மின்சார விசைப்படகிலிருந்து ஒரு துள்ளு துள்ளிக்குதித்து கீழே இறங்கியபோது பீய்ச்சித்தெறித்த தண்ணீர்த்திவலையில் ,கால்முட்டிவரை நனைந்துவிட்டது. நேரம் இன்னும் புலரவில்லை.என்றாலும் ஈர பேண்டுடன் பிரயாணப்பையைத் துக்கிக்கொண்டு நடப்பது கொஞ்சம் சிரமாகத்தான் இருந்தது. இருள் பிரியாத இந்த நேரத்திலும், சில்வண்டுகளா இல்லை,ட்வீட்டிப் பறவைகளா ,என்று அனுமானிக்க முடியாத அந்த கிறீச்சிடல் ரீங்காரம் சிவநேசனை மிகவும் கவர்ந்தது. சுற்றிலும் கடல்சூழ் இந்த தீவில் தான் ஸ்வாமிஜியும், அவரது தொண்டரடிப் பரிவாரங்களும் வாழ்கிறார்கள் என்பது பற்றிய ஆச்சரியங்களையெல்லாம் கடந்துதான் சிவா இங்கு வந்திருக்கிறான். ஒவ்வொரு முறை ஸ்வாமிஜி மலேசியாவுக்கு வரும்போதும் தனி தரிசனத்துக்கு நிறையவே சிரமப்பட்டிருக்கிறான். பகீரதப்ரயத்னத்துக்குப் பிறகு அவரது பிரத்யேக தொண்டரடியிடம் ,ஸ்பெஷல் பாஸ் எனும் கரிசனத்தில் திருமுகம் காணச்சென்றபோதும் சிவநேசனால் ஒன்றுமே மனம் விட்டுப்பேச முடியவில்லை. அப்பொழுதும் சுற்றி அவரது நிழல்போல் அணுக்கத்தொண்டர்கள் நிரம்பியிருக்க சிவ நேசனுக்கு பேசுவதற்கு எதுவுமே இல்லாமல் இருந்தது. ஸ்வாமிஜி, என்று மட்டுமே நாத்தழுதழுக்க ஆசி பெற்றுக்கொண்டு திரும்பிவிடுவான். ஸ்வாமிஜி ஏழைகளுக்கு நிரம்ப உதவுபவர். பள்ளிக்கூடங்கள் கட்டியிருக்கிறார். மருத்துவமனை கட்டியிருக்கிறார்.இந்த உலகில் பிறந்த யாருமே அனாதையில்லை, என்பதாலேயே அனாதை இல்லம் என்ற பெயரைத்தவிர்த்து,”ஸ்வாமிஜி இல்லம்” என்ற பேரில் நிறைய குழந்தைகள் தங்கிப்படிக்க இலவச விடுதி, கல்விசாலை என, அவர் சேவை செய்யாத துறையே இல்லை. உலகின் பல நாடுகளில் அவரது கீர்த்தி பரவியிருந்தது.இதனாலேயே உலகம் முழுக்க பரிசுத்த தொண்டர்கள் இவருக்கு நிரம்பியிருந்தார்கள். அவர்களில் ஒருவராகத் தன்னை நினைப்பதே சிவநேசனுக்கு பெருமையாக இருந்தது.என்ன பேறு பெற்றிருந்தால் இவர் வாழுங்காலத்தில் தானும் ஜனித்திருக்கிறோம் என்பதே அவ்வப்போதைய அவனது பரவசமாக இருந்தது. ஆனால் அவனுக்கு வாழ்க்கைப்பட்ட மலர்விழியின் கேள்வி வேறாயிருந்தது.
”அவர் அவ்வளவு பெரிய மஹானாயிருந்தா பிறகு ஏங்க நம்மைப்போல நடுத்தரக்குடும்பஸ்தர்கள் கிட்டே டொனேஷன் கேக்கறார்? ”
அடச்சே, மூடமே , அவரா நம்ம கிட்டே கேக்குறார்? நம்மோட கர்மவினை தீர நாம தானே கொடுக்கணும். நாம கொடுக்கற ஒவ்வொரு காசும் அப்படியே எத்தனையோ ஏழை பாழைகளுக்குத் தானே போவுது? எத்தனையோ ஏழைப்பொண்ணுங்களுக்குத் தாலியாவும் , அவுங்க சீக்குக்கு மருந்தாவும் தானே போவுது ? இதுக்குப் போயி கணக்கு பாக்குறியே?
