மாந்தர் செய்திப் பரிமாற்றத்திற்குத் தொடக்கத்தில் சைகைகளையும் ஒலிகளையும் பயன்படுத்தியிருக்கின்றனர். பின்னர், தொடர்ந்த வளர்ச்சி நிலையில், படிப்படியே சொற்களை உருவாக்கி, மொழியை அமைத்து, அம் மொழி வழி பேசத் தொடங்கினர். அதன்பின் வரிவடிவங்கள் அமைத்துக் கொண்டு, அதன் வழியாகத் தம் எண்ணங்களை எழுத்திலும் வெளிப்படுத்தத் தொடங்கினர். முதலில் உருவான எழுத்து வழியான செய்தித் தொடர்பு ஊடகமே மடல் அல்லது கடிதம். தொலைவில் இருப்பாருடன் தொடர்பு கொள்ளப் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டுவரும் இந்த ஊடகம், கணிப்பொறி கைப்பேசி வருகைக்குப்பின் பெரிதும் குறைந்து அறவே மறைந்துவிடும் நிலைக்குச் சென்றுகொண்டுள்ளதைக் காண்கிறோம்.
மடல் ஊடகத்தின் சிறப்பு
இயல்பாகவே நாம் பேசுகின்ற நிலையைவிட, எழுதுகின்ற நிலையில் பிழையின்றியும், அழகிய சொல்லிய அமைப்புக்களோடும் செப்பமாக இருக்கக் கவனம் கொள்கிறோம். கடிதம், இலக்கு நோக்கிச் செலுத்தும் அம்பைப் போல், ஒருவரையோ, ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தையோ விளித்து, உணர்வார்ந்த கருத்துகளைச் சொல்லும்போது எண்ணியவாறு பயன் விளைகின்றது என்பதனால் இந்தக் கடிதம் எழுதி கருத்துரைக்கும் உத்தி, இன்றளவும் பலராலும் கையாளப்படுகின்றது.
மடல் இலக்கியம்
அடிப்படையில், செய்திப் பரிமாற்றத்திற்காக அறிஞர்கள் எழுதிய மடல்கள், பலருக்கும் பயன்படும் இலக்கியமாகத் திகழ்கின்றன. சில எழுத்தாளர்கள், புதினங்கள் சிலவற்றைக் கடித வடிவிலேயே எழுதியுள்ளனர். கடித இலக்கியம் உலகின் இலக்கிய வகைகளில் தொன்மையான வடிவாகும். தமிழர் செய்தியை ஓலையில் எழுதியதால், கடிதத்தை ‘ஓலை’ என்றழைத்ததும், எழுதிய ஓலையை வளைத்துச் சுருளாகச் செய்ததால், அது ‘முடங்கல்’ எனக் கூறப்பட்டதும் கருதத் தக்கன. பழந்தமிழ் அகத்திணை இலக்கியங்களிலும் புறத்திணை இலக்கியங்களிலும் காணப்படும் தூது, மடல் இலக்கிய வளர்ச்சி எனலாம்.
இலக்கியங்களில் மடல்கள்
சிலம்பில், மாதவி கோவலனுக்கு இரண்டு கடிதங்கள் எழுதுகிறாள். வெண்தாழை மடலில் பித்திகை அரும்பை எழுதுகோலாகக் கொண்டு செம்பஞ்சுக் குழம்பிலே தோய்த்து எழுதிய காதற் கடிதம் முன்னது. கோசிகன் வழி கோவலனுக்கு விடுக்கும் மடல் இரண்டாவது. சீவகசிந்தாமணியில் நாகமாலை தான் எழுதிய ஓலைக் கடிதத்தைக் குவளை மலரினுள்ளே வைத்துக் கொடுக்க, தூதி அதனைத் தன் கூந்தலின் உள்ளே பொதிந்துவைத்துக் கொணர்ந்து சீவகனிடம் தருகிறாள். இவ்வாறு, இலக்கியங்களில் கண்ட மடல் எழுதலே ‘பாவோலைத் திருமுக’மாக (சீட்டுக் கவியாக) மாற்றம் பெற்றது ஒரு வளர்ச்சி நிலையாகும்.
இக்கால மடல் இலக்கியங்கள்
தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரின் ‘கோகிலாம்பாள் கடிதங்கள்’ புகழ்பெற்ற புனைகதையாக உள்ளது. அறிஞர் மு.வரதராசனார், தங்கைக்கு, தம்பிக்கு, நண்பர்க்கு, அன்னைக்கு என எழுதிய நான்கு கடிதத் தொகுப்புகளின் வழியே இல்வாழ்க்கைக்கும், குமுகாய வாழ்க்கைக்கும் தேவையான வழிகாட்டு நெறிகளைத் திருக்குறளின் துணையோடு நன்கு விளக்குகிறார். அறிஞர் அண்ணாவின் ‘தம்பிக்கு’ கடிதங்கள், இளைஞர்களுக்கு எழுச்சியூட்டி, ஆட்சி மாற்றத்திற்கே அடிகோலியது. ‘மறைமலையடிகள் கடிதங்கள்’ என்ற பெயரில் அடிகளாரின் கடிதங்கள் ‘அன்புப் பழம் நீ’ என்பாரால் தொகுக்கப்பட்டுத் தமிழ் உலகிற்கு அளிக்கப்பட்டுள்ளன. இக்கால், சில புதின எழுத்தாளர்களின் மடல்களும் போற்றப் படுகின்றன.
ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்கத் தன் உடலைத் தீக்கிரையாக்கி இன்னுயிர் ஈந்த ஈடிணையற்ற ஈகி முத்துக்குமார், தீயிட்டுக்கொள்ளும் முன் வெளியிட்ட நெடுமடல் தமிழின வரலாற்றில் மறைக்கவோ மறக்கவோ இயலாத அரியதோர் இலக்கியமாகத் திகழ்வதை யாரே மறுக்கவல்லார்! புதுவைத் தனித்தமிழ்க் கழகம், தமிழ் வழிபாட்டுக்கு மாறாகக் கருத்துரைத்த புலவர் கீரன் என்பாருக்கு எழுதிய விளக்கங்களும் அதற்கவர் அளித்த பொருந்தா விடைமடல்களும் கொண்ட ‘ ’ என்ற தலைப்பினைக் கொண்ட தொகுப்பு நூல், அரிய தமிழ்க்காப்பு நூலாகும். புதவைத் தமிழிலக்கிய இலக்கணத் திங்களிதழான ‘நற்றமிழ்’ இதழின் நிறுவுநர் தமிழ்மாமணி இறைவிழியனார் தொடங்கி நடத்திவந்த ‘நற்றமிழ் நெறிமடல் இயக்கம்’ தமிழுக்குத் தாழ்வும் தீங்கும் கண்டபோதெல்லாம், தொடர்புடையோர்க்குப் பேரெண்ணிக்கையிலான மடல்கள் விடுத்துத் திருத்த முயன்றதைப் புதுவைவாணரும் நற்றமிழ் அன்பர்களும் நன்கறிவர். சவகர்லால் நேரு, தம் மகள் இந்திரா பள்ளிக்குச் செல்ல இயலவில்லை என்ற ஆற்றாமையில், அவருக்கு எழுதிய கடிதங்கள் “Discovery of India” என்ற வரலாற்று நூலாகியுள்ளன. மெய்ப்பொருள் அறிஞர் இலியோ தால்சுதாயும் மோகன்தாசு கரம்சந்து காந்தி என்ற இளைஞரும் ஒருவருக்கொருவர் எழுதிய கடிதங்கள் சிறந்த கருத்து வெளிப்பாடுகளாக விளங்குகின்றன. பேரறிஞர் காரல் மார்க்சு தன் காதல் மனைவி சென்னிக்கு எழுதிய கடிதங்கள் சிறந்தவையாகப் போற்றப்படுகின்றன. ஆபிரகாம்லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் புகழ்பெற்றுத் திகழ்கிறது.
பாவாணர்
இவ்வாறே, பாவாணர் என்றழைக்கப் பெறும் மொழிநூலறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய கடிதங்கள் தனிச்சிறப்புடைய வகையனவாக உள்ளன. பாவாணர் பன்மொழி பயின்ற ஒப்பற்ற மொழியியற் சிந்தனையாளர். தமிழின் விடுதலைக்காகவும் வளர்ச்சிக்காகவும் சொல்லொணாத் துன்ப துயரங்களுக்கிடையே அரும்பாடுபட்ட ஈக வாழ்வினர். ஈடிணையற்ற சொல்லாய்வர். அருமையான ஐம்பது நூல்ளை ஆக்கித் தந்தவர். தம் நுண்மாண் நுழைபுல ஆய்வுகளால், இன்றைய தமிழ்நாட்டின் தெற்கே கடலில் அமிழ்ந்து போன குமரிநாடே தமிழர் தொல்லகம் என்றும், அதுவே தமிழ் தோன்றிய இடமென்றும், உலக முதன்மொழி தமிழ் என்றும், அது திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும் என்றும் கண்டறிந்து வலியுறுத்தி வந்தவர். நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள், “சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும் அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றோம்” என்று பாவாணருக்குச் சான்றளித்துள்ளார்.
தமிழ்க்கெனப் பிறந்து தமிழ்க்கென வளர்ந்து
தமிழ்க்கெனப் பயின்று தமழ்க்கெனப் பயிற்றித்
தமிழ்க்கென ஓய்ந்து தமிழ்க்கென ஆய்ந்து
தமிழ்க்கென வாழுந் தமிழே வாழி! – என்று பாவாணரைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்த்திப் பாடியிருக்கின்றார்.
பாவாணர் மடல்கள்
பாவாணர் பல்வேறு அறிஞர்களுக்கும், தலைவர்களுக்கும், இதழாளர்க்கும், பதிபகத்தார்க்கும், நண்பர்க்கும், அன்பர்க்கும் ஆயிரக்கணக்கான மடல்கள் எழுதியிருக்கிறார். இதுவரை அவற்றுள் ஏறத்தாழ பாதி எண்ணிக்கை யளவிலான மடல்களின் பகுதிகளே தொகுக்கப்பட்டு, இரண்டு நூல்களாக வடிவம் பெற்றுள்ளன. இலக்கியச் செம்மல் புலவர் இரா.இளங்குமரன் ஐயா அவர்களே இவ்விரண்டு நூல்களுக்கும் தொகுப்பாசிரியர். முதல் தொகுப்பு ‘பாவாணர் கடிதங்கள்’ என்ற பெயரிலும், இரண்டாம் தொகுப்பு, ‘பாவாணர் மடல்கள்’ என்ற பெயரிலும் வந்துள்ளன. முதல் நூலில் 28 தலைப்புகளின் கீழும், இரண்டாம் நூலில் பத்துத் தலைப்புகளின் கீழும் மடல்களின் பகுதிகள் தொகுக்கப் பட்டுள்ளன.
“தமிழர் வைப்பாகப் போற்றத் தக்கனவும், மொழிவழியால் நலங்காண விழையும் முழுதுணர்வாளர்களுக்குள் முட்டுதல் – பிரித்தல் - பிளத்தல் – பிணங்கல் இன்னவற்றுக்கெல்லாம் இடந்தராதனவுமாகிய பகுதிகள் மட்டுமே இத் தொகுப்புப் பொருளாக மேற்கொள்ளப்பட்டுள்ளன!” என்று தொகுப்பாசிரியர் முதல் தொகுப்பின் முன்பகுதியில், “நூல்வரு நிலையும் நன்றியுரையும்” என்ற தலைப்பில் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், முதல் தொகுப்பின் கடைசித் தலைப்பான “சில கடிதங்கள்” என்பதின் கீழ் மட்டும், 12 மடல்கள் முழுமையாக உள்ளன. இவற்றில் முதல் 11 மடல்கள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் தாமரைத்திரு வ. சுப்பையா அவர்களுக்கும், 12ஆம் மடல் தெகுப்பாசிரியரான இரா. இளங்குமரனார்க்கும் எழுதப்பட்டவை. பிற இடங்களில், ஓரிரு மடல்களே முழுமையாகத் தரப்பட்டுள்ளன.
முதல் தொகுப்பு
முதல் தொகுப்பில், சற்றேறக் குறைய 50 ஆண்டுகளில் பாவாணரால் எழுதப்பட்ட ஏறத்தாழ 1520 மடல்களின் பகுதிகள் பல்வேறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. இத் தொகுப்பு நூல், பொருட்பகுப்பு முறையால் 28 தலைப்புகளுடன் 18 பக்க விரிந்த முன்னுரையுடன் 191 பக்கங்கள் கொண்டுள்ளது. இவற்றில், 1931 முதல் 1963வரை உள்ளவை அனைத்தும் சை.சி.நூ. கழகத்திற்கு எழுதியவை. அதற்குப் பின்னரே, பிறர்க்கும் கழகத்திற்கும் எழுதியவை என்று தொகுப்பாசிரியர் குறிக்கிறார்.
கொடுத்துள்ள தலைப்புக் கேற்றவகையில், பாவாணரின் உயர்ந்த கருத்துக்களையும், சிறப்பியல்புளையும், அவருடைய ஆய்வு முடிவுகளையும் பிறவற்றையும் பற்றி எழுதும் தொகுப்பாசிரியர், அவ்வத் தலைப்புகளோடு தொடர்புடைய பாவாணரின் மடல் பகுதிகளைத் தனித்தனியே அளித்திருக்கிறார். அடிக்குறிப்பாக மடல் நாளும் மடல் எழுதப்பட்டவரின் பெயர்ச் சுருக்கமும் கிட்டத்தட்ட எல்லா மடல்பகுதிகளுக்கும் தந்திருக்கின்றார்.
