“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், தீண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர் மீதான கொடுமை, பெண்கள் மீதான கொடுமை, ஆதிக்கம், தேசிய இனப் பிரச்சினையால் தமிழ் மக்கள் குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் தோன்றியுள்ள அவலங்கள். தொழில்மயமாக்கலும், நகரமயமாக்கலும், நவீனமயமாக்கலும் தோற்றுவித்துள்ள மாறுதல்களும், பிரச்சினைகளும், மனித பலவீனங்களை வளர்த்துச் சுரண்டும் சந்தைப் பொருளாதார வியாபாரங்கள். நுகர்வுப் பண்பாட்டின் மனித விரோதப் போக்கு, பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கம், நவீன ஏகாதிபத்தியச் சுரண்டலின் பன்முகப் பரிமாணங்கள், உலகமயமாதல் என்ற பெயரில் நடைபெறும் அராஜகம். இப்படியான பல்வேறு விடயங்கள் பற்றிய விளக்கங்களாகவும், விமர்சனங்களாகவும் செ.கணேசலிங்கன் எழுத்துக்கள் அமைந்துள்ளன ” எனப் பேராசிரியர் சி.தில்லைநாதன் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
“மனிதனைப் பிணைத்திருக்கின்ற அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிவதற்கான எழுச்சி நசுக்கப்பட்டு, மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு, அவர்களது விடுதலைக்கான போராட்ட உணர்வைத் தட்டி எழுப்பி உத்வேகப்படுத்தும் பண்பு மானிட நேயப்படைப்பாளிகளிடமுண்டு. சமூக, பொருளாதார அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை ஒரு பெரும் சக்தியாக திரட்டுவதற்கு மக்களுக்கு உத்வேகத்தைக் கொடுப்பவனே மானிடநேயப் படைப்பாளி. தோல்வியிலும், அடிமை மனப்பான்மையிலும் நீண்டகாலமாகப் பீடிக்கப்பட்டு, விரக்கியடைந்த நிலையிலுள்ள மக்களின் ஆத்மாவைத் தட்டி எழுப்பி விழிப்படையச் செய்து போராட்டப் பாதையில் அவர்களை இட்டுச் செல்லும் வல்லமை படைத்தவனே மனிதநேயப் படைப்பாளி. ”
மேலும், “ மனித குலத்திற்கு விசுவாசமாக நடப்பது, மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவது, கசப்பான உண்மையானாலும் அதனைத் துணிவுடன் கூறுவது, மனிதர்களின் உள்ளத்திலே எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை ஊட்டி அதனை உறுதிப்படுத்துவது, அதைக் கட்டுவதிலே அவர்களுக்குள்ள ஆத்மசக்தியைப் பலப்படுத்துவது, உலக சமாதானத்துக்கும், சாந்திக்குமாகப் போராடுவது, எங்கெல்லாம் சமாதானத்துக்கான குரல் ஒலிக்குமோ அங்கெல்லாம் சமாதான வீரர்களை அந்தரங்க சுத்தியுடன் ஆதரிப்பது. முன்னேற்றத்திற்கான உண்மையான நேர்மையான முயற்சியில் மக்களை ஒன்று திரட்டுவது இதுதான் மானிடநேயனின் கடமை. ” என்று ‘ டான் நதி அமைதியாகப் பாய்கின்றது’ என்ற உலகப் புகழ்பெற்ற நாவலைப்படைத்த மிகையில் ஷொலகோ கூறியதை உள்ளத்தில் ஏற்று இலக்கியம் படைத்தவர் செ.கணேசலிங்கன்.
செ.கணேசலிங்கன் இலங்கையில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள உரும்பிராய் என்னும் கிராமத்தில் 09.03.1928 ஆம் தேதியன்று, க. செல்லையா-இராசம்மா தம்பதியரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
தமது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் கிராமத்து கிறிஸ்துவப் பள்ளியில் கற்றார். சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாவது வகுப்பு பயின்றார். பின்னர், யாழ்ப்பாணம் பரமேசுவரக் கல்லூரியில் சேர்ந்து எச். எஸ்.சி. பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். மேலும், இவர் லண்டன் மெட்ரிகுலேசன் தேர்விலும் தேர்ச்சியடைந்தார். நாள்தோறும் காலையில் வயலில் விவசாய வேலைகளை செய்த பின்னர், கல்லூரிக்கு நடந்தே சென்று படித்தார். இவர் கல்வியில் மிகத் திறமை பெற்ற மாணவராக விளங்கியதால் சிறப்பு வகுப்பேற்றம் ( னுடிரடெந யீசடிஅடிவiடிn) செய்யப்பட்டார்.
எச்.எஸ்.சி. எனும் தேர்வில் தேர்ச்சியடைந்த பின் 1950 ஆம் ஆண்டு இலங்கை அரசின் பாதுகாப்புத்துறையில் எழுத்தராக பணியில் சேர்ந்து கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் 1981 ஆம் ஆண்டுவரை பணியாற்றினார்.
மகாத்மா காந்தி 30.01.1948 அன்று படுகொலை செய்யப்பட்டதையொட்டி தமது உரும்பிராய் கிராமத்தில் நண்பர்களுடன் இணைந்து நினவேந்தல் கூட்டம் நடத்தினார். அந்த நினைவேந்தல் கூட்டத்தில், “ மகாத்மா காந்தியின் உடல் யமுனா நதிக்கரையில் இப்போது எரியூட்டப்பட்டிருக்கும், அவர் மறைந்தாலும் அவரது கொள்கைகளை நாம் கடைபிடிப்பதனால் இங்கே நிலவும் சாதிவெறி ஒழிக்கப்பட வேண்டும். இங்குள்ள கோவில்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்படும். மக்களுக்குத் திறந்துவிடப்பட வேண்டும். ” என்று தீவிரமாக உரையாற்றினார்.
மேலும் ‘மகாத்மா காங்கிரஸ் ’ என்னும் சங்கத்தை அமைத்து அதன் செயலாளராகப் பணியாற்றினார். அச்சங்கத்தின் மூலம் தீண்டாமை ஒழிப்புக்காகவும், கோவில்களில் அனைத்து சாதி மக்களும் வழிபட உரிமை வேண்டும் என்பதற்காகவும் பரப்புரையில் ஈடுபட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1949 ஆம் ஆண்டு இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் முக்கியமாணவராக விளங்கிய ப.ஜீவானந்தம் தோணி மூலம் கோடியக்கரை வழியாக யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். செ.கணேசலிங்கனும், குலவீர சிங்கமும் ப. ஜீவானந்தத்தை அழைத்துக் கொண்டு உரும்பிராய் கிராமத்திற்குச் சென்றனர். அக்கிராமத்தில் தீண்டாமை ஒழிப்பு குறித்து தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் ப. ஜீவானந்தம் உரையாற்றினார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கார்த்திகேயனின் தொடர்பு செ.கணேசலிங்கனை மார்க்சிஸ்ட் சிந்தனையுடையவராக்கியது. மார்க்சிய பொருள்முதல்வாத சிந்தனையால் பெரிதும் கவர்ந்து ஈர்க்கப்பட்டார். மார்க்சிய தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு கற்றறிந்தார்.