“அப்படீன்னா என் தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு ஆயிரம் வெள்ளி கடனாக்கேட்டதுக்கு நீங்க ஏன் எங்கப்பாவை அப்படி என்கிட்டெ திட்டினீங்க?
என்ன பதில் சொல்ல? , நாவெழாது சிவநேசனுக்கு. என்றாலும் விட்டுக்கொடுக்க மனம் வராது.
”முதலில் உனக்கு ஞானோபதேசம் செய்ய ஸ்வாமிஜி கிட்டே ஒருநாள் அழைச்சுட்டு போகணும்.
”அந்த வேலை மட்டும் எங்கிட்டே வேண்டாம்.நான் கோயில்ல இருக்கற கடவுளை மட்டும்தான் வணங்குவேன்.இந்த சாமி, பண்டாரம், போல ஆளுங்களையெல்லாம் நீங்க பாத்தா போதும்.. என்னை கூப்பிடற வேலையை வச்சுக்காதீங்க, ” என்று பட்டென்று பதில் சொல்லிவிட்டு உள்ளே போய் விடுவாள். இவனாலும் அதட்ட முடியாது.ஏனென்றால் இந்த மாதபட்ஜெட்டுக்கு விழிபிதுங்கியபோது அவள் ட்யூஷன் சொல்லிக்கொடுத்த பணத்திலிருந்துதான் உதவினாள்.
ரொம்ப நாட்களாகவே சிவநேசனுக்கு ஒரு குறையிருந்தது. இன்றுவரை அவனுக்கு முறையாக ஒரு குரு அமைந்ததில்லை. எத்தனையோ, சன்மார்க்க ஸ்வாமிஜிகளை சந்தித்திருக்கிறான்.ஆனால் யாரையுமே முழுமையாக அவனால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை.அல்லது அவனுக்கு அதற்கான ஞானவழி தெரிந்ததில்லை.
இந்த ஸ்வாமிகளைப் பார்த்தபோதும் அவனுக்கு வழக்கம்போல் வியப்புதான் ஏற்பட்டது, ஆனால் அவனுடைய நெருங்கிய நண்பன் முத்தையாவுக்கு ஸ்வாமிஜி தலையைதொட்டவுடன் அப்படியே மின்சாரம் தாக்கினாற் போல் உடம்பெல்லாம் அதிர்ந்து போனது. மற்றொரு நண்பனுக்கு அவ்வளவு நாளும் இருந்த தீராத தலைவலி அந்த நிமிஷம் அப்படியே மட்டுப்பட்டது.இப்படி பலருக்கும் பல ஆச்சரியங்கள் நடந்தது.
சிவநேசன் மிகவும் சிரமப்பட்டுதான் இந்த பிரயாணத்தை தொடங்கியிருந்தான்.இப்போதைய நிலைகொள்ளா ஆர்வம், சிங்கப்பூரிலிருந்து வந்த தன்னை, எப்படி இங்கிருந்து போகும்வரை, ஒவ்வொருநாளையும் அனுபவித்து, கரைந்து, ஐக்கியமாக்கி அமிழ்வது என்பதில் மட்டுமே.பத்து நிமிஷங்களுக்குப்பிறகு சோலையைக்கடந்து வந்தவன், எதிரே கண்ட காட்சியில் ஒருவினாடி கண்களை இமைக்கவும் மறந்துபோனான்.குடில்கள், ஓலை வேய்ந்த ஐம்பது அறுபது குடில்கள் கைக்கு அடக்கமாய் மோனத்தில் உறைந்து காட்சியளித்தன. சுற்றிலும் குளிர்ந்த சோலை,அதற்கும் அப்பால் நாலாபுறமும் நீர்பரப்பு. கடல் அல்ல என்றாலும் காயல்போல் நீர்மட்டம் சூழ்ந்ததுவே.
