நினைவுள் எழும் எழுத்தாளர் ஒருவரின் வாழ்வுத்தடங்கள்! - முல்லைஅமுதன் -
ஈழத்து இனமுரண்பாடுகளினால் தங்கள் வாழ்வை புலம்பெயர்நாடுகளில் களம் அமைத்துக்கொண்ட எழுத்தாளர்களுள் திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கமும் அவர்களும் ஒருவர்.அலைக்கழிக்கும் வாழ்வியற்சூழலுக்குள் தன்னை நிலைநிறுத்தி நேர்கொண்ட உறுதியுடன் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கைக்குள் நின்றுகொண்டே நிதானமாக சாதித்த பெண்ணாக நம்முன் வாழ்ந்தவர்.
ஈழத்து யாழ்ப்பாணம் கரவெட்டி எனும் அழகிய கிராமத்தில் பிறந்திருந்தாலும்(04/05/1941) தன் கல்வி, தொழில், ஆய்வு நிமித்தம் மட்டக்களப்பு, கொழும்பு, சென்னை என நகர்ந்து இங்கிலாந்தில் (ஈஸ்ட்ஹாம்) பதியம் இட்டுக்கொண்டார். ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்து பேராதனைப்பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது இளங்கலைமாணி (சிறப்பு), முதுகலைமாணி பட்டங்களைப் (சமஸ்கிருதம், தொல்லியல், இந்துகலாச்சாரம்) பெற்றார்.அதே சமயம் உதவி விரிவுரையாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை (1966- 1968)பிரதான பாடமாக கற்பித்தார்.பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகம் (இந்து பண்பாடு- 1969 1979), களனி பல்கலைக்கழகம்(தொல்லியற்றுறை- 1976- 1979)விரிவுரையாளராகவும், பகுதிநேர விரிவுரையாளராகவும் கடமைபுரிந்துள்ளார்.