மடல்கள் கால வரிசைப்படி இல்லாமல், தலைப்புகளுக் கேற்பத் தரப்பட்டுள்ளன. முதல் தொகுப்பின் முதற்பதிப்பு பெப்புரவரி 1985-இல் சை.நூ.கழக வெளியீடாக வந்துள்ளது. இத் தொகுப்பில் உள்ள மடல்களின் எண்ணிக்கையில் ஆயிரத்திற்கும் அதிகமானவை, சை.சி.நூ. கழக ஆட்சியாளர் வ.சுப்பையா அவர்களுக்குப் பாவாணர் எழுதியவை. அம் மடல்களைக் கழக ஆட்சியர் வ.சு. ஐயா, அட்டையில் ஒட்டி ஆவணமாக்கிப் பேணிக் காத்து மறைமலையடிகள் நூலகத்தில் வைத்திருந்தாராம். அவற்றுடன் தொகுப்பாசிரியர் உள்ளிட்ட பன்னிருவருக்குப் பாவாணர் எழுதிய மடல்களின் பகுதிகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
மடல் விளக்கம்
பாவாணர், “உயர்தரக் கட்டுரை இலக்கணம்” என்ற நூலில் கடிதம் எழுதுவதைப் பற்றி எடுத்துக்காட்டுடன் விளக்கியிருக்கின்றார். “கி.மு. முதலாம் நூற்றாண்டில் சிசரோ என்னும் அறிஞர் வரைந்த இலத்தீன் கடிதங்கள் இன்று கற்றோர் உள்ளத்திற்கு இன்ப விருந்தாக உள்ளன. ஆதலால் இலக்கியம் போல் போற்றப்பட்டு வருகின்றன. கற்றாரெல்லாம் இத்தகைய கடிதம் எழுதப் பயிலவும் முயலவும் வேண்டும்” என்று அந்நூலில் பாவாணர் கூறுகிறார். மேலும், கடிதத்தின் உறுப்புகளைத் தெளிவாகக் கூறி விளக்குகின்றார். அவை:
1. தலைப்பு (வலப்புற மேன்மூலையில் எழுதப்பட்ட நாளும் இடமும் குறித்தல்)
2. விளி (இடப்புறத்தில் தனியாய் கடிதம் விடுக்கப் படுவோரை விளிப்பது)
3. செய்தி (விளிக்குக் கீழாகப் பல பாகிகளாகப் பிரித்து எழுதப்படும் செய்தி)
4. உறவுத் தொடர்மொழி (செய்திக்குக் கீழாக வலப்புறத்தில் நண்பன், அன்பன் போன்று கடிதம் விடுப்போர்க்கும் விடுக்கப் படுவோர்க்கும் உள்ள உறவைக் குறிக்கும் தொடர்மொழி)
5. கைந்நாட்டு (உறவுத் தொடர்மொழிக்குக் கீழாகக் கடிதம் விடுப்போரின் கையொப்பம்) 6. முகவரி (உறையின் மேல் கடிதம் விடுக்கப் படுவோரின் முழுமுகவரி எழுதல்).
பாவாணர் மடல்களில் எழுதிய வகை
பாவாணர், மன்னார்குடியில் இருந்த 1931-ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆங்கில ஆண்டு மானத்தையே குறிப்பிட்டுள்ளார். விளிப்பாக, ஐயா, அன்பார்ந்த ஐயா, அன்பார்ந்த ஐயன்மீர், அன்பரீர், பேரன்பரீர், அருந்தமிழ் அன்பீர், அருந்தமிழ்ப் புலவீர் எனபவற்றை ஆண்டுள்ளார். விளிப்பை அடுத்து, ‘வணக்கம்’, ‘நலம்; நலமாக’, ‘தங்கள் கடிதம் கைவயம்’ என்பன இடம் பெற்றன. பின்னே செய்திகள் தொடரும். பெரும்பாலும் அட்டையிலேயே மடல்கள் எழுதுவார். பாவாணர் கையெழுத்து, பொதுவில் எவரும் படித்து அறிந்துகொள்ளத் தக்க பொது நிலை எழுத்தாகும். பாவாணர் கடிதத்தில் பிழை கண்டதே இல்லையென்றும், தொடக்கநாள் கடிதங்களில் ஓரிரு வடசொற் கலப்பும் ஆங்கிலச் சொல் பெய்வும் இருந்தனவென்றும் சில ஆண்டுகளில் அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்தன என்றும் தொகுப்பாசிரியர் கூறுகிறார்.
வ.சு.வுக்கு எழுதிய மடல்கள்
பாவாணர் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியர் வ.சு. அவர்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மடல்களில் பல்வேறு செய்திகளை எழுதியுள்ளார். தமக்கு வேண்டிய ஆங்கிலம் தமிழ் நூல்களை விலைக்கு வாங்கித் தரவும், கழக வெளியீட்டு நூல்களை தமக்குக் கேட்டும், கிடைக்காத நூல்களை எங்கிருந்தேனும் பெற்றுத் தரவும், மூர் அங்காடியில் எங்கோ பழைய நூற் கடையில் பார்த்த நூலை வாங்கி அனுப்பவும், பாவாணருடைய நூல்கள் விற்பனை வழி வந்த தொகையில் அவற்றின் விலையைக் கழித்துக் கொள்ளவும், கடன் கேட்டும், விலைக்கு நூல் கிடைக்காத வரை வ.சு.வின் நூலைப் பயன்படுத்திவிட்டுத் திருப்பித் தருவதாகக் கூறியும் நிறைய மடல்கள் எழுதியிருக்கிறார்.
மேலும், இந்தி எதிர்ப்பு தொடர்பான வினைப்பாடுகள் குறித்தும், தம் அறிவாய்வின் உயர்வு சிறப்பை விளக்கியும், கட்டுரை, நூல்களில் திருத்தம் செய்வது குறித்தும், தம் குடும்ப நிலைகள் குறித்தும், வாழ்வு நோக்கம் குறித்தும் பிறவற்றைப் பற்றியும் பற்பல செய்திகள் எழுதியிருப்பதைக் காண்கிறோம்.
அன்பர்க்கும் ஆர்வலர்க்கும் எழுதிய மடல்கள்
அன்பர்க்கும் ஆர்வலர்க்கும் எழுதிய மடல்களில், தம் நுண்ணறிவு ஆய்வாற்றல் குறித்தும், தமிழ் மீட்பு குறித்தும், வாழ்வு நோக்கம் குறித்தும், இயக்கம் குறித்தும், நூல் வெளியீட்டுக்குப் பொருள் தேவை குறித்தும், தம் பணியை இன்னொருவர் செய்ய இயலாநிலை குறித்தும் எழுதியவற்றையும், மாந்தநேய உணர்வுடன் எழுதப்பட்ட வற்றையும், உலகத் தமிழ்க் கழகம் தொடர்பாக எழுதியவற்றையும் பிற செய்திகளையும் காண்கிறோம்.
முதல் தொகுப்பில் கொடுத்துள்ள மடற்பகுதிகளில் சில:
தேடிச் சேர்த்த திருவும் பன்மொழிப்பயிற்சியும்:
“என் சொத்தெல்லாம் நூல்நிலையமும் ஆராய்ச்சியுமே”
“என் நூலகம் மட்டும் 7 நிலைப்பேழைகள் கொண்டது. ( 20.3.64. தமிழ்ப்பாவை வி.அ.கருணைதாசன்)
“முத்துவீரியம் கிடைக்குமட்டும் உங்களதை அனுப்பிவையுங்கள். மிகப் பத்திரமாய் வைத்திருப்பேன்” (29.7.31 சை.சி நூ. கழக ஆட்சியர் வ.சு.)
“Peeps at Many Lands – Australia மூர் அங்காடிப் பழங்கட்டடத்தில் ஒரு நடுக்கடையிலுள்ளது. விலை 8 அணா சொன்னான். வாங்கி வைக்க” (26.12.39 வ.சு.)
“கால்டுவெல் 3 ஆம் பதிப்பும் (இங்கிலாந்து) படியொன்று எடுத்து வைக்க. சாமவேதம் ஒரு தொகுதி மறவற்க, The Holy Shank பொருட்காட்சி சாலையில் கிடைக்காவிடின் மூர் அங்காடியில் வாங்கிவைக்க” (11. 12.41. வ.சு.)
“மூர் அங்காடியில் பழைய கட்டிடத்திலுள்ள புத்தகக்கடை வரிசையில் வட பகுதியில் ஒரு கடையில் மலையாள இலக்கணப்புத்தகம் ஒன்று கண்டேன். பொருளில்லாமல் வந்துவிட்டேன். 5 அணாவிற்குக் கேட்டேன். இசையவில்லை. 8 அணாவிற்கு இசைவான். எங்ஙனமும் ரூ. 1க்கு மேற்படாது. இசையுமாயின் வாங்கிச் ‘செல்வி’யொடு சேர்த்தனுப்புக” (4.10.34 வ.சு.)
(‘செல்வி’ என்பது கழக வெளியீடான செந்தமிழ்ச்செல்வி என்னும் பெயருடைய அரிய மாத இதழ்)
“தயவு செய்து உடனே Arabic grammar, Hebrew grammar, Chinese self-taught & grammar Higginbothams வாயிலாய் வருவித்துத் தருக. French grammar, German grammar இவ்விரண்டும் சென்னை மூர் அங்காடியில் கிடைக்கும்” (23.8.37 வ.சு.)
“ஆஸ்திரேலியம் மிகத் தேவை. சீனம் மலேயம் என்பவற்றிற்குக் கிடைத்தாலும் வாங்கி வைக்க” 29.12.37 வ.சு.)
தொண்டின் உறைப்பு:
“இந்த ஞாயிறு 10உ சென்னையில் கூட்டமென்று பத்திரிகையிற் பார்த்தேன். 2 வாரமாய் இந்தியால் வருங் கேட்டை முற்றுமாராய்ந்து இன்று தமிழ் அடியோடு தொலைவதற்கு ஒப்பானதைக் கண்ணுறுகின்றேன். எவரும் ஏற்கும்படி தக்க நியாயங்களும் விடைகளும் கண்டுள்ளேன். தயவுசெய்து அங்குப் போகவர முழுச் செலவு 7 ரூ கொடுக்க முடியாவிட்டாலும் அரைச் செலவிற்காவது ஒழுங்கு செய்க. அருமையான 30 பாட்டுகள் அச்சாகின்றன. இவ் வெள்ளி வரும். அதனுடன் வருவேன்” (5.10.37 வ.சு.)
“மதுரை மாணவர் அனைவரும் ஓரிடத்திற் கூட இயலின் நான் வந்து மொழிச்சிக்கல் பற்றி விளக்கமாய்ப் பேச அணியமாயிருக்கிறேன். போகவரப் பேரியங்கிக் கட்டணம் கொடுத்தாற் போதும். அதுவும் இல்லாக்காலும் வருவேன்” (20.1.68 வீ.ப.கா.சுந்தரம்.)
“நம் உயிர் உள்ளவரையில் தமிழ் கெடவிடக் கூடாது. முடிவான வழி நாம் பேசியதே” (12.10.37 வ.சு.)
“கல்வியமைச்சர் எங்கள் கல்லூரியில் ஏரணம் வரலாறு ஆகிய இரு பாட நூலகளையும் தமிழில் கற்பிக்கப் பணித்திருப்பதால் அவற்றுள் ஆங்கிலம் மட்டும் கற்ற ஆசிரியர்கள் கற்பித்தற்கு அரிதான ஏரணத்தை இரவு பகலாய் மொழிபெயர்த்து வருகின்றோம். இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிந்துவிடும். குறியீடுகள் பெரும்பாலும் தனித்தமிழில் அமையப் பெறுகின்றன” (15.7.51 வ.சு.)
“சங்கரலிங்க நாடார் வடக்கிருந்தென்ன? சின்னச்சாமி தீக்குளித்தென்ன? தமிழன் திருந்துவதாயில்லை” (3.10.46.வ.சு.)
பாவாணர் வீறு:
“எனது மொழிநூலைத் திரு.சுப்பிரமணியப் பிள்ளை போல்வாரே பார்க்கத் தக்கார். பெரிய ஆங்கில இலக்கணங்களை ஆதாரமாகக் காட்டியிருப்பதால் ஏனையோர்க்கு விளங்கா” (29.7.31 வ.சு.)
“அகத்தியரும் தொல்காப்பியரும் ஆரியர் அல்லர் என்னும் திரிபுணர்ச்சி நமக்கு இன்னும் இருப்பது பற்றி வருந்துகிறேன். ‘செல்வி’யில் வெளியிடாவிடில் மட்டும் அவ்விருவரும் தமிழர் ஆய்விடுவரா? ஆரியர் என்பதற்கு எத்துணையோ ஆதாரங்கள் இருக்கின்றன. என் கட்டுரைக்கு எவரேனும் மறுப்பெழுதினால் விடையளிக்கத் தயாராயிருக்கிறேன்” (12.10.31 வ.சு.)
“திராவிட மரபு தோன்றிய இடம் குமரிநாடே என்னும் பொருள் பற்றிய எனது இடுநூலைப் பல்கலைக் கழகம் தள்ளிவிட்டது. இது எனக்கு வியப்பாக இல்லை. இற்றைத் தமிழ்நிலை என்ன என்பதை மட்டும் தெரிவிக்கின்றது. இனிமேல் இந்தியாவிற்குள் எனக்கு ஒரு தேர்வும் இல்லை. ஆகையால் எனது நூல்களை யெல்லாம் ஒவ்வொன்றாய் வெளியிடப் போகிறேன்” (11.2.39 வ.சு.)
“நான் ஒரு பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவனாயின் தமிழ் விரைந்து ஆக்கம் பெறும்.” (4.7.47 வ.சு.)
மறைமலையடிகட்குப் பின் தமிழ்த்தூய்மை பேணும் பேராசிரியன் யான் ஒருவனே என்பது தங்கட்குத் தெரியும். தமிழ்ப்பற்று என்பது தமிழ்த் தொண்டனைப் போற்றுவதே” (9.11.56 வ.சு.)
“இனிமேல்தான் என் மொழியாராய்ச்சி உலகிற்கு வெளியாகும். அதனால் தமிழ் ஓங்கும். கழக நூல் விற்பனையும் உயரும்” ( 9.11.56 வ.சு.)
“என் புலமையைப் பொறுத்தவரையில் மறைமலையடிகள் ஒருவரே மதிப்புரையோ
முன்னுரையோ வழங்கத்தக்கவர்” (28.12.50 வ.சு.)
“என் காலத்திற்குப்பின் வேறெவரும் என்போல் எழுதவும் முடியாது” (8.8.64 மி.மு.சின்னாண்டார்)
“உண்மையில் அயலிடத்திற் பெருங்கூட்டத்திற் காத்திருந்து கல்வி அறிவில் தாழ்ந்த அமைச்சரைப் பார்ப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. அம்மையாருக்காகத்தான் பார்க்க விரும்புகிறேன்.அதுவும் வீணாயின் எனக்கு மனவருத்தம் மிகுதியாயிருக்கும். மானக்கேட்டுணர்ச்சியும் தோன்றும்” (10.7.68 மி.மு.சி)
(அம்மையார் என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்ற விளக்கம் தரப்படவில்லை)
“என் திருக்குறள் தமிழ் மரபுரை ஒன்றே என் தகுதியை நாட்டப் போதுமே”
(16.10.69 த.கு.)
“மறைமலையடிகள் ஒருவரே என்னைப் பாராட்டத் தக்கவரும் என் பெருமதிப்பிற்
குரியவரும் ஆவர்” (20.12.69 த.கு.)
“எனக்குச்செய்வதெல்லாம் தமிழுக்குச் செய்வதென்று கருதிக்கொள்க. எனக்குப்பின் என்னைப்போல் ஆய்பவர் தோன்ற ஒரு நூற்றாண்டாவது செல்லுமாதலால் யாக்கை நிலையாமை நோக்கி இதுவரை முடிந்த முடிவாகக் கண்டவற்றையெல்லாம் விரைந்தெழுதுவதில் இறங்கிவிட்டேன்” (12.1.49 வ.சு.)
