தேம்பாவணி பெருங்காப்பிய மரபிற்கேற்ப கொன்ஸ்ரைன் ஜோசப் என்னும் இயற்பெயர்கொண்ட வீரமாமுனிவரால் ஆக்கப்பட்டது. இதன் ஆசிரியரான வீரமா முனிவர் தமிழ் நூல்களை ஐயந்திரிபுறக் கற்று தமிழ்ப் பணி பல புரிந்துள்ளார். எனவே இலக்கிய இலக்கண மரபுகளை நன்கு அறிந்து அம்மரபுகளுக்கேற்ப தனது தேம்பாவணி என்னும் காப்பியத்தை ஆக்கியளித்துள்ளார்.
3615 பாடல்களையும் 36 படலங்களையும் கொண்டு விளங்கும் தேம்பாவணியை ஆசிரியர் காண்டங்களாக வகைப்படுத்தவில்லையாயினும் கதை நிறைவு அடிப்படையில் காப்பியத்தின் உரையாசிரியர் மூன்று காண்டங்களாகப் பாகுபாடு செய்துள்ளார். இந்நூல் 90 சந்த வேறுபாடுகளைக்கொண்டு விளங்குகின்றது. இந்நூலில் கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரைத் தலைவனாகக் கொண்டு நாட்டு, நகரச் சிறப்புக்கள் பலவற்றை எளிய நடையில் பல அணிகள் செறிந்து நயம்பட எடுத்துரைத்துள்ளார். தேம்பாவணி என்றால் வாடாத மாலை என்றும் தேன் போன்ற பாக்களால் ஆன மரியாள் என்றும் பொருள் உண்டு. இக்காப்பியம் மரியாள் என்னும் கன்னியாஸ்திரி ஸ்பானிய மொழியில் எழுதிய “THE CITY OF HOD” என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டது.
18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த வீரமாமுனிவர் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் போன்றவற்றை விரும்பிக் கற்று பெருங்காப்பிய விதிக்கிணங்க இந்நூலை இயற்றியுள்ளார். இது வேத நூல்களையும் கர்ண பரம்பரைக் கதையையும் கூறுகின்றது. அத்தோடு புனைந்துரைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நூலின் முதற் காண்டத்தில் நாட்டு, நகரச் சிறப்பு, சூசை பிறந்த வரலாறு; சூசையின் இளமைப்பருவச் சிறப்பு; சூசை, மரியாள் திருமண நிகழ்வு; இறைமைந்தன் பிறப்பை நோக்கி மகிழ்தல்; சூசையும் மரியாளும் இறைமைந்தனாகிய யேசுவை எருசலேம் திருக்கோயிலுக்குக் கொண்டு சென்று இறைவனுக்கு நேர்ந்து மீட்புக் காணிக்கை செலுத்தி மீட்ட செய்தி போன்றன கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது காண்டத்தில் தேவதிருக்குழந்தையை ஏரோதன் கொல்ல எண்ணுதல்; அவனுக்கஞ்சி எகிப்து நாட்டிற்குக் குழந்தையை எடுத்துச் செல்லுதல்; வழித் துணையாக வானவர்கள் செல்லுதல்; எகிப்து நாட்டில் இக்குழந்தை அருள் புரியச் சொல்லும் தலம் இது எனக்கூறி சூசையைத் தேற்றுதல் போன்ற செய்திகள் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது காண்டத்தில் திருக்குடும்பத்தார் எகிப்திலிருந்து செய்த தவச் சிறப்பு கூறப்படுகின்றது. மற்றும் முன் நிற்க முடியாமல் தோற்று ஓடிய பேய்கள் முதலிய செய்திகள் கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில் முதலாவது காண்டத்தின் மகவருள் படலத்தில் இயேசு கிறிஸ்து பிறந்ததும் மரியாளும், சூசையும் அடைந்த மகிழ்ச்சி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கன்னிமரியாளின் வயிற்றினுள் அசைந்த யேசுகிறிஸ்து மரியாளின் அரிய கன்னிமைக்கு அழிவில்லாமல் மார்கழி மாதம் இருபத்தைந்தாந்திகதி ஞாயிற்றுக் கிழமை மனிதராக இவ்வுலகில் பிற்நதார். இயேசு கிறிஸ்து மார்கழியில் பிறந்துள்ளதை பின்வரும் செய்யுள் முன்வைத்துள்ளது.