கொழும்பில் 1956 ஆம் ஆண்டு உலக சமாதான மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு உலகப் புகழ்பெற்ற சிலி நாட்டுக்கவிஞர் பாப்லே நெருடா வருகைபுரிந்தார். அவரை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் பிரதான வீதியில் உள்ள மண்டபத்தில் சொற்பொழிவு ஆற்றிட ஏற்பாடு செய்தது. அக்கூட்டத்திற்கு செ.கணேசலிங்கன் தலைமை தாங்கினார் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
‘தினகரன் ’ இதழில் 1950 ஆம் ஆண்டு ‘ மன்னிப்பு ’ எனும் சிறுகதை எழுதியதன் மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார்.
நல்லவன், சங்கமம், ஊமைகள், காதல் உறவல்ல - பகைமை உறவு, ஒரே இனம், கொடுமைகள் தாமே அழிவதில்லை. செ.கணேசலிங்கன் சிறுகதைகள் முதலிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.
செ.கணேசலிங்கனின் சிறுகதைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வர்க்கப் பிரச்சனைகள் குறித்தும், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் போலித் தனங்கள். ஊழல்கள், கொடுமைகள், அடக்குமுறைகள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. அடக்கு முறைக்கும், சுரண்டலுக்கும், அநியாயங்களுக்கும் எதிராக மக்கள் போராட வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், பெண்களின் பிரச்சனைகளை முன் வைத்தும் சிறுகதைகள் படைத்துள்ளார். பெண்கள் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்படும் நிலையை, பொருளாதார ரீதியாக மட்டுமின்றிப் பாலியல் ரீதியாகவும் பல்வேறு சுரண்டல்களுக்கு உட்படுகிற நிலையை, உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமையான அவல நிலையில் துன்புற்று அல்லற்படும் துர்ப்பாக்கியத்தை இவரது சிறுகதைகள் சித்தரித்துக் காட்டுகின்றன.
“ இலக்கியம் வாழ்க்கையை அதன் வரலாற்றோடும், வளர்ச்சியோடும் ஒட்டிச் சித்தரிக்க வேண்டும். தனி மனித வாழ்வு சமுதாயத்துடன் பின்னிப் பிணைந்து இருப்பதையும் சமுதாயத்தின் வளரும் தேயும் சக்திகளைப் புலப்படுத்துவதையும் சித்தரிப்பதே உயர்ந்த இலக்கியமாகும். இத்தகைய இலக்கியம் படைப்பதற்கு எழுத்தாளன் முதலில் மனித இனத்தை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய தெளிவும் நம்பிக்கையும், திராணியும், பொறுப்புணர்ச்சியும் இருத்தல் வேண்டும் - ” என ‘ ஒரே இனம் ’ எனும் சிறுகதைத் தொகுப்பில் செ.கணேசலிங்கன் இலக்கியவாதியின் சமூகக் கடமையை தெளிவுபடுத்தியுள்ளார்.
செ. கணேசலிங்கன் சுதந்திரன், தினகரன், புதுமை இலக்கியம், சாந்தி, சரஸ்வதி, தாமரை முதலான இதழ்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது, ‘ சாயம் ’ என்ற சிறுகதை இலங்கைச் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்று, அத்தொகுப்பு ருஷ்ய மொழியில் வெளியிடப்பட்டது.
‘சாயம் ’ என்னும் சிறுகதையில், “ தேயிலையின் நிறம் ... தொழிலாளர்களின் தோலின் நிறம் . அதனுள்ளே ஒடுவது இரத்தம். தேயிலைச் சாயத்தின் நிறம் இரத்தம். வெளிநாடுகளில் தேயிலையை விற்றுப் பணம் திரட்டுகின்றீர்கள் என்று எண்ணுங்கள். தேயிலைச் சுவைப்பவர்களெல்லாம் எமது இரத்தத்தைச் சுவைக்கிறார்களென்னு கருதுங்கள். தேயிலைக்காகத் தமது இரத்தத்தைத் தானம் செய்து இரத்தம் சுண்டிப்போய் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் எம் வர்க்கத்தினரை வெளியே பாருங்கள் ” என சுரண்டப்பட்ட ஏழைத் தொழிலாளர்களின் உதிரத்தால் விளைந்ததே நாம் சுவைக்கும் தேயிலை என்பதை சித்தரிக்கிறார்.
‘ சீக்கரமாய் வந்துவிடு ’ என்னும் சிறுகதையில் வரும் ஒரு உரையாடலில், “ஆசியாவிலேயே எங்கள் நாட்டிலேயே ஜனநாயகம் நிலவுவதை மேல் நாடுகளெல்லாம் ஒப்புக் கொள்கின்றன. ”
அதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் ? எனக் கேட்கிறார் ஒருவர்,
அதற்கு “ஏழைகள் அப்படியே இருக்கிறார்கள். தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததாகத் தெரியிவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடைவ அவரவர் விரும்பிய ஒரு பெட்டிக்குள் ஓட்டுப் போடச் செய்துவிட்டு ஜனநாயக ஆட்சி நடப்பதாகச் சொல்லுவதால் என்ன பயன் ? உங்கள் நாட்டிலுள்ள சாதாரண மனிதன் ஒருவனைப் பிடித்து உனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடைவ ஒட்டுப் போடும் சுதந்திரம் வேண்டுமா அல்லது நிரந்தரமான தொழிலும் வசதியான வீடும் வேண்டுமா என்று கேட்டுப் பாருங்கள்” என இன்றைய சமூக அரசியல் நிலைமையை படம் பிடித்து காட்டுகிறார்.
செ.கணேசலிங்கன் மலையாகத் தோட்டத் தொழிலாளர்களது பிரச்சனைகளை மையமாகக் கொண்டு சில சிறுகதைகளை எழுதியுள்ளார். மலையகத் தோட்டத் துரைமார்களும் பிற அதிகாரிகளும் பெண் தொழிலாளர்களைத் தமது பாலியல் இச்சைக்கு ஆளாக்கும் கொடுமைகள், தமது பாலியல் இச்சைக்கு இணங்காத பெண்களைப் பழிவாங்குதல், தொழிலாளர்களின் வறுமைக் கொடுமைகள், மலையாகத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பு பல வழிகளில் அதிகாரிகளாலும், துரைமார்களாலும் சுரண்டப்படுதல் முதலியவற்றை தமது சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளர். அதே வேளையில் இக்கொடுமைகளுக்கு எதிராக சாதி, மத, இன பேதங்களை மறந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டு போராட வேண்டியதையும் வலியுறுத்துகிறார்.
‘ கொடுமைகள் தாமே அழிவதில்லை ’ எனும் இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்து சிங்கள வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இவரது பல சிறுகதைகள் சிங்களம், ருஷ்யன், மலையாளம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
வர்க்க முரண்பாடுகள் கூர்மையடையத் தொடங்கிய ஒரு காலகட்டத்தில், நிலப்பிரபுத்துவத்தின் சுரண்டல்களுக்கு உட்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்ட தலித் மக்களின் அவலமான நிலையைச் சித்தரித்து, அந்த மக்களை எழுச்சியுறச் செய்யும் விதமாக ‘ நீண்ட பயணம் ’ நாவல் விளங்குகிறது. இது செ.கணேசலிங்கனின் முதல் நாவலாகும். இந்நாவலுக்கு இலங்தை அரசு ‘ நீண்ட பயணம் ’ நாவல், யாழ்ப்பாணக் கிராமங்களில் நிகழும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்த செய்திகளைக் காட்சிப்படுத்துவதுனூடாக கதையம்சம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சாதி மக்களை கோயில்களில் கயிறு கட்டி எல்லைப் படுத்துதல். பொதுக்கிணற்றில் குடிநீர் எடுக்க விடாமல் தடுத்தல். சட்டை முதலிய மேலாடைகள் அணியவிடாமல் தடுத்தல். பெயர் பதிவின்போது கந்தசாமியைக் கந்தன் என்றும், வேலுப் பிள்ளையை வேலன் என்றும் பதிவு செய்தல். இப்படியாக உயர் சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மீது நிகழ்த்திய அடக்குமறை கொடுமைகள் பற்றிய விவரணங்களுடன் இந்நாவல் விரிகின்றது.
