- 'திறனாய்வுக் கட்டுரைகள்' நூலிலிருந்து பெறப்பட்ட இக்கட்டுரையினை நன்றியுடன் காலத்தின் தேவை கருதி மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைத் தேயங்களில் சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பிருச்தே கவிதைக்கென்று தனிச்சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கின. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “பொயற்றி”, என்ற கவிதைச் சஞ்சிகை 1912ஆம் ஆண்டு முதல் வெளிவருகின்றது. 1909ஆம் ஆண்டு முதல் “பொயற்றி றிவியு” என்னுஞ் சஞ்சிகை இங்கிலாந்தில் இருந்து வெளிவருகின்றது. கவிதைகளையும், கவிதை பற்றிய விமர்சனங்களையும், புத்தக மதிப்புரைகளையும் இச் சஞ்சிகைகள் தாங்கி வருகின்றன.
தமிழில், கவிதைகளை மாத்திரம் தாங்கிய ஒரு இதழை வெளிக்கொண்டு வரும் முயற்சி, முதன்முதல் தமிழ் நாட்டிலேயே தொடங்கியது. பாரதிதாசனே இதைத் தொடங்கி வைத்தவர். அவர் வெளியிட்ட குயில் பத்திரிகையே தமிழின் முதலாவது கவிதை இதழ் என்று தெரிகின்றது. குயில், பாரதிதாசனின் படைப்புக்களையே பெரும்பாலும் தாங்கி வந்தது. குயிலைத் தொடர்ந்து கவிதை, சுரதா, வானம்பாடி முதலிய கவிதை இதழ்கள் தமிழகத்தில் இருந்து வெளிவந்தன. வானம்பாடி அண்மைக் காலத்து முயற்சியாகும். தமிழ் நாட்டுக் கவிதை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய வானம்பாடி, வானம்பாடிக் குழுவினருக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நின்று விட்டதாகத் தெரிகின்றது.
ஆசிரியத் தலையங்கம் முதல் அடுத்த இதழுக்கான அறிவித்தல் வரை அனைத்தையும் செய்யுளிலேயே எழுதுவது தமிழ் நாட்டுக் கவிதை இதழ்களின் பிரதான பண்பாகக் காணப்பட்டது. பாரதிதாசனே இப்போக்கைத் தொடங்கி வைத்தவர் எனலாம். “சுரதா தன் கவிதைப் பத்திரிகையில் விளம்பரத்தைக் கூடக் கவிதையில் தான் பிரசுரிக்கிறார்” என்று நண்பர் ஒருவர் என்னிடம் சிலாகித்துப் பேசினார். அந்த அளவுக்கு ஆசிரியத் தலையங்கம், போட்டி அறிவித்தல், வர்த்தக விளம்பரங்கள் அனைத்தையும் அவை செய்யுளில் எழுதப்பட்ட காரணத்தால் கவிதையோடு சமமாக மதிக்கும் ஒரு சமரச மனப்பான்மை இவ்விதழ்களில் காணப்பட்டது. வானம்பாடி இதில் இருந்து வேறுபட்டது. முற்றிலும் புதுக்கவிதைக்கான ஒரு வெளியீட்டுக் களமாக அது அமைந்தது. ஆயினும் டாம்பீகமான மொழிப் பிரயோகம் அதன் பிரதான பண்பாகக் காணப்பட்டது. சமூக சமத்துவ நோக்கை வானம்பாடிக் குழுவினர் தங்கள் உட்பொருளாகக் கொண்டிருந்த போதிலும் சமூகத்தின் பொது வழக்குக்குப் புறம்பான மொழிப்பிரயோகத்தயும், சிந்தனை முறையையும், கற்பனைப் படிமங்களையும் பெருமளவு கையாண்டதால் வானம்பாடி எழுப்பிய குரல் சமூகத்தோடு ஒட்டாது அந்நியமாகவே ஒலித்தது. வானம்பாடியில் இதற்குப் புற நடைகள் உண்டு. எனினும் இதுவே பொதுப்பண்பு என எனக்குத் தோன்றுகின்றது.
