- பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் 88வது (29.8.1926 – 08.12.1995) பிறந்தநாளை நினைவு கூரும் முகமாக அவர் எழுதிய இக்கட்டுரை பிரசுரமாகின்றது... -
கிராமியப் பாடல், நாட்டுக் கூத்து , இசை, நடனம், கவிதை, நாடகம், சினிமா, இசைக்கருவி என்னுங் கலை வடிவங்கள் விஞ்ஞானம், வரலாறு, மனித உழைப்பு, ஆய்வு, விமர்சனம், பகுப்பாய்வு ஆகிய வகைப்படுத்தலால் சிறப்படைகின்றன. எல்லயற்ற ஆய்வுக்கு மனிதனால் அனைத்தும் உட்படும்போது உன்னதமடைகின்றன. கலை இலக்கிய உலகில் இந்த உன்னதமும் ஓர் எல்லையற்றிருக்கிறது. பூமி, சந்திரன், சூரியன், வெள்ளி ஆகிய சகல கோளங்களும் சுழற்சி ஓசையினூடு லய பாவத்துடன் சுருதி கலந்து இயங்குவதுபோலவே, ஒலி, ஒளி, காற்று என்பனவும் லய சுருதியோடு இயங்குகின்றன. ஜடப்பொருட்களின் இயக்கத்தில் மாத்திரமின்றி , சகல உயிரினங்களின் இயக்க முறைமைகளும் நாடித்துடிப்புகளும் அவ்வாறே பிசகின்றி இயல்பாகவே இவ்வாறு சுருதி லயப் பிசகின்றி இயங்குவதாலேயே அனைத்தும் எதிலும் துவைச்சல் பெருக்கெடுத்துக் குமுறுகிறது. கடல் வடுப் பெயர்ந்து அடங்கிக் குமுறுகிறது. அடங்கி, எழுந்து, சீறி, உயர்ந்து, தாழ்ந்து, சமமாகும் தன்மை ஜடப்பொருட்களிலும் லய பாவத்தோடு நிகழ்கின்றன.
மனிதர்களிலிருந்து சகல ஜீவராஜிகளினதும் ஜடப் பொருட்களினதும் அசைவு, வளர்ச்சி, தேக்கம், அழிவு என்னுங் கிருத்தியக் கூறுகள் எப்போதும் லய பாவத்துடனும், ஓசை ஒலியுடனும் இணைந்த சுருதியினூடு விளம்பம், மத்திபம், துரிதம், சமம் ஆகிய கால அளவு வகையாறாக்களாகவே இயங்குகின்றன. ஒவ்வொன்றினதும் இயக்கமும் ஒவ்வோர் பரிணாமம் பெற்றுப் புதிய வடிவங்களாகத் தோன்றுவதைப் பார்க்கலாம். சகல கலை வடிவங்களும் காலகதியில் இவ்வாறு ஒவ்வோர் மாற்றங்கொள்வதும் இயல்பான நிகழ்வுகளாகும். இவற்றிற்குப் புறம்பான முறைகளில் கலை வடிவங்களோ கலைகளோ ஒருபோதும் தோன்றியதில்லை தோன்றுவதில்லை.
‘ஆயகலைகள் அறுபத்தினான்கு’ என்கின்ற பிரிவுகள் அனைத்தும் இவ்வாறுள்ள பொருளாதயத்திற்குப் புறம்பான கற்பனாவாதமான சீகத்தினாலோ மனித சிருஷ்டிக்குப் புறம்பான அனுக்கிரகத்தாலோ தோன்றியதில்லை; தோன்றுவதுமில்லை. அனைத்தும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவை; மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. சகல கலை இலக்கிய வடிவங்களும் மனித உழைப்பினாலும் ஆய்வினாலும் நவீன தோற்றம் கொள்கின்றன. ‘அப்பியாயம் -அனுபவம்’ என்பதன் சூத்திரம் அதுதான் இவ்வாறே சகல கலைகளும், அவற்றின் ‘உரு’வங்களும் ‘கரு’த்துருவங்களும் மனித உழைப்பு, தியாகம், அப்பியாசம், அனுபவம், ஆய்வு, தேடல் என்பவற்றால்தான் உன்னதமடைந்துள்ளன் பல கோண உத்திகளில் அவை வெளிப்பட்டு மாந்தர்களை ஆகர்ஷிக்கின்றன.
