தண்ணீர், தண்ணீர், தண்ணீர், என கண்களைச் சுழற்றிய எல்லா திசைகளிலிருந்தும்,தண்ணீரே உலக நாயகியாய் ஓங்கரிக்க, காற்று ஊழியாய் வீசியடித்தது. தண்ணென்ற ஜல சமுத்திரத்தில் விர்ரென்று போய்க்கொண்டிருந்தது கப்பல். சுருண்டு கிடந்தாள் நாணிக்குட்டி. கப்பல் பயணத்தில் இவளைப் போலவே பலருக்கும் தலைசுற்றலும் வாந்தியும் படுத்தி எடுத்துக் கொண்டுதான் இருந்தது.
என்றாலும் ஆண்களில் சிலர் அனுமதி வாங்கி கப்பலின் மேல்பரப்பில் போய் நின்று கொண்டு ஒருநோக்கு ஜலசமுத்திரத்தை பார்த்துவிட்டே வந்தார்கள். குஞ்ஞு குட்டன் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தான்..அப்படி உற்சாகமாக இருந்தது.பின் என்ன ? பச்சை நரம்பு புடைத்த வீர்யம் மிக்க தரவாட்டு நாயராக்கும். இல்லையென்றால் வேறொருவனுக்கு மணம் நிச்சயிக்கப்பட்ட நாணிக்குட்டியை, ராவோடு ராவாக இழுத்துக்கொண்டு ஓடிவரும் துணிச்சல் எவனுக்கு வரும் ? என்னமாய் பெண் இவள்.? குடும்பப் பகை காரணமாக , சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று தெரிந்தும்கூட ,பெண் கொடுக்க மறுத்த” பூவில’ தரவாட்டுக்கே மூக்கறுபட்ட அவமானத்தை கொடுக்கவும் நடு முதுகு நிமிர்வு வேண்டாமா ? இத்தனைக்கும் ”என்னோடு சிங்கப்பூரிக்கு வரியா,” என்று கேட்டது கூட ஒரு முரட்டு வேகத்தில் தான். மறுபேச்சில்லாமல் வெட்கப்பட்டுச் சிவந்தவள் அவன் நீட்டிய கையைப் பற்றிக்கொண்டாள். ஆச்சரியம் தான்! இவளுக்கும் என் மீது இவ்வளவு ஆசையிருந்ததா ?
38 வயசு குஞ்ஞு குட்டனுக்கு 16 வயது நாணிக்குட்டியைப் பார்க்கப் பார்க்க அப்படியே வாரி எடுத்து , நெஞ்சோடு அணைத்து மூச்சுத்திணற முத்தமிடத்தோன்றியது. சே, கப்பலில் வைத்தா ? இவன் ஆவேசம் இவனுக்கே வெட்கமாக இருந்தது ? சிங்கப்பூரில் போய் இறங்கியதும் தெய்வம் போல் இவளைப் பார்த்துக் கொள்ளணும்.எனக்குக் கிட்டிய நிதி இவள் ! அப்படியே தான் குஞ்ஞு குட்டன் அவளைக் கொண்டாடினான். ஏழுநாள் பயணத்தில் கிழிந்த நாராய் சிங்கப்பூருக்கு வந்திறங்கிய நாணியா இவள் ? இரண்டே மாசத்தில் குவாட்டர்ஸில் , தமிழ், தெலுங்கு, இந்தி, பேசும் குடும்பங்களோடு நனைந்த மலையாளத்தில் அப்படி ஈஷிக்கொண்டள். காலையில் நேவல்பேஸுக்கு வேலைக்குப்போகும் குஞ்ஞு குட்டனுக்கு கல்தோசையும்,நாளிரம் சட்டினியும் கொடுத்து, மதியத்துக்கு வாழை இலைப்பொதியில் மீன் அவியலும் , பயறு தோரண், என விதம் விதமாய் சாப்பாடு கட்டிக்கொடுத்து விட்டதில் அபுபக்கர் மெஸ்ஸில் பற்று வைத்து சாப்பிடும் பழக்கம் நின்றது. முகம் பார்க்கும்போதே , இன்று காய்ச்சிய எண்ணெயை தலைக்கு வைத்து குளிக்கணுமே என்பாள்.சொல்வதோடு நில்லாமல் அரக்கி அரக்கி எண்ணெயை சூடு பறக்கத்தேய்த்து, ஒருமணிநேரம் ஊற விட்டே குளிக்க விடுவாள்.எண்ணெய்க்குளியல் உள்ள அன்று காரசாரமாய் கோழிக்குழம்பு , உள்ளித்தீயல்,முளை விட்ட பயறு, முட்டைத்தோரண்,