தமிழ் நாட்டைப்போல், ஈழத்தில் இருந்தும் கவிதைக்கென்றே சில கவிதை இதழ்கள் வெளிவந்தன. ஈழத்துக் கவிதை இதழ்களுக்கு ஒரு இருபது வருட வரலாறு உண்டு. 1955ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் “தேன்மொழி”யின் முதல் இதழ் வெளிவந்தது. தேன்மொழியே ஈழத்தின் முதலாவது தமிழ்க் கவிதை இதழாகும். மஹாகவி, வாதர் ஆகிய இருவரும் சேர்ந்து சோமசுந்தரப் புலவரின் நினைவுச் சின்னமாகத் தேன்மொழியை வெளியிட்டனர். “கட்டிளமை செட்டுகின்ற கன்னிகையும் காதலனும் ஒன்று சேர்ந்தது போல எமது உள்ளத்திலே தோன்றிப் பேராவலாய் நிறைந்த இரு எண்ணங்களின் சேர்க்கைதான் இந்த இதழ். கவிதைகளை மாத்திரமே தாங்கிய ஒரு இதழை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது மற்ற எண்ணம். நவாலியூர் சோமசுந்தரப் புலவருக்கு ஒரு நல்ல நினைவுச் சின்னம் உருவாக்க வேண்டும் என்பது மற்ற எண்ணம். இந்த இரண்டு எண்ணங்களும் சேர்ந்து தேன்மொழியை உருவாக்கிவிட்டன.” என்று முதலாவது இதழில் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.
தேன்மொழி பதினாறு பக்கங்கள் கொண்ட சிறு சஞ்சிகையாக மாதம் தோறும் வெளிவந்தது. ஒவ்வொரு இதழின் அட்டையிலும் சோமசுந்தரப் புலவரின் ஒரு பாடல் இடம் பெற்றது. “பத்து ஆண்டுகளின் முன் பாடிய செல்வங்கள்” என்ற ஒரு பகுதி தொடர்ந்து வந்தது. தேன்மொழி வெளிவந்த காலத்தில் பிரபலமாக இருந்த கவிஞர்கள் பத்து வருடங்களின் முன்பு – அவர்களிற் பலர் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதிய கவிதைகளில் ஒன்று அப்பகுதியில் இடம் பெற்றது. ஒவ்வோர் இதழின் பின் அட்டையிலும் சிறப்பாக ஒரு கவிஞர் அறிமுகப்படுத்தப்பட்டார். நாவற்குழியூர் நடராசன், சோ. நடராசன், அ.ந.கந்தசாமி முதலிய ஈழத்துக் கவிஞர்களும், ச.து.சு. யோகி, கலைவாணன், ரகுநாதன் முதலிய தமிழ் நாட்டுக் கவிஞர்களும், இப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டனர். ஈற்றடிகள் கொடுத்துத் தனி வெண்பாப் பாடத்தூண்டும் முயற்சியையும் தேன்மொழி மேற்கொண்டது. “வேசிக்கும் உண்டோ விருப்பு”, “வீட்டிலே வைத்த விளக்கு”, “;இல்லையோ கண்கள் இரண்டு”, “எங்கழிலென் ஞாயிறெமக்கு” முதலிய ஈற்றடிகளைக் கொண்டு பலர் வெண்பாக்கள் எழுதினர். சில சீன, ஸ்பானிய, பிரான்சிய, ஆங்கிலக் கவிதைகளின் மொழி பெயர்ப்புக்களும் தழுவல்களும் தேன்மொழியில் வெளி வந்தன தேன் மொழி இரண்டாவது இதழில் அ. ந. கந்தசாமி மொழிபெயர்த்த பின்வரும் சீனக் கவிதை நகைச்சுவை நிறைந்தது. கடைசிநம்பிக்கை என்பது இக்கவிதையின் தலைப்பு.