என்ன கண் கொள்ளா காட்சி.பச்சைப்பசேலென்று ஒவ்வொரு குடிலுக்கும் முன்னால் காய்கறித்தோட்டம், சிலகுடிலுக்கு முன்னால் பூந்தோட்டம், இன்னும் சில இந்தப்பக்கம் பார்த்தால், வாழையும், ஆரஞ்சுமாய் அட, பழச்சோலையும் கூட, தெரிகிறதே ?கண்கள் முழுக்க இயற்கையைப் பருகியபடி, சிவநேசன் ஆஸ்ரமத்தின் பெயர்ப்பலகை தொங்கிய குடிலின் முன்னால் போய் நின்ற அடுத்த நிமிடம் கிறீச்சென்ற ஒலியுடன் வாசல்கதவு திறந்தது காலரில்லாத வட்ட பனியன் அணிந்த மனிதர் ஒருவர், உள்ளே வாருங்கள், என்பதுபோல் சைகை செய்ய, சிவநேசன் அப்ப்டியே செய்தான். வெளிநாட்டவருக்கான பாரம் பூர்த்தி செய்து,,அப்பொழுதே பணம் கட்டிவிட்டு, ஒருவார்த்தை பேசாமல் பனியன்காரரை தொடர்ந்தான்.
” குளித்துவிட்டு தயாராக இருங்கள், சத்சங்கத்துக்கு உங்களை அழைத்துப்போகிறோம்’. குடிலுக்குள் நுழைந்தபோது துணுக்கென்றாகிவிட்டது. இரண்டு மரக்கட்டில்கள்,இரண்டு இழுப்பான்கள் கொண்ட குட்டி அலமாரி . மண் தரை சுத்தமாக மெழுகப்பட்டிருந்தது. சிவநேசன் உள்ளே நுழைந்தபோதும் அடுத்தகட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த உருவம் துளியும் அசையவில்லை. எங்கே போய்க் குளிப்பது, யாரைக் கேட்பது என்று புரியவில்லை. ஆயாசத்துடன் பிரயாணப்பையை கீழே வைத்துவிட்டு கட்டிலில் சாய்ந்ததுதான் தெரியும். விமானப்பயணம், பின் கார்ப்பயணம், இறுதியாக மின்விசைப் படகுப்பயணம், என ஒன்றரை நாள் அலையாய் அலைந்து சோர்ந்துபோன உடம்பு,அதற்குமேலும் அவன் கட்டுக்குள் அடங்கமாட்டேன் என்று பிடிவாதமாக கழன்று கொண்டது. சிவநேசன் ஆழ்கடலை நோக்கி நீந்திக்கொண்டிருந்தான்.. முத்துக்கள் எங்குமே கிட்டவில்லை. அவனால் நம்பவே முடியவில்லை.வெள்ளைப் பளிங்குக் கற்கள் தான் கைகளில் நிரம்பி வழிந்தது. இன்னும், இன்னும் ஆழம் என அவன் துளைந்து கொண்டிருந்தபோது, ஏதோ பளிச்சென்று மின்னிட சிவநேசன் பரவசப்பட்டுப்போனான். இதுதான், இது தான் முத்து, அச்சு அசலான முத்து இதுவே தான், என இரு கைகளாலும் வாரி எடுக்க முயன்றபோது, வெறும் சுண்ணாம்புப்பாறையைப் பிய்த்தெடுத்திருந்தான்.
சிவநேசன் சோர்ந்துபோகவில்லை. ஊன்வெறி கொண்ட பாகனாய், கையில் கிடைத்த பாசிப்பச்சையை எல்லாம் கிழித்தெறிந்துகொண்டு முன்னேறினான்.கண்ணைச்சொக்கும் ஜாலவர்ணங்களால் பூரித்துத் திகைக்கவைக்கும்,வைரமோ, வைடூரியமோ வேண்டாம்,.மொழுமொழுவென்று வெண்பட்டாய் மொட்டுப்போல் கைக்கடங்கும் முத்து, ஜலபிரவாஹத்தில் கடலில் கிட்டும் அசல் நல்முத்துதான் அவனுக்கு வேண்டும்.ஆழ்கடலின் விஷஜந்துக்கள், விசித்திர பிராணிகள், என எல்லாமே அவனை வேடிக்கை பார்ப்பதையும் மறந்து,கடும்புயலாய் சிவநேசன் துளைந்துகொண்டிருந்தபோது, சுரீர், என ஏதோ கடிக்க , உலுக்கி எழுப்பினாற்போல் கண்விழித்தான்.