பப்படம், வாழைத்தண்டு தோரன்,, அரிக்கொண்டாட்டம் என பல பதார்த்தங்களோடு மதிய உணவு அமர்க்களப்படும்.ரசித்து ருசித்து சாப்பிட்ட பிறகு, மிதித்து துவம்ஸம் செய்யும் பரவசத்தோடு அன்று முழுக்க நாணிக்குட்டியிடம் இழைந்து கிடப்பான். குழந்தையைப்போல் அவளைக் கொஞ்சுவான். ஓய்வறியாக் காதலர்களாய் அப்படி நேசித்தார்கள். நாணிக்குட்டிக்கும் குஞ்ஞு குட்டன் தவிர வேறு நினைவு அவளில் இல்லை. அடுத்தடுத்து வருஷம் தவறாமல் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பிறகுதான் நாணிக்குட்டிக்கே பக்குவம் வந்தது.
தாவரமாய் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடந்தார் அச்சச்சன். பேச்சு நின்றுபோய் சில வருடங்களாகி விட்டன.உடலில் அசைவு இருந்தது.ஸ்பூன் ஸ்பூனாய் ஊட்டும் கஞ்சி மட்டும் முடங்காமல் உள்ளே போனது. குளிப்பாட்டி கிடத்தினால் போட்டது போட்டபடி அப்படியே தூங்கிப்போவார்.எப்பொழுது விழிப்பு வருமென்று தெரியாது. அப்படியே விழிப்பு வந்தாலும் அரைக்கண்ணால் மட்டுமே பார்வை நிலை குத்தி நிற்கும்.மகனும் மருமகளுக்குமே வயதாகிப்போன பிரச்சினைகள். எண்பத்தெட்டு வயது கிழத்தைப் பார்த்துக்கொள்ள சிங்கப்பூரில் என்ன முதியோர் இல்லங்களுக்கா பஞ்சம் ? ஆனால் வீட்டிலேயே மருத்துவர் பேரன் இருந்ததால் அந்த திட்டம் நிறைவேறவில்லை. பேரன் ரகுவரனின் அசையாத நம்பிக்கை வீட்டாரின் ஒத்துழைப்புடன் பழைய ஞாபகங்களைக் கிளறினால், -- அந்த நினைவின் தடத்திலாவது எப்படியும் சுற்றம் உணர்ந்த சிலிர்ப்பில் , ஒரு புன்னகை, அல்லது விழி மலர்த்திப் பார்த்த கணநேர அதிசயம் ---ஹ்ம்ம், அது போதும், ! அடுத்தகணமே அச்சச்சன் கண்மூடினாலும் பரவாயில்லை.
நினைவு தெரிந்த நாளாய் தாத்தாவின் மடியிலும் தோள்களிலும் கிடந்து வளர்ந்தவன் ரகுவரன். ரகுவரனுக்கு மருத்துவப்படிப்பு சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் கிட்டியபோது, ராபிள்ஸ் ஹோட்டலில் மிகப்பெரிய விருந்து கொடுத்தவர் இந்த தாத்தா. உடன் பணிபுரியும் சீனப்பெண்ணை காதலிக்கிறேன், செள பெங் கைத்தான் திருமணம் செய்யப்போகிறேன், என்றபோது வீடே பனிப்போரில் சோகம் காத்தது.