புத்திரன் பிறந்தால் புத்திக் கூர்மை
மெத்தவே அவனிடம் மேவுதல் வேண்டும்
என்றே எவரும் எண்ணுவர், ஆயின்
யானோ எனது புத்திக் கூர்மையால்
வாழ்க்கை முழுவதும் வரண்டு கிடக்கிறேன்,
இன்றென் நினைவு ஒன்றே யாகும் -
என்சிறு பிள்ளை நன்கு வளர்ந்து
அறியாமையிலும் மடமைச் சிறப்பிலும்
எவர்க்கும் குறைவிலா நிலங்கி, அமைதி
நிலவும் வாழ்க்கை நீள நடாத்தி
ஈற்றில இந்த நாட்டை இயக்கும்
மந்திரி சபையிலும் குந்தி இருப்பான்
என்ற ஆசை ஒன்றே
என்னுளம் மன்னி இருப்பது வாமே!
இந்தக் கவிதையின் கீழே எந்த இலங்கை மந்திரியையும் குறிக்கவில்லை என்று அச்சிடப்படடிருந்தது. தேன் மொழியில் மொத்தம் ஆறு இதழ்களே வெளிவந்தன. முதல் நான்கு இதழ்களும் தொடர்ச்சியாக வந்தன. ஐந்தாம் இதழ் 56தை, மாசி மாதங்களுக்குச் சேர்த்து வந்தது. ஆறாவது இதழ் தட்டுத் தடுமாறி நான்கு மாதங்களுக்குப் பின் வெளிவந்தது. அதுவே தேன்மொழியின் கடைசிக்குரல். தேன்மொழி ஆறு இதழ்களே வெளிவந்த போதிலும் இருபது வருடங்களுக்கு முந்திய இலங்கைத் தமிழ்க் கவிதைப் போக்குகளை இனங்காட்டும் ஒரு சிறந்த பிரதிநிதியாக அது அமைந்தது. யாப்போசை கவிதையின் பிரதான அம்சமாகக் கருதப்பட்ட காலம் அது. ஆயினும், ஆசிரியத் தலையங்கத்திற்கும், போட்டி அறிவித்தல்கள், விளம்பரங்களுக்கும் செய்யுளைக் கையாள்வதைத் தேன்மொழி தவிர்த்துக்கொண்டதுடன், தற்காலப பொதுசன வழக்கைப் பெரிதும் ஒத்த மொழி நடையைக் கையாண்டுள்ளதையும் நாம் அவதானிக்கலாம்.
தேன்மொழிக்கும் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து 1964 முதல் வெளிவரத் தொடங்கிய நோக்கு தேன்மொழியில் இருந்து சில வகையில் வேறுபட்டது. மொழிநடையைப் பொறுத்தவரை நோக்கில் ஒன்றுக்கு ஒன்று முரணான இரு போக்குகள் செயற்பட்டதை அவதானிக்க முடிகின்றது. ஒன்று பழைய தமிழ் மொழியை அடி ஒற்றிய பண்டிதப் போக்கு, மற்றது தற்கால மொழிநடைப் போக்கு, நோக்கின் முதல் இதழில் இருந்தே இதற்கு உதாரணங்கள் தரலாம்.
“புதிய முயலுமோர் மீதூர் பெருநசை
மையிதழ் விழித்தும், கண்ணினை நோக்கி
வந்தனள் பெரும, வந்தவள் அயலளள்
அகத்தவள் - பிறநோக்குக் கொள்ளாது
அன்னவள்
தம்வரவு ஏற்பதும் தவப்பயன் … … …”
நோக்கின் வரவுக்குக் கட்டியம் கூறி முதல் ‘இதழ் அட்டையில் பிரசுரமாகிய மேற்காட்டிய வரிகள் நோக்கின் பண்டைய மொழிநடைப் போக்கைக் காட்டுகின்றன.
“மனிதனின் தந்தை பிள்ளையே ஆவான்
என்வாழ் நாட்கள் ஒன்றுடன் மற்றது
இயற்கைப் பக்தியால் இணைவதை
விரும்புவேன்……”
“இன்னும் தலையை இழுத்தபடி இருந்தால்
என்னென்று கோயிலுக்குப் போதல்?
எழுந்தி ருங்கோ!
பொன்னம்மா வீட்டாரும் போய்விட்டார்…”
மேற்காட்டிய வரிகள் நோக்கிற் செயற்பட்ட தற்கால மொழிநடைப் போக்கைக் காட்டுகின்றன. ஆயினும் நோக்கில் வழக்கிறந்த பண்டைய மொழிநடைப் போக்கின் செல்வாக்கே அதிகமாகக் காணப்பட்டது.