“ நீண்ட பயணம் நாவல் தமிழ் நாவல் உலகில் புதிய வடிவமாக அமைகிறது. நிலவுடைமைக் கொடுமையின் சாதியம் மற்றும் உழைப்புச் சுரண்டல் ஆகிய தன்மை, இயல்பாக குறிப்பிட்ட மக்களின் பண்பாட்டு மொழியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஆக்க இலக்கியமாக ‘ நீண்ட பயணம் ’ நாவலை உருவாக்கியுள்ளார் என்று கருத முடியும்.” என சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை பேராசிரியர் வீ.அரசு தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
‘நீண்ட பயணம் ’ நாவலுக்கு இலங்கை அரசு 1966 ஆம் ஆண்டுக்குரிய சாகித்திய மண்டலப் பரிசு வழங்கியது.
‘செவ்வானம்’ இந்நாவல் தமிழகத்தில் புரட்சிர இலக்கியத்தை அறிமுகப்படுத்தியது. அரசியல், பொருளாதாரம், சமூகப் பின்னணியிலேயே நாவல் விரிகிறது.
“ சமகால அரசியலின் நேரடி விமர்சனம் என்ற வகையிலும், உழைக்கும் வர்க்கத்தின் அரசியலை முன்னெடுத்த முக்கிய ஆக்கம் என்ற வகையிலும் ‘செவ்வானம்’ நாவலுக்கு ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றில் மட்டுமின்றிப் பொதுவான அனைத்துத் தமிழ் கூறும் நல்லுலகின் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவம் உள்ளது” என செ. கணேசலிங்கனின் ‘ செவ்வானம் ’ நாவல் குறித்து பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் பாராட்டி புகழ்ந்துரைத்துள்ளார். ‘சடங்கு ’ நாவல் தனிமனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், போலித்தனமான சடங்கு சம்பிரதாயங்களைக் கட்டிக் கொண்டு உழலும் நிலப்பிரபுத்துவத்தின் பிரதிநிதிகளின் அறிவீனத்துக்கு சாட்டையடி கொடுக்கிறது.
‘சடங்கு ’ நாவலில் பல விஷயங்களை செ. கணேசலிங்கன் எள்ளி நகையாடுகிறார். மணமக்களை ஒன்று சேர்த்து வைப்பதற்கு முன்னர் பழமைவாதிகள் திருமணத்தில் படாடோபத்தையும், ஆடம்பரத்தையும், மரபுகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும் கவனிக்கின்றனர். மணமக்களின் மன இசைவு, கருத்தொற்றுமை ஆகியவற்றைக் கவனிப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
“சடங்கு (சுவைரயட) என்பது உண்மையில் ஒரு சமூக நடைமுறையே . அதற்கு ஒரு பண்பாட்டு வலுவுண்டு; சடங்குகள் மூலமே மக்கள் தங்கள் சமூக இருப்பை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். சடங்கில் ஒருவரே ஆற்றுபவராகவும், பார்வையாளராகவும் இருக்கும் சுவராசிய நிலையுண்டு. இந்த நிலைதான் சடங்குக்கும் சமூக இருப்புக்குமான தொடர்பை இறுகப்பிணைத்து விடுகிறது. ” என பேராசிரியர் கலாநிதி கா.சிவத்தம்பி கருத்துரைத்துள்ளார்.
“ திருமணம் என்பது இருவரது மனமொத்த வாழ்வின் பிணைப்பாகக் கருதப்படாது இரு குடும்பங்களின் இணைப்பாக எண்ணப்படுகிறது. இது இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பொதுவானது, வாழப்போகும் இருவரது அக உணர்வுகள் அங்கு புறக்கணிக்கப்பட்டு, புறச்சடங்குகள் மட்டுமே உயர்வாக நடத்தப்படுகின்றன. இப்போக்கினை திருமணச் சடங்கின் போது மட்டுமல்ல மரணச் சடங்கின் போது பார்க்கலாம். ”
“ ஒருவரின் அகால மரணத்தின் அடிப்படைக் காணங்களைக் கூட எவரும் ஆராய்வதில்லை. மரணச் சடங்குகளை முறைப்படியும் சிறப்பாகவும் செய்வதிலேயே ஆர்வம் காட்டுவர். மரணத்தின் காரணங்களை ஆராய்ந்து அந்நிலை மீண்டும் நிகழாது காக்க முன்னிற்பவனே மனிதன்; மனிதாபிமானமுள்ள வீரன் அவனே புதிய உலகின் சிருஷ்டி கர்த்தா ” என ‘ சடங்கு ’ நாவலின் முன்னுரையில் செ. கணேசலிங்கன் குறிப்பிட்டுள்ளார்.
“ கணேசலிங்கனது நாவல்கள் கடந்த பத்தாண்டுக் கால ஈழத்து வரலாற்றைச் சித்தரிக்கின்றன; அதே நேரத்தில் அவ்வரலாற்றின் விளைபொருளாகவும் அமைந்து காணப்படுகின்றன. திட்டத் தெளிவான வரலாற்று வளர்ச்சிக் கிரமத்தைக் காட்டாதுவிடினும், நீண்ட பயணம், சடங்கு, செவ்வானம் ஆகிய மூன்று நாவல்களும் நிலமானிய அமைப்பிலிருந்து முதலாளித்துவ அமைப்பிற்கு மாறும் சமுதாயத்தைச் சித்தரிக்கின்றன. கிராமப்புற உழைப்பாளிகளிலே துவங்கி, நகர்ப்புற கைத்தொழிலாளரின் விழிப்புடன் முடிவடைகின்றன. அந்த வகையில் இவற்றை மூன்று நாவல்களின் தொகுதி (கூசiடிடடிபல) எனலாம். ” என ‘செவ்வானம் ’ நாவலின் முன்னுரையில் பேராசிரியர் கலாநிதி. க.கைலாசபதி குறிப்பிட்டுள்ளார்.
‘போர்க்கோலம் ’, ‘மண்ணும் மக்களும் ’ ஆகிய நாவல்கள் தமிழக அரசு நூலகங்களில் வைக்கப்படாமலும், தமிழகத்தில் விற்பனை செய்யப்படாமலும் தடை செய்யப்பட்டமை, இவரது எழுத்துக்களின் செல்வாக்கு, தாக்கம், ஈழத்தை மட்டுமின்றித் தமிழகத்தையும் அச்சுறுத்தியதை நமக்கு உணர்த்துகிறது. அதே வேளை இந்நாவல்கள் தமிழக இடதுசாரி இலக்கிய இயக்கத்திற்கு பெரும் உந்து சக்தியாகப் பயன்பட்டன. ‘போர்க்கோலம் ’ நாவல் சாதியக் கொடுமைகளையும், நிலப்பிரபுத்துவ ஆகிக்கத்தையும் தோலுரித்து காட்டுகிறது.
“ நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்கிறோம் என்று நினைக்க வேண்டாம். எமது உரிமைகளையெல்லாம் நாங்கள் உங்களிடமிருந்து தயவோடு எதிர்பார்க்கவில்லை. கோவில், தேத்தண்ணிக்கடைகள் ( தேநீர் கடைகள்) போன்றவையெல்லாம் பொது இடங்கள். மனித இனமான எங்களுக்கும் அங்கே நுழைய உரிமை இருக்கு. நாமாகவே நுழைவோம். இப்போது எமக்குப் பயந்து பூட்டி வைக்கிறீர்கள். உந்தப் (உங்கள்) பூட்டையெல்லாம் உடைத்து நாங்கள் நுழையிற காலம் தூரத்திலில்லை. ” (போர்க்கோலம் நாவல் பக்கம் 49).
முதலாளித்துவம் தன் சுயநல இலாபத்திற்காக இன்றைய உலகமக்களின் நலனையும், எதிர்கால மக்களின் நல் வாழ்வையும் கருத்திற் கொள்ளாது பூமியின் இயற்கை வளங்களை அத்துமீறி சூரையாடி வருகிறது. மேலும், உலகின் 25 சதவீத மக்களுக்காக இயற்கை வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் அழிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல், மாசுபடுதல், சுகாதாரக் கேடுகள் முதலியவற்றை உருவாக்கிறது. இப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாவல் ‘நரகமும் சொர்க்கமும் ’ ஆகும்.
“ சுரண்டலின் மூலம் தனிச்சொத்துடைமையைக் காப்பாற்றி, உற்பத்திச் சாதனங்களைத் தன்னுடையதாக்கி, வளர்ந்து வரும் முதலாளிகள் ஒருபுறம், அவர்களின் சுரண்டலைத் தாங்க முடியாது நசிந்து கொண்டிருக்கும் தொழிலாளர்கள் மறுபுறம், இவர்கள் இருவரிடையேயும் அகப்பட்டு, தரையை மறந்து தாரகைகளைப் பிடித்து மாலையாக்க விரும்பும் மத்தியதர வர்க்கத்தினரின் வளர்ச்சியையும், வாழ்வையும் யதார்த்தமாகக் காட்டக்கூடிய நாவல் ஒன்று எழுது முற்பட்டேன் ” அந்த நாவல் தான் ‘தரையும் தாரகையும் ’ என அந்நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டு உள்ளார்
உலக அளவில் ஏகாதிபத்தியம் தனது பண்ட விற்பனைக்கு எவ்வாறு சந்தையை உருவாக்குகிறது. கிராமப்புறத்தில் மக்கள் தங்கள் சொந்த உழைப்பில் தயாரித்து பயன்படுத்திய சீயக்காய்த் துளைக்கூட ஏகாதிபத்திய உலகம் எவ்வாறு ஒரு சந்தைப் பண்டமாக மாற்றுகிறது. பண்ட உற்பத்தியில், விற்பனையில் பெண் எப்படி சுரண்டப்படுகிறாள் என்பதை ‘உலகச் சந்தையில் ஒரு பெண்’ என்ற நாவல் மிக அழகாகச் சித்தரிக்கிறது.
‘இரண்டாவது சாதி ’ நாவல், பெண்களை முதலாளித்துவம் கவர்ச்சிப் பண்டமாக்கி சந்தைப்படுத்தலையும், பாலியல் பேதத்தை முன்வைத்து பெண்களை அடக்கி ஒடுக்கிச் சுரண்டுவதையும், பெண்களின் உரிமைகளை மறுப்பதையும் விவரிக்கிறது. மேலும் ஆண் சாதியிலும் பார்க்க மனித உயிரினத்தின் படைப்பாற்றல் கொண்டவளாக பெண்கள் இருந்த போதும் உலகம் முழுவதும் இரண்டாவது சாதியாகவே கருதப்படுகிறாள் என்பதை விவரிக்கிறது .
‘ கோடையும் பனியும் ’ இந்நாவல் மொழி, மதம், பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம், அரசியல் முதலியவைகளின் அடிப்படைகள், சமூகத்தில் நிலவும் செல்வாக்கு, அவைகளின் போலித் தன்மைகள் குறித்து பேசுகிறது.
‘ இலட்சியக் கனவுகள் ’ இந்நாவல் இலங்கையில் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பலம் மற்றும் பலகீனம் பற்றி விவரிக்கிறது. மேலும், சிங்கள இராணுவம் தமிழீழத்திற்காகப் போராடியவர்களையும், தமிழ் மொழி பேசும் குடிமக்களையும், தமிழ்ப் பெண்களையும் கொடுமை செய்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்றழித்ததை விரிவாகப் பதிவு செய்துள்ளது.
‘கூட்டுக்கு வெளியே ’ இன்நாவலில் தனிச் சொத்துடைமையின் பல்வேறு அம்சங்கள் வெவ்வேறு வடிவங்களில் இடம் பெறுவதை விளக்குகிறது. அதாவது, மனிதன் தனது பாதுகாப்பு, தனது குடும்பத்தின் பாதுகாப்பு எனத் தனிச் சொத்தைச் சேர்க்கிறான். அதற்கு எல்லையற்று, போட்டா போட்டிச் சமூகத்தில் தனிச் சொத்து சேர்ப்பதே தனது வாழ்க்கை முழுவதும் குறிக்கோளாகக் கொள்கிறான். மேலும், எப்படியும் பணம் சேர்க்கலாம் என்ற சுயநலப் போக்கும் வலுப்பெற்றது. லஞ்சம், ஊழல், திருட்டு, கொலை, கொள்ளை மூலம் பணம் சேர்த்து, சமூக அந்தஸ்து பெறுவோர் கூட்டம் பெருகிவருகிறது. இதனால் நேர்மை, வாய்மை, நாணயம், ஒழுக்கம், பண்பாடு மனிதாபிமானம் மறைகிறது. அதனால் தனது சுதந்திரச் சிந்தனையை, தனது ஆத்மாவை இழப்பதை மனிதன் உணர்வதில்லை. சுயநலம் அவனது குடும்பத்தோடு ஒன்றிவிடுகிறது. தனிச் சொத்து சேர சேர சமூக விழிப்புணர்வு குன்றிவிடுகிறது என்பதை எடுத்துரைத்துள்ளார்.
‘ஒரு பெண்ணின் கதை ’ இந்நாவல் உயிரியல், உளவியல், சமூக வாழ்வியல் அடிப்படையில் ஆணுலகும், பெண்ணுலகும் வேறுபடுவதையும் விவரித்துக் கூறுகிறது. இது ஒரு பெண்ணின் கதை அல்ல. பெண்ணினத்தின் பயங்கரமான கதை. பெண்கள் பற்றிய பல பொய்மைகளை இந்நாவல் உடைத்தெறிகிறது.
