எழுத்தாளர் எஸ்.பொ.வின் நினைவு தினம் நவம்பர் 26. அவர் நினைவாக..
ஈழத்தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஆளுமை எஸ். பொன்னுத்துரை ஆவார். தமிழிலக்கியத்ததின் அனைத்துத் துறைகளையும் இவர் தொட்டவர். நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைப் படைத்துள்ளார். இவரது படைப்புகள் தமிழுலகில் பேசப்படும் ஆகச் சிறந்த இலக்கியங்களாகும். இவை காலங்கடந்தும் நிலைத்து நின்று இமாலய வெற்றி பெறும் என்பதை ஆராய்ந்து இந்நூலில் நிறுவியுள்ளார்.
எஸ்.பொ.அவர்களின் படைப்புகளான சிறுகதை, புதினம், நாடகம்;, கவிதை, உரைநடை, காவியம், வரலாறு மற்றும் மொழிபெயர்ப்புகள் என ஒவ்வொன்றையும் தீவிரமாகப் படித்து, அலசி ஆராய்ந்து, 'இலக்கியப்போராளி எஸ்.பொ. படைப்பாளுமையும் பன்முகப் பார்வையும்' என்ற தலைப்பில் நூலாக்கம் செய்தவர் முனைவர் நா.நளினிதேவி. இவரது பல சிறந்த ஆக்கங்களில் இந்நூல் குறிப்பிடத்தக்கது.
2014ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே எஸ்.பொவின் நூல்கள் முழுமையும் நளினிதேவி ஆய்வுக்குட்படுத்தியதை அறிந்த எஸ்.பொ. மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்று, இக்கட்டுரைகளை மித்ர பதிப்பகத்திலேயே நூலாக்கம் செய்யலாம் என்பதை மகிழ்வோடு தெரிவித்தார்.
நளினிதேவி அவர்கள் எஸ்.பொ.வின் ஒவ்வொரு படைப்புகளையும் படித்ததோடு உடனுக்குடன் ஐம்பதுஃஅறுபது பக்கங்களுக்கு மிகாமல் எழுதி ஞானிஅய்யாவிற்கு அனுப்பிவிடுவார். எஸ்.பொ.வின் அனைத்துப் படைப்புகளையும் குறைந்தது அறுநூறு பக்கங்களுக்கு மேல் எழுதியிருந்தார். அக்கட்டுரைகளை ஒளியச்சு செய்வதற்காக வாங்கிச் சென்ற நபர் எந்த தொடர்பும் கொள்ளமுடியாமல் போனதால், கையெழுத்துப் பிரதிகள் எதுவும் கைக்குக் கிட்டவில்லை. மிகுந்த மனவருத்தம் கொண்டார் நளினிதேவி. எஸ்.பொ. ஆசுரேலியா சென்றுவிட்டார். உடல்நலம் குன்றிவிட்டார். எஸ்.பொ.அவர்கள் தன்கட்டுரையைப் பார்த்துவிடவேண்டும் என்று அதி விரைவாகச் செயல்பட்டார் நளினிதேவி.
2014ஆம்ஆண்டு; நவம்பர் 24ஆம் நாள் தனது எண்பத்திரண்டாம் அகவையில் எஸ்.பொ. இன்னுயிர் நீத்தார். ஒயாது படிப்பது எழுதுவது என்று கடினமாக உழைத்த நளினிதேவி அவர்களும் உடல்நலன்; பாதிக்கப்பட்டார். எஸ்.பொ.வின் மித்ர பதிப்பகம் ஈழவாணியின் பொறுப்பில் வந்தது. ஞானிஅய்யாவின் வேண்டுகோளிற்கிணங்க மறுமுறை எஸ்.பொ.வின் நூல்களை ஆய்வுக்குட்படுத்தினார். பலநூறு பக்கங்களில் எழுதி மித்ர பதிப்பகத்தால் ஒளியச்சு செய்யப்பட்டது. அக்கட்டுரைகளில் ஒளியச்சுபிரதியும் கையெழுத்துப் பிரதியும் என எதுவும் நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயலால் கைக்குக் கிட்டவில்லை.
