மணிமேகலையில் கல்விமுறை - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி,சென்னை- 42. -
முன்னுரை
கல்வி சமுதாய மாற்றத்திற்கு ஒரு சிறந்த கருவியாகும். சமூக முன்னேற்றத்திற்கு மட்டுமின்றித் தனிமனிதன் சிறப்புக்கும் உயர்வுக்கும் கல்வி வகை செய்கிறது. கல்வியின் மூலமே மக்களின் வாழ்வும் சமுதாயமும் சிறப்புப்பெறும். அது சமூகச் செயல்முறையில் பிரிக்க முடியாத ஒரு கூறு. சமூகத்தில் வாழும் மனிதனை உருவாக்குவதில் கல்வி தலையாய பங்கு வகிக்கின்றது. மனிதன் இயற்கையாகவே சமூக இயல்பினராயிருப்பதாலும் சமூகத்தின் பிரிக்க முடியாத ஓர் உறுப்பினராயிருப்பதாலும் மனிதனுக்கு அளிக்கப்படுகின்ற கல்வி எக்காலமும் சமூக இயல்புடையதாக இருக்க முடியும் எனக் கொள்ள இடமுண்டு.
கல்வி என்பதற்கு "அறிவு கற்றல் நூல்" என்ற பொருள்களைத் தருகின்றது தமிழ்மொழியகராதி. அறிவு, கற்றல், நூல் வித்தை என்ற பொருள்களும் தரப்படுகின்றன. கல்வி ஒரு தனிமனிதனின் ஒழுக்கத்தை வடிவமைக்க வேண்டும்; மனதை வலிமைப்படுத்த வேண்டும்; அறிவை விரிவாக்க வேண்டும்; தன் காலிலேயே தான் நிற்கக் கூடியவனான வலிமையைத் தரவேண்டும்; இவை அனைத்தும் கல்வியால் ஒரு மனிதனுக்குக் கிடைக்கவேண்டும் என விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.
சமூக அமைப்பில் கல்வியானது பொருளாதார அமைப்பு என்னும் அடித்தளத்தின் மேல் நிறுவப்படும் மேல்கட்டமைப்பின் ஒரு கூறு என்னும் கருத்தை மார்க்சும் ஏங்கல்சும் வெளிப்படுத்தினர்.
மனிதனது திறனை வளர்ச்சி பெறச் செய்யவும், உள்ளுணர்வை வெளிப்படுத்தவும், பண்புகளை வெளிக்கொணரவும் அறிவினை உருவாக்கவும் கல்வி துணைபுரிகின்றது.