“யான் இன்று முதற்றாய் மொழி, வடமொழி வரலாறு என்ற இரு முதன்மையான நூல்களை எழுதுவதில் அழுந்தியிருப்பதால் எங்கும் எதற்கும் வரமுடியாது. இவற்றை எழுதி முடித்தபின் தெரிவிப்பேன்” (30.4.48 வ.சு.)
“வடமொழி வரலாறும், தலைநாகரிகமும் (தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலுக்கு முற்படப் பாவாணர் கருதிய பெயர் போலும்!) புகழ்வேண்டி எழுதுபவையல்ல. தமிழை வடமொழியினின்று மீட்டற்கு எழுதுபவை. இத்துணைக் காலமும் (20 ஆண்டுகளாக) இதே நோக்குடன் கற்றும் ஆராய்ந்தும் இருக்கிறேன். ஆராய்ச்சி முடிந்தது. உண்மையும் கண்டுவிட்டேன். இதற்கென்றே கடவுள் என்னை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது எனது உணர்ச்சி” (6.4.49 வ.சு.)
முதல் தாய்மொழியும் ஆங்கில நூலும்:
“முதல் தாய்மொழி, என் முப்பதாண்டு ஆராய்ச்சியின் விளைவு அது. அதனால்தான் எதிர்காலத் தமிழுக்கு ஆக்கம் உண்டாகும். இதுவரை எழுதப்பட்ட சொல்லாராய்ச்சி மொழியாராய்ச்சி நூல் போன்றதன்று; தமிழ்ப் பகையையெல்லாம் தலைமடக்குவது” (17.12.51 வ.சு.)
“ ஒரு வீட்டின் உரிமையைக் காப்பது ஆவணம். ஒரு நாட்டின் உரிமையைக் காப்பது உண்மை வரலாறு. நம் நாட்டு வரலாறு மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் இருக்கின்றது. இற்றை ஆளுங்கட்சி ஆரியச் சார்பானது. தமிழுக்கும் தமிழர்க்கும் மாறானது. ஒரு நாட்டிற் பல நூற்றாண்டாகக் குவிந்து கிடக்கும் குப்பைக் கூளங்களை ஆறுதான் அடித்துக்கொண்டு போகும். அதுபோல் நீண்ட காலமாகக் குவிந்து கிடக்கும் ஆரியக் குப்பைகளை வரலாறுதான் அடித்துக்கொண்டு போகவேண்டும். மேனாட்டார் இந்திய நாகரிகம் ஆரியரது என்றும் தமிழ் சமற்கிருதத்தால் வளப்படுத்தப்பட்டதென்றும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். கால்டுவெல்லும் அதைத்தான் வலியுறுத்துகிறார். தமிழ் வடமொழித் துணையின்றித் தழைத்தோங்கும் என்று ஓரிடத்திற் கூறியிருப்பது முரணானது. நம்மவர் இன்னும் அவர் நூலைச் சரியாகப் படிக்கவில்லை”
“மேனாடு இக்காலத்து அறிவியல் ஊற்றுக் கண். ஆயின் மொழிநூற்கு அடிப்படை தமிழாதலின் அதைமட்டும் மேனாட்டார் அறிந்திலர். அவர் ஒப்புமாறு தமிழ்த் தொன்மை, முன்மை, தாய்மை, தலைமைகளை நாட்டிவிடின்இங்குள்ள அறியாமையும் ஏமாற்றும் தாமாக நீங்கிவிடும். இப்பயன் நோக்கியதே என் The Primary Classical Language of the World என்னும் ஆங்கிலநூல்” (கரு கும்பம் 1995 வி.பொ.ப.)
“என் தமிழ்ப் போராட்டம் அண்மையில் தொடங்கும். எனக்குப்பின் தமிழையும் உண்மையான மொழிநூலையும் வளர்க்கப் பன்னிரு மாணவரை அமர்த்துவேன்” (20.1.68. வீ.ப.கா.சு)
வேர்ச்சொற் போலிகை (மாதிரி):
“......வேர்ச்சொல் வரிசையைப்பற்றி நீங்கள் மாதிரி கேட்பது வியப்பாயிருக்கிறது. உங்கள் ஐயத்தையும் குறிக்கிறது. அறிஞரை நம்பி அவர்வயின் நல்ல வினையை ஒப்புவிக்கும் திறன் இன்னும் நம்மவர்க்கு ஏற்படவில்லை. ஒரேஒரு சொல்லுக்கு மட்டும் மாதிரி தருகிறேன்:
இறு – இறுதல் – வளைதல், முடிதல், மடிதல்.
சூரியன், பயிர்கள்: வளைவதையும் பின் முடிவதையும் அல்லது மடிவதையும்;
வளைவதையும் முடிவதையும் அது மடிதல் போல்வதையும் நோக்குக.
ஒ.நோ: சாய்தல் – வளைதல், இறத்தல்.
சாயுங்காலம் Eve - Evening
சாய் – சா – இறு – இற.
முடம் – வளைவு, முட – முடி – மட(ங்கு) மடி.
இறு + ஐ = இறை – வளைந்த முன்கை.
ஒ.நோ: elbow
இறு + ஆ = இறா – இறால் – இறாட்டு = வளைந்த கூனி
ஒ.நோ: கூன் + இ = கூனி
குனி – கூன் = வளைவு.
இறால் = தேன் கூடு (வளைந்தது, வட்டமானது),
இறாட்டி = எரு, (தேன் கூடு போன்றது)
வறட்டி என்றும் சொல்ல்லாம்.
இறுத்தல் = சூரியன் மேற்கே அடைதல் அல்லது தங்குதல்
இறு + ஐ = இறை. கதவுள், அரசன் (எங்கும் தங்கியிருப்பவன்)
இறை +அன் = இறையன்
இறுத்தல் = தங்குதல், பாளையமிறங்கல்.
இறுதல் = முடிதல்; இறு + உ அல்லது வு – இறவு
இறுதல் = வளைதல், சாய்தல். இறப்பு, இறவாணம், சாய்ந்த தாழ்வாரம். .
இன்னும் விரிக்கிற் பெருகும்.
இறு என்னும் சொல் இற(ங்கு) என்பதினின்றும் பிறந்தது.
இறத்தல் – இறங்குதல்.
இற – இறகு – இறங்கு. இற என்பது அண்மையும் கீழ்நிலையும் குறிக்கும் இகரச்
சுட்டடியாய்ப் பிறந்தது. சூரியன் கீழே யிறங்கும்போது வளைவதனால் இறங்கற்
கருத்தில் வளைவுக் கருத்தும் முடிவுக் கருத்தும் தோன்றின வென்றறிக.
-இங்ஙனம் எத்தனை சொற்களுக்கு வேண்டுமானாலும் எழுதலாம்”.... (31.7.40 வ.சு.)
“வேர்ச்சொற் சுவடியில் ‘இறு’ என்னும் வேரின் கீழ், இறாட்டி = வட்டமான எரு என்பது ஓர் உன்னிப்புத்தான். வறட்டி என்ற உலக வழக்குச் சொல் ‘வல்’ என்னும் வேரடியாயும் வறள் என்னும் பகுதியடியாயும் வந்தது.
வறள் + து = வறட்டு. பிறவினை.
வறட்டி = காயவைத்த எரு.
இதைக் குறித்துக் கொள்க” (25.940 வ.சு.)
சொல்லாக்க விளக்கங்கள்:
சில எடுத்துக்காட்டுகள்:
ஆதி : ஆதல் = உண்டாதல், ஆ – ஆதி = தோற்றம், தொடக்கம் எனலாம். ‘தி’ ஈறு.
உத்தரம், தக்கணம் : உ+ தரம் = உத்தரம். உயர்ந்த வடக்கு
தக்கு = தாழ்வு. தக்கு = தக்காணம், தாழ்ந்த தெற்கு.
ஏர்க்காடு : ஏரிக்காடு என்று யார் சொன்னது? ஏட்டுச் சான்றுண்டா? ஏர்க்காடு, கொத்துக்காடு எனக் காடு இருவகை. முன்னது உழுவது; பின்னது மண்வெட்டியாற் கொத்துவது.
மலையடிவாரத்தில் ஏர்க்காடு இருந்தாலும் அப் பெயர் பெறும். ஏறைக்கோன் என்றொரு சிற்றரசன் புறநானூற்றில் பாடப்பட்டுள்ளான். ஏறைக்குட்டி என்று பெயர் கொண்டார் குமாரசாமிப் பட்டியிலுண்டு. ஏறைக்காடு என்பதும் ஏற்காடு என மருவியிருக்கலாம். ஏரிக்கரையூர் எங்குமுளது. கோடைக்கானல் நீலமலை முதலிய இடங்களிலுமுண்டு. காடு என்னும் சொல் கவனிக்கத் தக்கது. ஏர்க்காட்டிலுள்ள முதியோரையும் வினவியறியலாம். (15.4.68 .........?)
குமுகாயம் : கும்முதல் = கூடுதல்
குமுகம் = சமுகம் (வ)
ஆயம் = பெருங் கூட்டம்
குமுகம் + ஆயம் = குமுகாயம் (மரூஉப் புணர்ச்சி)
சமுதாயம் (வ)
திணை : ஐந்திணை நிலப் பெயர்கள் நிலத்திணை பற்றியவையே. திணை என்னும்
சொற்கு ஒழுக்கம் எனல் வழிப் பொருளே; முதற் பொருளன்று.
மருதம் சான்ற மருதம் = மருதத்திணை சான்ற மருதநிலம்.
வேய்தல் : வேய்தல் = முடியணிதல். வேய்ந்தோன் = வேந்தன்.
கொன்றை வேந்தன் – கொன்றை மலரை முடியில் அணிந்தவன் (சிவன்).
தூரி : தூரி = ஊஞ்சல். இது தூய தென்சொல். வடமொழியில் இல்லை.
“ஊசல் ஊஞ்சலும் தூரியுமாம்” என்பது பிங்கலம். (அனுபோக வகை 569) கயிற்று வளையத்திற்குள் தூர்ந்து (புகுந்து) ஆடுவது தூரி. வழங்காமையினாலேயே பல சொற்கள் அருஞ்சொற்கள் ஆகின்றன.
பிழையும் திருத்தமும் :
“விரற்கடை என்பது விரற்கிடை என்றிருத்தல் வேண்டும். நாட்டியம் என்பது வடசொல் வடிவு. நடம், நடனம் என்பவே தமிழ்” (20 கும்பம் 99 வி.பொ.பழனிவேலனார்.)
“எத்தனைமுறை பார்ப்பினும் சிலர் கண்ணிற்குச் சில பிழைகள் தப்பியே விடுகின்றன. அதனால் அடுத்த நூல்களுக்கு ஐவரை அமர்த்த விருக்கிறேன். மேனாடுகளில் எழுவர்க்குக் குறையாது திருத்துவதாகத் தெரிகின்றது” (22.3.67 மி.மு.சி.)
“பொய்கை என்பது வற்றாத நீர்நிலை. குளம் ஆண்டுதோறும் மழைநீரால் நிரம்பிக் கோடையில் வற்றுவது” (19.7.70 மி.மு.சி)
தனித் தமிழ்க் கழகம் :
“தனி என்ற சொல்லை நீக்கித் தமிழ்க் கழகம் என்றே பெயர் வைக்கச் சொல்லி யிருக்கிறேன்” (1.9.64 எழுதப்பெற்றவர் பெயர் இல்லை)
“உறுப்பினர் அனைவரும் தனித்தமிழே பேச வேண்டும் என்னும் யாப்புரவில்லை. தனித்தமிழ்ப் பற்றிருந்தால் போதும்” (1.8.64 எழுதப்பெற்றவர் பெயர் இல்லை)
தனித்தமிழ்ப் பெயரீடு :
“சின்னச் சாமியைச் சின்னாண்டார் என மாற்றிக் கொள்க, வேறு பெயரும் தாங்கிக் கொள்ளலாம்” ( 15.4.64 மி.மு.சி)
“நுங்கள் பெயரை ‘ஆமலையழகர்’ என மாற்றிக் கொள்க. அல்லது வேறு தனித்தமிழில் சொல் வேண்டும்” (31.1.68 பசுமலைப் புலவர் வீ.ப.கா.சுந்தரம்)
“சாத்தையா என்னும் விளிவடிவைச் ‘சாத்தையன்’ என்று மாற்றுக” (16.10.79 த.கு.)
“முதலாவது தங்கள் பெயரை அருள், அருளையன், அருளப்பன், அருளாளன், அருளன், அருளுடையான், அருளாண்டான் என்பவற்றுள் ஒன்றாக மாற்றிக் கொள்க.....”
ஆரியப் பெயர் தாங்கி ஆரியம் அல்லது பிறமொழி கலந்து பேசுவதாலேயே, ஆரியரும் வடவரும் தமிழரைத் தாழ்வாய்க் கருதி இந்தியைப் புகுத்தினர். அதைத்தமிழர் எதிர்க்க வில்லை. ஒரு சில கூட்டங்கள் கூட்டி ஒரு சில சொற்பொழிவாற்றுவது எதிர்ப்பாகாது. ஆங்கிலேயரை எதிர்த்ததுபோல் இறுதிவரை எதிர்ப்பதே எதிர்ப்பு. இந்தி வந்ததனாலேயே தேவநாகரியும் வருகின்றது.” (17.11.61 வி.அ.க.)
தமிழ்ப் புலவர் கழகம் :
“...தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே புலவர் அல்லது அறிஞர் கழகம் இருத்தல் வேண்டும். மெள்ள மெள்ள இவ்வறிஞர் கழகமே அரசியலில் தலையிட்டுத் தமிழ்நாட்டுக் கட்சியாகி அரசியலைக் கைப்பற்ற வேண்டும். தமிழறியாதவரையும் தமிழரல்லாத திராவிடரையும் நம்பிக்கொண்டிருப்பது கழிபெரு மடமையாகும்.....” (23.10.41 வ.சு.)
“ஆடவை (சூன்) நடுவில் திருச்சியில் நடைபெறவிருக்கும் தமிழ்ப்புலவர் மாநாடு, ‘தமிழர் பழங்குடி மக்களா? வந்தேறிகளா?’ என்னும் வினாவுக்கு அறுதியும் இறுதியும் உறுதியுமாக முடிவுசெய்யப் பெறுமாதலால் மிக முதன்மையானதாக இருக்கும்” (15.4.68 மி.மு.சி.)
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணி :
“அண்ணாமல்ப் பல்கலைக்கழகத்தில் உள்ளவரை ஆரியத்திற்கு மாறான என் ஆராய்ச்சி நூல்களை வெளியிட முடியாது. அதினின்று விலகிய பின்னரே முடியும்” (9.2.59 வ.சு.)
