காலத்தை வென்றவன்.காவியம் ஆனவன். வேதனை தீர்ப்பவன். வெற்றித்திருமகன் எனப் பலவித முகங்களில் கண்ணதாசனை நான் பார்க்கின்றேன்.சிறுகூடல் பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து சிந்தனைகளின் ஊற்றாக புறப்பட்டவர்தான் கவி அரசர்.முத்தையா- கண்ணதாசன் ஆனதே ஒரு முக்கிய சம்பவம்தான். "முத்தைத்தரு" என்று அருணகியாரைப் பாடவைத்து - அவரது வாழ்க்கையையே மாற்றியது ஆண்டவனது அனுக்கிரகம். முத்தையா என்று தந்தை வைத்தபெயரும்அவரைச் சமூகத்தில் ஒரு முத்தாகவே மிளிரச்செய்தது.கண்ணதாசன் என்னும் பெயரும் அவருக்குஉலகில் பெரும் புகழைத்தேடித்தந்தது.இவையாவும் ஆண்டவனின் அனுக்கிரகத்தால் ஆகியிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. அருணகிரியார் முருகன் அருள் பெற்றதால் மடைதிறந்த வெள்ளமெனச் சந்தப்பாடல்கள் வந்து குவிந்தன. எங்கள் கவியரசரும் ஆண்டவனின் வரம்பெற்று வந்தவராகையால் கம்பனுக்குப் பிறகு " சந்தத்தை " தமிழில் கையாண்ட பெருமைக்கு உரியவர் ஆகின்றார்.
நெற்றியில் விபூதியும், வாயிலே முருகனது நாமத்தையும் துணையென எண்ணி இருந்தவர் கண்ணதாசன். சேரக்கூடாத கூடாரத்துக்குள் சேர்ந்ததால் அவரின் பேச்சும் போக்கும் , ஏன் எழுத்தும் கூட மாறியது. ஆனால் அவரின் அடிமனத்தில் ஆழமாகப் பதிந்து நின்ற ஆண்டவன் நினைப்பு மட்டும் அப்படியேதான் அடங்கிக்கிடந்தது. கால மும்கனிந்துவரக் கடவுள் நம்பிக்கை கண்ணதாசனிடம் மேலோங்கத்தொடங்கியது.
நாத்திகம் பேசி நாத்தழும் பேற்றியும், கடவுள் கண்டனம் செய்தும் நின்ற கண்ண தாசன் கடவுளே கதியென்னும் நிலைக்கு வந்து விட்டதை அவர் வாயிலாகவே நாங்கள் அறிந்து கொள்ளமுடிகிறது." நாத்தினாக இருந்தது இரண்டு, மூன்று , ஆண்டுகளே " கந்தபுராணம் , பெரியபுராணம், கம்பராமாயணம், திருவாசகம், திருப்பாவை, நாலாயி ரத்திவ்யபிரபந்தம், வில்லிபாரதம் ,இவற்றை எல்லாம் கண்டனம் பண்ணப் படித்தேன் ஆனால் அவற்றைப் படிக்கப் படிக்க என்மனம் அவற்றில் ஆழ்ந்து விட்டது என்று அவரே சொல்லுகின்றார்." நாத்திக வாதம் என்பது அரசியல் நோக்கங் கொண்டது என்பதையும், உள்மனத்தின் உண்மையான உணர்வல்ல என்பதையும் உணர்ந்தேன் " என்பது கண்ண தாசனின் வாக்குமூலமாகும்.
கண்ணதாசன் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல் என்ன தெரியுமா ? " திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா " என்பதாகும்.அவரின் படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் " கிருஷ்ணர்" படமாகும்
இந்தியாவிலே கடவுளை நம்பாதவர்கள் ஒரு கட்சியாகக் கூட இருந்தாலும் அவர்கள் எல்லோரும் சேர்ந்து கடவுளைக் கண்டனம் செய்தாலும் அதனால் கடவுளுக்கு எந்தவித வருத்தமும் இல்லை. அதே வேளை கடவுள் நம்பிக்கையும் இல்லாமற் போய்விடவும் இல்லை.இதில் கண்ணதாசன் மிகவும் நம்பிக்கை உடை யவராக இருந்த படியால்த்தான் படித்தவர்களும் போற்றுகிறார்கள் பாமரரும் போற்று கிறார்கள் என எண்ணத்தோன்றுகிறது.