இளம்பிறை ரகுமான் என்ற இலக்கிய நண்பரின் உதவியால் மித்ர பதிப்பகத்தில் உள்ள ஒளியச்சுப் பகுதிகள் கணினியில் தீவிரமாகத் தேடப்பட்டு, கட்டுரைகள் கிடைக்கப்பெற்றன. இக்கட்டுரைகளைத் தொகுத்து, காவ்யா பதிப்பகத்தின் வழியாக நூலாக்கம் செய்யப்பெற்றது.
நளினிதேவி அவர்களின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஊக்கம், அயராத உழைப்பிற்கு இந்நூல் சான்று.
ஈழமக்களின் குரலாகவும் மொழியாகவும் வாழ்வாகவும் எஸ்.பொவின் கதைகள் உள்ளன. அவ்வக் கால ஈழத்தின் அரசியல், பண்பாட்டு வரலாற்றை இவரின் கதைகள் எடுத்துரைக்கின்றன.
வருங்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர் பணியின் அவலங்கள் மற்றும் தமிழாசிரியர்களின் தமிழ்ப்பற்று, புறஉலக வாழ்க்கையில் பற்றற்ற நிலையையும் 'நெறி' கதையில் கூறுகிறார். 'சுழி', 'ஆண்மை' போன்றவை இத்தகையன.
வணிக நோக்கத்திற்காக எழுதப்பட்ட 'தேடல்' கதையால் எஸ்.பொ. என்னும் படைப்பாளிக்கு மாபெரும் சறுக்கு எற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.
எஸ்.பொ.படைப்பாற்றலின் முழுமையும் மிகுந்த சுவைபட பேசும் புதினம் 'மணிமகுடம்' இப்புதினம் பெரிதும் பேசப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை நளினிதேவி.
வரலாற்றுப் புதினங்களுக்கு உரிய கற்பனையின்றி, வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியலாளரையும் கதை உறுப்பினராகக் கொண்ட முதன்மையும் சிறப்பும் பெற்ற அரசியல் புதினம் மாயினி. நந்தன், மல்லிகா காதல் பின்னணியில் சமகால நிகழ்வுகளைக் கூறுவதோடு, தமிழின் சிறப்பான சித்த மருத்துவ அருமையையும் எடுத்துக் கூறுகிறது.
'ஓர் இனத்தை பவுத்த முகமூடியுடன் அடக்கி ஒடுக்குவது காலத்தின் கொடுமை! இங்குள்ள தமிழர்கள் ஒன்றாக இணைந்தால் எங்கள் பகைவர் எங்கோ மறைவர் என்று சூழுரைக்கும் எஸ்.பொ.வை எழுத்துப் போராளி என்பதற்கு அவர் எழுதிய மாயினி புதினமே தக்க சான்றாகும் என்கிறார்.
எஸ்.பொவின் நாடகக் கலைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைவது 'முறுவல்ஷ நாடகம். படிப்பதற்கும் பார்ப்பதற்கும் உரியதாக விளங்கும் இந்நாடகத்தில் பழந்தமிழ் மரபையும், ஆரியமரபையும், புதுமையையும் காணமுடியும் என்கிறார் நளினிதேவி. விசுவாமித்திரர், மேனகை கதை போன்ற புராணப் புனைவுகள் பெண்ணின் எழுச்சி, தாழ்த்தப்பட்டோரின் எதிர்க்குரல் போன்ற இக்கால நிகழ்வுகளுடன் கூறப்பட்டுள்ளன. அகவிடுதலைச் சிக்கல் உள்ளிட்ட அனைத்தும் எல்லா மட்டங்களிலும் விதிவிலக்கின்றி கிட்டும் சமன்மையே பயனும் பொருளும் நிறைந்தது எனும் மாக்சியக் கருத்தை இந்நாடகத்தில் காணமுடியும் என்பதை எடுத்துரைக்கிறார்.