உலகத் தமிழ்க் கழகம் :
“உ.த.க.விற்கு மதவியற் கொளகையில்லை. கடவுளை நம்புவாரும் நம்பாதவரும் ஒருவரை ஒருவர் குறைகூறாது அதில் இருக்கலாம்”
“தென்மொழிக் கொள்கையாகிய தமிழ்நாட்டுப் பிரிவினை உ.த.க. கொள்கையன்று”
(கு.பூ 3.6.80)
அகரமுதலிப் பணி :
“சென்னை அகரமுதலியைத் திருத்தாது தமிழைக் காக்கவோ வளர்க்கவோ முடியாது. அதை நான் ஒருவன்தான் திருத்த முடியும். நான் இளைஞனல்லேன். கண்ணொளி வேறு குன்றி வருகின்றது. மிகப் பிந்திவிட்டால் என் ஆராய்ச்சியையும் அறிவையும் பயன்படுத்த முடியாது. தமிழனுக்குத் தமிழே உயிர்நாடியானது. மட்ட அரிசி விலையில் அரைக்கால் ரூபா குறைந்ததினால் தமிழனுக்குப் பெருநன்மை ஏற்பட்டு விடாது.
தமிழுக்கு அடிப்படையான வேலை செய்யாவிட்டால் தமிழக அரசுத் தலைமைச் செயலகம் என்னும் பலகையை எந்தக் கட்சியும் ஒரு நிமையத்தில் எடுத்துவிடலாம்” (20.5.67 மி.மு.சி.)
“நம் அகரமுதலி பொதுவகையானதன்று; சொற்பிறப்பியற் கூற்றைச் சிறப்பாகக்
கொண்டது” (26.9.75 இரா. இளங்குமரன்)
“(கழகத் தமிழ்க்) கையகராதியில் புத்ச்சொற்கள் சேர்க்கப்படுவதுடன் பழஞ்சொற்பொருள் திருத்தப்படவும் வேண்டும்.
(எ-டு) அகணி – பனை மட்டையின் உள்நார் என்றுளது. அகணி புறநாரே அன்றி அகநாரன்று. இங்ஙனம் பலவுள” (13.7.46 வ.சு.)
தொல்காப்பியச் சீர்மை :
“மொழியாராய்ச்சியும் உலக வரலாற்றறிவும் இல்லாதவர் தொல்காப்பியத்தைத் தெளிவாய் உணரமுடியாது” (8.8.66 மி.மு.சி.)
“இற்றைத் தமிழிலக்கியத்திற்கு ஆணியாய் இருப்பதும், தமிழன் தான் இழந்த உரிமைகளைப் பெறுதற்கு ஆவணம் போல் உதவுவதும் தொல்காப்பியம் ஒன்றே” (28 சிலை 2000 தமிழ்க்குடிமகன்)
விளம்பரம் விலக்கல் :
“என் குடும்பத்தில் பிறந்தநாட் கொண்டாடும் வழக்கமில்லை. நானும் விளம்பர வெறுப்பினன். இதைப் பன்முறை சொல்லியும் சில கிளைகள் கேட்கவில்லை. மறைமலையடிகளையே மாண்பாகக் குறிப்பிடுக” (6.3.80 கு. பூங்காவனம்)
“......பொன்னாடை போர்த்தினால் என் வருத்தம் மிகும் என்று சொல்லியிருந்தேன். அதுவுமன்றிப் பன்னாடை போர்த்தியது என் மனக்குறையைப் பன்மடங்காக்கியது. (23.1.68 மி.மு.சி.)
கிழங்கு வகைகள் :
( சேலம் பகுதியில் கிடைக்கும் சுவையான ‘மயிர்க் கிழங்கு’ பாவாணர்க்கும் அவர் மக்களுக்கும் விருப்பமானதாகும். சேலம் அரிமாப் புலவர் மி.மு.சின்னாண்டார், தம் தாய் உடல் நலமின்றி இருந்த காலத்தில், தாயின் மருத்தவம் தொடர்பான பணிகளுக்கிடையிலும் கிழங்கை வாங்கிப் பாவாணர்க்கு அனுப்பியிருக்கிறார். கிழங்கு கிடைத்தபோதே சின்னாண்டார் தாயின் உடல்நலமின்மைச் செய்தியும் பாவாணர்க்குக் கிடைத்திருக்கிறது. அந்த நிலையில் பாவாணர் புலவர்க்கு எழுதிய மடலில் குறிப்பிடிருந்த செய்தி கீழே!)
“தாய் நன்னிலையில் இல்லாதபோது மயிர்க்கிழங்கு வாங்கி அனுப்பியிருக்கக் கூடாது. ஆயினும், இவ்வட்டை சேரும்போது தாய் நலம் பெற்றிருக்குமென நம்புகின்றோம். உடனே தெரிவிக்க. மறுமொழி கண்டபின்தான் கிழங்கை உண்போம்” (7.1.65 மி.மு.சி)
மனைவி மக்கள் :
“நானும் என் மனைவியும் ஓருயிரும் ஈருடலுமாக இருந்தோம். அவர் பிரிவு என்னாற் பொறுக்குந் தரமன்று. ‘பல்சான்றீரே, பல்சான்றீரே’ என்னும் புறச் செய்யுளை நோக்கினால் என் கூற்று விளங்கும். காதல் பெண்பாற்கு மட்டும் உரியதன்று. முக் கடமைகளை நிறைவேற்றவே உயிரோடிருக்கிறேன். அவற்றுள் ஒன்று வடமொழியினின்று தமிழை மீட்டல்” (9.8.57 வ.சு.)
[பாவாணர் கூறும் மற்ற இரு கடமைகள் அவருடை மகளுக்கும் கடைசி மகனுக்கும் திருமணம் செய்ய வேண்டுமென்பவையே!)
நோய் நொடி நொம்பலம் :
“இப்போது 20உக்குள் தயவுசெய்து 10ரூ அனுப்பி உதவுக. பணத்திற்கு பெரிய முடை. தாட்செலவுக்கும் தபாற்செலவுக்கும் கூடப் பணமில்லை. என் கடன் தொலைந்துவிட்டால் உங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்” (14.2.31 வ.சு)
“இப் பனிக்கால முழுதும் ஈளை நொய் என்னைத் தாக்கும் போலும்! (30.12.64 மி.மு.சி.)
“எனக்கு இடக்கண் அறுவையாகிச் சிறிது சிறிதாய் நலம் பெற்று வருகிறேன்” (22.6.66 மி.மு.சி.)
“அளவிறந்த அழுக்காறும் தந்நலமும் தமிழையும் என்னையும் கெடுக்கின்றன. பண்டைத் தமிழ்ப்புலவர் போற் பரிசில் வாழ்க்கையன் ஆனேன்” (13.12.66 மி.மு.சி.)
“முதுவேனிலிற் சிறப்பாகத் தீ நாட்களைக் கழிப்பது ஆண்டு தோறும் பெரும்பாடாக இருக்கிறது” (23.3.68 மி.மு.சி.)
“உட்சட்டை ஒன்றுகூடக் குப்பாயமின்றி அணியக்கூடிய நன்னிலையில் இல்லை” (15.6.68 மி,மு.சி)
சிதறிய மணிகள் :
பாவாணர், அன்பர்களுக்கு எழுதிய மடல்களில் காணப்படும் பல் துறைசார்ந்த பல்வேறுவகைச் செய்திகள் சிதறிய மணிகள் ன்னும் தலைப்பின் கீழ், குறுந் தலைப்புகளோடு தரப்பட்டுள்ளன. அவற்றுள் சில:
அளவான அமைப்பு :
“நமது இலக்கணம் சில இலக்கணங்களைப்போலக் குன்றக் கூறலாகவும், மிகைபடக் கூறலாகவும் இல்லாமல் அளவாக உள்ளது. ஆகையால் குறைக்க வேண்டாம். யான் எழுதியபடியே இருக்கட்டும்” (4.10.34 வ.சு.)
ஆவணம் :
“குமரிநாட்டு வரலாறு, நமது உரிமையைப் பெறுவதற்கு இன்றியமையாத ஆவணம். இதை அறிந்துதான் எனது எம்.ஓ.எல் இடுநூலைப் பார்ப்பனர் தள்ளிவிட்டனர்” (16.1.43 வ.சு.)
பழமொழி அகராதி :
“பழமொழியகராதி பல்லாண்டு பாடுபட்டுத் தொகுத்தது. முன் அச்சுக்கு வந்தவை 8000உம், வராதவை 5000உம் ஆக மொத்தம் 13000 உள்ளன. தமிழின் வளர்ச்சிக்குத் தக்க தமிழ்ப் புலவரைத் தாங்குதல் இன்றியமையாதது” (30.4.45 வ.சு.)
மறதி :
“இங்கு வந்தபோது கண்ணாடியையும் சீப்பையும் அங்கு விட்டு வந்துவிட்டேன். கூடத்திலிருக்கும். போற்றி வைக்க. காவற்காரனுக்கு என் கணக்கில் 4 அணா கொடுத்துவிடுக. நான் புறப்பட்டபோது அங்கில்லாததால் கொடுக்கவில்லை”
(26.9.49 வ.சு.)
கலைச்சொற்கள் :
“கலைச்சொற்களை யெல்லாம் தனித்தமிழில் ஆக்கிக்கொண்ட பின்னல்லது தமிழை வளர்க்க முடியாது” (24.7.51 வ.சு.)
மாதங்களின் பெயர் :
“பண்டைத் தமிழர் ஓரை (இராசி)ப் பெயராலேயே மாதங்களைக் குறித்து வந்திருக்கின்றனர். நாள் (நட்சத்திரம்) பெயராக மாற்றியது ஆரியர்செயல்”
(8.5.64 மு.மு.சி)
மருத்துவம் :
[குடற்காய்ச்சல் (டைபாய்டு) உள்ளபோது],“வலிமையுள்ள உணவை இளம்பதமாய் அல்லது நீர் வடிவில் சன்னஞ் சன்னமாய் உட்கொள்ள வேண்டும். உழைப்பு வேலை அரையாண்டிற்கு இருத்தல் கூடாது” (25.7.65 வி.அ.க.)
மரத்திற்றாழ்ந்த மாந்தன் :
“மாந்தன் உயிரினத்தில் எத்தனை உயர்ந்தவனாயினும் நிலையாமையை நினைக்குங்கால் ஐயாயிரம் ஆண்டு உயிரோடிருக்கும் மரத்தினும் தாழ்ந்தவனாகின்றான்றான். (13.8.66 மி.மு.சி.)
குறிக்கோள் :
“என் வாழ்க்கைக் குறிக்கோள் தமிழை ஆரியத்தினின்று மீட்பது” (22.10.66 கரு.)
எழுத்து வரலாறு :
“இற்றை யெழுத்துக்களுள் ‘ழ ள ற ன’ தவிர ஏனையவெல்லாம் தலைக்கழகக் காலத்திலேயே தோன்றியிருத்தல் வேண்டும். தொல்காப்பியர் காலம் வரை எகர ஒகர உயிரும் உயிர்மெய்யும் குற்றியலிகர குற்றியலுகரங்களும் மகரமும் புள்ளியுடன் வழங்கப்பெற்றன. கடைக்கழகக் காலத்தில் அல்லது சற்றுப்பின் அவை நீக்கப்பெற்றன. ஈகாரத்தின் பண்டை வடிவம் ‘இ’(சுழித்தது). இவை என் தமிழ் வரலாற்றில் ஓரளவு விளக்கப் பெற்றுள்ளன.
திரு. தி.நா.சுப்பிரமணியன் எழுதிய பண்டைத் தமிழெழுத்துக்கள் பிராமி வரிவடிவின் வரலாற்றையே விளக்குவது.
ஹீராசு பாதிரியார், மொகஞ்சோதரோ எழுத்துக்களே தமிழெழுத்துக்களின் மூலம் என்பர். அவரெழுதிய ஆங்கிலநூல் பெரிய நூல்நிலையங்களில் இருக்கும் மொகஞ்சொதரோ எழுத்துக்கள் தலைக்கழக எழுத்துக்களின் முந்தின நிலையாக இருக்கலாம்” (28.1.67 மி.மு.சி)
கருத்துக்கு ஒப்பு :
“தாமரைத் திருச் சுப்பையாப்பிள்ள அவர்களை நிகழ்ச்சிநிரலில் குறித்துக் கொள்க. அவர் வராவிடினும் குற்றமில்லை.......நூல் முழுமையிலுமுள்ள சிறப்புக் கூறுகளையெல்லாம் படித்தறிந்தவர். ஆதலால் அவரே வெளியீட்டுரை நிகழ்த்தத் தகுதி வாய்ந்தவர். என்றும் என் கருத்துக்கும் ஒத்தவர்” (க சிலை 2000 த.கு.)
பிரித் தறிதல் :
“திரு.வி.க. சமயப் பொதுஉணர்வு, பெண்ணின் பெருமை, தொழிலாளியுரிமை முதலியவற்றை நாட்டினவர்தான், ஆயின், மொழித்துறையில் எல்லாரும் பினபற்றவேண்டிய ஈடிணையில்லா மாமலை மறைமலையடிகளே” (உக விடை 2002 த.கு.)
முற்றதிகாரித் தலைவன் :
“தனித்தமிழ் மறவருள் ஒரு கடுங்கோல் முற்றதிகாரி தலைவனாக வந்தாலொழியத் தமிழ்த் தொண்டர் எத்துணையர் தோன்றினும் தமிழ் பேசும் நடைப்பிணங்கள் செவிக்கொளா; மனந்திருந்தா; ஆயினும் நம் பணியைத் தளராது செய்வது நம் கடமையே” (5.11.79 வி.பொ.ப.)
எழுத்து மாற்றம் :
“தமிழெழுத்து மாற்றம் தேவையில்லை. மாற்றின் தமிழின் தனி நிலைமையே மாறிவிடும். அது பெரியாரின் அடிப்படைக் கொள்கையுமன்று” (9.11.79 வி.பொ.ப)
முத்துமாலை :
முத்துமாலை என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ள செய்திகள் பெரும்பகுதியும் பாவாணர் தம் ஆய்வுக்கு நூல்கள் வாங்குவது தொடர்பாகவும் ஆய்வைப் பற்றியும் எழுதியவையே. ஆய்வாளர்க்குக் கருவி நூல்களின் தேவையையும் அவற்றைப் பெற ஆய்வாளர் பாவாணர் காட்டும் பெருவிருப்பையும் இப்பகுதிகளால் அறியமுடிகிறது. சை.நூ.க. ஆட்சியாளர் வ.சு.விற்குப் பாவாணர் 1970-லும் பின்பும் எழுதிய மடல் பகுதிகளின் தொகுப்பே இங்குள்ளவை. அவற்றுள் சில :
கழக வெளியீடு :
“அடிகட்குப்பின் அரும்பாடுபட்டுத் தமிழைக் காப்பது நான் ஒருவனே யாதலானும், என் பொருளியல் நிலைமை கருதியும் தங்கள சொந்த வெளியீடெல்லாம் ஒவ்வொரு படி அன்பளிப்பாகத் தந்தால் நன்றாயிருக்கும்” (29.6.70)
சேந்தன் செந்தமிழ் :
“பாம்பன் சுவாமிகளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எழுதிய ‘சேந்தன் செந்தமிழ்’ பார்க்கவில்லை. 1906இல் நான் நாலாட்டைச் சிறுவனாயிருந்த போதும் அடிகட்குப் பத்தாண்டு முன்பும் அவர்கள் தனித்தமிழ்க்காப்பு நூல் முதன்முதலாக எழுதினார்களென்பது மிக மிக மெச்சத்தக்கதே. உடனே ஒரு படி வாங்கி அனுப்புக. தமிழர் வரலாற்றில் அவர்களைப் பாராட்ட வேண்டும். தமிழ் வரலாறு அச்சிட்டபோது தாங்கள் இச்செய்தியைத் தெரிவிக்க வில்லையே” (17.8.71 வ.சு.)