திரு. இ. இரத்தினம், முருகையன் ஆகிய இருவரும் சேர்ந்து காலாண்டுக்கு ஒருமுறையாக நோக்கை வெளியிட்டனர். தாய்மொழிக் கவிதை, கவிதை மொழி பெயர்ப்பு, கவிதை விமர்சனம் அகிய மூன்றையும் வளர்ப்பது நோக்கின் நோக்கமாக இருந்தது. மொழி பெயர்ப்புக்கு நோக்கில் அதிக இடம கொடுக்கப்பட்டது. நோக்கில் பிரசுரமான கவிதைகளில், சுமார் அரைவாசி பிறமொழிக் கவிதைகளின் தமிழாக்கங்களே எனலாம். “கவிதையோடு விமர்சன நோக்கின் சிறப்பான அம்சமாக அமையும் கவிதையிலும் பிறநாட்டுக் கவிதைகளைத் தமிழி;ல ஆக்கித் தருவதும் எமது திட்டம்… பிறநாட்டுக்கவிதைகளின் தமிழாக்கங்களையும் திறனாய்வுரைகளையும் நோக்கு தாங்கிவரும். தமிழோடு அவற்றை ஒப்பிட்டு தமிழ் மக்கள் தம் இலக்கிய உலகைச் செம்மைப்படுத்த இவ்வமிசம் பெரிதும் பயன்படும்”. என்று நோக்கின் முதல் இதழில் ஆசிரியத் தலையங்கம் கூறியதற்கேற்ப பிறமொழிக் கவிதைகளுக்கும், கவிதைபற்றிய பிறநாட்டர் கருத்துக்களுக்கும் நோக்கு சிறப்பிடம் கொடுத்தது. நோக்கின் நான்காவது இதழ் முற்றாக சேக்ஸ்பியரின் கவிதைகளைத் தாங்கி வெளிவந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. சேக்ஸ்பியரை விட மயகோவ்ஸ்கி, இயூசினி எவ்டு செங்கோ முதலிய சோவியத் கவிஞர்கள், காசியா லோகா, மிகுவெல் உனாமுனோ முதலிய ஸ்பானியக் கவிஞர்கள் படிலியர், போல் வலரி முதலிய பிரஞ்சுக் கவிஞர்கள் போன்றோர் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறமொழிக் கவிஞர்கள் ஆவர். மாசேதுங்கின் இரண்டு கவிதைகளும் கூட நோக்கில் வெளிவந்தன. டி. எஸ். எலியட்டின் மரபும் தனித்திறமையும் என்ற புகழ் பெற்ற கட்டுரையின் ஒரு பகுதியும் நோக்கில் இடம் பெற்றது.
குறிப்பிடத் தகுந்த தாய்மொழிக் கவிதைகள் சிலவும் நோக்கில் பிரசுரமாகின. அறுபதுக்களில் பிரபல கவிஞர்களாக விளங்கிய மஹாகவி, முருகையன், நீலாவணன் ஆகியோர் நோக்கில் தொடர்ந்து எழுதினர். மஹாகவியின் திருவிழா பாநாடகம் முதல் இதழில் பிரசுரமாகியது. புலவர் சிவன் கருணாலய பாண்டியனாரின் அழகிய நூற்றைம்பது என்னும் வெண்பாத் தொடரும் காலவழுவாக நோக்கில் சில இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. இவ்வாறு புதுமைக்கும் பழமைக்கும் நோக்கு ஏககாலத்தில் ஒரு களமாக அமைந்தது.
தேன் மொழிபோல் நோக்கிலும் மொத்தம் ஆறு இதழ்களே வெளிவந்தன. 1964 என்று தேதியிட்டு நான்கு இதழ்கள் வந்தன. 1965ல் ஐந்தாவது இதழ் வெளிவந்தது. பின்னர் ஐந்தாண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு பல்வகைப் பட்ட கவிதைப் போக்குகளை உடைய பலரையும் இணைத்துக்கொண்டு நோக்கின் ஆறாவது இதழ் 1970ல் வெளிவந்தது. அதன் பிறகு நோக்கு வெளிவரவில்லை.