கடவுளைப்பற்றி சந்தேகம் வருபவர்களுக்கு
" தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை"
என்று சொல்லும் விளக்கத்தைவிட வேறு எப்படிச் சொல்லமுடியும். இதுதான் கண்ணதாசன்.
சினிமாவுக்கு என்று எழுதப்பட்டாலும் உள்ளத்தில் இருப்பதுதானே வரமுடியும்.
" பூஜ்ஜியத்துக் குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை
ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன் "
பாமரரும் புரியும்படி கடவுள் தத்துவத்தைக் காட்டுவது அவரின் தனித்துவம்தானே.
ஆண்டவனின் அருள் அவருள் உறைந்து கிடந்தமையால்த்தான் அவரின் வார்த்தை களில் அத்வைதம் இருந்தது.துவைதம் இருந்தது.விசிட்டாத்வைதமும் இருந்தது.வேதாந் தமும் சைவசித்தாந்தமும் கூட இருந்தது எனலாம்.சரஸ்வதி அவரது நாவிலே சம்மா ணம் போட்டே இருந்தாள்.மேலே காட்டிய தத்துவங்களை எவ்வாறு நாசூக்காகக் கண்ணதாசன் காட்டுகிறார் பாருங்கள்.....
" தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத்தோண்டி கண்ணீர் தேடும் அன்புத்தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என்கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன
கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதை என்ன "
சகல வித தத்துவங்களும் இங்கே பாமரரரும் புரியச் சொல்லி நிற்கின்றார் கண்ண தாசன் .இதனால் வெற்றித்திருமகன் தானே!
கவிஞ்ஞன் என்பவன் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்கக் கூடாது. அவன் சொல்லும் கருத்துக்கள் உலகம் தழுவ வேண்டும் வள்ளுவர் குறள் அப்படிப்பட்டது தான்.வள்ளுவரின் பரந்து விரிந்த நோக்கால் அவரின் திருக்குறள் உலகம் தழிவிய தாக இருக்கிறது. நமது கவிஞ்ஞரும் அப்படியான ஒரு மனநிலையில்த்தான் செயற்பட நினைக்கின்றார். வள்ளுவர் -- அறம், பொருள், இன்பம் பற்றியெல்லாம் பாடினார். கண்ணதாசனும் அறத்தை , இன்பத்தை , பொருளை, எல்லாம் பாடினார்.அத்தோடு அருளையும் தமது பாட்டுக்களால் தந்தும் நின்றார்.
சங்கரமடத்தைச் சரண் அடைந்தார்.ஒருகாலத்தில் காவிகட்டியவர்களையும் சங்கரமடத்தாரையுமே சாடியவர் பின்பு தானாகவே சரண்புகுந்தார். இது அவரிடம் ஏற்பட்ட மடை மாற்றமாகும்.அதே கண்ணதாசனே " யேசுகாவியத்தை " ப்பாடி மீண்டும் தனது நோக்கை விரிவாக்கிக் கொள்கின்றார்.புத்தரைப் பாடுகிறார்.நபிகளைப் பாடுகி றார்.சத்தியம், நேர்மை, சமத்துவம் யாவற்றையும் போற்றிப் பாடுகின்றார்.
' புத்தன் யேசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக தோழா
பூமியில் எதற்காக .... '
என்று கேள்வி எழுப்பி தனது நிலை எமக்கெல்லாம் காட்டி நிற்கின்றார் கவியரசர் அவர்கள்.