விஞ்ஞானத்தையும் அதன் வளர்ச்சியையும் பற்றுக்கோலாகக் கொண்டு மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட இக்கலை இலக்கிய வடிவங்கள், இவற்றின் உருவ வடிவ அமைப்பினை ஊடகங்களாகக் கொண்டுமட்டும் நின்று சிறந்த கலை இலக்கியப் படைப்புக்களை மக்களுக்கு அளிக்கவும். சமுதாய வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும் திகழ முடியுமா?
நீறு பூத்த நெருப்பாக மறைந்து கிடந்து கனன்று கொண்டிருக்கும் உண்மையான மூலப் பிரச்சினை – முக்கியமான பிரச்சினை இங்கேதான் விஸ்வரூபம் எடுக்கிறது.
கலைஞன் என்பவன் இதற்குச் சரியான விடையை நேர்மையாக அளிக்கவேண்டியவனாகவும், நெளிவு சுழிவற்ற தெளிவுகொள்ள வேண்டியவனுமாக இருக்கிறான். இல்லையேல் அவன் கலைஞனே அல்லன்.
மனிதகுல உயர்வுக்காக மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட ஆயுதங்கள் இதே மனிதனின் தவறான கருத்தியற் கண்ணோட்டத்திற் சிக்குண்டு சமுதாயத்தை நாசமாக்கின – நாசமாக்குகின்றன. உண்மையில் நாசத்தை விளைவிப்பது ஆயுதங்களல்ல் மாறாக, ஆயுதங்களை இயக்குபவனின் கருத்தோட்டமே அதனை நிர்ணயிக்கிறது. இன்று பெரும்பாலும் அவை மனிதகுல அழிவுக்காக என்ற ஆகிவிட்ட கோரமான நிலை, கடந்துபோன இரண்டு உலக மகாயுத்தங்களால் மட்டுமல்ல, அண்மையில் வளைகுடாவைப் போர் மண்டலமாக்கிய சண்டித்தனங்களால் மட்டுமல்ல, தற்போது உலகம் பூராகவும் புற்றுநோய்போல் பரவிய துப்பாக்கிக்கலாசாரத்தில் மூழ்கிய விறுத்தத்திலும் தரிசிக்கலாம். மனித கலாச்சாரம் செத்து இன்று மதம், மொழி, இனம், ஜாதி, குலம் என்ற பழைமை மரபிற்குள் சிக்குண்டு சமுதாயம் தவிக்கிறது. கலை இலக்கியங்களிலும் இத்தகைய அராஜகம் கருத்தியலாகி உருவங்களும் கோணலாகித் தன்னாதிக்க மரபுசார்ந்த வெற்றுச் சுலோக ஜனநாயகத்துள் புழுங்குகிறது. காம, இதிகாச நச்சுக் கலைகளின் இடத்தை இன்று இந்த அராஜகக் கருத்துருவங்களும் நிரப்பிக் கொண்டு கலை வடிவங்களாக வந்துகொண்டிருக்கின்றன.
அரசியல், சமூக, பொருளாதார அம்சங்களின் ஊடகங்களாகக் கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு என்பன அவற்றின் உருவங்களால் மட்டும் சிறந்து விளங்குவதோ கலைத்துவமாகவோ சோபிப்பதில்லை. ஒவ்வொன்றிற்கும் உருவ வெளிப்பாடு இருப்பதைப் போலவே கருத்தியலும் இணைந்திருக்கின்றது. கருத்தியலைப் புறக்கணித்துக்கொண்டு உருவத்தையே ஊடகமாக்கிய கலை இலக்கியம் என்ற ஒன்று இருப்பதுமில்லை. சமூகவியல் சார்ந்த கலைப்படைப்புக்களில் மட்டுமன்றி, வரலாற்றுச் சித்திரங்களிலும் கருத்துருவம் சாராத கலை இலக்கிய ஆக்கங்களும் இருப்பதில்லை.
நடிப்பு, பாடல், ஒப்பனை, அமைப்பு, வேஷம், நாட்டியம், குரல்வளம், நட்டுவாங்கம் என்னும் உருவ வெளிப்பாடுகள் மூலம் கலைஞன் என்ன கருத்தை முன்வைக்கிறான் என்பதைப் பொறுத்தே அவனின் கலையாக்கம் அர்த்தபாவத்தோடு மதிக்கப்படுகிறது.