தேன்மொழி, நோக்கு ஆகிய இதழ்கள் “கவிதை” என்ற தூய இலக்கிய வடிவத்தின் வளர்ச்சியையே தமது பிரதான இலட்சியமாகக் கொண்டிருந்தன எனலாம். வேறு வகையில் சொன்னால் இலக்கிய வடிவம் பற்றிய பிரகஞையே இவற்றில் முதன்மை பெற்றிருந்தது எனலாம். ஒரு வகையில் இதனை தூய கலைநோக்கு என்றும் கூறலாம். இலக்கிய வடிவத்தைச் சமூகச் செயற்பாட்டுடன் இயைபுறுத்தும் போக்கு இவ்விதழ்களில் பிரக்ஞை பூர்வமாகச் செயற்படுத்தப்படவில்லை. சமூக உணர்வு உடைய கவிதைகள் அவ்வப்போது இவ்விதழ்களில் வெளிவந்தன. எனினும் அதுவே அவ்விதழ்களின் பிரதான இலட்சியமாக அமையவில்லை. அக்கால ஈழத்து இலக்கத்தில் - குறிப்பாகக் கவிதைத் துறையில் இன்றிருக்கும் அளவுக்குச் சமுதாயப் பிரக்ஞை அழுத்தமும் துலக்கமும் பெற்று இருக்கவில்லை என்பது இதற்கு ஒரு காரணம் ஆகும். ஆனால் அறுபத்தைந்துக்குப் பின் கவிஞர்கள் மத்தியிலும் சமுதாய நோக்கு வியாபிக்கத் தொடங்கியது எனலாம். எல்லோரும் இல்லை எனினும் ஒரு கணிசமான தொகைன் கவிஞர்கள் முற்போக்;குச் சிந்தனையால் பாதிக்கப்பட்டனர். அது மட்டுமன்றி இவர்களுள் சிலர் கவிதையின் கலைநுட்பத்தில் கூடிய கவனமும் செலுத்தினர். கவிதையின் கலைநுட்பத்தில் கூடிய கவனமும் செலுத்தினர். கவிதையில் சமூகச் செயற்பாடும். கலைநுட்பமும் இயைபுறுத்தப்படவேண்டும் என்ற நோக்கு இவர்களின் கொள்கையாய் அமைந்தது. இந்தக் கொள்கையின் வெளிப்பாடுளுள் ஒன்றாகவே நோக்கைத் தொடர்ந்து வெளிவந்து ஈழத்தின் மூன்றாவது கவிதை இதழான கவிஞன் அமைந்தது.
நண்பர் சண்முகம் சிவலிங்கமும் நானும் சேர்ந்து 1969 பங்குனியில் கவிஞன் முதல் இதழை வெளியிட்டோம். காலாண்டுக்கு ஒன்றாகக் கவிஞன் நான்கு இதழ்கள் வெளிவந்தன. ஐந்தாவது இதழில் இருந்து ஒன்று விடடு ஒரு இதழை ஒரு தனிக் கவிஞனுக்கு ஒதுக்குவது என்ற திட்டம் இருந்தது. அதன்படி ஐந்தாவது இதழ் மஹாகவியின் கோடை என்ற தனி நூலாக வெளிவந்தது. அதன் பிறகு கவிஞன் வெளிவரவில்லை. வெளியீட்டாளர்களைத் தவிர வேறு யாரும் கோடையை கவிஞனின் ஓர் இதழாகக் கருதுவதில்லை. ஆகையால் கவிஞன் மொத்தம் நான்கு இதழ்கள் என்றே கொள்ளலாம்.
கவிதையின் சமூகப் பெறுமானம், கலைத்தரம் ஆகிய இரண்டு அம்சங்களைக் கவிஞன் முக்கியமாக வலியுறுத்தியது. “கலையாக்கத்திலும், சமூகப் பெறுமானத்திலும் வாசகர் தொகையிலும் எமது கவிதையின இன்றைய எல்லைகளை நாம் விரிவுபடுத்தவேண்டும்….
