குணா கவியழகன் இப்போது அதிகம் எழுதுகிறார். அவரது படைப்புக்கள் குறித்த ஆரவாரங்களும் இப்போது கொஞ்சம் அதிகமாகிவிட்டன. இப்போது அவரது 5 வது நாவலினையும் அவர் எழுதி முடித்துவிட்ட நிலையில் அவர் குறித்த சர்ச்சைகளும் அவர் மீதான விமர்சனங்களும் கூட இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டன. ஒரு படைப்பாளிக்கு செய்யப்படும் அநீதிகளிலேயே மிகப்பெரியது அவனை ஒற்றை வரியில் ஒரு படிமத்திற்குள் அடக்கி அவன் மீதான ஒரு ஆழமான முத்திரையை பதித்து விடுவதுதான். அவன் எத்தனை ஆயிரம் படைப்புகளை வெவ்வேறு தளங்களில் படைத்திருந்தாலும் இத்தகைய ஒற்றை வரிப் படிமத்தில் அவனைக் கூண்டில் அடைக்கும் செயலானது உலகளாவிய ரீதியில் காலாகாலமாக நடக்கின்ற ஒரு செயற்பாடு. இது பாரதியாரிலிருந்து இன்றைய அனோஜன் பாலகிருஷ்ணன் வரை ஒவ்வொரு படைப்பாளியும் எதிர்கொண்ட, எதிர்கொள்கின்ற அவலம். இதில் ஈழ – புகலிட இலக்கிய உலகம் இன்னுமொரு படி மேலே. அரசியல் நெருக்கடிகளுக்குள் அதிகம் சிக்கித் தவித்து வரும் எம் சமூகமானது, தமது நெருக்கடிகளின் மூச்சுத்திணறலினை படைப்பாளியின் மீது பிரயோகிப்பது இன்று சர்வ சாதரணமாகிவிட்டது. இதில் முக்கியமாக புலி எதிர்ப்பு, புலி ஆதரவு என்ற இரு துருவ எதிர்முனைப்புடன் இயங்கும் எம் சமூகத்தினர் ஒவ்வொரு படைப்பாளியையும் இந்த நுண்நோக்கி கருவியுடனேயே ஆராய முற்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு படைப்பாளியும் பலத்த நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கல்களுக்கும் ஒரு வித மன உளைச்சல்களுக்கும் ஆளாகின்றனர். மேற்குறித்த சிக்கல்களுக்கும் நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு படைப்பாளியையும் அவன் மீது போர்த்தப்பட்டிருக்கும் ஒற்றைப்பரிமணா படிமங்களை உடைத்து அதில் இருந்து அவனை மீட்டெடுத்து அவனது பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தி, மீண்டும் வாசகர்கள் முன் அவனை மீள் அறிமுகம் செய்வதும் இன்று எம்முன் உள்ள தலையாய கடைமையாகும்.
இங்கு குணா கவியழகனும் மேற்குறித்த சுழிகளுக்குள் சிக்குண்டே கிடக்கின்றார். அவர் மீது வாசிக்கபப்டும் குற்றப்பத்திரிகையும் மிகக் குறைவானவையல்ல. எனவே குணா கவியழகனையும் கூட ஒரு மீள் வாசிப்பிற்கு உட்படுத்தி அவர் சிக்குண்டு கிடக்கும் படிமக் கூண்டிற்குள் இருந்து அவரை மீட்டெடுத்து அவரது பண்முகப் பரிமாணங்கள் மீதான ஒரு கறாரான விமர்சனத்தை முன் வைக்க வேண்டிய தேவையை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குணா கவியழகன் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம், கர்ப்ப நிலம், போருழல் காதை எனும் 5 நாவல்களை எழுதி முடித்துள்ளார். அவரால் எழுதப்பட்ட படைப்புக்கள் மூலம் அவரை அறிய முற்பட்ட அனைவரும் அவரை ஒரு தமிழ்த் தேசிய தளத்தில் இயங்கும் ஒரு புலி ஆதரவுப் படைப்பாளியாக அடையாளங் காணுகின்றனர். அதனால் புலி ஆதரவு தளத்தில் இயங்கும் வாசகர்கள் அவரை ஒரு ஈழ விடுதலைப் போராட்டத்தின் உன்னத வரலாற்றை எழுதும் ஒரு படைப்பாளியாகக் கண்டு புளகாங்கிதம் அடைகின்றனர். புலி எதிர்ப்புத் தளத்தில் இயங்குபவர்கள் அவரை புலிகளின் அராஜகங்களையும் மனித உரிமை மீறல்களையும் ஆதரிக்கும் அல்லது நியாயப்படுத்தும், இறந்து போன தமிழ்த் தேசியத்திற்கு உயிர் கொடுக்க முனையும் ஒரு பாசிச எழுத்தாளராக அடையாளப்படுத்துகின்றனர். குணா கவியழகன் மீது குத்தபட்ட இந்த முத்திரையை அகற்றுவது என்பது இலகுவான விடயம் அல்ல. இதற்கு இவரது வாழ்வு, சூழல், பின்புலம் குறித்த விசாரணையுடன் இவரது நூல்களையும் மீள் வாசிப்பிற்கு உட்படுத்தி ஒரு மீள் பரிசீலனை செய்வது மிகவும் அவசியமானதாகும்.