கலை வடிவங்களுக்கான வினைப்பாடுகள் ஒரே விதமாகவிருப்பினும், - கருத்தினில் அவை இரண்டு விதமான முரண்பட்ட கண்ணோட்டங்களில்தாம் எப்போதும் வெளிப்படுகின்றன. ஒன்று, கற்பனாவாத மானசீகக் கருத்து வெளிப்பாடு. அடுத்தது, இயல்புவாத யதார்த்தபூர்வ வெளிப்பாடும் அது சார்ந்த கருத்துருவமுமாகும். மிக உன்னத கலை வடிவமாகத் திகழும் திரைப்படம், - நாடகம், நடனம், இசை, பாடல் போன்ற கலை இலக்கியங்களிலும் இவ்வாறே வர்க்க முரண்பாடுகள் வெளிப்படுகின்றன.
கருத்தியலில் ஒன்றுக்கொன்று கலை முரண்பட்டிருப்பதுபோலவே, கலை வடிவங்களும் அவ்வாறு ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. ஒரு வடிவத்தின் தோற்றம் மாறுபடும்போது அதன் குணாம்சமும் மாறுபடுவது இயல்பே. எனவே, அழிவுக்கான கலை இலக்கியங்களுக்கும் ஆக்கத்திற்கான கலை இலக்கியங்களுக்கும் முரண்பாடு முகிழ்த்துப் போராட்டமாக வெடிக்கின்றது. கலைகளின் தோற்றுவாய், அவற்றின் வர்க்க சார்பு, வெகுஜன ரசிகத் தன்மை பற்றியெல்லாம், எனது, ‘கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும்’ நூலில் நறுக்காக விளக்கியிருப்பதால் இதில் மீள விபரிப்பதைத் தவித்துள்ளேன்.
கலை வடிவமானது ஒருபக்கம் அறியாமை, மூடக்கொள்கை, பழமைவாதம், சரித்திரப்புரட்டு, சுரண்டல், ஒடுக்குமுறை, ஜாதியம், குலம், கோத்திரம், குலப்பெருமை, வர்ணாச்சிரம், பெண்ணடிமை, ஆணாதிக்கம், இனவாதம், தனிச்சொத்துரிமை, சீதனம், யுத்தசன்னதம் என்கின்ற பிற்போக்கு அம்சங்களை மையப்படுத்திய கருத்தினை ஊடகமாகக் கொண்டு வெறுங் கற்பனாசோஷலிஸவாத ‘நீதி போதி’க்கிறது. மறுபக்கம், இவற்றிற்கு முற்றிலும் மாறுபட்டமுறையில் விஞ்ஞான சோஷலிஸ யதார்த்த நெறியினூடு சமூக நிகழ்வுகளைக் கருத்தியலாக வைத்துச் சித்தரித்துத் தெளிவான முற்போக்குச் சிந்தனைக்கு வழிகாட்டி நிற்கிறது. இந்த யதார்த்த நிலை பிறழ்ந்த மாயாஜால வித்தை கலைகளில் ஒருபோதும் தாக்கத்தை ஏற்படுத்திவிடாது.
சேர, சோழ, பாண்டியன், செங்கட்டுவன், மகாபராக்கிரவாகு, துட்டகைமுனு, எல்லாளன் காலத்தைக் கரடியாகக்கத்தினாலும் இனிக் கொண்டுவரமுடியாது. வீரபாண்டிய கட்டப்பொம்மன் வசனங்களும் இனி ஒருபோதும் எடுபடாது. வீர தீரப் புளுகுனி வசனங்களுக்கும் கலைக்கும் எந்தச் சம்பந்தமுமே இல்லை. இன்று விஞ்ஞான வளர்ச்சி உலக நடபடிகளைச் சுருக்கிவிட்டது. இதனூடகவே சிந்தனை செயல் இரண்டும் மாற்றம் கொள்கின்றன.
இந்திய இலங்கைச் சினிமாக்கலை ஒரு எடுத்துக்காட்டு.
