இருந்தது.அவனது 'வள்ளத்தன்மையை' சொல்வதற்காய் வன்முறையை சேர்த்தா எழுத வேண்டும்?.அவருக்கு விருப்பமான கதை அல்ல.ஆனால் தமிழ்ப்பாடத்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது.
கல்வி பற்றிய விவகாரம் எல்லாம் சிங்கள அரசாங்கத்திடமே கிடக்கிறது. அது எதைத்தான் புத்திசாலித்தனமாக செய்கிறது?தமிழர்களை முட்டாளாக்கிறதுக்கு என்றே!..என்று சொல்ல முடியாது.அது தமிழ் இலக்கியவாதிகள் என தெரிந்த தகுதியற்ற குழுவிடம் பாடத்திட்டத்தைக் கொடுத்திருக்கலாம்.அதிலுள்ள 'சரி,பிழைகளை பார்க்க இன்னொரு நிபுணர் குழு வேண்டியிருக்கும்' என்பது அதற்கு தெரிந்திருக்காது.தமிழர் மத்தியில் என்றால்..'யார் பெருமைக்காரன்,யார் நிபுணன்?'என்பது அவர்களை விடத் தெரியும்.
முறையான ஜனநாயகம், அதையே செய்கிறது. ஜனநாயக ஆட்சியில் இனவாதம் கலப்பதாலே அது கொச்சைத்தட்டிப் போகிறது. தமிழர் கேட்கிற அடிப்படை உரிமைகள் கூட அவர்களுக்கு வன்முறை காவிய, காவக் கூடிய பயங்கரவாதச் செயலாகத் தெரிகிறது. தமிழர்களுக்கு ஏற்கனவே இருக்கிற சீர்க்கேடுகள் இத்தகைய நடைமுறைகளால் மோசமான நிலைக்கே செல்கின்றன. அவரவர் விவகாரத்தை அவரவர்களிடமே விட்டு விட வேண்டும். இயல்பாய் வளர்ந்து மடியவேண்டிய தமிழ்ச்சமுதாயம் சிலுவை சுமக்கிறது.அதுவும் பாரமான சிலுவை. சுதந்திரம்,சகோதரத்துவம்,சமத்துவம்.. இவை கட்டி எழுப்பப்பட வேண்டியவை. சிங்களவர்கள் மறுப்பதால் அதற்காக..ரத்தம் சிந்தும் அவல நிலை தொடர்கின்றன.
சிங்கள மேலாளர்கள் எந்த காலத்திலும் தமிழர்களுக்கு எஜமானவர்களாக வர முடியாது. அந்த மந்தையை மேய்க்க அவர்களிடமே விட்டு விடுவது தான் புத்திசாலித்தனம். எளிமையான கணக்கு! இல்லை புத்தர் சிலையை வைத்து சிங்கள சாம்ராட்சியத்தை ஏற்படுத்துவேன் என பேசும் 'கைமுனுவேதம்'அவர்களுக்கு கவர்ச்சியானதாக இருக்கலாம். ஆனால் அது அவர்களின் தலைவர்கள் பலரை ஒருகாலத்தில் தூக்குக்கயிற்றில் தொங்க வைக்கவே போகிறது.
வகுப்பில் தூங்கிறதிற்குப் பதிலாக இவருக்கு சிந்தனை இப்படி கண்ணாபின்னாவென எங்கையோ ஓடிப் போய் விடுகிறது. வாசிச்சுப் போட்டு இருந்த விஜயாவிடம் கதையில் ஒரு கேள்வி கேட்டார். தெளிவாகத் தான் வாசிச்சாள். மனம் ஒன்றி வாசிக்கவில்லை. பதில் தெரியவில்லை. எழும்பி நின்றாள். இவர்கள் ஊன்றி கவனித்திருந்தால் அல்லவா! அவருக்கே சலிப்பு தட்டுகிறது. மற்றொருத்தியைக் கேட்டார். பதில் இல்லை. எழும்பி,எழும்பி நின்றார்கள். ஆண் தரப்பில் கேட்டால் பதில் சொல்லி விடுவார்கள். இவர்,எழும்பியபடியே நிற்கச் சொல்லவில்லை. மாணவிகள், மற்ற ஆசிரியர் பாடம் நடத்துற அனுபவத்தில் தானாவே நிற்கிறார்கள்.
அந்தப் பகுதியிலிருந்து சிரிச்சுக் கதைத்ததைக் கவனித்திருந்தார். என்னத்தைக் கதைத்திருப்பார்கள்?அறிந்து பார்ப்போமே என இறங்கினார்."எடியே இருங்கடி!,என்னடி உங்களுக்குள்ளே கதை?"என சிரிச்சபடியே கேட்டார்.இவர் அடிப்பதில்லை என்பதால் பெண்தரப்பில் பயம் இருப்பதில்லை."குமுதா இங்கே வா"எனக் கூப்பிட்டார்.குமுதா அவர் பக்கத்திலே வந்து பெரிசாய் சிரிச்சாள்."என்ன விசயம்?"கேட்டார்."காதைக் கொடுங்கள் சேர்"என்று கையால் பொத்திக் கொண்டு அவரிடம் ரகசியம் சொன்னாள்.