அப்போதும் இந்த தாத்தா தான் ,துணிந்து அவன் திருமணத்தை நடத்தியவர். ”ராஜா மெச்சியதே ரம்பா, சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டு என்னடா ஜாதி ?வாழப்போறவன் அவன், அவன் மனசுக்கு பிடிச்சாதானே பொருந்தி வாழமுடியும்”, என்று ஒரே வீச்சில் அனைவரையும் அடக்கினார். வாட்டர்லூ ஸ்ட்ரீட் கிருஷ்ணன் கோயிலில் வைத்து ஜாம்ஜாமென்று திருமண்ம் நடந்தது.இன்றும் விசேஷ தினங்களில் செள பெங் பொட்டு வைத்து,புடவை கட்டிக்கொண்டு அடக்கமாய் வந்து நிற்கும் அந்த ஏதேனும் ஒருநாள் கூட தாத்தாவுக்கு பெருமிதம் தான்.
ரகுவின் இரண்டு குழந்தைகளையும் மடியிலும் தோளிலும் வைத்துக் கொஞ்சி அழகு பார்த்தபிறகே அவருக்கு ஸ்ட்ரோக் வந்தது. நாளது தொட்டு இன்றுவரை ஞாபகம் மீண்டு வரவில்லை. 88 வயதில் இவர் இன்னும் இப்படி போராடுவது ஏன் என்று தான் ரகுவுக்குப் புரிய வில்லை. ” அச்சச்சா ! [தாத்தா !]” என்று மெல்லிய குரலில் அருகே சென்று அழைத்தபோதும், தாவரம் அசையவில்லை.
திடீரென்று அவருக்கு முழிப்பு வந்த போது அருகில் யாருமே இல்லை.
நாணிக்குட்டி இப்படி சட்டென்று கனவு கலைந்தாற்போல், காரில் அடிபட்டு செத்துப்போவாள் என்பது அவனால் நம்பமுடியாத விஷயமாக இருந்தது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதொன்றும் சுலபமாகவும் இல்லை. நேவல்பேஸில் அவர்கள் வாழ்ந்த வாழ்வுக்கு குஞ்ஞு குட்டனுக்கு பித்து பிடித்து எங்கே தெருவில் அலைவானோ என்ற கூட அக்கம் பக்கம் பயந்தது. ஆனால் ஆச்சரியமாக ஆலகாலம் விழுங்கிய அகோரியாக குஞ்ஞுகுட்டன் நிமிர்ந்து நின்றான். குழந்தைகளுக்காகாகவே வாழ்ந்தான். குழந்தைளுக்காகவே அப்படி உழைத்தான் திரும்பிப் பார்ப்பதற்குள் எல்லோரும் திருமணம், குழந்தை குட்டி, என செட்டிலாகி, பேரக்குழந்தைகளும் தவழத்தொடங்கிய பிறகே குஞ்ஞு குட்டனை ஏதோ கவலை அரித்துப் பிடுங்கத் தொடங்கியது. ஆரவாரம் ,ஆர்ப்பாட்டம், விருந்து, கேளிக்கை என எல்லாமே அச்சச்சனுக்கு வெறுப்பாகிப்போனது. தனியார் வீடு, சுகபோகம் எதுவுமே சுகிக்கவில்லை. செம்பொருள் அங்கதம் செப்பிடச் சொல்வதென்றால், சிங்கப்பூரின் அசுர வேக வாழ்க்கைக்கு அவரவர் நிலைப்பாடே பெரும்பாடு, என ஓடிக்கொண்டிருக்க கிழவனின் ஏக்கத்தை கவனிப்பதுதான் வேலையாக்கும். யாருக்கு நேரமிருக்கிறது ? அதிசயமாக தாத்தா, மருந்து குடிக்க மறுத்தார். பிடிவாதமாக இவர் எந்த குளிகையையும் கூடகுடிக்க மறுத்ததால், உடல் நிலை இன்னும் சீர்கேடானது. ஒருவேளை கேரளம் போகத்தான் ஆசைப்படுகிறாரோ, என்று கூட யோசனை வந்தது.ஆனால் அசையக்கூட உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் எங்கே போவது ?