மாட்டின் விக்கிரமசிங்காவின் படைப்புகள்மூலம் உலகக் கலையுலகிற்கு நன்கு அறிமுகமான கலைஞர் லெஸ்டர் யேம்ஸ்பீரிஸின் நெறியாள்கை கலை வடிவங்களில் மட்டுமன்றி, அதன் உள்ளடக்கத்திலும் யதார்த்த பூர்வமாக வெளிப்பட்டது. மாபெரும் கலைஞர் சத்தியஜித்ரேயின் கலையாக்கங்கள் கருத்திலும் உருவத்திலும் விஞ்ஞான அணுகுதலோடு யதார்த்தபூர்வமாக வெளிப்பட்ட இயல்புவாத முறை, எழுபது ஆண்டு காலத் தமிழ்ச் சினிமாவில் ஒருபோதும் வெளிப்படவில்லை என்பது ஒரு சோகமான நிலை, பாலுமகேந்திராவின் ஒருசில கலையாங்கங்களைத்தவிர, குறிப்பிடத்தக்க வேறு கலை ஆக்கங்கள் தமிழ்த்திரையில் இல்லை. பி.எஸ்.ராமையா, சகஸ்ரநாமம் போன்ற கலைஞர்களின் கலைப்படைப்புகள் இந்தச் சோக நிலையை ஓரளவு அண்டவிடாமல் தடுத்துள்ளன. இவ்வாறு நோக்கும்போது ஈழத்தில் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’, அ.தாஸீஸின் ‘பொறுத்தது போதும்’ போன்ற கலைப்படைப்புகளோடு இ.முருகையன், கா.சிவத்தம்பி, மௌனகுரு, சில்லையூர் செல்வராஜன், சுந்தரலிங்கம் போன்ற கலைஞர்களின் படைப்புக்களும் நம்பிக்கையூட்டுகின்றன.
ஊமைப்படங்கள் வெளியான காலத்தில் கலை வடிவங்களையே மக்கள்தரிசித்தனர். அப்படி ஊமைப்படங்களாகவே இன்றம் வந்திருந்தால் தமிழ்ச்சினிமாக்கலை உயர்ந்திருக்கும்போல் தோன்றுகின்றது. பேசும் படங்கள் வெளிவந்தபின் பெரும்பாலான ஈழத்துக்கலைஞர்களம் ‘இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம்’ என்னுந் தோரiணியல் இந்திய தமிழ்ச் சினிமாவின் இரவலர்களாகி ரசிகர்களும் ஊமைகளாகிவிட்டனர். அதாவது, ‘மக்கள் தம் சுய சிந்தனையையும் அறிவார்ந்த நிலைப்பாட்டையும் இறுதிவரை இழந்து போக வேண்டும்’ என்று வணிகக்கலை உலகத் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்புகள் வீண்போகவில்லை. கலை வணிகமாக்கப் பட்டாயிற்று. பாமர ரசிகத்தனம் தயாரிப்பாளர்களினதும் நடிகர்களினதும் வங்கிக்கணக்குகளைப் பெருக்கிவிட்டது. இன்று அன்றாடம் காய்ச்சிகளுக்கும் தம் ஜீவியத்தையோ ஜீவிய வரலாற்றையோ காட்டிலும், தமிழ்ச்சினிமா நடிக நடிகர்களின் பூர்வாங்கம் அச் சொட்டாகத் தெரியும். இப்படியெல்லாம் நமது தமிழ்சினிமாவும் நாடகக் கலையும் மக்களின் அறிவை மழுங்கடித்திருக்கின்றன.
நடிப்பு என்பது பாத்திரங்களின் இயல்பான குணவியல்புகளைத் தத்ரூபமாக வெளிக்கொணர்வதே தவிர, சும்மா கண்டபாட்டுக்குத் தொண்டை கிழியக்கத்தி அர்த்தமற்ற வெறும் உப்புச் சப்பற்ற வசனங்களைக் கூப்பாடு போட்டுப் பொழிந்து தள்ளுவதல்ல. என்னதான் சொன்னாலும் சிலருக்கு இதுகாதில் ஏறாது. பொறிப்பறக்கிற வசனங்களால் கற்றூணில் கட்டுண்ட சங்கிலி பொடிப் பொடியாகப் பறந்தால்தான் ரசிகர்குழாமின் ‘பொசிப்பு’த் தீரும் என்று தயாரிப்பாளர் கண்டுபிடித்துவிட்டார்கள். ‘இதுதான்வாசி’யென்று இந்த ரசிகர் குழாமுக்காகவே ஊரிப்பட்ட படங்களை இவர்கள் தயாரித்து அளிக்கிறார்கள். இது கலையா அல்லது கலைச் சேவையா?
ஒரு வசனம்கூடப் பேசாமல் அண்மையில் வெளியான ‘மறுபக்கம்’ படத்தில் கலைஞர் சிவகுமார் ஊமைத்தனமாகத் தோன்றி நடித்த குணசித்திர வார்ப்பின் யதார்த்த பூர்வம் தமிழ்க் கலை உலகிற்கே ஒரு புதுமை. ஆனால், இந்தப்படம் வசூலில் படுதோல்வி அடைந்ததிலிருந்தே, அதன் உன்னத கலை வடிவத்திற்கும் தற்காலக்கலை மதிப்பீட்டிற்கும் சான்றாக அமைந்ததைப் பார்க்கலாம்.
