மீள்பிரசுரம்: தினக்குரல்.காம்
முற்போக்கு இடதுசாரி இயக்க செல்நெறிகளில் ஆழக்கால் பதித்த செ.கணேசலிங்கன் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அறுபது ஆண்டு காலத்துக்கு மேலாகப் பணியாற்றி வருபவர்களில் முதன்மை பெற்று நிற்கின்றார். எண்பது நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டுச் சாதனை படைத்தவர். சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், சஞ்சிகை என்று பல்துறை இலக்கிய வடிவங்களுக்கூடாக தன் ஆளுமையை நிலை நிறுத்தியுள்ளார். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் அதன் கொள்கை வழிநின்று செயற்பட்ட பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, கே.கணேஷ், எச்.எம்.பி.மொஹிடீன், சில்லையூர் செல்வராஜன், இ.முருகையன், நீர்வை பொன்னையன், அ.முகம்மது சமீம், இளங்கீரன், கே.டானியல்,பிரேம் ஜி, டொமினிக் ஜீவா, அ.ந.கந்தசாமி போன்றவர்களுடன் தோழமை உணர்வுடன் ஒன்றிணைந்து முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை செ.கணேசலிங்கன் வழங்கினார். தாம் மேற்கொண்ட மார்க்சிய சித்தாந்தக் கொள்கைப் பற்றுறுதியுடன் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் செ.கணேசலிங்கன் முற்போக்கு இலக்கியச் செம்மல்களில் ஒருவராக முகிழ்ந்து நிற்கின்றார்.
"செ.கணேசலிங்கன் எழுதிய நாவல்களும் சிறுகதைகளும் அவருடைய சோஷலிச யதார்த்த கண்ணோட்டத்தைக் காண்பிக்கிறது. குறிப்பாக அவர் குமரனுக்கு எழுதிய கடிதங்கள் என்ற சிறு நூலில் அவருடைய பொதுவுடைமைக் கருத்துகள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. முற்போக்கு எழுத்தாளர்கள் தேசிய இலக்கியம், மண்வாசனை, யதார்த்த வாதம், மக்கள் இலக்கியம் என்ற பல அடித்தளங்களில் நின்று இலக்கியங்களைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதில் முக்கியமான ஒருவர் தான் கணேசலிங்கன் என்று எழுத்தாளர் அ.முகம்மது சலீம் "எனது இலக்கியத் தேடல்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப காலத்தில் மு.வரதராஜன், அகிலன், காண்டேகர், ஜானகி ராமன் ஆகியோரின் எழுத்துகளால் கவரப்பட்டவராக இருந்தார். பின் கார்த்திகேயன் மாஸ்டரின் வழிகாட்டலில் மார்க்சிய சிந்தனையாளராக மாறினார். "மார்க்ஸ் கண்ட இலங்கியல் என்பது இயற்கை, சமூக சிந்தனைகளின் தொடர்ந்த இயக்கத்தையும் அவற்றிடை ஏற்படும் முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டது. சமூக மாற்றம் ஏற்படும் போது சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றை மறுப்பவர்கள் மார்க்சின் இயக்கவியல் பொருள் முதல்வாதத்தை மறுப்பவர்களாவர்களாவர்' என்கிறார் கணேசலிங்கன்.
சிறுகதை பற்றி குறிப்பிட வந்தவர் "சிறுகதை என்பது ஒரு குறிக்கோளை விபரிக்கும் கதை. எவ்வாறு சிறுகதை என்ற கலைவடிவத்துக்கு இலக்கணம் கூறினாலும் மற்றைய கலை வடிவங்கள் போலவே அதன் அமைப்பு மட்டுமல்ல அக்கதை எழுப்பும் சமுதாய உணர்வே முதன்மையானது' என்று விளக்கம் கூறியுள்ளார். "நல்லவன்' என்ற சிறுகதைத் தொகுதியும் இவரது படைப்பாகும். இலங்கைச் சமுதாயத்தின் முக்கியமாக யாழ்ப்பாணத்துச் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வின் கோலங்களையும் பாமர தொழிலாள மக்களின் அபிலாஷைகளையும் ஆசாபாசங்களையும் அவர்களின் ஏக்கங்களையும் தன்னுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் செ.கணேசலிங்கன் வெளிப்படுத்தியுள்ளார்.