குணா கவியழகன் வாழ்வு குறித்து இங்கு எதுவும் மறைப்பதற்கில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு போராளியாக இருந்த அவர், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் வரை அவர்களுடன் பயணித்ததும் இப்போது அவர் நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரி ஒரு அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருவதும் அனைவரும் அறிந்ததே.
குணா கவியழகனுடன் அவர் என் முகநூல் நண்பர் என்பதற்கப்பால் எனக்கு எந்தவிதமான நேரிடையான பரிச்சயமும் இல்லை,. ஒரேயொரு தடவை அவரை எமது மக்கள், கலை, பண்பாடுக் களம் சார்பாக நடாத்திய தோழர் சி.கா.செந்தில்வேலின் ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ நூல் அறிமுக விழாவில் சந்தித்துக் கொண்ட போது அவருடன் ஒரு உரையாடலை மேற்கொள்ள முற்பட்டேன். ஆனால் அது ஒரு நிமிடத்திற்கு மேல் நீடிக்கவில்லை. உவப்பானதாகவும் இருக்கவில்லை.
பின்பொரு காலம் நான் அவரது ‘நஞ்சுண்ட காடு’ நாவலினை வாசித்து முடித்து, ‘விடமேறிய கனவு’ வாசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் அவரது ‘அப்பால் ஒரு நிலம்’ வெளிவந்திருந்தது. தமிழகத்தில் மிகுந்த ஆரவாரத்தோடு அவ்வெளியீடு நடந்த காலகட்டத்தில், அவரது நேர்காணல் ஒன்று ஆனந்த விகடன் சஞ்சிகையில் வெளி வந்திருந்தது. அந்நேர்காணலில் அவர் தெரிவித்திருந்த சில தகவல்கள் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி ஊட்டுவதாக இருந்தது. அத்துடன் அது உண்மைக்கு புறம்பானவையாகவும் அமைந்திருந்தன. அந்நேர்காணலில் அவர் “எனக்கு இலக்கியம் அவ்வளவு பரிச்சியம் இல்லை. வன்னி யுத்தத்திற்கு பிறகு நான் அமெரிக்காவின் ‘ஆசிய மறுசீராக்கள் கொள்கை’ குறித்து ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதினேன். அதன் நீட்சியாக வேண்டுமானால் என் முதல் இலக்கிய நூலான ‘நஞ்சுண்ட காடு’ நூலினைக் கொள்ளல்லாம்.” இவரது இந்த வாக்குமூலம் ஆனது எனக்குள் ஏற்படுத்திய அதிர்ச்சிகள் பல. அதிலொன்று, இந்நாவல் வெளி வந்த காலம் குறித்த அவரது தகவல். ‘ஏணைப்பிறை’ என்ற பெயரில் எழுதப்பட்டு, புலிகளால் தடை செய்யப்பட்ட அந்நாவலானது ‘நஞ்சுண்ட காடு’ என்ற பெயரில் தோழர் வே. பாலகுமாரனின் முன்னுரையுடன் வெளிவருகின்றது. 2009 இல் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட பாலகுமாரன் இதற்கு முன்னுரை எழுதியிருப்பதே இது அதற்கு முற்பட்ட ஒரு காலப்பகுதியில் எழுதப்பட்டிருப்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றது. அப்படியிருக்க இத்தவறான தகவலைத் தரவேண்டிய அவசியமும் தேவையும் ஏன் அவரிடம் ஏற்பட்டிருக்கின்றது. வியப்பாகவே உள்ளது. எனக்கு ஏற்பட்ட இன்னுமொரு நெருடலான விடயம் ‘எப்படி ஒரு ஆய்வுக்கட்டுரையின் தொடர்ச்சியாக ஒரு இலக்கியப் பிரதி அமையமுடியும்’ என்பதே.
