பத்திரிகையாளர்கள் ஐம்பது ஆண்டுகால தொடர் சாதனையைச் சாதிப்பது என்பது அபூர்வமான ஒரு விஷயம் அல்ல. ஆனால் திருச்செல்வம் என்ற ஒருவரின் ஐம்பது ஆண்டு கால பத்திரிகைச் சாதனை என்பது அபூர்வமானதுதான். அசாதாரணமான சாதனைதான். அரசபடைகளும், அந்நிய படைகளும், விடுதலைக் குழுக்களும் கொடூரமாக மோதிக்கொண்ட ஒரு கால கட்டத்தில் கோரமான ஒரு யுத்த சூழலில் தினமும் கணமும் சாவு நிழல் போலத் தன்னைச் சூழவரும் நிலையில் ஒரு பத்திரிகையாளனாக வாழ்வதென்பது சாதனைதான்.
ஈழநாடு, தினகரன் ஆகிய பத்திரிகையில் பத்திரிகையாளராக தன் தொழிலை ஆரம்பித்த திருச்செல்வம் அவர்கள், இந்திய அமைதிப்படைகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்த காலப்பகுதியில் ஈழமுரசு, முரசொலி ஆகிய ஆகிய பத்திரிகைகளின் ஸ்தாபன ஆசிரியராகவும், முரசொலியின் பிரதம ஆசிரியராகவும் பணிபுரிந்த காலங்கள் ஈழத்துப் பத்திரிகை வரலாற்றில் நின்று நிதானித்துச் செல்லவேண்டிய காலப்பகுதிகளாகும்.
1986ஆம் ஆண்டில் முரசொலி அதன் இரண்டாவது ஆண்டை எட்டியபோது பதினாராயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன என்பது ஈழத்தின் பிரதேச சஞ்சிகை ஒன்றின் சாதனையாகும்.
உலகின் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்துக்களில் மலிந்த அபாயகரமான நாடுகளில் ஒன்றாக இலங்கை பிரபலம் பெற்றிருந்த நேரம் அது. சிங்களப் பத்திரிகையாளர்களும் அரசாங்கத்தின் அராஜகங்களுக்கு இரையாகினார்கள் என்றாலும் தமிழ் பத்திரிகையாளர்கள் பெருந் தொகையில் தம் உயிரைப் பலியிட நேர்ந்தது.
1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் பத்தாம் திகதி இந்தியா அமைதி காக்கும் படையினர் முரசொலிப்;பத்திரிகை அலுவலகத்தையும் ஈழமுரசு பத்திரிகை அலுவலகத்தையும் குண்டு வைத்துத் தகர்த்த நிகழ்வு, உலகின் பத்திரிகை வரலாற்றின் கறை படிந்த பகுதியாகும்.
திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோத திலீபனுக்கு ஏதாவது நடந்தால் இந்தியாவே பொறுப்பு என்று திருச்செல்வம் அவர்கள் எழுதிய தலைப்பு வரிகள் இந்திய அமைதிப் படைக்கு எரிச்சலை ஊட்டியது.
செய்திகளைப் பரசுரிப்பதற்கு தணிக்கை சபைகளை நடாத்த வேண்டும் என்பது இந்திய அமைதிப்படையின் விதி. ஆனால் மரண அறிவித்தல்கள் செய்தி அல்ல என்று கூறி என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற படுகொலைகளை துணிச்சலாக முரசொலியில் வெளியிட்ட பத்திரிகையாளராக திருச்செல்வம் திகழ்ந்தார்.
அந்த நிகர் இல்லாத பத்திரிகைப் பணிக்கு அவர் கொடுத்த விலை பெரியது.
யாழ்ப்பாணக் கோட்டையில் ராணுவ விருந்தினராக 82 நாட்கள் அவர் தடுத்து வைக்கப்பட்டார். அது ஒரு ஆரம்ப சோதனைதான். ஆனால், 1989 ஆம் ஆண்டு திருச்செல்வம் அவர்களைக் கொல்வதற்காக ஆயுததாரிகள் அவரது இல்லத்துக்குள் நுழைந்தபோது அவர் பின் கதவால் தப்பி ஓடிய நிலையில் அவரது ஏக புதல்வன் அகிலனை அவர்கள் கடத்திச் சென்று சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றமை எவரையும் நெகிழச் செய்யும் துயர நினைவுகளாகும்.