“பொருளாதார நிலையில் வீட்டிலே பெண்ணின் உழைப்பு மதிக்கப்படுவதில்லை. கூலி தரப்படுவதில்லை. வெளியே உழைப்பினும் கணவன் குடும்பத்தினரது கட்டுப்பாட்டில் அவளது கூலி அபகரிக்கப்படுகிறது. அரசியலில் வாக்குரிமை இன்று வழங்கப்பட்ட போதும் ஆண் பிரதிநிதிகளுக்கே பெண்ணும் வாக்களிக்க நேரிடுகிறது. அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ அடிமைகளின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டிய நிலையுள்ளது. பெண்களுக்கு கற்பிக்கப்படும் கருத்தியல்கள், வேலைப்பணிகள் வேறாக உள்ளன. ஆண்கள் படைத்த கடவுள், மதப் போதனைகளே அவர்களுக்கு ஊட்டப்படுகின்றன. ஆணாதிக்கம், வன்முறையுடன் அவளை அடிமைப்படுத்துகிறது. குடும்பம் என்ற தனித்தனிச் சிறைகளில் பெண்கள் அடைக்கப்பட்டிருப்பதால், பாட்டாளிகளைப் போல் ஒன்று திரண்டு, பொருளாதார அரசியல் மாற்றத்திற்காகப் போராட முடியாதுள்ளது. கர்ப்பம், மகப்பேற்றுத் துன்பம், வேலைப் பிரிவினைகள் வேறு பெண்களை விரட்டுகின்றன” என நாவலின் முன்பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து சமூக உற்பத்தியில் ஈடுபட்டு பொருளாதார விடுதலையைத் தேட வேண்டும். பாட்டாளிகளுடன் இணைந்து விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு புதிய சமத்துவ சமுதாயத்தைப் படைக்க முன் வரவேண்டும். இன்றைய நிலையில் ஆண்கள், பெண்களை நெருங்கிய நண்பராக, தோழராக ஏற்க வேண்டும். ஆண்கள் இதனால் இழக்கப்போவது ஏதுமில்லை. உலகின் பாதிப்பங்கினரான பெண்கள் சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓடுக்கப்பட்டதால் மனித சமூகம் இழந்தவை எண்ணிலடங்காதவை என்பதை இந்நாவலில் எடுத்துரைத்துள்ளார் .
‘ ஒரு குடும்பத்தின் கதை ’ - இந்நாவல் உலகத்தில் சராசரியாக ஆண்கள் எட்டு மணி நேரம் உழைக்கும் போது பெண்கள் பதினைந்து மணி நேரம் உழைக்க நேரிடுகிறது என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. மேலும், அனைத்து மதங்களும் பெண்களின் விடுதலைக்கும், சம உரிமைக்கும் தடையாக உள்ளன. கூலி தரப்படாத விரக்தியான வேலைகளில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவதால், சமூகத்தின் உயர்வான நிலையை மறந்து தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதை விவரிக்கிறது.
‘ ஈனத்தொழில் ’ இந்நாவல் சார்ந்த சில குறிப்புகளில் செ.கணேசலிங்கன் கீழ்க்கண்ட கருத்தை பதிவு செய்துள்ளார். “ இன்று ஆளும் வர்க்கத்தின் வன்முறை வடிவமான அரசுகள் கூலிப்படைகளை வைத்து மனித இனத்தை அச்சுறுத்துவதோடு கொலையும் செய்யும் ஈனத் தொழிலைச் செய்வதைக் காண்கிறோம். இராணுவம் என்ற கூலிப்படையைத் திரட்டி, நவீன ஆயுதங்கள் கொடுத்து, மனித இனத்தின் ஒரு பகுதியினரைக் கொல்லும் ஈனத் தொழிலில் அரசுகள் ஈடுபட்டுள்ளன. மிக ஈனத்தனமாக மனிதர்களைக் கொலை செய்வதற்கு சட்ட ரீதியாக அனுமதி அளித்துவிட்டு இராணுவப் படையினரிடம் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது வியப்பானதே ”
‘ நீ ஒரு பெண் ’ இந்நாவலில், “ பொருளாதார, அரசியல், சட்டம் சார்ந்த சமத்துவம் வேண்டுவது மட்டுமல்ல, பெண்ணினத்திடையே ஒரு கலாச்சாரப் புரட்சியும் ஏற்பட வேண்டும் . ‘நீ ஒரு பெண் ’ என இனங்காட்ட இயலாதபடியாக ஆண்கள் போன்று புறநிலை அணிப்படுத்தல்மட்டுமல்ல, தமது உடல் தமது சொத்து பிறருடையது அல்ல என்ற அகநிலை விழிப்புணர்வும் ஏற்படுதல் வேண்டும். பெண்ணினத்திடையே அடிமை நிலையைவிட்டு சமத்துவ நிலையைக் காண விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என் முக்கிய நோக்கமாகும். ” என இந்நாவல் சார்ந்த குறிப்புகளில் தமது நோக்கத்தை அறிவித்துள்ளார்.
‘ அடைப்புகள்’ இந்நாவலை தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சிறார் உழைப்புச் சுரண்டலை முன் வைத்து படைத்து உள்ளார். இந்நாவலில் சில குறிப்புகள் என்ற பகுதியில், “ சிறார் உழைப்பு என்பது வயது வந்தவரின் வாழ்க்கையை உரிய காலத்தின் முன்னர் சிறார் கடைபிடிப்பது. இந்நிலை உடல் நலனையும், மூளை வளர்ச்சியையும் பாதிப்பது ; சில வேலை குடும்பத்திலிருந்தும் பிரிப்பது. நல்ல எதிர்காலம் கிட்டாது, கல்வி, தொழில் நுட்பப் பயிற்சிக்கும் வாய்ப்பில்லாது போய்விடுகிறது. ” என உலகத் தொழிலாளர் கழகத்தின் அறிக்கை கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அவை பின்பற்றப்படுவதில்லை.
சிறார் உழைப்பு நிலவுவதற்கு முக்கிய காரணங்கள், கிராமங்களில் நிலவும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்விக்கு வாய்ப்பின்மை, அறியாமை, விழிப்புணர்வின்மை ஆகியவைகள் முதன்மையாக விளங்குகின்றன என்பதை எடுத்தியம்பி உள்ளார்.
தீப்பெட்டி மருந்துகளால் ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள், காற்றோட்டமில்லாத தொழிற்சாலைகள், மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் மயக்கம், வாந்தி, மூச்சுத் திணறல், சுவாசக்கோளாறு, நுரையீரல் பாதிப்பு முதலிய நோய்கள் ஏற்படுகிறது. விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுதல், காயங்கள் ஏற்பட்டு ஊனமடைதல், தொடர்ந்து குனிந்து கொண்டே வேலை செய்வதால் முதுகுவலி உண்டாகுதல், பாதுகாப்பில்லாத குடிநீர், நல்ல சத்துணவு இன்மை, குடிசை வீடுகள், தரமான கழிப்பாறைகள் இல்லாதது, நோய் எதிர்ப்புச் சக்தியின்மை, நல்ல மருத்துவ வசதியின்மை ஆகியவற்றால் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் சிறார்கள் மிகவும் பாதிக்கப்படுவதையும், மிகக் குறைந்த கூலிக்கு உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதையும் இந்நாவலில் விரிவாக விவரித்துள்ளார் . மேலும் சமூகத்தில் வறுமை நிலையை ஒழிக்காமல் சிறார் தொழிலாளர் என்ற பிரச்சனையைத் தீர்க்க முடியாது, அனைத்துச் சிறார்களுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.