தொடர்ந்தும் அந்நேர்காணலில் அவர் “என் நாவல்கள் என் வலிகளுக்கான வடிகால். அதை எனக்கான உளச்சிகிச்சையாகவே நான் நினைக்கிறேன். போர் தந்த வழியில் இருந்து மீள, எழுத்து எனக்கு நல்ல சிகிச்சையாக இருக்கின்றது. அந்தச் சுய சிகிச்சையே நாவலாக உருமாறியுள்ளது. இன்னும் சொல்லப் போனால், நான் எழுதப் போகும் ஒரு முக்கியமான நாவலிற்கான பயிற்சியே இந்த மூன்று நாவல்களும்.” மீண்டும் பல நெருடல்களும் கேள்விகளும் என்னுள். முதலாவதாக ஒருவர் தனது வலிகளுக்கான வடிகாலாக இலக்கியம் படைக்கிறார். அதனை நாங்கள் படிக்கவேண்டிய அவசியம் என்ன? இரண்டாவதாக ஒருவர் தனது பயிற்சிக்காக பல நாவல்களை எழுதுகின்றார். அதனை நாங்கள் படிக்க வேண்டுமா? இந்த நெருடல்களுடம் கேள்விகளுடனுமே நான் தொடர்ந்தும் குணா கவியழகனைப் படித்து வந்துள்ளேன். ஆயினும் காலப்போக்கில் உலகின் தலை சிறந்த இலக்கியங்கள் பலவும் இத்தகைய நெருக்கடிகளுக்கும் நெருடல்களுக்கூடாகவுமே படைக்கப்பட்டவையே என்று உணர்ந்த போது அந்த நெருடல்கள் என்னுள் இல்லாமல் போயின.
இவரது அனைத்து நாவல்களினதும் பகைப்புலமாக போர்நிலமும் அதன் சூழல்களும் அமைகின்றன. தம்மீது வலிந்து திணிக்கப் பட்ட போரை எதிர்கொண்ட ஒரு சமூகத்தின் வலிகளையும் துயரங்களையும் பதிவு செய்ய முற்படுகின்றார். இந்நூற்றாண்டின் நவீன நாகரிகம் கைவிட்ட அல்லது கண்டு கொள்ளாத சமூகமாக எமது இனத்தைக் குறிப்பிடுகிறார். இப்போர் நிலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனிதும் அகவுணர்வு சார்ந்த விடயங்களையும் அதிகம் கூற முனைகிறார். வாழ்வு குறித்தான தத்துவங்களையும் மெய்யியல் உணமைகளையும் அளவுக்கதிகதிகமாக அள்ளி வீசுகிறார்.
இப்போது நாம் இந்நாவல்களை மீள் வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டும். ஆனால் இம்முறை நாம் முன்பு போலன்றி, அழகியல் ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் பல்வேறு கேள்விகளுடனும் அவதானிப்புக்களுடனும் அணுக வேண்டும். இவரது நாவல்களில் உள்ள அழகியல் அம்சங்கள் என்ன? அறம் சார்ந்த விடயங்கள் மீது இவரிடம் கரிசனங்கள் உள்ளதா? இவரது சமூகத்தின் மீதானா அக்கறை எத்தகையது? இவர் தன் மீதும் தான் சார்ந்த அமைப்பு மீதும் வைக்கின்ற சுயவிமர்சனம் என்ன? மற்றவர்கள் இவர் மீது குத்திய ‘புலி ஆதரவு’ என்ற முத்திரையில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது? என்பன போன்ற பல்வேறு விதமான கேள்விகளுடன் அவரை வாசிப்பதும் அவரது படைப்புக்களை மீள் ஆய்வு செய்வதுமே இன்று எம்முன்னுள்ள தலையாய கடைமையாகும். இத்தகைய மீள் வாசிப்புக்களும் விமர்சனங்களும் ஒரு படைப்பாளியை அவனது கட்டுக்களிலும் தளைகளிலும் இருந்து அவனை விடுவித்து, எதிர்காலத்தில் அவன் மேற்கொள்ளும் அவனது தொடர்ச்சியான பயணத்திற்கும் சுதந்திரமான செயற்பாடுகளுக்கும் பேருதவியாக அமையும் என்பது எனது நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.