எஸ்.பொவின் படைப்புலகில் முதல் வெளியீடாக 'அப்பாவும் மகனும்' என்ற புதுக்கவிதை குறுங்காப்பியம் வெளிவந்துள்ளதைக் குறிப்பிடுகிறார். மில்டன் போன்றோரின் இரங்கற்பாக்களில் காணப்படும் உத்தி இவரது கவிதைகளில் வெளிப்படுகிறது 'என் குஞ்சே
என்மித்தி' என எஸ்.பொ தன்மகன் ஈழப்போரில் இறந்துபட்டதன் இழப்பும் தந்தையின் இரங்கலும் வருங்காலத்தில் தொன்மங்களாகலாம் என்பதை அவரது இக்குறுங்காப்பியம் நிறுவியுள்ளது என்கிறார்.
மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் பங்களிப்பில் எஸ்.பொ.தமிழுக்குப் புதுமையும் வளமும் சேர்த்துள்ளார். ஆங்கில இலக்கியங்களை விட ஆப்பிரிக்க இலக்கியங்களைத் தமிழுக்கு பெருமளவில் மொழிபெயர்த்துள்ளார். ஆப்பிரிக்காவின் வடபகுதியில் இசுலாமியத்தின் மிகுதியால் அரபுமொழி இலக்கியங்களே மிகுதி. வடபகுதியைத் தவிர்த்த பிரித்தானிய பகுதிகளில் ஆங்கில மொழியில் எழுதப்படும் இலக்கியங்கள் 'ஆங்கிலோபோன்' எனவும், பிரான்சின் குடியேற்ற நாடுகளான பிரெஞ்சு மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்கள் 'பிராங்போன்' எனவும் கூறப்படுகின்றன. 'ஆங்கிலோபோன்' இலக்கியங்களை விட 'பிராங்போன்' இலக்கியங்களே செறிவுடையன என்கிறார் எஸ்.பொ. மொழிபெயர்ப்பு எனும் பெயரில் மூலநூல் சொற்களையும் தொடர்களையும் அப்படியே மொழிபெயர்க்காமல் அவற்றின் இடம் பொருள் ஏவலுக்கு ஏற்ற சொற்களை எஸ்.பொ. பயன்படுத்தியிருக்கும் உத்தி, அவரின் சொல்லாற்றலும் நடைஆளுமையும் பிறமொழித் தேர்ச்சியும், பிற நாடுகளின் வரலாறு, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை அறிந்து கொள்ள பெரிதும் உறுதுணை செய்கின்றன என்கிறார் நளினிதேவி.
எஸ்.பொ. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், தம் சொந்த மண்ணின் விழுமியங்கள், மரபு பற்று, யாழ்ப்பான பண்பாடு என எதையும் விட்டு விலகாது தம் படைப்பில் இவர் எழுதும் திறம் படிப்பவரின் மனத்தை உருக்கிவிடுகிறது. சொந்த மண்ணை, மக்களை இழந்து வாழும் அவர்களின் வலியும் தவிப்பும் படைப்புகளில் வெளிப்படுகின்றன. இவர்கள் இழப்புகழுக்குள் தங்களை முடங்கிக் கொள்ளாமல் தமிழோடும் தமிழின் அடையாளத்தோடும் வாழ்கின்றனர் என்பதை எடுத்துரைக்கிறார் நளினிதேவி.
எஸ்.பொவின் புதினங்கள் பாலியல் கோணங்களில் அணுகப் பெற்றாலும் கடுமையான சமுதாயச்சிக்கலைத்தான் அவை பேசுகின்றன என்கிறார். எஸ்.பொ.கூறும் மார்க்சியம் என்பது சமன்மை, மனிதம், அன்பு என்றாலும் இம்மூன்றும் நிலைபெற மொழி, இனஉணர்வுதான் முதன்மையானதாக எஸ்.பொ கருதுவதாகக் கூறுகிறார். இவை மார்க்கிசியத்தை விடவும் மேலானவை. மார்க்சியம் கலைமாற்றத்திற்கும் சிந்தனை வளர்ச்சிக்கும் ஏற்ப, அந்தந்த நாட்டுச் சூழலுக்கு ஏற்ப பின்பற்றக்கூடிய பொலிவும் வாழ்வும் பெறக்கூடியது.