‘ தாய் வீடு ’ நாவலில் பெண்ணியம் குறித்து பேசப்படுகிறது பெண்கள் மீது மூன்று சுமைகள் ஏற்றப்படுகின்றன. அதாவது உழைப்பு, வீட்டு மனைவி, தாய் ஆகியச் சுமைகளாகும். நில உற்பத்தி வளர்ச்சியடைந்து தனிச் சொத்துடைமை ஏற்பட்டதும் ஆணினம் தனிச் சொத்தாக வீட்டுக்குள் பெண்ணையும் கொண்டனர். குடும்பம் என்ற நிறுவனம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது. எழுத்திலுள்ள சட்டங்களைக் காட்டிலும், எழுதாச் சட்டங்கள் பலம் வாய்ந்தவையாக உள்ளன. மனித இனம் பெண்ணடிமைத் தனத்துடன் தோன்றவில்லை. அதன் வரலாறு அடிமைத்தளையுடன் முடியப் போவதுமில்லை என்ற பெண்விடுதலை கருத்துக்களை இந்நாவல் முன்வைக்கிறது.
‘நான்கு சுவர்களுக்குள்’ இந்நாவல் குடும்பத்தில் நடைபெறும் வன்முறையை உலகளவில் பொதுமைப் படுத்திய போதும், இந்தியப் பெண்கள் மீதான வன்முறையையே சுட்டிக் காட்டுகிறது. முக்கியமாக நான்கு சுவர்களுக்குள் ஒடுக்கப்பட்ட குடும்ப அமைப்பு ; அது உலக நாகரிகம் சின்னமாக, புனிதமாக இன்றும் பேணப்படுகிறது. மதம், பரம்பரையான பழக்க வழக்கங்கள், சடங்கு முறைகள், இவற்றைப் பேணிக்காப்பாற்றும் அரசுகள் உள்ளன. கலாச்சாரம் சார்ந்த சட்டங்கள் அரசால் இயற்றப்படும் சட்ட விதிகளைக் காட்டிலும் பலம் வாய்ந்தவைகளாக உள்ளன என்பதை நாவலாசிரியர் விவரித்துள்ளார்.
‘ சிறையும் குடிசையும் ’ இந்நாவல் பெருநகரங்களில் அமைந்துள்ள சேரிப்பகுதிகள், நாகரிக நகரங்களை ஒட்டியுள்ள சிறைகள் எனச் சித்தரிக்கிறது. ஆரம்பத்தில் மேல்நாடுகளில் குற்றம் செய்தவரைத் திருத்தும் நோக்குடன் ‘ திருத்தல் வீடுகள் ’ அமைக்கப்பட்டன.
கைதிகளைத் தனிக் கொட்டடியில் அடைப்பது உடலை மட்டுமல்லாமல் மூளையையும், உளவியல் ரீதியாகப் பாதிப்படையச் செய்வது பற்றி முதலாளித்துவ அரசுகள் கவலைப்படுவதில்லை. குற்றங்களுக்கு தண்டனையல்லாது மனிதருக்கு உடலுக்கும், மூளைக்கும் தண்டனை தருவதாகும். ‘கம்பி எண்ணுவது ’ என்ற மரபுச் சொல்லும் அதன் பின்னரே ஏற்பட்டது.
ஒரு நாட்டில் லட்சம் மக்களுக்கு எத்தனை பேர் சிறையில் உள்ளனர் என்பதை வைத்து அந்நாட்டின் பண்பாடு, நாரிகத்தை கணிக்க முடியும் என்பது சமூக ஆய்வாளர்களின் கூற்று.
வேலையற்றவரை வெளியேயும் உள்ளேயும் வைப்பதன் மூலம் நாட்டின் சமூகத்து உழைப்பாளரைச் சமநிலைப்படுத்தவும் முடிகிறது. சிறைப்பட்டவரின் உழைப்புக்குக் குறைந்த கூலியே வழங்கப்படுகிறது. அவர்கள் சிறையில் தொழிற்சங்கம் அமைத்துப் போராட முடியாது. சிறகொடிந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறையில் உள்ளவர்கள் வாக்குரிமையையும் இழந்து விடுகின்றனர். சிறைச் சாலையில் உள்ள நடைமுறைகள், கொடுமைகள், வன்முறைகள் மற்றும் மதத்திற்கும், சட்டங்களுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பை வரலாற்று ரீதியாக இந்நாவல் எடுத்துரைக்கிறது.
‘ வன்முறை வடுக்கள் ’ இந்நாவல், வதை என்பது உடலால் மட்டும் ஏற்படுவதல்ல, மூளையிலும் ஏற்படுகிறது. உடல் துன்பமும் மூளையையே பாதிக்கிறது. அவ்வேளை பிற சிந்தனைகள் ஏற்பட மறுக்கின்றன. சத்துணவில்லாத குழந்தைகளும், தக்க மருத்துவ வசதியின்றி ஏழைகளும் இயற்கையாக மரணமடைவதில்லை ; வன்முறையால் கொல்லப்படுகிறார்கள் என்பதே உண்மை. மனிதனைக் கொல்வதற்காகத் துப்பாக்கிகளுக்கும், குண்டுகளுக்கும் அரசு செலவழிக்கும் பணம் குழந்தைகளின் சத்துணவிற்கும், ஏழைகளின் உணவுக்கும், மருத்துவத்துக்கும் செலவழிக்கப்படுவதில்லை. இதனால் குழந்தைகளும், ஏழைகளும் மறைமுகமான வன்முறையால் கொல்லப்படுகின்றனர் . இந்த சமூகப் பிரச்சினையை முன்வைக்கிறது இந்நாவல்.
‘விலங்கில்லா அடிமைகள் ’ இந்நாவல் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையால் இலங்கைத் தமிழரின் குடும்ப அமைப்பில் சமூக அமைப்பில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, நாகரிக, நவீன உலகில் வாழ்கிறோம் என நம்பிக் கொண்டிருப்பவர்களும் அறிந்து உணராத அளவில் பல்வேறு வடிவங்களில் வியாபித்திருக்கும் அடிமை நிலையை விரிவாக அலசுகிறது.
‘போட்டிச் சந்தையில் ’ இந்நாவல் உலகமயக் கொள்கைகளால் எவ்வாறு பெண்கள் சுரண்டப் படுகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் பண்ட விற்பனையில் பெண்களை ஈடுபடுத்தி போட்டிச் சந்தையின் கால்நடைப் பிராணியாக்குகிறது. பெண்கள் அடிமை நிலைக்கும், பாலியல் சுரண்டலுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை சித்தரிக்கிறது.
‘ கவர்ச்சிக் கலையின் மறுபக்கம் ’ நாவலில் சினிமா என்ற கவர்ச்சிக் கலையின் மறுபக்கத்தில், திரைமறைவில் நடைபெறும் ‘ நாடகங்களை ’ ஓரளவு சுட்டிக்காட்டுகிறார். மேலும், திரைப்படங்களில் மக்களின் சமூகப் பிரச்சனைகள், சமூக வளர்ச்சியை ஒட்டிய போராட்டங்களைப் பிரதிபலிக்காமல் பார்வையாளரின் விழிப்புணர்வை மழுங்கடிக்கவே பாலியலும், வன்முறையும் முதன்மைப்படுத்தப்படுகிறது. பாலியலும், வன்முறையும் பாசிச அரசியலுக்கு வாய்ப்பான கோட்பாடாகும் என்பதையும் எடுத்துரைத்துள்ளார். அதனால் தான் தமிழக மக்கள் தங்கள் முதல்வரை திரையரங்குகளில் தேடும் நிலை இன்றும் தொடர்கிறது.