பொதுவுடைமை :
“மக்கள் தொகை அளவுக்கு மிஞ்சிப் பெருத்து வருவதினால் எதிர்கால ஆட்சி பொதுவுடைமை முறையில்தான் இருக்கும்” (27.6.72 வ.சு.)
நிலையாணை :
“எனக்குப் பயன்படும் வரலாறு மொழிநூல் மாந்தனூல் ஆகிய முத்துறைப் பொத்தகங்கள் என்று வெளிவரினும் என்னைக் கேளாதே வாங்கலாம்” (7.7.72 வ.சு.)
குமரிநாட்டு மொழி :
“தமிழ் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக நாம் நாட்ட வேண்டிய உண்மை, தமிழ் குமரிநாட்டு மொழி என்பதே” (29.7.72 வ.சு.)
தொண்டுக்கு அன்பளிப்பு :
திரு. சுத்தானந்த பாரதியார் தென்னாப்பிரிக்காவில் நற்றொண்டு செய்திருக்கின்றார். அவர் என் நூல்களில் எதை விரும்பினும் அன்பளிப்பாகக் கொடுக்க. அவர் தம் பாரத சக்தி மாகாவியம் எனக்கு அன்பளிப்பாகத தந்தாரே” (3.7.73 வ.சு.)
ஊற்றுத் தூவல் :
“ஊற்றுத் தூவல் (Fountain pen) முள்ளில் கூர் நுனி மழுக்க நுனி என இரண்டிருப்பின் கூர் நுனியே வாங்கச் சொல்க” (5.2.74 வ.சு.)
உண்மை வெளிவரவேண்டும் :
“பேரா. மதிவாணன் மீண்டும் முளவுமா முயலே என்னும் கட்டுரை விடுத்திருக்கின்றார். இம்மாதச் செல்வியில் அதை வெளியிடுக. புலவர் இளங்குமரன் மீண்டும் மறுக்கட்டும். உண்மை வெளிவரவேண்டும். கடுப்பும் காழ்ப்புமின்றி நட்பு நிலையில் ஆய்வு மனப்பாண்மையுடன் இது நடைபெறுக” (31.1.75 வ்சு.)
நோய், நொடி நொம்பலம் என்னும் தலைப்பின்கீழ் தந்துள்ள மடல் பகுதிகள் பாவாணர் வறுமையாலும், நோயாலும் பிறவகையாலும் உற்ற துன்பங்களைக் கூறுகின்றன. சொல்லாக்க விளக்கங்கள் என்னும் தலைப்பின் கீழ் உள்ள பகுதிகள் யாருக்கு எப்போது எழுதப்பட்டவை என்ற குறிப்பில்லை.
இஞ்சிமுரப்பு, ஊறுகாயும் பிறவும் என்ற தலைப்புகளின் கீழுள்ள மடல் பகுதிகள், பாவாணர் அவற்றை விரும்பியதையும் அன்பர்களுக்கு அதன் தொடர்பாக எழுதியதையும் தெரிவிக்கின்றன. தம் ஒரே மகளுக்குப் பாவாணர் மான்குட்டி வாங்கிக் கொடுத்ததையும் அதன் தொடர்பானவற்றையும் ‘மகளார்க்கு ஆக வாங்கிய மான்குட்டி’ என்ற தலைப்பின் கீழுள்ள மடல்பகுதிகளால் அறிகிறோம்.
‘பார்ப்பனர் குலப் பாவாணர்’ என்னும் தலைப்பின் கீழ் உள்ளவை 27.10.60, 2.11.60, 1.12.60 நாள்களில் கழக ஆட்சியர் வ.சு. வுக்கு எழுதப்பட்ட மடல்களின் பகுதிகளாகும். இவற்றில், மறை.திருநாவுக்கரசு எழுதிய, ‘மறைமலையடிகள் வரலாறு’ என்னும் நூலில் பாவாணரின் குலம் பற்றித் தவறாக எழுதியிருந்ததை மறுத்துத் தம் தாய் தந்தையரைப் பற்றிப் பாவாணர் விளக்கி எழுதியுள்ளார்.
மடல்களின் பகுதிகளை மட்டும் தந்திருப்பதால், ஓரிரு இடங்களில் செய்தியை விளங்கிக்கொள்ள முடியவில்லை. எடுத்துக்காட்டாக, 7.4.46-ஆம் நாளிட்டதான வ.சு.வுக்கு எழுதிய மடலின் பகுதியில், “மாநாட்டுச் செய்தி என்ன? இங்கு தமிழ் மாகாணப் பிரிவினை மாநாடொன்று தமிழ்நாட்டுப் பல்கட்சித் தலைவர்களையும் கூட்டி நடத்த எங்கள் தலைவர் கருதுகிறார்” என்றிருக்கிறது. அவர் எந்த மாநாட்டின் செய்தியைக் கேட்டார் என்பதை மீண்டும் முன்பக்கத்தைத் திருப்பிப் படித்தபின் இந்தி எதிர்ப்பு மாநாடாக இருக்கக்கூடும் என்று எண்ணமுடிகிறது. ஆயினும், ‘எங்கள் தலைவர்’ என்று பாவாணர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை.
இரண்டாம் தொகுப்பு
இலக்கியச்செம்மல் இரா. இளங்குமரனார் ஐயாவே ‘பாவாணர் மடல்கள்’ என்னும் இரண்டாம் நூலையும் தொகுத்திருக்கின்றார். இவ்விரண்டாம் தொகுப்பில், முதல் தொகுப்பின் பின்னர்க் கிடைத்த 586 மடல்களின் பகுதிகள் பத்துத் தலைப்புகளின் கீழ் தரப்பட்டுள்ளன. இம் மடற்பகுதிகள் 37 பேருக்கு எழுதப்பெற்ற மடல்களில் உள்ளனவாகும். இத் தொகுப்பு நூல் ஏறத்தாழ 173 பக்கங்களைக் கொண்டது. இதன்பின் வந்த 30 மடல்களின் பகுதிகள், இணைப்பு என்னும் பெருந்தலைப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
முதல் தொகுப்பில், தொகுப்பாசிரியரின் கருத்துரைகளோடு மடல் பகுதிகள் தரப்பட்டன. இவ் விரண்டாம் தொகுப்பில் அவ்வாறின்றி, மடல் பகுதிகள் மட்டும் மடல் பெற்றவரின் பெயர்ச் சுருக்கத்தோடும் நாளோடும் உள்ளன. பாவாணர் எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு முதல் தொகுப்பிலும் இரண்டாம் தொகுப்பிலும் உள்ளது.
இரண்டாம் தொகுப்பில் உள்ள மடல்பகுதிகளில் சில :
வாழ்க்கை :
ஏமாற்று :
“இக்காலத்தில் எல்லாரையும் நம்பக்கூடாது. பொத்தகம் விற்றுத்தருகிறோ மென்று என்னை ஏமாற்றிய புலவரும் மாணவரும் உளர். துறவியர் சிலருமுண்டு”
(26 அலவன்1999 கா. இளமுருகனார்)
முன் தோன்றலர் மூவர் :
“மறைமலையடிகளும் யானும் ஒரு தனிவகையரேம். எம் வாழ்வைத் தமிழ் வாழ்வொடு ஒன்றுவித்துக் கொண்டோம். தமிழை வடமொழியினின்று மீட்கவே இறைவனாற் படைக்கப்பட்டோம். தமிழ் – ஆரியப் போராட்டத்திற்கு ஆங்கில அறிஞர் ஒருவரும், பிராமணர் ஒருவரும், சிவநெறியார் ஒருவருமாக மூவர் எனக்குமுன் தோன்றினர். மேலையர்க் கறிவிக்க யான் ஏற்பட்டுள்ளேன். என்னோடு இப்போராட்டம் முடிகின்றது. இத்தகைய போராட்டம் உங்கட்கில்லை” (4.11.71 கா.இ.மு.)
என் தொண்டு :
“என் தமிழிலக்கியத் தொண்டில் தலைமையானது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி. தமிழ்க் காப்புத் தொண்டில் தலைமையானது The Lemurian Language and its ramifications”(கு.பூங்காவனம் 9.10.79)
நாளும் பத்துமணி வேலை :
“நான் ஏழுநாளும் பத்துமணி நேர வேலைக்காரன். வேனில் மும்மாதம் வேலை குன்றுகிறது. சொந்த வீட்டில் செந்தண (Air-conditioned) அறை அமைத்துக்கொண்டு முழுப்பகலும் வேலை செய்வேன். இது எனக்கு இன்பமானது” (அன்புவாணன் வெற்றிச்செல்வி 16.4.80)
இறைவன் செயல் :
“திருவள்ளுவர், பிராமணர் ஏமாற்றை வெளிப்படுத்தித் தமிழ் நாகரிக உயர்வை நாட்டினார். மறைமலையடிகள் தமிழ் தனிமொழி யென்று நாட்டினார். பெரியார் கல்லாத் தமிழரிடைத் தன்மான உணர்ச்சியூட்டினார். நான் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்று நாட்டிப் பிராமணியப் பேயைத் தமிழ்நாட்டினின்று ஓட்டுவேன். இதற்கு இறைவனே என்னைத் தோற்றுவித் திருக்கின்றான். இது என் செயலன்று. இறைவன் செயலே” (அ.வா.வெ.செ. 2.5.80)
கரும்பு தின்னக் கூலி :
“மொழிநூற் கல்வியும் ஆராய்ச்சியும் எனக்கு இன்பமான பாடத்துறை. ஆனால், இன்று நான் பெறுஞ்சம்பளம் கரும்பு தின்னக் கூலியாகும். ஆதலால் வேலை செய்யாது காலத்தைக் கழிக்கவோ வேறு வேலை செய்யவோ இயலவே இயலாது”
(அ.வா.வெ.செ. 2.5.80)
உடலும் உள்ளதும் :
மயக்கம் :
“20 நாட்கு முன் ஒரு வைகறை திடுமென மயங்கி விழுந்துவிட்டேன். அரத்தக் கொதிப்பின் விளைவாகத் தெரிகின்றது. இன்னும் முழுநலமில்லை. ஆயினும் கூட்டமும் என் வரவும் தவிர்க்க முடியாமல் என் மகனைத் துணைக்கொண்டு வருகின்றேன்”
கேட்கு முறை :
“(அரசை) இரந்து கெஞ்சாது உரிமையொடும் அதிகாரத்தொடும் கேட்க” (தி.வை.சொக்கப்பா 28.10.70)
அன்பும் நண்பும் :
இலக்குவனார்:
“இலக்குவனார் ஒருவரே இந்தியை எதிர்க்குமாறு மாணவரைத் தூண்டினார். அதனால் வேலையிழந்தார். அதைத் தமிழ்ப் புலவர்குழுவும் கண்டிக்கவில்லை” (வி.அ.க. 22.10.66)
ஆடசியும் அமைச்சரும் :
“இன்றிருப்பது திரவிட ஆட்சியே யன்றித் தமிழாட்சி யன்று. அதுவரப் பத்து அல்லது பதினைந்தாண்டு செல்லும். அதற்கு இன்றிருந்தே கடுவுழைப்பும் பெரு முயற்சியும் செய்தல் வேண்டும். இன்று தமிழாட்சியிருப்பின் தமிழ் நிலையும் என் நிலைமையும் இங்ஙனம் இரா...
அடிகள் படிமைத் திறப்பு தனித்தமிழ ரல்லாதவரைக் கொண்டு நிகழ்த்தின் நான் வரமுடியாதென்று சென்ற ஆண்டே நாகைக் கோவையிளஞ்சேரனுக்கு எழுதிவிட்டேன்...
‘சிலை’ என்னும் சொல் பற்றிய ஒரு கட்டுரை மட்டும் விடுத்தேன். அது மலரில் வரும். பாராட்டுச் சொற்பொழிவிற்கு என்னை இசைக்குமாறு புலர் கோவையிளஞ்சேரன் சென்ற கிழமை ஓரன்பரை அனுப்பியிருந்தார். நான் முன்பு செய்த முடிவே முடிவென்று சொல்லியனுப்பிவிட்டேன். ஆரவாரம் வேறு; அமைதி வேறு. உண்மை வேறு, போலி வேறு. திருவேறு, தெள்ளறிவு வேறு.” (ந.பிச்சுமணி 1 ஆடவை 2000)
கட்சிப்பற்று :
“மொழிப்பற் றின்றிக் கட்சிப்பற்றே யுடைய அமைச்சரை, இனி நம்பிப் பயனில்லை. நம் தமிழும் அவர் தமிழும் வெவ்வேறாம். மேலும், தமிழால் வயிறு வளர்த்துத் தமிழால் பெரும் பொருளீட்டும் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரே தமிழுக்கு மாறாயிருக்கின்றனர்” (ந.பி 1 ஆடவை 2000)
மணமகள் :
“சேலங்கல்லூரி மேனாள் முதல்வர் அ.இராமசாமிக் கவுண்டரின் இளைய மகன் (கடைக்குட்டி) வெங்கடேசன், உரு அகவையினன். பொறியியல் இளங்கலைஞன் (B.E.). சென்னையில் அரசியல் அலுவலன். 1500 உருபாச் சம்பளம் பெறுவோன், அழகன், பொன்னிறத்தன், நற்குணன், திறமையன், மணப்பருவத்தன். ஆதலால் பெண்தேடுகின்றனர். இதுவரை தக்கபெண் அமையவில்லை. பொன்னிறமும் பொற்பும் ஒண்கல்வியும் உயர்குணமுமுள்ள பெண் உம் இனத்திலிருந்தால் உடனே தெரிவிக்க. வந்து பார்க்கச் சொல்கின்றேன். மணமகன் வீட்டார் கொங்கு வேளாண்குடியினரே. நும் இரு முதுகுரவர்க்கும் அன்பான வினவலைத் தெரிவிக்க” (மறை.நித்தலின்பன் 17.8.71)
எழுத்துமாற்றம், பெரியார் :
“பெரியார்க்குத் தமிழ் எழுத்தை மாற்றவேண்டும் என்பது கருத்தன்று. சிக்கனம் பற்றியே தம் சொந்த இதழில் அதை மாற்றிக் கொண்டார். 25 ஆண்டுகள் அவரோடு தொடர்பு கொண்டிருந்தேன். ஒரு முறை கூடப் பொதுமேடையிலோ என்னிடமோ எழுத்து மாற்றத்தைப் பற்றிச் சொன்னதில்லை.