கேட்ட அவருக்கு அளவில்லாத ஆச்சரியம்.6ம் வகுப்பு மாணவர்களிடம் இதைக் கூட தான் கவனியாமல் இருந்திருக்கிறேனே! பெண்களின் புத்திசாலித் தனத்தை மனதார மெச்சினார்.
எல்லோரும் சிறுவர் தானே! பெடியல் தரப்பில் (அண்டர்வெயர்) உள்ளாடை அணிந்து காற்சடடை போட்டு வருவதில்லை. கிராமப்புறம் வேற! ஒருத்தருக்கு கூட அணியிற பழக்கம் ஏற்பட்டிருக்கவில்லை. வீடுகளிலேயும் அது ஒரு பொருட்டாக கவனிக்கப் படவில்லை.ஒரிரண்டு பெடியளின் காற்சட்டைக் ஊடாக 'போலைகள் 'தெரிந்திருக்கின்றன. விஜயா தான் முஸ்பாத்திக்காரியாயிற்றே."எங்கு பார்த்தாலும் இயற்கைக்காட்சி.."என்ற சினிமாப் பாட்டைப் பாடி சினேகிதிகளிடம் காட்டி இருக்கிறாள். அந்த விசயம் பரவி அவர்களை சிரிக்க வைச்சுக் கொண்டிருந்தது.
கண்ணதாசன் வரியா,வாலியா..,அல்லது வைரமுத்து போல புதிதாய் எழுத வந்திருக்கிற கவிஞனின் வரியா..?அவருக்கு தெரிந்திருக்கவில்லை.ஆனால் பொறுத்தமான பாட்டு!
அவருக்கே சிரிப்பு வந்தது.கெக்கலியிட்டுச் சிரித்தார்.
"டேய் பெடியள்கடா எத்தனை பேர் 'பென்டர்' அணியிறவங்க?கையை உயர்த்துங்க"எனக் கேட்டார்.பெடியளுக்கு இதைப் பார்த்து தான் பெட்டைகள் சிரிச்சிருக்கிறார்கள் என்பது புரிந்து போயிற்று.கடுகடுவென கோபம் தலைகேறியது.பெண்களை நோக்கி சுடும் பார்வை பார்த்தார்கள்.
ஒரு கை கூட உயரவில்லை.சிறு பெடியள் தானே.அதன் அவசியம் இன்னமும் தெரிய வரவில்லை.எனவே அதன் அவசியத்தைப் பற்றி விளக்கினார்.
"டேய் குலுங்கி இறங்கிப் போனால் பிறகு நிறைய பிரச்சனைகளடா!வீட்டிலே அம்மாட்ட சொல்லி அடுத்த கிழமை வார போது எல்லாரும் அணிந்து வர வேண்டும்"என்று கூறினார்.அன்றைய வகுப்பு அந்த பிரச்சனையை கதைப்பதிலே முடிந்து விட்டது. 7ம்,8ம் வகுப்பில் கூட பெரும்பாலானவர்கள் அணிந்து வருகிறவர்களாக இருக்கப் போவதில்லை.அவர்களுக்கும் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டார்.
அப்படி, அடுத்த மாசம் பள்ளியில், 6ம் வகுப்பிலிருந்து பெடியள்களிடம் பென்டர் அணிந்து காற்சட்டை அணியிற பழக்கம் ஏற்பட்டு விட்டது.அம்மாக்காரிகள் சிலர் , தமது பழஞ்சீலையில்,சட்டைத்துணியில்.. எல்லாம் கிழித்து தாமே தைத்து பெடியளிடம் கொடுத்தார்கள்.பெண்களிடம் தான் பழகிறது அதிகம் இருக்கிறதே,தெரியாதவர்கள்,தைக்கத் தெரிந்தவர்களிடம் கொடுத்து தைப்பித்தார்கள்.
ஆனால் பள்ளியில் பிரச்சனை இல்லை.பெடியள் ,இப்ப தான் பென்டர் அணிகிறார்களே!,வீட்டுக் கிணற்றில்,கேணியில்..அந்த பென்டருடன் குளித்தார்கள்.அது ஈரம் ஏற இயற்கைக்காட்சியை அப்படியே காட்டுவதாகவிருந்தது."டேய் பொடிப்பசங்கடா காற்சட்டையை போட்டுக் கொண்டு குளியுங்கடா"என கிழவர்,கிழவிகக் சொல்லிச் சிரிக்க பெடியள்களுக்கு அவமானம் குடலை பிடுங்கித் தின்றது.
"என்னம்மா எனக்கு இது வேணாம்! கடையிலே வாங்கித் தா"என அழ, அம்மாக்காரிகள் கொஞ்சம் தடித்த துணிகளை தெரிவு செய்தார்கள்.
அதே சமயம் 'ஸ்மிங் ரங்'என்ற அண்டவெயர் யாழ்ப்பாணக்கடைகளில் தொங்க,அதை சிலரும் வாங்கி அணிந்து கொண்டார்கள்.ஒரே அவியலாக இருக்கிறது என்பதை வெளியில் சொல்ல முடியாது தவித்தார்கள்.
சாந்தன் ஆசிரியர் ,சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு,மாமரத்தின் கீழே கதிரையை போட்டு இருந்துக் கொண்டு,கீச்சிடும் குருவிகளை கொஞ்ச நேரம் வாடிக்கைப் பார்த்து விட்டு,அதையே வைத்து சிறுகதை ஒன்றை மள மளவென எழுதுகிறார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.