“இப்பொழுதே போனால்தான் குளித்துவிட்டு சத்சங்கத்துக்குள் நுழையமுடியும்.” எதிரே நின்றவன் நேபாளியோ, குஜராத்தியோ தெரியவில்லை.குளியலும் பூஜையும் அத்தியாவசியமாக இருந்ததால்,மேற்கொண்டு யோசிக்கவில்லை. அருகிலுள்ள சுனையில் குளித்துவிட்டு, மாற்றுடை தரித்து, கைப்பையை மட்டும் கையோடு எடுத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தபோது , அனைவரும் ” ஓம் ’ என்று தொடங்கியிருந்தார்கள். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு கண்களைத் திறந்தபோது பலரும் கலைந்து போயிருந்தார்கள். பக்தி எனும் நங்கூரத்தில் பாய் விரித்த நம்பிக்கை பழுதுபடவில்லை.சிவநேசன் மெய்ம்மறந்துபோய் அமர்ந்திருந்தான். இந்த மோனத்திலிருந்து விடுபடமுடியவில்லை, சத்சங்கம் என்றால் என்ன ? என்பதற்கு ஆசிரியர் ஸ்வாமி ஒருவர் கொடுத்த பிரசங்கம் அவனை அப்படி ஈர்த்தது.
”ஒருவர் படுக்கும் இடம்,,இருவர் இருக்க இடம் தந்து, இருவர் இருக்கும் இடம் மூவர் நிற்க விரிந்து, நால்வரும் நல்ல கூட்டுறவாய் ஆகும் உணர்வு ஸ்தானம் தான் சத்சங்கம்.”
"உங்கள் அகக்கண் திறக்கட்டும். உள் நின்று உருகி விளிக்கும்போது, அகம் மலரும் .மலரவேண்டும்.ஆங்கு அந்த அகக்கண் மலர்த்தும் மந்திரம் தான் உங்கள் வேதம். வேதம் படிக்க நீங்கள் எங்கும் போகவேண்டாம். மனவெளியில் காணும் கதாம்ருதமே மந்திரம். உருவாய் அருவாய் , எங்கும் இறை உண்டு.”
வெள்ளி உருகியது.பொன்னில் வேய்ந்த அத்தனை ஸ்படிகங்களும் கனிமமாய் கனிந்துருகி காணாமல் போயிருந்தது.சிவநேசன் எழவில்லை.தானும் ஒரு துளசிதாசராய், மீராபாயாய், அனைத்துப்பற்றுகளும் அறுத்து, ஈஷ்வர வீக்ஷண்யம் மட்டுமே போதும், என வாழ்ந்தாலென்ன என்று கூடத் தோன்றிவிட்டது. சரியாக மாலை ஐந்து மணிக்கு சிவநேசனுக்குப் பசித்தது.சாப்பாட்டு அறை எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. வாசலிலிருந்தே ஒவ்வொரு அறையாகத் தேடத்தொடங்கினான். எதிரே வந்த சாது ஒருவர் விசித்திரமாக அவனைப்பார்த்தார்.அவரே உணவு அறைக்கு அழைத்துச்செல்ல மிகப்பெரிய ஆச்சரியம் அவனுக்கு காத்திருந்தது. சத்சங்க ஆசிரியர் உணவு பரிமாறிக்கொண்டிருந்தார்.எத்தகு மஹான்? இவரா இங்கு உணவு பரிமாறுகிறார். பாசிப்பயறு கஞ்சி, ராகிக்கஞ்சி,பாலில் கலந்த ஓட்ஸ், பிஸ்கட்,பழம், என பார்த்தபோது சிவநேசன், ஓட்சும் பிஸ்கட்டும் மட்டும் பெற்றுக்கொண்டு பணம் கட்டினான். சாப்பிட அம்ர்ந்தபோது தான் உள்ளே போவேனா என்றிருந்தது. ,அருகில் அமர்ந்து , ராகிக்கஞ்சியை ஆவலாதியாய் உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்த குழந்தைகள் ஆஸ்ரம சீருடையில் இருந்தார்கள். இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் போய் ஓட்சும் பிஸ்கட்டிலும் உணவை முடித்துக்கொள்வதில் பிரச்சினை இருக்கவில்லை. இங்கு யாருமே காப்பியும், தேநீரும் குடிப்பதில்லை.வயதானவர்கள்,அல்லது நோயாளிகள் என்றால் ஹார்லிக்ஸ் மட்டும் மருத்துவர் பரிந்துரையோடு கொடுக்கப்படும். அறைக்குள் திரும்பி வந்தபோது, அறைத்தோழர் சாமி கண்மூடி தியானத்திலிருந்தார்.