“இன்றைய சமுதாய நிலையும் அதன் கோரிக்கைகளும் கவிதையின் உள்ளடக்கமாக அமைவது இன்றையக் கால கட்டத்தில் தவிர்க்க முடியாத அம்சமாகும். ஆனால் கவிதையின் உள்ளடக்கத்தை வலியுறுத்தும் பலர் அதன் படைப்பு நுட்பம் பற்றிக் கருத்துச் செலுத்துவதில்லை. ஆகையினால் ஏனைய இலக்கிய வடிவங்கள் போல கவிதையும் நுணுக்கமான படைப்புத் திறனில் தங்கியுள்ளது என்ற உண்மையைப் பல கவிஞர்கள் மறந்து போகின்றார்கள். அதனால் கவிதை ஒரு பிரசாரச் சாதனமாக – செய்யுட் கட்டுரையாக மலிவடைந்துள்ளது” போன்ற கருத்துக்கள் ஆசிரியத் தலையங்கத்தில் வெளியிடப்பட்டன. இது கவிஞனின் பொது இலட்சியமாக இருந்தபோதிலும் கவிஞனில் வெளிவந்த கவிதைகள் அனைத்தும் இவ்விலட்சியத்தைப் பிரதிபலித்தனவாக அமைந்தன எனக் கூறமுடியாது. கவிதையின் குணாம்சம் பற்றிய தெளிவு எமது கவிஞர்கள் மத்தியில் இன்னும் குறைவாகவே காணப்படுகின்றது.
முன்னைய இரு கவிதை இதழ்களையும் போலவே கவிஞனும் பிற மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பின் அவசியத்தை உணர்ந்திருந்தது. சமகால வாழ்க்கையைப் பிரதிபிக்கின்ற மேலைத்தேய கீழைத்தேயக் கவிதைப் பெயர்ப்புக்கள் நமது வாசகர்களுக்கும் கவிஞர்களுக்கும் உபயோகப்படும். இறந்தகாலத்தைவிட நிகழ் காலத்தின் முக்கியத்துவம் அதிகமானது” எனக் கவிஞர் குறிப்பிட்டது. இதற்கேற்ப, ரஷ்ஷிய, ஜெர்மானிய, சீன, ஆங்கிலக் கவிதை மொழியெபர்ப்புக்கள், கவிஞனில் பிரசுரிக்கப்பட்டன. சண்முகம் சிவலிங்கம் இவற்றை மொழிபெயர்ந்து உதவினார். கவிதை பற்றிய கட்டுரைகளும் ஒவ்வோர் இதழிலும் இடமபெற்றன. “பேச்சு மொழியும் கவிதையும்”, “இன்றையத் தமிழ்க் கவிதை பற்றிச் சில அவதானங்கள்” ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவம் உடையன.
நவீனமயப்படுத்தப்பட்ட யாப்புவழிக் கவிதைகளே கவிஞனில் பெரிதும் இடம்பெற்றன. எனினும் கவிதையின் பொருட்புலப் பாட்டுக்கு ஏற்ப செய்யுள் வரிகளைப் பிரித்து அச்சிடும் முறை கவிஞனின் பெரிதும் கையாளப்பட்டது. புதுக் கவிதைகளின் அச்சமைப்பும் கவிஞனில் பிரசுரமான பல கவிதைகளின் அச்சமைப்பும் வெளித்தோற்றத்தில் ஒன்றாகக் காணப்பட்டமையினால் யாப்பு முறை அறியாத பலர் கவிஞன் ஒரு புதுக்கவிதை எடு என்றே கருதினார்கள். ஆனால் புதுக் கவிதை மரபுக் கவிதை என்ற பாகுபாட்டுக்குக் கவிஞன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இரு வகைக் கவிதைகளும் கவிஞனில் பிரசுரமாகின. தற்காலக் கவிதை (ஆழனநசn Pழநவசல) என்ற உணர்வே கவிஞனில் மேலோங்கி இருந்தது எனலாம்.