1938-இல் அவர் ஈரோட்டிலிருந்து எனக்கெழுதிய ஏழு பக்கக் கடிதம் மரபெழுத்திலேயே இருந்தது.
1947-இல் எனக்கும் புலவர் பொன்னம்பலத்திற்கும் பெரியார் வழங்கிய வெள்ளிப் பட்டயத்திலும் மரபெழுத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது. (கு.பூ. 17.9.79)
“பெரியார் நான் காட்டுப்பாடியில் இருந்தபோது வருமான மில்லையென்று வீடு தேடிவந்து இருநூறு உருபா அளித்தார். சேலங்கல்லாரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர் இறந்தபின் அவர் மனைவியாரிடம் ஐயாயிரம் உருபா நீட்டினார். ஆயின் அவ்வம்மையார் தன் பண்பாடு பற்றி அதைப் பெறவில்லை” (கு.பூ. 9.11.79)
ஆய்வும் அறிவுறுத்தமும் :
அயலொலி :
“ஆய்த வரியைச் சில அயலொலி குறிக்கப் பயன்படுத்தி ஃப் (F) என்றும் ஃச் (S) என்றும் பிறவாறும் ஆண்டுவருதல் பகைவர் கையில் குடுமியைக் கொடுக்கும் பேதைமை போலாகும். எழுத்தென்பது ஒலியேயன்றி வரியன்று. ஒலியின் குறியே வரி. அயலெழுத்து வேண்டாமென்று நாமே சொல்லிக்கொண்டு, நாமே அயலெழுத்தை ஆள்வோமாயின் அதை என்னென்பது?
தமிழ்மொழி அயலொலியாற் கெடுமேயன்றி அயல்வரியாற் கெடாது. அயல் ஒலியைப் பயன்படுத்தும் வரையில் அதைக்குறிக்கும் வரி எதுவந்தாலும் ஒன்றுதான்.
ஆய்த ஒலியைத் தவறாகப் பயன்படுத்துவதனால் அதன் இயல்பான ஒலியும் கெடுகிறது. கஃசு என்பதை kahsu என்றொலிப்பதா? கஷூ (kashu) என்றொலிப்பதா?
ஒலியிலக்கணமும் தமிழியல்பும் அறியா மாற்றம செய்தலால் பகைவர்க்குப் பிடிகொடுத்து அவர் எள்ளி நகையாட நேரும்” (வ.சு. 31.1.52)
முறைகேடு :
“அரசு எந்த அளவில் தமிழைப் புறக்கணித்ததுடன் அவமதித்தது என்பதை எண்ணிப் பாரக்க. மறைமலையடிகளை முற்றும் மறந்துவிட்டுப் பிறர்க்குப் படிமை நிறுவியது. எனக்கு ஆராய்ச்சி வேலை வேண்டியதற்கு அகவை கடந்துவிட்டது என்று சொல்லிவிட்டது. தமிழ்க் கூட்டுச்சொற்களையும் சொற்றொடர்களையும் புணர்ச்சியின்றி எழுதி வருகின்றது....” (மு.த.கு. 24.10.69)
வாழ்க்கைத் துணை :
“வாழ்க்கைத் துணை இளம் பெண்ணாதலால் உலகியல் நன்றாய் அறியும்வரை தங்கையைக் கவனிப்பதுபோற் கவனிக்க. மாணிய (பிரமசரிய) நிலையில் விடுதலையும் குடும்பக் கவலையின்மையும் மகிழ்ச்சிக் கேதுவாம். மணவாழ்க்கையின் சில இன்பங்களும் ஏந்துகளும் மகிழ்ச்சி விளைவிக்கும். அவ்விரண்டும் இன்றேல் மணவாழ்க்கையிலும் மாணிய வாழ்க்கையே சிறந்ததாம். ஆயின் கற்பைக் காத்துக் கொள்ளவேண்டும். அது கோடியில் ஒருவர்க்குத்தான் இயலும்” (ந.பி. 25 நளி 2001)
நால்வகை எழுத்து :
“நால்வகை எழுத்து எவ்வகைக்கும் முற்பட்டது மொழி. எகுபதியக் கருத்தெழுத்து விளக்கம் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்புக்கொள்ளப் பட்டுவிட்டது. ஆயின் சிந்து நாகரிகக் கருத்தெழுத்து விளக்கம் கண்டுபிடிப்பு நிலையிலேயே இன்றும் இருக்கிறது”
(இல.க.இர. 5.6.70)
வேனில் உணவு :
“உடம்பைப் பேணுவதையே முதற்கடமையாகக்கொள்க. வேனிற் காலத்தில் குளிர்ச்சிக் கேற்ற உணவுவகைகளையே உண்டு வருக” (கு.பூ. 5.7.79)
அதிகாரம் :
“தமிழ் வளர்ச்சியும் தமிழன் உயர்வும் ஒன்றையொன்று தழுவியவை. அதிகாரமின்றி அங்குமிங்கும் ஓடியாடித் திரிநிலையினும் அதிகாரத்துடன் ஓரிடத்திலிருக்கும் நிலையே தொண்டு செய்யச் சிறந்தது” (கு.பூ. 17.9.79)
பிறந்தநாட் செய்தி :
“தமிழ்ப் பெயர் தாங்குபவரே உண்மைத் தமிழராவார். தமிழ்ப் பெயர் ஏற்றபின் தமிழிலேயே திருமணத்தையும் இருவகைச் சடங்குகளையும் செய்தலும் செய்வித்தலும் வேண்டும். கடவுள் நம்பிக்கையுள்ளவர் திருவழிபாட்டையும் தமிழிலேயே ஆற்றுதல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து செய்துவரின் இன்னும் ஐந்தாண்டிற்குள் தமிழர் தம் அடிமைத்தனமும் அறியாமையும் அடியோடு நீங்கி மேலையர் போல் புதுப்புனைவு தலைப்படுவர் என்பது திண்ணம்.
ஆங்கிலர் நீங்கியதால் தமிழ்நாடு விடுதலை யடையவில்லை. ஆரியம் நீங்குவதே உண்மையான தமிழர் விடுதலையாம்” (மி.மு.சி. 3.2.71)
முந்நோய்கள் :
“அறியாமை தன்னலம் அழுக்காறு ஆகிய முந்நோய்கள் நம் இனத்தைப் பல்வேறு துறையில் தொன்றுதொட்டுக் கெடுத்து வருகின்றன” (கா.இ.மு. 8.2.73)
பொதுவுடைமை :
“தனித்தமிழும் பொதுவுடைமையென்னும் கூட்டுடைமையும் வருகின்ற தேர்தலில் வெற்றிபெறப் பாடுபடுக. இங்குவரின், அதற்கான வழிவகைகளைச் சொல்வேன்” (தரங்கை பன்னீர்ச்செல்வனார் 22.5.73)
உ.த.க.வும் பணியும் :
கட்சிச்சார்பு :
“உ.த.க. கட்சிச்சார்பு கடுகளவுமின்றித் தமிழ் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது” (வி.அ.க. 31.12.68)
வேறு :
“உ.த.க. வேறு. (அதன்) முயற்சி யானையைப் பூனை எதிர்ப்ப தொத்ததே”
(இல.க.இர. 14.7.72)
அமைப்புகளும் நிகழ்ச்சிகளும் :
குறிக்கோள் :
“தனித்தமிழை வளர்த்தல், திருமணமும் வழிபாடும் ஏனையிருவகைச் சடங்குகளும் தனித்தமிழில் நடத்தலும் இயன்றவரை நடப்பித்தலும்”
நடப்பு முறை :
“மறைமலையடிகள் நூல்களையும் பிறர் எழுதிய தனித்தமிழ் நூல்களையும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினின்று (1/140, பிராட்வே, சென்னை – 1) வாங்கி ஒரு தனித்தமிழ் நூல்நிலையம் அமைத்துக் கொள்ளுதலும் அந்நூல்களை ஒழுங்காய்ப் படித்தலும்.
ஆண்டு தோறும் தனித்தமிழ் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து விழா நடத்துதல். நூல்நிலையத்திற்கும் கழக அலுவற்கும் சொந்தமாகவேனும் வாடகைக்கேனும் ஒரு கட்டடம் அமைத்தல்”
நூலார்வமும் நூலாக்கமும் :
மொழியாராய்ச்சி :
“மொழி முந்தியதும் தெளிவானதும் ஆதலால் மொழிநூல் முறைப்பட்ட சொல்லாராய்ச்சி முடிவுகளை எவரும் மறுக்க முடியாது. மொழியாராய்ச்சி, கருத்தெழுத்து விளக்கத்தை மாற்றலாம். ஆயின், கருத்தெழுத்து விளக்கம் முறைப்பட்ட மொழியாராய்ச்சி முடிவை மாற்ற முடியாது. அதனால்தான் இத்துறையில் இறங்கினேன்” (இல.க.இர. 5.6.70)
தமிழ்நாட்டு விடுதலை :
“பெரியாரும் தமிழ்நாட்டு விடுதலைக் கொள்கையைப் பரப்பி வருவதாகத் தெரிகின்றது. நாளடைவில் கிளர்ச்சி வலுக்கத்தான் தெரியும். ஆயின் கொல்குறும்பும் உட்பகையும் மிக்கிருப்பதால் கீழ்வங்கம் போல் எளிதாய் விடுதலை பெற்றுவிட முடியாது. ஆகவே போராட்ட மறவர்க்குத் துணையாய்ப் பல்வகை வரலாற்று நூலும் அணியமாயிருத்தல் வேண்டும்” (கா.இ.மு. 5.8.72)
அச்சீடும் மெய்ப்புப் பார்த்தலும் :
நூற் கட்டடவினை :
“கட்டட வினையிற் குத்தித் தைக்காது கோத்துத் தைக்கச் சொல்க” (கா.இ.மு. 29.5.72)
(இணையற்ற நூல்) அச்சீடு :
“என் வாழ்க்கைக் குறிக்கோளை நிறைவேற்றுவதும், மேலையறிஞரின் ஆரிய மயக்கறுப்பதும், தமிழை மீண்டும் அரியணை யேற்றுவதுமான அகரமுதலி யல்லாத என் தனி நூல்களுள் இணையற்றதுமான The Lemurian Language and its ramifications என்னும் ஆங்கில நூல் (500 பக்கம்) அச்சேற விருக்கிறது.”
(மடல்நாள், மடல்பெற்றார் குறிப்பு காணப்படவில்லை)
செந்தமிழ்ச் சொற்பிறப்பில் அகரமுதலிப் பணி :
நற்காலம் :
“நாம் இறைவனை நம்பியிருந்தவாறே, மிகப்பிந்தியேனும் தமிழுக்கு நற்காலம் கிட்டிற்று. இது முற்றும் தவத்திருக் குன்றக்குடியடிகளின் தனிப்பெரு முயற்சியின் விளைவாகும். அகரமுதலிப் பணிக்கு இன்னும் தனியிடம் அமையவில்லை...” (மு.வ.பரணன் 28.5.74)
விடுதலைக்கும் வழிகோலும் :
“செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் தி.மு.க. அரசு இதுவரை செய்துள்ள தமிழ்த்தொண்டுகளுள் சிறந்தது. அது திரு. அருட்செல்வனார் ஆட்சியை நிலைப் படுத்துவது மட்டுமன்றி, நாளடைவில் தமிழ்நாடு முழு விடுதலையடையவும் வழிகோலும்” (ந.பி. .......?)
சொல்வளம் :
துளை வகைகள் :
இல்லி – மிச்சிறிய துளை (இல்லிக்குடம்)
முழை – குகை – குவை (cave)
துளை – தொளை, தொள்ளை (தொள்ளைக் காது)
தொண்டு – சிறு துளை
புழை – புடை (hollow in the side of a wall)
பூழை – hole of a basal
பொள்ளல் – பொத்தல்
நுளை – நூழில், செக்குக்குழி
நூழை – சிறு வாயில்
முழை (postern) – முகை (cave) (இல.க.இரத்தினவேலு 10.9.69)
எழுத்து மாற்றக் கேடு :
“எழுத்து மாற்றத்திற்கு இடந்தரவே கூடாது. அது பிற்காலத்தில் தமிழ்க் கேட்டுக்கே வழிகாட்டும்” (கு.பூ. 17.9.79)
பாரி :
“நுங்கள் ‘பாரி’யைப் பார்த்தேன். முற்றும் சரிதான்.ஆயின் ‘அவல்’ சிறிது மாற்றம் பெறல் வேண்டும். மேலும், அவலம் என்பது இதனொடு தொடர்புடைய தன்று.
அல் – அ, அவலம் – வலமின்மை, நோய் – வருத்தம். என்னிடம் சிறிது பயிற்சி பெறின், என்போன்றே செந்தமிழ்ச் சொற்பிறப்பியற் பணியாற்றலாம்” (இரா.இ. 20.11.80)
கதம்பம் :
‘கதம்பம்’ தென்சொல்லே.
கல – கலம்பு – கலம்பம். கலம்பகம் -18 பகுதிகள் கலந்த பனுவல்.
கலம்பகம் – கதம்பம் – பலவகைப்பூ கலந்த மாலை.
ஒ.நோ: சலங்கை – சதங்கை (ச.கருப்பையா, பாவாணர் தமிழ்க் குடும்பம் 20.11.80)
இணைப்பு :
இரட்டை மாட்டு வண்டி :
“கணவன் மனைவியர் இல்லற வாழ்க்கை இருபகட் டொரு சகடு போன்.து. அதாவது இரட்டைமாட்டு வண்டியை ஒத்தது. இரு காளைகளும் ஒருமுகமாக இழுத்தால்தான் வண்டி செல்லும்.” (கல்லைப் பெருஞ்சித்திரன் உஅ சிலை2000)
இசைந்து வாழ்தல் :
“இனிமேல் உங்கள் இருவருள் யார் எழுதினாலும் சரி; ‘நாங்கள் இருவரும் இசைந்து வாழ்கிறோம்’ என்றே தொடங்கவேண்டும்” (க.பெ.சி. 20 துலை 200க)
பெண்ணுரிமை :
“பெண்களுக்குச் சமஉரிமை நம்நாட்டில் இல்லாததனாலும் அதிகாரம் செல்வம் வலிமை ஆகிய மூன்றும் ஆடவரிடத்திலேயே இருப்பதனாலும் பொதுவாகப் பெண்களின் குற்றங் குறைகளையே எடுத்துக்கூறுவார்கள். கணவன், மனைவியைக் கவனிக்காவிடின் கண்டிப்பாரில்லை” (அன்னகாமு க.பெ.சி. 20 துலை 200க)
கவலைக் கேடு :
“கடுகளவுங் கவலைக்கிடமான எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ‘கவலை கறியைத் தின்னும்; பேராசைப்படவுங் கூடாது’ போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து... உள்ளதே போதுமென்று பெற்றதுகொண்டு பொந்திகைப் படவேண்டும். வருவாய்க்குத் தக்கவாறே செலவு செய்ய வேண்டும். ‘வளவனாயினும் அளவறிந் தளித்துண்’ என்பது ஒளவையார் பொன்மொழி.