உருவம் உள்ளடக்கம் என்கின்ற வடிவமும் கருத்துருவமும் விஞ்ஞான அணுகுதலோடு யதார்த்த பூர்வமாக வெளிப்படுகின்ற இயக்கவியற் கலைப்படைப்புக்களையும், இவ்விரண்டிலும் யதார்த்தம் பிறந்துள்ள விஞ்ஞான அணுகுமுறையற்ற பிற்போக்குக் கலைப் படைப்புக்களையும் இனங்காட்டிப் பாபாடின்றி விமர்சிக்கின்ற பக்கவமும், அத்தகைய விமர்சனத்தை எதிர்கொள்கின்ற கலை உலகமும் இன்று அவசியம் தேவை. கலை இலக்கியம் பற்றிய பகுப்பாய்வும், விமர்சனமும் ஓயாமலிருந்தால்மட்டுமே நல்ல கலைப்படைப்புகள் தோன்ற வழிபிறக்கும். தவிச்சமுயலுக்குத் தண்ணி தெளிப்பதை விடுத்து, தடி கொண்டு அடிப்பதை முற்றாகத் தவிர்க்கவேண்டும்.
கற்பனாவாத ஆன்மீகத்தைத் தளமாகக் கொண்ட சகல மதங்களின் கோட்பாடுகளும், வழி பாடுகளும், இவை சார்ந்த கலாசாரச் சமூகக் கருத்தியலும், கலைவடிவங்களும் நாட்டுக்கு நாடு, பிரதேசத்திற்கு பிரதேசம், ஊருக்கு ஊர், கிராமத்துக்குக் கிராமம் முரணாக வேறுபட்டு ஒவ்வோர் விதமாக ஒன்றுக்கொன்று அந்நியப்பட்டு நிற்கின்றன. இவற்றை முதலாளித்துவக் கருத்தியலாளர் இடம், பொருள், ஏவல் அறிந்து வாறாகப்பயன்படுத்துகின்றனர். ஆனால், பொருள் முதல்வாத இயக்கவியலைத் தளமாகக்கொண்ட கருத்தியலும் கலைவடிவங்களும் முழு உலக மக்களுக்கும் அந்நியப்படாதவை. கீழைத்தேச மதச் சிந்தாந்தக் கலை வடிவங்கள் மேலை நாடுகளுக்கு அந்நியப்பட்டிருப்பது போலவே மேற்குலக மதச் சித்தாந்தங்களும் கீழைத்தேசங்களுக்கு அந்நியப்பட்ட கருத்துருவங்களைத் தமது கலைவடிவங்கள் மூலம் மையப்படுத்துவதாலேயே அந்நியப்பட்ட மதங்களுக்குள் மதங்களின் பெயராலும் யுத்தங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இச்சம்பவங்கள் முதலாளித்துவ அமைப்பை மேலும் பலப்படுத்துவதோடு அவையே அவற்றின் கருத்தியல்களாகியும் விடுகின்றன. பொருள் முதலவாத விஞ்ஞானக் கருத்தியலை அடிப்படையாகக்கொண்ட இயக்கவியற் சித்தாந்தக் கலைவடிவங்கள் எந்த நாட்டுக்கும் அந்நியப்படுவதில்லையாதலால், அவை முழு மனிதகுல வாழ்க்கையோடு பிணைந்து நிற்கின்றன. இதனால்தான் மார்க்ஸம் கார்க்கி, சத்தியஜித்ரே, மாட்டின் விக்கிரமசங்கா, தகழி சிவசங்கரன்பிள்ளை, அ.ந.கந்தசாமி, பாலுமகேந்திரா, கா.சிவத்தம்பி, முருகையன், சில்லையூர் செல்வராஜன், ஏ.தாஸீசியஸ், சி.மௌனகுரு, சுந்தரலிங்கம் போன்ற சமூகவியற் சிந்தனாவாதிகளின் சினிமா - நாடகக் கலையும் கருத்தூலக் கலைவடிவங்களும் முழு உலகத்தைத் தழுவி நிற்கின்றன.
அனுப்பியவர்: நவஜோதி யோகரட்னம் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.