அன்று மதியம் கோவிந்தன் குட்டி பணிக்கர் உள்ளே நுழைந்தார். அச்சச்சனின் அருகே சென்றமர்ந்து கைகளைப் பரிவாகத் தடவிக் கொடுத்தார். தாத்தாவின் செவியருகே சென்று, மெல்ல “அச்சச்சா, என்றழைத்தபோது பணிக்கரின் குரல் உருகி ஒலித்தது. பணிக்கரின் தந்தையும் தாத்தாவும் அந்நாளில் உயிர் நண்பர்கள் .லோரோங் மஹா கம்பத்தில் அவன் ஓடி விளையாடிய திடல், மலையாள சங்கம், காலையில் ஆங்கிலமும், மாலையில் குருகுலத்தில் படித்த மலையாளமும், ஆசிரியர் பாசி சாரும், சுல்தான் தியேட்டரும்,சினிமாவுக்கு சேர்ந்து சென்ற நண்பர்களும் என,நினைவிலாடிய நிழலில் பணிக்கருக்கு கண்ணீர் வந்தது. ரகுவரன் தாத்தாவின் உடல்நிலை குறித்து சொல்லத்தொடங்கினான். மெளனமாய் கேட்டுக்கொண்டிருந்த பணிக்கர் திடீரென்று,ஒரு வேகத்தில் சொல்லத்தொடங்கினார்.
“ ஹ்ம்ம், இன்றுதான் இந்த மருந்து மாத்திரை, எல்லாம் சீரழிகீறது.அந்த காலத்தில் நாங்களெல்லாம் எந்த மருந்துக்கு காத்திருந்தோம் ? செம்பவாங் வட்டாரத்தில் ஒரு, மேல்வலின்னா, கூட உடனே சுடுதண்ணிப்பாசா, வில இருந்து வற அந்த ஊற்றுத் தண்ணீரைத்தான் மேலுக்குப் பூசுவோம். காய்ச்சல்னா சுடச்சுட அந்த தண்ணியை வாய்க்குள்ள விட்டு அப்படியே ஒருநிமிஷத்துக்கப்புறம் முழுங்கினா கிட்டற சுகம்,. எப்படியாயிருந்தாலும் அந்த தண்ணி குடிச்ச பின்னே கொஞ்ச நேரத்திலேயே உடம்பெல்லாம் அப்படியே வேர்த்து விறுவிறுத்து , வியர்வையா வழிஞ்சோடறதிலேயே காய்ச்சல் விட்டுடும். ஒரு நாளாவது சுடுதண்ணிப் பாசாவில் குளிக்காம இருந்திருக்கோமா? எங்கிருந்தெல்லாம் ஜனங்க அங்க குளிக்க வருவாங்க தெரியுமா? காண்டா கம்பில மாட்டிக்கிட்டு,செண்டோலும் ஐஸ் கச்சானும் விக்க வர ஆப்பே யை மறக்கமுடியுமா? ஜிஞ்சர் டீயும் கோப்பிக்கடை கொயித்தியாவும் , வெள்ளிக்கிழமை கிட்டற சம்பளத்தில வாங்கிட்டு வற அப்பாவை எதிர்பார்க்கிற பிள்ளையோட பரவசம் சொல்லி விளக்க முடியுமா ? அந்த காலத்து வாழ்க்கை--அதுவும் எங்க செம்பவாங் வட்டார வாழ்க்கையை எப்படி மறக்க முடியும் ? இதெல்லாம் இப்ப சொன்னாலும் யாருக்குப்புரியும்? ”
ரகுவரன் திகைத்துப்போனான். அச்சச்சனின் கண்கள் நிரந்தரமாக மூடியிருந்தது. ஆனால் அந்த முகத்தில் பூத்த புன்னகையின் மோனம் சொல்லாத அர்த்தங்களை யெல்லாம் சொல்லிவிட்டது. மானசீகமாக சுடுதண்ணிப்பாசாவின் மந்திரநீர் பட்டாற்போல் அப்படி ஒரு ஆசுவாஸம் அச்சச்சனின் முகத்தில் படர்ந்திருந்தது சொர்க்கத்தில் கட்டெறும்பாய் அவரது செம்பவாங் தோழர்களை நோக்கி கைலாயத்தில் பறந்து கொண்டிருந்தார் அச்சச்சன் குஞ்ஞு குட்டன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.