வளவன் – வளநாடுடைய சோழன்.
கடந்து போனதை நினைத்துக் கவலைப்படக் கூடாது.
‘போனதை நினைப்பார் புத்தி கெட்டவர்’
இறைவன் துணையைத் தேடி இயன்றவரை முயன்று கூழானாலும் தன் உழைப்பால் வந்ததைக் குடித்து மகிழ்ச்சியாயிருந்தால் நீடு வாழலாம்” ( க.பெ.சி. 2அ சுறவம் 200க)
இருவருக்கும் அனுப்புக :
“பெருஞ்சித்திரனார் இங்குக் குடியமர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகின்றது. (1,லால் பேகம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை–5). தென்மொழி அச்சக வேலை நடக்கிறது.
நாங்கள் இருவரும் ஒரே யிடத்தில் இருப்பதால் தேன் அனுப்பின் இருவர்க்கும் அனுப்ப வேண்டும். எனக் கனுப்பாவிடின் குற்றமில்லை. (க.பெ.சி. 25.5.77)
கண் மருத்துவம் :
“கண்ணில் வலியிருக்குப்போது படிக்கக் கூடாது. இது வேனிற் காலமாதலால் வெயில் நேரத்தில் வெளியில் செல்லவுங் கூடாது. விளக்கொளியைப் பார்ப்பதும் நீண்ட நேரம் கண்விழித்திருப்பதும் கூடா. திரைப்படத்தைப் பார்க்கவே கூடாது. சூடும் பித்தமும் ஊதையும் (வாயுவும்) விளைக்கும் உணவுப் பொருள்களை முற்றும் விலக்கிவிட வேண்டும். நாள்தொறும் தண்ணீரிற் குளித்து அறிவன் காரி நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்துக் குளித்து வருக. குளம்பியை (காப்பியை) நிறுத்திவிட்டு மோர், பதநீர், இளநீர் முதலிய தண்குடியையே பருகி வருக. பழையதும் தயிர்ச்சோறும் உண்டுவருவது நன்று.
எலுமிசஞ் சாற்றைக் கலந்து தேய்த்துக் குளிக்கலாம். சீனி சேர்த்துக் குடிக்கலாம். நுங்கு, கொடிமுந்திரி, வெள்ளரிப்பழம் முதலியன உண்ணலாம். காலிமுள்ளங்கி (carrot) கண்ணிற்கு நன்றென்பர். அதை அடிக்கடி சமைத்துண்க... நண்பகலில் தலையை (மண்டையை) குளிர்ந்த துணியால் மூடிக் கொள்க”
(க.பெ.சி. க0 மீனம் 200க)
குழந்தை நலம் :
“குழந்தைகள் மேனி மென்மையாயும் உடம்பு நொய்ம்மையாயும் இருப்பதால், தட்ப வெப்ப நிலைமாறினும், தாயுணவு தகாவிடினும், நெடுந்தொலைவழிச் செல்லினும், தீய நாற்றம் வரினும், முரட்டுத் தனமாய்த் தூக்கினும், நெடுநேரம் உடம்பு அசைவுறினும், ஊட்டங் குன்றினும், உடை காலநிலைக் கொவ்வா விடினும் எளிதாய் நோய்தாக்கும்.
குழந்தை நலம் பேணுவதில், பின் மருந்தினும் முன்தடுப்பே எல்லா வகையிலும் ஏற்றதாகும். தாய்ப்பாலுண்ணும் குழவிக்கும் தாய் தன் உணவைச் சரிப்படுத்திக் கொள்வதே நோய் தடுக்கும் சிறந்த முறை.
குழவிக்கு மார்ச்சளியிருக்கும் போது, தாய் குளிர்ச்சியான உணவை உண்ணக்கூடாது. முந்திரிச்சாறு (பிராந்தி) ஒருசில துளிகளில் நீர் கலந்து உறை மருந்துபோல் கொடுக்கலாம். குழந்தை மருத்துவத்தில் அல்லது வளர்ப்பில் தேர்ச்சி பெற்ற மூதாட்டியார் அல்லது மருத்துவர் ஒருவரைத் துணைகொள்வது நல்லது. இறைவன் திருவருளை வேண்டுவதும் இன்றியமையாதது. ஆறு மாதம் முடியும் வரை மிகக்கண்ணுங் கருத்துமாகப் பேணிக் காத்தல் வேண்டும்.
பூவைப் போல் தொடவும் பொன்னைப் போற் போற்றவும் புத்தேள் (தெய்வம்) போல் தூய இடத்தில் வைக்கவும் வேண்டும்” (க.பெ.சி. மீனம் 2002 18.3.71)
மருத்துவம் :
“மஞ்சட் காமாலைக்குக் காக்கைக் கறி நன்மருந்தென்பர். அதை மறைவாகச் சமைத்துக் கொடுத்தல் வேண்டும். திருச்சித் திரு.வெள்ளிமலையாரும் சென்ற ஆண்டு அந்த நோயால் வருந்திப் பின்னர் மருத்துவம் பெற்று நலமடைந்தார். அவரையும் வினவியறிதல் வேண்டும்.
நோய் நீக்கத்தினும் நோய்த்தடுப்பே சிறந்ததாதலின் நோய் முதல்நாடி மீண்டும் நேராவாறு முற்காப்பாயிருந்து கொள்க. காயச்சரக்கு (மல்லி சீரகம்) அரைப்பதும் மாவாட்டுவதும் கடிய வேலை. மாலை அ மணிக்கு நீங்கள் திரும்பா விடினும் தப்பாது உண்டுவிடச் சொல்க” (இரா.மு.கி. 30.1.70)
குறிஞ்சி :
“குறிஞ்சியில் ஈராண்டிற் கொருமுறையும் நாலாண்டிற் கொருமுறையும்
ஆறாண்டிற் கொருமுறையும் பன்னீராண்டிற் கொருமுறையுமாகப் பூக்கும் நால்வகை யுண்டெனச் சென்ற ஆண்டு ஏர்க்காட்டுப் பயிர்த்தொழில் அலுவலர் சொல்ல அறிந்தேன். பத்தாண்டிற் கொருமுறை பூப்பதும் உண்டெனின், மொத்தம் ஐவகை உண்டெனக் கொள்ளல் வேண்டும்.
குடந்தை விழாப்போல் பன்னீராண்டிற் கொருமுறை பூக்கும் வகையொன்று இருத்தலாலேயே, அது மாமாங்கம் (மகாமகம்) செடி என்று பெயர் பெற்றுள்ளது. அப்பெயரே ஏர்க்காட்டுப் பொதுமக்களிடம் வழங்குகின்றது. முந்தின பூப்பு கஉ ஆண்டிற்குமுன் நிகழ்ந்ததாகச் செய்தித்தாளிலும் ஒருவர் எழுதியிருந்தார். மாநாட்டுச் சமையத்தில் ஒரு செடி பூப்பதாயிருந்தாலும் பார்த்தல் நன்றே” (க.பெ.சி. 22 நளி 2000)
நயன்மைக் கட்சி :
“தமிழ்நாட்டில் நயன்மைக் கட்சி (Justice Party) தோன்றிப் பதினோராண்டு ஆண்டது. நூற்றிற்கு மூவரான பிராமணர்க்கு நூற்றிற்கு மூன்றே அரசியல் அலுவல் என்று சட்டமானபின் பிராமணரெல்லாரும் ஒன்றுகூடி எல்லா வகுப்பாரையும் படிக்கவைத்து முன்னேற்றிப் பதவியளித்த ஆங்கில அரசை நீக்கினாலன்றி நயன்மைக் கட்சியை வீழ்த்த முடியாதென்று கண்டு பேராய இயக்கத்தைத் தமிழ்நாட்டிற் புகுத்தி முனைந்து வளர்த்தனர்.
நயன்மைக் கடசித் தலைவர் நாட்டு மொழிகளைப் புறக்கணித்து, ஆங்கிலத்தையே போற்றியதாலும் பொதுமக்கள் தொடர்பு இன்மையாலும் ஆங்கிலவரைச் சார்ந்ததனாலும் இறுதியில் தோல்வியடைந்தனர்.
பேராயத்தில் தமிழர் பெரும்பான்மையரா யிருந்தாலும் தலைவர் பிராமணராகவே யிருந்ததனால் தமிழர் தலைவர் காட்டிக் கொடுக்கும் தன்னலக்
காரராகவே யிருந்து விட்டனர். ஆங்கிலத்தை ஒழித்து இந்தியைத் திணிப்பதில் இருவகைப் பேராயமும் ஒன்றே. ஆதலால் இரண்டும் தமிழகத்திற்கிக் கேடு விளைவிக்கும்” (க.பெ.சி. ங0 சுறவம் 2002 12.2.71)
இரண்டு தொகுப்புகளிலும் பாவாணர் அயற்சொற்களைத் தவிர்த்து எழுதிய சொல்லாட்சிகளுள் சில:
Thesis – இடுநூல்,
Cadet – படைமாணி
சாதனை – நிலைநாட்டம்
கைதி – சிறையாளி
தகவல் – சேதி(செய்தி)
jet – பின்னுந்தி
மதியம் – உச்சிவேளை, உருமம், நண்பகல்
senior – மூத்தோர்
Deposit – இட்டுவைப்பு
lay-out – இடுவமைப்பு
Intermediate - இடைநடு
பரஸ்பர(அன்பு) – இருதலை(அன்பு)
Order – ஏவம்
Attestation – கரிச்சாத்து
Fiddle – கின்னரம்
தரிசித்தல் – காண்கை
Hearing - கேட்பாடு
urgent – சடுத்தம். நெருக்கடம்
நிர்ணயம் – தீர்மானம்
சன்மார்க்க சபை – நன்னெறி யவை
Suspension – நிற்புறுத்தம்
Vice - துணை
Deputy - பகரம்
Mayor (Major) - மேயர்
Late – மேனாள்
நிர்மூலம் – வேரறுப்பு
சையத் தாசுதீன் – நெறி முடியார்
Deluxe - இன்னியல்
T.A.Bill - வழிச்செலவுப் படிப் படிவம்
capsule - முகிழம்,
Apple – செம்பேரி
சுவீகாரம் – தெத்து
அண்ட வாதம் (hydrocele) - விதைப்பை யூத்தம்
shirt - சல்லடம்
West coast - மேல்கரை
limited - மட்டிட்டது
broad way - பெருவழி
Ovaltine - முட்டை முளைவறை
Illustrated weekly of India - இந்தியப் படவிளக்கக் கிழமையிதழ்
Maps – திணைப் படங்கள்
Volume - மடலம்
Taxi – வாடகி
Transition period - இடைபெயர் காலம்
reminder - நினைப்பூட்டு
captain – தலைமகன்
பாகவதர் – பாடகர்
usage - வழக்காறு
fly-leaf - விடுதாள்
Editor and correspondent - பதிப்பாண்மை எழுத்துறவாளர்
Ambassador car – தூதன் இயங்கி
Rough note - கரட்டுக் குறிப்பு
Fair note - செவ்வைக் குறிப்பு
cooker - அடுவான்
Overseas Bank – அக்கரை வைப்பகம்
Central stand – நடுவ நிலையம்
ream - கற்றம்
honeymoon – தேன்மதி
Multi vitamin tablet – பன்மடி உயிரியல் மாத்திரை
carrot - கால் முள்ளங்கி
enlarging lens - பெருக்கு வில்லை
Moderates - மட்டாளர்
Extremists – முனைவாளர்
Congress party – பேராயக் கட்சி
கிலோ - அயிரம்
பசலி – அரசிறை(யாண்டு)
ஆதரவு – அரவணைப்பு
Index - அரும்பொருளட்டவணை
பிரமாணம் – அளவை, சூள்
விரக்தி – ஆசையின்மை (பற்றின்மை)
பிரயோகம் – ஆட்சி, வழங்கல்
சகாப்தம் – ஆண்டுமானம்
ஆசாமி – ஆள், புள்ளி, ஆசிரியன்
Express - விரைவான்
அத்வைதம் – இரண்டன்மை, இரண்டன்மைக்கோள்
இலட்சியம் – இலக்கியம் (குறிக்கோள்)
லோபி – இவறி (பிசினாறி, கருமி)
அற்புதம் – இறும்பூது
அற்புத மனிதர் – இறும்பூதாளர்
உஷ்ணம் – உண்ணம்
யதார்த்தம் – உண்மை
பிரக்ஞை – உணர்ச்சி
அனுமானம் – உய்த்துணர்வு
ஜீவராசி – உயிரினம்
சரணம் – உரு
சல்லாபம் – உரையாட்டு
உல்லாசம் – உள்ளக் கிளர்ச்சி, கொந்தளிப்பு
வாதம் – உறழ், போராட்டு
ஊர்ஜிதம் – உறுதி
வாகனம் – ஊர்தி
Idea (அபிப்ராயம்) - கருத்து, ஏடல்
ஐக்கியம் – ஒன்றியம்
மாஜி – காலஞ்சென்ற
நந்தி – காளை, விடை
Sub - கீழ், உள்
Sub Magistrate - கீழ் மகவர்
Bacteria - குச்சி, குச்சில்
Enteric or Typhoid - குடற் காய்ச்சல்
விவஸ்தை – குதிர்வு
சதி – கெடுப்பு
தம்புரா – கேள்வி யாழ்
சித்தாந்தம் – கொண்முடிபு (மதக்குடுமி)
லேவாதேவி – கொடுக்கல் வாங்கல்
ஆலோசனை – சூழ்வு
ஆட்சேபணை – தடை
தாம்பூலம் – தம்பலம், வெற்றிலைபாக்கு
வியாஜம் – தலைக்கீடு
பிரத்தியேகம் – தனி, தனிவேறு
பிரசன்னம் – திருமுன்னிலை
அவசகுனம் – தீக்குறி, தீப்புள்
தீட்சதர் – தீர்கையர்
நிர்ணயம் – தீர்மானம்
சேவாசங்கம் – தொண்டில்லம்
அபிமானம் – நல்லெண்ணம்
சம்பவம் – நிகழ்ச்சி
நிமிசம் – நிமையம்
பூரணம் – நிறைவு, முழுமை
பிரதி – படி, மறு
வியாப்தி – பரவல், வியன்மை
புராதனம் – பழைமை
பகிஷ்காரம் – புறக்கணிப்பு
மகாவித்துவான் – பெரும்புலவர்
பிரபு – பெருமகன்
மகத்துவம் – பெருமை
மிருதங்கம் – மதங்கம்
வேதாந்தம் – மறைமுடிபு
மகிமை – மாண்பு, மாட்சிமை
அமோகம் – மிகுதி
பிரயாசை – முயற்சி, உஞற்று
பாலிகை – முளை
சீலர் – மேலோர், ஒழுக்கமுடையோர்
சொரூபம் – வடிவம் அல்லது இயற்கைத் தன்மை
Format - வடிவளவு
Rank - வரிசை, திறவெண்
Athlete - வல்லுடலாளர்
ஜல்தி – வல்லை, ஒல்லை
சகஜம் – வழக்கம்
விவகாரம் – வழக்காரம்
பிராது – வழக்கு, முறையீடு
வாக்கு – வாய்ச்சொல்
சஞ்சாரம் – வாழ்க்கை, அலைந்துலவுகை
வாசஸ்தலம் – வாழகம், இருப்பிடம்
Express delivery - விரைவுக் கொடுப்பஞ்சல்
பிரளயம் – வெள்ளம்
விகற்பம் - வேறுபாடு
இரண்டு தொகுப்பிலுமுள்ள செய்திகளின் வழி, பாவாணர் குளிர்காலங்களில் ஈளைநோயால் துனபுற்று வருந்தியதையும் கோடை காலங்களில் வெப்பத்தால் பணியாற்ற இயலாது இடருற்றதையும் அறியமுடிகிறது. கண் பார்வையை மறைத்த படல நீக்கத்திற்காக முதலில் இடக்கண்ணிலும் பின்னர் வலக்கண்ணிலும் அறுவை செய்து அல்லலுற்றுத் தேறியதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
இன்னுமுள்ள மடல்கள் :
மேற் குறிப்பிட்ட இரண்டு தொகுப்புகளைத் தவிர, பாவாணர் எழுதிய மடல்கள் இன்னும் கிட்டத்தட்ட ஓராயிரத் தைந்நூறு இருக்கலாம் என்று கருத இடமுள்ளது. ஏனெனில், பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்குப் பாவாணர் எழுதிய மடல்களின் எண்ணிக்கை மட்டுமே பல நூறு இருக்கும்.