இறையுணர்வு ஊறிவிட்டால் யாவும் சிறந்த கருத்துக்களாகவே வந்து நிற்கும். அதில் பல தத்துவங்கள் வந்துவிடும். வேதத்திலும் , உபநிடதத்திலும் , உன்னை அறிதல் என்பது பெரிய அரிய பெரிய தத்துவமாகும். " தத்துவம் அஸி ' அஹம் பிரம்
மாஸி" உபநிடதத்தின் உயிநாடியாகக் கருதப்படுகிறது. ரமண மகரிஷியும் " முதலில் நீ யார் என்பதை " அறி என்றுதான் சொல்லுகிறார். இப்படியான உயர்தத்துவக் கருத்தை கண்ணதாசன் மிகவும் எளிதாக்கி எமக்குத் தரும்விதம் அவரின் உயராற்றலைத்தான் வெளிப்படுத்துகிறது எனலாம்.
" உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல்
நீ வாழலாம் "
வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும், வாழுவோம் என்பது எல்லோரிடத்தும் எளிதாக் வரக்கூடிய தல்ல. அதற்கு ஒரு மனப்பக்குவம் தேவை. " நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்னும் நாவுக்கரசர் அஞ்சாவார்த்தை "தலை வணங்காமல்வாழுதலில்" தெரிகிறதல்லவா?
மனமானது சமநிலைக்கு வந்து விட்டால் எதற்கும் அது ஆயத்தமாகிவிடும். இது ஒரு யோக நிலையாகும். இதனைக்கவிஞ்ஞர் எப்படிச்சொல்கிறார் பாருங்கள்..
" நான் - கடலளவே பெற்றாலும் மயங்கமாட்டேன் -அது
கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்"
இந்த நிலை சாதாரணமாக எல்லோருக் கும் வந்து விடமாட்டாது என்பதைக் கவிஞ்ஞரின் வரிகள் மிக அற்புதமாகக் காட்டிநிற் கின்றன் அல்லவா? குழப்பங்கள் வருவது மனித வாழ்வில் தடுக்கமுடியாத ஒன்று. ஆனால் அந்தக் குழப்பத்தையும் நாம் விளங்கி மனத்தைக் கலங்க விடக்கூடாது என்கின்றார் கவிஞர்.
" மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்"
வாழ்க்கையில் குழப்பம் வந்தால் தயக்கம்வரும் அதே நேரம் நடுக்கமும் வந்தே சேரும்.அரசன் முதல் ஆண்டிவரை அனைவருக்கும் இந்த நிலை வெவ்வேறு உருவத் தில் - வெவ்வேறு விதமாக வரும். எல்லார் வீட்டுக்கும் வாசற்படி இருபது போல வேதனைகளும் வீடுதோறும் இருக்கவே செய்யும்.இது எத்தனை அனுபவமான ஒரு மிகப்பெரிய கருத்து. யாருமே வேதனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது
எனவே
" கலங்காதிருமனமே உன்கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே " எனஆறுதலும் கூறுகின்றார் கண்ணதாசன் அவர்கள். அதே வேளை
" வந்த துன்பம் எது என்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயமிருந்தால்
இறுதிவரைக்கும் அமைதியிருக்கும்
........................................................................
நாளைப் பொழுதை இறைவனுக் களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு"
என்று புத்தியும் கூறுகின்றார். அதோடு நின்றுவிடாமல் மிகவும் முக்கியமாக ஒன்றையும் சொல்லி நிற்கின்றார்..