எழுபதாம் ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைத தமிழ்க் கவிதையில் ஒரு புதிய அலை தோன்றியது. இக்காலப் பகுதியில் ஏற்பட்ட அரசியல் இலக்கிய விழிப்புணர்வும், தென் இந்தியப் புதுக்கவிதைகளின் செல்வாக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களைக் கவிதை உலகுள் இழுத்து விட்டன. புதிய சமுதாய மாற்றத்துக்காகக் குரல் கொடுக்கும் புரட்சிகரச் சிந்தனை உடைய இவ்விளைஞர்கள் யாவரும் தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும், வெளியிடுவதற்குப் புதுக்கவிதை ஒரு இலகுவான சாதனம் எனக் கண்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளுள் ஈழத்துக் கவிதை பெரும்பாலும் புதுக்கவிதையாகவே மாறிவிட்டது. முற்போக்கான கருத்துக்களே இன்றைய ஈழத்துப் புதுக் கவிதையின் பலம் என்று சொல்ல வேண்டும். கலைப்பெறுமானம் உடைய படைப்புக்கள் இவற்றுள் மிகச் சொற்பமாகவே காணப்படுகின்றன. புதுக் கவிதை உலகில் சில தனி ஆளுமைகள் வளர்ச்சியடையும் வரை நிலைமை இவ்வாறே இருக்கக்கூடும். இத்தகைய தனி ஆளுமையின் வளர்ச்சிக்கான அறிகுறிகளும் சமீபத்தில் தென்படத் தொடங்கியுள்ளன.
எழுபதுக்குப் பின்னர் தோன்றிய புதுக்கவிதைப் போக்கில் தளமாக இக்காலப்பகுதியில் சில கவிதை இதழ்களும் தோன்றியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீள் கரை நம்பி, பீ.எம். அப்துல் சத்தார் ஆகியோரின் முயற்சியினால் தென்னிலங்கையில் இருந்து க-வி-தை என்ற மகுடத்தில் ஒரு புதுக்கவிதை ஏடு வெளிவந்தது. “மரபை உடைத்தெறிவதும், புதுமையை ஏற்பதும்” இதன் நோக்கம் என்று கூறப்பட்டது பத்துக் கவிஞர்களின் இருபத்தி மூன்று புதுக் கவிதைகள் இவ்விதழில் இடம்பெற்றன. கவிதைப் பொருள், கவிதை வடிவம் என்பன பற்றிய ஒரு தெளிவான கோட்பாட்டை இவ்விதழ் வெளிக்காட்டவில்லை@ கவிதை தொடர்ந்து வெளிவந்ததாகவும் தெரியவில்லை. ஆகவே அதை ஒரு சஞ்சிகை என்பதை விடச் சஞ்சிகைப் பாங்கான ஒரு சிறு தொகுப்பு என்பதே பொருந்தும். (இத்தகைய சஞ்சிகைப் பாங்கான சிறிய புதுக்கவிதைத் தொகுப்புக்கள் சிலவும் இக்காலப் பகுதியில் வெளிவந்துள்ளன. அன்பு ஜவகர்ஷா தொகுத்த பொறிகள், சாவணையூர் சுகந்தன் தொகுத்த சுவடுகள், புத்தளம் விடிவெள்ளிகளின் விடிவெள்ளி என்பன இவற்றுள் சில)
இவ்வாண்டு ஜுலை மாதத்தில் இருந்து இரண்டு கவிதை இதழ்கள் மாசிகைகளாக வெளிவரத் தொடங்கியுள்ளன. ஒன்று தில்லையடிச் செல்வனை ஆசிரியராகக் கொண்டு புத்தளத்தில் இருந்து வெளிவரும் பொன்மடல். இது மனிதாபிமான கலைஇலக்கிய விலையிலா மடலாக விநியோகிக்கப்படுகின்றது. முதல் இதழ் நான்கு பக்கங்களையும் இரண்டாம் இதழ் ஆறு பக்கங்களையும் கொண்ட சிறு பிரசுரமாக இது வெளிவந்துள்ளது. புதுக் கவிதைகளே இதன் பிரதான