சப்தமிடாமல் வெளியே வந்த சிவநேசன் அந்த ஆஸ்ரமம் முழுக்க சுற்றிப்பார்க்க விரும்பினான். சுனையும் மரமும்,செடிகொடிகளும் ,காய்கறிகளுமாக என்ன ஏகாந்தமான இடம். என்ன இல்லை இங்கு ? பார்க்கப் பார்க்க கண்கள் போதவில்லை.மீண்டும் குடிலுக்கு வந்த போது அறைசாமி வெளியேறியிருந்தார். இரண்டு நாட்களிலேயே ஆஸ்ரம வாசம், நியம நிஷ்டை எல்லாமே அவனுக்கு அத்துப்படி ஆகிவிட்டது. எல்லோருமே சிவநேசனை "சுந்தர்ஜி, " என்றழைத்தது மட்டும் மிகவும் பிடித்தது. காலையில் சுடச்சுடக் காப்பி குடித்து, இட்டிலியோ, தோசையோ பசியாறி, மதியமும் சுவைபட உண்டு பழகியவனுக்கு ,இங்கு கஞ்சியும், கீரையும் ,கிழங்கும், என மருந்துணவாய் சாப்பிடுவது சிரமமாகத்தான் இருந்தது. என்றாலும் ஈஷ்வரா, சமர்ப்பணம், என்று சகலமும் அர்ப்பணித்துக்கொண்டு வந்தவனால் கேவலம் நாவடக்க முடியாதென்றால், பின் ஆன்மீகத்தின் கரையை எப்படித் தொடமுடியும்?
மூன்றாவது நாள்தான் அருட்பிழம்பாம் மூல ஸ்வாமிகளைப் பார்க்கும் பேறு கிட்டியது.அன்று பெளர்ணமிக்கு முந்திய நாளாம் புதன்கிழமை..இந்த புதன்கிழமை மட்டுமே ஸ்வாமிஜி குழந்தைகளோடு சுனையில் நீராடுவார். பக்தர்களின் குறைகளைக் கேட்பார். கல்கண்டும் அங்கு விளைந்த ஆரஞ்சும் கொடுத்து ஆசி கூறுவார். புதிதாக வந்த தன்னை எங்கே அழைக்கப்போகிறார் என்று தூர நின்ற சிவநேசனைப் பார்த்துக் கண்சிமிட்டிய ஸ்வாமிஜி, அவனை அருகே அழைத்ததை நம்பத்தான் முடியவில்லை.அப்படியே நெடுஞ்ச்சண்கிடையாய் ஸ்வாமிஜியின் பாதாரவிந்தங்களில் விழுந்தவன் கேவிக்கேவி அழுதான்,
” உனக்கென்ன கஷ்டம் ?” என்று ஸ்வாமிஜி கேட்கவில்லை.
”வேலையிடத்தில் எனக்கும் மேலதிகாரிக்கும் சதா பிரச்சினை.. உடன் வேலை செய்பவர்களோ பொறாமை பிடித்தவர்கள்.என் மனைவி நல்லவள் தான்.ஆனால் என்னுடைய ஆன்மீகத்தேடலைப் புரிந்துகொள்ள மாட்டேன்கிறாள். ‘ என்றெல்லாம் ஒருவழியாகச் சொல்லி முடித்தபோது, ஸ்வாமிஜி அவன் உச்சந்தலையில் கை வைத்தார். இதுதான், இந்த தருணத்துக்காகத்தான் சிவநேசன் காத்திருந்தான்.என்ன கொடுமை, என்ன கொடுமை.மேனி சிலிர்க்கவில்லை. ரோமாஞ்சம் ஏற்படவில்லை. எப்பொழுதும் போலவே சர்வ சாதாரணமாய் தண்ணென்று உடம்பிருக்க, ஸ்வாமிஜியின் தலைதொடலில் எந்த அதிசயமும் நிகழவில்லை. சிவநேசன் குடிலுக்குள் வந்தபோது நொந்துபோனான். புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே ஸ்வாமிஜி தொட்டால் ரோமாஞ்சத்தில் சிலிர்க்கமுடியும்.
