ஆய்வு: தொல்காப்பியம் சுட்டும் புணர் நிலைகள் - ஜெ.கார்த்திக் -
முகவுரை :தமிழில் உள்ள உருபனியல், தொடரியல் கோட்பாடுகளில்; ‘புணர்ச்சி’ பற்றிய கருத்தாக்கங்கள் இன்றியமையாதவையாகும். புணர்ச்சி நிலைகளினைத் தொல்காப்பியம் அறிவியல் கலந்த மொழியியல் நுட்பத்துடன் விளக்கி நிற்கின்றது. தொல்காப்பியர் குறிப்பிடும் தமிழ்மொழியின் புணர்ச்சிக் கட்டமைப்பையும் அவற்றின் இயல்புகளையும் ஆராயும் களமாக இக்கட்டுரை அமையப்பெறுகின்றது.
புணர்ச்சி :
எழுத்தோ சொல்லோ நிலைமொழி வருமொழி இடையீட்டில் ஒன்றோடொன்று இணைவதைப் புணர்ச்சி என்னும் கலைச்சொல்லால் குறிப்பிடுவர். “ஒரு வாக்கியத்தில் அல்லது வாக்கியங்களுக்கிடையே காணப்படும் தொடர்களும் சொற்களும் சொற்களில் காணப்படும் பல்வேறு உருபன்களும் தம்முள் தாம் சேரும்போதும் ஏற்படும் சேர்க்கை, மொழிப்புணர்ச்சி அல்லது புணர்ச்சி எனப்படும். இதனைச் சந்தி எனவும் அழைப்பர்” (அகத்தியலிங்கம், ச., தமிழ்மொழி அமைப்பியல், ப.326) என்று புணர்ச்சியைப் பற்றி ச.அகத்தியலிங்கம் குறிப்பிடுகின்றார். புணர்ச்சி இலக்கணம் பற்றித் தொல்காப்பியர் ‘புணரியல்’ என்ற இயலை எழுத்ததிகாரத்தின்கண் யாத்துள்ளார். இப்புணர்ச்சி இலக்கணத்தை மொழியியலாளர்கள் ‘உருபொலியனியல்’ ((Morphophonemics) என்று அழைப்பர். ‘சந்தி’ என்றும் ‘புணர்ச்சி’ என்றும் இது வழங்கலாகின்றது. “இலக்கண நூல்கள் சொற்களின் சேர்க்கையால் (புணர்ச்சி) மாற்றம் ஏற்படுகிறது என்று கொள்ள, மொழியியல் தனிச் சொல்லின் எழுத்து மாற்றமே உருபொலியன் அல்லது சந்தி என்று கொள்கிறது” (சண்முகம், செ.வை., எழுத்திலக்கணக் கோட்பாடு, பக்.203-204) என செ.வை.சண்முகம் குறிப்பிடுகிறார். சொற்களின் தொடரமைவுக்கேற்ப மொழிகள் புணரும்போது எழுத்துக்களில் உண்டாகும் மாற்றம் புணர்ச்சி என்றும் ஒலிமாற்றத்தேவையின் அடிப்படையில் எழுத்துக்காக உண்டாகும் புணர்ச்சியினைச் சந்தி எனவும் கொள்ளலாம். எழுத்துக்களின் புணர்நிலையை அடிப்படையாகக் கொண்டு புணர்வது அகநிலைப்புணர்ச்சி (Internal Assimilation) ஆகும். அதாவது சொற்களுள்ளேயே புணர்தல் என்னும் கோட்பாடமைவது. அகநிலைப்புணர்ச்சி பற்றி இங்கு கூறுவதன் நோக்கம் வேற்றுமை, அல்வழி புணர்ச்சிகளின் விரிவான செய்திகள் சொல்லதிகாரத்தில் அமைந்தாலும், எழுத்துக்களின் புணர்ச்சிதான் உருபொலியனியல் கோட்பாட்டை நெறிப்படுத்துகின்றது என்பதற்காகவாம். எழுத்துக்களின் புணர்ச்சியின் அடுத்தநிலை உருபன்களின் புணர்ச்சி அதாவது மொழிப்புணர்ச்சி ஆகும். இதனைப் புறநிலைப் புணர்ச்சி (External Assimilation) என்பர். முதலீறு, ஈற்றுமுதல் எழுத்துக்களின் புணர்ச்சியைப் புணர்நிலைச் சுட்டு எனவும், பெயர், வினைச் சொற்களின் புணர்ச்சியை மொழிபுணர்இயல்பு எனவும் தொல்காப்பியர் பகுத்துள்ளார்.