‘ஒர் அரசியலின் கதை ’ இந்நாவல் தமிழக அரசியலில் மலிந்து காணப்படும் ஊழல்கள், சீர்கேடுகள், மற்றும் போலி வாக்குறுதிகளை நம்பி அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படும் அப்பாவி மக்கள் குறித்து ஆழமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் சமகால அரசியலை முன்வைத்து இந்நாவலை படைத்துள்ளார்.
‘சிவமலரின் சமயம் ’ இந்நாவலில் சமயம், சாதி, நிற இன வேறுபாடுகள், பெண்ணடிமைத்தனம், பால்நிலை, மொழிவெறி ஆகியன சுயசிந்தனை ஆற்றலைத் தடுக்கும் தூசுப்படலங்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
செ. கணேசலிங்கனின் பல நாவல்களில் பெண்விடுதலை மற்றும் பெண்ணியச் சிந்தனைகளை மிக ஆழமாகவும் தெளிவாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஓரு பெண்ணின் கதை, ஒரு குடும்பத்தின் கதை, இரண்டாவது சாதி, நீ ஓரு பெண், கவர்ச்சிக் கலையின் மறுபக்கம், குடும்பச் சிறையில், நான்கு சுவர்களுக்குள், புதிய சந்தையில், நரகமும் சொர்க்கமும் ஆகிய நாவல்களில் பெண்கள் எதிர் கொள்ளும் பன்முகப்பட்ட அழுத்தங்கள், பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்துள்ளார் .
தேசிய இனப்பிரச்சனைய மையமாக வைத்து, இளமையின் கீதம், பொய்மையின் நிழலில், விலங்கில்லா அடிமைகள், ஒரு மண்ணின் கதை, வதையின் கதை, அந்நிய மனிதர்கள், வன்முறை வடுக்கள், அயலவர்கள், ஈனத் தொழில், இலட்சியக் கனவுகள் முதலிய நாவல்களை எழுதி அளித்துள்ளார்.
மேலும், மரணத்தின் நிழலில், ஒரு அபலையின் கதை, சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை, அயலவர்கள், செல்வி, தேன் பறிப்போர், கடவுளும் மனிதனும், இரு நண்பர்கள், ஒரு விதவையின் கதை, தாயின் குரல், இருட்டறையில் உலகம், இன்பத்தின் எல்லையில், முகுந்தன் கதை, தீவரவாதி, மனமும் விதியும், சூறாவளிக்கு என்ன பெயர் ? எதிர் மறைகளின் ஒற்றுமை, ஒரு களவுக் காதல் கதை, கிழக்கும் மேற்கும், சிவமலரின் சமயம், இருமுகம், தந்தையின் கதை, பறிப்போரும் பண்பாடும், வாழ்வும் கடனும், இரத்த வடுக்கள், இயற்கையும் கடவுளும், மகளிர் மூவர், காதலும் வேட்கையும், சுசிலாவின் உயிரச்சம், மகளிர் இருவர், தோழியர் இருவர், மணேன்மணி காட்டும் ஊழிக்காலம், விமலா கூறும் செவிச் செல்வம், கறுப்பும் வெள்ளையும் உட்பட அறுபத்தைந்துக்கும் மேற்பட்ட நாவல்களை படைத்தளித்துள்ளார்.
செ. கணேசலிங்கன் எழுதிய ‘ தேன் பறிப்போர் ’ நாவல் ஆங்கிலத்தில் க்ஷவைவநச ழடிநேல என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இவரது நாவல்கள் தமிழகத்திலும், இலங்கையிலும் இருபதுக்கும் மேலான மாணவர்கள் எம் பில் ஆய்வுக்கும், முனைவர் பட்ட ஆய்வுக்கும் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது ‘மரணத்தின் நிழலில் ’ என்னும் நாவலுக்கு 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பரிசு வழங்கிச் சிறப்பித்தது. மலேசிய பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பிற்கு ஒரு பாடநூலாக ‘சடங்கு ’ நாவல் வைக்கப்பட்டுள்ளது. ‘அயலவர்கள் ’ நாவல் சென்னைப் பல்கலைக் கழக முதுகலைப்பட்டப் படிப்பிற்கு பாடநூலாக வைக்கப்பட்டு உள்ளது.
“ சிறுவர்க்கான கதைகள் பகுத்தறிவை ஊட்டக்கூடியதாக, சிந்தனையை வளர்க்கக் கூடியதாக, சிந்திக்கும் ஆற்றலை வளர்ப்பதாக, அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவதாக அமைய வேண்டும் ” என சிறுவர்க்கான கதைகள் குறித்த சிந்தனையை அடிப்படையாக அறிவித்தார்.
உலக அதிசியங்கள், உலகச் சமயங்கள், உலகை மேம்படுத்திய சிந்தனையாளர்கள், உலக மகாகாவியங்கள் கூறும் கதைகள், புதிய ஈசாப் கதைகள், சிறுவர்க்கான சிந்தனைக் கதைகள் முதலிய நூல்களை சிறுவர்களுக்காக படைத்து அளித்து உள்ளார் .
ஈழத்துச் சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் செ. கணேசலிங்கனுக்கு முக்கிய இடமுண்டு என்பது இலக்கிய ஆய்வாளர்களின் கருத்தாகும்.
செ.கணேசலிங்கன் 1960 ஆம் ஆண்டு மீனாம்பாள் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். குந்தவி, குமரன், மான்விழி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
செ.கணேசலிங்கன் 1980 களின் பிற்பகுதியிலிருந்து தமிழகத்தில் சென்னை நகரில் வசித்து வருகிறார்.
இவரது கட்டுரைத் தொகுதிகள் மார்க்சிய பார்வையினை அடிப்படையாகக் கொண்டவை. கலை, இலக்கியம், பெண் விடுதலை, பெண்ணியச் சிந்தனை, பழந்தமிழ் இலக்கியம், சமயம், உளவியல், பயண அனுபவங்கள் எனப் பல்வேறு பிரச்சனைகளை மார்க்சிய பார்வையில் ஆராய்கின்றன.
பொதுவுடைமைச் சித்தாந்தத்தைத் தெளிவாகவும், எளிமையாகவும்,விளக்கும் விதத்தில், சாதாரணமானவர்களும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் மான்விழிக்கு கடிதங்கள், குமரனுக்கு கடிதங்கள், குந்தவிக்கு கடிதங்கள், அறிவுக் கடிதங்கள் எனும் தொகுதிகள் எழுதி வெளியிட்டுள்ளார்.
‘குமரன்’ இதழ் 1979 ஆம் ஆண்டு முதல் வெளிவந்தது. குமரன் இதழ் மூலம் ஈழத்து இதழியல் வளர்ச்சியில் செ.கணேசலிங்கனுக்கு முக்கிய இடமுண்டு. ‘குமரன் ’ இதழ் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார, பன்னாட்டு இதழாக வெளிவந்தது. ‘குமரன் ’ இதழின் ஆசிரியராக செ. கணேசலிங்கன் விளங்கினார். கலை இலக்கிய குறிப்புகள், கேள்வி பதில்கள், கவிதைகள், துணுக்குகள், கட்டுரைகள், சிறுகதைகள், இலக்கிய உலகில் – எனப் பல பகுதிகள் இதழில் இடம் பெற்றிருந்தன. மேலும், உலகப் புகழ் பெற்ற பிறமொழிக் கதைகள், மார்க்சிய கட்டுரைகள், மார்க்சிய நோக்கிலான இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், கலை இலக்கியம் குறித்த கட்டுரைகள் வெளியிடப்பட்டது.