தான் அருகதையற்றவன் தான், என்பதை நினைக்க நினக்க துக்கம் தாங்கவில்லை. சிவநேசனுக்கு அன்றிரவு தூங்கவே முடியவில்லை.அறைத்தோழர்சாமியைப்போல் பரப்பிரும்மமாய் அவனால் கிடை கொள்ளமுடியவில்லை. இரவு மணி பத்து கூட ஆகவில்லை. விச்ராந்தியாய் வெளியே நடந்தவனுக்கு ஒரு குடிலின் முன்னால் ஏதோ சப்தம் கேட்க விரைந்தபோது, சத்சங்கம் கற்பித்த
ஆசிரியர் ஸ்வாமி கலங்கிப்போய் , வெளியே நின்று கொண்டிருந்தார். முகத்தில் தெறித்திருந்ததை அவர் துடைக்க முற்பட்டதால் சிவநேசனை கவனிக்கவில்லை. கையால் முகத்தில் விழுந்ததை வழித்துக்கொண்டே அவர் போனது வியப்பாயிருந்தது. என்ன என்று தெரிந்துகொள்ளாமல் போனால் இன்று முழுக்க சிவராத்திரிதான் என்றுணர்ந்து ,துணிந்து கேட்டுவிட முடிவெடுத்தபோது, குள்ளமாயிருந்த இன்னொரு சாது, வெளியே வந்து எட்டிப்பார்க்க, சிவநேசன் அருகே போனான்.
“சாமி கோச்சுண்டு போயிட்டாரா? சரிதான், என்று சாது சிரிக்க, “என்ன நடந்தது ? என்று கேட்டுவிட்டான்.
”இது என்ன புதுசா? இன்றைக்கு புதன்கிழமை. சாமி இட்டிலி தவிர வேறெதுவுமே இரவுக்கு சாப்பிடமாட்டார்னு தெரிஞ்சும், மாவு பொங்கலே, தயிர் இல்லே , அப்படி இப்படின்னா, கோபம் வாராதாக்கும் ! கீழே விழுந்து கிடந்த சப்பாத்தியும் சப்ஜியும் அப்புறப்படுத்திக்கொண்டே சாது மேலும் கூறினார். மூல ஸ்வாமியை திருப்திப்படுத்தத் தெரியாத இவரெல்லாம் என்ன படிச்சு என்ன? “ குள்ளசாமி எப்போதோ உள்ளே போய் விட்டார். சிவநேசன் எப்போது அறைக்குள் வந்து படுத்தான் என்று தெரியவில்லை, இரவெல்லாம் கஞ்சியை உறிஞ்சிக்குடிக்கும் பிஞ்சுக்குழந்தைகளும், ஈஷ்வரனையே கண்ணுக்குள் கொண்டு வந்த சத்சங்க ஆசிரியர் ஸ்வாமியும் மட்டுமே சுழன்று சுழன்று நினைவை அலைக்கழித்தார்கள், பிரயாணப்பையை உள்ளே தூக்கிப் போட்டுவிட்டு,பாய்ந்து மின்விசைப்படகில் ஏறி அமர்ந்தபோது, ”அதற்குள் சிங்கப்பூருக்குத் திரும்பிப்போகிறீர்களா ” என்ற குரல் கேட்டுத் திரும்பினால் பூக்குடலையோடு ஆசிரியர் ஸ்வாமி. சிவநேசனுக்கு ஏனோ சிரிப்பு வந்தது. இவன் பதிலுக்குக் காத்திராமல் மின்சார விசைப்படகு தண்ணீரைத் துளைந்து வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.