நாவல் இலக்கியத்துறையில் தடம்பதித்த இவர் ஐம்பதிற்கு மேற்பட்ட நாவல்களை எழுதி வெளியிட்டு சாதனை படைத்துள்ளார். இவர் எழுதிய நாவல்களின் தாக்கம் ஈழத்தைவிட தமிழகமே எதிர்கொண்டது. அந்த அளவுக்கு நாவல் இலக்கியத்துறையில் கணேசலிங்கன் பேசப்பட்டார். "நீண்ட பயணம்' என்ற அவரது முதல் நாவல் கதையை வெறுமனே கூறும் தன்மையிலிருந்து விடுபட்டு ஆழத்தடம் பதித்து அகலம் பெறுவதைக் காண்கின்றோம். இவரின் சமூகவியல் மார்க்சிய நோக்கு ஆழவிரிந்து பார்க்கும் தன்மை போன்ற அம்சங்கள் தமிழ்நாட்டு எழுத்தாளர்களைப் பெரிதும் பாதித்தது. இவரின் "சடங்கு',"செவ்வானம்', "போர்க் கோலம்', "மண்ணும் மக்களும்' போன்ற நாவல்கள் வேறுபட்ட படைப்பாற்றலைப் பறைசாற்றுகின்றன. 1965 இல் வெளிவந்த "நீண்ட பயணம்' அடித்தளத்திலுள்ள மக்களின் வாழ்க்கை நிலைமையை எடுத்துக் கூறுகின்ற கதையம்சம் கொண்டதாக அமைந்துள்ளது. "தமிழ் நாவல்களைப் பொறுத்தளவில் அவர் ஒரே கருத்தைக் கொண்டிருந்தார். நாவல்கள் சமுதாயத்தைப் பிரதிபலிப்பனவாக அமைய வேண்டும். சமுதாயத்தின் வளர்ச்சி, அச்சமுதாயத்தின் பிரச்சினைகள், ஏற்றத்தாழ்வுகள், அடக்கியாளும் வர்க்கத்தின் எதேச்சதிகாரத்தை எதிர்த்துப் போராடும் தாழ்த்தப்பட்டோரின் போராட்டம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் பாத்திரங்கள் அடக்கியதுதான் சமூக நாவல் என்பது முற்போக்காளர்களின் தத்துவம். மார்க்சியக் கொள்கையில் ஊறிநின்ற செ.கணேசலிங்கன் தமது சிறுகதைகளிலும் நாவல்களிலும் இக்கருத்துகளைத் தான் படைத்த பாத்திரங்கள் வாயிலாகவும், சம்பவங்கள் மூலமாகவும் எடுத்தாளுகிறார்' என்று முற்போக்கு விமர்சகர் அறிஞர் அ.முகம்மது சமீம் தெரிவித்துள்ளார்.
செ.கணேசலிங்கனின் "நீண்ட பயணம்', "போர்க்கோலம்', "சடங்கு' ஆகிய மூன்று நாவல்களின் பாத்திரப்படைப்புகளும் கலாபூர்வமான படைப்புகளாக காட்டப்படுகின்றன. இரத்தமும் சதையும் போல் உயிர்த்துடிப்புமிக்க பாத்திரங்களை "சடங்கு' கொண்டுள்ளது. சிறு சம்பவங்களை எடுத்துக்கூறும் பண்பு அலாதியானது. உணர்ச்சி உளவியல், இயல்பான பாத்திரப்படைப்பு "நீண்ட பயண'த்தின் தொடர்ச்சியாக "போர்க் கோலம்' கொண்டுள்ளது."சடங்கு' மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று. நிலப்பிரபுத்துவத்தினரின் திருமணச் சடங்குச் சம்பவங்கள் உளவியல் ரீதியில் இயங்கும் பாத்திரங்கள் மூலம் சடங்கின் பொய்மை காட்டப்பட்டுள்ளது. "செவ்வானம்', "தரையும் தாரகையும்' மத்திய வர்க்கத்தினரின் அரசியல் பின்னணிகள் சம்பந்தமான விடயங்கள், நடவடிக்கைகள், நாவல்கள் ஊடாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன.