அம்சமாகும். மற்றது ஈழவாணனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் அக்னி. முப்பது பக்கங்களில் அழகிய சஞ்சிகை அமைப்பில் இது வெளிவருகின்றது. முன்னைய கவிதை இதழ்களைப் போல் சுய மொழிக் கவிதை. கவிதை மொழிபெயர்ப்பு, விமர்சனங்கள் ஆகியன அக்னியிலும் இடம்பெறுகின்றன. அக்னி நம்பிக்கை தருவதாக உள்ளது. கடந்த மாதம் தேதி இடப்படாமல் கல்முனைப் பகுதியில் இருந்து நவயுகம் என்ற பெயரில் ஒரு புதிய கவிதை இதழ் வெளிவந்துள்ளது. இதுவும் மாதம் தோறும் வெளிவரும் என்று தெரிகின்றது. பொன்மடல் போல் இதுவும் ஒரு விலையிலாக் கவி மடலே. இது ஒரு “பொறிகள்” வெளியீடு ஆகும். இதை வெளியிடுபவர் ஏ. எச். சித்திக் காரியப்பர். இதுவரை நவயுகம் கையெழுத்துப் பத்திரிகையாக வெளிவந்ததாகத் தெரிகின்றது. அச்சில் வந்துள்ள முதல் இதழில் பதினான்கு கவிதைகள் உள்ளன. இரண்டாம் இதழ் இருபது பக்கங்களில் வெளிவரும் எனத் தெரிய வருகின்றது. ஆக 1975ஆம் ஆண்டு புதுக் கவிதை இதழ்களின் ஆண்டாகவும் காட்சி அளிக்கின்றது.
தமிழ் நாட்டுக் கவிதை இதழ்களைப் போன்றே ஈழத்துக் கவிதை இதழ்களும் அற்ப ஆயுளில் மடிந்து விட்டன. இப்போது வெளிவருபவை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று திடமாகச் சொல்ல முடியாது. நமது கவிதை இதழ்கள் சிறு குழுவினருக்கு மட்டும் உரியதாக அமைவது இதற்கு ஒரு காரணம். கவிதை இதழ்களின் வாசகர் எல்லை இன்னும் விரிவுபடுத்தப்படாமலே உள்ளன. அச்சகச் செலவுகள் அதிகரித்துச் செல்வது பிறிதொரு முக்கிய காரணம். குறைந்த தொகைப் பிரதிகளைக் கூடிய செலவில் அச்சிட வேண்டி இருப்பதால் விலை கட்டுப்படியாவதில்லை. திட்டமிடபபடாத விற்பனை முறை இன்னுமொரு காரணமாகும். விற்பனைக்கு அனுப்பும் பிரதிகளுக்குரிய பணம் கிரமமாக வந்து சேராததினால் இதழாசிரியர்கள் தொடர்ந்தும் நஷ்டமடைகின்றனர். விலையிலாக் கவி மாடல்களுக்கு இப்பிரச்சினை இராது எனினும் பணப் பிரச்சினை பொதுப் பிரச்சினையே. ஆயினும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அச்சகச்செலவு அதிகரித்துச் செல்லும் போதிலும் - ஆர்வமுள்ள இளைஞர்கள் இதில் தொடர்ந்து முயலுகின்றனர். அவர்களின் ஆர்வம் மதிக்கத்தக்கதே. கவிதை ஆர்வலர்களும், வாசிகசாலைகள், சனசமூக நிலையங்கள், கல்வி நிலையங்கள் ஆகியனவும் அவர்களுக்குக் கைகொடுத்து உதவ வேண்டும்.
- ஆல்முனை சாஹித்திய விழாமலர் – 1975 -
இக்கட்டுரை எழுதப்பட்டுப் பல ஆண்டுகளின் பின் சமீபத்தில பின்வரும் சில கவிதை இதழ்கள் வெளிவந்துள்ளன.
1. தூது ஆசிரியர், ஆர்;. எம். நௌஷாத் - 6 இதழ்கள்
2. பூபாளம் ஆசிரியர், அல். அஸீமத் - 6 இதழ்கள்
3. காற்று ஆசிரியர்கள், இராஙகுரு சேனாபதி, இம்மானுவேல், புஷ்பராஜன், தட்டச்சுப்பிரதி – 8 இதழ்கள்