" உனக்குக் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"
எப்பொழுதும் நாங்கள் அனைவருமே எங்களின் நிலையை மட்டுமே தினமும்
பார்த்துப்பார்து எனக்கு மட்டும் ஏன் இப்படி? அவன் நல்லாய் இருகிறானே! என்று அல்லும் பகலும் மற்றவர்களைப் பார்த்து எமக்குக் கிடைத்தவற்றையும் வீணடித்து விடுவோம்.காலுக்குச் செருப்பில்லை என்பவனுக்கும் கவலை.அதே நேரம் காலே இல்லை என்பவனுக்கும் கவலை.கஞ்சிக்கு உப்பில்லை என்பவனுக்கும் கவலை. குடி க்கக் கஞ்சி இல்லையே என்பவனுக்கும் கவலை. இதில் எது முக்கியம் என்பதை உணராமல் இருப்பதே பெரிய கவலை என்பதை யாவரும் உணர்தல் வேண்டும் என்பதை கவிஞ்ஞர் சொல்லுவதை விட யாராலும் இவ்வளவு எளிமையாகச் சொல்லி விட முடியாதல்லவா? எத்தனையோ பேர் எம்மைவிடவும் மோசமாக இருக்கிறார்கள் என்பதை ஒர் கணம் நினைத்தால் நாங்கள் படும் துன்பம் பெரிதாகவே தெரியாமல் போய்விடும் என்பதைக் கண்ணதாசன் சொல்லும் இடத்தால் அவர் உயர்ந்த கவிஞ்ஞன் ஆகி நிற்கிறார் எனலாம்.
வாழ்க்கையில் அவர் அனுபவிக்காத இன்பங்களும் இல்லை.துன்பங்களும் இல்லை எனலாம். அவற்றை யெல்லாம் அவர் எங்களுக்குத் தனது கவிதைகள் வாயிலாகத் தரவும் மறக்க வில்லை.
"எங்கே வாழ்க்கை தொடங்கும் - அது
எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது எவருக்கும் தெரியாது "
இது பெரிய தத்துவம்தான் ஆனால் இதில் கவிஞ்ஞரின் ஒரு பங்கும் காணப்படுகிறது.சிறு கூடல்பட்டியில் இருந்து சென்னை வந்து படுக்க இடமில்லாமல் கடற்கரை ஓரத்தில் படுக்க அங்கும் படுக்க முடியாமல்
போலீஸ்காரர்களால் கண்ணாதாசன் போக்கிடம் இல்லாமல் விரட்டி அடிக்கப்படு கிறார்.அப்பொழுது அவரது வாழ்க்கைப் பயணம் எப்படி அமையப் போகிறது எங்கே முடியப்போகிறது என்பது அவருக்கே புரியாத ஒன்றாக இருந்திருக்கலாம் அல்லவா?
இதுவும் ஒருகருத்தாயும் இருக்கலாம். அதேவேளை மனித வாழ்வை நாங்கள் தீர்மானிக்கவும் முடியாதிருக்கும் என்பதும் கூட கருத்தாகலாம்தானே!
சுத்திச்சுத்தி கடவுளிடம்தான் கண்ணதாசன் வருகின்றார்.எதைச் சொல்லுவதானாலும் கடவுளையும் கூடவே வைத்திருப்பார்.
நல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனட்சாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் சாட்சியம்மா --- அதுதான் உண்மையின் சாட்சியம்மா
மனிதர்களே மனட்சாட்சிக்கு மதிப்பளியுங்கள்.அல்லது தெய்வத்தை நம்புங்கள்.இப்படி செய்யாது விட்டால் அது உங்களுக்கு ஏற்றதல்ல அது நல்ல வாழ்வுக்கும் வழி வகுக்காது என்று சொல்லி எமக்கு நற்சிந்தனை வழங்குகின்றார் கண்ணதாசன் அவர்கள்.
அவரின் பாடல்கள் அழியாப் புகள் பெற்றன என்பதில் எள்ளளவும் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் கண்ணதாசன் வாழ்கின்றார் என்றால் அவரின் " அர்த்த முள்ள இந்துமதம் " பெருங்காரணம் என்பதை எவருமே மறுக்க முடியாது. முப்பத்தெட்டு வருடங்கள் கவியரசனாகப் புவியையாண்டவன் கண்ணதாசன்.எழுத்தாலும்,பேச்சாலும் எம்மைக்கட்டிப்போட்டவன்." வாழநினைத்தால் வாழலாம் " என்று தைரியம் கூறிய தமிழ்க்கவிஞன்.ஆகவே அவன் காலத்தை வென்று , காவியமாக வெற்றித்திருமகனாகவே நிற்கிறான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.