'வரலாற்றில் வாழ்தல்' என்ற ஈராயிரம் பக்கங்களைக் கொண்ட எஸ்.பொவின் தன்வரலாற்று நூல் இதுவரையிலான வாழ்க்கை வரலாற்று நூல்களுள் மிகவும் வேறுபட்டதாய், இவ்வகை இலக்கியத்திற்கு புதிய இலக்கணம் வகுப்பதாய் அமைந்துள்ளமையே நூலின் சிறப்பாகும். 'இதுபோல் முன்னும் இல்லை: பின்னும் இல்லை என்கிறார். நூலில் எண்ணற்ற செய்திக் கொட்டிக் கிடக்கின்றன. ஈழ, தமிழக அரசியல், இலக்கிய வரலாற்றின் மறுபக்கம் வழியாக, நூல் படிப்போரை ஈர்த்துச் செல்லும் திறம் வியந்து போற்றத்தக்கது என்கிறார்.
தமிழைத் தவமாகக் கருதி, இலக்கிய ஊழியம் செய்யும் எஸ்.பொ.வின் தமிழ்த்துவம் மகத்தானது. தமிழ்த்தேசியத்தின் மூலம் தமிழ்த்துவத்தைக் காக்க வேண்டும். தமிழ்த்தேசியத்தை வளர்த்தெடுக்க, தன்னிச்சையுடன் இயங்க தமிழ்மண் தேவை. இன்று உலக நாடுகளில் தமிழ் வீறு கொண்டு விளங்கியதன் விளைவே தமிழத்துவம். இதுவழியாக தமிழ் அழியாது தொடரும் என்கிறார்.
எஸ்.பொவின் தமிழ்நடைச்சிறப்பிற்கு சில சான்றுகள்: 'காட்டாற்று வெள்ளத்தையும் கண்டு களிக்கலாம் தெளிந்த நீரோi;யின் நீரைக் கையில் அள்ளி மகிழலாம். தமிழின்பம் பெறலாம். தமிழ்த்துவத்தில் திளைக்கலாம்' என்ற எஸ்.பொவின் நடையழகினைச் சுவைத்து மகிழலாம் எனக்கிறார்
எஸ்.பொவின் படைப்பில் எதிரும் புதிருமான பல கருத்துகள் உள்ளன. இவை எதிர்காலத்தில் விரிந்த ஆய்வுக்கு வழிவகுக்கும் என்கிறார்.
தலித்தியம் பெண்ணியம் குறித்து எஸ்.பொ. விரிவாகப் பேசுகிறார். உயர்வு தாழ்வு எதிலும் இல்லை. பிறப்பால் தாழ்வு உயர்வு என்று உரிமைகளைப் பறித்து தடைகள் ஏற்பட்டால் அத்தடைகளைத் தகர்த்து மீட்டெடுக்கவேண்டும் என்பதாக எஸ்.பொ கருதுகிறார். இவரது படைப்புகள் நமது மரபின் தணிக்கையை மீறி புரட்சிகரமாக, எதார்த்தமாக எழுதப்பட்டுள்ளன. தாய்மண்பற்று, மரபு, இனஉணர்வு, அங்கதம், அரசியல், பாலியல், புரட்சி, எதார்த்தம் என எண்ணிலடங்காத கூறுகள் இடம் பெற்றுள்ளன.
வரலாற்றில் வாழும் மாமனிதராய் இமயம் போல் எஸ்.பொ. தன் படைப்பின் வழியே உயர்ந்து நிற்கிறார் என்கிறார் நளினிதேவி.
முனைவர். இர. ஜோதி மீனா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை
நேரு கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்துார். 109.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.