ஓரு தந்தைக்காக ஒரு புதல்வனைக் கொன்ற கொடூர சம்பவம் ஈழமண்ணில் நடந்தேறிய பின்னர், கனடா சென்ற திருச்செல்வம் அவர்கள் கனடாவில் ‘தமிழர் தகவல்’ என்ற ஏட்டினைத் தொடர்ந்து மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். லண்டனிலும் ‘தமிழர் தகவல்’ பெயர் கொண்ட சஞ்சிகையின் ஆசிரியராக என். சிவானந்தசோதி என்பவர் திகழ்ந்தார் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அகதிகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை; கனேடிய அரசு விதித்த போது பூனைக்கும் நாய்க்கும் காருண்யம் காட்டும் கனடா மனிதனுக்குக் காட்ட மறுப்பதேன்? மனிதாபிமானம் இங்கும் சாக ஆரம்பித்து விட்டதா? என்று திருச்செல்வம் அவர்கள் தனது ஏட்டில் ஆசிரியர் தலையங்கத்திலே கேள்வி எழுப்புகிறார். மறைந்த அவரது புதல்வன் அகிலனின் நினைவாக 30 இற்கும் அதிகமான நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
பத்திரிகையாளன் என்பதற்கும் அப்பால் 1980ஆம் 1982 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கொழும்பு கலை இலக்கிய நண்பர்கள் என்ற அமைப்பினை உருவாக்கி பத்திரிகையாளர்களை கௌரவம் செய்து வந்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக கனடாவிலும் தமிழ்ப்பணி செய்த சான்றோர்களைத் தனது தமிழர் தகவல் சஞ்சிகை மூலமாக கௌரவப்படுத்தியிருக்கிறார்.
கனேடிய மாநிலத்தில் முதன்மை விருதான பத்திரிகையாளர் June Callwood விருதினைப் பெற்ற பெருமை இவருடையது.
முரசொலியில் புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியும், சிறந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களை வெளியிட்டும் திருச்செல்வம் ஆற்றிய பங்கினை குறிப்பிட்டாக வேண்டும்.
இவ்வேளையில் எழுத்துத் துறைக்குக் களம் அமைத்து என்னை எழுதுவதற்கு ஊக்கம் தரும் புதினம் ராஜகோபால், ஒரு பேப்பர் கோபிரட்னம், பதிவுகள் கிரிதரன், தினக்குரல் பாரதி போன்ற இன்னும் பல பத்திரிகையாளர்களை நான் நன்றியோடு இந்த வேளையில் நினைவிருத்துவது பொருத்தமானது என நம்புகிறேன்.
இதனைவிட பேராசிரியர் கைலாசபதி அவர்கள் மறைவதற்கு முன் கடைசியாக எழுதிய முன்னுரை எஸ்.திருச்செல்வம் எழுதிய ‘மகாகவி பாரதியின் வரலாற்றுச் சுருக்கம்’ என்ற நூலாகும். ‘இந்நூலுக்கு முன்னுரை எழுதும்போது சுகவீனமுற்று ஆஸ்ப்பத்திரியில் படுக்கையில் இருந்தவாறே கடைசிப் பந்திகளையும் சொற்கூட்டிச் சொல்லி என்னைக் கொண்டே எழுதுவித்து தனது கடைசி எழுத்தையும் பார்க்காது கண்ணயர்ந்துவிட்ட அன்புப் பேராசிரியர் கையலாசபதி அவர்களுக்குச் சமர்ப்பணம்’ என்று திருச்செல்வம் அவர்கள் தனது நூலை அவருக்குக் காணிக்கை ஆக்கி இருக்கிறார்.
ஈழத்தின் சகல தமிழ் அறிஞர்களோடும், எழுத்தாளர்களோடும் பத்திரிகையாளர்களோடும் இனிய நெருக்கமான நட்பினை திரு. திருச்செல்வம் அவர்கள் பேணி வந்திருக்கிறார் என்பது அவரைப் பாராட்டத்தக்க பண்புகளில் ஒன்றாகும். எனது தந்தை அகஸ்தியருடனும் இனிய நட்பைப் பேணிவந்தவர்; என்று அறியும்போது என் நெஞ்சம் நெகிழ்கின்றது. திரு. எஸ். திருச்செல்வம் அவர்களின் ஐம்பது ஆண்டுகாலப் பத்திரிகைச் சாதனையை வாழ்த்தித் தொடர்ந்து தனது பத்திரிகைப் பணிகளைத் தொடரவேண்டுமெனக் கேட்டு, வாய்ப்பளித்த ஊடகவியலாளர் பிறேமுக்கு நன்றிகளைத் தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி
- லண்டன் வெளீயீட்டு விழாவில் எஸ். திருச்செல்வத்தின் ஐம்பதாண்டுப் பணி குறித்த எனது பார்வை... -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.