"எக்கதையும் சமகால வரலாற்றின் ஒரு துணுக்குத் துண்டாகவே இருக்க முடியும். அதேவேளை தனிப்பட்ட தனிமனிதனின் பிரச்சினைகளைத் தொடாது பரவலான சமூகத்தைப் பிரதிபலிக்கத்தக்கதான மாதிரிக் கதை மாந்தரை பாத்திரங்களாகத் தேர்ந்து சிறுகதைகளாகக் கலை வடிவம் ஆக்குவதே சிறந்த கலைப்படைப்பாகும். கதையின் சமூகப் பணியும் அதுவேயாகும்' என்கிறார் கணேசலிங்கன். அந்தவகையில் 1970 இல் வெளிவந்த "கற்பகம்' கலை இலக்கிய சஞ்சிகையில் வெளிவந்த "குருவின் குற்றம்' என்ற சிறுகதையில் அன்றைய சமுதாயத்தில் படித்தவர்கள் உத்தியோகமின்றி இருந்த நிலையை யதார்த்தமாகப் படித்துப் பயனற்ற பாமர மக்களின் உள்ளக்குமுறலாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
பெண்ணிலை வாதச் சிந்தனைகளை மார்க்சிய நோக்கில் நின்று வெளிப்படுத்தியுள்ளார். பல சம்பவங்களை பெண்ணிலைவாத நிலையில் நின்று நோக்கிச் சொல்லியிருப்பது கவனத்திலெடுக்க வேண்டிய விடயமாகும். "ஒரு குடும்பத்தின்கதை', "நான்கு சுவருக்குள்ளே' என்ற இவரது நாவல்கள் பெண்ணிலை எழுத்தாளர்களாலும் தொட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு யதார்த்தமாக எழுதியுள்ளமை சிறப்பம்சமாகும். "இரண்டாவது சாதி' என்ற நாவலில் மார்க்சியம், பெண்ணிலை வாதச் சிந்தனைகளைக் கொண்ட பாத்திரங்கள் வாயிலாக முன்நிறுத்துகிறார். "நீ ஒரு பெண்' நாவலில் கலாசார ரீதியான புரட்சி காட்டப்படுகின்றது. "உலக சந்தையில் ஒரு பெண்' நாவல் பொருளாதாரப் பிரச்சினைகளை எடுத்துக் காட்டும் முதல் தமிழ் நாவல் என்று சொல்லப்படுகின்றது. "பெண்ணியப் பார்வையில் திருக்குறள்' மற்றும்"பெண் அடிமை தீர' ஆகிய நூல்கள் சமூக வாழ்வின் அனுபவங்களைக் கூறிநிற்கின்றன.
"குமரன்' என்ற அரசியல் கலை இலக்கிய சஞ்சிகையை வெளிக்கொணர்ந்து ஈழத்து இலக்கியத்திற்குப் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தினார். 1971 இல் இருந்து 1987 வரை பலதடைகளை மீறி வெளிவந்த மார்க்சிய பார்வை கொண்ட "குமரன்' இதழ் ஈழத்து இலக்கிய வரலாற்றில் வகித்த பங்கு மறக்க முடியாததாகும்.
சிறுகதை, நாவல்களுடன் மட்டும் நின்றுவிடாமல் பல காத்திரமான கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். மெய்யியல் சார்ந்த அம்சங்களுடனான "அழகியலும் அறமும்', "சித்தர்கள் சித்தார்ந்தமும் சுபிசகமும்' ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும் குறிப்பிடலாம். உளவியல் ரீதியில் "சிக்மன் பிராட்டின் கனவுகளின் விளக்கம்', "திருவள்ளுவரும் சிக்மன் பிராய்டும்' ஆகிய நூல்கள் முக்கியம் பெறுகின்றன. அரசியல் பேசும் நூலாக இவரின் "மக்கி க்யாவலியும் வள்ளுவரும்', கருத்தியல் தொடர்பான அறிமுகமாக "குமரனுக்கு கடிதங்கள் அறிவுக் கடிதங்கள்' என்ற நூலும் வெளிவந்துள்ளன.
"குந்தவிக்கு மான்விழிக்கு கடிதங்கள்' இது மனித இனவரலாறு; விஞ்ஞான பூர்வமான வரலாறு. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கதாக எழுதப்பட்டுள்ளது. மனிதன் இன்று உலகம் முழுவதும் சோஷலிய சமுதாயத்தைக் கட்டி எழுப்ப முன் நிற்கிறான். இவ்வளர்ச்சியின் வரலாற்றையும் அதன் விதிமுறைகளையும் இச்சிறுநூல் எளிமையாகக் கூறுகிறது. "அர்த்த சாத்திரமும் திருக்குறளும்' என்னும் இந்த நூலில் அர்த்த சாத்திரமே முதன்மை பெறுகிறது.
ஆயினும் எதிராகவும் சார்பாகவும் உள்ள முந்நூறுக்கு மேற்பட்ட குறள்கள் சுட்டிக்காட்டப்படுகிறது. பல்மொழி ஆளுமை கொண்ட செ.கணேசலிங்கன் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே விளக்குகிறார். பல்துறை பரிமாணங்களுடன் எழுத்துப் பணியைத் தொடர்வதுடன் ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய பங்காளியாக முகிந்து நிற்கின்றார்.
இவரது படைப்புகள் ஆங்கிலம், ரஸ்ஸியன், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதன் மூலம் பரந்துபட்ட வாசகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கின்றார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நீண்டகால உறுப்பினரும் இலக்கியப் படைப்புகள் மூலம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பங்காற்றி வருபவரும் முற்போக்குச் சிந்தனை வாதியுமாகிய செல்லையா கணேசலிங்கன் கொழும்புத் தமிழ்ச் சங்க நிறுவுனர் நாள் விழாவில் சங்கச் சான்றோர் விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகின்றார். அவரின் சிறப்பான சேவையை நாமும் வாழ்த்தி மகிழ்வோம்.
http://www.thinakkural.com/articles/3713-writer.html
மே 6, 2011