'மாதம் மார்கழி வைகல் ஐ ஐந்து ஆய்,
எது இலா நிசிக்கு இருந்த மூ ஐந்து ஆய்,
ஆதி நாள் என, ஆதி நாதனைக்
காதல் நாயகி களிப்பின் நல்கினார்' (மகவருள் படலம்: 90)
உலகிலுள்ள பாவங்களை நீக்க குழந்தை நாதன் தனுராசியில் பிறந்தார். இயேசு கிறிஸ்து பிறந்ததும் துன்பம் நீங்கி, தீய செயல்களெல்லாம் மறைந்து போக, நோய்களும் நீங்கி புண்ணியங்களெல்லாம் உருவாகி, அறநூல்களும் ஓங்கி வளர்ந்தது. இதனை பின்வரும் செய்யுள் கூறியுள்ளது.
'பேயும் போயின அமரர் பிந்தினர்
தீயும் போயின அறங்கள் தேறின
நோயும் போயின நூற்கள் தேர்ந்தன
தோயும் ஓகையில் துளங்க வையகமே' (மகவருள் படலம்: 100)
நட்சத்திரங்கள் ஒளியைப் பரப்பி குழந்தை நாதனைக்கான முயன்றுள்ளதோடு, இயேசுவின் பிறப்பால் மரங்கள் பூத்து இனிய கனிகளோடு காட்சியளித்தது. குகையில் பிறந்த யேசுகிறிஸ்துவை வானவர்கள் பார்த்து மகிழ்ச்சியுற்று குழந்தையை வணங்கிச் சென்றனர். இவ்வாறு பூவுலகத்தில் உள்ள மானிடர்களின் துன்பங்களைப் போக்கவும் அநீதியை அழிக்கவும் இயேசு கிறிஸ்து பிறந்துள்ளார் என்பது இதனூடாக வெளிப்படுகின்றது.
இயேசு கிறிஸ்து பிறந்ததும் வனவர்கள் முதலில் மரிளாளின் முன்கொண்டு வந்ததும் துன்பத்தில் இருந்த மரியாள் எதிர்த் திசையில் நின்ற சூரியனைப் பார்க்கும்போது சந்திரனைப்போன்று அதிகரித்த முகத்தோடு விளங்கினார்.
'எதிர்த் திசையில் நின்ற பகலவனைக் காணும் முழு
மதிபோல, இன்பம் முற்றிய முகத்தோடு விளங்கினாள்' (மகவருள் படலம்: 110)
மரியாளின் முகமலர்ச்சியைக் கண்ட வானவர் அவளது கையில் இயேசு கிறிஸ்துவை வழங்கினார். யேசு கிறிஸ்துவைப் பெற்றுக்கொண்ட மரியாள் மார்போடு அணைத்து அழகு நிறைந்த அடிகளை தடவிக் கொடுத்து வணங்கினார்.
'வாய்ந்த பூம்பத நீவில ணங்கின
னாய்ந்த நாற்கடற் தாருணர் வெய்தினார்' (மகவருள் படலம்: 113)
தன் உயிரைப்போன்ற மகளைத் தன் அழகிய கைகளில் ஏந்தி துன்புற்று மயங்கிய உயிர்களைக் காத்தருளுமாறு வணங்கினார். பாவங்களைத் தீர்ப்பதற்கு மனிதனாகி வந்த இயேசுகிறிஸ்துவிற்கு அன்போடு பாலூட்டி மகிழ்ந்தார்.
'மருள் சுரந்தவடுக்கெட மைந்தனா
யருள் சுரந்தமு தாய்தர நுங்கினான்' (மகவருள் படலம்: 121)
குழந்தை பிறந்ததைக் கேள்வியுற்ற சூசை இன்பத்தில் மரியாளின் அழைப்போடு தாமரை மலர் போன்ற இயேசு கிறிஸ்துவைக் கண்ணுற்றுக் கடல் போன்றதொரு இன்பத்தை அடைந்தான்.
