கே.எஸ். சிவகுமாரன்: ஈழத்து இலக்கியத்தின் தனிப்பெரும் விருட்சம் - மு. நித்தியானந்தன் -
ஈழத்து இலக்கியத்தோப்பில் வைரம்பாய்ந்த தனி விருட்சமாக, ஆழ வேரோடி, பரந்தகன்ற கிளை விரித்து, குளிர்நிழல் பரப்பிநிற்கும் தனித்த ஆளுமைதான் கே.எஸ். சிவகுமாரன். இந்த பெரும் இலக்கிய வியக்திக்கு இணைசொல்ல இங்கே யாருமில்லை. நூறு கவிஞர்களைக் காட்ட முடியும்; நூறு நாவலாசிரியர்களைக் காட்ட முடியும்; நூறு கட்டுரையாளர்களைக் காட்ட முடியும். கே.எஸ். சிவகுமாரனுக்கு நிகரான பல்துறைசார்ந்த ஓர் எழுத்தாளனை ஈழத்து இலக்கியப்பரப்பின் கடந்த அறுபது ஆண்டுகால எல்லையில் காண்பதற்கில்லை. இந்த அறுபதாண்டுகாலத்தில் தொடர்ந்த வாசிப்பே அவரது சுவாசமாக இருந்திருக்கிறது. அந்த வாசிப்பின் வியாபகம் அசலானது. அயராத எழுத்துப்பணியே அவரின் மூச்சாக இருந்திருக்கிறது. இவரின் எழுத்துக்கள் 5,000 பக்கங்களில், முப்பத்தேழு நூல்களாக மலர்ந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இன்னும் நூல் வடிவம் பெறாத இவரின் எழுத்துக்கள், இன்னும் ஓர் ஆயிரம் பக்கங்களை மிக எளிதாகத் தாண்டிவிடும். இந்தளவு பல்துறை சார்ந்து, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுத்தை ஓர் இயக்கமாக எண்ணிச் செயற்பட்ட வேறு ஒருவரை என்னால் சொல்ல முடியவில்லை.
'ஆராய்ச்சிக் கட்டுரைகள்' எழுதுவது, பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்களுக்கு அது தொழில். பதவி உயர்வுக்குப் புள்ளிகள் தேடித்தரும் பொறி. 1980இல் வெளிவந்த நூலுக்கு 30 ஆண்டுகள் கழித்து வெளியான இரண்டாம் பதிப்புக்கு 'மறுவாசிப்பு' செய்கிறேன் என்று சொல்லி ஒரு பல்கலைக்கழகப் 'புலமையாளர்', அடிக்குறிப்பு சகிதம் அச்சியந்திரம் உருவானதில் ஆரம்பித்து, மேனாட்டார் வருகை, மிஷனரிகளின் செயற்பாடு என்று ஆரத்தி எடுத்து, கூடவே காவடியும் எடுத்து, ஆய்வுப்பரப்பிற்குள் நுழையவே பாதிக்கட்டுரை முடிந்து விடுகிறது. இன்னுமொரு பேராசிரியர் தவில் கலைஞனின் வாழ்க்கையை எழுதப்போனவர், தவில் எப்படி இருக்கும் என்று சொல்லி, தவில் வளர்ந்த கதை சொல்லி, தவில் வாசித்தவன் கதை சொல்ல வருவதற்கிடையில் விடிந்துவிடுகிறது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புநெறி பயிலும் மாணவர்களுக்கான பாட போதனையில் பேராசிரியர் க. கைலாசபதியின் 'புனைகதை' பற்றிய சிறப்பு விரிவுரைகளை நான் முழுதும் கேட்டிருக்கிறேன். George Lukacsஇன் The Historical Novel நூலை விரித்துவைத்து, அந்நூலினை வாசித்து, கல்கியின் நாவலை விமர்சிக்கும் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் இலக்கியப் புலமையின் தரம் வேறு. கே.எஸ். சிவகுமாரன் தனது விமர்சனக் கட்டுரை ஒன்றில் Ralph Cohen எழுதிய New Directions in Literary History என்ற நூலில் Robert Weismann என்ற மார்க்சிய அறிஞர் எழுதிய Past Significance and Present Meaning in Literary History என்ற கட்டுரையின் சாரத்தைத் தருகிறார். எத்தகைய வாசிப்பு இது.Walter Sutton and Richard Foster என்போர் இணைந்து எழுதிய Modern Criticism: Theory and Practice என்ற பாரிய நூலைப் பற்றிய தகவல்களைத் தருகிறார் கே.எஸ். சிவகுமாரன். Ceylon Daily News பத்திரிகையில் 1973இல் ஆறு இதழ்களில் எஸ்ரா பவுண்ட் பற்றி மேர்வின் த சில்வா, ரெஜி சிறிவர்தன ஆகிய இரு ஆங்கில விமர்சகர்களுக்கிடையே நடந்த இலக்கிய விவாதத்தைச் சுருக்கமாகத் தமிழ் வாசகர்களின் முன் வைத்த ஆர்வத்தை எப்படிப் பாராட்டுவது? தொடர்ச்சியான அந்த இலக்கிய விவாதத்தைக் கருத்தூன்றிக் கிரகித்து, தமிழ் வாசகர்களை மிரட்டாமல் சுருக்கமாக - எளிமையாக அப்பெரும் இலக்கிய சர்ச்சையை, சாதாரண தமிழ் வாசகனுக்கு எடுத்துச்செல்லும் பணி எத்தகைய பணி! ஆழ்ந்த வாசிப்போடு, அதனை எளிமையாக - சுருக்கமாக தமிழில் வழங்குவதற்கு எத்தகைய ஆளுமை வேண்டும்!