எனக்குள் உணர்வைத் தந்த தமிழாசிரியர். ஈழத்துப் பைந்தமிழ்க் கவியாள்பவர்களின் வரிசையில் புலவரும் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்தவர். எளிமையானவர். பழகுவதில் இனிமையானவர். தோய்த்துலர்ந்த வேட்டி, நாஷனலுடன் வகுப்புக்குள் வந்தால் அமைதியாகிவிடும். உடையிலேயே தேசியத்தைக் கடைப்பிடித்த தமிழாளர். உரையாசிரியர். ம.க.வேற்பிள்ளை, ம.வே. மகாலிங்கசிவம், ம.வே. திருஞானசம்பந்தபிள்ளை, பண்டிதை. இ. பத்மாசினி, பண்டிதர், சா.வே.பஞ்சாட்சரம், மயிலங்கூடலூர். ப. நடராஜன் போன்ற பலரை உறவுகளாகக் கொண்ட பாக்கியம் பெற்றவர். மேலாக, ம. ப.மகாலிங்கசிவம் அவர்களின் இலக்கியப் பணி கூட இவரிடம் இருந்து வந்ததுவோ? ஆனைப்பந்தி உயர்கலைக் கல்லூரியில் தமிழாசிரியராக எனக்குக் கிடைத்தது நான் செய்த கொடுப்பினை. இலக்கியப்பூக்களுக்கு கட்டுரைகள் ம.பா.மகாலிங்கசிவம் அவர்களிடமிருந்து கிடைத்த போது பெருமிதமாக இருந்தது. பின்னாளில், அவரின் பசிப்பிணி மருத்துவன், இன்னும் ஒரு திங்கள் நூல்களை வாசிக்கக் கிடைத்தது போது அவரின் கவிதைகள் மீது அளப்பரிய விருப்பம்
ஏற்பட்டது.
யாழ்நகரில் அனேகமான கவியரங்கங்களில் குறிப்பாக எமது சனசமூக நிலையத்தில்(ஞானபாஸ்கரோதய சங்கம்) அவரின் கவிதைகளின் ஒலித்தெறிப்பில் அயர்ந்தவர்களில் நானும் ஒருவன். அந்நாட் விஞர்களில் கவிஞர்.ஐயாத்துரை, காரையூர் சுந்தரம்பிள்ளை, கவிஞர்.கந்தவனம், கவிஞர்.சொக்கன், கவிஞர்.வேலாயுதம், கவிஞர்.மீனவன் என பல கவிஞர்களின் குரல் வளத்திடையே புலவரின் குரல் இன்னும் மறக்கமுடியவில்லை.
நான் வாசித்த கவிஞர்களில் ஒரு பத்துப்பேரை சொல்ல கேட்டால் புலவர் தனியிடம் பெறுகிறார். ஈழநாடு, உதயன், சஞ்சீவி, சுதந்திரன், சுடர், போன்ற பத்திரிகை/சஞ்சிகைகளில் படிக்க கிடைத்த போது ஈழத்து இலக்கிய உலகம் பலரை இவருடன் சேர்ந்து இழந்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. கலாபூஷணம்,ஆளுனர் விருதுகள் அவருக்குப் போதுமாவை அல்ல. இலக்கிய உலகம் பலரை கவனிக்கத் தவறிவிட்டது.அல்லது கொள்கை வழி நிற்கின்ற இலக்கியர்கள் ஒதுங்கி நிற்பதுவும் வெளித் தெரிதல் தாமதமாகிறதோ.
முடமாவடி கலைக்குரிசில் கலாமன்றம் வெளியிட்ட கலைக்கண் என்ற சஞ்சிகையே எனக்குத் தெரிந்திருந்தது. இப்போது இவர் இதழாசிரியராக இருந்து நடாத்திய இதழ் பற்றி அறிந்த போது அவ்விதழ் மீதான என் கவனிப்பு அதிகமாயிற்று. மஹாகவி.உருத்திரமூர்த்தி, பாரதிதாசன் போன்ற கவிஞர்கள் மீது நட்பு பாராட்டியவர்.பலரால் விதந்துரைக்கப்பட்டவர்.
ஒரு இலக்கியப் பரம்பரையின் தொடர்ச்சியாக வந்தவரின் எழுத்து ஆழம் நிறைந்தவை.எமக்கு ஆர்வத்தை தரக்கூடியவாறே அமைந்தது எனலாம். இன்னும் இன்னும் அவரின் வெளியிடப் படாமல் இருக்கும் எழுத்துக்களை இலக்கிய உலகத்திற்கு தரவேண்டும். காந்தளகம் அதிபர்.திரு.சச்சிதானந்தன் அவர்கள் 05/03/2013 அன்று மின்னஞ்சலில் தெரிவித்த போது அதிர்ந்துபோனேன். பல தடவைகள் அவரின் மகனுடன் தொலைபேசியில் பேசும் போது புலவர் பற்றியும் பேசத் தவறுவதில்லை.இலக்கியவாதிக்கு இயல்பாக இருக்கின்ற பட்டறிவு புலவரின் கம்பீரியம் மிகுந்த மன உணர்வு அவரை மருத்துவத்தின் மீது அதிக ஆர்வம் காட்ட அனுமதிக்கவில்லை என்றும் அறிய முடிகிறது. ஒரு தலைமுறையின் விருட்சத்தை இழந்து நிற்கும் அவரின் குடும்பத்தார்க்கும், இலக்கிய உலகுக்கும் எமது குடும்பம்/காற்றுவெளி சார்பாகவும் எமது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம். அவரின் புகழ் பூத்த தமிழ் வாழ்வு நிறைவானது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
08/03/2013