குமரன் பதிப்பகம் மூலம் நூற்றுக்கணக்கான நூல்களை தமிழ்நாட்டிலும், கொழும்பிலும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
செ. கணேசலிங்கன் தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த பின்னர் கூhந ழiனேர ஆங்கில நாளிதழில் புத்தக மதிப்புரைகள் எழுதியுள்ளார்.
பெண்ணடிமை தீர, கலையும் சமுதாயமும், அழகியலும் அறமும், பல்சுவைக் கட்டுரைகள் முதலிய கட்டுரை நூல்களையும் எழுதி வழங்கியுள்ளார்.
மு. வ. நினைவுகள், கைலாசபதி நினைவுகள், பாலுமகேந்திரா நினைவுகள் முதலிய நூல்களை படைத்துள்ளார்.
நவீனத்தமும் தமிழகமும், பகவத் கீதையும், திருக்குறளும், கனவுகளின் விளக்கம், குறள் கூறும் பாலியல் கோட்பாடு, மாக்கியவல்லியும் வள்ளுவரும், பெண்ணியப் பார்வையில் திருக்குறள், சித்தர் சித்தாந்தமும் சூபிசமும், அர்த்த சாஸ்திரமும் திருக்குறளும்- முதலிய ஆய்வு நூல்களையும் தமிழுலகிற்கு படைத்தளித்துள்ளார்.
‘திரும்பிப் பார்க்கிறேன் ’ என்ற சுயசரிதை நூலையும், சில பயணக் குறிப்புகள் –அமெரிக்கா, இங்கிலாந்து என்ற பயண நூலையும் எழுதி அளித்துள்ளார்.
அபலையின் கடிதம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.
“மார்க்சியத் தளம் சார்ந்த படைப்பாளியாக அறிமுகமாகி, சமுதாய விமர்சனப் பாங்கான நாவலிலக்கிய முயற்சிகளுக்கு ஒரு திடப்பாங்கான வடிவமைப்பைத் தரும் வகையில் தொடர்ந்து செயற்பட்டவர் என்பதே செ. கணேசலிங்கன் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் ஆகும். ” எனப் பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் புகழ்ந்துரைத்துள்ளார்.
“ மனிதன், மனிதனால் உருவாக்கப்பட்ட சமூகத்தின் தீய, கொடூரமான சக்திகளுக்குப் பலிக்கடாவாகியுள்ளான். மனிதன் சமூகத்தின் தீய சக்திகளால், சுரண்டும் வர்க்கத்தினால் அடக்கி ஒடுக்கப்பட்டு, சுரண்டிச் சூறையாடப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டு அவலமான துன்ப துயரங்கள் நிறைந்த சோகமயமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறான். மனிதனை இந்தத் தீயசக்திகளைக் கொண்ட சுரண்டும் வர்க்கத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுத்து அவனை மேம்படுத்த வேண்டும். இதுதான் உன்னதமான மானிட நேயம் ” – இந்த உன்னத மானிடத்துவத்தை செ.கணேசலிங்கன் படைப்புகளில் நாம் காண்கிறோம் என ஈழத்துக் கவிஞர் நீர்வைப் பொன்னையன் புகழ்ந்துரைத்துள்ளார்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் கங்கத்தை உருவாக்கி கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றியவர்.
தமிழறிஞர் மு. வ., முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதன், பயண எழுத்தாளர் சோமலே ஆகிய தமிழறிஞர்களுடனும், திரைப்பட இயக்குநர் பாலமகேந்திராவுடனும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
“ செ. கணேசலிங்கன் கதைகளில் இடம் பெறும் அதிகமான பாத்திரங்கள் அநீதிகளுக்கும், கொடுமைகளுக்கும், சுரண்டலுக்கும் எதிராகப் போராடும் போர்க்குணம் மிக்கவையாக விளங்குகின்றன. ” எனப் பேராசிரியர் க. அருணாசலம் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
“ முற்போக்குச் சிந்தனையுடன் மனிதாபிமானமிக்க படைப்புகளை தந்த செ.கணேசலிங்கன் எழுதுவதைப் போல வாழ்ந்து காட்டியவர். எழுத்தும் வாழ்வும் ஒன்றாகவே உள்ளது. ” என ஈழத்து எழுத்தாளர் அந்தனி ஜீவா பதிவு செய்துள்ளார்.
“ கருத்தை இலக்கியத்தோடு மட்டும் வைத்துக் கொண்டு முற்போக்கு- பிற்போக்கு பேதமற்ற நட்புறவை சகல எழுத்தாளரோடும் கொண்டுள்ள ஒரு – சிலவேளை ஒரே-ஈழத்து எழுத்தாளர் செ. கணேசலிங்கன் ” என்று இலக்கு இதழ் (1996 மே) பாராட்டியுள்ளது.
பல்துறைப் புலமை பெற்ற எழுத்துப் போராளி, தமது எழுத்தில் நேர்மையையும், உண்மையையும் வெளிப்படுத்தியவர். ஈழத்து முதுபெரும் அறிஞர். இலக்கிய படைப்பாளிகளுக்கு ஊக்கமளித்து ஆதரிப்பவர், ஆக்க இலக்கியப் படைப்பாளி எனப் பன்முக ஆற்றல் படைத்தவர் செ. கணேசலிங்கன்.
“ கலை, இலக்கியங்கள் மயக்க மூட்டும் மதுவாகக்கப்படக் கூடாது. கலை, இலக்கியங்கள் மூலம் நல்ல உயர்ந்த கருத்துகளை மனதில் பதிய வைக்கலாம். புறநிலைப் பண்ட உற்பத்திகள் எவ்வாறு விஞ்ஞான ரீதியாக வளர்க்கப்படுகிறதோ, அதே போல அகநிலை உற்பத்தியான கலை, இலக்கியங்களும் விஞ்ஞான ரீதியாக, மனித சமுதாயத்தை மாற்றி அமைக்கக் கூடிய உந்து சக்தியாக வளர்க்கப்பட வேண்டும்.” என கலை இலக்கிய வளர்ச்சி குறித்து செ. கணேசலிங்கன் தமது சிந்தனையை பதிவு செய்துள்ளார்.
“ படைப்பாளிகள் சமூகத்தின் ஒரு பகுதிதான். சுமூகத்தில் தான் வாழ்கிறான். சமூக நிகழ்வுகளின் பாதிப்புகள் இவர்களது படைப்புகளில் வெளிப்படுகின்றன. கலை, இலக்கியப் படைப்புகள் மக்களின் மனத்தை உழுது, பண்படுத்தி வரலாற்றை முன்னெடுத்துச் செல்லும் கடமையைச் செய்ய வேண்டும்.” என்று படைப்பாளிக்கு அறைகூவல் விடுக்கும் செ.கணேசலிங்கன் 90 வயதைக் கடந்த பின்னும் தமது எழுத்துப் பணியை சமூகத்துக்கு செய்து கொண்டிருக்கிறார்.
நன்றி: http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/35380-2018-07-03-04-22-17