ஜனாதிபத்தேர்தல் முடிந்த கையோடு மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவின் கருத்துகளை உள்ளடக்கிய பதிவொன்றினை இணையத்தில் வாசித்தேன். அதிலவர் கூட்டமைப்பின் பேச்சையும் மீறித் தம் கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாகவிருந்தது. அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவர் ஒருவரே இவ்விதம் கூறக்கூடும். சென்ற தடவையை விட இம்முறை தம் கட்சிக்கு வாக்குகள் குறைந்திருப்பினும், அதனை நோக்காது, கிடைத்த வாக்குகளை மையமாக வைத்து ஆரோக்கியமாக அணுகிய நாமலின் ஆளுமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் அடுத்து அநுராதபுரத்தில் பதவியேற்ற கோத்தபாயா ராஜபக்சவோ , பதவியேற்பு வைபவத்தில் தான் சிங்கள பெளத்த வாக்குகள் மூலம் மட்டுமே வெற்றிவாகை சூடியதாகக் கூறியதாக இணையச் செய்திகள் தெரிவித்தன. தமிழ் மக்களும் தம்முடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் கூடவே கூறியிருந்தார். கோ.ரா.வின் அரசியல் முதிர்ச்சியின்மைக்கு இக்கூற்றுகள் எடுத்துக்காட்டுகளாகும்.
தமது பதவியேற்பு வைபவத்தில் கோ.ரா செய்த முக்கியமான தவறுகளாக நான் கருதுவது:
1. அநுராதபுரத்திலிருந்து அரசாண்ட தமிழ் மன்னனான எல்லாளனைப்போரில் கொன்ற துட்டகாமினி கட்டிய தூபியான ரூவன் வெலிசாயவில் தனது பதவியேற்பு வைபவத்தை நடத்தியது. இதன் மூலம் அவர் கூற விழைவதுதானென்ன? நவீன துட்டகாமினி தானென்று கூறுகின்றாரா? நவீன எல்லாளனான வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போரில் கொன்று வெற்றிவாகை சூடியதைக் குறிக்குமொரு குறியீடா மகாதூபி ரூவன்வெலிசாய. கோ.ரா.வும் அவர் கீழிருந்த இராணுவத்தளபதிகள் பலரும் யுத்தத்தில் யுத்தக்குற்றங்கள் பலவற்றைப் புரிந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சமயத்தில் தமிழ் மக்களை எள்ளி நகையாடும் நோக்கில் இவ்வைபவத்துக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதா?
2. யுத்தம் முடிந்து பத்தாண்டுகளைக் கடந்த நிலையில் , இன்னும் இலங்கையில் இனங்களுக்கிடையில் உண்மையான புரிந்துணர்வோ , நல்லிணக்கமோ முழுமையாக ஏற்படவில்லை. இந்நிலையில் 'நான் சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டுமே வென்றேன்' என்று ஜனாதிபதிப் பதவுயேற்பு வைபவத்தில் அவர் அவ்வாறு கூறியிருக்கத்தேவையில்லை. அக்கூற்றானது இனங்களுக்கிடையிலான பிளவுகளை இன்னும் அதிகரிக்கவே செய்யும். சிங்களப் பெளத்த வாக்குகளால் கோ,.ரா வெற்றி பெற்றிருந்தாலும் அவருக்கு நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து குறிப்பிடத்தக்க சிறுபான்மையினத்தவரின் வாக்குகளும் கிடைத்துள்ளன. மறுக்க முடியாது. அவ்வாக்குகளையெல்லாம் எள்ளிநகையாடும் வகையிலுள்ளது கோ.ரா.வின் மேற்படி கூற்று. அதே சமயம் சுமார் 54 இலட்சம் சிங்கள பெளத்தர்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்பதையும் கோ.ரா. புறக்கணிக்க ,முடியாது.
கோ.ரா.வைபோன்றே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் 'இனவாதக் குழுக்களுடன் சேர்ந்து சிங்கள பெளத்தர்களின் வெற்றி களவாடப்படவிருந்தது. அது தடுக்கப்பட்டுவிட்டது' என்னும் கருத்தைப்போன்றதொரு கருத்தினைக் கூறியிருந்தார்.
இவர்களது மேற்படி கூற்றுகள் இலங்கையின் எதிர்காலத்தையிட்டு நம்பிக்கையூட்டும் பிரகாசம் மிக்க காலத்தைக் காட்டவில்லை. இங்குதான் நாமலின் அரசியல் முதிர்ச்சி தென்படுகின்றது. மூத்த ராஜபக்சக்களோ இனங்களுக்கிடையிலான பிளவுகளை மையமாக வைத்துத் தம் காய்களை நகர்த்திக்கொண்டிருக்க, இளம் அரசியல்வாதியான நாமல் ராஜபக்சவோ தமிழர் தம் கட்சியினரைப் புறக்கணித்தது பற்றி எதுவும் கூறாமல், கிடைத்த வாக்குகளை மையமாக வைத்து ஆரோக்கியமாகப் பிரச்சினையை அணுகியுள்ளார். ராஜ்பக்சக்களில் இரத்தக்கறை (தமிழர்களின்) படியாதவர் நாமலே. உண்மையில் நாமலே தற்போதுள்ள சூழலில் ஜனாதிபதிப்பதவிக்குப் பொருத்தமானவர்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.