'சந்த நேரிய கன்னி நேர்கையிறாம நேரிய முத்தெனச்
சிந்து நேர்நய மூழ்கு சீர்மையிறேற நோக்கினன் சூசையே' (மகவருள் படலம்: 124)
குழந்தையாகிய இயேசு கிறிஸ்துவை வணங்கி கண்களில் இருந்து கண்ணீர் வழிய வானுலகில் உள்ளோர் வியந்து நோக்கும் அளவிற்கு இயேசு கிறிஸ்துவைப் புகழ்ந்து மகிழ்ச்சியடைந்தான். மரியாள் இயேசு கிறிஸ்துவை கையில் ஏந்தி தான் அடைந்த மகிழ்ச்சியைப்போன்று சூசையும் மகிழ்ச்சிடைய வேண்டுமென குழந்தையை சூசையின் கைகளில் வழங்க நினைத்தாள். இவ்வாறு சூசையின் கைகளில் இயேசு கிறிஸ்துவை வழங்க நினைத்ததை பின்வரும் பாடலடிகள் வெளிப்படுத்தியுள்ளன.
'இன்புறத் துணை ஆதல் என, 'இன்று எழுந்து உறை நாதனை
உன் புறத்து இடை ஏந்துக' என்று, அலர் ஒத்த சொல் கரம் நீட்டினாள்' (மகவருள் படலம் 126)
மரியாள் கூறியதைக் கேட்ட சூசையும் இயேசு கிறிஸ்துவை கைகளில் ஏந்தி மார்போடு அணைத்து முத்தமிட்டு கண்களில் ஒற்றி, கண்ணீரில் நனைத்து, மனம் நிறைவு பெற மலர்போன்ற காலடிகளைத் தலைமேல் ஏற்றி வைத்து மகிழ்ச்சிடைந்தான்.
'கைக் கலத்தின் எடுத்து மார்பொடு காதல் ஓங்க அணைத்தலும்
முத்தம் இட்டலும் நோக்கில் தீட்டலும் உற்ற நீரில் நனைத்தலும்
சித்தம் முற்றலும் நாள் மலர்க்கழல் சென்னியின் மிசை வைத்தலும்
திறத்தலும் என் மகிழ்ந்து உறும் இன்பம் எல்லையும் இல்லையே' (மகவருள் படலம் 126)
சூசை மலர்க்கொடியை குழந்தை இயேசு கிறிஸ்துவின் பாதங்களில் சூடியதும் குழந்தை புன்னகை காட்ட பேரின்பத்தை அடைந்தான். குழந்தை இயேசு கிறிஸ்துவின் மேனியைத் தனது ஆடையால்மூடி கட்டித் தழுவினான். மரியாளும் குழந்தை நாதனை உற்று நோக்கி மகிழ்ச்சியடைந்தாள். சூசை மரியாளின் இன்பத்திற்குக் காரணமான குழந்தை நாதனை மரியாளின் கைகளில் வழங்கினான். மரியாளும் மகிழ்ச்சியோடு குழந்தை நாதனைப் பெற்றுக் கொண்டாள். குழந்தை நாதனும் குகையில் உறங்கினான்.
இயேசு கிறிஸ்துவை வணங்கி யேசு கிறிஸ்துவிடம் பாவங்களையெல்லாம் அழிக்குமாறு கூறினாள். இதைக்கேட்ட குழந்தை இயேசு கிறிஸ்து புன்னகை செய்தது. இதைக்கண்ட மரியாள் மகிழ்ச்சியால் குழந்தையின் உடலை அணைத்து முத்தமிட்டாள். அந்த மகிழ்ச்சியால் குகையே மகிழ்ச்சியாகக் காணப்பட்டது.
'முகை செய் மேனி தழுவி முத்திட்டலுங்
குகை செய் யின் பெழக் கோலமிட் டொத்ததே'(மகவருள் படலம் 126)
இவ்வாறு இயேசு கிறிஸ்து பிறந்ததும் மரியாளும், சூசையும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது இதன்மூலம் வெளிப்படுகின்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.