பாவலரேறு மறைந்ததை அடுத்து வந்த ‘தென்மொழி’ மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் சிறப்பிதழ் (சுவடி: 17 ஓலை: 6-7) பக்கம்64-இல், “பாவாணர் பாவலரேற்றிற்கு எழுதிய பன்னூறு மடல்கள்” என்ற தலைப்புடன் வந்திருருந்த செய்திக் குறிப்பில் இவ்வாறு இருந்தது :
“சேலத்தில் பாவாணரும் பாவலரேறும் ஒருவரோ டொருவர் 1953 வரை மிக அணுக்கமான முறையில், ஆசிரிய மாணவராயும், நட்பினராயுமிருந்து, தமிழ்மொழி, இன நலன்களில் ஒன்றி ஈடுபாடு கொண்டிருந்தனர். பின்னர், பாவலரேறு அரசுப் பணிக்கென 1954-இல் புதுச்சேரி சென்றார். புதுவையில் பாவேந்தர் பாரதிதாசனாரின் துணையுடனும் அவரின் வலிந்த பரிந்துரையுடனும் பாவாணரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திரவிட மொழியியல் வாசகராக அமர்த்துதற்குப் பாவலரேறு அரும்பாடு பட்டு வெற்றியும் கண்டார். அன்றிருந்து பாவாணரின் இறுதிக்காலம் வரை பாவலரேற்றிற்கு அவர் எழுதிய நூற்றுக் கணக்கான மடல்களில் பெரும்பாலானவை பொதுநலன் கருதியன. தமிழ்நாட்டு நிலைகள், தமிழ்மொழி முன்னேற்ற முயற்சிகள், தமிழகத் தலைவர்கள் பேராசிரியர்கள் தம் உண்மை நிலைகள் ஆகியவை பற்றி அம்மடல்களில் பாவாணரவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். அம் மடல்கள் காலத்தால் விரைந்து நூல் வடிவாக வரவிருக்கின்றன என்பதை அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்”
இன்றுவரை நூலாகாமலும் வெளிவராமலும் உள்ள அம் மடல்களெல்லாம் ‘தென்மொழி’ யகத்திலோ தமிழ்க்களத்திலோ இன்னும் பேணிக் காத்து வைக்கப்பட்டுள்ளன என்றே அறிகிறேன். அவற்றைப் பொறுப்பெடுத்துக் கொண்டு வெளியிடத் தக்கவர் எவரேனும் மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய தாமரையம்மா அவர்களை அணுகிப் பேசி நூலாக்கி வெளியிட்டால், அம் மடல்களிலுள்ள அரிய செய்திகளை அறிய முடியும்.
அவையுந் தவிர, புதுவை தமிழகம் உட்பட உலகெங்கிலும் உள்ள தமிழன்பர்க்கும் ஆர்வலர்க்கும் பாவாணர் எழுதிய இன்னும் நூற்றுக்கணக்கான மடல்களும் தொகுத்தளிக்கப்பட வேண்டும்.
பாவலரேறு ஐயாவுக்குப் பாவாணர் எழுதிய இரண்டு மடல்கள் பற்றி யான் அறிந்ததைச் சுருங்கக் கூற விழைகின்றேன்.
அரும்பெறலன்பர்
அரசு, பாவாணரைப் புரிந்துகொண்டு அவரது அறிவைப் பயன்படுத்தி அகரமுதலி வெளியிட முன்வரா நிலையில், பாவலரேறு, தென்மொழி வாயிலாக, செ.சொ.பி. பேரகரமுதலித் திட்டத்தை அறிவித்தார். இத் திட்டத்தைப் பற்றிப் பாவாணர் சை.நூ.கழக ஆட்சியாளர் வ.சுப்பையா அவர்களுக்கு 1.3.’71-இல் எழுதிய மடலில் இவ்வாறு குறிப்பிட்டு எழுதுகிறார்:
“செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி வேலையை இன்று தொடங்கி விட்டேன். ஐந்தாண்டிற்குள் முடிந்துவிடும். .... 5உருபா தொகுப்புச்செலவிற்கும் 5 உருபா வெளியீட்டுச் செலவிற்குமாக மாதந்தொறும் 10 உருபா அனுப்பும் 200 உறுப்பினர் சேர்ப்பதே அத்திட்டம். 125 உறுப்பினர்க்கு மேற் சேர்ந்துவிட்டனர். மாதந்தொறும் ஆயிரம் உருபா என் வாழ்க்கைக்கும் தாள் பொத்தகம் தமிழ்த் தட்டச்சு முதலிய கருவிகட்கும், சொற்றொகுப்பும் விளக்கமும் பற்றி ஆங்காங்குச் செல்லும் வழிச்செலவிற்கும் பயன்படுத்தப்படும். மற்றோராயிரம் வெளியீட்டிற்காக வைப்பகத்தில் இட்டுவைக்கப்பெறும். 4 மடலமாக வெளிவரும். செ.சொ.பி. அகரமுதலி ஒவ்வோர் உறுப்பினர்க்கும் ஒரு தொகுதி அன்பளிப்பாக அளிக்கப்பெறும். ம.அ. நூல்நிலையத்தி லிருந்து ‘தென்மொழி’ வாங்கிப் படித்துத் திட்டத்தை மட்டும் ‘செல்வி’யில் உடனே வெளியிடுக”
பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு எழுதும் மடலில் வழக்கமாக, ‘அருந்திறல் அன்ப’ என்றே விளித்து எழுதுவார். செ.சொ.பி. திட்டம் தொடங்கியபின் எழுதிய மடலில், அவ் வழக்கத்தை மாற்றி, ‘அரும்பெறல் அன்ப’ என்ற விளியோடு எழுதியிருக்கிறார்.
‘தென்மொழி’ கடலூரிலிருந்து வெளிவந்த காலத்தில், ஒவ்வொரு ஞாயிறன்றும் அங்குச் செல்கின்றவனாகிய நான், பாவலரேறு ஐயாவே இதைக் கூறக் கேட்டேன். இனிய அன்பினராகிய தாமரை யம்மாவிற்கும் இது தெரியும். அண்மையில், தமிழ்க்களத்தில் பேசும்போதும் இதைக் குறிப்பிட்டேன்.
சுற்றுக் கவலையும் குச்சிக் கிழங்கும்
ஒருமுறை பாவாணர் கடலூர் தென்மொழியகத்திற்கு வந்திருந்தார். நானும் அப்போது அங்குச் சென்றிருந்தேன். அப்போது பாவாணர், கிணற்றிலிருந்து நீரிறைக்கும் ‘சுற்றுக்கவலை’யைப் பார்க்க முடியுமா? என்று கேட்டார். ‘ஐயா, நீங்கள் திரும்பவும் காட்டுப்பாடிக்குப் பேருந்தில் செல்லும் வழியில், ‘மடப்பட்டு’க்கு அருகில் சுற்றுக்கவலையில் நீரிறைப்பதைப் பேருந்திலிருந்தே பார்க்கலாம்’ என்றும், அது எந்த இடத்தில் உள்ளது என்பதையும் கூறினேன். பிறகு, பாவாணர் ஐயா காட்டுப்பாடி வீட்டில் நட்டு வளர்க்க குச்சிக்கிழங்கு என்று அழைக்கப்படும் மரவள்ளிக் கிழங்கு குச்சிகள் கேட்டதால், அவற்றை ஏற்பாடு செய்து, மறுநாள் பேருந்தில் காட்டுப்பாடி திரும்பும் பாவாணரைத் திருக்கோவலூர் பேருந்து நிலையத்தில் பார்த்துக் கொடுக்கும் திட்டத்துடன் நான் உடனே அங்கிருந்து திரும்பிவிட்டேன். அத் திட்டத்தின் படியே குறிப்பிட்ட நேரத்தில் திருக்கோவலூர் பேருந்து நிலையத்தில் அவரைப் பார்த்துக் குச்சிக் கட்டைக் கொடுத்துவிட்டு வந்தேன்.
அடுத்த ஞாயிறன்று கடலூர் சென்றபோது, பாவலரேறு ஐயா, பாவாணர் எழுதியிருந்த மடலைப் படித்துக் காட்டினார். அதில் அவர், சுற்றுக்கவலையைப் பார்க்க இயலாது போனதையும் நான் கொடுத்த குச்சிக்கட்டையும், குடிப்பதற்கு எதுவும் வேண்டுமா என்று திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் நான் கேட்டிருந்ததையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அம்மடலால், எளிய சிறு செய்திகளையும் போற்றும் அவர் இயல்பை அறிய முடிந்தது.
திருமண வாழ்த்து
1972ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. பாவாணர்க்கும் தவறாது திருமண அழைப்பு விடுத்திருந்தேன். சரியாக, திருமணத்திற்கு முதல்நாள் (11.7.72) பாவாணரிடமிருந்து அஞ்சலட்டையில் வாழ்த்து வந்தது. அது இதுதான்:
ஆ1135, 2ஆம் மேற்குக் குறுக்குச்சாலை.
காட்டுப்பாடி விரிவு, வ.ஆ.மா.,
200ங, ஆடவை, உஎ (10-7-‘72
மஙலத் திருவளர் தமிழநம்பி மலர்க்கொடியர்
திருமண வாழ்த்து
எங்கணுந் தங்கும் இறைவ னருளால்
மங்கலம் பொங்கும் மனையறம் பூணும்
தமிழ நம்பியும் மலர்க்கொடி நங்கையும்
தமிழை நம்பிய தாழ்விலா வாழ்வினில்
அன்பும் அறனும் பணபும் பயனுமா
இன்பம் பெருக இகமிசை நெடிதே.
- ஞா.தேவநேயன்.
தமிழன்பர்களைத் தக்க நேரத்தில் தவறாது வாழ்த்தி ஊக்கும் அவர் பண்பிற்குச் சான்றான அந்த அஞ்சலட்டையை இன்னும் காத்து வைத்திருக்கிறேன்.
முடிவாக...
பாவாணர் மடல்களில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை எனும் எண்சுவைகளும் விரவிக்கிடக்கின்றன என்பார் இலக்கியச் செம்மல் இரா. இளங்குமரனார்.
பாவாணர் மடல்கள் அவரையே நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன. உணர்ந்து கொள்ளவேண்டிய செய்திகளை அவை நமக்குச் சொல்கின்றன; பல உலகியல் நிலைகளை உணர்த்துகின்றன. அவர்மேல் சுமத்தப்பட்ட பழிகளை அவர் நகைத்துப் புறந்தள்ளியதைக் கூறுகின்றன. உண்மையான அறிவார்ந்த தொண்டின் வழி நடந்த தமிழ்மீட்பு முயற்சிளைக் கூறுகின்றன. தக்க அமைப்புகள்வழி தமிழ் வளர்த்த வரலாற்றையும், அவருடைய தனிப்பட்ட வாழ்வின் வறுமை தோய்ந்த பகுதிகளையும் காட்டுகின்றன.
அருமையான இலக்கியமாகவும், அரிய ஆய்வுத் திரட்டாகவும், திறமிக்க சொல்லாக்கம் மொழியாக்கங்களின் விளக்கமாகவும், தமிழ்த் தொண்டின் நிலை கூறும் ஆவணமாகவும், அறிவாற்றல் சான்ற வீற்றின் வெளிப்பாடாகவும் பாவாணர் மடல்கள் இருக்கின்றன.
தமிழ்மொழி, தமிழின, தமிழ்நாட்டு நலன்களின் மீட்பில் நாட்டமுள்ள தமிழிளையோர் தவறாது அறியவேண்டிய பல செய்திகளையும் அவர் மடல்கள் தருகின்றன.
---------------------------------------------------------------------------------
உதவிய நூல்கள்:
1. பாவாணர் கடிதங்கள் : புலவர் இரா. இளங்குமரன்
(கழகம், 1985)
2. பாவாணர் பாடல்களும் மடல்களும் : இரா. இளங்குமரன்
(விகனேஷ் வெளியீடு, 2006)
3. தேவநேயப் பாவாணர் : இரா. இளங்குமரன்
(சாகித்திய அக்காதமி, 2002)
4. பாவாணர் வரலாறு : இரா. இளங்குமரன்
(கழகம், 2000)
5. தென்மொழி (சுவடி: 7, ஓலை: 6-7) :ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.